ஆங்கில ஐரோப்பிய படங்கள் இலக்கிய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல நாவல்களை சினிமாவாக மாற்றிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமா அவர்களை வெறும் வெகுஜன சினிமாவுக்கு உரையாடல் ஆசிரியர்களாக மட்டுமே பயன்படுத்தி வந்தது விந்தை. இந்த விந்தை இன்றளவும் தொடர்வதுதான் அதை காணினும் விந்தை. இதற்கு முக்கிய காரணம் தமிழ் இலக்கியம் என்பது தொன்மம் கூடிய மொழி அடிப்படையிலானது . ஆனால் சினிமாவுக்கோ கதைத்தன்மையும் காட்சி விவரணைகளுமே பிரதானம். இந்த பிரச்சனை மற்ற மொழிகளில் குறைவு குறிப்பாக மற்ற நாடுகளில் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் படைப்புகள்
அனைத்துமே சினிமாவாக அதற்கான மகத்துவத்துடன் உருவாக்கப்பட்டு அப்படங்கள் வணிக ரீதியாகவும் திரைப்பட விழாக்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
புதுமைப்பித்தன் சிற்றன்னை , தி.ஜானகிராமனின் மோகமுள் ,நாஞ்சில் நாடனின் தலைகீழ்விகிதங்கள் என ஒரு சில படைப்புகள் தவிர தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் எவருடைய கதையும் இதுவரை சினிமாவாக மாறவில்லை .அந்த எழுத்தாளர்களே சினிமாவுக்கு வந்தாலும் அவர்களது படைப்புத்திறன் மழுங்கடிக்கப்பட்டு வெறும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட
சினிமாத்தனம் நிறைந்த கதைகளுக்கு உரையாடல் எழுத மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். அல்லது சினிமாத்தனம் நிறைந்த எழுத்தாளர்களின் கதைகளே (வடுவூரார் முதல் சுஜாதாவரை) சினிமாவால் ஏற்கப்பட்டு வந்துள்ளன என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வவகையில் தமிழ் சினிமாவுக்கு வந்த முதல் இலக்கியாவதிகள் இருவர் ஒருவர் மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ்.ராமையா இன்னொருவர் சிறுகதைச்சிற்பி புதுமைப்பித்தன்
பி.எஸ்.ராமைய்யா:
(மார்ச் 24, 1905 – மே 18, 1983)
இன்றைய இலக்கியவாதிகளுக்கு பி.எஸ்.ராமையாவை வெறும் ஒரு எழுத்தாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் திரைக்கதை எழுத்தாளர் வசனகர்த்தா மற்றும் திரைப்பட இயக்குனர் என்றால் ஆச்சர்யப்படுவார்கள். ஆமாம் ராமைய்யா எல்லோருக்கும் தெரிந்ததுபோல மணிக்கொடி கால எழுத்தாளர் மட்டுமல்ல, இலக்கிய உலகத்திலிருந்து சினிமா உலகத்துக்குப்
போன மூத்த படைப்பாளிகளில் முக்கியமானவர், ஆறு படங்களுக்கு வசனம், ஐந்து படங்களுக்கு கதை, எட்டு படங்களுக்கு கதையும் வசனமும், இரண்டு படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியது என மொத்தம் 19 திரைப்படங்களில் பணிபுரிந்தவர். இவற்றையெல்லாம் தாண்டி பலருக்கும் தெரியாத இன்னொரு விடயம் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்புகளில் புகழ்பெற்ற நடிகர் சந்திரபாபுவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் இவர்தான்.
வத்தலகுண்டு அருகேயுள்ள ஆத்தூர் கிராமம் தான் ராமையாவுக்கு பூர்வீகம். தன்னுடைய 16-ஆம் வயதில் அக்கால மதராஸ் பட்டணத்துக்கு 1921-இல் வந்து சேர்ந்தார்.ஹோட்டல் ஒன்றில் சர்வராகப் பணிபுரிந்து கொண்டே தீவிரமாக புத்தக வாசிப்பில் ஈடுபட்டார். அப்போதிருந்த சுதந்திர நெருப்பு அவரையும் பற்றியது. 25.02.1930-இல் சென்னையில் நடந்த உப்புக் காய்ச்சும் போராட்டத்தில் கலந்துகொண்ட ராமையா கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஏ.என்.சிவராமன், வ.ரா போன்ற எழுத்தாளுமைகளை சக சிறைவாசிகளாகப் பெற்றார். அவர்களது பரிச்சயம் அவரை எழுத்தாளனாக்கியது. விடுதலையாகி வெளியேவந்ததும் ‘காந்தி’, ‘ஜெயபாரதி’ போன்ற சிறு பத்திரிகைகளில் பிரசுரமாகின. இந்தக் கதைகளுக்கு முன்னர் அவரைப் பிரபலமாக்கியது ‘மலரும்
மணமும்’ என்ற சிறுகதை. 1933-இல் ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற து. தொடர்ந்து மணிக்கொடியிலும் சிறுகதைகள் பிரசுரமானது. மணிக்கொடி ஒரு
கட்டத்தில் நின்றுவிட்டபோது அதை தன் பொறுப்பில் எடுத்து, அதன் ஆசிரியராக இருந்து அதைச் சிறுகதைகள் கோவையாக மூன்று ஆண்டுகள் வெளிகொண்டு வந்தார் ராமையா. இவரது காலத்தில்தான் மணிக்கொடி தன் அழியாப்புகழ் பெற்ற எழுத்தாளர்களையும் அவர் தம் கதைகளையும் பிரசுரித்தது என்பர். குறிப்பாக புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் அவரது கண்டுபிடிப்பே பின் மணிக்கொடியோடு உண்டான கருத்து முரண்பாடுகளால் அதிலிருந்து விலகி சினிமாவுக்கு வாய்ப்பு தேடினார்.
1940-இல் ‘பூலோக ரம்பை’ என்ற படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார் ராமையா. அடுத்த ஆண்டே இவர் கதை, வசனம் எழுதிய ‘மதனகாமராசன்’ என்ற படம் மூலம் சிறந்த கதாசிரியர் என்ற பெயர் பெற்றார். அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்தன. பின்னர் பி.யூ.சின்னப்பா, இளமை திரும்பிய குசேலனாக நடித்திருந்த ‘குபேர குசேலா’(1943) படத்தை கே.எஸ். மணியுடன் சேர்ந்து இயக்கினார். அதன்பின் 1947-இல் ‘தன அமராவதி’ என்ற படத்தை இயக்கிய பி.எஸ்.ராமையா, அந்தப் படத்தில்தான் ‘நகைச்சுவை மன்னன்’ என்று பெரும்புகழ்பெற்ற ஜே.பி. சந்திரபாபுவை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடியை பூர்வீகமாககொண்ட சந்திரபாபு சிறுவயதிலிருந்தே சினிமாமீது கொண்ட மோகத்தால் பல கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி அலைந்தார்.
விரக்தியின் உச்சியில் வாய்ப்பு தரவில்லை என்ற கோபத்தில் ஒரு ஸ்டுடியோ வாசலில் தற்கொலைக்கு முயல கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அங்கு குற்றவாளிக் கூண்டில் நீதிபதி முன் சட்டென தீக்குச்சியை எரிய வைத்து கையால் சுட்டுக்கொண்ட சந்திரபாபு ”பார்த்தீங்களா… இப்ப நீங்க நெருப்பு சுட்டதைத்தான் பாத்துருப்பீங்க ஆனா வலி என்னன்னு எனக்குத்தான் தெரியும்” என புத்திசாலித்தனமாக பேசி வழக்கிலிருந்து
வெளிவந்தார் .
இதை கேட்ட ராமையாவுக்கு உடனே சந்திரபாபுவை பிடித்துப்போனது மேலும் சந்திரபாபு ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகனும்கூட என்று ராமையாவுக்கு தெரியவர சந்திரபாபுவை அடுத்து எழுதி இயக்கவிருந்த தனது தன அமராவதி படத்தில் அறிமுகப்படுத்துவதாக கூறி அதை நிறைவேற்றவும் செய்தார் . எஸ்.எம்.குமரேசன், பி.எஸ்.சரோஜா ஜோடி சேர்ந்து நடித்த அந்தப்படத்தில் அண்ணன் மாணிக்கம் செட்டியாராக புளிமூட்டையும். தம்பி ரத்தினம்
செட்டியாராக சந்திரபாபுவும் நகைச்சுவை ‘ரகளை’ செய்தனர். சந்திரபாபுவின் நடனத் திறன், பாடும் திறன் இரண்டையும் கண்ட ராமையா, அறிமுப்படத்திலேயே ‘உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது’ என்ற முதல் பாடலை பாட வைத்ததோடு நில்லாமல் அதில் ஆடவும் வைத்து ஒரு திறமைமிக்க கலைஞனுக்கு வாசல் திறந்தார் . சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவினருக்காக பி.எஸ்.ராமையா தொடர்ந்து நாடகங்களும் எழுதிக்கொடுத்தார், அவர் எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ‘தேரோட்டி மகன்’, ‘மல்லியம் மங்களம்’, ‘கைவிளக்கு’, ‘சறுக்குமரம்’ போலீஸ்காரன் மகள்’ போன்ற நாடகங்களில் நடித்த பல முன்னணிக்கலைஞர்கள் பிற்பாடு சினிமாத்துறையில் முத்துராமன், வீ.கோபால கிருஷ்ணன்,
சகஸ்கரநாமம் என அறியப்பட்டனர். அதுபோல சினிமா குறித்து இன்று பல புத்தகங்கள் எழுதபட்டாலும் சினிமா எனும் கலை குறித்து தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாதான். அவ்வகையில் இந்நூலின் ஆசிரியரான எனக்கு முன்னோடியான
பி.எஸ்.ராமையாவை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
அதுபோல தமிழ்பட உலகிலிருந்து இந்திக்கு கதை எழுதப்போன முதல் எழுத்தாளரும் பி.எஸ்.ராமையா மட்டும்தான் . இந்தி திரைப்பட உலகின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மெஹ்பூப், தான் தயாரித்து இயக்கிய ‘ஆன்’, ‘அமர்’ ஆகிய வெற்றிப்படங்களின் கதை
விவாதங்களுக்கு பணிபுரிய ராமையாவை அழைத்து பெரும் பணம் சம்பளமாக கொடுத்துள்ளார்.
இப்படியாக இலக்கியம் சினிமா இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய பி.எஸ்.ராமையா தனது 78-வது வயதில் மறைந்தார்.
பி.எஸ்.ராமையா பணியாற்றிய திரைப்படங்கள்
1940 – பூலோக ரம்பை, 1940 – மணி மேகலை, 1941 – மதனகாமராஜன்
1943 – குபேர குசேலா , 1945 – சாலிவாகனன் , 1945 – பரஞ்சோதி கதை, உரையாடல்,
இயக்கம். ,1945 – பக்த நாரதர் ,1946 – அர்த்த நாரி கதை,1946 – விசித்திர வனிதா
1947 – தன அமராவதி,( கதை கதை, உரையாடல், இயக்கம்), 1947 – மகாத்மா
உதங்கர்
1948 – தேவதாசி (கதை),1949 – ரத்னகுமார், 1952 – மாய ரம்பை, 1959 – பிரசிடெண்ட்
பஞ்சாட்சரம்,1960 – ராஜமகுடம், 1961 – மல்லியம் மங்களம், 1962 – ராஜமகுடம்
1962 – போலீஸ்காரன் மகள், 1963 – பணத்தோட்டம்,1963 – மல்லியம் மங்களம்
புதுமைப்பித்தன்
(ஏப்ரல் 25, 1906 – ஜூன் 30, 1948)
அவ்வகையில் தமிழின் நவீன இலக்கியத்தின் முடிசூடாமன்னனாக இன்று வரை திகழும் புதுமைப்பித்தன் சினிமாவுக்கு உரையாடல் எழுத வந்த முதல் இலக்கிய எழுத்தாளர் எனலாம் .
இவருக்கு முன்பே இளங்கோவன் சினிமாத்துறைக்கு வந்திருந்தாலும் அவர் பத்திரிக்கையாளராக மட்டுமே இருந்தாரேயொழிய எழுத்து இலக்கியத்துறையில் இளங்கோவன் பெயர் பெறவில்லை கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் தாசில்தார்
சொக்கலிங்கத்துக்கு மகனாக ஏப்ரல் 25 1906 ஆம் ஆண்டு விருத்தாசலம் என்ற பெயரில் பிறந்தவர் புதுமைப்பித்தன் , பள்ளிப்படிப்பின் போதே நிலையில் அப்பா ரிட்டையர் ஆனதும் . 1918-இல் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான்
ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஆம் ஆண்டு ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.
இவரது முதல் படைப்பான ’ குலோப்ஜான் காதல்’ காந்தி இதழில் 1933-இல்
வெளிவந்தது. 1934-லிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார்… தொடர்ந்து மணிக்கொடிக்கு சிறுகதைகள் எழுதியவர் எழுத்திலும் சினிமாவிலும் சாதிக்க சென்னைக்குக் குடிபெயர்ந்தார்… சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.. தினமணியில் தன்னுடன் பணிபுரிந்த இளங்கோவன் பாகவதர் படங்களுக்கு வசனம் எழுதிபிரபலமானதைத் தொடர்ந்து தானும் அதுபோல ஆக எண்ணி
சினிமாவுக்கு வாய்ப்பு தேடத்துவங்கினார். ஒருபக்கம் அமரத்துவமான சாப விமோசனம், ,பொன்னகரம்,செல்லம்மா, துன்பக்கேணி மற்றும் அகலிகை போன்ற கதைகள் எழுதி இலக்கிய உலகில் புகழ் வானத்தில் கொடிகட்டிப்பறந்தாலும் வாழ்க்கை என்னவோ கட்டாந்தரையில் குற்றாலத் துண்டைத்தான் விரித்துகொடுத்தது.கனவுகள் நனவாகும் வகையில் தொடர் முயற்ச்சிக்கு நற்பலனாக ஜெமினி நிறுவனத்திலிருந்து பணிபுரிய அழைப்பு வந்தது… பலரும் பணிபுரிந்த அவ்வையார் படத்தில் அவரும் பணியமர்த்தப்பட்டார். வழக்கமாக புராண கதைகளுக்கு புதுமைப்பித்தன் எழுதிய திரைக்கதை எஸ். எஸ். வாசனால் ஏற்க முடியவில்லை அதனால் பாதியிலேயே அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆனாலும் பாச்கர் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் புதுமைப்பித்தனிடம் கதைகேட்டு வந்தது அந்த படத்துக்காக அவர் எழுதிய கதை வணிக சினிமாவில் மாசலாக்களை தூவிக்கொண்டது.
தியான சந்திரன் என்ற கவிஞன் தன் மனைவி நந்தினியோடு ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறான். தியான சந்திரனின் புலமையைக் கேள்விபட்ட மன்னன் அவனுக்கு அரசவையில் பதவி தருகிறான். முதியவனான அந்த அரசனின் இளம் மனைவிக்கு தியான சந்திரனின் மீது மோகம் ஏற்படுகிறது. அவனிடம் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயலும் அரசி அதில்
தோல்வியடைகிறாள். இதனால் கோபமுற்ற அரசி தியான சந்திரன் தன்னை வல்லுறவு கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டுகிறாள். தீரவிசாரிக்காத மன்னன் கவிஞனை சிரச்சேதம் செய்ய கட்டளை இடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை அசலான கதை உருவாக்கப்படாத கோவத்தில் புதுமைப்பித்தன் தானே ஒரு படக்கம்பெனி துவக்கும் முடிவுக்கு வந்தார். “பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்” – என்ற பெயரில் ஒரு கம்பெனியைத்துவக்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார்.
இச்சூழலில் தான் சிறையிலிருந்து வெளிவந்த எம்.கே.தியாகராஜ பாகவதரின் அழைப்பு அவருக்கு ஓரளவுக்கு ஆசுவாசத்தை உண்டாக்கியது. ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார். அவர் இறப்புக்கு சில மாதங்களுக்கு முன் காமவல்லியும் இறப்புக்கு சில மாதங்களுக்குப்பின் ராஜமுக்தியும் வெளியாகியது.
-அஜயன் பாலா