ஈழத்தின் மலையக இலக்கியப் பரப்பு விசேடத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு மலையக வாழ்வியல் கூறுகளும் பண்பாட்டுவெளியும் மரபும் மரபார்ந்த தொடர்ச்சியும் காரணங்களெனச் சொல்லமுடியும். பூர்விக நிலத்தின் கலாசார ஊடறுப்பும் மறுக்கப்பட்ட நிலத்திலிருந்து மீண்டெழுந்த அல்லது மீண்டெழ எத்தனிக்கிற சமூகத்தினரிடமிருந்து ‘புதிய வகை ரத்தம்’ போல இலக்கிய வெளிப்பாடு இருந்திருப்பதிலும் தொடர்வதிலும் ஆச்சரியம் மேவ எதுவுமில்லை. புனைவு வெளிப்பாடுகளின் ஊக்கநிலை மாறாமலிருப்பது மலையக இலக்கியப்பரப்பைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக நிலவரையியலையும் சமூக ஒழுங்கையும் தொழிலாளர் வர்க்க உணர்வையும் ஒட்டுமொத்த பிரதியின் வழியே பரவவிடுவதனாற் தானென்று தோன்றுகிறது. சி.வி வேலுப் பிள்ளை, நடேசய்யர், கே. கணேஷென்று ஒரு தலைமுறை உருவாகி தமிழக கதை சொல்லலையும் ஈழத்து மரபையும் இணைத்ததான புதிய போக்கோடு மலையகச் சிறுகதை வெளி தனக்கென மரபை உருவாக்கிக் கொண்டது என்று கருதலாம். அதற்குப் பிறகு வந்த தலைமுறை என்றுபார்த்தால் செந்தூரன், என் எஸ் எம் ராமைய்யா, மு. சிவலிங்கம், மாத்தளை சோமு, மலரன்பன், சாரல்நாடன், நயீமா சித்திக், தெளிவத்தை ஜோசப்பென்று ஒரு வரிசை நினைவுக்கு வரலாம். இந்த இரண்டாம் தலைமுறையின் காலமே மலையகச் சிறுகதைவெளி வீறு கொண்டு எழுந்த காலப்பகுதியெனச் சொல்ல முடியும். தொடர்ச்சியாக எண்பதுகளின் பின்னர் தனித்தொகுதிகள் தலையெடுத்ததும் மலையக கதை உலகுதனித்த தன்மையோடு புறக்கணிப்புகளை மீறி குடியுரிமை பறிப்பு பற்றிய கோபவெளிப்பாடுடனும், பிரஜாவுரிமை கோசங்களுடனும் வெளிவந்தன. அதற்குப் பிறகு வந்த தீர்த்தக்கரை போன்ற இதழ் வெளிவந்த காலகட்டம் முக்கிய பாசனத்தை சிறுகதை நிலத்தில் பாயவிட்டது. அதற்கு பிறகு இன்றைய தலைமுறையில் சடகோபன், சிவானுமனோகரன், பிரமிளா பிரதீபன் போன்றவர்கள் புதிய கோணத்தில் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். பிரமிளா பிரதீபனுடைய விரும்பித் தொலையுமொரு காடு சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்தேன்.
மலையக சிறுகதைக்கென்று இருக்கிற ஒரு செல்நெறியோ, மரபோ இவரது கதைகளில் மீறப்பட்டிருக்கிறது. இவரது புதிய கதை சொல்லல் மானுட அழகியல் அபத்தமென்கிற இருநிலைகளைத் தாங்கிய புதிய மனிதர்களோடும் வலுவான கதையோடும் கூறல் உத்திகளோடும் ஒரு கட்டுடைப்பை வியாபிப்பைச் செய்திருக்கின்றன. இன்றளவில் தமிழக புலம்பெயர் பரப்பில் அதிகம் வாசிக்கப்படக்கூடிய மலையகக் கதைகள், ஏன் ஈழக்கதைகளும் பிரமிளாவினுடையனவே. பிரமிளாவினுடைய கதையுலகம் தடித்த கதாபாத்திரச் சித்தரிப்போடு அகநிலை சார்ந்த ஊடாட்டங்களைப் பேசுபவன. பொதுவான மலையகக் கதைப் பின்னணியிலிருந்து வேறுபட்டு கழிவிறக்கம், ஆற்றாமை போன்ற சாயலை விடுத்து புதிய பார்வையோடு திமிறி எழுவன. பெண் நிலை சார்ந்த நுண் இழையோடு சமாந்தரத் தளத்தில் அகவிசாரணையோடு எழுதப்பட்ட கதைகளை இத்தொகுதி அதிகம் கொண்டிருக்கிறதெனலாம். அக்கதைகளில் வரும் பெண்கள், அவர்களது அன்றாடம் என்பனவெல்லாம் இயல்பிலிருந்து விலகாது இதுவரை சொல்லத்தயங்கிய புழங்குவெளியை ஞாபகப் படுத்துவன. பெண்ணியச் சிந்தனைகளோடு ஒன்றித்த கதைப்போக்கு தமிழ்க்கதைகளில் மிகைத்துவிட்ட இந்நாட்களில் ஈழத்து மலையக சிறுகதைகளில் அதை வேறுபட்ட தளங்களிலும் வடிவ நியதியிலும் முயன்று பார்த்தவரென்று பிரமிளாவைச் சொல்ல முடியும். ஆணாதிக்கம், சுரண்டல், பாலியல் லஞ்சம், இன முரண்பாடு, காமம், காதல், வன்புணர்வு என பெண்ணுலகம் சார்ந்து பிரமிளா முன்வைக்கிற கதையாடல்களும் கேள்விகளும் முடிபுகளும் வித்தியாசமானவை. பெண்ணியம் பற்றி பேசுகிற போது எதிர் நியதி பேசுவது, அதன் சாத்தியங்களை படைப்புகளின் மீது விரவ விடுவது திணிப்பது பற்றி பேசுவது தவிர்க்க முடியாதது. பிரமிளாவின் பெண்கள் ஆதர்சமான நாயகத் தன்மை கொண்டவர்களல்ல. எங்கேயோ முயன்று வெளிவர முடியாத தடுப்புகளைத் தாண்ட எத்தனித்து மீண்டும் அதே பாழ்குழியினுள் விழுகிற சராசரியான பெண்களையே பிரமிளா தேர்ந்தெடுத்திருப்பார். சுரண்டலை எதிர்த்துத் திமிறுகிற சீற்றத்தோடு அச்சுரண்டலுக்குப்பழகிப் போகிற பெண்களையோ சொல்ல முடியாத ஆணாதிக்கச் சமூக வேலியிலிருந்து அதன் மதிப்பீடுகளிலிருந்து தப்ப முடியாத பெண்களையோ அவருடைய கதைகள் முன்நிறுத்துகின்றன. பொதுவான மலையகக் கதை சொல்லலிருந்து பிரமிளா வேறு வேறு நிறங்களை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்திய படி தனித்தொத்த கூறுமுறையோடு முயற்சித்திருப்பார். அது மிகச் சவாலான உருவக/குறியீட்டு விபரிப்புகளோடு வளர்ந்து வந்து ஒரு கட்டத்தில் கதையை நிறுத்துவது எனச் சொல்ல முடியும். கதையில் மேலோட்டமாக சொல்லப் படும் கதைக்கு சமாந்தரமாக மெய்க்கதை பயணித்தபடி இருக்கும். இப்படி இத்தொகுப்பின் தலைப்புக்கதையான விரும்பித் தொலையுமொரு காடு கதை எழுதப்பட்டிருக்கும். பெண்ணொருத்தி காடொன்றை விரும்பி நுழைவது போல குடும்ப வாழ்வை மண வாழ்வைக் குறித்துக் கதை நீளும். இவ்வகை உத்திகளின் வாயிலாக வழக்கமான மலையகச் சிறுகதைகளிலிருந்து பிரமிளாவினால் புதிய கூறுமுறையை குறியீட்டு மொழிக்குள்ளேயான பூடகச் சொல்லாடலை செய்ய முடிந்திருக்கிறது. இவ்வகை பூடகக் கதையாடல் மற்றைய நேரடிக்கதைகளை விட பிரமிளாவுக்கு கைகொடுத்திருப்பதாகவே இத்தொகுப்பிலிருந்து உய்த்தறிய முடிகிறது. நேரடிக்கதைகளில் உள்ள இடைவெளிகளை அயர்ச்சியை குறியீட்டுக்கதையாடல் நிரப்புகிறதென்ற அளவில் அவ்வுத்தியைப் பாராட்ட முடியும். கடுமையற்ற ( not rigorous) இலகு தன்மையான மொழியை இவ்வகைக் கதைகளுக்கு தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது எப்பொதும் நல்ல கதையொன்றை அளிக்கும் முயற்சிக்கு கை கொடுக்காதென்பதுவும் புலனாகிறது. அதுதான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட சவாலெனப் புரிந்து கொள்ள முடியும். நாம் குறிப்புணர்த்தும் கதைக்காக எடுத்துக்கொண்ட குறியீட்டைச் சரிவரக் கையாள்வதில் தான் இக்கதைகளின் வெற்றி தங்கியிருக்கும். குறியீடாக நாம் சொல்ல வருவது அழுத்தமானதொன்றாக இருக்க வேண்டுமே ஒழிய வெறுமனே ஒத்திசைவான ஏதாவதொன்றை தொடர்பு படுத்துவதோடு நின்று விடக் கூடாது என்பது எனது கருத்து. விரும்பித் தொலையுமொரு காடு கதையும் ஒரு அரசமரமும் சில வௌவால்களும் கதையும் இவ் வுத்தியின் வழியே உருப் பெற்றாலும் அவை சில இடங்களில் சலிப்பைக் கொடுப்பன. ஒரு அரசமரமும் சில வௌவால்களும் என்ற கதையில் அரசமரத்தையும் வௌவால்களையும் புத்த மதத்தையும் அதன் தீவிரப் பற்றாளர்களையும் குறித்த பூடக விபரிப்பாகச் சொல்லியிருப்பார் பிரமிளா. நீண்ட விவரணையில் ஒரு தேர்ந்த வாசகருக்குப்புரிந்த விசயத்தை மீண்டும் அவர் திரும்ப எழுதியிருப்பார்.
“ தூரத்தேயிருந்து அரசமரத்தின் அழகினை வியந்து பேசும் எவரொருவராயினும் அருகில் வந்து இந்த வௌவால்களின் துர்நடத்தையை அனுபவிப்பாராயின் அரசமரத்தையே வெறுத்து விலகுவர். தவறு அரசமரத்தினது அல்ல… அதனை தனக்கு மட்டுமேயெனக் கொண்டாடும் வௌவால்களது என்ற புரிந்துணர்வு இல்லாமல் போய் வைராக்கியம் கொண்டு மரத்தை வெட்டிவீழ்த்த முனைவர். “ என எழுதியிருப்பார்.
இதனை தூர இருந்து அரச மரத்தினழகினால் கவரப்பட்டு வருபவர் பின்னர் தன் கையாலே வெட்டிவிடுவாரென முடித்திருக்க முடியும். அந்தக் குறிப்பும் காரணமும் ஏற்கனவே முன்கதையின் நிகழ்வுகளினாலும் விபரிப்புகளினாலும் வாசகனுக்கு உணர்த்த போதுமானவை.
கதைகளுக்காக பிரமிளா பயன்படுத்துகிற மொழியும் நடையும் தற்காலச் சிறுகதைகளைவிட சில படிகள் செறிவற்று வருகின்றன. சம கால கதை சொல்லல் அடைந்திருக்கிற இடமும் செழுமையும் மொழி விசயத்தில் அபாரமானதென்பதால் அந்த இடத்திற்குரிய மெனக்கெடல் ஒட்டுமொத்த தொகுதியிலும் போதவில்லை என்றே தோன்றுகிறது. ஏற்கனவே குறித்துச் சொல்லியது போல மலையகக் கதைகள் தனித்துத் தெரிவதற்கும் தனிப்பெரும் இலக்கியப் போக்காக விரிவதற்கும் அவை சுமந்து வந்த நிலவரையியலேகாரணம். மலையகக்கதைகளென்றாலே மலைகளும் தோட்டங்களும் பீலிகளும் லயமும் அதைச் சுற்றிய காடும் வழுக்கும் தெருக்களும் வெற்றிலைக் கறை படிந்த மனிதர்களும் வட்டார மொழியுமென மனக் காட்சி விரியும். நிலத்தையும் இயற்கையையும் அதைச் சுற்றிவர நிகழும் எல்லாச் சங்கதிகளையும் பிரதியினுள் கொண்டு வந்த எத்தனையோ கதைகள் நமக்கு ஞாபகம் வரும். அப்படி இத்தொகுதியில் முழுத் திருப்தி தரக்கூடிய கதை என்றால் உரப்புழுக்கள் மட்டும் தான் என்று சொல்வேன்.
அது தாங்கி வருகிற நிலக்காட்சிகளும் உரமேடையும் காடும் கட்டுபொல் உறிஞ்சி வற்றிய கிணறும் பங்களாவும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதுவே மலையகக்கதை வழக்கின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட நல்ல கதையென்று படுகிறது. இந்தக் கதையில் சொல்லப்படுகிற உணர்வும் ஆணாதிக்க மேலீடும் அறச்சீற்றமும் இயல்பைக் குறித்து யதார்த்தத்தைக் குறித்து அச்சத்தை கடத்துவன. திருமண வாழ்வைக் குறித்தும் கற்பைக்குறித்தும் எழும் ஐயமான( ambiguous) கருத்துநிலையை அப்படியே சொல்லி விடுவதும் தொழிலாளர்களின் மீதான பாலியல் சுரண்டலை படம் போட்டுக் காட்டுவதுமாக இக்கதை, முக்கியமாக மலையகப் பண்பாட்டுத்தளத்தில் உள்ள துயர் நிகழ்வுகளின் சாட்சியமாக இருக்கிறது.
புனைக்கதை எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும் எனக்கு பிரமிளாவிடம் சொல்ல ஒரு விசயமிருக்கிறது. அது கதைகளின் செம்மை பற்றிய விசயம் தான். எப்போதும் ஒரு கதையை எழுதியவுடன் அது முழுமுற்றானது, கடைசியானதென நாம் நம்புவதில்லை. அந்தக் கதை பல படிகளிலெழுந்து முழுமையாகத் திரளுவதில் நமக்கு அடுத்தபடியாகவும் இறுதியாகவும் சஞ்சிகைகளின் பங்களிப்பிருக்கிறது. இந்தத் தொகுப்புக்கு பிறகு வந்த கதைகளுக்கும் இதிலிருக்கிற கதைகளுக்குமிடையில் அந்தத் திரட்சியில் மொழி விசயத்திலும் கதையின் உள்ளடக்கத்திற்குத் தகுந்த உத்திகளின் தேர்வு விசயத்திலும் ஒரு போதாமை இருக்கிறது. ஆரம்பக்கதைகளில் அது எழுதிக் கண்டடையக் கூடிய ஒன்றுதான். என்றாலும் அவற்றின் மீதான இதழ்களின் பரிந்துரைகள், செம்மைப் படுத்தல்கள் அவற்றை இன்னொரு தளத்திற்கு கொண்டு போகுமென்பதை மறுப்பதற்கில்லை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் அக்குறைபாட்டை வெகுவாகவே உணர முடிகிறது. இக்கதைகள் ஆரம்பத்தில் வெளிவந்த இதழ்கள் அப்பணியை பெருமளவு செய்யவில்லையோ எனத் தோன்றுகிறது. தானாகவே பயின்று அரங்கேற்றம் வருகிற மாணவரிடம் இருக்கும் அதே வகை தடுமாற்றங்களைத் தான் சுட்டுகிறேன். விவரணைகளிலிருக்கிற பொத்தாம்பொதுவான சொல்லாடலும் தேய்வழக்கான சொற்றொடர்களையும் தவிர்த்திருக்க முடியும். அது புத்தனின் சிசுவல்ல கதையில் பிற்பாதி, முற்பாதி போன்ற மொழிச்செறிவிலன்றி ஐதாக வருவது, மாட்டியா கதையின் கூறுமொழி இன்னும் மேம்பட்டிருக்கலாமெனத் தோன்றுவதென சில சுட்டுகளைச் சொல்ல முடியும்.
கதைகளுக்குத் தேவையான தருக்கத்தை தேர்ந்தெடுப்பதில் பிரமிளா படுசாமர்த்தியமானவரென்பதை ஓரிரவு போன்ற கதைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். பிரமிளாவுக்கு, நானும் தான் அதே மலைகளில் ஏறி இறங்குகிறேன், நானும் தான் அதே பாதைகளில் வழிகளில் நடக்கிறேனென ‘ஓரிரவு’ போல கதையினுடைய ஒட்டுமொத்தத் தருக்கத்தைச் சொல்லத் தெரிந்திருக்கிறது. அத்தருக்கங்களின் வழியே கட்டுமானமாகிற கதையின் மனிதர்களையும் காட்சியனுபவத்தையும் உரிய இடங்களில் வைக்கத் தெரிந்திருக்கிறது. கமிலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள் போன்ற கதைகளில் தேக்கமாகும் மனநிலையை, கதை முடிவடையும் புள்ளியோடு இணைக்கவும் தகவமைக்கவும் தெரிந்திருக்கிறது. ஆக, ஒட்டுமொத்தமாக பிரமிளா, குறியீட்டுக்கதை மொழிதலாலும் வேறுபட்ட களத்தேர்வுகளாலும், கிளைமொழியின் பாண்டித்தியத்தினாலும், பெண் உலகின் இன்னுமொரு கரிய படித்தளத்தில் நின்று யதார்த்தத்தை நுண் வாசிப்புக்குரிய ஆழ்படிமங்களோடு ஆங்காங்கே ஊன்றி நிறுத்துவதாலும் கவனிக்க வேண்டிய தொகுப்பொன்றைத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குத் தந்திருக்கிறார் எனச்சொல்லாம்.
***
சப்னாஸ் ஹாசிம்