கண்ணாடிக்குள் வசிப்பவள்

முகம் பார்க்கும் கண்ணாடிக்குள்
தவறுதலாக நுழைந்து விட்டேன்

மாயத்திரைக்குள் இருந்து அவதானித்த போது
அனைவரும் பக்கநேர்மாறலான விம்பங்களென தென்பட்டனர்

கண்ணாடிக்குள் வசிக்க நேரிட்டதில் சிலிக்காவின் தோழியானேன்

நான் மாய விம்பம் என்பதை மறந்து
மேலும் பல தடவைகள் உறங்கிப்போனேன்

அன்று ஒரு சிறுமியின் தொடுகையினால் திடுக்கிட்டு என்னைத் தேடத் துவங்கினேன்

நான் வெகு தூரத்தில்
தொலைந்திருக்க வேண்டும்

எதையுமே குறிப்பாக சொல்ல முடியாதவாறு
சிலிக்காவால் நிரம்பி வழிந்தேன்

ஒரு பெண்குதிரையின் வேகத்தில்
மாய விம்பமாகிப்போன உண்மையான நான்
பலமாக விழுந்து உடைந்த சத்தத்தை கேட்டதாக
வேறு ஒருத்தி குறிப்பிடுகிறாள்

மெய்யாக சிலிக்காவின் சிறைக்குள்
எனது விம்பம் உடையவில்லை
ஆனால் எழுந்திருக்கவுமில்லை

***

பூனையின் ஓவியம்

சூரியன் குடித்துவைத்த மிச்ச நீருக்காக
காத்திருந்த பூனை
மழை நாளொன்றில்
ஒரு கடலைக் கொப்பளித்தது

தனது விரல்களால் வரைந்த ஒப்பற்ற ஓவியமொன்றை
அறைச்சுவரில் மாட்டுவதற்காக
சிறுமி ஒருத்தி அடம்பிடிக்கிறாள்

எதிர்பாராது
அதன் சிவப்பு நிறம்
கன்வஸிலிருந்து பிரவாகம் எடுத்து அறைமுழுவதும் பரவுகின்றது

ப்றைடா காலோவின்
முள் கழுத்தொட்டி மீது
அவள் தொங்குவதான பிரம்மையில்
வானம்பாடிகளின் சிறகுகளை மறந்துவிடுகிறாள்

அதே ஓவியத்திலிருந்த கறுப்புப் பூனை
சட்டகத்திலிருந்து பாய்ந்தோடி விடுகின்றது

மேலும் பல ஓவியங்களை வரைவதற்கு
அவள் ஏற்கனவே நிறங்களை
சேமித்து வைத்திருக்கிறாள்

தனது தலை முழுவதும்
பூக்களைச் சூடிக்கொள்வதா
அல்லது
வண்ணத்திகளைப் பறக்கவிடுவதா என
தீர்மானிப்பதற்குள்

அவள் ஒருபோதும் வெளியேறாதபடி
பூனை அவளை வரைந்து
சுவரில் மாட்டிவிடுகின்றது.

***

– அஸ்மா பேகம்

Please follow and like us:

1 thought on “அஸ்மா பேகம் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *