அந்த படகு வீடு ஏரியின் கரையை விட்டு மெள்ள அசைந்து அசைந்து விலகியது. இனி கரையையொட்டி அமைந்திருக்கும் வீடுகள் உள் நகர்ந்து கொள்ளும். சுற்றுலா வருபவர்களை நம்பியே அமைந்திருக்கும் வீடுகள் அவை என்றாலும் அவ்விடம் சுற்றுலா தளம் போன்றிருக்கவில்லை. கரையில் சுற்றுலா படகுகள் ஓரிரண்டு மட்டுமே இருந்தன. படித்துறை என்ற பெயரில் நொறுங்கியும் நீர் அரித்ததும் உபயோகித்ததும் போக மீதமிருந்த அரை குறை படிகள் சகதியும் சேறுமாகக் கிடந்தன. வீடுகள் எந்த ஒழுங்கமைவுக்குள்ளும் இல்லாதவைகளாக படிக்கட்டுகள் வரை நெருக்கியடித்துக் கொண்டு ஈரம் சொட்டிக் கிடந்தன. மரக்கூரையிடப்பட்ட அவற்றின் வாசல்களில் தொங்கும் சாக்கு படுதாக்கள் அவற்றுக்கு திரைசீலைகளைப் போன்றும் கதவுகள் போன்றுமிருந்தன. கரையோர நதி அழுக்கை கொப்பளித்துக் கொண்டு கரிய நிறமென தேங்கிக்கிடந்தது.
அவளுக்கு எல்லாமே புதிது போல தோன்றியது. இது அங்கீகரிக்கப்பட்ட படித்துறையா என்றெல்லாம் கூட தெரியவில்லை. அவள் பாசி படிந்த கல்லில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கால் வைத்து வந்தபோது நால்வர் அடங்கிய குடும்பம் ஒன்று படகு வீடு சவாரிக்காக காத்திருந்தது. படகுப்பயணம் காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணியோடு முடிவடையும். மதிய உணவு படகிலேயே. அவள் கால் மணி நேரத்துக்கு முன்னதாகவே படகுத்துறைக்கு வந்திருந்தாள்.
“வேற யாரும் வர்லீங்களா…?” என்றார் படகோட்டி. ஐம்பது வயதிருக்கலாம். சோம்பிக் கிடப்பது போன்ற முக அமைப்பு அவருக்கு.
இல்லை என்பது போல தலையசைத்தாள். படகிலேறுவதற்காக அதன் நீளமான கரிய மூக்கின் வெளியே தொங்கிக் கொண்டிருந்த முறுக்குக் கயிற்றால் திரட்டி உருவாக்கப்பட்ட நுனியை பற்றிக் கொண்டபோது நிலமின்மையின் காரணமாக படகு நிலையின்றி அசைந்தது. வெளியிலிருக்கும் அசுத்தத்துக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போலிருந்தது படகின் உள்தோற்றம். நீர் சொட்டி கிடந்த அகலமான முன்தளத்தின் மையத்தில் மூங்கில் மேசை போடப்பட்டு அன்றைய செய்தித்தாளும் நீர்பாட்டிலும். வைக்கப்பட்டிருந்தது. படகின் உள் வட்ட விளிம்பில் பொருத்தப்பட்டிருந்த தொடர் இருக்கையில் உட்காரும் பகுதி மெத்தையாக்கப்பட்டிருந்த்து. மர அலமாரியில் சிறியதான தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது.
“உட்காருங்கம்மா…”
அவள் தனது கைப்பையை மூங்கில் மேசையில் கிடத்தி விட்டு தொடர் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டாள். படகுத்துறை கசகசத்துக் கிடந்தது. ஏதோ ஒரு வீட்டிலிருந்து குழந்தையொன்று வீறிட்டு அழுதது. வணிகப்படகொன்று தனது மூக்கை தேய்த்துக் கொண்டு கரையின் நீர் ததும்பலில் நிற்க அதில் ஏறுவதற்காக ஆப்பிள், செர்ரிப் பழங்கள் மூங்கில் கூடைகளில் காத்திருந்தன. யாரோ ஒரு இளைஞன் அந்த படகில் ஏறியபோது படகோட்டி “சமையல்காரப் பையன்” என்றார். அவள் லேசாக தலையசைத்துக் கொண்டாள். அவர் கயிற்றை உருவி நங்கூரத்தை விடுவித்தபோது படகு லேசாக ஆடியது. மேசையின் ஓரமாக வைத்திருந்த தண்ணீர் பாட்டில் நழுவி விளிம்புக்கு வர அந்த இளைஞன் அதை உள்ளே நகர்த்தி விட்டு அவளை பார்த்து புன்னகைத்தான்.
