இந்தத் தாழ்வாரம் எங்கள் வீட்டில் பல காலங்களாக அழியாமல்நிலைத்து
நிற்கும் பரம்பரைச் சொத்து, வாப்பா தான் இதைக் கட்டினார்.

தாழ்வாரத்தைச் சுற்றி உம்மா குரோட்டன் மரங்கள் வைத்திருந்தாள்.
அடர் சிவப்பில், பச்சையில், இளம் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாய் வளர்ந்திருந்தன.

வாப்பா பெரிய முதலாளி டவுன்னில் பல சரக்கு கடை வைத்திருந்தார். வாப்பா கடையை மூடிய பின்னரும் கல்லாவில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிவிட்டுத்தான் வருவார், வாப்பாவுக்கு தீடீரென்று கடையடி அலுத்து விட்டது போலும்.

அதன் பின்னர் வாப்பாவின் நண்பர்கள் ஒன்று கூடும் இடமாக இந்தத் தாழ்வாரம் மாறிவிட்டது. இன்னொன்று அவருக்கு அடிக்கடி தேத்தண்ணி குடிக்க வேண்டும், கூட கதைக்கும் போது அவருக்கு இருமல் வரும், நெஞ்சைத் தொட்டுத் தொட்டு இருமும்போது நீண்ட கிளாசில் சூடாக ஏதவது குடிக்க வேண்டும், அதற்காக அவர் சிகரெட் எல்லாம் புகைக்க மாட்டார், உம்மாதான் இதை சற்றுப் பெருமிதப் பட்டுக் கொண்டு சொன்னாள்.

வாப்பாவுக்கு பெரிய நண்பர்கள் பட்டாளம் எல்லாம் கிடையாது. இரண்டு, மூன்று நெருங்கிய நண்பர்கள்- அவர்களுக்குத் தெரியும் எங்கள்
வீடு மிகவும் சௌகர்யமானது எல்லா விதத்திலும்.
அசர் தொழுகைக்குப் பின் இங்குதான் அடைக்கலம்.
‘லொட லொடா’ சைக்கிளைத் தள்ளிக் கொண்டு இவர்கள் கேட்டைத் திறக்கும்
போது வாப்பாமிக கம்பீரமானவராக மாறிவிடுவார். தன்னை ஒரு கதாநாயகன் ஆக சித்தரித்துக் கொள்வார்.

பேச்சின் மீது அவர்களுக்கு தீராத காதல் இருந்தது, எத்தனை விதமான பேச்சு திகட்ட சுவை அதனூடு மேவித்திரியும் சிரிப்பு! பேச்சுதான் அவர்கள் தேர்தெடுத்த ஆயுதம், அதனுள் தொலைந்து கொண்டால் பிறிதொன்றைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.

உம்மா பிளேன் டீ ஊத்திக் கொடுப்பார்.
பச்சை இஞ்சியை தட்டி, அளவான சாயத்துடன் கருப்பட்டி அல்லது சீனி யுடன் பிளேன் டீ் அவ்வளவு இதமாக இருக்கும்.
சில பொழுதுகளில் தின்பண்டங்கள் கூட உண்டு.
வாரப்பம், பொரித்த கடலை, பருப்பு வடை, தட்டு ரொட்டி ..
உம்மாவுக்கு சலிக்காது ..,

சமையல் கட்டு அவள் ஆண்டு கொண்டிருக்கும் சாம்ராஜ்யம் .

வாப்பாவிடம் அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாது.
ஏன், எதற்கு என்ற கேள்விகள் கிடையாது, பாரை மீன் தலையை மிளகுக்கு ஆக்கி,
அதில் மீதம் வந்தால்கூட‘என்ன இவர்? சரியாச் சாப்பிடல’ என்று மனம் நொந்து கொள்ளுகிற ரகம்.

உம்மாவுக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும், வாப்பா
அடிக்கடி வெளியூருக்குப் போகும் வேலை வரும்.
வாப்பா ஊரை விட்டு வெளியே போய் வந்தால்,” உம்மாவுக்கு பிடித்த மாதிரி மஞ்சளும் பச்சையும் கலந்த அளவாக பழுத்த மாம்பழம் வாங்காமல் வரமாட்டார். அவள் வாப்பாவைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒன்று போதுமாக இருந்தது.

உம்மாவின் ஜாகை முன் ஹாலை தாண்டி உள்ள குசினிதான். “எங்க புள்ள உம்மா இருக்கவா?” “இஞ்சால வாங்கோ ” உம்மா குசினிக்குள் இருந்து கத்துவாள். மீன் அறுத்துக் கொண்டு வள்ளலை அரிந்து கொண்டு, பழைய கறிச்சட்டிக்குள் பாணைத் தோய்த்து வாய்க்குள் ஒரு விள்ளலை வைத்துக் கொண்டு.

ஒரு தகர உண்டியலில் அஞ்சு, பத்து என்று காசு போடத் துவங்கினாள். “இல்லாதவியவரக்கோள இல்லங்கொண்ணா … ஹதியாகெண்டு சேர்க்கன் … ”
“ஒனக்கேதும்மா காசி” ..
வாப்பா அங்கெ இஞ்சே போற சில்லறான் ..
காசி வேணுமெண்டா வாப்பாகிட்டே கேளும்மா ..
உம்மா திடுக்கிட்டாள் .பிழையா சொல்லிட்டேனா ?உம்மா பிழைதான் என்று அடித்துச் சொன்னாள் .
“எங்கு வாப்பா இல்லாதவனில்ல புள்ள ..யாவா ரந்தான் ..சேய்புக்க கிடக்கிற காச கொத்தா அள்ளி எங்கும்மாட கையிலே குடுப்பார் ..அவ என்ன உடுப்பு வாங்குறா ?தீவனம் வாங்குறா ?ஆக்களுக்குத்தான் குடுக்கணும் மன நம்முட கையால குடுக்கணும் .”..
“ஆ ரென்டாலும் விரும்பித் தரணும் மன …அடிச்சிப் பறிச்சி கேய்க்குரா ?”
“வாப்பாதானேமா ?”
“அது ஒனக்கு மன.. ”

பளபளக்கும் புது தாள்களை வாப்பா கடையில் இருந்து கொண்டு வருவார்.பெருவிரலில் உமிழ் நீரைத் தோய்த்துக் கொண்டு காசுக் கட்டை எண்ணும் போது ,உம்மாவின் கண்கள் விரிந்து மினுங்கும்.

“இன்னாங்கோ ..அந்த சில்லறை போட்ட உண்டியல ஓடங்கோ …கடக்கி சில்லற தேவைப்படுது ..”
“..அது ..உம்மாட வாப்பா …”
“போகா ..ஓங்கும்மா ஒழைச்ச காசா ? “திடுதிடுவென்ற சிரிப்பைக் கேட்டவுடன், உம்மா நடுங்கிய விரல்களை முந்தானையால் மறைத்துக் கொண்டாள். உண்டியல் உடைக்கப்பட்டு, சில்லறைகளை வாப்பா எண்ணத் துவங்கிய போது ‘சினு சினு’ வென்று மழை பெய்யத் துவங்கியது. சில்லரை எண்ணிய இடத்தில் கை தவறி விழுந்த ஐந்து ரூபாக் குற்றியை உம்மா பொறுக்கி என் உள்ளங்கைக்குள் அழுத்தினாள்.
“அவர் வந்தாக் குடு மன ..”

அன்றும் மழை பெய்து கொண்டிருந்தது.
வலுத்த மழை, வாப்பா வீட்டில் இல்லை, நான் தாழ்வாரத்தின் சிறிய சீமெந்துக்
கட்டில் உட்கார்ந்து
கொட்டுகின்ற மழையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது மழை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒவ்வொன்றாய் கோர்த்துவிட்ட மணிகள் போன்று
மழைத் துளிகள் சேர்ந்து, தேங்கிச் சிறியதும் பெரியதுமாக நீர்க் குட்டைகள் உருவாகி இருந்தன.

இரண்டு தவளைகள் மாறி மாறிப் பாய்ந்து கொண்டிருந்தன.
தாழ்வாரக் கூரையின் வழியே சொட்டிக் கொண்டிருக்கும் மழைத் துளிகளை சேகரித்துக் கொள்ள உம்மா இரண்டு பிளாஸ்டிக் வாளிகளை வைத்திருந்தாள்.

கேட் ஓரமாய் மண் திட்டுக்கள் உடைந்து நீர் பாய்ந்து வரத் தொடங்கியது.
உம்மா மண்ணைச் செப்பனிட்டு நீர் ஓடுவதற்காக வடிகால் செய்து
கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அந்தப் பெண் வந்தார், உம்மாவின் தூரத்து உறவினர்.

உம்மா மண்வெட்டியை சாத்தி விட்டு இந்தப் பெண்ணுடன் தாழ்வாரத்திற்கருகே
வந்தாள்.
அவரும், உம்மாவும் தழ்வாரத்திற்குள்ளே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து
கொள்கிறார்கள்.

உம்மா கண்களால் ஜாடை செய்து என்னை உள்ளே போகுமாறு செய்தாள்.
நான் அரை மனதாக வீட்டிற்குள் நுழைந்து கொண்டேன்.
நீண்ட யன்னல் கம்பிகளுக்கூடே அந்தப் பெண் விசும்புவதும், கண்ணைத்
துடைத்துக் கொள்வதும் கண்ணில்ப் பட்டது.
‘என்ன இவ கொழர்ரா..’
அப்போது நான் முன்னறையில் நின்று மெதுவாக பார்க்கிறேன்.
உம்மா சந்தடி இல்லாமல் உள்ளே நுழைகிறாள்.
அவள் கண்களில் ஒரு பூனைக் குட்டியின் கண்களுக்குண்டான மிரட்சி
இருந்தது.
மெது மெதுவாக படுக்கயறைக்குள் நுழைகிறாள்.
நானும் ஒரு பூனைக்குட்டி போல பின்னாலேயே சென்றேன்.
உம்மா என்னைக் காணவில்லை.
மெத்தையைக் கிளப்பி அலுமாரிச் சாவியை எடுத்து அலுமாரியைத்
திறக்கிறாள்.

உள்ளே வாப்பாவின் வெள்ளைச் சேர்ட்டுகள் வெகு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நெப்தலீன் உருண்டைகளின் வாசம் மூக்கைத் துளைத்தது..
உம்மா மெதுவாக துணிகளைக கிளப்பி அடியில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள்.
இரண்டு, மூன்று தாள்களை உருவிக் கொண்டு மீதியை அப்படியே வைத்தாள்.
உம்மா திரும்பி வந்த போது நான் கதவின் பின்னே ஒளிந்து கொண்டேன்.
யன்னல் வழியாக.
‘உம்மா ஆருக்கு காசி குடுக்கா?’

எட்டிப் பார்த்தேன்.
உம்மா மெதுவாக அந்தப் பெண்ணிடம் பணத்தை நீட்டினாள்.
உம் மாவின் விரல்கள் நடுங்கி கொண்டிருந்தன.
‘அவிர வாப்பாட காசி .. ஒரு மாத்தயால கொண்டாங்கோ…
உம்மா ரகசியமாக கிசுகிசுத்தாள்.

அந்தப் பெண் பணத்தை பத்திரமாக கைகளுக்குள் அழுந்திப் பிடித்துக் கொண்டு வெளியேறினாள்,
‘ அல்லாஹ் ரஹ்மத்து செய்வான்…ஒங்கட
புள்ள குட்டிகள நல்ல வைப்பான்…
‘நான் வாறங்கிளி…’

அடுத்த நாள் வாப்பா உள் அறையிலிருந்து கத்தினார்.
‘செக்குப் போட வச்சு காசி கொறயுதே..
இந்தப் பொடியன் பொழயா எண்ணிட்டானா…
இவன ஒரு கணக்குப் பாக்காம உடுமாட்டன்.’

உம்மா மிகுந்த தைரியத்துடன் தனது முதலாவது பொய்யைச் சொன்னாள்.

‘ போன ஒடனேயே கேளுங்கோ…’
இத்தனை வருட தாம்பத்தியத்தில் இது நிர்ப்பந்தம். உம்மாவுக்கு பொய்யைப் பற்றித் தெரியாது. பொய் தன்னைக் காக்கும் என்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவளும் அல்ல. அவள் கொண்ட ஒரு சிறு கனவு கொடுக்க வேண்டும் என்பதுதான், நம்பிகைக் யொன்றை தான் கொலை செய்து விட்டோம் என்ற மனக் கிலேசம் அவளை எப்படியெல்லாம் ஆட்டி வைத்து விட்டது?

‘நீ எடுத்தா ? ‘ என்று ஒரு கேள்வியையாவது அவர் கேட்டிருக்க வேண்டும்.
தாம், தூம் என்று குதித்திருக்க வேண்டும். இந்தப் பாவத்துக்கு இரண்டு அறை விட்டால் கூட நேர்மையானதுதான் என்று உம்மா கலங்கினாள் .
ஆனால் கேள்விகள் எதுவுமற்ற மௌனம்தான் அவளை வதை செய்தது.

தன்னை ஒரு விநோதமான குறுகுறுப்புடன் அவர் பார்ப்பதாக ஒரு பிரமை உம்மாவிற்கு இருந்தது.

உம்மா பேயறைந்தவள் போலவே இருந்தாள்.
அந்தப் பெண் ‘வருவாளா?’ என்று உம்மா தினமும் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

மழை பெய்கின்ற பொழுதுகளில் ஒரு பாயையும், தலையணையையும் வைத்துக்
கொண்டு தூங்கினாள்.
வாப்பா உம்மாவுக்கு ஏதோ ஜின் பிடித்து விட்டது, மழையைக் கண்டால் உம்மா நடுங்குகிறாள், அவளுக்குஅடிக்கடி காய்ச்சல் வருகிறது,
இரவில் ஏதோ பிதற்றுகிறாள்.
ஏதாவது வைத்தியம் செய்ய வேண்டும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்.

எத்தனையோ மழைக் காலங்கள் போயிற்று, அந்தப் பணம் வரவேயில்லை.
உம்மா ஏமாந்து விட்டாள்.

‘ஆரயும் நம்மி ஆர்ர காசயும் எடுத்துக் குடுத்துடாத புள்ள…’

யன்னலோரம் மழைத் துளிகள் வழிந்து திண்ணையை நனைத்துக் கொண்டிருந்தன, விடாத மழை.
மழைப் பொழுதுகள் இப்போது ரசிப்பதற்கில்லை, உம்மாவை, நடுங்கிய விரல்களை; மிரண்ட கண்களை நினைவு படுத்திக் கொண்டு. உம்மாவுக்கும் மழை க்குமான சம்பந்தம் என்னை பதட்டப் பட வைத்துக் கொண்டே இருக்கிறது. உம்மா கண்ணீரை உதிர்க்கும் போதோ அல்லது உள் இழுக்கும் போதோ மழைதான் அவளுக்கு துணை நின்றிருக்கிறது. மழைக் காலப் பெண்களுடன் அவளுக்கு பேர் தெரியாப் பிணைப்பு இருந்திருக்கிறது. மழைக் காலப் பெண்கள் புற்றிலிருந்து புறப்பட்டு வரும் எறும்புகள் போன்று எங்கிருந்து
புறப்பட்டு வருகிறார்கள் ? ஆழ் உலகொன்றினுள் இவர்கள் ஒண்றினைந்து வாழ்கிறார்களா? என்ன?

பெருத்த மழை தகர ஓட்டில் ‘சட் சட்’டென்று ஒசை எழுப்பிக் கொண்டிருந்தது.
யன்னல் சட்டங்கள் காற்றின் வேகத்துக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தன.
யன்னல் கதவுகளைச் சாத்திவிடலாம் என்று நான் எத்தனிக்கும் போது கேட்டை யாரோ திறந்துகொண்டுஉள்ளே நுழைகிறார்கள்.

எட்டிப் பாரத்தேன்.
‘ஆரு..’
கண்ணுக்கு இடும் மையையொத்த நிறம், அகன்ற கண்கள், ஒடிசல் வாகு.

இவள் இந்த தாழ்வாரத்தின் அருகே ஒண்டி நிற்கிறாள்.
நிமிர்ந்து பார்த்து சிரித்தாள், வெற்றிலை போட்டு சிவந்த பற்களுக்கிடையே அணையாத சுடர் போன்று ஒருசிரிப்பு ஒளிர்ந்து கொண்டிருந்தது .

நனைந்த புடைவையைப் பிழிந்து உதறுகிறாள்,
முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.
நுனியோரம் குடை கிழிந்து நீட்டிக் கொண்டிருந்த கம்பியை மிகுந்த பிரயத்தனப்பட்டு சரிப்படுத்த முனைகிறாள்.

‘ ஓம் ராத்தோவ்… மழ ஒரத்திற்று…கொட கிழிஞ்சிற்று..நிண்டுப் போட்டுப் போறன் ராத்தோவ்…’

யன்னல் கதவை சாத்தி விட்டு வந்தேன்.
தாழ்வாரத்தில் கிடந்த கதிரையில் உட்கார்ந்தாள்.
தலையில் சுமந்திருந்த மூட்டையை இறக்கி நனையாத பக்கம் தள்ளி வைத்தாள்.

இந்தப் பெண்ணை உற்று நோக்குவதில் எனக்கு எந்த விதமான சங்கடமும் இல்லை, இவளிடம் எந்த விதத்திலும் ஏமாந்து விடக்கூடாது என்ற முனைப்புடன் நான் அவளை ஏறிட்டேன் .

அடுப்பில் மரவள்ளிக் கிழங்கு அவிந்து கொண்டிருந்தது,
பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ,தேசிப்புளி சேர்த்து இனி சம்பல் ஒன்று செய்ய வேண்டும். மழைப்பொழுதுகளில் இது வாடிக்கையான விடயம்.
மழை சில நேரங்களில் நெருக்கமற்றுத் திணறலாம், சாப்பாடு அப்படியல்ல.

‘ ராத்தோவ் கெழங்கு அவிக்கயளா?
தேத்தண்ணியோட கெடக்குமா?’

கிழங்கு இவளுக்கு மணத்து விட்டதா?

ஒரு தட்டில் சூடான கிழங்கும், ஆவி பறக்க தேத்தண்ணியும் கொண்டு வந்து வந்து வைத்தேன்.

உறுஞ்சி, உறுஞ்சிக் குடிக்கிறாள்,
‘ இஞ்சி போடலயா ராத்தோவ்..இஞ்சிம் , கெழங்கும் ஹராம் என்காங்க .. ஹராம் எண்டா நாம எப்பயோ மௌத்தாகி இரிக்கோணும்.’
சிரிக்கிறாள்.
நான் சிடுசிடுப்பாக முகத்தை வைத்துக் கொள்கிறேன்.

பிடிமானமில்லாப் பொருளொன்றை மடியில் வைத்துக் கொண்டு அவதிப்படுகிறேன்.
‘இந்த ரோட்டுத் தொங்கல்லான் வேலக்கிப் போய் வந்த..அவ டீச்சர்..அவிர உம்மாக்கு சொகமில்ல படுக்கயில கெடந்த மனிசி ராத்தோவ்.
இப்ப அவட மகனாம், பெரிய உத்தியோகமாம்.
வைத்தியஞ் செய்யண்டு கொழிம்பிக்கி கூட்டிக்குப் பெய்த்தார்.

என்ன வைத்தியம் .. என்ன கொதரத்தோ ..
எல்லோரும் போகத்தானே போறம், போக ஆருக்குத்தான் விருப்பம் சொல்லுங்கோ..’

இந்த மழை நின்று விடாதா என்று வானத்தைப் பார்த்தேன்.
கறுத்த யானைகள் அசைவது போல மேகங்கள் அசைந்து கொண்டிருந்தன.
இருள், இருள் மேல் இருள் படர்ந்த காரிருள்.

 

‘உம்மா போறெண்டதும் டீச்சர் வரொண்ணாம் எண்டுட்டா .. அவட சம்பாத்தியத்துக்கு கட்டாதாம்.’
இந்த மழையை எப்படி வெறுக்கிறேனோ அதை விட இவளை வெறுக்கிறேன்.
என் வீட்டிற்கு வந்து அவித்த கிழங்கைப் பங்கு போட்டுக் கொண்ட இந்தப் பெண்ணை.

ஆனால் இவளுக்கு நான் ஒரு பொருட்டல்ல.
இந்த மழையைப் போல, என் கொல்லைப் புறம் ஆடிக் கொண்டிருக்கும் கறி வேப்பிலை மரத்தைப் போல,
நுனி உடைந்த அவள் குடையைப் போல
எல்லாவற்றையும் விடுங்கள் ,
இதோ அவித்த இந்தக் கிழங்கைப் போன்றுதான் அவள் என்னைக் கருதுகிறாள்.

இந்த அவமானத்தை விழுங்கிக் கொண்டு, படி நுனியில் உட்கார்ந்து கொண்டு இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

‘ எங்காலப் பக்கம்’?
‘ நானா? கோணாவத்தப் பக்கம்…
அவருக்குச் சொகம்மில்ல ,,, மூணு பொடியன்கள்.’
கேட்டிற்கு கீழால் வெள்ளம் சீறிக் கொண்டு பாய்கிறது.

‘தலயால வளர்ந்துருவான்கள்… அவனுகளாலான் இம்பட்டு பாடு.’
மழை வெள்ளத் தோடு வார் அறுந்த செருப்பொன்று மிதந்து வந்து கொண்டிருந்தது.
‘பத்து வரிசம் வெளிநாட்டில இரிந்த ராத்தோவ்..
ரெண்டற ஊடு, மண்டகம், குசினி கட்டி கோப்பிசம் போட்ட, மூலயில ஒரு வாத்றூம்.
எல்லாச் சள்ளும் அவர்தான் எடுத்த..’
‘அந்தாள் நல்லா கெடக்க கொள அத, இத வாங்கித் தந்தான், ஓடாவி ஊட்டுக்கும் அவர்தான்கோப்பிசம் போட்ட. அறவாப் போன சீனி வருத்தம், நம்முட ௧ஷ்டம் அதுக்குத் தெரியுமா?’

காற்று பலத்து வீசுகிறது, இருள் மெதுவாக படரத் தொடங்கியது.
தவளைகளின் குரல் இடையறாது ஒலித்துக் கொண்டிருந்தது.
இரண்டு நனைந்த காகங்கள் எதிர் வீட்டுக் கூரையில் சிறகை மடக்கி உட்கார்ந்து கொள்கின்றன.

காற்றின் வேகத்துக்கேற்ப இவள் முக்காடு விலகுகிறது, எண்ணெய் பூசி படிய வாரிய கூந்தல்.
உச்சந்தலையில் உள்ளங்கை அளவு முடிகள் கொட்டி வெற்று மண்டை , நடுவிரல் அளவில் நடுவில் நீளமாய் ஒருதழும்பு.
‘ என்ன தலயில காயம்?’
ஒரு அனிச்சம் பூ மாதிரி இவள் வாடிவிடுவாளென்ற உத்தேசிப்புடன் அவள் கண்களைக் கூர்ந்து பார்க்கிறேன்.
அவை மிக இயல்பாகவே இருக்கின்றன.
‘அடி.. ஒத்த அடி..வெளிநாட்டில இரிக்ககொள..
எரத்தம் ஓடி ஆசைவத்திரியில கெடந்து கேக்கப் பாக்க ஆளில்லாம ஆலிசப்பட்டு இஞ்ச வந்து சேந்த..
அத உடுங்கோ .. காயமல்லாம ஒரு சாமானா ராத்தோவ்.’

ஊட்டுக்க ஓடின பாம்ப அடிக்கயள்.. ஒத்த அடி..செத்துப் பெய்த்து .. திரும்ப அடிக்கயள்,, கோவத்திலஅடிக்கயள்அதான் செத்துப் பெய்த்தே..’
இந்தக் கண்கள் -கண்ணீர் காய்ந்த கண்கள் இப்போது மினுங்குகின்றன.
மழையிடையே தெறிக்கும் மின்னலைப் போன்று பளிச்சிடுகின்றன.

‘வெட்டாருது ராத்தோவ் .. ஊட்ட போகணும்’
‘தனியப் போவயளா? பயமில்லயா?

இவள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறாள்.
‘ ராத்தா..ராத்தா..’
நுனி உடைந்த குடையை பத்திரமாக மடித்து உள்ளே பதுக்குகிறாள்.
சிறிய அரிசி மூட்டையைத் தலையில் வைக்கிறாள்.

‘கேத்த பூட்டுங்கோ ராத்தோவ்..’

 

 

***

-ஹானி அஸ்லம்

Please follow and like us:

1 thought on “நடை

  1. வாப்பாவின் ஞாபகங்களை அள்ளி வந்த கதை.
    வாப்பாவுக்கு பேக்கரி & ஹோட்டல் கடை இருந்தது. வீட்டில் பேக்கரி இருந்தது. சின்னப்பள்ளி வளவில் கடை வைத்திருந்த காலமான 1970 தொடக்கம் – 1982 வரை, கதையில் வரும் தாழ்வாரம் போல, கடை விறாந்தை இருந்தது. அஸர் இருந்து மஹரிப் வரை வாப்பாவும், அவரின் நண்பர்களும் பட்டி மன்றம் போன்ற வாத பிரதிவாதங்களும், சிரிப்பும் எதிரொலிக்கும் ஞாபகங்களை மீட்டுப் பார்க்கிறேன்…

    அருமையான கதை. முடிவு எப்படி அமையுமோ என யோசித்து வாசித்துக் கொண்டிருந்த போது வித்தியாசமாக முடிந்தது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *