01

மூண்டு அணைந்த காட்டுத்தீயினால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன. கம்பீரமற்ற தரவை நிலத்தைக் கிழித்து பல கிலோ மீற்றர்களுக்கு நீண்டிருந்த புறநகர் நெடுஞ்சாலையில் நாங்கள் பயணித்தோம். மெல்பேர்னின் மேற்குத் திசை வழியாகச் சென்று பண்ணைப்பகுதிகளை தொட்டுவிட்டால், நாம் செல்லும் இடம் வந்துவிடுமென வரைபடத்தில் ஏற்கனவே பார்த்திருந்தேன். வாகனத்துக்குள்ளிருந்த மூன்று பேரையும்விட பேரச்சம் தழும்பிக்கொண்டிருந்த என்னுள் இறுக்கம் கூடியது. கண்ணாடி வழியாகத் தெரியும் பூமியை பார்க்கத்தொடங்கினேன். அடர்பசுமை நிறைந்த பண்ணை நிலங்கள் தெரியத் தொடங்கின. அடுத்து வந்த வயல்களில் அறுத்த புல்லுக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையில் சுருட்டி ஆங்காங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மெல்பேர்னின் மேற்கு நிலத்தின் வழியாக கடலை நோக்கி நீண்டிருக்கும் இந்தப் பகுதி மிகவும் மர்மமானது. ஆளரவமற்ற அமைதி அடர்ந்திருந்தது. வெறித்துக் கிடக்கும் வீதியிலும் அவ்வூர் தனித்துக் கிடந்தது. ஆனந்தக்களிப்பின் உல்லாச புருஷர்கள் போதையில் தள்ளாடுவதும் இங்கே தான் நிகழுமாம்.

எனக்குள்ளே குமிழ்விடும் பதற்றம் வியர்வையாக வழிந்தபடியிருந்தது. வந்து சேரவேண்டிய இடத்தினை அண்மித்துவிட்டோம் என்பது வாகனத்தின் வேகம் தணிந்ததில் புரிந்தது. தகரங்களால் வேயப்பட்ட சமச்சீரற்ற தனி வீடு, அருகில் செல்லச் செல்ல பெரிதாய் தெரிந்தது. அந்த வீட்டின் மீது எனக்கு அளவுக்கதிகமான கவனம் குவிந்தது. தனித்த தகரக்கொட்டகை. என்னில் தெரிய ஆரம்பித்த கலவர ரேகைகளை அழித்து, அமைதிப்படுத்துவதில் எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள். வாகனத்திற்குள் பாட்டுச் சத்தம் குறைந்தது. தகர வீட்டுக்கு முன்பாக கிளைவிட்டிருந்த பெயர் தெரியாத ஒரு மர நிழலில், வாகனம் ஓய்வுக்கு வந்தது. எல்லோரும் இறங்கினோம்.

வேற ஆக்களும் வருவாங்களோ, நாங்கள் மட்டும்தானோ என்று கேட்டான் செந்தூரன்.

செல்லக்கிளி ஏற்கனவே இங்கு பல தடவைகள் வந்திருக்கிறான். வாகனம் பூட்டியிருக்கிறதா என்று இரண்டு தடவைகள் சோதனை செய்த அப்பன், செல்லக்கிளியை முன்னால் நடக்கவிட்டு, பின்தொடர்ந்தான். மரங்களில் மோதி முறிந்த காற்று குளிர்ச்சியை எங்கள் மீது பொழிந்தது. வீட்டு வளாகத்திற்குள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் எனக்கு முள்ளந்தண்டு குளிர்ந்ததுஉயரமாகக் குவிக்கப்பட்ட வைக்கோல் போன்ற புல்லுக்குவியல், வீட்டின் கிழக்குப் பக்கம் அரணாகத் தெரிந்தது. வீட்டைச் சுற்றி ஒரே காலப்பகுதியில் நடப்பட்ட மரங்கள், சம உயரத்தில் வளர்ந்து, தகரக்கூரையின் மீது சரிந்து கவிழ்ந்திருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் கைவிடப்பட்ட மயானம் என்ற நம்பிக்கையைத் தந்துவிடக்கூடிய பாழடைந்த பிரதேசம் போலிருந்தது அந்த வீடு.

வீட்டின் உரிமையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் தொப்பி போட்ட நடுத்தர வயதானவன் வெளியில் வந்தான். எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கலாம். மார்பில் நரை பொங்கத் தெரிந்த முடி, அவனது தொப்பையின் சிறுபகுதியையும் வயதையும் தனக்குள் அழுத்தி வைத்திருந்தது.

செல்லக்கிளி எங்களை நோக்கித் திரும்பி இவர்தான் முக்காலா என்றான்.

வாங்கோவாங்கோபியரில் கரைந்த முக்காலாவின் கரகரத்த குரல், பரம்பரையான வெள்ளையின ஆஸ்திரேலியர்களுக்கே வாடிக்கையானது. எங்கள் எல்லோருக்குமான புன்னகையை அவன் செல்லக்கிளியிடம் பகிர்ந்தான்இவனுக்கு முக்காலா என்பது எங்களைப் போன்றவர்கள் வைத்துக்கொண்ட பெயர்தான் என்பதைப் புரிந்கொள்வதற்குக் கனநேரமாகவில்லைமுக்காலாவுக்கு பின்னாலேயே வந்த குதிரையளவு நாயொன்று, எங்கள் அனைவரிலும் தேறக்கூடிய இறைச்சியை தனது விழிகளால் எடைபோட்டது. அதன் நீண்ட சிவந்த நாக்கு, கூரிய பற்களை மீறி வெளியே தொங்கியது. முக்காலா தனது செல்லக்குதிரையை கூட்டுக்குள் தள்ளி கதவைப்பூட்டினான். எஜமானின் உத்தரவை ஏற்றுக்கொண்ட அந்த நாய், கூட்டுக்குள்ளிருந்து எங்களைப் பார்த்து கொட்டாவி விட்டது. பற்கள் அனைத்துமே கொத்தாக மினுங்கின.

இறைச்சியைத் தூக்கிப்போவதற்கு இவ்வளவு ஆட்களை அழைத்து வந்திருக்கிறாயா கிளி?வேடிக்கையானதொரு புன்னகையென்றாலும் முக்காலாவின் முகத்துக்கு அழகாக இருந்ததுஎங்களில் குறிப்பாக யாரையோ முக்காலாவின் கண்கள் தேடியது. உணர்ந்து கொண்ட செல்லக்கிளி என்னைக் காட்டி அவர்தான் உங்களைச் சந்திக்க வந்திருப்பவர்என்றான்.

அடுத்த கணமே எனது சோர்ந்த கரத்தைப் பிடித்துக்குலுக்கினான் முக்காலா. அதுவரை உள்ளே ததும்பிக்கொண்டிருந்த அச்சம் வெளியில் சிந்திவிட்டதுபோல உணர்ந்தேன். முக்காலாசொன்னான்

உங்களுக்காகக் கொழுத்த கறியை நேற்றிரவு பண்ணையிலிருந்து தூக்கி வந்திருக்கிறேன், வாருங்கள், காட்டுகிறேன்

எல்லோரும் முக்காலாவைத் தொடர்ந்தோம்.

02

முக்காலா மஞ்சள் வண்ணச் சப்பாத்துக்களை அணிந்திருந்தான். அவை அவனது முழங்கால்கள் வரை நீண்டிருந்தன. நடையில் அநாயாசமான நடனம். முறுகிய தேகத்தில் கைகள் சொன்ன வேகத்தில் அடுத்த நொடியே ஏவலை முடிப்பதற்காகக் காத்திருப்பது போல அவனது விரல்கள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

பின்வளவில் பரந்துகிடந்த கம்பி வலைக்குள் பல நூறு கோழிகள் அடைக்கப்பட்டிருந்தன. நெடுமரமொன்றில் சிவப்புநிறபொக்சிங்பொதி தொங்கியது. எல்லாவற்றையும் தாண்டி, சதுப்பு நிலத்துடன் கூடிய வேலியின் அருகில், மரப்பலகையால் அமைக்கப்பட்ட சிறிய கூடொன்று தெரிந்தது. தனது இரண்டாவது வீடுபோல உரிமையோடு உள்ளே நுழைந்த முக்காலா, அதற்குள் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த கொழுத்த ஆடு ஒன்றை செவியில் பிடித்து இழுத்து வந்தான். தனது செவிகளைப் பிடித்திருக்கும் முக்காலாவின் கைகளை ஆடு உறுதியாக நம்பியது. வாலை உதறியது. அதிலிருந்து சேற்று மண் உதிர்ந்தது.

என்ன பார்க்கிறீர்கள், உடனே வேலையை முடிக்கலாமா?

கள்ளப் பாஸ்போர்ட்டில் விமானம் ஏறி இந்த நாட்டிற்கு வந்து இறங்கியவன் நான். எப்போதும் பதற்றத்தை அணிந்தபடி அலையும் சட்டவிரோதச் சீவன். எனது விரல்கள் அச்சத்தில் ஏற்கனவே விறைத்திருந்தன. இரண்டு கைகளையும் உரசிக்கொண்டேன். முக்காலா கேட்டான்

வழியில் பொலீஸ் நடமாட்டம் ஏதாவதிருந்ததா?

இல்லை….இல்லை….” என்றான் செல்லக்கிளி.

முன்பெல்லாம் வேலைகளை முடிப்பதில் எந்த சிக்கலுமிருப்பதில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் இங்கிருந்து முப்பது கிலோ மீற்றர் தொலைவில், கள்ளமாக ஆட்டு இறைச்சி அடித்தார்கள் என்று ஆறு இந்தியர்களைப் பொலீஸ் கைது செய்து, பெரிய பிரச்சினையாகிவிட்டது. அதற்குப் பிறகு, இந்த ஏரியாவின் மீது எல்லோருக்கும் ஒருவிதமான சந்தேகப் பார்வை விழத்தொடங்கியிருக்கிறது. உதிரிகளின் குற்ற வரைபடம் போல இந்த ஊர் ஆகிவிட்டிருக்கிறது

நாங்கள் ஒருவரையொருவர் விநோதமாகப் பார்த்துக்கொண்டோம். செல்லக்கிளி கேட்டான்.

இந்தப் பக்கம் இந்தியர்கள் இருக்கிறார்களா

இந்தப் பக்கமாக வாடி வீடுகள் உள்ளன. தூர இடங்களிலிருந்து வருபவர்கள் அவற்றை வாடகைக்கு எடுத்துக் கூத்தடிப்பார்கள்

தகரக்கூரைக்குள் செருகி வைத்திருந்த இரண்டு பெரிய கத்திகளை எடுத்து, அவற்றின் கூர் பக்கங்களை மெதுவாக உரசியபடி சொன்ன முக்காலா, கத்தியோடு எனக்கு அருகில் வந்தான்.

ஒன்றுக்கும் பயப்படாதே, ஒரு சிறிய வேலை அவ்வளவுதான். உன்னுடைய நண்பர்கள் கூடவே இருக்கும்போது என்ன பயம்?

வீட்டுக்குள் சென்று விக்டோரியா பிற்றர் பியர் தகரப்புட்டியை எடுத்து வந்தான். சிகரெட் ஒன்றை வாயில் பொருத்தினான். கைக்கு அடக்கமான பியரை இரண்டு தடவைகள் அண்ணாந்து சரித்து உறிஞ்சினான். இரண்டொரு துளிகள் அவனது தாடியில் வழிந்து விழுந்தன. பியர் சுவை நாவிலிருந்து அருகும் முன்னரே, சிகரெட் புகையை இழுத்தான். தணல் பிரகாசமாக எரிந்து. அவனது கொலை நரம்புகளில் சென்று கங்குகளாய் பரவியது.

ஆடு பதற்றமாக இருக்கும்போது வெட்டினால், இறைச்சி ருசியிராது. அது நிதானமாக இருக்கும் போதுதான் வெட்டவேண்டும். அதுதான், ஆட்டுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. இல்லையா கிளி? நீங்கள் இரத்த வறையும் கேட்டீர்கள் இல்லையா

என்னைத் தவிர எல்லோரும் முக்காலாவைப் பார்த்து தலையாட்டினார்கள்.

பற்றி முடிந்த சிகரட் அடிக்கட்டையை தரையில் அழுத்தி, வெளியில் தட்டிவிட்டான். ஆட்டின் அசைவுறும் கண்களைக் ஒருதடவை உற்றுப்பார்த்தான். தனது பொக்கெட்டிலிருந்து எடுத்த சிறுதுண்டு கயிற்றினால் ஆட்டின் நான்கு கால்களையும் ஒன்றாக இழுத்துக் கட்டினான். வெள்ளிக்கிண்ணமொன்றை ஆட்டின் கழுத்துக்கு அடியில் வைத்த முக்காலா, இழுத்துக் கட்டிய நான்கு கால்களையும் தனது ஒரு காலால் அழுத்திப்பிடித்தான். ஆட்டின் வாயை ஒரு கையால் சேர்த்து மூடினான். அதன் தொண்டைப்பகுதியில் ஓடும் நரம்பினை, எந்தக் குழப்பமும் இல்லாமல், மினுங்கிய சிறு கத்தியால் ஒரே இழுவையில் அறுத்தான். சீறிப்பாய்ந்த இரத்தம் வெள்ளிக்கிண்ணத்தில் ஓசையோடு நிரம்பி நுரைத்தது. முக்காலாவின் கால்களுக்குள் கிடந்த ஆட்டின் உடம்பில் உயிர் விலகித் துடித்தது.

ஒரு கொலையின் சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அழைத்தபோது நம்பிக்கையோடு தனது செவிகளைக் கொடுத்து, மரக்கூட்டிலிருந்து வெளியில் வந்த பொசு பொசுவென்ற வெண்ணிற ஆட்டின் துடிப்பு நிரந்தரமாக ஓய்ந்தது. அதன்பிறகு, கழுத்தோடு வட்டமாக கத்தியை முன்பின்னாக ஓடவிட்ட முக்காலா, ஒரு கிளையிலிருந்து பூவைப்பிடுங்கும் லாவகத்துடன், சில செக்கன்களிலேயே ஆட்டின் தலையைத் தனியாக அறுத்தெடுத்தான். எஞ்சிய இரத்தத்துளிகள் நிலத்தை நனைத்தன. திறந்திருந்த ஆட்டின் கண்களில் என்னுடைய பிம்பம் தெரிந்தது. எனக்கு இரண்டு கண்களும் இருட்டியது.

“கிளி நான் கொஞ்சம் வெளியில நிக்கவா?”

பதிலை எதிர்பாராமல் வீட்டின் முன்பக்கமாக வந்தேன்ஏற்றுக்கொள்ள முடியாத அந்த மரணத்தின் கணங்களும் ஆட்டின் கடைசித்துடிப்பும் நெஞ்சில் அறைந்தது. என் கண் முன்னால் நட்சத்திரங்கள் பறந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நடக்கும் போதும், எனது கால்களை முக்காலா அழுத்திப் பிடித்திருப்பது போன்ற பாரத்தை உணர்ந்தேன்.

செந்தூரன் பின்னாலேயே வந்தான்.

ச்சான், காருக்குள்ள சிகரெட் கிடக்கு. ஒண்டை எடுத்து அடி. முக்கியமான காரியத்துக்கு வந்திருக்கிறம். அதை மறந்திடாத

நான் அந்தக் காட்சியைப் பார்த்திருக்கக்கூடாது. உயிர் பிரியும் அந்த வலியை ஒருபோதும் அங்கு நின்று உணர்ந்திருக்கக்கூடாது. விக்டோரியா பிற்றர் பியரும் சிகரெட் புகையும் ஒரு மரணத்தின் துர்நாற்றமாக வயிற்றைக் குமட்டியது. இப்போது எப்படி திரும்பவும் உள்ளே போவது? கசாப்புக்காரனிடம் தான் எனதுஉடலை ஒப்படைக்கப்போகிறேனா?

வீட்டுக்கு முன்னால் நீண்டிருந்த கிறவல் பாதையினால் நடந்தேன். சிறிது தூரம் சென்றதும், பாதைக்குக் குறுக்காக நீண்ட மண் நிறத்திலான கொழுத்த பாம்பொன்று அசைந்தபடி கிடந்தது. எனது அருகாமையை தன் சருமத்தினால் உணர்ந்து, தலையை நிமிர்த்திப் பார்த்தது. அந்த இடத்திலேயே கால் மடங்கி விழுந்து விடப்போவதைப்போல எடையிழந்தேன். என் முழுத்தேகமும் ஒரு துணி போல சுருங்கி விழுவதாய் உணர்ந்தேன். என்ன அதிசயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை. அந்தப் பாம்பைப் பார்த்தபடியே பின்பக்கமாக ஓடிவந்து, முக்காலா வீட்டு வாசலுக்குள் விழுந்தேன்.

என்ன நடந்தது….உன்னை வரட்டாமடா….வா

செந்தூரன் கீழே கிடந்த என்னை நோக்கி ஓடிவந்தான். என்னால் நிலத்திலிருந்து நிதானித்து எழுந்துகொள்ள சில நொடிகளானது. நான் இப்போது உள்ளே போகவேண்டுமா?

டேய் வந்த வேலைய மறந்திடக்கூடாது கெதியா வா

சினம் தலைக்கேறியது.

டேய், இறைச்சி வெட்டுறவனிட்ட என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறீங்களேடா… அவன் என்னத்தை செய்தாலும் அது காலம் பூராவும் என்ர உடம்பில இருக்கப்போகுது தெரியுமா….”

மச்சான், இந்த விசயம் உனக்கு முதலே தெரியும்தானே. தெரிஞ்சுதானே வந்தனீ….”

இதைச் செய்யப்போறவன், ஆடுமாடு வெட்டுறவன் எண்டு எனக்குத் தெரியாதடா….”

இப்ப உன்ர பிரச்சினை, முக்காலா ஆடு வெட்டுறதா? நீ வந்த விசயத்தில கவனமா இரு. அவன் ஆட்டை வெட்டினால் என்ன, மாட்டை வெட்டினால் என்ன?

இந்த நாட்டில குடியுரிமை எடுக்கவேணும் எண்டு, திருட்டுத்தனமாக வாறதுதான், நான் செய்யப்போற முதலும் கடைசியுமான கள்ள வேலையாக இருக்கவேணும் எண்டு நினைச்சனடா. ஆனால், இஞ்சவந்த பிறகும்……நினைக்கதலை வெடிக்குது”.

செந்தூரனுக்கு என்னுடைய கடைசி நேரக் குழப்பம்புரிந்தது.

டேய் …… ஒரு நாட்டுக்குள்ள கள்ளமாக வந்து குடியுரிமை எடுக்கிறது எண்டால், அது எயார்போர்ட்டோடயோ படகு வந்து இறக்கிற இடத்தோடையோ முடியுற வேலை இல்ல. பாஸ்போட் எடுக்கிற வரைக்கும் அந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டிக்கிடக்கு. இஞ்ச அதிகாரத்தில இருக்கிறவன், எத்தனையோ குறுக்கு வழிகளில யோசிச்சு, யோசிச்சு எங்களுக்குப் பொறி வச்சு சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பிறதில குறியா இருக்கிறான். நாங்கள் வந்த நாடு, இடையில நிண்டநாடு எண்டு எல்லா நாடுகளோடையும் ஒப்பந்தங்கள் எழுதி, பெரிய திட்டங்களைப் போட்டு, எங்களை அதில விழுத்தப் பாக்கிறான். ஆனால், நாங்கள் எந்த அதிகாரமும் ஆதரவும் இல்லாத அநாதைச்சாதியடா. அகதியள். ஒரு பெரிய அரசாங்கத்தோட மோதுறதெண்டால், அவங்களைப்போல நாங்களும் கள்ளத்தனமாக யோசித்தால் தான் சரி. அகதி ஒருத்தன் செய்யிற களவுக்கு கருணை இருக்கு. அது வாழ ஆசைப்படுகிற மானுட உத்தரிப்பு. இஞ்ச ஆடு வெட்டுற ஆஸ்திரேலியன்தான், அந்த கடவுச்சீட்டுக்கான வழிய காட்டப்போறான். சரி, இவன்தான் அந்த இமிகிரேசன் அதிகாரி எண்டு நினைச்சுக்கொண்டு, காரியத்தில இறங்குவம். அவ்வளவுதான் வித்தியாசம். இனியும் பிந்தக் கூடாது. பாஸ்போட் தாற பரமபிதா உள்ள பாத்துக்கொண்டிருக்கிறான், வா”

03

முக்காலா வீட்டுக்குள் நின்றுகொண்டிருந்தான். செல்லக்கிளி அவனருகில் நின்றான். இருண்ட அறையினுள் அவர்களது கண்கள் செந்தணலாய் எரிந்து கொண்டிருப்பது போலிருந்தது. அதிக பொருட்கள் இல்லா அந்த தகரக்கூரையுடைய வீட்டினை, முக்காலா இப்படியான காரியங்களுக்குத்தான் உபயோகிப்பது போல் தெரிந்தது. மூலையிலிருந்த அடுப்பில் விறகு எரிந்து கொண்டிருந்தது. அடுப்புக்குப் பக்கத்தில் பெரிய சருவம் ஒன்றில் பல நீளங்களிலான அலுமீனியத் தடிகளிருந்தன.

“மச்சான்…. நீ ஒருத்தரையும் நிமிர்ந்து பாக்காத. கண்ணை மூடிக்கொண்டு குப்புறப்படு. அஞ்சு செக்கனுமில்ல. உடன முடிஞ்சிடும். கொஞ்ச நேரம் பல்லைக் கடிச்சுக்கொண்டிரு. விளங்குதாசெல்லக்கிளி அருகில் வந்து நம்பிக்கை தந்தான்.

இந்த நிலத்தில் ஒரு வாழ்வு நிரந்தரமாகுவதற்கு இதுதான் கடைசி வழியென்றால், அதனை இக்கணமே தீர்மானிக்கட்டும். திருப்தியாக இரண்டு சிகரெட் பற்றியிருக்கிறேன். அது போதாதா? தைல மணம் பரவிக்கொண்டிருந்த அந்த அறையில், சட்டையைக் கழற்றிவிட்டு வெற்றுடம்பாக நடுவிலிருந்த நீளமான மேசையில் குப்புறப்படுத்தேன். எதுவும் கேட்கவில்லை. அறையின் மூலையில் கங்குத் தீயின் ஓசை மாத்திரம் அதிர்ந்து பரவியது. சற்று நேரத்தில் என்னை நோக்கி வருகின்ற காலடிச் சத்தங்கள் பேரிடியாகக் கேட்டன. அச்சத்தால் குளிர்ந்த நான்கு கைகள் எனது இரண்டுகால்களையும் மேசையோடு சேர்த்து அழுத்திப்பிடிக்கின்றன. எனது கைகள் இரண்டையும் செல்லக்கிளி பிடித்துக்கொண்டான். கைகளை மேசையோடு அழுத்திப் பிடித்திருக்கும் என் வாயில் தடித்த மரத்துண்டொன்றை திணித்தான் முக்காலா.

கங்குகளின் ஓசையும் வாசனையும் ஒருங்கே என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். விக்டோரியா பிற்றர் பியரும் சிகரெட் வாசனையும் என்னை அண்மிக்கின்றன.

முதுகுத் தசையைக் கிழித்ததுபோல தீயினால் இரண்டு ஒத்தடங்கள், ஆழமாக என்னைப் பிழந்தன. தடம்பட்ட நீள் காயங்கள் இதயத்தின் வழி ஈட்டிபோல பாய்ந்தன. மூளை நரம்புகளில் ஒன்றிரண்டு வெடித்து உள்ளே உடலெங்கும் அமிலமாய் கரைந்தோடியது. தடித்த தோலின் மீது பதிந்த அலுமீனியத் தணல் குழாய், சருமத்தை சதையோடு பொசுக்கியது. அந்த நேரம் எனது கால்களையும் கைகளையும் மேலும் அழுத்திக்கொண்டதால் எனது தேகம் பெருவலியிடம் கோரமாக அடைக்கலமாகியது. குறி விறைத்ததுதடித்த மரத்துண்டினை பலம் முழுவதையும் திரட்டிக் கடித்து வலியைக் கரைக்கப் பார்த்தேன். வாய் நீர் வடிந்து நிலத்தில் வீழ்ந்தது. விழிகள் இரண்டும் மேலே செருகின.

அவ்வளவும் தான் மச்சான்….அவ்வளவும் தான்முடிஞ்சுதுமுடிஞ்சுது…..”

கைகளைத் தளர்த்திவிட்டு செல்லக்கிளி என்னை அணைத்துக் கொள்கிறான். எல்லாம் முடிஞ்சுது மச்சான்….சக்ஸஸ்….” என்கிறார்கள். மூவரும் சேர்ந்து, நான் மேசையிலிருந்து எழுந்து கொள்ள உதவினார்கள். முதுகில் இன்னமும் தீவடிந்து கொண்டிருந்தது. உடம்பில் ஒரு பாகம் சுவாலையுடன் எரிந்துகொண்டிருப்பது போலிருந்தது. அழுதேன். பெரு வெப்பமேறிய கொடிய திரவமாகக் கண்ணீர் என் கன்னத்தில் வடிந்தது.

எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்துவிட்டது, நீ கெட்டிக்காரன். என்னிடம் வருபவர்கள், டொக்டர் மெலினாவிடம் போவதுதான் வழக்கம். இந்தக் காயம் சொந்த நாட்டில் இராணுவத்தினர் அடித்தது என்று அவர் உறுதிப்படுத்திக் கொடுக்கும் மெடிக்கல் சேர்டிபிக்கெட்டை ஆஸ்திரேலிய இமிகிரேசன் ஆட்கள் ஒரு போதும் நிராகரித்ததில்லை. கிளி..உனக்குத் தெரியும்தானேடொக்டர் மெலினா

பொறுப்பான கேள்விகளுடன் முக்காலாவின் குரல் ஒலித்தது.

இளம் இரத்தம் பாய்கின்ற கட்டிளம் காளையே…..! இங்கு நான் அறுபது வயது ஈரான் கிழவனுக்குக்கூட தீத்தடம் வைத்து, அவருக்கு மெலீனா சேர்ட்டிபிக்கட் கொடுத்த மூன்று மாதங்களில் இமிகிரேசன் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை கொடுத்திருக்கிறது. ஒன்றுக்கும் அஞ்சாதே. ஆஸ்திரேலியனாக மாறும் நாட்களை எண்ணிக்கொண்டிரு. நெருங்கிவிட்டாய்

என்னை நோக்கி முக்காலா பேசிக்கொண்டிருந்தான். என்னால் அவனது முகத்தை நிமிர்ந்துபார்க்கமுடியவில்லை. மேசையிலிருந்து எழுந்து அப்பனைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தேன்.

வெட்டியகற்றப்பட்ட ஆட்டின் தோல்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருந்தன. ஆட்டின் தலை எங்காவது தெரிந்துவிடுமா என்று தேடினேன். காணவில்லை. எங்களுக்கான இரத்தம் தோய்ந்த இறைச்சி இறுகக்கட்டிய பொலீத்தீன் பையொன்றில் பொதிசெய்து ஆயத்தமாயிருந்தது. அருகில் சென்று, அந்தப்பொதியை வருடிப்பார்த்தேன். என்னையே நான் வருடுவது போலிருந்தது.

பணத்தை எண்ணிக்கொடுத்து முக்காலாவின் கைகளைப் பிடித்து நன்றிகளைச் சொரிந்தான் செல்லக்கிளி.

இரண்டு வாரங்களில் டொக்டர் மெலீனாவிடம் போகுமாறு மீண்டும் சொன்ன முக்காலா, காயத்தில் சீழ் வருவதுபோன்ற ஏதாவது சிக்கல் காணப்பட்டால், எந்த மருத்துவர்களிடமும் சென்றுவிடவேண்டாம் என்றும் தன்னிடம் வருமாறும் சொன்னான்.

வெளி முற்றத்துக்கு வந்தோம். காரியம் முடிந்த திருப்தியினால் எல்லோரது குரல்களும் சம சுருதியில் ஒலித்தன.

நான் முக்காலாவைப் பார்த்து நன்றிஎன்றபடி காரில் ஏறினேன். நாடற்றவனுக்கு வாழும் உரிமை வாங்கிக் கொடுப்பவன் நான்  எனும் கம்பீரத்தோடு பரிசுத்தவானைப் போல நின்று கொண்டிருந்த முக்காலா என்னருகே ஓடிவந்து,

நீ விடுதலைக்காய் போரிட்ட வீரன் சகோதராஎனக்குத் தெரியும். செல்லக்கிளி சொல்லியிருக்கிறான். எதற்கும் அஞ்சாதேஎன்றான்.

முதுகில் எரியும் காயத்தின் மீது எனது சொந்த நிலத்தின் கந்தக எரிச்சல்  எழுந்தது.

 

முற்றும்.

***

-ப.தெய்வீகன்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *