“என்ன ஓய் மாமனாரே, இந்த கண்ணாடி பாட்டில மாத்ததுக்கு இன்னும் நேரம் வரலியோ?” என்றவாறு அதைத் திறந்து ஓமப்பொடி முறுக்கொன்றை எடுத்தேன். கொதித்துக் கொண்டிருந்த தேநீரை சுழற்றி விட்டுக் கொண்டிருந்த செல்லப்பண்ணன் என் குரலை ஓர்ந்து சட்டெனத் திரும்பினார்.

முகம் மலர, “வாரும் ஓய் மருமவன? ஒம்ம சிவாரிசு இல்லாமத்தான் பழைய பாட்டில தேச்சி வச்சிருக்கேன். பின்ன, ஒமக்கு நம்ம பாட்டில ஒரசுனா மாதி இருக்காதுல்லா?” என்றார்.

“அது செரி, பின்ன, சேர்க்க ஒம்ம கூடல்லா ஓய். பொறவு எங்க வெளங்கும்? சும்மா கதயளக்காம ஒரு டீயப் போடும்.”

“மருமவனுக்கு மீசல்லாம் பயங்கரமா இருக்கே? என்ன ஓய், எம் புள்ளய விட்டுட்டு எவ பின்னயாம் கெறங்கிட்டுத் திரியீரோ?” என்றவாறு கண்ணாடி தம்ளரை வெந்நீர் விட்டு இரண்டு சுழற்று சுழற்றி பட்டென வைத்தார்.

“ஆமாமா, ஒண்ண கெட்டிக்கிட்டே நம்ம நெலம பயங்கரம். இதுல இன்னொருத்தி பின்னாடி வேற போணுமாக்கும்? கடுப்பக் கெளப்பாதீரும்.”

முக்கால் தம்ளர் பாலூற்றி தனியாக கொதிக்க வைத்த தேநீரை அதன் மேல்பகுதியில் இரண்டு வட்டங்களாக விட்டு தம்ளரின் அடிப்பகுதியை தன் தோள் துண்டில் துடைத்தார். ஒரு நொடி என்னைக் கூர்ந்து பார்த்து, “வக்கணை, வக்கணை,” என்றவாறு தம்ளரை கண்ணாடி பாட்டில் மூடியின் மேல் பம்பரம் விடுவதைப் போல சுழற்றி விட்டார். தம்ளர் எப்போதும் போல சரியாக மூன்று முறை சுற்றி நின்றது. செல்லப்பண்ணன் தனக்கேயென வைத்திருக்கும் பாணி.

“என்ன, லைட்ஸ் தானா இப்பவும்?” என்று கேட்டவாறு ஒரு லைட்ஸ் சிகரெட்டை எடுத்து நீட்டினார்.

“அதெப்படி மாத்த முடியும்? மாமனாருக்க டீயும் லைட்ஸும் சேர்ந்தாதான ஒரு இது.”

பள்ளி நாள் முதல் எனது பெரும்பாலான நேரத்தை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது வடசேரி பூங்காவும் பக்கத்து செல்லப்பண்ணன் பெட்டிக் கடையும் தான். என் நண்பர்கள் கூட்டத்தின் முதல் குடி, முதல் அடிதடி, முதல் காதல், முதல் எல்லாமும் செல்லப்பண்ணன் கடையின் முன் தான். வாந்தியெடுத்து கிறங்கிக் கிடந்தாலும் தூக்கிக் கழுவி விட்டு கடையின் பின்புறம் உள்ள மாடன் பீடத்தின் அருகே கிடத்துவார்.

“பின்ன என்ன விசேசம் மக்ளே? எத்தன மாசம் லீவு இந்த ட்ரிப்பு? பிள்ளேலும் வந்திருக்குல்லா?”

“ஆமா மாமா. ரெண்டு மாசம் இருப்பேன். எளையவளுக்கு இன்னிக்கி பொறந்த நாளு. அநாத மடத்துக்கு கூட்டிட்டு வந்தேன். அங்க சாப்பாட்டுச் செலவு இன்னிக்கி நம்ம கணக்கு.”

“கொள்ளாம். அதுக்கே ஒருவாடு ஆயிருக்குமே!”

“அது கொழப்பமில்ல மாமா. ஒரு இருவது ரூவா ஆயிருக்கும். அதெல்லாம் நம்ம பாக்கதில்ல. ஒம்ம மவ டிப்பார்ட்மென்ட்.”

“அது செரி, ஒன்னல்லா அவளுக்கு கெட்டிக் குடுத்துருக்கு. அவளானதுனால பொழச்ச. இல்லன்னா, அந்தா, அந்தக் கல்லுல மலந்து கெடந்துருப்ப.” என்று சிரித்தார்.

தற்செயலாக அவர் சுட்டிக் காட்டிய பக்கம் திரும்பிப் பார்த்தேன். பூங்காவின் கம்பிகளுக்குக் கீழே கிடந்த எங்கள் ஆஸ்தான கருங்கல்லின் மீது ஓர் உருவம் குத்துக்காலிட்டு உட்கார்ந்து முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது. ஏதோ தோன்றியவனாக திரும்பி செல்லப்பண்ணனைப் பார்த்த போது சட்டென ஒரு காட்சி கண் முன் வந்து போனது. இல்லை, காட்சியில்லை. குரல். மீண்டும் திரும்பி அந்த உருவத்தைக் கூர்ந்து கவனித்தேன். என்னையறியாமல் என் கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டேன்.  அந்தக் குரல், கம்பனின் குரல். பாரதியின் குரல். ஈன்று புறந்தந்த குரல். ஈதல் இசைபட வாழ்தல் என்ற குரல்.

“மாமா, அது..” என்று செல்லப்பண்ணனைப் பார்த்தேன்.

“என்னத்தச் சொல்லதுக்கு மக்ளே? அவரு தான். இங்கனயே தான் கெடப்பு. யார் யாருக்கு என்னத்த எழுதி வச்சிருக்குன்னு ஒரு எழவும் புரிய மாட்டுக்கு. அவருக்க நடையும் பேச்சும், என்னா மரியாத! இப்ப சீண்டதுக்கு ஆளில்ல.”

தம்ளரை வைத்துவிட்டு திரும்பி நடந்தேன். அக்கருங்கல்லின் அருகே சென்று நின்றேன். கைகள் இயல்பாகக் குவிந்து மார்பிற்குச் செல்ல, “சார், வணக்கம் சார்.” என்றேன்.

சடை பிடித்த, முழுதும் நரைத்த தலை. நரைத்த புருவம். உள்ளொடுங்கிய, வெளிச்சத்தை அஞ்சுவது போன்ற விழிகள். விரிசல் விழுந்த கருப்புச் சட்டமிட்ட கண்ணாடி. குழி விழுந்த கன்னங்கள். நீண்ட சேறு படிந்த தாடி. மார்பில் இரண்டடுக்கு ருத்திராட்ச மாலை. நடுவே ஐயப்பன் டாலர். திறந்து கிடந்த சட்டை நீண்ட நாட்களுக்கு முன் வெள்ளையாக இருந்திருக்கும். கறைகளும் ஈரமும் பரவியிருந்த காவி வேட்டி. குத்துக்காலிட்ட படி தன் கால் விரல் நகங்களை நோண்டிக் கொண்டிருந்தார் சித்தாந்த ரத்தினம், கம்பதாசன் மனுநீதி நாயகம் பிள்ளை, என் தமிழ் ஆசிரியர்.  அருகில் அந்தக் கருங்கல்லின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஓர் ஒடங்கம்பு.

மீண்டும், “சார், வணக்கம் சார்.” என்றேன். அவர் எதையோ முணுமுணுத்தவாறு முன்னும் பின்னுமான தன் ஆடலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். சிறிது நேரம் அவரருகே அப்படியே நின்றேன். சில முறை அழைத்தும் பார்த்தேன். திரும்பி செல்லப்பண்ணனைப் பார்த்தேன். அவர் அடுத்த வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

திடீரென என்னருகே எழுந்து நின்றார் மனுநீதி சார். அந்த ஒடங்கம்பைக் கையிலெடுத்து ஊன்றி நிமிர்ந்து கம்பீரமாய் இரண்டடிகள் எடுத்து வைத்து முன் வந்தார். யாருடன் என்றில்லாமல் முன் பார்த்து கையசைத்து ஏதோ சொன்னார். பின், இடக்கையைப் பின்னால் கட்டியபடி மெல்ல அடியெடுத்து வைத்து இடமும் வலமுமாக நடந்தார். முன் நிமிர்ந்த தலையுடன் பாட ஆரம்பித்தார்.

“ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ

தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ

ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ”

உடல் சிலிர்க்க அவரது தமிழ் வகுப்பின் நினைவு மேலெழுந்து வர அசைவற்று நின்றிருந்தேன் நான். பாடல் முடிந்ததும் என்னைப் பார்த்து திரும்பி நின்றார்.

“என்ன டே, திருதிருன்னு முழிக்க? எங்க ஆளு என்ன சொல்லுகான்னு புரிஞ்சுதா?” என்று புன்னகைத்தார்.

நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றேன். முதல் முறை என்னை மேடையேற்றி விட்டு முன் வரிசையிலிருந்து தைரியம் சொன்ன அதே புன்னகை.

“என்ன ஒரு வார்த்த பாரு..இன்னும் செத்துத் தொலையாம இருக்கானேன்னு மத்தவனுக சொல்லிருவானேன்னு பொலம்புகான் குகன்.” என்று சொல்லி மீண்டும் இடம் வலமாக நடக்க ஆரம்பித்தார்.

“சார், என்னத் தெரியுதா சார்?”

இந்த முறை உடனடியாக என் முகத்தைப் பார்த்து யோசிப்பதைப் போல நின்றார்.

“சார், நான் ஆட்டோ முருகன் மகன். நீங்க தான் எனக்கு…” சொல்லி முடிப்பதற்குள் நெருங்கி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டார் மனுநீதி சார். அந்த ஒடங்கம்பு எங்களுக்கிடையில் விழுந்து துள்ளி அடங்கியது.

“சார், என்ன சார்? இப்பிடி..” என்று கேட்க ஆரம்பித்தவன் நிறுத்தி, “சார், நான் யு.எஸ்ல இருக்கேன் சார். ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேரும் தமிழ் வாசிக்கிறாங்க சார். இப்ப பாரதி பாடல்கள் படிக்கிறாங்க.” என்றேன். சார் என் கைகளை அழுத்திப் பிடித்து நின்றார். அவரது தலை மெல்ல ஆடிக்கொண்டிருந்தது. நான் சொன்னது அவருக்குப் புரிந்திருக்குமா என்று யோசித்து நின்றேன்.

“பாரதி..பாரதி..ஆமா, சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்!..

என்ன திமிர், என்ன ஆணவம் பாத்தியா? மத்தவன் எல்லாத்தயும் மூடரேன்னு சொல்லுகாம் பாரு. அவன் இருக்க எடம் அப்பிடியாக்கும். கொன்றழிக்கும் கவலைங்காம் பாத்தியா? நம்ம தான அவன கொன்னோம்? மானங்கெட்ட பயலுவோ. பிச்சக்காரப் பயலுவோ. போட்டுச் சுடு சவத்துப் பயக்கள..” என்று சொல்லிவிட்டு, கருங்கல்லின் மீது கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்தார் மனுநீதி சார்.

“சார், வாங்க சார், டீ சாப்டுவோம்.” அவர் கவனித்த மாதிரியில்லை. திரும்பி செல்லப்பண்ணன் கடையை நோக்கிச் சென்றேன்.

“டேய் மாதேவம்பிள்ள, என்ன டே காலைல ஒண்ணும் முழுங்கலயோ? இங்கன வா. இந்தா. போயி ரெண்டு பழத்த உரிச்சி போட்டுட்டு வா. தமிழ் கேக்கும்போ பசியா இருந்தா வெளங்குமா டே?” என்று சொல்லி தன் சட்டைப் பையிலிருந்து சில்லறைகளை எடுத்துத் தருவார் மனுநீதி சார். எனக்கு மட்டுமல்ல, என் வகுப்பில், எங்கள் பள்ளியில் பலருக்கும். எல்லோரையும் அவர் மாதேவம்பிள்ளை என்றுதான் அழைப்பார். அவர் அழைக்கும் எல்லோரும் மாதேவம்பிள்ளை தான். அல்லது, அப்படி இருக்கத்தான் விரும்பினோம். வேறு பெயர்கள் அவருக்குத் தேவையாக இருக்கவில்லை. மதிய உணவின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பிற்குச் சென்று மாணவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவார். நண்பகல் வேளையில் வீட்டிலிருந்து வரும் அவரது பெரிய சாப்பாட்டுக் கூடையில் குறைந்தது ஐந்து பேருக்காவது சாப்பாடு இருக்கும். சாப்பாட்டை விட, சாப்பிடும்போது அவர் சொல்லும் கதைகளுக்காக தேனீக்களாக அவரைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கும்.

தம்ளர்களை கழுவி அடுக்கிக்கொண்டிருந்த செல்லப்பண்ணன் என்னைப் பார்த்ததும், “என்ன மருமவனே! மொகம் வாடிப் போய்ட்டு. நமக்கும் வருத்தந்தான். என்ன செய்யச் சொல்லுக? ரொம்ப வருசம் முன்னாடியே பொண்டாட்டி போய்ட்டா. ரெண்டு மவனுவளும் பம்பாயோ, டெல்லியோ. இங்க, அந்த கடக்குட்டி பிள்ளதான் வச்சிப் பாத்தா. பின்ன, ரிட்டயர்மென்ட் ஆன பொறவு கொஞ்ச நாளக்கி ஆள வெளியக் காணல.” என்றார். “சாருக்கு கட்டஞ்சாயா கொண்டோய் குடுக்கியா?” என்று கேட்டார். நான் ஆமெனத் தலையாட்டி யோசித்தவாறு நின்றேன்.

மனுநீதி சார் என்றாலே வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் தான். அவரது உடைகளின் வெண்ணிறம் அசாதாரணமானது. ஒருபோதும் அழுக்கேறா வெண்ணிறம். சட்டைப்பையிலிருந்து எட்டிப் பார்க்கும் அந்த சிவத்த மூடியுடைய பேனா, வகுப்பில் நுழையும்போது வாசலில் நிதானமாக கழற்றிப் போடும் தோல் செருப்பு, எப்போதும் அவர் கைகளில் வைத்திருக்கும் வெண்ணிற அட்டை போடப்பட்ட பாரதியார் கவிதைகள் புத்தகம், மேசையில் இருந்து ஜொலிக்கும் வெள்ளி மூக்குப்பொடி டப்பா. அவருடைய பஜாஜ் சேட்டக்கின் சத்தம் கேட்டால் இரு புறமும் எல்லோரும் ஒதுங்கி நின்று வணங்கி வழிவிடுவதைப் பார்க்க ஏதோ பேரரசனின் நகர் நுழைவைப் போலவே இருக்கும். ஒருநாள் அவரோடு பின்னிருக்கையில் உட்கார்ந்து நான் வந்ததைப் பார்த்த நண்பர்கள் எல்லாம் அன்று முழுதும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

சரியாக இருபது நிமிடங்கள் மட்டுமே வகுப்பெடுப்பார். அதற்குள் எங்களுக்குள் நிகழ்ந்து விடுகிற நெகிழ்ச்சியையும், எழுச்சியையும் தாண்டி நாங்கள் மீள்வதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடிக்கும். கருப்புச் சட்டமிட்ட மூக்குக் கண்ணாடியின் ஊடாக புன்னகையோடு அவர் உற்றுப் பார்க்கும்போது மொத்த வகுப்பும் அசைவற்று இருக்கும்.

“என்னடே, நம்ம ஆளுக எப்பேர்ப்பட்டவனுக பாத்தியா டே? தொடைய அறுத்து வச்சிருக்கான் ஒருத்தன், தனக்க தேரையே ஒரு செடிக்கா சுட்டி விட்டுட்டு வந்திருக்கான் இன்னொருத்தன். இதெல்லாம் சும்மா பெருமைக்கு சொல்லதில்ல பாத்துக்க, அப்பிடியாக்கும் வாழ்ந்திருக்கானுவோ! சும்மா மீன்கறிக்கும் அவியலுக்கும் அலையது இல்ல, மாதேவம்பிள்ள பொறந்தான், அப்பிடி வாழ்ந்தான்னு இருக்கணும், என்ன? மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் மாதிரி! புரிஞ்சுதா டே?”

தனது ஆப்த வாக்கியங்களை உணர்ச்சி பொங்க அடுக்கிவிட்டு எங்களுக்கான வேலைகளைக் கொடுத்த பின் தன் நாற்காலியில் உட்கார்ந்து கண்ணாடியைக் கழற்றி நிதானமாக மடக்கி மேசையின் மீது வைப்பார். பின், சாய்ந்து உட்கார்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் போலிருப்பார். என் வேலைகளினூடாக அவர் என்ன செய்கிறாரென்று கூர்ந்து பார்த்திருப்பேன் நான். ஒவ்வொரு நாளும், சொல்லி வைத்ததைப் போல, மெல்ல தன் மோதிர விரலிலிருந்து மோதிரத்தை அசைத்தசைத்து கழற்றுவார். அதைத் தன் உள்ளங்கையில் வைத்து மடக்கி ஒரு சில நொடிகள் கண்மூடி இருப்பார். அவர் ஏதோ பாடுவதைப் போலவும் தனக்குத்தானே முனகுவதைப் போலவும் இருக்கும். மணியடிக்கவும் அவர் கண்களைத் திறந்து ஒரு சுற்று எங்களை நோட்டம் விட்டு எழுந்தவாறு மூக்குப் பொடி டப்பாவைத் திறக்கவும் சரியாக இருக்கும்.

“எப்படியாப்பட்ட ஆளு! அவரு எதுக்கு சூசைடு பண்ண நெனச்சாருன்னு ஒண்ணும் வெளங்கல பாத்துக்க.”

அதிர்ச்சியில், “சூசைடா? என்ன மாமா சொல்லுகியோ?” என்றேன்.

“அந்தக் கத தெரியாதா ஒனக்கு? ரெண்டு தடவ தப்பிச்சி வந்தாக்கும் இங்கன கெடக்கது. மொத தடவயே போயிருக்க வேண்டியதாக்கும். கழுத்து நல்லா நெரிஞ்சி நாக்கு தள்ளிட்டுன்னு சொன்னாங்கோ. பொழச்சி வந்தது புண்ணியம். மனுசன் என்ன நெனப்புல இருந்தாரோ? ரெண்டு மாசம் கழிச்சி ஒழுகினசேரி டிராக்குல போயி படுத்துக் கெடந்துருக்காரு. நல்ல வேளக்கி எவனோ பாத்து ஆளக் கூட்டிருக்காம்.”

“நம்பவே முடில மாமா. நான்லாம் உருப்பட்டதே சார்னால தான். இல்லன்னா எங்கயாம் கொத்த வேலக்கிப் போயிருப்பேன். எத்தன வேர படிக்க வச்சிருப்பாரு இந்த மனுசன்!”

“பின்ன, இங்க எடுபிடிக்கு நின்ன எம் மவன காலேஜ் படிக்க வச்சே தீருவன்னு அடமா இருந்த மனுசன்லா! சொன்னதோட விடாம மூணு வருஷமும் அவருதான் பீஸ் கெட்டுனாரு. அவர இப்பிடி பாக்கக் கொள்ளாமத்தான் நானும் இருக்கேன்.”

“ஏன் மாமா சூசைடு பண்ண நெனச்சாரு? எதாம் வெளிய வந்திருக்கும்லா?”

“கடவுளுக்குத் தான் வெளிச்சம் மருமவன. டெய்லி சாய்ந்தரம் பேத்தியக் கூட்டிட்டு வாக்கிங் வருவாரு. நம்மட்ட ஒரு  கட்டஞ்சாயா அடிச்சிட்டு பேத்திக்கு முறுக்கு வாங்கிக் குடுப்பாரு. இதே கல்லு பெஞ்சில தான் அந்தப் பிள்ள இருக்கும்.”

“போன தடவ ஊருக்கு வந்த சமயம் நானும் பாத்தேன் மாமா, நம்ம ஸ்கூல் பக்கத்துல போய்ட்டிருந்தாரு, அவசரத்துல நின்னு பேச முடில. ஆனா, எப்பயும் வெள்ள வேட்டி சட்டைலல்லா போவாரு? அன்னிக்கி பேண்ட் சட்டைல்லாம் போட்டுட்டு, ஆளே அடையாளம் தெரியல்ல. ஆனா, மனசுக்குள்ள ஒரு சந்தோசம் வந்து. செரி, ஒருநாள் போயி பாக்கணும்னு நெனச்சேன், நடக்கவேல்ல. ம்ம்‌ம்..பொறவு என்னாச்சி மாமா?”

“சில சமயம் அந்தப் பிள்ள கல்லுல இருக்கும்போ இவரு அவ முன்னாடி நின்னு ஏதோ பேசிட்டே இருப்பாரு. நானும் ஒண்ணும் பெருசா நெனைக்கல. பின்ன, வாத்தியாருல்லா, பேத்திக்குக் கத கித சொல்லுகாருன்னு நெனச்சேன்.”

“அப்போ பாக்கதுக்கு நார்மலா தான் இருந்தாரா? கிளாஸ்ல எப்பிடி கத சொல்லுவாரு தெரியுமா?”

“கேளு மருமவன. ஒருநாள் எதேச்சயா பக்கத்துல போயி பாக்கேன். இவரு என்னல்லாமோ பாட்டு பாடுகாரு. நாடகம் மாதி வசனம் பேசுகாரு. திடீர்னு சிரிக்காரு. திடீர்னு அழுகாரு. பச்சப் பிள்ளக்கி என்னத்தத் தெரியும்? போதம் கெட்ட மனுசன நம்பி எப்பிடி அந்தப் பிள்ளய விட முடியும்? நாந்தான் கூடப் போயி அவரு மககிட்ட விசயத்தச் சொன்னேன். பின்ன, கொஞ்ச நாளக்கி ஆளு இங்க வரத்து இல்ல. செரி விடு மருமவன.”

“எங்கப்பா செத்ததுக்கு மொத ஆளா வந்து நின்னவரு மாமா அவரு. எல்லா செலவும் அவருதான் செஞ்சாரு. கடைசில போகும்போ அவரு போட்டுருந்த செயினக் கழத்தி அப்பா போட்டோ முன்னாடி வச்சிட்டுப் போனாரு. ஒரு ஸ்டூடண்டுக்கு ஒரு வாத்தியார் எதுக்கு இதெல்லாம் செய்யணும்? எனக்கு ஒண்ணு புரியல. செரி, மண்டைக்கி வழியில்லன்னே வைப்போம். அவரு மக ஏன் இப்பிடி விட்டுட்டா?”

“இல்ல மருமவன. அந்தப் பிள்ள தங்கமான பிள்ளல்லா! எத்தன தடவ வந்து கூட்டிட்டுப் போயிருப்பா! இவரு திரும்பத் திரும்ப இங்கயே வந்துருவாரு. பின்ன, போகப்போக, மக யாரு, பேத்தி யாருன்னு ஒண்ணும் தெரியாம ஆய்ட்டு.”

“இப்ப அவ வரதில்லயா மாமா?”

“அவ வந்துட்டு தான் இருக்கா மருமவன. துணி கொண்டாந்து குடுப்பா, சாப்பாடு எதாம் கெட்டிக் கொண்டாருவா. இவரு யாரோன்னு வாங்கி வச்சிட்டு போற வார யார்ட்டயாம் குடுத்து விட்டுருவாரு. கொஞ்ச நாளக்கி வீட்டுல சங்கிலி போட்டு கெட்டி வச்சா போல. நாம் பாக்கல, ஊருல அப்பிடிப் பேச்சு உண்டும். ஆனா, செல சமயம் போதம் வந்த மாதிரி வந்து, ‘என்ன செல்லப்பா, என்ன விசேசம், மவன் பேசுனானா’ன்னும் கேப்பாரு. எப்போ, எப்பிடின்னு ஒண்ணும் புரிய மாட்டுக்கு.”

“எதும் ஆஸ்பத்திரில கொண்டோய் சேர்க்கலாமா மாமா?”

“அதெல்லாம் வேலக்கி ஆவாது மருமவன. அத்துட்டு ஓடி வந்துருவாரு. பின்ன, அவரு ஒண்ணும் பைத்தியம் இல்ல பாத்துக்கோ. இது, ஒரு மாதி, வேற…எனக்கு அப்பிடித்தான் எண்ணம். ஒன்ன மாதி யாராம் வந்து இப்பிடி விசாரிச்சிட்டுப் போறதுண்டு. ஆனா, அவருக்க எடம் அவரு நெனச்ச மாதி தான். ஒரு தொந்தரவு கெடயாது. செரி, விடு. இந்தா, இதக் கொண்டோய் குடு. வேணும்னா குடிப்பாரு.”

கட்டஞ்சாயா தம்ளரை எடுத்துக்கொண்டு மனுநீதி சாரை நோக்கி நடந்தேன். அவர் மீண்டும் அக்கல்லின் மீது குத்தவைத்து அமர்ந்து முன்னும் பின்னும் ஆட ஆரம்பித்திருந்தார். மெல்ல அவரருகே சென்று தம்ளரை அந்தக் கல்லின் மீது வைத்து கீழே உட்கார்ந்தேன். தன் கால் விரல்களைப் பிடித்தபடி தரையில் கண்பதித்து ஆடியபடி எதையோ பாடிக்கொண்டிருந்தார். சற்று கூர்ந்து கவனித்தேன். கம்பன் தான். அந்தப் பாடல் எனக்குள் ஆழப் பதிந்திருந்தது.

அவரோடு சேர்ந்து நானும் முணுமுணுக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் என் முகம் நோக்கி மெல்ல புன்னகைத்தவாறு எழுந்தார் மனுநீதி சார். அந்த ஒடங்கம்பைச் சுட்டிக்காட்டி தலையசைத்தார். அதையெடுத்து அவர் கையில் கொடுத்தவாறு நான் அக்கல்லின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டேன். அந்தக் கட்டஞ்சாயாவை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு தம்ளரை கல்லின் மீது வைத்தார். இடக்கையைப் பின்னால் கட்டியபடி என் முன் இடம் வலமாக நடந்து அடுத்த பாடலை முணுமுணுத்தார். ஒவ்வொரு வரி முடிவிலும் ஒடங்கம்பை ஓங்கித் தரையில் ஊன்றி நின்றார்.

அது என்ன பாடல் என்று நான் யோசித்திருக்க, “என்ன டே, மாதேவம்பிள்ள, அதுக்குள்ள மறந்துட்டா? ராவணன் சொல்லுகது டே. மொத்த ஊரும் நெருப்புல வெந்து கெடக்கு, தம்பிமாரு ஒவ்வொருத்தனும் ஓரோரு யோசன சொல்லுகான். ம்ம்…புடி..செனம் சொல்லு டே..” என்று முறைத்தார் மனுநீதி சார்.

நான் சட்டென, “தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என், இனி?” என்றேன்.

“அப்பிடிப் போடு, கெட்டிக்காரன் டே, மாதேவம்பிள்ள. செரி, சொல்லு பாப்பம்.” என்றவாறு என் முன் கம்பீரமாக நின்றார். நான் மீண்டும் ஆரம்பிக்க அவரும் சேர்ந்து சொன்னார். என் குரல் நடுங்க அவர் குரல் கர்ஜனையாகக் கேட்டது.

தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என், இனி?

மாட்சி, ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்

ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று..” என்று ஒடங்கம்பைத் தூக்கியெறிந்து அவர் நிறுத்த நானும் நிறுத்த ஒரு நொடி வகுப்பில் அவர் இந்தப் பாடலைப் பாடி  நடித்தது நினைவில் வந்தது. சில கணங்கள் இருவரும் மௌனித்து இருந்தோம். சட்டென நான் என் உள்ளங்கையால் நெற்றியில் அடிக்க அவரும் அதே நேரத்தில் தன் உள்ளங்கையால் அவரது நெற்றியில் அடித்தார்.

எதற்காக தற்கொலை வரை சென்றிருப்பார்? மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் என்றவர் அல்லவா? தனது வெள்ளுடையை எதற்காகத் துறந்திருப்பார்? இப்படி போதமற்று நீடித்திருக்கும் இந்த இருப்பு தான் எதற்காக? என்னதான் திரும்பி ஓடியோடி வந்தாலும் அவரது மகள் ஏன் நிரந்தரமாக அவரைக் கூட்டிச் செல்லவில்லை? சரி, மகன்களுக்கு அப்படி என்னதான் வெறுப்பு? ஊரில் யாருக்கும் தெரியாமல் ஒருவர் இப்படி பைத்தியமாக மாறிவிட முடியுமா? யார், எதை மறைக்கிறார்கள்? இல்லை, இவரே…இல்லையில்லை. இருக்கவே இருக்காது.

“இத விடக் கேவலம் வேறென்ன வந்துரப் போகுதுன்னு சொல்லுகாம் பாரு…” என்று என் கண்களைக் கூர்ந்து பார்த்து உறுமியபடிக் கேட்டார் மனுநீதி சார். சட்டெனக் கண் கலங்க தலையை ஆட்டினேன் நான். ஓங்கி என் முகத்திலேயே அறைந்ததைப் போலிருந்தது.

அடுத்த ஒரு மணி நேரம், கும்பகர்ணனாக, இந்திரஜித்தாக, வீடணனாக இறுதியில் மீண்டும் ராவணனாக மாறி இருவரும் மந்திர ஆலோசனை நிகழ்த்தி முடித்தோம். கண்கள் சிவக்க பழிவாங்கக் கிளம்பும் ராவணனாகவே என் முன் நின்றார் மனுநீதி சார். சற்று நேரம் பெருமூச்செறிந்து அங்குமிங்கும் நடந்தார். நான் அமைதியாக இருந்தேன். எதுவும் பேசவோ, அசையவோ கூடத் தோன்றவில்லை.

சற்று நேரம் கழித்து, என்னருகே வந்து அக்கல்லில் உட்கார்ந்தார். நான் எழுந்து நின்றேன். கால் மேல் கால் போட்டு வலது கையைத் தொடைமேல் ஊன்றி நிமிர்ந்து இருந்தார். கண்கள் யாருமற்ற வெளியை வெறித்திருந்தன. அவரது மோதிர விரலை ஒரு நொடி கூர்ந்து கவனித்தேன்.

“சார், சார், நான் யாருன்னு…ஆட்டோ முருகன்…” என்றவாறு குனிந்து அவரது கால்களைத் தொட்டேன். சட்டெனத் தன் கால்களை மேல்தூக்கி மீண்டும் குத்தவைத்து உட்கார்ந்து தரையை வெறித்தார். சில கணங்கள் அசைவற்றிருந்தவர் பின் மெல்ல முன்னும் பின்னும் ஆடத் துவங்கினார். சிறிது நேரம் அவரருகே ஏதும் சிந்தனையற்று நின்றேன். என்னையறியாமலோ இல்லை அறிந்தோ உள்ளுக்குள்ளிருந்து அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. சட்டெனத் திரும்பி நடந்தேன்.

“தம்பி..தம்பி..” என்று மனுநீதி சார் அழைப்பதைக் கேட்டு திரும்பி அவரருகே சென்றேன்.

“சார், சொல்லுங்க சார்.”

“தம்பி..ஒண்ணும் நெனைக்காதீங்கோ. ஒரு இருநூறு ரூவா இருக்குமா?”

திணறியபடி நான், “சார்..” என்றேன்.

“தம்பி..இருநூறு தந்தாப் போறும். அது.. ஒரு பிள்ளக்கி பீஸ் கட்டணும் பாத்துக்கோ. நா எங்க வச்சேன்னு மறந்து போச்சு கேட்டியா?” என்று சொன்னவர் மீண்டும் ஆட ஆரம்பித்தார்.

அழுதபடி யோசித்து நான் எடுத்து நீட்டிய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு அவர் கைகள் நீளவில்லை.

***

– சுஷில் குமார்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *