மூடி வைக்கப்பட்டிருந்த கிணற்றின் பாசி படர்ந்தசுவற்றின் மீது சாய்ந்து நின்று வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் மாமா. அருகிருந்த வேம்பிலிருந்து உதிர்ந்து அவரது காலடியில் விழுந்த வேப்பம்பழத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. ஓடிச்சென்று அதை எடுத்து வாயில் போடத் தோன்றினாலும் நானும் அசைவற்றுதான் நின்றேன். அம்மா என் தோள் மீது கைகளை வைத்து படபடத்து நின்றாள். அவளது பெருமூச்சு என் மீது அவ்வப்போது வந்து படர்ந்தது. புறவாசல் நடையில் உட்கார்ந்து ஒரு கன்னத்தில் கைவைத்துத் தாங்கி முன்னும் பின்னும் ஆடியபடி மாமாவையும் அம்மாவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அத்தை. அத்தையின் அருகே நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த நீலா ஓரக் கண்ணால் என்னைப் பார்ப்பதும் தலையைத் தொங்கப் போடுவதுமாக இருந்தாள்.
“அண்ணாச்சி, சொத்தோல தண்ணி கொண்டாரும்.” என்று கத்தினார் மொத்த களத்தையும் மூன்று முறை சுற்றி முடித்திருந்த அந்த பெரியவர்.
எழுந்து சட்டென உள்ளே ஓடிய நீலா சில நொடிகளில் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தாள்.
“எம்மா, ஏய் எம்மா, இந்த தண்ணிக் கேன தூக்க முடில. கொஞ்சம் வா.”
அத்தை ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். மெல்ல உள்ளே சென்று தண்ணீர் கேனை தூக்கிப் பொருத்திக் கொடுத்து விட்டு வந்து மீண்டும் அம்மாவின் அருகே நின்றேன். அம்மாவின் படபடப்பு இன்னும் நின்றபாடில்லை.
தாடியும் மார்பும் ஈரமாக தண்ணீரை ஊற்றி தாகம் தீர்த்தபெரியவர், “என்னத்த சொல்லதுக்கு அண்ணாச்சி? நம்ம ஊருல இப்பிடி ஒரு நெலமன்னு சொன்னா எவன் நம்புவான்?அதும், சுத்தி எல்லா வெளைலயும் பத்தடில தண்ணி வருவு. இது மாயமால்லா இருக்குவு. என்னவாக்கும்னு வெளங்க மாட்டுக்கு பாத்துக்கிடும். ஆமா, இந்தக் கெணத்துல எப்பிடி தண்ணி வத்திச்சி?” என்று கேட்டார்.
சட்டென திடுக்கிட்ட மாமா ஒரு நொடி அத்தையைப் பார்த்துவிட்டு நகர்ந்து அந்த பெரியவரின் அருகே சென்றார். அத்தை விடுவிடுவென எழுந்து தனக்குத்தானே புலம்பியவாறு உள்ளே சென்றாள். அம்மா மாமாவை நோக்கிச் செல்ல நானும் பின் சென்றேன்.
“என்ன அண்ணாச்சி சொல்லுகீரு? அதெப்பிடி ஓய் நல்லாருந்த கெணறு அப்பிடிப் போவும்? எதாம் மரத்துக்க வேரு உள்ள கெடந்துருக்கும். ஆனா, செத்த வாட அடிச்சுவுன்னா மத்தது எதாம் இருந்துருக்கும். செய்வெனக்கி பாத்தீரா?”
மாமாவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்து நின்றனர்.
“ஆனாலும் ஒரு பொட்டு தண்ணி இல்லாம போய்ட்டே ஓய்?அந்த காலத்துல ஒம்ம வீட்டுக் கெணறுதான் இந்தத் தெருவுக்கே தண்ணி ஊத்திச்சி. நானே எங்கம்மைக்க கூட கொடத்தத் தூக்கிட்டு வந்ததுண்டு, ஓர்மையிருக்கா ஓய்?பெரியவரு மவராசம்லா? எல்லாவனும் தண்ணிய கூறு போட்டு வித்த சமயம் ஒரு பைசா வாங்காம சிரிச்ச மொகமா இருப்பாரே! ஆமா, எப்பவாக்கும் வத்துனது?”
“அது, ஒரு இருவது வருசம் இருக்கும்.”
“இருவது வருசமா? பொறவு ஒண்ணும் தோண்டிப் பாக்கலியா?”
“ஒரு பய எறங்க மாட்டேன்னுட்டானுவோ, பின்ன ஊருக்குள்ள பல கதையும் கெளப்பி வுட்டுட்டானுவல்லா?உள்ளுக்குள்ளயும் கொஞ்சம் கொழப்பம் உண்டும்.. சரி,வேண்டான்னு விட்டுட்டோம். மனசில்லாம ஆய்ட்டு அண்ணாச்சி.”
அத்தை அடுக்களை ஜன்னல் வழியாக மாமாவைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கைகள் அசிங்கமாக சைகை செய்தன. அதை கவனித்த மாமா முகத்தைத் திருப்பி நடந்தார். அத்தை மாமாவை உற்றுப் பார்ப்பதும் மாமா அவளது கண்களைத் தவிர்த்துச் செல்வதும் வழக்கமான விசயம்தான். அந்தப் பார்வையில் எப்போதுமே கனன்றுகொண்டிருக்கும் கங்கு எங்கள் எல்லோரையும் ஒருவித பதட்டத்துடன் வைத்திருக்கும். சில நாட்களில் அப்படித் தவிர்த்துச் செல்லும் மாமாவை கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பிப்பாள் அத்தை. அடுக்கடுக்காக வெறும் கெட்ட வார்த்தைகள் மட்டும். அம்மா சென்று அத்தையைப் பிடித்திழுத்து அவளது அறைக்குக் கூட்டிச் செல்வாள். விடாது பத்து, பதினைந்து நிமிடங்கள் அத்தை வேட்டை மிருகமென வெறிக் கூச்சலிடுவாள்.
“பொறவு, வேற போர் போட்டுப் பாக்கலியா?”
“ரெண்டு தடவ போட்டாச்சி அண்ணாச்சி. சக்கரம் போனதுதான் மிச்சம். நூறடிக்கி ஒரு சொட்டு தண்ணி வரல்ல.”
“மாயமாட்டுத்தான் இருக்கு. இருவது வருசமா லோடு தண்ணிலயா ஓடுவு? ஒருவாடு பைசா போச்சே ஓய்!”
மாமா அடுக்களையை ஓரக்கண்ணால் பார்த்தார். பிறகு,அந்த பெரியவரின் கையைப் பிடித்து, “நல்ல காரியங்க நடக்க வேண்டிக் கெடக்கு அண்ணாச்சி. வீட்டயும் ஒண்ணு இடிச்சிக் கெட்டலான்னு பாக்கேன். சரி, கடைசியா ஒரு தடவ போர் போட்டுப் பாத்துருவம்னு தான்.” என்றவாறு தழுதழுத்தார்.
சென்ற முறை நீரோட்டம் பார்க்க வந்திருந்தவர் நீலாவின் விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கேட்டார். அவள் தயங்கித் தயங்கி கழற்றிக் கொடுத்தாள். செருப்பைக் கழற்றி விட்டு கிழக்கு பார்த்து நின்று கண் மூடி வேண்டியவர்,தன் பையிலிருந்து ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்து அதன் ஒரு முனையில் அந்த மோதிரத்தைக் கட்டினார். கயிற்றின் மறு முனையைத் தன் ஆள்காட்டி விரலில் சுற்றி மோதிரத்தை நிலத்தைப் பார்த்து தொங்க விட்டவாறு மெல்ல ஒவ்வொரு அடியாக நடந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று திரும்பிப் பார்த்து எங்களை அழைத்தார். அருகே சென்று பார்த்தபோது அவர் கையிலிருந்த கயிறு வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே தலையை ஆட்டியவர் கயிற்றை நிறுத்திப் பிடித்து மீண்டும் தொங்கவிட்டார். மெல்ல அசைய ஆரம்பித்த கயிறு சற்று நேரத்தில் வட்டமாக சுற்ற நாங்கள் எல்லோரும் அசந்துபோய் நின்றோம். அந்த இடத்தில் ஒரு நூறு அடி போர். அப்போதைக்கு ஒரு பத்தாயிரம் செலவிருக்கலாம்.
அடுத்த முறை வந்தவர் ஒரு சிறு கம்பை வைத்து நிலத்தை ஒவ்வொரு அடியாக கிளறிக் கொண்டு சுற்றி வந்தார். ஓரிடத்தில் நின்று அந்த குச்சியை தரையில் குத்தி நிற்கவைத்து அதுதான் இடம் என்றார். அங்கு ஒரு கறையான் புற்று இருந்தது. அந்த இடத்தில் நூற்றி முப்பது அடி. ஒரு இருபதாயிரம்.
“செரி, என்னான்னு பாத்துருவம். ஒரு தேங்கா தொலிச்சுக் கொண்டாரும். குடுமி இருக்கட்டும் என்ன.” என்றார் பெரியவர். மாமா கண்காட்ட நான் அடுக்களைக்கு ஓடினேன். அத்தை அடுப்பங்கரையில் ஒரு மூலையில் உட்கார்ந்து தன் சேலை முனையை கடித்துக் கொண்டிருந்தாள். நீலா அவள் அருகே உட்கார்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
தேங்காயை தன் உள்ளங்கையில் கிடத்தியவாறு வைத்து கிழக்கு பார்த்து மெல்ல நடந்தார் பெரியவர். மாமா அவர் பின்னாலேயே நடக்க, ஆர்வம் மேலிட நானும் தொடர்ந்தேன். அம்மா பெருமூச்செறிந்து விசும்பியபடி நின்று விட்டிருந்தாள்.
“என்ன அண்ணாச்சி, இதுக்கெல்லாம் ஒடஞ்சிட்டா எப்பிடி?பாப்பம், ஒரு மூலைல கூட இல்லாமலா போவும். ஆண்டவர்நம்மள அப்பிடி வுட்டுற மாட்டாரு, பாத்துக்கிடும். சாவக் கெடந்த மக்களுக்கு மீனும் ரொட்டியும் பெருக்கிக் குடுத்தவருல்லா!” என்றவாறு முன் சென்றார் பெரியவர். அம்மாவின் விசும்பல் ஓங்கிய அழுகையாக மாறியது. நீலா பதறியபடி ஓடிவந்து அம்மாவை அழைத்துச் சென்றாள். அத்தையின் கெட்ட வார்த்தைகளும் அம்மாவின் அழுகையொலியும் மாறி மாறி கேட்க, நீலா அடுக்களை கதவை உள்ளிருந்து அடைத்தாள்.
கிழக்கும் மேற்குமாக நிலத்தை சல்லடை போட்ட பெரியவர் தளர்ந்து வடக்குப்புற வேலியை ஒட்டி நடக்க ஆரம்பித்த போது அடுக்களையில் இருந்து கைத்தாங்கலாக அம்மாவைக் கூட்டி வெளியே வந்தாள் நீலா. நீலாவின் முகம் இருண்டிருந்தது. பெரியவர் பத்தடி வைப்பதற்குள் அம்மா,“மோனே, மோனே, எனக்கப் பொன்னு மோனே” என்று ஊளையிட்டு அரற்ற ஆரம்பித்தாள். நீலா அவளது கைகளை இறுக்கிப் பிடித்து நின்றாள்.
“அண்ணாச்சி. போதும், விடுங்க.” என்று பெரியவரின் முன் சென்று நின்றார் மாமா.
குழப்பமாக பார்த்த பெரியவர், ஒன்றும் பேசாமல் மாமாவை அமைதியாக இருக்கும்படி சைகை செய்து விட்டு முன்னோக்கி நடந்தார். மாமா அப்படியே நின்றார். பெரியவர்வடக்குப் புற வேலி முடியும் இடத்தை நெருங்கியதும் அவரது உள்ளங்கையிலிருந்த தேங்காய் மெல்ல அசைந்ததைப் போலிருந்தது. எங்களை திரும்பிப் பார்த்தவர் மெல்ல இன்னொரு அடி எடுத்து வைத்தார்.
“மோனே, எனக்கப் பொன்னு மோனே.”
தேங்காய் சட்டென குத்திட்டு நின்றது. மாமா தலையைப் பிடித்து நின்றார். அம்மா அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
…
மாமா இளமையில் ஊருக்குள் பெரிய சவடால் பேர்வழி. கட்டுமஸ்தான உடலும் தாத்தா சொத்தில் கிடைத்த சுகமுமாக புல்லட்டும் கலர் கண்ணாடியுமாக வலம் வந்திருக்கிறார். அதிருஷ்ட வசமாக தாத்தாவின் கலை மாமாவிடம் குடியேறி விட, இயற்கையை வரைந்து, பின் பல புதுமைகளை வரைந்து ஊருக்குள் சிறந்த ஓவியராக பெயர் பெற்று விட்ட பிறகு தனக்கென சில பிரத்தியேக ஆசைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பெண்களை ஓவியமாக்கிப் பார்ப்பது அதில் ஒன்று. யாருமற்ற சமயங்களில் சில பெண்கள் மாமாவை சந்திக்க வந்து செல்வதாகவும் மாமா பல வீடுகளுக்கு ரகசியமாக சென்று வருவதாகவும் பெண்களும் ஆண்களுமாக பேசிக் கொண்டார்கள்.
அப்போது ஒரு நாள், அத்தை எங்கள் தெருவழியாக நடந்து சென்ற போது அவளது முன் சென்று நின்று மறித்தார் மாமா. அத்தை ஒன்றும் பயந்த சுபாவமில்லை.
“வழியா வுடுகியா? இல்ல, செருப்பால அடி வாங்குகியா?”
“ஓ, வழிய விட்ருவோம் மக்கா. ஒரு விசயம்…”
“நீ ஒரு மண்ணும் சொல்லாண்டாம். ஒன் வேலய வேற எவட்டியாம் போய் காட்டு. வழிய வுடு மொதல்ல.”
“ரைட்டு. நா ஒன்ன வரையணும் மக்கா. ஒனக்கு இஷ்டம்னா சொல்லு.”
அத்தையின் கோவம் வடிந்து ஒரு நொடி வெட்கம் எட்டிப்பார்த்தது.
“அது சரி, அப்போ இஷ்டம் தான் போல? வரையும்போ ஒன் ஒடம்பு மட்டுந்தான் இருக்கணும். புரிஞ்சா? ஒண்ணுல்ல,அப்பிடி வரையது பெரிய சவாலான வெசயம்னு சொல்லுகானுவோ, ஒரு கை பாத்துருவம்னு தான். நா யார்ட்டயும் இப்பிடிக் கேட்டது கெடயாது பாத்துக்க. பின்ன,ஒனக்க மேல…” என்றவாறு மாமா வழிவிட, அத்தை அழுதுகொண்டே ஓடினார்.
அடுத்த சில வருடங்கள் மாமாவும் அத்தையும் ஊர் ஊராக ஓடித்திரிந்தார்கள். வீட்டு வாசலில் வைத்தே இருவரையும் வெட்டி சாய்க்க தாத்தாவும் மூத்த மாமாவும் காத்திருக்க யாருக்கும் தெரியாமல் அம்மா மட்டும் எப்படியோ அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டாள்.
ஒரு நாள் அதிகாலை வீட்டு வாசலில் அம்மா நிற்க, அவள் பின் மாமாவும் அத்தையும் நிற்க, பேச்சற்ற தாத்தா எதுவும் சொல்லாமல் உட்செல்ல, அடுத்த ஞாயிறன்று அலங்கார உபகார மாதா கோவிலில் நடந்த திருமணத்தில் ஸ்டெல்லாவாகினாள் அதுவரை மகாலட்சுமியாக இருந்த அத்தை.
வந்த நாள் முதல் முகம் கொடுத்து பேசாத குடும்பத்தில் அத்தைக்கிருந்த ஒரே ஆறுதல் அம்மாதான். இரண்டு வயது மகனுடன் தனித்து விடப்பட்ட அம்மாவின் இடைவெளிகளை நிரப்பும் ஒத்த மனம் அத்தைக்கு வாய்த்திருந்தது. அத்தையின் உள்ளொடுங்கிய பொழுதுகளை மெனக்கெட்டு கவனித்து குடும்பத்தில் அவளை இருத்தி வைத்தாள் அம்மா. இப்போதும் கூட அவர்கள் இருவரையும் ஒட்டிப் பிறந்த பிள்ளைகள் என்றுதான் பக்கத்து வீட்டு அத்தைகள் சொல்வது.
அத்தை வந்த ஒரு மாதம் கழித்து ஒரு நாள். கிணற்றில் நீர் இறைத்து குளிக்கப் போன தாத்தா கிணற்றடியில் மயங்கிச் சரிந்து விழுந்தார். அவரைத் தூக்கப் போன மாமாக்களும் அம்மாவும் மூக்கைப் பொத்திக்கொண்டு நின்றனர். அத்தை குமட்டி வாந்தியெடுத்து விட்டாள். அந்தப் பகுதி முழுதும் அப்படியொரு வாடை. அழுகிய பெருச்சாளி வாடை.
தூர் வாரினாலும், மூலிகை மருந்துகளைக் கொட்டினாலும்,கிணற்று நீரின் வாடை போனபாடில்லை. கிணற்றின் அருகே செல்வதைக் கூட எல்லோரும் தவிர்த்தனர். பக்கத்து வீடுகளிலிருந்து தண்ணீர் எடுக்க வரும் அத்தைகளும் அக்காக்களும் விலை கொடுத்து தண்ணீர் வாங்க பக்கத்து ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
தாத்தா தனக்கான இறுதிப் படுக்கையில் விழ, குடும்பத்தில் ஒவ்வொருவர் முகத்திலும் என்னவென்று தெரியாத ஒரு பயம் வந்து ஒட்டிக்கொண்டது. தலைமுறைகளாக தாகம் தீர்த்த கிணற்று நீரன்றி மற்றெந்த நீரும் நாவில் சேரவில்லை. எவ்வளவு குடித்தாலும் தாகம் தீரவில்லை. சாப்பாட்டில் உப்போ காரமோ ஏதோவொன்று தானாகவே கூடியது. எரிச்சலும் கோவமும் வீண் சண்டைகளும் மலிந்தன. நேர் நின்று பேசுவதைக் கூட எல்லோரும் தவிர்த்ததாகத் தெரிந்தது. வெக்கையில் உரையாடல்கள் ஆவியாகிப் போயின.
தாத்தா இறந்த அடுத்த நாள் அடுக்களையில் மயங்கி விழுந்த அத்தை நற்செய்தி கொண்டு வந்தாள். தாத்தாவே வரப்போவதாக மகிழ்ந்து அத்தையை முத்தமிட்டாள் அம்மா. மாமா அப்படி நினைத்திருக்க வாய்ப்பில்லை.
கிணற்று நீரின் வாடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போக, மரப்பலகைகளை வைத்து அதை மூடி வைக்க முடிவாயிற்று. உள்ளிருந்து கனன்று கொண்டிருக்கும் ஒரு கல்லறையாக துருத்திக்கொண்டு நின்றது எங்கள் கிணறு. வேப்பஞ்சருகுகளும் கொட்டைகளும் அஞ்சலிப் பூக்களாய் தினந்தோறும் வீழ்ந்து நிரம்பின. அவ்வப்போது மாமா அந்த மூடியைத் திறந்து உள்பார்த்து மூக்கைப் பொத்திக்கொண்டு நிற்பார்.
என்னதான் அம்மாவின் துணை இருந்தாலும் மூத்த மாமா குடும்பத்தாரும் இன்னும் பலரும் அத்தையை உள்ளுக்குள் சேர்த்துக் கொள்ளவேயில்லை. தாத்தாவின் மரணத்தையும் கிணற்று நீரின் வாடையையும் அத்தையின் பெயரில் ஏற்றி விட்டனர். பிறப்பதற்கு முன்னேயே மறைமுக சாபங்களை சுற்றிக் கொண்டது அத்தையின் சிசு. ஒருநாள் மாமாவும் ஏதோ மறைமுகமாக கத்திவிட கிணற்று மூடியைத் திறந்து உள்ளே குதிக்கப் போனாள் அத்தை.
அடுத்த புனித வெள்ளி அன்று தான் நீலன் பிறந்தான். எங்கள் கிணறு மொத்தமாக வற்றிக் காய்ந்து போனதும் அன்றுதான்.
பிள்ளையை எடுத்து வீட்டிற்கு வந்த அத்தையை திருஷ்டி கழித்து உள்ளே அழைத்துச் சென்றாள் அம்மா. வந்த நாள் இரவே நீலனுக்கு கடும் காய்ச்சல். தொடர்ந்து விடாமல் அனலாய்க் கொதிக்க, மீண்டும் மருத்துவமனை. பரிசோதனைகளின் முடிவில் அவனுக்கு மஞ்சள் காமாலை உறுதியானது. மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை. பல மேற்கட்ட பரிசோதனைகள் நடந்தன. கடைசியில் அத்தையின் பெயரில் இன்னொன்றும் வந்து சேர்ந்தது. அத்தை தாய்ப்பால் கொடுப்பதால் நீலனின் மஞ்சள் காமாலை அதிகரிப்பதாகவும், அத்தை அவனுக்குப் பால் கொடுக்கக் கூடாது எனவும் மருத்துவர்கள் சொல்ல,அங்கேயே ஏங்கி மயங்கி விழுந்தாள் அத்தை. அடுத்த சில நாட்கள் பிரம்மை பிடித்தவள் போல இருந்தாள். நீலனுக்கு என் அம்மா பால் கொடுக்க ஆரம்பித்தாள். உறக்கத்திற்கு அழும் நீலனுக்கு தன் மார்புக் காம்புகளைக் கொடுக்க முடியாமல் அவனைத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்து கதறி அழுவாள் அத்தை.
“மோனே, எனக்கப் பொன்னு மோனே. அம்மைக்க பால் ஒனக்கு வேண்டாமா மக்ளே? என்ன பாவம் செஞ்சனோ,அம்மைக்க பால் ஒனக்கு வெசமாயிட்டு நீலா.”
அத்தை தனக்கென ஒரு தனி உலகத்தில் வாழஆரம்பித்தாள். எப்போதும் ஏதோ சிந்தனை. இடையிடையே தனக்குள்ளேயாக பேசினாள். நீலனை மடியில் கிடத்தியிருக்கும்போது கூட எங்கோ வெறித்துப் பார்த்திருப்பாள். அழுது தெவங்கிப் போன பிள்ளையை ஓடிச்சென்று தூக்குவாள் அம்மா. போகப்போக நீலன் முழுநேரமும் அம்மாவிடம் இருக்கவேண்டி வந்தது. அத்தை தனக்கொரு மகன் இருப்பதையே மறந்து விட்டதைப் போலிருந்தாள். மாமா கேட்கும் எதற்கும் பதில் சொல்லாமல் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாள். பிறகு, அதுவே அவளது இயல்பாக மாறிவிட்ட போது மாமாவை கூர்ந்து நோக்கி கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தாள்.
சில இரவுகளில் அத்தை உறக்கம் வராமல் தன் மார்பைப் பிடித்து வலியில் அரற்றிக் கொண்டிருப்பாள். அம்மா அவளது மார்பை மெல்ல மெல்ல அமுக்கி கட்டிப்பட்ட பாலை வெளியெடுத்து அவளைத் தன் மடியில் கிடத்தி உறங்க வைப்பாள். அந்தப் பாலை ஜெபம் செய்தவாறே வறண்ட எங்கள் கிணற்றில் யாருக்கும் தெரியாமல் அம்மா ஊற்றியதை நான் பார்த்திருக்கிறேன்.
அதிகாலையில் ஊர் வெளுக்கும் முன்னரே அம்மாவும் அத்தையும் பக்கத்து தெரு தண்ணீர் வியாபாரியின் வீட்டில் சென்று குடம் குடமாய் எடுத்து வந்தனர். ஒருமுறை, அந்த வீட்டுக்கார அத்தை அம்மாவிடம், “என்னம்மோ, ஒங் கொழுந்திக்க கெணறு வத்திப்போச்சின்னி சொன்னாவ?மத்தவன் செஞ்ச பாவம் அப்பிடில்லா? எத்தன கொமறுகளுக்க வயித்தக் கழுவி வுட்டானோ?” என்று கேட்க, அம்மா அவள் தலைமுடியைப் பிடித்திழுத்து அடிக்க,பெரும் சண்டையாகியிருக்கிறது.
தாத்தாவின் முதல் வருட ஆண்டன்று திருப்பலி முடித்து வந்த போது நீலனுக்கு காய்ச்சல் வந்தது. மீண்டும் பரிசோதனைகள். மஞ்சள் காமாலை. இந்த முறை அம்மாவின் கருணையில் சுரந்த பாலினால் அவனை மீட்டு வர முடியவில்லை. அம்மா அன்று அழுத அழுகை என்றென்றைக்கும் என் காதுகளை விட்டு நீங்காது. என்ன நடந்தது என்பது அத்தைக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை. ஆனால், நீலன் இல்லாத வெற்றிடத்தின் அழுத்தத்தில் அத்தையின் தனி உலகில் தனக்கென ஓர் இடம் பிடிக்க அம்மா நுழைந்தாள். இருவரும் பெரும்பாலும் ஓரறையில் சேர்ந்தே இருந்தனர். வெறும் மூச்சு விடும் சத்தங்களாகத்தான் அவர்களது பேச்சு இருந்தது.
தலச்சன் பிள்ளைகளின் மண்டை ஓடுகளைத் தோண்டியெடுத்து செய்வினைக்கான மை செய்தவர்கள் இருந்த நாட்கள் அவை. அம்மாவின் விருப்பப்படி வீட்டுக் களத்து வடமேற்கு மூலையிலேயே நீலனை இருத்தி ஒரு வெள்ளிச் சிலுவையை வைத்தோம். அம்மாவும் அத்தையும் அன்றிரவு முழுக்க நீலனின் புதை மேட்டிலேயே இருந்தனர்.
மணிக்கணக்கில் அசைவற்று வெறித்து நோக்கி நிற்பதும் தனக்குள் பேசிக்கொள்வதும் பிதற்றுவதுமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களைக் கழித்தாள் அத்தை. பின், நீலா வந்து பிறந்தாள். பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்காமல்,அவளைத் தொட்டெடுக்காமல் மூர்க்கமாக ஊளையிட்டாள் அத்தை. பால் கொடுக்கச் சொன்னபோது தன் கைகளால் மார்பை மறைத்து வீம்புடன் கிடந்தாள். அம்மா சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. வீட்டிற்கு வந்த நாள் இரவு,உறங்கிக் கிடந்த அத்தையின் கைகால்களை கட்டிலோடு சேர்த்துக் கட்டினார் மாமா. நீலாவை எடுத்து அத்தையின் மார்புக் காம்போடு சேர்த்துப் பிடித்து பால் குடிக்க வைத்தாள் அம்மா. அத்தை தன் பற்களைக் கடித்து உறுமினாள். கெட்ட வார்த்தைகளில் திட்டி மாமாவின் முகத்தில் காரித் துப்பினாள். மாமா அவளது முகத்தில் மாறி மாறி அறைந்தார். அம்மா குறுக்கே வந்து தடுத்து மாமாவை வெளித் தள்ளினாள். நீலாவோடு அத்தையைச் சேர்த்தணைத்துக் கிடந்து அழுதாள்.
அடுத்த நாள் முதல் அம்மா செய்து வந்ததைப் போலவே தினமும் காலை எழுந்ததும் நீலனின் இடத்தில் சிறிது பாலூற்றி மலர் வைத்து மௌனித்திருக்க ஆரம்பித்தாள் அத்தை.
…
“எனக்க மோனுக்க எடத்த நா தரமாட்டேன். மோனே, நீ அழாத மோனே. அத்த ஒன்ன விட மாட்டேன் மோனே. எனக்க நீலனுக்க எடம். தொட விட மாட்டேன்.” என்று அடுக்களையிலிருந்து கதறி அழுதாள் அம்மா. அம்மாவின் அருகில் உட்கார்ந்திருந்த அத்தை நீலனின் புதைமேட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தண்ணியில்லாம கெடந்து சாவுங்கல எல்லாவனும். எனக்க மோனுக்க எடத்தக் கேக்க வந்துட்டானுவோ. எவனாம் எம் மோனுக்க எடத்தத் தொடட்டும். சங்க கடிச்சித் துப்பிப் போடுவம் பாத்துக்கிடுங்க.”
அடுத்த சில நாட்கள் இரவும் பகலும் அப்படியே அரற்றிக் கொண்டிருந்தாள் அம்மா. அத்தையிடம் நீண்ட மௌனம் மட்டுமே தெரிந்தது.
உணவின்றி உறக்கமின்றி தன் அறைக்குள்ளேயே முனகிக் கிடந்த அம்மாவைப் பார்க்க சகிக்காமல் நானும் நீலாவும் ஒருநாள் இரவு அவளது அறைக்குள் சென்றோம். அத்தை ஒரு மூலையில் கிடந்தாள். நீலா அம்மாவின் கால்மாட்டில் அமர்ந்து அவளது கால்களைப் பிடித்து விட்டாள். நான் தரையில் அமர்ந்து அம்மாவின் மேலாக தலை சாய்த்தேன். இருவரும் அம்மாவை சமாதானப் படுத்த ஏதேதோ சொல்லிப் பார்த்தோம். அம்மா பதிலேதும் சொல்லாமல் முனகிக் கொண்டே இருந்தாள். ஒரு கணத்தில் முனகுவதை நிறுத்தி என்னையும் நீலாவையும் மாறிமாறிப் பார்த்தாள். அப்போதுதான் எதேச்சையாக நான் உணர்ந்தேன். அம்மா மற்றும் அத்தை வாழும் அந்த அறைக்குள் பல வருடங்கள் கழித்து அன்று தான் நான் சென்றிருந்தேன்.
அடுத்த நாள் அதிகாலை நீலனுக்குப் பாலூற்றி விட்டுத் திரும்பி வந்தபோது மாமாவிடம், “போர் போடுவம்.” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றாள் அம்மா. அத்தை அம்மாவின் முகத்தை கூர்ந்து நோக்கி கெட்ட வார்த்தைகளை முனகுவது போல இருந்தது.
…
புதை மேட்டிலிருந்து எடுத்த நீலனின் வெள்ளிச் சிலுவையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வெளிவந்த மாமா போர் போடும் இடத்தின் அருகே கூட வரவில்லை. கிணற்றடியில் சென்று உட்கார்ந்தார். நானும் நீலாவும் குழாய்கள் இறங்குவதை எதிர்பார்ப்புடன் பார்த்தோம். முதல் சில அடிகளில் ஒரே தூசியும் புகையுமாய் மணல் பறந்தது.அத்தை அடுக்களை வாசலில் நின்று அசையாது பார்த்துக் கொண்டிருந்தாள். விசயம் கேள்விப்பட்டு பக்கத்து வீட்டுக் காரர்கள் எல்லோரும் எங்கள் களத்தில் வந்து நின்று வேடிக்கை பார்த்தனர்.
“கெணத்துக் கிட்ட ஒரு பய போகானா பாரு, எல்லாம் பயந்தாங்கொள்ளிப் பயக்க.” என்று நீலாவிடம் சுட்டிக்காட்டிச் சிரித்தேன்.
“ஆமாமா, இவரு ரொம்ப வீரம். நீ போயாம், பாப்பம்.”
பத்தடி ஆனதும் கற்கள் பொடிபடுவதைப் போல சத்தம் வந்தது.
“ஆமா, ஒனக்கு நீலன நெனச்சி பயமில்லயா?” என்று நீலாவிடம் கேட்டேன்.
ஒன்றும் பேசாமல் நின்றாள் நீலா.
“மேடம், ஒங்க கிட்ட தான் கேட்டேன். ஒனக்கு பயமில்லையா?”
தன் கலங்கிய கண்களைத் துடைத்தவாறு என் கையைப் பிடித்து நின்று என்னைப் பார்த்தாள் நீலா. சலனமற்ற தீர்க்கமான ஒரு புன்னகை. அவள் முகம் திடீரென சொலித்த மாதிரி இருந்தது. ஒன்றும் பேசாமல் போர் போடுவதை கூர்ந்து பார்த்து நின்றேன்.
பதினைந்தாவது அடியில் சிறிது குழைந்த சேறு பொங்கி வந்த போது மொத்தக் கூட்டமும் சலசலத்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக விலகி நின்றனர். செத்த வாடை. நானும் நீலாவும் அங்கேயே அசைவற்று நின்றோம். அடுத்த பத்து நிமிடங்களுக்கு கடும் வாடை. ஒரு சிலர் குமட்டிக்கொண்டு வாந்தியெடுத்தனர். சிலர் பயந்து தங்கள் வீடுகளுக்கு ஓடினர்.
வாடை மெல்ல மறைந்தது. பதினெட்டாவது அடி. சரேலென பீச்சியடித்துக்கொண்டு வந்த தண்ணீர் நீலாவின் முகத்தில் அடித்தது. அவள் என் கையை மேலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். சில நொடிகளில் தண்ணீர் பெரும் ஊற்று போலப் பொங்கிப் பொங்கி வந்தது.
உள்ளிருந்து “மோனே, எனக்க மோனே..எனக்கப் பொன்னு மோனே.” என்றவாறு அலறியபடி வந்தாள் அம்மா. அத்தையின் கைகளைப் பிடித்து இழுத்து அடுக்களை முற்றத்தில் விழுந்து அரற்றினாள். தண்ணீர் இன்னும் வேகமெடுத்து பீச்சியடித்தது.
நானும் நீலாவும் கைகளைக் குவித்து தண்ணீரைப் பிடித்து கொண்டு வந்து அம்மா, அத்தையின் முன் நீட்டினோம்.
ஒரு நொடி எங்கள் கைகளை உற்றுப் பார்த்த அத்தை சட்டென எழுந்தாள். அம்மாவின் கைகளைப் பிடித்துத் தூக்கி அவளை இழுத்துக்கொண்டு ஓடினாள். சென்றவேகத்தில் போர் குழாய்களின் சேற்றில் விழுந்து புரண்டாள். அந்த நீர் கலந்த சேற்றைத் தன் கைகளில் அள்ளியெடுத்து முத்தமிட்டாள். முகமெங்கும் பூசினாள். மீண்டும் இரு கைகளில் அள்ளியெடுத்து தன் மார்பெங்கும் பூசினாள்.
“மோனே, நீலா..எனக்க மோனே. அம்மய மன்னிச்சிரு மோனே.” என்று கதறி அழுதாள்.
பக்கத்தில் சென்ற அம்மா அத்தையின் கைகளைப் பிடித்து அவளைத் தூக்க முயன்றாள். அம்மாவின் கையைப் பிடித்து அவளைத் தன்னருகே இழுத்த அத்தை, தன் கைகளில் தண்ணீரைப் பிடித்து அம்மாவிடம் நீட்டி, அதுவரையில்லாத ஓங்காரக் குரலெடுத்து, “மக்ளே. எம் மோனுக்கப் பாலப் பாருட்டீ. எம் மோனுக்க பாலப் பாரு..” என்றழுது தன் இரு மார்புகளிலும் ஓங்கி ஓங்கி அறைய ஆரம்பித்தாள்.
***
-சுஷில் குமார்
This story means a lot..
அற்புதம் . Classic . இக்கதை எனக்களித்த மன சஞ்சலத்தை என்னால் விவரிக்க முடியாது. I just stumbled. மன்னிக்கவும். அற்புதம். இன்னும் உங்கள் படைப்புகளை வாசிக்க வேண்டும்.
கதையின் முடிவு இப்படித்தான் முடியப் போகிறது என்று யூகிக்க வைத்தாலும் கதை அபாரமாக எழுதப்பட்டுள்ளது.
செம்மை, நேர்த்தியான கதை. ரசித்து படித்தேன்.
அற்புதம். இக்கதை எனக்களித்த மன சஞ்சலத்தை என்னால் விவரிக்க முடியாது. I just stumbled. இன்னும் உங்கள் படைப்புகளை வாசிக்க வேண்டும். மகிழ்ச்சி.