எல்லோர் முன்பும் அம்மணமாக நிற்க வேண்டி வருமோ என்று பதறிப் போனாள்
பேபி பாட்டி!.
என்ன செய்வதென்றே புலப்படவில்லை. கைகளை உதறிக்கொண்டு தவித்தாள்.
சும்மா இருக்கவே முடியாத இக்கட்டு. ஏதாவது செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம்.
இன்றிரவு, பேபி பாட்டி வீட்டில் கூட்டாஞ்சோறு விருந்து (போட் லக் பர்ட்டி)
இருந்தது.
‘ ஐயோ.. இன்னும் மூனு மணி நேரத்துல எல்லாரும் வந்துருவாங்களே?. அவுங்க
மூஞ்ச எல்லாம் எப்படி ஏறெடுத்து பாப்பேன்?..எல்லாம் இந்த பாவி மனுஷனால வந்த
வென!.. ‘ என்று நிம்மதியிழந்து பொருமினாள் பாட்டி..
தாத்தாவோ, பசியாறிய கையோடு எங்கேயோ கிளம்பிப் போயிருந்தார்.
அவமானத்திற்கும் அசிங்கத்திற்கும் அவளை மட்டுமே நிராதரவாக விட்டுச் சென்றதாக
பாட்டி, தன்னிரக்கம் கொண்டு கோபத்தில் மருகினாள்.
‘ என்ன செய்யலாம்?…’
பாட்டிக்கு புத்தி பேதலித்து போனது…
* * *
பேபி!…
அழகிற்கு நிறம் அவசியமில்லை என்று சொல்லும் முகம். அது தெரியும் என்பதுபோல்
கர்வம் கொண்டப் பார்வை. முதுகில் அலைகளைபோல் புரலும் அடர்ந்தக் கூந்தல்.
உதட்டுக்கு கீழே, பிறக்கும் போதே இருந்த திருஷ்டி பரிகாரம் போல் ஒரு தழும்பு.
அவள் அழகிதான்!
பேபி பாட்டியின் அடுத்த தலைமுறையினரும், உறவினர்களும் அதுவே அவரின் நிஜப்
பெயரென்று எண்ணி, உறவுமுறைக்கேற்ப பேபி அக்கா, பேபி அண்ணி, அத்த பேபி,
பேபி பாட்டி என்று அழைத்துக்கொண்டிருந்தனர். உடன் பிறந்தவர்களும் அவரை
பேபி என்றே அழைத்ததால் இளம் தலைமுறைக்கு அவரின் நிஜப்பெயர்
தெரியாமலேயே போய்விட்டது.

2
நாய் சாப் கின்னஸ் ஸ்டவுட் வழங்கிய நேயர் விருப்பம்; வெறும் அரைமணி
நேரத்திற்கு மட்டுமே இன்ஸ்பெக்டர் சேகரில் தமிழ் பேசிய ஆர்.டி.எம் டெலிவிஷன்;
கருப்பு வெள்ளையைத் தவிர வேறு நிறங்களை அறியாத தொலைக்காட்சி; நொண்டி,
உப்புக்கோடு என்றும் அழைக்கப்பட்ட பாரி, பல்லாங்குழி என்று மண்ணை
அப்பிக்கொண்டு அடுத்தவர்களை சேர்த்துக்கொள்ளாமல் ஆடவே முடியாத
விளையாட்டுகள்.
அந்திக்கட… சந்திக்கட…
ஆவணி பூத்தக்கட…
வெள்ளி மொளச்சக்கட…
வெங்காயம் வித்தக்கட…
கப்சிப்.. கதவ சாத்…
– விளையாட்டு, பாட்டையும் சொல்லிக்கொடுத்தது…
பெண்பிள்ளைகள், அவசரப் படாமல் மெதுவாக நிதானத்துடன் பதிமூன்று அல்லது
பதினான்கு வயதிலேயே வயசுக்கு வந்துக் கொண்டிருந்தனர்.
பேபி, அந்தத் தலைமுறையை சேர்ந்தவள்.
* * *

L C E பரீட்சையில் பெயில் ஆன பேபி, அப்பாவின் வற்புறுத்தலால்
விருப்பமில்லாமலேயே அத்தையிடம் மூன்று வருஷங்களாக தையல்
கற்றுக்கொண்டிருந்தாள். வீட்டிலேயே அடைந்துக் கிடப்பது சலிப்பை ஊட்டியது.
எப்போதும் சமையல், குட்டிக்குரா புட்டாமாவு, வேர்வை நாத்தம், ஊதுபத்தி மணம்
என்று மூச்சு முட்டியது. அப்போது, தோழியின் சிபாரிசில் சிலாங்கூர் எம்போரியத்தில்
சேல்ஸ் கேர்ல் வேலை கிடைத்தபோது சுதந்திரத்தில் அவளின் இறக்கைகள்
தாமாகவே விரிந்தன.
பேபி, முதன்முதலாக ராமனைப் பார்த்த சம்பவம், அவள் கீழுதட்டின் தழும்பைபோல்
இப்போதும் நினைவில் ‘பளிச்’சென்று இருந்தது. லெபோ அம்பாங்கில் ஸ்ரீ ஜெயா பஸ்
எடுத்து, செந்தூலுக்குப் போய்க்கொண்டிருந்தாள். பஸ், அம்பாங் ஸ்டிரீட்டில் இருந்த
தி கிரேட் ஈஸ்டர்ன் இன்சுரன்ஸ் கட்டிடத்தை கடக்கும்போது, அங்கிருந்த பஸ்
ஸ்டாப்பில் அவன் உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். எங்கே போகக்
காத்திருந்தானோ? கடந்துச் சென்ற பஸ்சின் எண்ணைக்கூடப் பார்க்காமல்
புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்தான். அந்தக் காட்சி அப்படியே அவளின் நினைவில்
பதிந்துப் போனது. அது அவன்மேல் அவளுக்கு மிகுந்த நல்லெண்ணத்தை
ஏற்படுத்தியிருந்தது.

3
மறுவாரமே ஓர் ஆச்சரியம் நடந்தது! பேபி, மத்தியான ஷிப்டிற்கு இரண்டு மணிக்கு
வேலைக்கு வந்தபோது, ராமன் வாசலில் செக்கியூரிட்டியாக
நின்றுக்கொண்டிருந்தான். அவனைக் கடந்து போகும்போது, ஏன்தான் அவளின்
இதயம் அப்படி படபடத்துக்கொண்டதோ!.. கால்கள் தானாகவே லிஃப்டை தவிர்த்து,
மூன்றாவது மாடிக்கு படிகளில் ஏறிப் போயின. படிகளின் திருப்பத்தில்,
அழைத்துக்கொண்டதுபோல் இருவரது பார்வைகளும் பார்த்துக்கொண்டன. அந்தப்
பார்வை, வாயின் பாஷையைப் பேசிக்கொள்ள அவர்கள் மூன்று வாரங்கள் தவிக்க
வேண்டியிருந்தது. பின்னர், அந்தப் பாஷைப் பரிமாற்றம் இரண்டே ஆண்டுகளில்
கல்யாணத்தில் போய் முடிந்தது.
ஆயினும், அதற்குள் அவனுக்குதான் என்ன அவசரம்? எப்போதும் எதையாவது
படித்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ பாவி, தேனொழுகப் பேசினான்.
ஆதரவிற்கு அவன் கரத்துடன் கோர்த்துக் கொள்ளாவிட்டால் அவள் மயக்கத்தில்
மூர்ச்சையாகி விட்டிருப்பாள்! அவனருகில் இருக்கும் பொழுதுகளில் கடிகார மணியின்
இயக்கமே சந்தேகத்திற்குரியதாய் போனது!..
மூன்று அண்ணன்கள், ஒரு அக்காள் என்று மிகவும் கண்டிப்புடனும் பாதுகாப்புடனும்
பேணப்பட்டவள்தான். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் தனியாக வெளியில்
போவது சாத்தியமே இல்லாத வளர்ப்பு. அப்படியிருந்தும், அவ்வப்போது வீட்டில்
வேலைக்குப் போயிருந்த பேபி, ஆபீஸில் லீவில் இருந்தாள். டெம்லர்ஸ் பார்க்;
மீமாலாண்ட்; கெந்திங் ஐலாண்ட் என்று தொடங்கிய சந்திப்பு, ஓடியன் தியேட்டரில்
ஆங்கிலப் படம் பார்ப்பதாக நீண்டது. ஆட்கள் அவ்வளவாக இல்லாத நண்பகல்
காட்சி. இருட்டடிப்பு செய்யப்பட்ட பகல்! பக்கத்திலிருப்பவரைக்கூட தடவிப் பார்த்தே
தெரிந்துக்கொள்ளும் அவசியத்தால் அடிக்கடி தடவிப் பார்த்துக்கொண்டனர்! படத்தில்
ஓடிய முத்தக் காட்சிகளும்; படுக்கையறைக் காட்சிகளும் அவர்களைப் படம் பார்க்க
விடாமல் அவஸ்தைக்குள்ளாக்கின. ஒரு வஷத்திற்குமேல் அந்த அவஸ்தை
தொடர்ந்தது. ஆனால், அந்த அவஸ்தைக்கும் ஓர் எல்லை இருந்தது. கடைசியில்,
கொரியா ஓட்டலில் அரை நாளுக்கு மட்டும் என்று ரூம் போட்டதில் அந்த எல்லையும்
மீறப் பட்டது.
பேபி பயந்தது போலவே நடந்தது. எப்போதும் சரியான தேதிக்கு வந்து விடுகிற
உதிரப் போக்கு, ஒவ்வொரு நாளாக தள்ளிப் போனபோது பேபி, பித்துப்
பிடித்துப்போனாள். ராமனிடம் எரிந்து விழுந்து கோபத்தைக் காட்டினாள். தற்கொலை
செய்துக்கொள்வதாக பிதற்றினாள். கருக்கலைப்பு செய்வதைப் பற்றிப் பிரேரித்தாள்.
அவனோ உடனே கல்யாணம் செய்துக்கொள்வோமென்று பரிந்துரைத்தான் . அவள்
செய்வதறியாத குழப்பத்தில் தொலைந்துக் கிடந்தாள். வராத உதிரப் போக்கு
வந்துவிட்டதாக உதிரத் துணியை அலசிப் போட்டு நாடகமாடினாள்.
வீட்டில் அவளின் இயள்பு வாழ்க்கை குழைந்துப் போனது. வீட்டில் இருப்பதே
வேதனை மிக்கதாய் இருந்தது. அக்காவைப் பார்க்கும் சகஜபாவம் இடறியது.
அக்காளின் பார்வை தனக்குப் பின்னால் நிழல் தட்டுவதை உணர்ந்தாள். நாளும்

4
நிழலின் நீட்சி நீண்டபோது, அந்த வார சனிக்கிழமை இரவு, பேபி விசாரணைக்கு
உட்படுத்தப் பட்டாள்.
‘ ராமன் என்ற ஒருவனை விரும்புவதாகவும் அவனுக்கே கல்யாணம் செய்துக்
கொடுக்கும்படியும்..’ அவள் தயங்கி தயங்கி சொன்னபோது, அந்தத் தைரியம் ஓர்
ஒழுங்கீனமாகவே அப்பாவை சினமூட்டியது.
‘ பளார்..’ என்று ஓர் அறை, பொறி கலங்கிச் சிதறும் உக்கிரத்துடன் ரயில்
தண்டவாளங்களை அடித்து உருக்கி செப்பனிட்டு காப்பு காத்துப் போன கரத்தால்
அவள் கன்னத்தில் விழுந்தபோது,
“ அப்பா..” என்று அலறி, கன்னத்தைத் தேய்த்துக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தாள்.
எட்டு வயதிலேயே அம்மாவை இழந்த மகள் அவள், எல்லாமே அப்பாவாக
நம்பிக்கொண்டிருந்ததை, ‘அப்பா..’ என தன்னையறியாமல் கதறியழுததில் தெரிந்தது,
அப்பாவின் நெஞ்சைப் பிழிந்தது. தாயில்லா மகளை முதன்முதலாக அடித்திருந்தது
இப்போது அவருக்கு வலித்தது. ராமனின் பின்னணி ரகசியமாக விசாரிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பேபியின் விருப்பப்படியே ராமனுடன் கல்யாணம்
நடந்தபோது அவள், மூன்று மாத கர்ப்பிணி.
அடுத்த இருபது வருடங்களில் மேலும் மூன்று பிள்ளைகள் பிறந்தன. இடையில்
குறுகிய கால அவகாசத்தில் கர்ப்பமாகிப் போனதால் இரண்டு கருக்களை ஆத்ம
விசாரத்துடன் கலைக்க வேண்டி வந்தது.
இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்று குடும்பம் நிறைவாகவும் நிம்மதியாகவும்
போய்க்கொண்டிருந்தது. கடைசி மகளுக்கு பத்து வயது நடக்கும்போது பேபிக்கு
அந்தப் பாழாய்ப்போன நோய் கண்டுப் பிடிக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு முன்னர், ஒரு சனிக்கிழமை இரவு அக்காள், திடீரென்று
மாரடைப்பில் காலமானபோது, சனிப்பிணம் தனிப்போகாது என்று, ஒரு கோழியையும்
காவல் கொடுத்தே அக்காளை அடக்கம் செய்திருந்தனர். ஆனால், அது போதாது
என்பதுபோல் இப்போது பேபிக்கு மார்பில் கண்ட கட்டியை, புற்றுநோய் என்று
டாக்டர்கள் உறுதிப் படுத்தினர்.
சில மாதங்களுக்கு முன்னர் மார்பு புற்று கண்டு இறந்துப் போன பெரிய அண்ணி,
இப்போது உயிர்ப்பெற்று வந்து பேபியை ஹிம்சிக்க ஆரம்பித்தார். திடீரென்று
இல்லாது போய் வெறும் தழும்பாய் எஞ்சிய இடது முலை;
அணிந்துக்கொள்ளும்போதும் கழற்றும்போதும் பாடியின் இடதுபக்க கச்சிலிருந்து
வெளிப்பட்டு வியர்வை நாறும் பஞ்சுக் குவியல்; எந்நேரமும் படுத்தே கிடக்கும் சாபம்;
ரவிக்கைக்குள் தொலைந்துப்போன முலையை, தழும்பில் தேடிக்கொண்டிருக்கும்
வலது கை விரல்கள்; இனி, விடுவதற்கு கண்ணீர் இல்லை என்பதுபோல் கன்னத்தில்
தெரிந்த காய்ந்துப்போன கண்ணீர்த் தடங்கள்; உணவின் தேவை அநாவசிமாகிப்
போனதில் விகாரமாய்த் தெரிந்த எழும்புகளைப் போர்த்திக்கொண்ட தோல்

5
உலர்ந்துப்போன உடல்; பேச்சு வெறும் உளறலாகிப்போன சிதைவு எல்லாம்
பேபியின் நினைவுக்கு வந்து அவளை வதைத்தன.
பேபி, சாவை வாழ்ந்துக்கொண்டிருக்கும் பிணமானாள்.
பயோப்ஸி சோதணையின் முடிவில், அது இரண்டாம் கட்ட புற்று என்றும் முழு
முலையையே அகற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கட்டியையும் அதைச் சுற்றிய
சதைப் பகுதியையும் நெஞ்சு எழும்பை ஒட்டி அகற்ற வேண்டி வரும் என்று சொல்லி;
உயிருக்கும் உறுப்பிற்கும் சேதமில்லை என்று முடித்தபோது, எல்லோரும் மிகுந்த
ஆறுதல் கொண்டனர். பேபி, நேற்றுவரை கேள்விக்குள்ளாக்கிக்கொண்டிருந்த
கடவுளுக்கு இப்போது, கண்கள் மூடி பிரார்த்தனையை முணுமுணுத்தாள். முலையில்
வந்த நோய், அந்த முலையையே காவு கேட்காமல் சிறு சதைப் பிண்டத்தை மட்டுமே
காவு கேட்டதில் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக்கொண்டாள்.
பேபி கேட்டுக்கொண்டதற்கு சம்மதித்து டாக்டர், ஒரு புதன் கிழமையன்று
ஆப்பரேஸன் தீர்மானித்தார். குடும்பத்தினரைத் தவிர எந்த உறவினர்களுக்கோ,
நண்பர்களுக்கோ, அண்டை வீட்டாருக்கோ எதுவுமே தெரியக்கூடாதென்று
உறுதியாக சொல்லி வைத்தாள். அதோடு, அது தைப்பூச வாரமாக இருந்துவிட்டதில்
அவளுக்கு ஒரே ஆறுதல். கீமோ தெராப்பிக்கு பிறகு முடியெல்லாம் கொட்டி தலைக்கு
முக்காடு போடும்போது தைப்பூசத்திற்கு மொட்டை போட்டிருப்பதாக சொல்வதற்கு
வசதியாக இருந்தது.
மூன்று மணி நேர ஆப்பரேஷனில் முலை வெற்றிகரமாகச் சிதைக்கப்பட்டு
சிகிச்சையின் வெற்றி, சிதைந்த முலையில் தழும்பேறியது.
* * *
கீமோ மற்றும் ரெடியேஷன் சிகிச்சைகளால் நோய்க் கிருமிகள் அழிக்கப்பட்டு,
உடலில் எங்கும் இருந்த ரோமங்கலெல்லாம் உதிர்ந்துப்போய் அவள், புணர்ஜென்மம்
பெற ஒரு வருஷத்திற்கு மேல் ஆனது. பின் தொடர்ந்த ஐந்து வருஷங்களுக்கு,
பலஹீனமான நோய் எதிர்ப்பு சக்தியால் எந்த நிமிடமும் செத்துப் போவதை
எதிர்ப்பார்த்தே வாழ்ந்துக்கொண்டிருந்தாள். பருவ கால நோய்களில்கூட உயிர்ப்
போகும் அச்சத்தைக் கொண்டு பயந்தாள்.
பேபி, மீண்டும் பழையபடி வெளியில் போய்வர தலையில் புதிய கூந்தலும் உடலில்
பழைய தெம்பும் தேவைப்பட்டன. கிட்டின!.. சந்தோஷமாக, ஐந்து வருஷ இழப்பை
ஈடு செய்வதுபோல் கூந்தலுக்கு டாய் அடிக்க; ஈகோன் சேவில் மளிகைச் சாமான்கள்
வாங்க; தையல்காரரிடம் போக; செந்தூல் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க என்று
எல்லா இடங்களுக்கும் அவளே வெறியுடன் கணவனுடன் போய் வந்தாள்.
பழையபடி வீட்டு வேலைகளில் தன்னை மறந்தாள். மகளுக்குத் திருமணமாகி
பிறந்திருந்த இரண்டு பேரப்பிள்ளைகளும் நோய்க்கு மருந்தாய் இருந்தனர். தான்
முழுமையாக குணம் அடந்துவிட்டதாக அவளுக்கே நம்பிக்கை பிறந்தது. சமைப்பது;
பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது; வீட்டை பராமறிப்பது என்று அவள்,
பழைய பேபியானாள்.

6
அப்போதுதான் ஒரு நாள், அவளின் மனதைத் தைத்த அச்சம்பவத்தைக் கண்டாள்.
பேரன் பள்ளிக்கும் பேத்தி பாலர் வகுப்பிற்கும் போயிருந்தனர். தாத்தா, கொஞ்ச
நேரத்திற்கு முன்னர்தான் எழுந்து, குளித்துவிட்டு வெளியில் பசியாறப் போயிருந்தார்.
பாட்டி, அவர்களின் படுக்கை விரிப்பை சரி செய்துவிட்டு அவரின் போர்வையை
உதறி, விரித்து இரண்டாக மடித்தபோது அந்த ஈரத் திட்டைக் கண்டாள்! தண்ணீராக
இருக்குமோ என்று எண்ணி, வெயிலில் காயப்போடவேண்டி வருமா என்று தடவிப்
பார்த்தாள். தண்ணீரை போல் தெரியவில்லை! அவ்விடத்தை அழுத்திப் பிடித்து
விரல்களால் தேய்த்த போது விரல்கள், பிசுபிசுத்து ஒட்டின. உடனே, உணர்ச்சியைக்
கிள்ளியது போன்ற ஒரு சிலிர்ப்பு! அந்த ஈரம், அவர்களை தாம்பத்திய பந்தத்தில்
ஒட்டிப் போட்ட பசை!. எடுத்து முகர்ந்தபோது அந்த மணம், அந்தரங்கத்தைத் தீண்டி
நினைவை சுட்டது. மீண்டும் பேபி, அதை நெஞ்சு நிறைய முகர்ந்து நெகிழ்ந்துப்
போனாள்.
எண்ணங்கள் கிளர்ந்தன… நிறைவான தாம்பத்திய சுகத்திற்கு ஆசீர்வதிக்கப்பட்ட
வாழ்க்கைதான் அவளுக்கு! இருபது வருஷங்களில் நான்கு பிள்ளைகள், மூன்று கருக்
கலைப்புகள் என்று சந்தான பாக்கியத்திற்கு குறையேதும் இருக்கவில்லை. நான்காவது
பிரசவத்தோடு கர்ப்பப்பையை அகற்றாமலிருந்திருந்தால் பிள்ளைகள் நான்கோடும்
கருக்கலைப்புகள் மூன்றோடும் நின்றிருக்காது. இந்த லட்சணத்தில் யோணிப்
பொருத்தம் சரியில்லையென்று ஜாதகம் சொன்னது! ஒரு வேளை, வசியப் பொருத்தம்
மகா உத்தமம் என்று இருந்ததோ என்னவோ?
அப்போதுதான், தலையில் விழுந்த இடி முலையில் புற்றாய் இறங்கி, அவர்களைப்
பிரித்துப் போட்டது. உயிரின் வதையில் அந்த உணர்ச்சிகள் எல்லாம் செத்தே
போயின. மார்பை தடவிப் பார்த்துக்கொண்ட ஒவ்வொரு கணமும், நோயின் தீவிரம்
தெரியாததால் முலையின் தலைவிதியை எண்ணி சந்தேகம் கொண்டாள். ‘இன்னும்
எத்தன நாளக்கி இது இருக்குமோ தெரியிலியே?..’ என்று அச்சம் கொண்டாள்.
ஒரு வழியாக சிகிச்சை முடிந்து பேபி, படிப்படியாக தேறிக்கொண்டு வந்தபோது,
பேரப்பிள்ளைகள் பிறந்து, இடையில் படுத்து இடைவெளியை நீட்டிப் போட்டனர்.
அந்த நீட்சியில், உடலின் தேவையெல்லாம் அவளுக்கு தோன்றவேயில்லை.
தளர்ந்துப் போனது, உடலா? உணர்ச்சிகளா?. எப்போதாவது தோட்டத்து
மல்லிகையின் மணம் வீட்டிற்குள் மணப்பதுபோல், அவளின் நினைப்பை
உரசிக்கொண்டு அந்த உணர்ச்சிகள் ஊர்ந்தபோது, இப்போது ‘பாட்டி’யாகியிருந்த
பேபி, அந்த உணர்ச்சியில் புதிதாக அசிங்கமும் கூச்சமும் பட்டாள். ஒரு பாட்டிக்கு
தகாத செயலாய் அதை உணர்ந்தாள் .
பாவம் தாத்தா. நோயிலும் சிகிச்சையிலும் பாட்டி இருந்தபோது, எப்போதும் இல்லாத
தனிமையில் அவர் துவண்டுப் போனார். மனைவியின் பாஷை பேச அவளால்
மட்டுமே முடியக்கூடிய திருமண பந்தம்; அவரின் தேவைகளறிந்து பூர்த்தி செய்ய
அவள் இல்லாது போன அசௌகரியம்; மாலை நேரங்களில் தோட்டத்தில்
பேரப்பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதை பக்கத்தில் உட்கார்ந்து,
தொடைக்கடியில் இருந்த தாத்தாவின் கையை ரகசியமாய் பற்றி

7
பார்த்துக்கொண்டிருக்கும் அன்னியோன்னியம்; ஒருநாள் வளர்ந்த ரோமத்தைபோல்
வாட்டம் படர்ந்த முகத்தைப் பார்த்ததுமே காரணம் கேட்கும் அக்கறை என்று எதுவுமே
இல்லாத வெறுமையில் தாத்தா, வீட்டிலிருந்த இன்னொரு தளவாடப்
பொருளைப்போல் சீண்டுவாரற்றுப் போனார்.
பாட்டிக்கோ, அந்த நோயில் சாவைத்தவிர வேறு நினைப்பே இருக்கவில்லை. எங்கோ
தூரத்தில், யாரையோ பார்ப்பது போலேயே தாத்தாவைப் பார்த்தாள். தாத்தாவிற்கான
பணிவிடைகளை இப்போது அக்கறையில்லாமல் சலிப்புடன் மகள்,
செய்துக்கொண்டிருந்ததால், தனது தேவைகள் சிலவற்றை அவரே பார்த்துக்கொள்ளத்
தொடங்கினார். பாட்டியோ, எப்போதும் கண்கள் மூடி படுத்தே கிடந்தாள். சிகிச்சைக்கு
அழைத்துப் போகும்போதெல்லாம் காடியில் உட்கார்ந்த கையோடு கண்களை
மூடிக்கொண்டதால் தாத்தாவிற்கு பேச வார்தைகள் இருந்தும் மௌனமாகிப்
போனார். கிளீனிக்கிற்கு போனதும் புத்தகத்தில் மூழ்கிப் போவார். பாட்டி,
சிகிச்சையின் பலனை வேண்டி பிரார்த்தணையில் கரைந்துக்கொண்டிருப்பாள்.
* * *
பசியாறிவிட்டு வந்த தாத்தா, ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.
போர்வையில் கண்ட ஈரத்தில் பாட்டி, நனைந்துப் போயிருந்தாள். அந்த ஈரம்,
அவளைச் சஞ்சலப் படுத்தியது. பேரப்பிள்ளைகளை கண்டுவிட்ட வயது; உடலை
உலுக்கிப் போட்ட நோய்; உணர்ச்சிகள் உலர்ந்துப்போன உடல் என எல்லாம் சேர்ந்து
தாம்பத்திய உறவின் நினைப்பே அவளுக்கு இல்லாமல் மழுங்கடித்திருந்தன. நோய்க்கு
முன்னான காலத்தை நினைத்துப் பார்த்தாள். தாத்தாவின் விருப்பத்திற்காவே என்று
தன்னை ஏமாற்றிக்கொண்டாலும் அவளும் எதிர்ப்பார்க்காமல் ஒரு மாதமும் கடந்ததே
இல்லை. சமயத்தில், முதலில் கட்டியணைத்தது பாட்டியாகவும் இருந்தாள். ஆனால்
இப்போது, பக்கத்திலேயே படுத்திருந்த தாத்தா, அவளின் அரவணைப்பும்
அன்னியோன்னியமும் வேண்டி கற்பனைக்குள் தன்னுடனோ அல்லது
வேறுயாருடனோ சல்லாபித்துக்கொண்டிருந்ததை அறிந்த போது பாட்டி, தன்னுடன்
என்பதில் பெருமிதமும்; வேறு யாருடனோ என்பதில் பொறாமையும் கொண்டு
சிணுங்கினாள்.
‘இந்த மனுஷனுக்கு இன்னும் அந்த ஆச கொஞ்சமும் கொறையவே இல்ல!..’ என்று
முணுமுணுத்தபடி, ஏதோ வேலையில் இருப்பதுபோல் போக்கு காட்டி, இமைகளின்
சிமிட்டலில் ஒளிந்துக்கொண்டு தாத்தாவைப் பார்த்தாள். கட்டை விரலும் ஆட்காட்டி
விரலும் தாமாகவே தடவி தேய்துக்கொண்டன.! பாட்டி மனைவியானாள். தாத்தாவின்
பக்கத்தில் உட்கார்ந்து, தொடைமேல் கையை வைத்து,
“ இந்த சனியன் புடிச்ச சீக்கு வந்ததிலேர்ந்து உங்கள சரியாவே பாத்துக்கில..” என்று
ஏதோ பொதுவாகப் பேசுவதுபோல் சொன்னாள்.
“ ஏன், என்னாச்சிடீ?.. “ தன் தொடை மேலிருந்த பாட்டியின் கை பற்றிக் கேட்டார்
தாத்தா.
“ ஒன்னுமில்ல.. சும்மா சொல்றேன்… “ பதுங்கினாள் பாட்டி.

8
“ ஏன், இப்ப நீ நல்லாதானடீ இருக்க? இனிமே நல்லா பாத்துக்க..” தாத்தா திரையை
விலக்கினார்.
“ இப்ப நல்லாதான் இருக்கேன்… இருந்தாலும் அந்த சீக்கு வந்ததிலேர்ந்து….” என்று
இழுத்தாள் பாட்டி.
“ இப்ப சீக்கு, உன் ஒடம்புல இல்ல. உன் மண்டீல இருக்குடீ…” என்று எழுந்தார்
தாத்தா.
அவர் எழுந்துப் போனதில் அவள் வருத்தம் கொண்டாள். அது அப்படித்தானோ
என்பதுபோல் காலையில், பிசுபிசுத்த விரல்களை ஒரு நிமிடம் நாசி நிறைய முகர்ந்துப்
பார்த்து, பருவப் பெண்ணைப்போல் கிளர்ச்சியுற்றுப் போனதை
நினைத்துக்கொண்டாள் பாட்டி.
* * *
சனிக்கிழமை இரவு. வழக்கம்போல் மகள், வெள்ளி இரவே பிள்ளைகளை
அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டிற்கு போயிருந்தாள். தாத்தா, பாட்டி மட்டுமே
வீட்டில்! மாலையில் பெய்த கனத்த மழையில், படுக்கையறையில் குளிர் விட்டிருந்தது.
தாத்தா வழக்கம்போல், படுக்கையின் தலைமாட்டு சுவரில் சாய்ந்து புத்தகம்
படித்துக்கொண்டிருந்தார்.
பாட்டி, நீண்ட நாட்களுக்குப்பிறகு மீண்டும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம்பித்தாள்.
போர்வையின் ஈரம், நினைவில் பிசுபிசுத்தது.
“ சாமி கும்புட்டு வர்ற காட்டியும் படுத்துருவீங்களா?..” – ஏதோ இயள்பாய்
கேட்பதுபோல் பாட்டி பாவணை செய்தாலும் முகத்தில் படர்ந்த வெட்கம்,
கள்ளத்தனத்தை காட்டிக் கொடுத்தது.
“ நீ என்னடீ சொல்ற?.. படுத்துருட்டா.. வேண்டாமா?..” – என்ற கேள்வியால்
பாட்டியின் கூச்சத்தில் தாத்தா, மேலும் வெளிச்சத்தை அடித்தபோது, அவள் இன்னும்
அதிக கூச்சத்திற்குள்ளானாள். ஆனாலும் அவளும் சளைக்கவில்லை!..
“ உங்க இஸ்டம்…” என்று சொன்னவள், பார்வையில் எதிர்ப்பதக் கோரிக்கையை
வீசிவிட்டுச் சென்றாள்.
பாட்டி, சாமி கும்பிட்டுவிட்டு வந்தபோது அறை, இருளைப் போர்த்திக்கொண்டு
குளிருக்கு இதம் வேண்டிக் கிடந்தது.
‘ மனுஷன் தூங்கிட்டாரா?.. ம்… பாழாப்போன சீக்குனால எல்லாமே மாறிப்போச்சி..’
பாட்டி பக்கத்தில் படுத்தாள். பழைய நினைப்பில் படபடத்தாள். போர்வைக்குள்
தாத்தா, அம்மணத்தையே ஆடையாய் தரித்து, தளர்ந்துப் போயினும் உயிர்த்திருந்தார்.
‘ பாவி மனுஷன், மாறவேயில்ல இன்னும்..’ என்று முணுமுணுத்து இருளிலும் வெட்கப்
பட்டாள் பாட்டி.

9
“ ம்.. எவ்ளோ நாளாச்சிடீ?..” என்று உடனே தாத்தா அவளை கட்டி
அணைத்துக்கொண்டார். பாட்டி, அந்த ஆலிங்கனத்தை அனுபவிக்க கண்களை
மூடினாள். ஆனால், முலையின் வடுவைத் தீண்டிய கரத்தினால், நோயின் நினைப்பு
மீண்டெழுந்து அவளை உறுத்தலுக்குள்ளாக்கியது. நாவின் ஸ்பரிசம் அந்த வடுவில்
பட்ட போது, அசௌகரியத்தில் உடல் நெளிந்தது. ‘முழுசா கொனமாயிட்டதா
தோன்னாலும் அங்க நோய்க்கிருமிங்க ஏதும் அரவே இல்லாமலா போயிரும்?..’
பாட்டிக்கு சந்தேகம் வந்தது. அந்த ஸ்பரிசத்தால் அவருக்கு நோய்
தொற்றிக்கொள்ளுமோ என்ற பயம் வந்தபோது, உடல் இறுக்கத்திற்குள்ளானது.
பாட்டியால் அந்த அந்தரங்கத்தை அனுபவிக்க முடியவில்லை. உணர்ச்சிகள்
அற்றுப்போனதுபோல் உடல் மரத்து விலகியது. ஓர் இயந்திர லயத்தில் அவர்கள் கூடி,
எரிச்சலுடன் விலகினர். தாத்தா எழுந்து, குளிக்கப் போனார்.
பாட்டி, தாத்தா உடனே எழுந்துப் போனதில் மனசு சங்கடப் பட்டாள். எப்போதும்,
முதலில் எழுந்துப் போவது அவளாகவே இருப்பாள்.
‘ பழைய மாரி இனிமே இருக்கவே முடியாதா?..’
தாத்தா குளித்துவிட்டு வந்ததும் பாட்டி கேட்டாள்.
“ எம்மேல கோவமா?..”
“ கோவமா? ஏண்டீ, என்னாச்சி?.. “
“ இல்ல.. என்னால முன்னமாரி…” என்று இழுத்து, சொல்லாமலேயே அடங்கிப்
போனாள்.
* * *
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒரு நாள்!. மத்தியான நேரம், பாட்டி தூக்கக்
கிறக்கத்தில் கிடந்தபோது, தாத்தா, தன் கைப்பேசியில் ஓர் ஆங்கில அகப்பக்கத்தைக்
காட்டினார். பாதி கண்களில், ‘ முன்னால் புற்று நோயாளிகளின் உடலுறவு ஈடுபாடு ‘
என்பதைப் படித்ததும் அவளுக்கு இமைகள் விரிந்தன. தூக்கம் போனது. பலவிதமான
புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் தங்களின் உடலுறவு அனுபவங்களை
பகிரங்கமாக பகிர்ந்துக்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருமே ஐம்பது வயதிற்கு
மேலிருந்தது பாட்டிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. உடலுறவில் இருக்கும் ஆர்வம்,
ஆரோக்கியத்தின் அடையாளமென்று அவர்கள் எல்லோருமே சொன்னது அவளை
யோசிக்கவைத்தது. சிகிச்சைக்கு பிறகான வாழ்க்கையை அவ்வளவு அழகாகவும்;
ஆனந்தமாகவும் -நோயின் சுவடு தெரியாமல் – அவர்கள் வாழ்வது, பாட்டிக்கு
அதிசயமாக இருந்தது. கைப்பேசியைப் பெற்றுக்கொண்டு தாத்தா மீண்டும்
சொன்னார்.
“ மறுபடியும் சொல்றேண்டீ!.. உன்னோட பிரச்சின உன் ஒடம்புல இல்லடீ!.. உம்
மூளையில இருக்குது..”

10
பாட்டி, சற்றுமுன் படித்ததை தாத்தா சொன்னதோடு வைத்துப் பார்த்தபோது, அது
அப்படித்தான் என்பதுபோல் தோன்றியது. தேவையில்லாமல் குணமாகிவிட்ட
நோயில் வாழ்ந்து, சந்தோஷமாக வாழவேண்டிய வாழ்க்கையை வீனாக
வதைத்துக்கொள்வதாக அவளுக்குப் பட்டது.
* * *
அந்த மாதத்தின் பௌர்ணமி இரவு!.. தாத்தா, எப்போதும்போல் படுக்கையில் சாய்ந்து
படித்துக்கொண்டிருந்தார். பாட்டி, குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டு
கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்க்கப் போனவளை பக்கத்தில் வந்து உட்காரச்
சொன்னார். கையில், தமிழ் மாத இதழ் ஒன்று இருந்தது. அதில், ஆணை ஆரத்தழுவி
முத்தமிட ஏங்கும் பெண்ணும், கொழுத்து மதர்த்த அவள் கொங்கையை அழுத்திப்
பிடித்து மயங்கிப் போன ஆணின் சிலை அச்சிடப்பட்டிருந்தது. அதன் கீழே, தடித்த,
கருமை எழுத்துகளில் இரண்டு வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. தாத்தா சொன்னார்!..
“ இத திருக்குறள்ன்னு சொல்லுவாங்க.. படிகிறன் கேளுடீ..”
‘கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.’
அதன் அர்த்தத்தை பேச்சு மொழியில் மிகவும் விரசமாக தாத்தா சொன்னபோது,
பாட்டிக்கு போதை தலைக்கேறியது. குறிப்பாக நாவையும், நாசியையும் பற்றி நீட்டி,
விவரித்து வேண்டுமென்றே பச்சையாக சொன்னபோது, பாட்டி புத்தி கிறங்கிப்
போனாள். முகத்தில் வெட்கத்தை பூசிக்கொண்டு ஆவலாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘ ஐயே,.. இப்படியெல்லாம் கூடவா எழுதுவாங்க!.. மனுசன் எப்ப பாத்தாலும்
புஸ்தகமும் போனுமா இருக்கறது, இந்த மாரி விஷயங்கள படிக்கறதுக்குதான்
போலிருக்கு?..’ – பாட்டிக்கு சந்தேகமாக இருந்தது.
பாட்டி, தொலைக்காட்சி பார்க்கப் போகாமல் விளக்கை அணைத்தாள். அவள், பூரணச்
சந்திரனைப்போல் பூரித்துக் கிடந்தாள். தாத்தா அவளைக் கட்டியணைத்து,
முத்தமிட்டு, ரகசியக் குரலில் யாசித்தார். குறளில் படித்ததை கோரிக்கையில் வைத்தார்.
“……………..”
அந்த யாசிப்பு பாட்டிக்கு ஒரு புது அனுபவம். அவள் அப்படியே சொக்கிப் போனாள்.
காதல் மீதுர அவர் காமத்தை யாசித்ததில் பாட்டிக்கு உணர்ச்சி பிரவாகம் எடுத்து
உடல் சிலிர்த்து உதறியது. தளர்ந்துப்போன உடல்கள்தாம். ஆனால், உணர்ச்சிகளில்
கொந்தளித்துக்கொண்டிருந்தன. பாதி மயக்கத்தில், திருடனைப் போல்
திரைச்சீலையினூடே அறைக்குள் எட்டிப்பார்த்த பௌர்ணமி, அவர்களின்
அந்தரங்கத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சியது. பாட்டி, கண்களை இறுக
மூடிக்கொண்டாள்.
மெல்ல எழுந்து, தோளோடு தாத்தாவைக் கட்டியணைத்து, படுக்கையில் சாய்ந்து,
இப்போது பாட்டி யாசித்தாள்.

11

“…………………..?”
எப்போதும் ‘ முத்தம் கொடுக்கட்டா…’ என்ற ஒரு பொதுக் கேள்வியில் சகல
சரசங்களையும் அடக்கி கூச்சம் காத்தவள் இன்று, அவள் விரும்பிய சரசத்தின்
பிரத்தியேக வார்த்தையை கிசுகிசுத்து, உணர்ச்சிகளைத் தூண்டினாள். தாத்தா
படித்துக் காட்டிய குறளின் அர்த்தம் பாட்டிக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
தாத்தா, மீண்டும் வேண்டுமென்றே அந்த வார்த்தையை கேட்க விரும்பி கேட்டார்.
“ என்னடீ?…
பாட்டியை நாணம் பிடுங்கித் தின்றது. ஆனாலும், விருப்பத்துடன் மீண்டும்
கிசுகிசுத்தாள்.
“………………….?”
தாத்தா ஏதும் பேசவில்லை. ஆனால், பாட்டியின் தலையை ஏந்தியிருந்த அவரின்
கைகள் பேசின. காமம், நாசியை நிறைத்து; வாயெல்லாம் ஊர்ந்து; உடலெல்லாம்
படர்ந்து வியாபிக்க, தனியொருத்தியாய் தாள முடியாத உச்சத்தில் தாத்தாவையும்
சேர்த்துக்கொண்டு அவருள் புதைந்து இருவரும் தம்மை மறந்து புணர்ச்சியின்
மயக்கத்தில் கிறங்கிப் போயினர். தலை மாட்டில் இருந்த கடிகாரம், அவர்களை
தொந்தரவு செய்ய விரும்பாமல் நிசப்தத்துடன் நேரத்தை கணித்துக்கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் அவர்கள் அப்படி கிடந்தனரோ, பாட்டிதான் முதலில் தன்
அம்மணத்தை தடவிப் பார்த்து தன்னுணர்வு பெற்றாள். ‘அட ஒங்கொப்பறான!..
எவ்ளோ நேரமா இப்பிடி கெடந்தனோ தெரியிலியே..? என்று கூச்சம் கண்களை
கூசுவதுபோல் இமைகளை இறுக்கிக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தாள். நள்ளிரவை
நெருங்கிக்கொண்டிருந்த நேரம் மட்டுமே தெரிந்தது. மற்ற கணக்கெல்லாம்
கடிகாரத்திடமே இருந்தது. பக்கத்தில் பார்த்தாள். தாத்தா, நெஞ்சில் கோர்த்த
கைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். போர்வையைத் தேடி, அவர் இடுப்பில்
போட்டுவிட்டு, மெக்ஸியை அணிந்துக்கொண்டு கைகால்களை கழுவிவிட்டு வந்து
மீண்டும் படுத்தாள்.
* * *
விடிந்துவிட்டதுபோல் பிரமை தட்ட, திடுக்கிட்டு எழுந்த பாட்டி, வெளிச்சத்தில் கூசிய
கண்களை கசக்கிக்கொண்டேநேரத்தைப் பார்த்தாள்.
“ ஐயோ, மணி ஏழாயிரிச்சா?.. பேரப்பிள்ளிங்க எப்படி ஸ்கூலுக்கு போனாங்க?..”
என்று போர்வையை உதறிக்கொண்டு எழுந்தப் பாட்டி, தரையில் உட்கார்ந்து
முதுகிற்குப் பின்னால் தலையனையை வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து
எப்போதும்போல் கைப்பேசியை தேய்த்துக்கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்தார்.
கொஞ்சம் நிதானம் பிறந்தது, அன்று சனிக்கிழமை என்பது அவளுக்கு நினைவு
வந்தது. ‘ ஓ.. இன்னிக்கி சன்னிகிழம இல்ல?..’ என்று பெருமூச்சு விட்டு கட்டிலில்
உட்கார்ந்தாள்.

12
“ ராத்திரி செரியான மயக்கம் போலிருக்கு?.. சனிக்கிழமன்றதுகூட மறந்துப்போச்சி?..”
– கைப்பேசியிலிருந்து பார்வையை எடுக்காமலேயே பாட்டியிடம் குறும்பு பேசினார்
தாத்தா.
“ ம்.. உங்களுக்கு மட்டும் இல்லியாக்கும்!..” – அவருக்கு ஈடாக குறும்பு பேசி, அவள்
முகம் அலம்பப் போனாள்.
“ ஐயோ, என்னாங்க இது?..” – முகம் அலம்பப் போன பாட்டி, பதைபதைப்புடன்
குளியலறையிலிருந்து ஓடி வந்தாள்.
“ ஏன், என்னாச்சி?.. “ தாத்தா பதறிப்போய் பாட்டியைப் பார்த்தார்.
“ ஐயோ,.. நா செத்தன்!..“ – பக்கத்தில் உட்கார்ந்து, பதற்றத்துடன் வலதுப் பக்கமாக
தலை சாய்த்து உயர்த்தி, இடப்பக்க கழுத்தைக் காட்டினாள். கழுத்துப் பட்டையில்
ஐம்பது காசு அளவிற்கு பற்குறி!.. ரத்தமே கன்றிப் போனதுபோல் தோல் உப்பி, அந்த
பகுதி நன்றாகச் சிவந்துப் போயிருந்தது.
அதைப் பார்த்ததும், தாத்தாவிற்கு குறுப்புத்தனமான சிரிப்பே மேலோங்கியது.
“ உங்களுக்கு சிரிப்பா இருக்கா?.. நீங்க வேணூன்னுதான செஞ்சிங்க?.. “ பாட்டிக்கும்
ஒரு கணம் சிரிப்பே வந்தாலும் மறுகணமே நிலைமையை உணர்ந்து முகம் வெளிறி,
உடல் பதறி நடுங்கினாள்.
“ நெசமாவே சொல்றன்டீ.. எனக்கே தெரியலடி எப்படி நடந்துச்சின்னு!.. “ என்று அவர்
சமாளித்தப்போதும், அக்கடியைப் பார்க்க பார்க்க அவருக்கு சிரிப்பே பொங்கியது.
ஆனால் பாட்டி, மிகுந்த சஞ்சலத்திற்குள்ளாகியிருந்ததால் சிரிப்பை
அடக்கிகொண்டார். அன்னியோன்னியமான ஆசைகளின் பரிவர்த்தனையில் பாட்டி,
தன்னுணர்வு இழந்திருந்த நேரம் தாத்தா, சுய உணர்வுடனேயே அவளின் கழுத்தை
கடித்து பற்குறியைப் பதித்தார். ஆனால், அது இப்படி சிவந்து கன்றிப் போகுமென்று
அவர் எதிர்பார்க்கவில்லை. உலர்ந்து தளர்ந்துப்போன தோலாயினும் உணர்ச்சியும்
உதிரமும் கொந்தளித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும்!..
“ உங்களுக்கு இன்னும் சிரிப்பாவே இருக்கா? இன்னிக்கி ராத்திரி வீட்ல ஃபேமலி
கெதரிங் இருக்கே ஞாவகம் இருக்கா? ஐயோ… நா என்ன செய்றது இப்ப?..” – அவள்
மீண்டும் குளியலறைக்கு ஓடினாள். அவரும் பின்னாலேயே போனார். அவளைப்
பார்க்க பரிதாபமாக இருந்தது.
தலையை உயர்த்தி மறுபடியும் கழுத்துப் பட்டையை பார்த்துக்கொண்டிருந்தாள்.
நன்றாக கன்றிச் சிவந்து, நெற்றிக் குங்குமத்தை கழுத்தில் வைத்ததுபோல், பார்வையை
உறுத்திக்கொண்டு தெரிந்தது.
பாட்டி, நுனிவிரலில் கோல்கேட்டை பிதுக்கி, பற்குறியில் தேய்த்துக்கொண்டாள்.
பாவம், தேய்க்கும்போது அவளின் விரல்கள், தடயத்தை அழிக்கும்
மனசாட்சியைபோல் நடுங்கின.

13

“ இத போட்டா நல்லா போயிருமாடீ?..”
பாட்டி, பதிலேதும் சொல்லாமல் கோல்கேட் தேய்த்துவிடப்பட்ட பற்குறியையே
பார்த்துக் கிடந்தாள். திடீரென்று, அலமாரியைத் திறந்து காலர் உள்ள பனியனை
அணிந்துப் பார்த்தாள். பாதுகாப்பாய் தோன்றவில்லை. கழுத்தில் துப்பட்டாவை
சுற்றிப் பார்த்தாள். அவ்வப்போது துப்பட்டா நழுவி சரிந்து கழுத்தைக் காட்டி
பயமுறுத்தியது. பாட்டிக்கு ஒரு வழியும் பிடிபடவில்லை!. நினைவில் பட்ட ஃபேமிலி
கெதரீங்கின் நிழலால், முகமெல்லாம் கருமைப் படர்ந்தது. கைகள், சங்கடத்தைப்
பிசைந்தன. ராத்திரி வீட்டிற்கு வரப்போகும் உறவினர்களை ஒரு பட்டியல்
போட்டாள்.
மகள், மருமகன், சம்மந்தி வீட்டார், தம்பி குடும்பத்தினர், அண்ணன்கள்,
அண்ணிமார்கள், உறவினர்கள் என்று தான் அவமானத்திற்கு உள்ளாகிப்போகும்
வட்டத்தின் நீட்சியை எண்ணி, கலவரத்தில் கண்கள் கலங்கிப் போனாள்.
அன்ணன்மார்களின் கல்யாண வயதிலுள்ள நான்கைந்து பெண்பிள்ளை நினத்து
வெட்கத்தில் கூசிக் குறுகிப் போனாள். உயிரை மாய்த்துக்கொண்டால்கூட அந்த
அசிங்கத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க முடியாத இயலாமையை நினத்து எரிச்சலுற்று,
தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகிப் பதைத்தாள்.
‘ ஐயோ.. கடவுளே.. எந்த மொகத்த வெச்சிக்கிட்டு இவுங்கள எல்லாம் பாப்பேன்?..’
கல்யாணமான ஆரம்பகால வருஷங்களில் செய்த சில்மிஷங்களை, இப்போது ஏதோ
ஒரு வெறியில் செய்யப்போய் அதில் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் என்றெல்லாம்
நினைத்துப் பார்க்கும் நிலையில் தாத்தா அப்போது இருக்கவில்லை. முன்பெல்லாம்,
அவள்தான் எவ்வளவு சந்தோஷமாகவும் பெருமையாகவும் அந்தப் பற்குறியில் தனது
தாம்பத்தியத்தின் நெருக்கத்தை எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தாள்.
“ நா எங்கியாவது ஓடி போப்போறேன். என்னால இந்த அவமானத்த தாங்க முடியாது..

பாட்டி, பிதற்ற ஆரம்பித்தாள். தாத்தா அவளைத் தேற்றும் வழி தெரியாமல் குழம்பிப்
போனார்.
* * *
சரியாக ஆறு மணிக்கு, தம்பி குடும்பத்தினர்தான் முதலில் வந்தனர். கூடவே,
காலையில் வெளியில் போயிருந்த தாத்தாவும் அவர்களுடனேயே
வந்துக்கொண்டிருந்தார்.
“ வாடா மணி!. வா ஈஸ்வரி!. “ பாட்டி, வாசலுக்கு வந்து வரவேற்றாள்.
“ ஐயோ, அத்த பேபி!.. கழுத்துல இன்னா அத்த பேபி?.. “
“ அதான் ஈஸ்வரி.. மத்தியானம் மீனு பொரிக்கும்போது, ஏதோ நெனப்புல மீன் துண்ட
எப்பிடி சட்டீல போட்டேன்னே தெரியில. அது என்னடான்னா, கொதிக்கிற எண்ண
கரெட்டா கழுத்துல வந்து தெரிச்சிச்சி கொப்பளிச்சி போச்சி! ஸ்… அப்பா, என்னா

14
எரிச்சலு? தாங்க முடியில…” என்று முகத்தை சுளித்து மீண்டும் வேதனையில்
வெந்தாள் பாட்டி.
“ நல்ல வேல.. கண்ணுல படல அத்தபேபி… “
“ ஆமா ஈஸ்வரி, நானும் அததான் நெனச்சன்.. “ என்று சொல்லி அவர்களை
வீட்டிற்குள் அழைத்துப் போன பாட்டி, வந்ததிலிருந்து தாத்தாவின் கண்களைப்
பார்க்கவே இல்லை.
தாத்தா, பரிதாபமாக பாட்டி போவதையே பார்வை மறைய பார்த்துக்கொண்டு
நின்றார்.

-ஶ்ரீகாந்தன்(மலேசியா)

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *