(i)
மின்னலின் பகல்
ஒரு மின்னலில்
உண்டானது
பகல்
புலர்ந்து இருட்டியது வானம்
மிகச் சீக்கிரமாக முடிந்துவிட்டது
ஒருநாள்
நாள்
நழுவி
நாளுக்குள்
(ii)
தட்டித் தட்டித்
தூங்கிய பிறகும்
தட்டிக்கொண்டே
இருக்கிறேன்
தூக்கத்தில் இருப்பவளை
தட்டத் தட்ட
அவள்
தூக்கத்தின்
ஆழத்துக்குச் செல்கிறாள்
ஆழத்தில் இருப்பவளைத்
தட்டத் தட்ட
அவள்
ஆழத்தின் ஆழத்துக்குச்
செல்கிறாள்
ஆழத்தின் ஆழத்தை
ஒரு தட்டு தட்ட
விழிக்கிறாள்
(iii)
ஏக்கங்கள்
மரத்தின் மேல்
விதையைத் தூவிப் பறக்கிற
பறவை
மரத்தின் மேல்
மரத்தின் மேல்
மரம் வளரும்
அடுக்குமாடிக் குடியிருப்பைக்
கனவு காண்கிறது
கல்லெடுத்து
கல்லெடுத்து
சிறுபழம்
குறி வைக்கிற நான்
என்றைக்குத்தான்
சுவைப்பேனோ
நிலவை
(iv)
டிக்கெட்
டிக்கெட் விற்பவன் தந்தான்
புத்தம் புதிய டிக்கெட்டை
டிக்கெட் சரிபார்ப்பவன்
கிழித்தான்
புத்தம் புதியதை
அடுத்த காட்சிக்காக
பேருந்திலும்
இதே கதைதான்
அடுத்த பயணத்திற்காக
மருத்துவமனையில்
தாதி அறுத்தாள்
புத்தம் புதிய குழந்தையின்
தொப்புள் கொடியை
(v)
முன்னாள் காதலி
எல்லோருக்கும் பொதுவான
அந்தக் கதவில்
அடுக்குமாடி மனிதர்கள்
ஓர் அட்டையைத் தொங்கவிட்டனர்
‘வெளியே செல்பவர்கள் கேட்டை சாத்திச் செல்லவும்’
வாசலில் படுத்திருந்த
எழுதப் படிக்கத் தெரியாத நாய்
கதவையும் அட்டையையும்
கட்டியிருந்த
கயிற்றைப் பார்த்தது
கயிறு மஞ்சள் நிறத்தில் இருந்தது
மங்களகரமாக
***
-மதார்
Wonderful Words
அருமை நண்பரே
தூக்கத்தில் இருப்பவள் கவிதை மிகச் சிறப்பு… ஏனோ தெரியவில்லை relate ஆகிறது