எல்லா நீ கொடுக்கற எடந்தா மருமவனே

மெல்ல ஆரம்பித்தார் சின்னு அப்புச்சி. போட்டாலும் தெரியாத கண் கண்ணாடியை வீட்டிலேயே வைத்து விட்டபடியால், மருமகன் தூணிலும் இருப்பார் என்னும் நம்பிக்கையில் பஞ்சாயத்தை துவக்கினார்.

சொல்லப் போனா பரமசெவங் கழுத்துப் பாம்பு கதயேதான். ஆரு ஆருக்கு எடம் கொடுங்கறாங்க, என்னென்ன ஆட்டமாடுறாங்க, ஒண்ணுமே புரியரதில்ல” உத்தேசித்ததை விட வாசகமும் உணர்ச்சியும் பெரிதாகிவிட்டதால் மூச்சு வாங்கிக் கொண்டே தொடர்ந்தவர் முத்துத் தாத்தா

”இத இப்படியே விட்டுடக் கூடாதுடா, நீ தாங்குறதால தான் அவெ இந்த ஆட்டம் போடுறான். இன்னிக்கே ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகோணும்

நாளைக்கு தான் இருப்போமோ மாட்டோமோ எனும் கவலை முத்தாய்ப்பாய் முடித்த வேலுத் தாத்தாவுக்கு.

வேலுத் தாத்தா மட்டுமல்ல அவர்கள் மூவருமே இன்றைக்கோ நாளைக்கோ என எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள்தான். தனித்தனி விவரணைகள் தேவைப்படாவண்ணம் அமைந்த கிராமத்து ஜீவன்கள். பெரும்பாலான முடிகள் கொட்டிப்போய் எண்ணெயே காணாத தலை, வாயிலிருக்கும் பற்களின் எண்ணிக்கைக்கும் கைவிரல்களின் எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை, கொஞ்சம் வெசயா காத்தடிச்சாலே தள்ளாட்டம் வருமோ என சந்தேகம் கொள்ளவைக்கும் ஆகிருதி, ஆனால் வம்பாடு பட்டு உரமேறிய உறுதியான உடம்பு. பழுப்பு வேட்டி, சட்டையில்லா வெறும் மேலில்,வாங்கும் போது வெள்ளையாக இருந்த கைத்தறித் துண்டு.  

அது சாயங்கால வேளை. தறிக்குடோன்கள் தங்கள் இளைப்பாறுதலை முடித்துக்கொண்டு மீண்டும் இரைச்சலை துவங்கி சற்று நேரம் ஆகியிருந்தது.  

எப்படி எண்ணினாலும் நூறு வீடுகளைத் தாண்டாத எங்கள் கிராமத்தில், பெரியவூடு எனும் கெளரவம் பெற்ற அந்த வீட்டின் ஆசாரத்தில் பஞ்சாயத்தைக் கேட்டு பைசல் பண்ணும் தோரணையில் இருந்தவர் பெரியவூட்டு அப்பு. வேலுத் தாத்தா குற்றம் சாட்டியதைப் போல அவருக்கு ஒன்றும் தாங்கும் வயதில்லை. அங்கு கூடியிருந்தவர்களின் வயதுக்கு ஒன்றிரண்டு கூடக் கொறைய இருக்கலாம் அவ்வளவுதான்.அந்த ஊரிலேயே பெரும் சொத்துக்காரராய் இருந்தபோதும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து விட்டவர்.அதற்குக் காரணம், ஜாதகக் கோளாறு என்றும் காதல் தோல்வியென்றும் பல கதைகள் புழக்கத்தில் இருந்துகாலப்போக்கில் காணாமல் போயின.

பெரியவூட்டுக்கு கிழக்குப் பார்த்த தலைவாசல், தொடரும் நடவையின் இடப்பக்கம் சமையல்கட்டு தொட்டபடி நீண்ட ஆசாரம், நடவைக்கு வலப்பக்கம் இரண்டு பெரிய அறைகள். பாத்திர பண்டம் வைக்க, விருந்தாளி தங்க என நேரத்துக்குத் தக்கபடி உபயோகம். நடுவே அமைந்த நடவை நேரே பொடக்காலியில் போய் முடியும்.

தென்னங்கீற்று வேயப்பட்ட நடவையில் போடப்பட்டிருந்த இரும்புச் சேர்களில் பிராது கொடுக்க வந்தவர்கள்அமர்ந்திருந்தனர். எதிரே ஆசாரத்து திண்ணையில் அப்பு.அவர்கள் மூவரும், பைசல் பண்ணவேண்டிய பொறுப்பில் இருப்பவரும் பால்யம் தொட்டே ஒண்ணா மண்ணா பழகியவர்கள். மற்றவர்களுடன் ”ஒண்ணா மண்ணா” இல்லாவிட்டாலும், அப்புவுடனாவது அவரின் அனைத்தும் அறிந்த ஆத்மனாக பழக வாய்க்கப்பட்ட இன்னொரு ஜீவனும் இவர்கள் குழுவில் உண்டு. அநேகமாய் பஞ்சாயத்தே அவர் மீதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்தப் பஞ்சாயத்து மட்டுமல்ல இதைப் போல நாலைந்து பஞ்சாயத்துகள் அந்த ஆசாரத்தில் முன்னரே நடந்திருக்கின்றன. எல்லா சமயங்களிலும் பிராது ஒருவர் மீதுதான். அவர் மான். துள்ளும் வயதல்ல. எழுவதை நெருங்கிவிட்டது. கை நடுங்குவதில்லை, காசும் கேட்பதில்லை என்னும் தகுதிகளால் எங்கள் ஊர் நாவிதராகத் தொடர்பவர். கொஞ்சம் நல்ல மூடு இருந்தால் ஆளு யாரு என்னன்னு பாக்காம, வினையானாலும் செரின்னு வெளயாடக்கூடியவர். பெரும்பாலும் அவரது லீலைகள் பிராது கொடுக்க வந்த இம்மூவரிடம் மட்டும்தான் என்பதால் ஊர் அதைக் கண்டுகொள்வதே இல்லை. பிரச்சனையோ பைசலோ அது இந்த ஞ்சு பேர்த்துக்குள்ள மட்டும்தான். மாரன் விசயத்தில் ஊரோ அல்லது வேறு எவரோ தலையிடாமல் இருப்பதற்கு அப்புவுடனான அவரது நெருக்கத்தைத் தாண்டி, இன்னுமொரு ஒரு முக்கிய காரணம் உண்டு.

**

சில வருடங்களுக்கு முன்பு உள்ளூர் மாரியம்மன் கோவில் ஆண்டுவிழா. என்னிக்கும் இல்லாத திருநாளாய் அவ்வருடம் இரவு ஆர்கெஸ்ட்ரா ற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ராசுவுக்கோ தான் ஒரு கவிப்புயல் எனும் எண்ணம். பேப்பர் படித்தாலே சபாஷ் போடும் ஊரில் அம்மன் மீது ஒரு கவிமாலை சாற்றுவதன் மூலம் தன் பெருமை மேலும் கூடும் என்ற கணக்கில்தான் ஆர்கெஸ்ட்ராவுக்கான செலவின் பெரும்பங்கை தந்திருந்தார். அதுவே “கச்சேரிக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமுசம் ஆத்தாவ பத்தி கவித சொல்லிக்குறேன்” என்ற அவரின் கோரிக்கைக்கு, அது என்ன ஏதென்று தெரியாமலேயே அதுக்கென தாராளமா” என விழாக் குழுவினரை இசைய வைத்தது.

ஊரே ஆண்டுவிழாவில் திளைத்திருக்க, தமிழன்னை மீது ஒரு பக்கம், தற்புகழ் மறுபக்கம், இறுதியாக அம்மனின் அருள் போற்றும் அரைப்பக்கம் என வெட்டியும் ஒட்டியும்உருவாகியிருந்து கவிதை. தன் தயாரிப்பில் தானே கர்வம் கொண்டிருந்த புலவருக்கு திடீரென தன் திருமுகம் நினைவுக்கு வந்தது. ஐந்தாறு நாள் தாடியும் அதன்போக்கில் வளர்ந்திருந்த மீசையும் தன் புலமையின் கம்பீரத்துக்கு சற்றுக் குறைவானதாகத் தோன்ற, அங்கே பிடித்தது வினை.ஆலையில்லா ஊருக்கோ அல்லது ஆத்திர அவசரத்துக்கோ எப்படிப் பார்த்தாலும் அவருக்கிருந்த ஒரே வாய்ப்பு மாரன்தான்.ஆளனுப்பினார். அன்றைக்குப் பார்த்து மாரனுக்கும் அவசர செலவுகள் இருந்தன அதற்குரிய எதிர்பார்ப்புகளோடு வந்தார். தீட்டிய கத்தியும் தேவைப்படும்போது புகழுரைகளும் வாத்தியார் மனம் குளிரப் போதுமானதாக இருந்தன. மழிக்கப்பட்ட முகத்தில் பல வருடங்களுக்குப் பின் தலைகாட்டியிருந்த முறுக்கு மீசை ஒரு ராஜகளையைத் தந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. கவி தோன்றிய காலந்தொட்டு, பரிசில் வேண்டி காத்துக் கிடந்து சோர்வு தட்டிய மரபில் தான் வந்ததாய் நம்பிக் கொண்டிருக்கும் ராசுவுக்கு, இந்த திடீர்க் கம்பீரம் மண்டைக்கு ஏறியது. அதுதான் “சாமீ, காசுங்க” எனப் பணிவாக நின்றிருந்த மாரனை நோக்கி, ஒரு பேரரசர் பொற்காசுகளைப் போடும் தோரணையில் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை சுண்டி எறிய வைத்தது.

இரவு, ஆர்கெஸ்ட்ராக்காரர்கள் ஒவ்வொரு வாத்தியத்தையும் தனித்தனியாகவும் பின்னர் சேர்த்தும் வாசித்துப் பார்த்து ஒலி அளவை சோதனை செய்து முடித்த தருணம். மாரியம்மன் கோவில் திடலில் ஊரே துப்புட்டு தலகாணியுடன் கூடியிருந்தது. ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்தபடி விழாக்குழுவினரின் ஆசிகளுடன், முன்னறிவிப்பின்றி மேடையேறினர் ராசு. “இவனெப்படா பாட்டுப் பாடப் போனான் ?” எனச் சிலரும் “இருக்கட்டும். பஞ்சப்பாட்டுல்லாப் பாடுவானே” எனப் பரவலாக எல்லோரும் பார்த்திருக்க “தீந்தமிழ்த்தாயே என்னைத் தேடி வந்தாயே” என அடைத்துக் கொண்ட குரலில் ஆரம்பித்தார் ராசு. ஒவ்வொரு வரியையும் இரு முறை சொன்னபோதும், சம்பந்தமில்லா இடங்களில் நிறுத்தி கூட்டத்தைப் பார்த்தபோதும், டிவியில் பார்த்தது போல கைதட்டத் தெரியாத சனங்களை மனதுக்குள் சபித்தவாறே அடுத்த வரியை வாசித்தார்.

மொத்தமாக அரைப் பக்கம் கூட படித்திருக்க மாட்டார், அதுவரை அவரைக் கவனிக்காத போதும் குறைந்தபட்சம் மேடையைப் பார்த்து அமர்ந்திருந்த சனங்களின் கவனம் மேடைக்கு நேர் எதிரேடைசி வரிசையில் குவியலானது. தன் கவிமழையில் தானே நனைந்து கொண்டிருந்த ராசுவுக்கு விவரம் புரிய சிறிது நேரமானது. கடைசி வரிசையில் வெறும் மேலுடன், இடுப்பில் இருக்கவேண்டிய பழுப்பு வேட்டி தலையில் உருமால்கட்டாக மாறியிருக்க, எப்போதுமே கக்கத்தில் இடுக்கியிருக்கும் துண்டு இடுப்பில் வேட்டியாகக் கட்டப்பட்டிருக்க, அதை வெற்றி கொண்ட மிதப்பில் கோமணம் கொஞ்சம் தெரிய ஆடிக்கொண்டிருந்தவர் நம்ம மாரன். அதுவரைக்கும் சுத்துவட்டாரங்களில் கரகாட்டக் கோஷ்டியோடு சேர்ந்து, ரேடியோ பாட்டுக்கு, ஒலியும் ஒளியும் ஒளிபரப்பாகும் சமயம், மாரியாத்தா கோவில் மத்தாளத்துக்கு என பல சந்தர்ப்பங்களில் பலரும் ஆடியதுண்டு. ஆனால் ஒரு பேச்சுக்கு அதுவும் கைதட்டலை மட்டுமே எதிர்பார்த்து புனையப்பட்ட ஒரு கவிதைக்கு ஒரு மனிதன் ஆடியது அதுவே முதல் முறை. அதுவும் எப்படி, ராசு வாத்தியார் குரலின் ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்தபடி தன் கையையும் காலையும் ஏற்றி இறக்கி அவர் நிறுத்தினால் தானும் அப்படியே சிலையாகி என தேர்ந்த ஒத்திகையில் கூட அமையப்பெறாத ஒத்திசைவு அன்று மாரனுக்கு வாய்த்தது. உள்ளூர் மக்கள் மாரனை ரசித்தது கூட ராசுவுக்கு பிரச்சனையில்லை. கூடியிருந்த கூட்டத்தில் பாதி சனம் மேடைக்கு முதுகு காட்டி மாரன் ஆடிக் கொண்டிருந்த திசை நோக்கித் திரும்பி அமர்ந்த போதும், கலிலியோவுக்கு கல்லடி துவங்கி, கழுதைக்கு கற்பூரம் வரை தன் மனதை அவர் தேற்றிக் கொண்டு மேடையில்தான் இருந்தார். வெளியூர் ஆர்கெஸ்ட்ரா பார்ட்டிகளும் வாத்தியங்களை சரிபார்ப்பதை விட்டுவிட்டு மாரனின் செய்கையை ரசித்ததும், உட்சகட்டமாக பெண் பாடகியொருவர் சார் நீங்க வாசிங்க அப்பத்தான் அவரு ஆடுவார் என நேயர் விருப்பம்போல கேட்டதும், தனக்கு மட்டுமல்லாது தன் கவிமரபுக்கே இழுக்காகத் தோன்ற மேடையை விட்டு நீங்கினார் ராசு. ஓரிரு வரிகளுடன் தப்பிய தமிழன்னையும், ஒரு வரிகூட சேதமின்றி காக்கப்பட்ட அம்மனும் சேர்ந்துதான் அடுத்த நாள் பஞ்சாயத்தில் மாரனைக் காத்தார்கள்.

மப்பு எச்சாப் போச்சுங் சாமீ என பஞ்சாயத்தார் முன்னிலையில் மாரன் மன்னிப்புக் கேட்கும் தோரணையில் கூற, ஓரிரவில் அவ்வூர் பிரபுதேவா ஆகிப்போன மாரனுக்கு சப்போர்ட்டாக ஆனது ஆயிப்போச்சு வுடுங்க”, இதெல்லாம் ஒரு நாயமா?”, ஊர்ப் பொதுமேடைல ஆரு வேணும்னாலும் பேசலாம்னா ஆரு வேணும்னாலும் ஆடலாமுல்ல” ரீதியில் சில இளவட்டங்கள் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ராசுவின் முன்னாள் மாணவர்கள் என்பதாலும், அவர்களால் பழைய குப்பைகள் கிளறப்படலாம் என்பதாலும் பெரிய மனதுடன் ராசுவும் விட்டுவிட்டார். உண்மையில் சுண்டி எறியப்பட்ட ஐந்து ரூபாய் நாணயங்கள் ஆடிய ஆட்டம் தான் அது.

அதுவே மொதலும் கடேசியுமாஊர்ப் பொதுப் பஞ்சாயத்துக்குப் போன மாரன் விவகாரம். அதற்குப் பிறகு அவர் மீதான சில்லறை பிராதுகளெல்லாம் “அத வுடுப்பா அவனொரு ஆளுன்னு” என வெளிப்படையாகவும் மனதுக்குள் “என்னிக்கு எவன் மானத்த கெடுப்பானோ” என பயத்துடனுமே தள்ளப்பட்டன. மாரனும் தன் லீலைகளை சொந்த வூட்டுலயே சப்போட்டு இல்லாத ஆட்களிடம் மட்டுமே அளவோடு வைத்துக் கொண்டார்.

*

ஊரிலேயே அப்படித் தேறுபவர்கள் சின்னு, முத்து மற்றும் வேலு மூவர்தான் என்பதால் முறைவைத்து அவர்களிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தார் மாரன். இம்மூவரையும் மதிக்கும் ஒரே ஆள் அப்பு என்பதாலேயே அப்பஞ்சாயத்துகள் அனைத்தும் அவரிடமே வந்தன. அனைத்துக்கும் ரே விதமான தீர்ப்புதான். அதுவும் வரிசை மாறாமல். முதலில் மாரனுக்கு ஆதரவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு மெல்லிய குரலில் சமாதானம் சொல்லுதல் செரி வுடு, அவம்புத்தி அப்புடி – எனும் ரீதியில். ஒரு கட்டத்தில் கடும் கோபம் கொண்டு மாரனுக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டு – இப்போது பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்றல். மூன்றாம் கட்டம் தீர்ப்பு மாரனுக்கு ஐம்பது ரூபாய் அபராதம். இறுதியாக சமாதானப் படலம். தண்டம் விதிக்கப்பட்ட ஐம்பது ரூபாய்க்கு அஞ்சு சோடாக் கலரோ, அஞ்சு டீயோ கூட்டுக்கு காராப்பூந்தி சகிதம் மாரனுடன் குடித்தல் – இச்சமயம் மாரனின் பெருமைகளை புகழ்வதும் அவரும் ஏனுங் நீங்க இதப்போயி என வெட்குவதும் முக்கியம்.

இப்படி வரிசை தவறாது நடைபெற்று வந்த சுழலில் அம்முறை மாட்டிகொண்டவர் முத்து.

*  

”அப்புறம் எல்லாரும் என்ன இந்நேரத்துல வந்திருக்கீங்க?” பொதுவான கேள்வியைக் கேட்டுவிட்டு, முத்துவைப் பார்த்து சினேக சிரிப்பொன்றை உதிர்த்தவாறே ”ஒறம்பரைங்க எல்லாம் ஊருக்குப் போயாச்சா?”, என தொடர்ந்தார் அப்பு.

முகத்தைத் எதிர்த்திசையில் திருப்பிக் கொண்டார் முத்து. உடன் வந்திருந்த சின்னுவும், வேலுவும் மட்டும் மையமாகத் தலையசைத்தனர்.

“செரி போகட்டும். வந்த விசியத்தை சொல்லுங்க, கேப்போம்” உத்தரவு கொடுத்தார் அப்பு

”விசியமென்ன விசியம். இன்னிக்கு காத்தால நம்ம முத்து, இந்த இவன செரைக்கறதுக்கு கூப்பிட்டுருக்கான்” விவரிக்கத் துவங்கினார் சின்னு.

“இந்த இவன் னா எவன் ?” இடைமறித்தார் அப்பு.

“இந்தா மருமவனே, இந்த வெளையாட்டெல்லாம் வேணாம். ஒனக்குத் தெரியாதா? அவந்தான் மாரன்” தூணிலிருந்து திரும்பி அப்புவின் குரல் வந்த திசையை ஓரளவு கணித்துபேச்சைத் தொடர்ந்தார் சின்னு.

அவர் விசயத்தை கூறத்தொடங்கவும், பொடக்காலி வழியாக மாரன் நுழையவும் சரியாக இருந்தது. அவர்களின் முகத்தையே பார்க்கக் கூசியவராக தரைக்கு வணக்கம் வைத்தவாறே வந்துகுத்தவைத்து அமர்ந்தார் மாரன். விசியம் தெரிஞ்சா அப்பு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாறே எனும் மனக்கவலை வேறு.

சின்னு சொல்லிய விசயம் இதுதான்

முத்துத் தாத்தா ஷேவிங் செய்ய அழைக்க, தன் ஆஸ்தான ஆயுதங்களுடன் அவர் வீட்டுக்குப் படையெடுத்த மாரன், அவர் வீட்டுப் பொடக்காலியில் இருந்து இரண்டு இட்டிலி தின்று, அவருக்கென ஒதுக்கப்பட்ட போசி வழிய வழிய வரக்காப்பியை குடித்துவிட்டு தொடர்ந்த சிறு ஏப்பத்துடன் போன வேலையை துவங்கியுள்ளார். காவாசி வரை சரியாக போய்க் கொண்டிருந்த போதுதான் தன் வேலையைக் காட்டியுள்ளார் மாரன்.

“சாமீ, செத்த அப்படியே இருங்க. இந்தா ஒரு நிமிசத்துல வந்துர்ரேன்” எனச் சொல்லி பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டு திரும்பி வந்தது ஒரு பீடீ குடிக்கும் நேரத்தில். பாதி காய்ந்த நுரையுடன் காத்திருந்த முத்துவும் செரி ஏதோ அவசர சோலி போல என வேறுவழியில்லாத பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் ”சாமீ செத்த…” எனத்துவங்கிய மாரனைப் பிடித்து விசாரித்தார்

“என்னடா வெளயாடறயா. துக்கு ஞ்சு நிமிசம்? அதுகுள்ள என்ன கோட்டையா கட்டப்போற ? எல்லாம் முடிச்சிட்டு போகலாம்

“சாமீ, நேத்தி ராத்திரிலிருந்து ஒரே வயித்துப்போக்குங்க. இன்னும் நின்ன பாடில்ல அதான். இதோ ஒரு அஞ்சே நிமிட்டு வந்திர்ரேன். உங்களுக்கு நம்பிக்கை இல்லீனா, நம்மூட்டு பொடக்காலி கக்கூசுலயே போலாம். ஆனா, நீங்க போறதிலயே நானும் போனா, அது அவ்வளவு மருவாதியா இருக்காதுங்களே. நா குட்டைக்கே போயிட்டு வந்துர்ரேனுங்

காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை முத்துவுக்கு. இப்படி அஞ்சு அஞ்சு நிமிடங்களாக நின்று நிதானித்து ஷேவிங் பண்ணி முடிக்கும் போது மதியமாகி விட்டது.

“செரி வுடுங்கப்பா, அவனுக்கேதோ வவுத்துக் கோளாறாட்டந் தெரியுது. இதப் போயி ஒரு நாயமுன்னு பேச வந்துட்டீங்க”

அதுவரை பேசாதிருந்த முத்து, அப்புவின் சமாதானத்தில் கடும் கோபம் கொண்டு பேசலானார்.

“நானும் அப்புடித்தான் பெரும்போக்கா நெனச்சேன். ஆனா, செரச்சு முடிச்சிட்டு எங்கூட்லதான் மதியச் சோறு தின்னான். ஒரு இழுப்பு இழுக்கறதுக்குள்ள ஒம்போது தடவ பேளப் போனவன், முளுசா மூணு சட்டி சோறு தின்னு முடிக்கறவரைக்கும் இருந்த எடத்த வுட்டு அசையிலையே. அதெப்படி செரச்சு முடிச்சதுமே சுவிட்சு போட்ட மாதிரி நின்னு போயிடுமா ?”

தன் வாக்கு சாதுர்யத்தை தானே மெச்சியவராக அப்புவை பார்த்தார் முத்து.

”செரிப்பா, இப்ப அதுக்காத் தொட்டு குட்டைல போயி நாம கெளரியா பாக்கமுடியும். கெரகத்த ஊரே அங்கதாம் போகுதுஎது எவனுதுன்னு எப்புடித் தெரியும்” அப்பு சொல்லி முடிக்கவும் கொஞ்சம் அமைதி.

மாரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

இன்னிக்கு அவனவன் வூட்டு வரக்காப்பிதான் என மற்ற இருவரும் தளர்ந்தபோது, தன் இறுதி அஸ்திரத்தை எறிந்துவிடுவதென்ற முடிவுடன் மீண்டும் ஆரம்பித்தார் முத்து.

“அவன் என்ன செய்ஞ்சாலும் சப்போட்டு. சரி இதுக்கென்ன சொல்லுறீங்கன்னு பாப்போம். நாலஞ்சு நாள் தாடிய அரநாள் முச்சூடும் செரச்சது கரீட்டுன்னு சொல்லுறீங்க. நானும் ஏத்துக்கறேன். தின்னதுக்கப்புறம் நானொருத்தன் அங்க நிக்குறேங்குற நெனப்பேயில்லாம இவன் என்ன செஞ்சான் தெரியுமா? “

இந்த விசியம், கூட வந்த இருவருக்குமே தெரியாத கிளைமேக்ஸ் திருப்பம் என்பதால் அவர்களும் ஆர்வம் மேலிட கவனிக்க, முத்து தொடர்ந்தார்

“வூட்டுக்குள்ளிருந்து வெளில வந்த எம்பட கடேசீப் பேத்திய நிறுத்தி “உங்க சின்னப்பத்தா எங்க?” ன்னு கேட்குறான். இந்தக் கேள்வி அப்புவை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

முத்து தொடர்ந்தார் விடியக் காத்தால மொத பஸ்சுக்கே சின்னப்பத்தா ஊருக்கு போயிருச்சு”ன்னா எம்பேத்தி. அதுக்கு இவன் “என்ன ஊருக்கு போயிருச்சா? அதெப்படி நான் கோழி கூப்புட அஞ்சு மணிலிருந்து வூட்டு வாசப்படில தானே ஒக்காந்திருந்தேன் எம்பட பார்வைக்கி படாம எப்புடி போச்சு? மறுக்கா எப்ப வரும் ?” அப்புடி இப்புடின்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்குறான். இல்ல நாங் கேட்குறேன் எங்கொளுந்தியா வயசென்ன, இவன் வயசென்ன? ஒரு மட்டுமருவாதி இல்லாம இப்புடி விசாரிக்கறது நாயமா ? சொல்லுங்க.

மாரன் விசாரித்த அந்த சின்னப்பத்தா முத்துவின் கொழுந்தியா கல்யாணி. அதே ஊரிலேயே பிறந்து, அவள் காலத்து அழகிகளுள் ஒருத்தியாகத் திகழ்ந்து, அவ்வூர் வழக்கப்படி, பிடிக்குதோ இல்லையோ பக்கத்து ஊருக்கு வாக்கப்பட்டு, நல்லது கெட்டதுக்கு மட்டுமே வந்து போகும் இன்றைய கல்யாணிப் பாட்டி.

கொஞ்சம் அதிர்ந்து போய் உக்கார்ந்திருந்த அப்புவுக்கு சடக்கென கோபம் வந்தது. “ஒண்ணத்துக்கும் லாயக்கில்லாத நாயி, உன்ன இன்னிக்கு என்ன பண்ணுறேன்னு பாரு“ என பெருங்கோபத்துடன் கத்திக்கொண்டு எழுந்த அப்புவின் வாயிலிருந்து அவர் இத்தனை வருடங்களாக அரும்பாடு பட்டு சேர்த்து வைத்திருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளும் மாரனை நோக்கிப் பொழியலாயின. இடையிடையே துண்டை முறுக்கி ஓரிரு அடிகள் வேறு. ஒரு வாய் டீ க்கும் சோடாக்கலருக்கும் ஆசப்பட்டு வந்த சின்னுவும் வேலுவும், என்றைக்குமில்லாத இந்த தாண்டவத்தால் அதிர்ச்சியாகி,உட்காந்திருந்த சேருக்கே தெரியாமல் நழுவினர். மனசு ஆறாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முத்துவையும் இழுத்துப் போனார்கள்.

“சாமீ போயிட்டாங்க … அவங்க போயிட்டாங்க” என ஓரிரு முறை மாரன் சொன்ன பின்னர்தான் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த அப்பு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த வசைமழை பொழியலானார்.

“அதெப்புடிடா, கல்லாணி போனது உனக்குத் தெரியாம போகும் ? உம்பட ஊட்ட தாண்டித்தான பஸ் ஸ்டாப்புக்கு போகோணும். பொழுதோடையோ காலைலயோ எந்நேரம்னாலும் நாம்போயி சித்தங்கூரம் இருக்காம, என்னிய பாக்காம இதுவரைக்கும் போனதில்லைல. இப்ப மட்டுமென்ன திடீர்ன்னு? செரியா கவனிக்காம, எனக்குத் தாக்கலும் சொல்லாம, போயிட்டாங்கற. இந்த வெளங்காப் பெய ஊர்ல ஒரு பழம மனசார பேசமுடியுதா? அன்னிக்கும் அப்புடித்தான், முடிவாகுற சமயத்துல சகுனம் செரியில்ல, தடவழி செரியில்லைன்னு கல்யாணப் பேச்சயே நிப்பாட்டி, எம்பட வாழ்க்கை கெடுத்தானுவ. கட்டக் கடேசிக்கி எப்பியாச்சும் பாக்கவாவது கொடுப்பன இருந்துச்சு. ஒன்னால இந்தவட்டம்அதும்போச்சு. ஒனக்கெல்லாமே வெளயாட்டு அப்புடித்தானே ?.“

தளர்ந்து அமர்ந்த அப்பு தொடர்ந்தார் ”இனி எப்ப வருவா? அடுத்த நோம்பிதானா ? தெரியாது. அதுவரைக்கும் நா இருப்பேனா ? தெரியாது.” சிந்தனையுடன் மெளனமானார்.

கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு நெருங்கிவந்த மாரன் அப்புவின் உள்ளங்காலை சுரண்டினார்

டே அப்பு, அடேய் இங்க பாரு…”

சோர்வுடன் நிமிர்ந்தார் அப்பு.

காலீல செரக்கப்போகையிலதான் பாத்தேன். அவுங்க வூட்டுல ஒறம்பரை ஒருந்தருமில்ல. நா நோட்டமுடுறத தெரிஞ்சிக்கிட்டுத்தானோ என்னவோ, நெம்ப நக்கலா முத்து பேசுனாப்புல. அதான் ஆனது ஆகட்டும்ன்னு அர நா பொடக்காலிலயே அவன ஒக்காரவெச்சேன். செரி இப்ப என்ன, அடுத்தவாட்டி செரைக்கறப்போ முத்துப்பெய கழுத்துல ஒரு இழுப்பு இழுத்தா தானா கல்யாணி வரப்போறா. இதுக்குப்போயி வெசனப்பட்டுக்கிட்டு புரியாமல் தன்னைப் பார்த்த அப்புவை நோக்கி, முகத்தை ஒண்ணுந்தெரியாத பாவனையில் வைத்துக் கொண்டு ”என்ன இழுத்தறலாமா?” எனக்கேட்ட மாரனின் கண்களில் சிரிப்பு. அவரை நோக்கி துண்டை வீசியவாறே தானும் சிரிக்கத் துவங்கினார் அப்பு.

பாவம் முத்துவுக்கு மட்டும் “யாரு செவன் ? யாரு பாம்பு” ங்கற கேள்விக்கு இன்னிக்கு வரை வெடையே கெடைக்கல.

***

காளீஸ்வரன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *