லேய் வந்துட்டு இருக்கேன். பொறு வடசேரி பஸ் ஸ்டாண்ட்பார்ல தான இருக்க. இன்னும் பத்து நிமிஷத்துல அங்கஇருப்பேன்“, சுந்தர் அலைப்பேசியில் சொன்னவுடன்கொஞ்சம் தெம்பானேன். மடியில் சொருகியிருந்த குவார்ட்டர்பாட்டில் ஞாபகம் வந்தது. தலையில் கனமாக எதையோகொண்டு அழுத்துவது போல உணர்ந்தேன். கால்கள் இரண்டும்அதன் அதன் போக்கில் என்னை இழுத்துக் கொண்டு போனது. நான் உடுத்தியிருந்த நேர்த்தியான உடையில் கொஞ்சம்அழுக்குப் படிந்து, சாராய நாற்றம் எடுக்க ஆரம்பித்திருந்தது. காட்சிகள் எல்லாமுமே மங்காலாய்த் தெரிந்தன. மதியம்குடித்ததில் கொஞ்சம் மீதியிருந்தது. அதைக் குடித்தாலொழியநிதானம் ஆக முடியாது. பாரின் வாசலில்நின்றுகொண்டிருக்கிறேன் எனும் பிரக்ஞை வந்ததும் அதைக்கையிலெடுத்தேன்.  மெதுவாக நடந்து உள்ளே சென்றேன். இருளடைந்து கிடந்த நுழைவுவாயிலில் புழுவைப் போலஒருவர் நெளிந்துகொண்டு கிடந்தார். வாசலிலோ அவசரம்அவசரமாக குடித்துக் கொண்டு வெளியூருக்கு செல்லும்ஆசாமிகள் ஈக்களைப் போல மொய்த்துக் கொண்டு நின்றனர். உள்ளே ஒரு குவார்ட்டரை ஒரே தவணையில் ஊற்றி பேருக்குஅது நிறைய வேண்டுமே என கப்பில் தண்ணீரை நிரப்பி, ஒரேமூச்சில் குடித்துக் கொண்டு நேரத்திற்குரிய பேருந்தை பிடிக்கஓடினர். அவர்களில் சிலர் கையில் ஊறுகாய் பாக்கெட்டோ, கடலை பொட்டலமோ இருந்தது. இதற்காகவே பாரின்வெளியே ஒரு வயதான அம்மா கடலை விற்றுக்கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழையும் போதே, ஒருவர்குடித்த சரக்கு ஓங்கரிக்க அதை கொஞ்சம் வெளியில் கக்கிமீதியை கஷ்டப்பட்டு உள்ளே விழுங்கி கண்ணில் நீர் முட்டஒருவாரு ஆசுவாசமானார். நான் அவரைக் கவனிப்பதைஅறிந்ததும், “எழவு ஓல்ட் மங்க் கெடைக்க மாட்டேங்குது.. இது என்ன மயிறு ரம்மோ பெறட்டுகு.. கவெர்மென்ட்புண்டாமக்க விக்க ஆரம்பிச்சான் எல்லாம் டூப்ளிகேட்.  அப்போ பிரைவேட் வித்தான். சரக்கும் தரமா இருந்து. இவனுகள கேள்வியும் கேக்கமுடியாது..சார், அப்போ நான்வாரேன்கூறிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். அங்கேசாராயத்தின் வாசனை மட்டுமே எங்களை வளைத்திருந்தது. எனக்குள்ளே ஒரு கேள்வி எப்படி நான் அங்கே வந்தேன்? எப்படியோ வந்துவிட்டேன் என எண்ணிக் கொண்டே வாசலில்குடித்து முடித்து வீசி எறிந்த பிளாஸ்டிக் கப்பில் கொஞ்சம்புதிதாக தெரியும் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அருகில்நிற்பவர்களிடம் தண்ணீர் கேட்க எத்தனித்தேன் . நான்பாக்கியவான் தான், கேட்ட முதல் நபரே கொடுப்பதற்குமுன்வந்தார். நான் சரக்கை ஊற்றி அவரிடம் இருந்து வாங்கியதண்ணீரை நிரப்பவும் அவர் கையில் இருந்த கடலையில்கொஞ்சம் கொடுத்தார். நான் அவரைப் பார்த்து புன்னகையிக்கமுயற்சிக்கும் முன்னே,  அவரேஇன்னைக்கு நா உமக்குகொடுத்தேன்னா, நாளைக்கு என் கையில பைசா கொஞ்சம்கொறவா இருந்தா, அடுத்தவன் கொடுப்பான்லாசொல்லிகொண்டே கண்ணைச் சிமிட்டினார். “சார், இதுவெலக் கூடுன ஐட்டம்லா.. எத்தற ரூவா வரும்மெதுவாகக்கேட்டார். அப்போதுதான் என் கையில் இருந்த பாட்டிலைப்பார்த்தேன், அது பகார்டி பிளாக் ரம். இன்றைய தேதிக்குஇருநூற்று அறுபது ருபாய் வரும். காலையில் படித்தராஜமார்த்தாண்டன் அண்ணாச்சியின் கவிதை ஒன்றின் சிலவரிகள் ஞாபகம் வந்தன.

நடந்துகொண்டிருக்கிறான்

மனச் சுமையின்றி

புறச் சுமையின்றி

நடந்துகொண்டிருக்கிறான்.’

நானும் நடந்துகொண்டிருக்கேன். ஏன் வாழ்ந்தேகொண்டிருக்கிறேன். உள்ளுக்குள் குமுறி சிரித்துக்கொண்டிருந்தேன்.

***

இன்னைக்கும் குடிச்சுட்டு வந்துறாத, நடைல ஏத்த மாட்டேன்.. புது சட்ட பேண்ட் போட்டுட்டு எங்கல போற..மணி ஒன்னுஆச்சு, மத்தியானம் வர ஒறங்கு. நீ வரதுக்குள்ள இந்த புக்லாம்போட்டு எரிக்கல..படிச்சு முடிச்சு வேலைக்கு போவேன்னுபாத்தா, மயிராண்டி ஊருக்குள்ள சுத்திட்டு குடிச்சுட்டுலாஅலைய. உனக்கு எவன்ல ஊத்திக் குடுக்கான். அம்மைக்கசாபத்த வாங்காத, வெளங்க மாட்ட. அரியரு எத்தர இருக்கு. படிச்சா தான பாஸ் ஆக முடியும்அம்மையின் குரல் கேட்கவும்கண்கள் கலங்க ஆரம்பித்தன. முகத்தைக் கழுவிவீட்டுநடைக்கு வரவும், பாக்கெட்டில் இருந்த அலைப்பேசியைஎடுத்தேன். அதன் டிஸ்பிளே கீறி, ரப்பர் பேண்டால் கட்டிவைத்திருந்தேன். சுதனை அழைத்தேன், “மாப்ள, எங்கவரணும்“, “கிரௌண்ட்டுக்கு வா.. சீக்கிரம் வாடேசுதன்சொல்லவும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நேற்றையபோதையே என்னை விட்டு விலக மறுத்தது. இரவு வேறுசாப்பிடவில்லை. வயிற்றில் ஒரு உருண்டை மேலும் கீழும் ஏறிஇறங்கியது. அடிக்கடி ஏப்பம் வர, புளித்த மாவின் வாடைஎனக்குள் சிறிய பிரட்டலைக் கொடுத்தபடியிருந்தது. சுதன்என் பள்ளிதோழன் கல்ஃபில் வேலை பார்க்கிறான், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறான். இன்றைக்கு அவன்தான் என் மொத்த குடியின் பொறுப்பு.

கூட்டமாக வளர்ந்து நிற்கும் கருவேலமரத்தால் குகைப் போலஉருவாக்கப்பட்டிருந்த இடத்தில் ஐந்து பேர் ஏற்கனவேகுடிக்க ஆரம்பித்திருந்தனர். உள்ளே நுழையும் போதே சுதன்என்னை நோக்கி, “குடிகாரன் வந்துட்டான்எனச் சொல்லிகத்திச் சிரித்தான். “லேய் சும்மா இருடே..” சொல்லிக்கொண்டே அவர்களின் அருகில் அமர்ந்து கொண்டேன். இருந்தவர்களில் சிலர் ஏற்கனவே எனக்கு பரிச்சயமானவர்கள்தான். முன்னே திராட்சையும், வெள்ளரிக்காயும், பொறித்தசிக்கன், மீன் எனப் பல வகையறாக்கள் இருந்தன. அவர்கள்கையில் ரெட் லேபிள் இருந்தது. பசியில் வலது கைதிராட்சையை நோக்கி செல்ல, இடது கையில் ஒரு கப்பைஎடுத்து ரெட் லேபிள் பாட்டிலை நோக்கி நீட்டவும், “மாப்ள.. இது எங்களுக்கு, கொஞ்சம் தாம்ல இருக்கு. ஏற்கனவேரெண்டு பெக் போய்டுச்சு. நீ கடைல போய் உனக்கு பிடிச்சதவாங்கிட்டு வா. மாத்தி மாத்தி அடிச்சா தல வலிக்கும்.  உனக்குஎன்ன ஐட்டம் வேணுமோ வாங்கிக்கோ. இன்னைக்குசாயந்திரம் தான மெட்ராஸ் போறகேட்டுக் கொண்டேகையில் இரண்டாயிரத்தைத் திணித்தான். :ஆமாம்எனத்தலையை அசைத்தபடி நான் எழும்பவும், “பாஸ், யாருக்காச்சும்ஏதாவது வாங்கணும்னா மாப்பிளைட்ட சொல்லுங்கசுதன்அவர்களை நோக்கிச் சொன்னான். அவன் என்னை அழைத்ததுஅங்கே எடுபிடி வேலைகளுக்காகவும், சிகரெட் வாங்கவும்தான் என எண்ணிக் கொண்டேன். இருந்தாலும் கையில்இருந்த இரண்டாயிரம் ருபாய் என்னை இயல்பாக்கியது, வலிந்து திணித்தப் புன்னகையை வீணாக்கினேன். அவர்களில்ஒருவரின் பைக் சாவியை வாங்கிவிட்டு அவர்கள்சொன்னதையும் காதில் போட்டுக் கொண்டேன்.

முதலில் ஏதாவது சாப்பிடவேண்டும்எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். வண்டி முத்து தியேட்டர் ஏத்தம் வரவும், தானாககை வண்டியை வலதுபக்கம் திருப்பி டைம்பாஸ்மதுக்கடையை நோக்கி செலுத்தியது. நூற்று ஐம்பதுகுவார்ட்டரில் இரண்டை வாங்கி வழக்கமாக அமரும் சப்ளையர்மணி அண்ணன் மேஜையில் அமர்ந்தேன். காலையிலே கூட்டம்அதிகமாகத் தெரிந்தது. வெக்கைக்காக மரநிழலில்போட்டிருந்த பெஞ்சுகளில் தான் அதிகம் பேர் இருந்தார்கள். எல்லோரின் முகமும் ஒரே சாயலில் இருந்தன. “மக்ளே நேத்துஎவனுக கூட வந்த.. வந்தவனுக ஒரே சலம்பல் கேட்டியா. அண்ணே உனக்க முகத்துக்காண்டி தான் விட்டேன்.”, எனக்குஉண்மையிலே நேற்று நடந்தது நினைவில் இல்லை. சிரித்துக்கொண்டே சமாளித்தேன். பசி என் உடலெங்கும் படர்ந்துகொண்டிருந்தது. மணி அண்ணன் எப்போதும் மதியம் சாப்பிடபழையசோற்றைக் கொண்டு வருவார். ஓரிரு முறை வாங்கிசாப்பிட்டுள்ளேன். “அண்ணே, அடிக்க முன்னாடி பசிக்கு. கஞ்சி வச்சுருக்கியா“, “குடிச்சா சாப்பிடணும். பாரு கொசுமாறி இருக்க. உள்ள வாஅவர் என்னை அழைத்துச் சென்றார். அவர் கால் கிண்டியபடி முன்னே நடக்க, அவரோடு பாரின்சமையல் அறைக்குச் சென்றேன். குவார்ட்டரில் கொஞ்சம்அவருக்கும் கொடுத்து, கஞ்சியைக் குடித்தேன். பிறகு இரண்டுபெக்கிலே தலைவலி தீர்ந்தது.

வெளியே வந்ததும் டைம்பாஸ் பாரில் எப்போதும் தென்படும்வெண்ணுடைத் தரித்தவரைக் கண்டேன். நான் என் மேஜையில்அமரவும், என் அருகிலே அமர்ந்துகொண்டார். எப்போதும்போலவே நேர்த்தியாக தலைவாறியிருந்தார், வாசனைத்திரவியங்கள் அவ்விடம் முழுக்க சுகந்தத்தைப் பரப்பியது. “இன்னைக்கு என்ன சீக்கிரம்  வந்துட்ட. ஆனா நானும்நேரத்துக்கு வந்துட்டேன் பாத்தியாசொல்லிவிட்டுஅமைதியாக என்னையே வெறித்தார். எனக்கு எதுவுமே பேசத்தோன்றவில்லை. “இன்னைக்கு யார கொள்ளி வச்ச. பாக்கெட்டுல ரூவா கட்டு கட்டா இருக்கே. நானும் ரொம்பநாளா கூட வாரேன். எனக்கு ஒரு குவார்ட்டர் வாங்கித்தாயேன்.”, “பாரின்ல இருந்து பிரெண்ட் வந்துருக்கான். அவன்தான் ரெண்டாயிரம் கொடுத்தான்“, அவரின்பாவனையான பேச்சு வெறுப்பைக் கொடுத்தது, இருந்தாலும்தனிமையை நான் விரும்பவில்லை. மீதி இருந்த மதுவில்கொஞ்சம் அவருக்கு ஊற்றினேன். அவர் எதை எதையோபேசிக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக நிதானம்ஆனவனாக உணர்ந்தேன். குடித்தவை என்னுள் நிறையாமல், அருந்த அருந்த தழும்பிக் கொண்டிருப்பதை உணரஆரம்பிக்கும் போது நான் எதுவுமே அல்லாத, பெயரல்லாத,  இன்னும் பிறக்காத ஞாபகங்கள் அற்ற, தனித்த உயிரியாய்ஆகிக் கொண்டிருக்கிறேன். அது நிகழை மட்டுமே உண்டுசெழிக்கிறது.

நாடு நாசமாகப் போகிறது என்றார், உலகம் ஒரு நாள் அழியும்என்றார், கடல் வற்றிப் போகும் என்றார், வானம் அறுந்து விழும்என்றார். எல்லாமுமே நடக்கட்டும். நானும் வேகமாகசீக்கிரம்நானும் செத்துப் போயிடனும்.” என்றேன். என்னையேமுறைத்தவர்இருவது இருவத்தஞ்சு வயசு இருக்குமா ஒனக்கு. எதுக்கு இப்போவே சாக்காலம். அருவத்தஞ்சு வயசாயி நானேபொழச்சு இருக்கேன். “, “நேத்து ரெண்டு காலேஜ் பயக்கஆக்சிடெண்ட் ஆயி ஸ்பாட் அவுட். சாமி அவனுகளலாம்கூட்டிட்டு போகுதுஏனோ விழிகள் நிறைய ஆரம்பித்தன. “அவனுக நெலையழிஞ்சு வண்டியையும் குண்டியையும் திருக்கிஅலைஞ்சா சாமி என்ன பண்ண முடியும் சொல்லுப்போ. ஆனாஉனக்க கத அது கெடயாது. உங்க அம்மைய நான்கண்டிருக்கேன். நெய்தாபிஸ்ல ஓடம் ஓட்டியாக்கும் ஒன்னயவளத்துருக்கா. அவ சீக்கிரம் ஒன்ன கை விட்டுடுவாளா?”, “அதான் ஒத்தைல விட்டுட்டு போய்ட்டாளே. யாருக்கும் நாதேவயில்ல. குப்ப.” இரண்டு பேரும் சிலநிமிடங்கள் எதுவுமேபேசிக் கொள்ளவில்லை. அவர் தான் மௌனத்தை முதலில்வெறுத்தார். “சரி உன்கிட்ட ஒருத்தன் ரெண்டாயிரத்தகொடுத்து அனுப்பி வச்சான்னு சொன்னியே, ஞாபவம்இருக்கா? இல்ல மறந்துட்டியா?”, “அதுலாம் ஓர்ம இருக்கு. இன்னொரு குவார்ட்டர போட்டுட்டு போவோம். கூதிமொவன்என்னைய எடுபிடி வேலைக்குலா கூப்டுருக்கான். பணம்வந்ததும் பயலுக்கு பவுசப் பாத்தீரா?”, “அப்புறம் என்னமயித்துக்கு அவன் கூப்புட்டதும் பெட்டியக் கட்டிட்டுப் போன. ஓசி குடிக்குதான. அப்புறம் பின்ன என்ன ஒன்னைய தலைலதூக்கி வைப்பானா.” அவர் சொல்லியதும் எனக்குள் மெல்லியவெறுப்பு புகையைப் போல மூண்டது. தூரத்தில்நின்றுகொண்டிருந்த மணி அண்ணனை அழைத்தேன். “அண்ணே வெலக் கூடுன ஐட்டமா ரெண்டு குவார்ட்டர்எடுத்துட்டு வாண்ணே.”, “மக்ளே, ரெண்டு எதுக்கு. போனவாரம் ஆனக் கூத்து பத்தாதா? அப்புறம் வள்ளியாமடம் ஓடக்கரைல தான் கெடப்பா“. மணி அண்ணன் பேச்சை நான் காதில்வாங்கவில்லை. அவருக்கும் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்தேன்.

மின்சாரக் கம்பியில் காக்கையொன்று வெகுநேரமாகக்கரைந்து கொண்டிருந்தது. அதேதான் அது ஒருஅற்பப்பறவை‘, அருகில் இருந்தவரிடம் அந்த முழுக்கவிதையையும்சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் அவரைக் காணவில்லை. வழக்கம் போல சொல்லாமல் சென்றுவிட்டார். ‘சாலையோரம்கிடக்கிறது அந்தக் காக்கை அனாதைப் பிணமாகஎனக்குள்சொல்லிக்கொண்டேன். ‘அற்பப் பறவையன்றோ அதுமீண்டும்கடைசி வரியை சொல்லிவிட்டு, வாங்கிய குப்பியில் பாதியைஒரே மடக்கில் குடித்தேன். ஒவ்வொரு துளியும் என் நாவில்படும்போது அதனை நான் வெறுக்கிறேன். நெஞ்சுக்குள்அமிலம் இறங்கியது போல எரிய ஆரம்பித்தது. ஆனாலும்குடிக்கிறேன், ஏன் இந்த பிரயத்தனம். ஏமாற்றுவேலை, பித்தலாட்டம், போலி ஆம் எல்லாமுமே எனக்கு எதிராக நானேநகர்த்தும் காய்கள். மணி அண்ணனிடம் அங்கேவாங்கியதற்கான ரூபாயைக் கொடுத்துவிட்டு எழுந்தேன். “மக்கா சொல்லுகேன்னு தப்பா நெனைக்காத, கொஞ்சம்கொறச்சுக்கோஅவர் சொல்லிக் கொண்டே வழக்கம் போலகாலைக் கிண்டி கிண்டி நடந்து போனார், நானும் தலையைஆட்டிக் கொண்டே வெளியே வந்தேன்.

***

ஒழுகினசேரி சத்திரம் பள்ளிக் கூடத்தின் அருகிலேநின்றுகொண்டிருந்தேன். எதிரே உப்பில் ஊறவைத்த மாங்காய்விற்கும் பாட்டி இருக்க மாட்டாளா? அம்மை மாலை பள்ளிவிட்டு என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போதுஎப்போதும் எங்கள் கையில் ஆளுக்கொரு மாங்காய்துண்டிருக்கும். அப்பா டிரைவராக வேலைப் பார்த்தார். எனக்குஇரண்டு வயது இருக்கும் போது வேறொரு பெண்ணோடுஇன்னொரு வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். அம்மைஅவர்கள் முன்னே அழுதுக் கொண்டே என்னை அள்ளிஅணைத்து தூக்கிச் செல்லும் போது அவரின் முகத்தைபார்த்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. அதன் பிறகு அவரைநேரில் எங்குக் கண்டாலும் பேசுவதில்லை.

வாகை மரத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த தட்டையானக்காய்கள், காற்றில் மெல்ல பறந்து வானத்தையே மறைப்பதுபோலவிருந்தது. சுந்தர் இன்னும் மாவட்ட நூலகத்தை விட்டுவெளியே வரவில்லை. அவன் உள்ளே சென்று குறைந்ததுஅரை மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். “உள்ள வாடே. வெளியயே நிப்பயா?”, “சரக்கு போட்டுருக்கேன்“, “சரி ஒரு புக்கொடுக்கணும். போய்ட்டு வந்திருகேன்“. சுந்தருக்கு ஒருபழக்கமுண்டு, அவன் படித்த நல்ல கவிதைகளை மறக்காமல்வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பி வைப்பான். பிறகு தான்தெரிந்தது அவன் எல்லோருக்கும் அப்படி அனுப்பிவைக்கிறான் என்று. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான், அப்படித்தான் ஒரு நாள் ஏதேச்சையாக கவிஞர்ராஜமார்த்தாண்டனின் ஒரு கவிதையை அனுப்பினான். அன்றைய இரவு, படுக்கை முற்களைப் போல என் உடலெங்கும்குத்த, வெகுநேரம் பிரண்டபடி கிடந்தேன். காற்றில் அனலின்தகதகப்பு, குடித்த மது வயிற்றுக்குள் கசண்டியாகஅடிப்பிடித்து தலைவரை ஏறியது. அலைப்பேசியை எடுத்துசுந்தர் அனுப்பிய கவிதையை ஏனோ வாசித்தேன்,’எனினும்எனத் தலைப்பிடப்ப்பட்ட அக்கவிதை எனக்காகவே எழுதியதுபோலத் தோன்றவே, அவரைப் பிடித்து போனது. பிறகு அவரின்கவிதைகளை மட்டும் தேடித் தேடிப் படிக்கஆரம்பித்திருந்தேன்.

நேரம் மெதுவாக நகர்ந்தது. எதிரே மதுவிலக்கு காவல்நிலையம் தெரிந்தது. இப்போது செயல்பாட்டில் இல்லை, ஆனாலும் அங்கே நிற்கும் போது மாம்பட்டை வாசனைஇன்றும் வருகிறது. சுந்தர் என்னை நோக்கி வருவதுதெரிந்தது. அவன் அருகில் வரும்போது,  நான் என்னை நேராய்நிறுத்த பெரும்பாடு பட்டேன். “ரொம்ப குடிக்காத. அப்புறம்இதுவே ஒரு நோயாயிடும்“.  “அப்போ நா ஏற்கனவேநோயாளிதான்“, “சொன்னா கேளு. மைண்ட்ட சேஞ்ச் பண்ணு. எனக்கு தெரிஞ்சத சொல்லுகேன். உங்க அம்மா இருந்தாஇப்புடி விட்டுருப்பாங்களா. எப்படியாச்சும் அரியறஎடுத்துருலாம். நாளைக்கு சாயந்திரம் சீக்கிரமா பஸ் ஸ்டாண்ட்வந்திரு. மேனேஜர்ட்ட பேசிட்டேன். ஆரம்பத்துல ஆராயிரம்சம்பளம். டெக்னாலஜிய கத்துக்கலாம். அப்படியே அங்கஇருந்தே படிச்சு அரியற எடுக்கப் பாக்கலாம். பொறவு காலைலகுடிச்சிராத. வேணும்னா பஸ் ஏற முன்னாடி பாத்துக்கலாம். காலைல அடிச்சேன்னு வை சாயந்திரம் எந்திக்க மாட்ட“. சுந்தர் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ப்ராஜெக்ட்செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கே எனக்காகவும் வேலைக்குப்பேசியிருந்தான். “அப்போ இன்னைக்கி நைட்டுக்கு..” தலையைச் சொறிந்தேன். அவனிடமே அன்றைய இரவுக்குமுன்னூறு ருபாய் வாங்கிக் கொண்டேன்.

வீட்டிற்கு வருவதை நான் வெறுத்தேன். அரவமே இல்லாதவெற்றுக் கூடு அது. சித்தி வீட்டில் இருந்து மதியம்கொண்டுவைத்திருந்த சோறு நீர்ப்பிடித்து இருந்தது. குழம்பைஊற்றி வாயில் வைக்கவும் பிரட்டிக் கொண்டு வந்தது. எழுந்துகழிவறை செல்லும் முன்னே அங்கேயே வாந்தி எடுத்தேன். எவ்வளவு முயன்றும் அங்கிருந்து உடலை நகர்த்தமுடியவில்லை. அதிலேயே படுத்தேன், எதிரே சுவற்றில்அம்மாவின் புகைப்படம் என்னையே பாவமாக பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றவே, அதனைப் பார்ப்பதைத்தவிர்த்தேன். ‘நீ இருந்திருந்தா, இப்போ என்னைய வாரியலஎடுத்து அடி வெளுத்து இருப்பேலா. என்னைய இப்புடிவிட்டுருப்பியாதரையிலே ஓங்கிக் குத்தினேன். விரல்களிடையே இரத்தம் வரவும் கண்களை பிரயத்தனப்பட்டுமூடி, உறங்க முயற்சி செய்தேன்.

காக்கைகள் கூட்டத்தின் நடுவே இருந்தேன். அழகானகாக்கைகள், அதன் மேனிகளில் வெயில் பட்டு மின்னின. ஒருகாக்கை மட்டும் என்னையே ஈரம் நிறைந்த கண்களோடுநோக்கியது. நான் அதையே கூர்ந்து கவனிக்கவும், பின்னால்அம்மாவின் குரல் கேட்டது. ‘ஆடி அம்மாசிக்கு காக்காக்குசோறு வச்சுட்டு தாம்ல நாம திங்கணும். இன்னா இதக்கொண்டு ஓட்டுக்க மேல வை. செத்துப் போனவலாம்காக்காவா நம்மள பாக்க வருவா. அவாளுக்கு பசியதீக்கணும்லா‘, நான் குரல் கேட்டுத் திரும்பவும் பின்னால்அம்மையில்லை. ஆனால் வாழையிலையில் பருப்பும் அவியலும்பிசைந்து வைத்த சோறு இருந்தது. நான் குனிந்து இலையைகையில் எடுக்கவும் அங்கே காக்கைகளே இல்லை.

***

கருவேலமரத்திற்கிடையே எவ்வித சத்தமும் இல்லாமல்அமைதியாக இருந்தது. நான் உள்ளே சென்று பார்க்கும் போதுஐவரும் கீழே மண்ணில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுதன் கொடுத்த மிச்ச ரூபாயையும், பைக் சாவியையும் அவன்பாக்கெட்டில் சொருகி வைத்தேன். நடுவில் ரெட் லேபிள்பாட்டிலில் கொஞ்சம் மிச்சம் இருந்தது. அவர்களுக்கெனவாங்கிய பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து, மீதி இருந்தமதுவையும் குடித்து, சாப்பிட்டு முடித்தேன். தூரமாக இரயில்போகும் சத்தம் கேட்டது. இந்த இரயில் எங்கேதான்போகிறது. யாரேனும் ஒருத்தராவது பெரும் நம்பிக்கையில்அது சேரும் இடத்தினை எண்ணி கனவொன்றைஉருவாக்கியபடி செல்லலாம். யாரேனும் ஒருத்தராவது இழந்தவாழ்க்கையின் கழிவிறக்கத்தில் விழித்தபடி நாளையைஎண்ணி பயத்தோடும் செல்லலாம். எது எப்படியோ! இந்தஇரயில் போய் சேரவேண்டிய இடத்திற்குத் தானே சென்றுதீரும். கண்ணை மூடி நானும் மண்ணில் சாய்ந்தேன். இந்தமண் அப்படியே வாயைப் பிளந்து என்னை விழுங்கிக்கொள்ளாதா? அங்கே என் அம்மை கையில் தோசைக்கரண்டியோடு நிற்கலாம். நான் பசிக்கிறது எனச் சொல்ல, அவளோ முட்டைத் தோசையா? உள்ளித் தோசையா எனக்கேட்கலாம். ஆனால் மண் என்னை விழுங்க மறுக்கிறது.  எதுநிரந்தரம்? இந்த உடலா? இல்லை மண்ணாங்கட்டி உயிரா? உடலா? உயிரா? இரண்டுமே இல்லையா? ஞாபகங்கள்மட்டுமாவது நிரந்தரமா? பிறருக்கு நாம் கொடுக்கும்ஞாபகங்கள், பிறர் நமக்கு கொடுக்கும் ஞாபகங்கள். அதையாவது நான் கொடுத்திருக்கேனா? சுயநலவாதி, குடிகாரா உறங்கு. ம்ம் உறங்கு.

சட்டென்று விழித்தேன். என் அருகில் யாருமேயில்லை. அலைப்பேசி பாக்கெட்டில் இருக்கிறதா? எனப் பார்த்தேன். இரண்டாயிரத்தில் மிச்சமும் அதனோடு சேர்ந்து இருந்தது. தள்ளாடியபடியே வீட்டிற்குச் சென்றேன். உள்ளே என் சித்திஇருந்தால், அவளைக் கவனிக்காமல் செல்வது போலகழிவறை சென்று முகத்தைக் கழுவி மங்களாவிற்கு வந்தேன். நேற்றே எடுத்த வைத்த துணிப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு அம்மையின் புகைப்படம் முன் நிற்க தோன்றியது. கண்ணை மூடி அமைதியாக நின்றேன். நடந்ததை எல்லாம்மறக்க வேண்டும். முடியுமா? குறைந்தப்பட்சம் முயற்சிக்கலாம். சித்தி என் முன்னே வந்தவள் கையில் ருபாய் நோட்டைத்திணித்தாள். எனக்கு சிரிப்பு வந்தது, அது அவளையும்தொற்றிக் கொண்டது. அவள் என்னைப் பார்த்து , “ஊருப்பக்கம் கொஞ்ச நாள் வராத மக்ளே. உங்க அம்மைக்காகசொல்லுகேன். அவளுக்கு உசுரு அடங்கி போயிருக்கும்ன்னுநெனைக்கியா! உன்னப் பாத்து பாத்து வெந்து போய்கெடப்பா. எங்கயாச்சும் போய் நல்லா இருவழியும்கண்ணீரோடு சொன்னாள்.

***

பேருந்து ஏறும் முன் என்னை ஏற்ற மறுத்தனர். சுந்தர்எவ்வளவோ பேசிப் பார்த்தான். “இவன உள்ள ஏத்துனா மத்தஆளுங்க எல்லாம் எங்களத் தான் ஏசுவானுக. சாக்கட நாத்தம்அடிக்கு“. சுந்தர் அதன் பிறகு எதுவுமே பேசவில்லை. வண்டியின் டிரைவர் எங்களையே பார்த்திருப்பார் போல, எனக்கு புக் செய்த சீட்டை கிளீனர் எடுத்துக் கொள்வார்என்றும், நான் வேண்டுமானால் முன்னால் டிரைவர் சீட்டின்பின்னால் உட்கார்ந்து கொள்ளலாம் எனச்சொல்லியிருக்கிறார். சுந்தர் தள்ளாடிய என்னைப் பேருந்தில்ஏற்றிவிட்டான். நான் அமர்ந்துகொண்ட இடத்தில் இருந்து,சன்னல் வழியே வானத்தை நோக்கினேன். இருளில் எங்குமேமின்மினிப் போல நட்சத்திரங்கள். அங்கே நான் அத்தத்தில்நின்றுகொண்டிருந்தேன். என் அருகே யாருமேயில்லை. ஊதுபத்தியின் வாசனை வரவும் சுந்தரைத் தேடினேன். அவன்என்னருகே வந்து காதில் ஏதோ சொன்னான். எனக்கு எதுவுமேபுரியவில்லை. காதுகள் சுற்றியுள்ள ஒலியை கேட்க மறுத்தன. வண்டி முப்பந்தல் வரவும், டிரைவர் வண்டியை நிப்பாட்டினார். அவரின் முகம் எனக்கு நினைவில் இருந்தவொன்று, ஆனால்ஏனோ கண்களில் காட்சியாக எழ மறுத்தன. முப்பந்தல்இசக்கியை வேண்டிக்கொண்டு வண்டியை எடுப்பது வழக்கம். சட்டென்று என் நெற்றியில் குங்குமத்தைப் பூசவும், நான்டிரைவரைப் பார்த்தேன். என் கண்கள் கலங்கி, நெஞ்சுஅடைத்தது. நான் அழுதுகொண்டிருந்தேன். ‘உங்கஅப்பனுக்க முன்ன நல்லா வந்து காட்டணும் மக்ளே. அப்போதான் அம்மைக்க சீவன் போகும்அம்மையின் குரல்மண்டைக்குள் ஒலிக்க ஒலிக்க, நான் இன்னும் இன்னும்மொத்த கண்ணீரையும் முப்பந்தல் இசக்கிக்கு காணிக்கைஆக்கிக் கொண்டிருந்தேன். அண்ணாச்சிராஜமார்த்தாண்டனின் ஒரு கவிதை கொஞ்சம் கொஞ்சமாய்உயிர்ப்பித்தது.

தொடங்கியாயிற்று

தாமதமாகவே என்றாலும்

தீர்மானத்துடன்.

***

-வைரவன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *