சூதாட்டம்
 
 
நான் சூதாடுகிறேன்
தூய்மைக்கும் அசுத்தத்திற்கும் இடையில் 
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில்
காலத்திற்கும் வெளி க்கும் இடையில் 
என் காய்களை உருட்டி விளையாடுகிறேன்
இது கரியாக்கும் சூதாட்டம் இல்லை
அசட்டுத்தனத்தால் உருட்டப்படுவதில்லை
சாவை முன்னிருத்தி  அரங்கில் தலைகுத்தி
துருத்தி நிற்கும் அறத்தை துடைத்தெறிந்து
உருட்டப்பட்டுகின்றன பகடைக் காய்கள்
இரவும் பகலும் உருண்டன 
நான் தோல்வியை தழுவும்பொழுதெல்லாம் 
ஆடைகள் கலையப்பட்டன
ஆட்டக்காரர்கள் பெருமைபொங்க சிரித்தார்கள்
என்னை தோற்கடிப்பதின் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்
நான் சிரித்தேன்
உடல் குழுங்கிச் சிரித்தேன்
என் அறிவு பலமிழந்து போயின
மனம் நிலைகொள்ளாது அலைந்தது
பதற்றத்தில் உருட்டப்பட்டன காய்கள்
மீண்டும் தோற்றேன்  
அவர்களை குதுகலப்படுத்தின
நான் கடைசிவரை தோற்றுப்போனவனுடைய 
மகனாகவே இருக்கிறேன்
வெற்றியின் ருசியறிதலை 
என் தலைமுறைவரை அனுபவித்ததில்லை
நீங்கள் சூதின் வலையை 
சரியாகப் பின்னியிருக்கிறீர்கள்  என்றேன்
நீ விட்டில் பூச்சிப்போல் கனகச்சிதமாக
சிக்கியிருக்கிறாய் என்றார்கள்
மனிதத் தன்மையிலிருந்து விலகாது
நான் எந்த பாசாங்கும் அற்று 
நேர்மையாய் உருட்டினேன் 
அசிங்கமாக விழுந்தன காய்கள்
தோல்வியில் அசடுவழிந்து 
உங்கள் முன் பூனையின் வால்போல் நெளிகிறேன்
உங்களது ஆட்டத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றியடைந்துகொண்டிருக்கிறீர்கள்
நான் வெகுளியாய் முகம் கோணி 
உங்கள் கிண்டலுக்கு தயாராகினேன்
உங்களில் யாரோ ஒருவர் 
என் தலையில் பலமாக குட்டு வைத்துவிட்டு விளையாடத்தொடங்கியிருந்தீர்கள்
நான் அழுதேன் உடலெங்கும் தேள்கள் ஊறின
கம்பளிப்பூச்சிகள் என் தலைக்குள்ளிருந்து வெளியேறி
கண்ணீராய் வழிந்தன
வலியைப் பொருட்படுத்தாமல்
என் முறைக்கு பகடிகளை விட்டெறிந்தேன் 
அது சகலதிசைக்கும் உருண்டோடி நின்றன
மேலும் நான் தோற்றேன் பகிரங்கமாய் தோற்றேன்
அவமானத்தில் தலை குனிந்து துயறுற்றேன்
நீங்கள் ஆட்டத்தை துரிதப்படுத்தி பகடியை உருட்டினீர்கள்
அறைக்குள் எங்கிருந்தோ 
தன் துணையை புணரவிரும்பிய பல்லியின் சப்தம்
மௌனமாய் வேடிக்கைப் பார்த்தேன்
இந்த முறை நான் காப்பாற்றப்பட வேண்டும்
உள்ளங்கை விரித்து வேகமாக இறக்கினேன்
உருண்டுருண்டு படுதோல்வி பள்ளத்தில் 
விழுந்தன காய்கள்
எந்த ஆறுதல்களும் என்னை சமாதானம் 
செய்ய இயலாது
என் உள்ளாைடைத்தவிர அனைத்தையும் உருவச்செய்துவிட்டீர்கள்
நீங்கள் முன்கூட்டியே வெற்றியின் சூத்திரத்தை 
அறிந்து வைத்திருக்கிறீர்கள்
ஆட்டம் முடிவடையப்போகிறது
இறுதியாய் என் ஆட்டத்தை ஆடுகிறேன்
எல்லோர் கண்களும் என் நீர்வாணத்தை காண
ஆவாலாய் இருக்கின்றன
என் வாழ்க்கையின் எல்லையை தீர்மானிக்க
காய்களை இருதயம் பக்கம் சுழற்றிவிட்டு
நான் அவர்களை  பார்த்தேன்
அவர்களை என்னை பார்த்தார்கள்
நான் தோல்வியுற்று மிருகங்களின் முன் 
அம்மண இரையாகி  தொழுது 
மலம்போல் சிதறி விழுந்து கிடந்தேன்
 
 
 
 
***
 
 
 
இறை ஆவி
 
 
அடிமையின் மகளே 
உன்னை கடவுளின் சேவகி என்கிறார்கள்
நீ இறை ஆவி 
நல்ல விசுவாசி 
இயற்கையால் இரட்சிக்கப்பட்ட ஆத்மா
யாருக்காகவோ நோய்மை தீர்க்கும் மந்திரங்கள்
எப்பொழுதும் வசனங்களாய் ஜெபிக்கிறாய்  
மனம் நிறைந்து பிரசங்கம் செய்கிறாய்
காலநேரமற்று உன் மனம் 
பிரார்த்தனையில் மூழ்கியிருக்கிறது  
உன்னை காணநேர்கையில் அணங்காசுடர்போல் 
ஔி மின்னி பிரகாசிக்கிறாய்
கடினமான அன்பை சுமக்கும் மனிதர்களுக்காக 
நீ மனமுவந்து ஊழியம் செய்கிறாய்
ஒருநாள் நெகிழ்ந்துருகி நீ காணாமல் போகக்கூடும்
உன்னைப்போல் அப்பழுக்கற்ற தூய கிருபை நிறைந்த
ஒரு புண்ணிய ஆத்மாவை 
நான் வழிபட விரும்பியதில்லை
வெளிப்புறமெங்கும் உன்னைச்சுற்றி 
பரிசுத்த உயிர்கள் பற்றியெரிகின்றன 
சங்கடங்கொள்ளச்செய்கிற 
நிகழ்ந்தங்கள் வைத்திருக்கின்ற உலகை 
நான் துயரங்கொள்ள வேடிக்கைப் பார்க்கிறேன்
உனக்காகவும் வருத்தம்கொள்கிறேன் 
என்னை மன்னித்தருள் இறை ஆவியே 
உன்னை புகழும் மனிதமொழியை 
நான் நிராகரிக்கிறேன் 
கபடநாடக அரங்கில் 
உலகில் எல்லோரும் தீங்கிழைத்தவர்கள் 
என் எல்லைக்குள் விசங்கள் நிறைந்த 
மனிதஜந்துக்கள்
உலாவித்திரிந்துகொண்டிருக்கிறார்கள் 
என் மூளை குளத்தின் நீர்மையில் 
கொடுங்கிரிமிகள் உற்பத்தியாகி 
மொழிநஞ்சை உமிழும் சொற்களை 
நானவர்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறேன்
நோய்மையில் சுண்டிய
கழிவால் உண்டான என்னிந்த உடலை 
பேணி காக்கும் சகோதரியே 
என்னை  சுத்தம் செய்யாதே  
மலத்தில் புழுவைப்போல் நெளிய விரும்புகிறேன் 
உன் பாதங்களை என் அறைக்குள் புகுத்தாதே  
இந்த மண்ணில் அருகதியற்ற உயிரை 
உண்டாக்கிய தாய்தந்தையை வெறுத்து ஒதுக்குகிறேன்
நான் கடவுளின் முன் கீழபடிய மறுக்கிறவன்
உன்னைத்தொழுகும் என் ஆத்மம் 
வஞ்சிக்கப்பட்டு துரோக்கத்தால் வீழ்த்தப்பட்டு 
துடிதுடித்து மரிக்கட்டும்
உன் அமைதியான ஜீவன் நிறைந்த கண்களால்  
இந்த உலகை  பெருக்கிப் பார்க்கிறாய் 
சகலருக்குமான இந்த பூமியில் 
மனிதம் சிதைந்து உருக்குலைந்து அழுகிவிட்டது
இறை ஆவியே கொடிய உலகிலிருந்து
உன்னை நீ தற்காத்துக்கொள்
ஒரு குளிர்ந்தப் பருவத்தில் பனிக்கும் உடைந்து 
பூமியின் நிலத்தில் விழுந்துபோழுதே 
எனக்கான நற்கருணையின் சரவிளக்குகள் அணைந்துவிட்டன
 
***
 
 
 
-அனாமிகா
 
Please follow and like us:

1 thought on “அனாமிகா கவிதைகள்

  1. நல்ல படைப்புகள் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *