பூமியுடன் விளையாடும் சிறுமி
அப்பா ஆபீஸிற்கு சென்றபின்
தனியான சிறுமி
பூமியுடன்
தனது விளையாட்டை ஆடுகிறாள்
கைகளை விரித்து அவள்
வேகமெடுத்துச் சுற்றுகிறாள்
பக்கவாட்டில்
கடந்து போய்கொண்டேயிருக்கும் உலகை
ரயிலில் செல்பவள் போல்
கைநீட்டி
தொட்டபடியே செல்கிறாள்.
ஒருவழியாய்
தளர்ந்து நின்று அவள்
மூச்சுவாங்கி சிரிக்கிறாள்
இப்போது
பூமி சுற்றத் தொடங்குகிறது
***
ஆயிரங்கால் நடனம்
அப்போதுதான்
காலிசெய்திருந்த அறைக்குள்
தனது சிலநூறு கால்களால்
தயங்கித் தயங்கி வந்ததோர் இறகு
ஒரு நிமிடம் நின்று பார்த்து
கண்டுகொண்டது
ஒன்றுமில்லாத இடத்தில்
ஒரு நடனம் இருப்பதை
இப்போது அதன்மீது இது
அழகாக ஏறிக்கொண்டிருக்கிறது
***
வளரும் மரம்
இன்றைய காலைநடைக்கு இலக்காக
தூரத்தில் தெரிந்த பெருமரத்தை
வைத்துக் கொண்டேன்
நெருங்க நெருங்க
வளர்ந்து கொண்டேயிருந்த மரம்
ஒருகணம் பார்வை விலக்க
காணாமல் போயிற்று
மறைக்கும் வீடுகள் கடந்து
தேடிக்கொண்டே நானொரு
வெட்டவெளிக்கு வந்துவிட்டேன்
எங்கே எங்கே என நான்
அலைவது கண்டு
இளமரம் ஒன்றின்
நிழல் நிலத்தினை
இங்கே இங்கே என
கொத்தி அழைக்குதொரு
குருவி
***
-ஆனந்த் குமார்