படகு புறப்பட்டபோது குழந்தையின் அழுகையொலி நின்றிருந்தது. கரையோரங்களில் பாத்திரங்களை துலக்கி கொண்டும் துணி துவைத்துக் கொண்டுமிருக்கும் வளரிளம் பெண்களில் ஏதோ ஒருத்தி அதன் தாயாக இருக்க வேண்டும். அவள் சேற்றில் கசகசத்த காலடிகளோடு உள்ளே சென்று தன் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது நழுவிய முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு அலசிய மீன்களை எடுத்து வைத்து விட்டு முலைப்பாலை பருக அளித்திருக்கலாம். படகு புறப்படும்போது சமையற்கார இளைஞனிடம் நெகிழிப்பையில் மதிய சமையலுக்கான காய்கறிகளை கொண்டு வந்த கொடுத்த இளைஞன் அக்குழந்தையின் தந்தையாகவும் இருக்கலாம். அல்லது இவை எதுவுமே இல்லாமலும் இருக்கலாம். அவள் சல்வாரின் துப்பாட்டாவை உடலை கவ்வியிருந்த குளிராடையின் மீது இழுத்து விட்டுக் கொண்டாள். ஒருவேளை அந்தக் குழந்தையும் குளிருக்கு அழுதிருக்குமோ…? இங்கேயே பிறந்து வளரும் குழந்தை இந்நாள்வரை குளிருக்கு பழகாமலா இருந்திருக்கும்? ஆனால் எல்லா துயரங்களும் பழக்கத்தில் சரியாகி விடுமா என்ன?
படகோட்டி சக்கரத்தை சுழற்றி முற்றிலுமாக வளைத்துப் படகை திசைமாற்றினார். லேசான வெயிலுக்கே முகத்தை சுளித்துக் கொண்டார். அவரது தலைக்கு மேலிருந்த படகின் அலங்கார முகப்பு வெற்று அலங்காரத்திற்கானது போலும். நிழலே இல்லாதது போன்றிருந்தது. நிழல் இல்லாதிருப்பது அவளுக்குமே பிடித்தமானதுதான். அவை நாம் செய்வதையே திருப்பிச் செய்யும். அதனுடைய இருப்பு யாரோ கண்காணிப்பது போன்றோ நக்கல் செய்வது போன்றோ இருக்கும். அந்தி நேரத்து நிழல் அவளின் ஒடிசலான தேகத்தை மேலும் ஒல்லியாக்கிக் காட்டுவதோடு கை கால் அசைவுகளை துல்லியமாக பிரதியெடுத்து விடும். மதிய நேரத்து நிழலோ அவளை அடர்த்தியாக்கி குறுக்கி விடும். குளிருக்கேற்ப உடல் குறுக்கிக் கொண்டதை உணர்ந்தவளாக நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
சூரியனின் கதிர்கள் விரல்களிலிருந்து வழிந்தோடும் வெப்பத்துளிகளென பூமியில் பரவியிருந்தது. இமயம் அடுக்குகளாக பரவியிருக்க யானையின் காலடியில் கிடக்கும் எறும்புகளை போல மலையடிவாரங்களில் சின்னஞ்சிறு ஊர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மலைகள் சரேலென இறங்கும் நேர்க்கோடுகளை அடுக்கியது போலிருக்க அதன் உச்சிகளில் ஈட்டிமுனைகள் போல பனிமுடிகள் மின்னிக்கொண்டிருந்தன. உருகிய பனிநீர் மலைகளுக்கு இடையிலிருந்த பள்ளத்தாக்கில் வழிந்துக் கொண்டிருந்தது. வழிக் கண்ட பக்கமெல்லாம் நெளிந்து வளைந்தோடும் இலக்கில்லாத பயணம் அதற்கு. அவளுடையதுமே இலக்கில்லாத பயணம்தான். இருக்கவும் இயலாது விடுக்கவும் இயலாத அவஸ்தைஅது.
“மேம்சாப்… டீ போடட்டுமா…?” சமையற்கார இளைஞன்தான். இருபத்திரண்டு வயதிருக்கலாம். குரலில் காட்டிய பணிவு அவளுக்கு ஏனோ போலியாக தோன்றியது. ஒரு குடும்பமோ இரண்டு குடும்பங்களோ எட்டு நபர்கள் நாள் வாடகைக்கு எடுத்துச் செல்லும் படகை அவள் ஒருத்தியே மொத்த வாடகைக்கு எடுத்திருந்தில் அவனுக்கு வேலை மிச்சம் என்றாலும் பெண்கள் பணவிஷயத்தில் தாராளமாக இருக்க மாட்டார்கள் என்பது நெருடலாக இருந்திருக்கலாம். சம்பளத்தை விட பயணிகள் கொடுத்து விட்டு போகும் காசும் அவர்களுக்கு ஒரு பொருட்டுதான்.
அவள் வேண்டாம் என்பது போல தலையசைத்து விட்டு கண்களை வெளியே பதித்துக் கொண்டாள்.
கரை பின் வாங்க தொடங்கியதில் நதியோர வீடுகளும் அழுக்கும் குப்பையும் பார்வைக்கு ஒன்று போல் தெரிந்தன. மலைச்சரிவுக்கு பின்னிருந்து கதிர்களால் மலைகளை நிறம் மாற்றிக் கொண்டிருந்த சூரியன் வெளியே தலை காட்ட துவங்கியிருந்தது. இரவுகளில் மலைமுடியோடு கட்டித் தழுவிக் கொண்டிருந்த பனி பகல்களில் சூரியனிடம் காதலாகி கசந்துருகிக் கொண்டிருந்தது. வெள்ளிச்சரிகையை விரித்து தொங்க விட்டது போன்று வழியும் நீர் மலையிடுக்குகளில் கிடக்கும் பாறைகளையும் கற்களையும் தழுவி உரசி கரைத்து தம்மோடு அழைத்து வந்து சிற்றோடைகளாக்கி நதியோடு கலக்க வைத்து விடுகிறது. காட்டாறுகள் நில அமைப்பை தீர்மானிக்கும் சக்தி படைத்தவை. மனிதர்களின் வாழ்க்கை கூட யார் யாராலோ தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. புறக்காட்சிகள் மனதில் பதிந்துக் கொண்டே வந்தாலும் அகம் முற்றிலும் விழித்துக் கொள்வதை உணர்ந்தவளாக அங்கிருந்து எழுந்துக் கொண்டாள் அவள்.
வெளிப்பார்வைக்கு கம்பீரமாக தெரிந்த படகு உள்ளுக்குள் கச்சிதமாக இருந்தது. உள்தளத்தில் இரண்டு படுக்கையறைகளும் அதையடுத்து சமையலறை ஒன்றும் இருந்தன. மரத்தாலான தரையில் விரிப்பு விரிக்கப்படாத இடங்களில் காலடி ஓசை டொக்… டொக்.. என்றது. சமையலறையில் விரிக்கப்பட்டிருந்த சணலால் ஆன தரைவிரிப்பில் நீர் கசிந்து வந்தது. சமையலறையின் மறு ஓரத்தில் படகுக்கான மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. சமையல் மேடையில் பச்சை நிற ஆப்பிளின் தோலை சீவிக் கொண்டிருந்த அந்த இளைஞன் அவளை கண்டதும் மெலிதாக புன்னகைத்து ஏதோ சொன்னான். அவளுக்கு அது விளங்காதபோது மோட்டார் அதிகமாக சத்தமிடுகிறது என்றான். அவளுக்கு கூட சிறிது நாட்களாக காதுகளில் ஏதோ சத்தம் கேட்டு கொண்டேயிருக்கிறது. இந்தக் குறைப்பாட்டுக்காக காது மூக்கு தொண்டைமருத்துவரிடம் சென்றிருந்தாள். ஆனால் அவருக்கும் அவளைப் போலவே செவித்திறன் குறைபாடிருக்கவேண்டும். இவள் சொல்வதை அவர் காது கொடுத்துகேட்கவில்லை. காதுக்குள் ஒளியை நிரப்பி உள்ளந்தரங்கத்தை திரை வழியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு, பிரச்சனை இருக்கற மாதிரி தெரியில… என்றார். இவள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே காதுக்குள் எதையோ நுழைத்து திரளாக அழுக்கு போன்றோ மெழுகு போன்றோ எதையோ எடுத்து போட்டுவிட்டு இனிமேல் பிரச்சனை இருக்காது என்றார். அவளும் அப்படிதான் நினைத்தாள்.
அலுவலகம் செல்லும் வழியில் அவளுடன் தொடர்ந்து பயணிக்கும் மலையிடமும் அதையேதான் சொன்னாள். பூர்வீகத்தை விட்டு எங்கெங்கோ சென்று விட்டாலும் அவளுக்கு எப்படியாவது ஒரு மலை கிடைத்து விடுகிறது. மலை தன் மீது வளர்ந்திருக்கும் செடிகளை காற்றைக் கொண்டு வாஞ்சையாய் வருடிக் கொண்டேஅவள் கூறியதை கேட்டுக் கொண்டது. அந்த மருத்துவரை போல மலையும் அவளை ஏமாற்றி விடுமோ…? மீண்டும் முன்தளத்திற்கு வந்து அமர்ந்துக் கொண்டாள்.
“மேம்சாப்…”
அவள் கலைந்து நிமிர்ந்தபோது அந்த இளைஞன் “துாங்கீட்டீங்களா..?” என்றான்.
அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள். ஆனால் அன்று மலை அவளை அழைத்தபோது லேசான உறக்கம் இமைகளை கனக்கச் செய்தது. ராத்திரியெல்லாம் விழிச்சிட்டு என்னத்தைதான் கனவு காண்றியோ… என்ற குடும்பத்தின் குரல்களுக்காக கண்களை இறுக மூடிக் கொண்டாலும் வராத துாக்கம் பேருந்தில் எப்படியோ வந்து விடுகிறது. யாரோ யாரையோ அழைப்பதாக எண்ணி அவள் திரும்பியபோது பேருந்தின் சன்னல் வழியே எட்டிப் பார்த்தது. இதே வழியில் தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருந்தாலும் மலை அன்றுதான் அவளிடம் பேசத் தொடங்கியிருந்தது. தொலைவில் தொடராக வந்துக் கொண்டிருக்கும் மலை அருகில் வந்தபோது பிரம்மாண்டமாக இருந்தது. இமயமலையை போன்ற பிரம்மாண்டம். சிறுவயதுகளில் உலகம் முழுவதுமே மலையால் சூழப்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தாள். அது மலைகளின் இமயம் என்பதை பின்னாளில்தான் அறிந்துக் கொண்டாள்.
அவளுடைய வீடு அதன் அடிவாரத்தில் இருந்தது. நேரங்களை கூட மலைகளில் சூரியன் எழுப்பும் ஜாலங்களின் வழியே அவர்களால் அறிந்துக் கொள்ள முடியும். ஒரு பக்கத்து சூரியன் மறுபக்கத்து மலைச்சிகரத்தை செவ்வொளியால் நிறைக்கும்போது கோதுமை வயல்கள் விவசாய ஆட்களால் நிரம்பி விடும். மலைச்சரிவுகளின் விளிம்புகளை கதிரவன் தன்னொளி கொண்டு கூர் தீட்டும்போது குதிரைகள் உற்சாகமாய் கனைக்கத் தொடங்கும். ஆனால் பின்னாட்களில் அவை கனைப்பதை விட பயந்து தெறித்து வால்களை துாக்கி ஓட்டம் பிடிப்பதுதான் அதிகமாக இருந்தது. காட்டாறுகள் வேகமிழக்கும்போது அவை அள்ளிக் கொண்டு வரும் வண்டல் படிவதால் உருவான சமவெளியில் இயற்கையாக முளைத்த புற்களின் ஆரோக்கியம் தங்கிய மினுமினுப்பான அவற்றினுடல் மிரட்சியில் துள்ளின. கம்பளி ஆடுகள் வழிவகை தெரியாது அலறின. அவர்களின் வரவை தெரிவிக்கும் கட்டியங்கள் என அப்போது அவர்களால் அறிய முடியவில்லை. அரசியல் நிலைப்பாடு கொள்ளுமளவுக்கோ பிரிவினைவாத வெறுப்பரசியலுக்கு செல்லுமளவுக்கோ உணரவில்லை அவர்கள்.
அந்த இளைஞன் அவளுக்காக ஆப்பிள் பழச்சாறை கண்ணாடி டம்ளரில் நிறைத்து வைத்து நீட்டிக் கொண்டிருந்தான்.
“என் பெயர் மஞ்சோன்…” என்றான் அவள் கேட்காமலேயே.
“ஓ…”
“அதிகம் பேச மாட்டீங்களா…?”
படகோட்டி அவர்களை திரும்பிப் பார்த்து புன்னகைத்தார். அவள் அதிக தொலைவுக்கு நதிக்குள் பயணிக்க வேண்டாமே என்று கூறியிருந்தாள்.
“அப்படியெல்லாம் இல்லை… சும்மா வேடிக்கை பார்த்துட்டு வர்றேன்” அவள் மென்மையாக சிரித்தாள்.
“உள்ளே வாங்க… இன்னும் சௌகர்யமாக உட்கார்ந்துக்கிட்டு பார்க்கலாம்”
“பரவால்ல… இருக்கட்டும்” என்றாலும் அவனுடன் எழுந்து உள்ளே சென்றாள். முன்னதாக இருந்த அறையின் தொங்குத்திரையை விலக்கி விட்டு அவளுக்கு வழி விட்டு நின்றான் அவன்.
“தாங்க்ஸ்…”
“நான் உங்களை தீதீன்னு கூப்பிடலாமா…?”
“ம்ம்… கூப்டு.. நானும் மீஞ்சோன்னு கூப்டுறேன்”
அறைக்குள் போடப்பட்டிருந்த மூங்கிலாலான இருக்கையில் அமர்ந்து கொண்டாள். நதி செந்நிற குழம்பு போல புரண்டு கொண்டிருந்தது. மலைக்குவியல்களுக்கிடையே நீராக வழிந்து மலையிடுக்குகளை உருவாக்கி இறங்குவதற்கு பாதையமைத்து பீறிக் கொண்டு வரும் காட்டாறுகளின் நிறம் அது. சாளரத்தின் வழியே கைகளுக்கு அருகே இருப்பது போலிருந்த நதியை காண விரும்பாதவளாக அறைக்குள் திரும்பிக் கொண்டாள்.
அந்த சிறிய அறையின் நடுவில் கட்டிலும் அதன் நேர் உச்சியில் கனத்த மூங்கிலில் தொங்க விடப்பட்ட மின்விசிறியும் இருந்தன. அறையோரமாக கிடந்த கண்ணாடி பதித்த தாழ்வுமேசையில் இரண்டு நீர்க்குடுவைகள் வைக்கப்பட்டிருந்தன. அருகே காகித டம்ளர்கள் தலை கவிழ்த்திருந்தன. சிறிய மர அலமாரியொன்று பொருட்கள் வைப்பதற்காக காத்திருந்தது. ஒருநாளோ அரைநாளோ வாடகைக்கு இருந்து விட்டு போகிறவர்களுக்கு இங்கு பொருட்கள் வைக்க என்ன தேவையிருக்கப் போகிறது? கட்டிலில் போடப்பட்டிருந்த மெத்தையின் பழந்தன்மையை மேலே விரிக்கப்பட்டிருந்த விரிப்பால் ஓரளவுக்கு மேல் மறைக்க இயலவில்லை. துாசியேறிய நாடக உடைகள் போன்று வெளிப்புற ஜிகினாக்கள் உள்ளே வந்ததும் பல்லிளித்தன. பழைய தலையணைகள் புது உறைக்குள் புகுந்திருந்தன. ரஜாய்கள் சுற்றப்பட்ட மெத்தையின் மீது கம்பளி விரிப்புகள் இரண்டிருந்தன.
“சோனு…”
தெரிந்தவர், அறிந்தவர்களை விலக்கி விட்டோ அல்லது விலகிக் கொண்டோ வந்த இடத்திலும் அவளை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
“சோனாலி…”
அவள் வெளியே கிளம்பி வந்த நாட்களாக அழைக்கப்படாத பெயர். வீட்டிலும் நண்பர்களுக்கும் சோனு, அலுவலகத்திலும் சோனு, சோனாலி, மிஸஸ் சோனாலி பபிந்த்ரே… இப்போது பெயரில்லாதவள். ஆனால் யாருக்கோ தெரிந்திருக்கிறது.
சோளமாவு போல வெள்ள வெளுத்த நிறம் அவளுக்கு. அவளுக்கு மட்டுமல்ல… அங்கு பிறந்த வளர்ந்தவர்களுக்கே உரித்தான ஆப்பிள் நிறம் அது.
“சோனு…” உதடுகள் துடித்தன. கோதுமை வயல்களிலிருந்து முளைத்தவர் போலிருந்தார். உள்ள வயதுக்கு மேல் வயதானவராக இருந்தார். கண்களை இடுக்கிக் கொண்டு காலம் வரைந்தவற்றை விலக்கி விட்டு பார்த்தபோது அறிவு அவரை வாசியா என்று நினைவுப்படுத்தியது. அப்பாவின் நண்பர் அவர்.
“நல்லாருக்கியா சோனு..?”
வாழ்ந்தாக வேண்டிய வெறி அவளை நன்றாகவே வைத்திருந்தது. ஆனால் அவரை அப்படி சொல்லி விட முடியாது. அவர்கள் அங்கிருந்த உருளைக்கல் ஒன்றில் அமர்ந்துக் கொண்டனர். அவர் கோதுமை வயலில் வேலை செய்வதாக சொன்னார். அவர்களுக்கு பொதுவான கதைகளிருந்தன. அவளுக்கு அது இளம்பிராயத்துக் கதை. அவருக்கு நடுத்தர வயதின் கதை. இப்போது அவளும் அந்த வயதை எட்டியிருந்தாள். அவர்கள் பேசி பேசி ஓய்ந்தபோது கண்களைக் கூசச்செய்யாத வெயிலில் அறுவடை செய்த கோதுமைகளை கற்றைகளாக்கி காய விட்டிருந்தனர். சல்வார் கமீஸ் அணிந்த விவசாயப் பெண்கள் ஆப்பிள் மரநிழல்களில் அமர்ந்து மதிய உணவு உண்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் உடலை ஒற்றிக் கொண்டு நகர்ந்தபோது இருவர் கண்களிலும் நீர் மினுமினுத்தது. அவளால் அவரது மூச்சொலியை கேட்க முடிந்தது. மலைகள் கூட மூச்சு விட கூடியவைதான். இரவு நேரங்களில் அவள் அதை காற்றின் வழியே கேட்டிருக்கிறாள். பகல்களில் கூட இரைச்சலற்ற நேரங்களில் அதன் மூச்சுக்காற்றை உணர்ந்திருக்கிறாள். அப்போது அவள் தன் வயதையொத்த சிறுமிகளுடன் பள்ளத்தாக்கின் கசிவுகளில் வழியும் நீரைப் பிடிக்க கூம்பு வடிவ பானைகளுடன் ஏரியின் குறுக்கே நடைப்பயணம் செய்து வந்திருப்பாள். ஏரியில் எப்போதாவது நீரிருக்கும். எப்போதாவதுதான் அது உறையாமலும் இருக்கும். சீராக மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் மலை சிறுமிகளுக்காக சற்றே விலகி வழிக் காட்டும். ஆனால் அதனை தீவிரவாதம் தன் நிழல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொண்டபோது அவர்கள் அடைப்பட்ட வழிக்குள் திசையறியாது மூச்சடைத்திருந்தனர்.
சிறுமிகளின் உற்சாக குரலில் அவளது நினைவுகள் அறுபட்டன. அந்த குடும்பத்தை கரையில் நின்றபோது பார்த்திருந்தாள். சிறுமிகளின் முகம் முழுக்க கும்மாளம். அவளை கடந்தபோது இரு கைகளையும் உயர்த்தி அசைத்து ஹோ… வென கத்தியப்படியே நகர்ந்துப் போயினர். வணிகப்படகுகள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துக் கொண்டிருந்தன.
“தீதீ… இங்கே உட்காரட்டுமா..?” என்றான் மீஞ்சோன்.
அவள் நகர்ந்து அவனுக்கு இடம் விட்டபோது அவன் அவளுக்கு எதிரே கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் சிறு பலகையொன்றை நகர்த்தி அமர்ந்துக் கொண்டான்.
“நீங்க எங்கேர்ந்து வர்றீங்க…”
அப்போது அவர்களின் வீடு லடாக்கை ஸ்ரீநகருடன் இணைக்கக் கூடிய பாதையில் இருந்தது. ஓடையில் புரண்டு வரும் உருளைக்கற்களை அடுக்கி சுவரெழுப்பி அதன் மேல் மரக்கழிகளையும் சுள்ளிகளையும் பரப்பி களிமண் குழைத்து பூசி கூரையிடப்பட்ட வீடுகளில் அவளது வீடும் ஒன்று. சோனாலியின் பாட்டி அந்த உருளைக்கற்களை தொட்டு ஒவ்வொன்றும் மாமலை… என்பாள். மாமலை என்றால் இமயமலை. அவள் கூடகல்லில் காதை வைத்து அதன் மூச்சை கேட்டிருக்கிறாள். ஆனால் அது இயல்பை விட சற்று மாறியது போலிருக்கும். பிறந்த இடத்தை விட்டு பிரிந்து விட்ட சுணக்கம் போலும்.
“தீதீக்கு மனுஷங்களை விட மலைகளை ரொம்ப பிடிக்கும் போல..” அவன் அவளை கிண்டல் செய்தான்.
“இமயமலை உனக்கும் பிடிக்கும்தானே?”
“தீதீ.. அது மலை… நாம மனுஷங்க.. இதுல பிடிக்கறதுக்கும் பிடிக்காததுக்கு என்ன இருக்கு? அதுங்க உழைக்காம ஓரே இடமா நின்னுக்கிட்டேஇருந்தா போதும். ஆனா நாம ஓடி ஓடி உழைச்சாதான் சாப்பாடு”
அவள் லேசாக விழிகளை மூடிக் கொண்டாள். எங்கோ குதிரை கனைக்குமொலி போல ஏதோ கேட்டது. பிறகு ஏதேதோ குரல்கள். அசட்டை செய்ய முடியாத குரல்கள். இயல்பையே மாற்றி விடக் கூடியவை அவை. தீவிரவாதம் கூட அரசின் இயல்பை மாற்றியமைத்து விடும். சுதந்திரமான ஜனநாயக நாடு என்றாலும் அதன் குடிமைப்பணிகளை அங்கிருக்கும் மக்களால் அனுபவிக்க முடியாது. அதன் பிறகு அவர்களுக்கு தெரிவதெல்லாம் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் நிறைந்த ராணுவம் மட்டுமே. நாளடைவில் ராணுவ நடவடிக்கைகள் மக்களை வெறுப்படைய வைத்து விடும். தீவிரவாதம் அவ்வெறுப்பை அடைகாத்து விஷக்குஞ்சுகளை பொறித்தெடுக்கும். அதன் உணவுக்கான தானியங்களில் அவளது கிராமமும் ஒன்றாகிப் போனதை நல்லவேளையாக அவர்களால் உணர முடிந்தது. அந்த புனிதப்போரில் தங்களின் தரப்பில் கொடுக்கப்பட்ட மனிதப்பலிகளை தெய்வங்களாக்கிக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர்.
“நீங்க ஒரே பொண்ணா…?”
சோனாலியின் குடும்பம் சற்று பெரியது. அவள் தாயாரின் சல்வார்கமீஸை பிடித்துக் கொண்டு அலைந்தபோதே அவளுக்கு மூன்று உடன்பிறப்புகள் பிறந்திருந்தனர். சோனாலியின் பெரியப்பாவுக்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருந்தனர். சோனாலியின் தாத்தா பெரிய கம்பளத்தை எந்நேரமும் கோட்டு போல அணிந்திருப்பார். பாட்டி எருமையின் காம்புகள் அளவுக்கு கூட இல்லாத தன் விரல்களால் படி படியாக பால் கறந்து கட்டியான தயிராக்கி மூங்கில் கூடைக்குள் பத்திரப்படுத்தியிருப்பார்.
தனக்கு வட இந்திய, ஐரோப்பிய, சீன சமையல் கூட செய்ய தெரியும். தென்னிந்திய உணவு வேண்டுமானால் கூட செய்து தர முடியும் என்றான் மீஞ்சோன்.
“எனக்கு எதுவும் வேண்டாமே…”
முன்கூடத்திற்கு வந்து மெல்லிருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
“பழம் வெட்டி வைக்கட்டுமா…” என்றான் விடாப்பிடியாக பின்னாலேயே வந்து.
“வேணும்னா சொல்றேன். நீங்க உங்களுக்கு வேணுங்கிறதை சமைச்சுக்கோங்க…”
“எப்படி வந்தே சோனு?” வாசியா தாத்தா அவளிடம் கேட்டபோது அவர் முகம் ஆச்சர்யத்தால் விரிந்திருந்தது. எப்படியோ தப்பிப்பிழைத்தவர்கள் எங்கோ பிழைத்துக் கொண்டிருப்பதை விட அது ஆச்சர்யமானதொன்றுமில்லை என்றாலும் அவர் கேட்டதில் அர்த்தமில்லாமலும் இல்லை. பழைய பாதைகள் இப்போது இல்லாமலாகியிருந்தது. இருக்கும் பாதைகளையும் ராணுவம் அடைத்துக் கொண்டிருந்தது. அவள் பயணித்த வந்த பாதை மலையடுக்குகள் வழியாக ஊடுருவி பத்தடி அகலத்தில் போடப்பட்டிருந்தது. உயிரை பணயம் வைக்கும் பயணம். கீழே அதள பாதாளம். எந்நேரமும் மண்சரிவு ஏற்படலாம். பாறைகள் உருண்டு வரலாம். சிறுமியாக அவள் பெரியப்பாவின் மகள்களுடன் சுற்றியலையும்போது மரகதப்பச்சைப்பாறைகளை பார்த்திருக்கிறாள். செந்நிறத்திலும் கருங்கல் நிறத்திலும் கூட பார்த்திருக்கிறாள். இங்கு உருண்டு வரும் பாறைகள் உள்ளீடற்றவை. சாலையில் விழுந்த வேகத்தில் நொறுங்கிப் போய் விடுகின்றன. மேலிருந்து வழியும் அருவியின் ஒழுகல் நீர் சாலையை சலசலப்பாகக் கடந்து கீழே கிடுகிடு பள்ளத்தை நோக்கி பயணித்து செல்வது அவளுக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. கடந்து விட்ட பிறகும் கடந்த பாதையை பார்ப்பது குலைநடுங்க வைக்கும் விஷயமாக இருந்தது.
அமைதி நழுவிப்போகும் நிலைக்கு முந்தைய அவளது கிராமத்தில் பனிக்கட்டிகளை நொறுக்கி வீசியெறிந்து விளையாடியிருக்கிறாள். தாயாருடன் ஆப்பிள் பழத்தோட்டங்களுக்கு சென்றிருக்கிறாள். புல் படர்ந்த மலைச்சரிவில் சிறுமிகளுடன் ஒளிந்து விளையாடும் இடங்கள் பிறகு தீவிரவாதிகளின் நிழற்கூடாரங்களாகிப் போயின. அவளது வீடு ஒளிப்படராத கூண்டு போலிருக்கும் என்றாலும் தடதடத்த மரத்தளங்களில்புழுங்குவதும் அடுப்பின் வெம்மைக்குள் பதுங்கிக் கொள்வதும் அவளுக்கு பிடித்தமானது. கூரையின் மீது அடுக்குவதற்காக காட்டுப்புற்களை சீவி எடுத்து வரபாட்டி மலைச்சரிவுகளுக்கு செல்லும்போது அவளும் இணைந்துக் கொள்வாள். மலையை அண்ணாந்து பார்த்து, ஒசந்து போன பூமி… என்பாள். சேற்றுமண்ணும் கூழாங்கல்லுமாக கிடக்கும் மேட்டுநிலம் பனி மூடிக் கிடக்கு என்பாள். பின்னாளில் அவள் இம்மலைகள் பூமிக்கடியிலிருக்கும் கண்டத்தட்டுகளின் மோதலால் மேலெழும்பிய நிலப்பரப்பே என்று படித்தபோது பாட்டியை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் வீடு திரும்பும்போது மாலை வெளிச்சத்தில் பொன்னிறமாக சிவந்து நிற்கும் மலைகள் தொழுவத்தில் மாடுகளை அடைத்து விட்டு மேலேறும் போது சிவந்து கருகி இருண்டு மறைந்துக் கொண்டிருக்கும்.
இப்போது கூட அவளுக்கு புல்லின் வாசம் வீசுவதாக தோன்றியது. ஆனால் இதை யாரிடமாவது பகிர்ந்துக் கொண்டால் நம்ப மாட்டார்கள். அவள் மூக்கை இழுத்து வாசத்தை அனுபவித்தாள். அதே வாசம். மேல் கூரையாக போட்டுக் கொள்ளும் புல்லின் வாசம். வீட்டின் அடித்தளத்திலிருக்கும் தொழுவத்திலும் இதே புற்கள்தான்.. தொழுவத்தின் மேல் அமைந்த பலகை கூரைக்கு மேல் அவர்களுக்கான குடியிருப்பு. சரிவுகளில் இருள் வழிந்திறங்கி மலையின் மடிப்புகளுக்குள் தேங்கிக் கொள்ளும்போது மேய்ச்சல் மாடுகள் வீடுகளுக்கு வந்து சேர்ந்து விடும். சிறுநீர் கழிப்பதும் சாணமிடுவதும் குரலெழுப்புவதுமாக தொழுவத்துக்குள் அவற்றின் நடமாட்டத்தை மேலிருந்தே கண்காணித்துக் கொள்ள முடியும். காட்டெருமைகளின் குரல்கள் இருளுக்குள்ளிருந்து முளைத்துக் கிளம்பும். அவளின் புலம் பெயர்ந்த வீட்டின் படுக்கையறையில் மாடுகளின் சத்தம் கேட்பதில்லை. குளிரூட்டியின் சத்தம் உறக்கத்தை கலைத்து விடுகிறது.
இதை சொன்னபோது மருத்துவர் சிரித்ததுபோல பேருந்துக்குள் எட்டிப் பார்த்த மலை சிரிக்கவில்லை. அது குதிரைகள் மேய்ச்சலை முடித்து விட்டு வந்ததும் எழுப்பும் சந்தோஷ கனைப்பை கூட தன்னால் கேட்க முடிகிறது என்று சொன்ன போது அவளுக்கு மிகவும் நெருக்கமாகிப் போனது. கீர்போரா என்று பெயர் கூட வைத்திருந்தாள். கீர்போரா..? கர்… கர் என்று சிரித்தது மலை. ஆனால் அவளின் கறாரான முகப்பாவத்தைக் கண்டதும் அவளது கிராமத்தின் பெயராக இருக்கப் போகிறதோ என்னவோ என்ற அச்சத்தில் சிரிப்பை நிறுத்திக் கொண்டது.
“அந்திநேரத்து மலைச்சிகரத்தின் உச்சியில் பனி பொற்கவசத்தை சூடி விடும்“ அவள் எதிலோ ஆழ்ந்து விட்டவள் போலிருந்தாள்.
“ஆனால் இது நெரிசல்கள் மிகுந்த நகரம். இங்கு இத்தனை பனி சாத்தியமில்லை” என்றது மொட்டை மலை. அவள் அப்படிதான் குறிப்பிடுவாள்.
“என் மேல எத்தனை தாவரங்கள் மொளச்சிருக்கு.. என்னை போய் மொட்டை மலைன்னு சொல்றியே சோனு…”
“ஆனால் உன் மீது பனி உட்காரவில்லையே…?” அவள் வம்புக்கிழுத்தபோது அது பேருந்தின் யன்னலுக்குள் தன்னை திணித்துக் கொண்டு அவளருகே வந்து அமர்ந்தது.
“அய்யோ… கீர்போரா… இத்தனை பெரிய உடலை எனக்காக குறுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாயோ?” அதனையள்ளி அணைத்துக் கொண்டபோதுதான் அதன் உடலிலிருக்கும் குறைபாடுகளை பார்க்க முடிந்தது அவளால். எங்கெங்கோ எதுயெதுவோ குறைந்திருந்தது அதற்கு. வெடி வைத்து தகர்த்து விடுகிறார்களாம்.
“பனி மூடியிருந்தால் எங்களுக்கு இந்த ஆபத்து வந்திருக்காதோ?” மலை தன்னையே கேள்விக்குறியாக வளைத்துக் கொண்டது.
எலும்பும் நரம்புமற்ற உடல்… எப்படி வேண்டுமானாலும் வளைந்துக் கொள்ளலாம். ஆனால் அவளால் ஓரிடமாக அமர முடியவில்லை. சமையலறையில் காராமணிப் பயிறு கூட்டு வேகும் வாசம் வந்தது. மீஞ்சோன் சமையல் மேடையில் சாய்ந்து நின்றிருந்தான். சிரிக்கும்போது கண்களும் மூக்கும் சேர்ந்துக் கொண்டது போன்ற இனிய முக அமைப்பு அவனுக்கு. பதிலுக்கு அவள்மெலிதாக புன்னகைத்தாள்.
படகு மெல்ல நகர்ந்துக் கொண்டிருக்க, திடீரென்று பெரிய பெரிய சங்கிலிகளின் அசைவொலியும் மோட்டாரின் ஒலியும் காதடைக்கத் தொடங்கியது.
“தீதீ… சங்கிலிப்பாசி எடுக்குறாங்க”
அவள் எட்டிப்பார்த்தபோது இயந்திரத்தின் உதவியோடு சங்கிலிப்பாசிகளை அள்ளியெடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அவள் படபடவென்று முன்தளத்துக்கு வந்தாள். அந்நேரம் படகோட்டி படகை வளைத்து திருப்ப முயன்றுக் கொண்டிருந்தார்.
“அப்படியே மிதக்க விடுங்க அண்ணா… நகர்த்த வேணாம்” அவசரமாக தடுத்தாள்.
“ஒரே சத்தமா கெடக்கே… நாம அந்தப் பக்கமா போயிடுவோம்”
“இல்ல.. இருக்கட்டும்…”
“அதோ… அந்த கரை தெரியுது பாருங்க… ரொம்ப பக்கத்திலதான். அங்கே படகை நிறுத்திப் போட்டு மதிய சாப்பாட்டை முடிச்சுக்கலாம். யாரும் இங்கே நிறுத்த மாட்டாங்கம்மா…”
அவள் கெஞ்சலாக அவரை பார்த்தாள்.
“தீதீ… நாம இன்னும் நதியோட மையத்துக்கெல்லாம் போகல “
“ம்ம்… தெரியும்”
ஆனால் அன்று அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. அப்போது மழை மேகங்கள் கவிழ்ந்து பகலை அந்தியாக்கியிருந்தது. மலைச்சரிவுகள் சாம்பல் வண்ணம் பூத்துக் கிடந்தன. எங்கோ கனமழை பெய்துக் கொண்டிருந்தது.
படகோட்டி படகிலிருந்த சங்கிலியை சரசரவென்று கீழிறக்கி நங்கூரத்தை நீரில் பாய்ச்சி படகை நிறுத்தி விட்டு மேலேறி வந்தார். அவள் சாப்பிட உட்கார்ந்ததும் சோளரொட்டியை சூடாக கல்லில் போட்டு தருவதாகமீஞ்சோன் சொல்லியிருந்தான்.
இப்போதும் மேகம் கவிழ்ந்துதானிருந்தது. மழை தொடங்கியிருந்தது.
“தீதீ… ரொம்ப குளிருது”
“இல்லல்ல… அன்னைக்கு நல்ல வெப்பம். மாடுகளெல்லாம் மேய்ச்சலுக்கு போயிருந்துது. நாங்க தண்ணீ எடுக்க கௌம்பீட்டோம். மெல்லிசா ஒழுகிற கசிவு நீர் அன்னைக்கு வேகமா வந்துச்சு. வைக்க வைக்க எல்லா பாத்திரமும் ரொம்பிக்கிட்டே இருந்துச்சு”
அவள் பேசட்டும் என்று காத்திருந்தனர்.
“எல்லாமே முடிஞ்சாச்சு மீஞ்சோன்…”
அவன் புரியாமல் பார்த்தான்.
ஏதோ புரிந்தவர்போல படகோட்டி சுருட்டை ஆழமாக இழுத்து புகை விட்டார்.
“எங்களை விட காட்டாறுக்கு வேகம் அதிகம்”
ஓடி போய் அடுப்பை அணைத்து விட்டு வந்தான் மீஞ்சோன்.
“வெள்ளம் வடிஞ்சிடுச்சா…”
“இல்லை..”
“இல்லேன்னா..,”
“இதோ இந்த இடத்தில்.. இதே இடத்திலதான்.. எங்களோட வீடு… மாடு… வாழ்க்கை.. உசிறு.. எல்லாமே.. எல்லாமே..” அவள் சொற்களால் அள்ள முயன்று பின் சொல்லிழந்து வெறுமே இருந்தாள்.
ஆறு மழையில் பேரூரு கொள்ளத் தொடங்கியிருந்தது.
***
-கலைச்செல்வி