இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேயின் அண்மைய திரைப்படமான உஸாவிய நிஹண்டய் (Silence in the Courts – நீதிமன்றத்தில் அமைதி) தற்போது இலங்கையின் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படமானது, இலங்கையின் நீதிமன்றங்களில் சர்ச்சையைக் கிளப்பி, இலங்கை அரசால் திரையிடத் தடை செய்யப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டிருக்கும் தனது கணவனைக் காணவென, இலங்கையின் வறிய கிராமமொன்றிலிருந்து கைக் குழந்தையோடு, நீதிமன்றத்துக்கு வரும் ஒரு ஏழை இளம்பெண்ணை,  நீதிபதி ஒருவர் வாக்குமூலம் தர அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கி விடுகிறார். அந்தப் பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு நீதிமன்ற ஆணையகம், மனித உரிமைகள் திணைக்களம், பத்திரிகைகள் எனப் பலவற்றில் முறையிடுகிறாள். அனைத்தும் பலனற்றுப் போக இறுதியில் ~ராவய எனும் புலனாய்வுப் பத்திரிகை நிறுவனத்துக்கு வருகை தந்து தனக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து விரிவாக வாக்குமூலம் தருகிறாள். அப் பெண்ணுக்கு நீதி வேண்டி இதனை தலைப்புச் செய்தியாக்கிய அந்தப் பத்திரிகை, தாம் புலனாய்வு செய்த அந் நீதிபதியின் ஏனைய குற்றச் செயல்களையும் அந் நீதிபதியின் பெயரோடு சமூகத்தின் முன் வைத்து நீதி கேட்கிறது. பத்திரிகையில் வெளிவந்த செய்தியை வாசித்துவிட்டு, இன்னுமொரு பெண்ணும் தனக்கு அந் நீதிபதியால் இழைக்கப்பட்ட பாலியல் வன்முறை குறித்து முறையிட முன்வருகிறாள். நீதிபதி, தனது நற்பெயருக்கு  களங்கம் ஏற்படுத்தியதாக பத்திரிகையின் மீதும், அதன் ஆசிரியர் மீதும் வழக்கு தொடர்கிறார். இதனால் ராவய எனும் பத்திரிகையும், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திரு.விக்டர் ஐவனும் இலங்கை அரசின் பலத்த எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக எதிர்கொள்ள வேண்டி வந்தது.
இவ்வாறாக, நீதிமன்றத்தால் நீதி வழங்கப்படுவதற்குப் பதிலாக, மூடி மறைக்கப்பட்டிருந்த ஒரு மாபெரும் அநீதத்தை மக்கள் தெரிந்து கொள்வதற்காக, சமூகத்தின் மத்தியில் விவரணத் திரைப்படமாக முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பிரசன்ன விதானகே. திரைப்படத்தின் கருவும், கதைக் களமும், கதாபாத்திரங்களும் கற்பனையில் உருவானவையல்ல. நீதிமன்றங்களில், காவல் நிலையங்களில் அதிகாரம் படைத்தவர்கள், எளியவர்கள் மீது அநீதமாக நிகழ்த்தும் வன்முறைகள் மற்றும் அதிகாரமும், பணபலமும் இருப்பதாலேயே குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் நிதர்சனம் ஆகியன மிக யதார்த்தமாக இத் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
நீதிமன்றத்துக்கு வருகை தரும் ஏழை இளம்பெண்கள் இருவர், நீதிபதியாலேயே பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டுச் செல்ல, அதை ராவய பத்திரிகை பிரசுரிக்கிறது. அதைக் கண்டும் காணாததுபோல அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதே நீதிபதிக்கு, நீதியரசர் பட்டம் வழங்கி கௌரவிக்கிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அடுத்து வெளிவந்த ராவய பத்திரிகை கறுப்புப் பிரதிகளாக வெளிவந்ததோடு, அதில் ஜனாதிபதி, நீதிபதிக்கு பட்டம் வழங்கும் புகைப்படம் தலைகீழாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
1990 களின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தின் நீட்சிகளை அப்படியே சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்களோடு, நேரடியாக தனது திரைப்படத்தில் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பிரசன்ன விதானகே. சர்வ நீதியும், அதிகாரம் மற்றும் பணபலம் படைத்தவர்களிடம் மாத்திரமே தங்கியிருக்கும் இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான முயற்சிகள் தற்கொலைக்குச் சமமானவை. பத்திரிகை ஆசிரியரைப் போலவே, மூடி மறைக்கப்படவிருந்த அநீதங்களை தனது சுயாதீன சினிமா மூலம் வெளிக் கொண்டு வந்த இயக்குனரும் பாராட்டுக்குரியவர்.
இயக்குனராக மாத்திரமல்லாது, திரு.எச்.டீ. பிரேமஸ்ரீயுடன் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தும் இருக்கிறார் பிரசன்ன விதானகே. இவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் எம்.டீ.மஹிந்தபாலவோடு, இந்தியக் கலைஞர்கள் ஸ்ரீகர் ப்ரஸாத், தபஸ் நாயக், இசையமைப்பாளர் கே. கிருஷ்ண குமார் ஆகியோரும் இத் திரைப்படத்தில் பிரசன்னவோடு கை கோர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்ட இந்தத் திரைப்படமானது, 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இலங்கையில் திரையிடப்படக் காத்திருந்தது. எனினும், இத் திரைப்படத்துக்கு எதிராகத்  தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, இத் திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாதென ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றம் ஆணையிட்டது. எனினும் கலைஞர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாக ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி, திரைப்படத்தின் மீது சுமத்தப்பட்டிருந்த தடையை நீக்கி, திரையரங்குகளில் திரையிட அனுமதியளித்தது நீதிமன்றம். இனி, தொடர்ந்து வரும் இயக்குனர் பிரசன்ன விதானகேயின் நேர்காணலானது, இத் திரைப்படம் குறித்த பல விடயங்களைத் தெளிவு படுத்தும்.
இயக்குனர், தயாரிப்பாளர் பிரசன்ன விதானகேயுடனான நேர்காணல்
கேள்வி – பிரசன்ன, இந்த செயற்திட்டம் உங்களிடம் எவ்வாறு வந்தது?
இயக்குனர் பிரசன்ன விதானகே – இந்த செயற்திட்டம் என்னிடம் ராகுல் ரோயிடமிருந்து வந்தது. ராகுல் ரோய் ஒரு விவரண மற்றும் ஆவணத் திரைப்பட இயக்குனர். அவரும் உள்ளடங்கிய ஆகார் எனும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து நான் உட்பட ஐந்து திரைப்படக் கலைஞர்களுக்கு, நீதி மறுக்கப்படல் மற்றும் சமூக அநீதங்கள் குறித்து விவரணப் படங்களைத் தயாரிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பே இதற்கான செயற்திட்டத்தைத் தயாரித்து விட்டு, பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதியை வேண்டிக் கொண்டிருந்தேன்.
கேள்வி – பாதுகாப்பு அமைச்சிடம் செல்ல வேண்டியிருந்ததன் காரணம்?
இயக்குனர் பிரசன்ன விதானகே – ஆரம்பத்தில் நான் தயார் செய்து வைத்திருந்த விவரணத் திரைப்படம் உஸாவிய நிஹண்டய் எனும் இந்தத் திரைப்படம் அல்ல. பிரியத் லியனகே எனும் எனது நண்பர் ஒருவர், சில காலத்துக்கு முன்பு வானொலியில் வயலின் இசைக் கலைஞர்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்பினார். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த, கோவில் சார்ந்த தேவ ஸ்தோத்திரங்களை இசைத்த மற்றும் இசையில் பங்குபற்றிய வயலின் இசைக் கலைஞர்களைப் பற்றிய நிகழ்ச்சி அது. யாழ்ப்பாணத்தில் போர் மூண்ட காலப்பகுதியில் இக் கலைஞர்களுக்கு யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு, கிளிநொச்சிக்கு இடம்பெயர நேர்கிறது. அன்றிலிருந்து அவர்களுக்கு இசைக்கக் கட்டளையிடப்படுவது தேவ ஸ்தோத்திரங்களையன்றி, பிரபாகரனின் ஸ்தோத்திரங்களையே. இங்கு மனம் கவரச் செய்யும் விடயமானது, இந்தளவு யுத்தத்துக்கு மத்தியிலும் அவர்களால் வயலினைக் கைவிட முடியாமலிருப்பதற்கான காரணம் என்ன என்பதாகும். அவர்களுக்கு இசை மீது எந்தளவு ஈடுபாடு இருந்திருக்கிறது என்பதாகும். இந்தப் படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டே நான் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இன்று வரைக்கும் அதற்கு பதில் கிட்டவேயில்லை. எனினும் நான் எனது  அக் கனவைக் கைவிடவுமில்லை.
கேள்வி – எனினும் உஸாவிய நிஹண்டய் என்பது வேறு படைப்பு?
இயக்குனர் பிரசன்ன விதானகே – ஆமாம். இது உண்மையைத் தேடுவதை அடிப்படையாகக் கொண்ட படைப்பு. இவ்வாறான நிகழ்வொன்றை விவரணத் திரைப்படமாக்கும்போது, அதனை நாங்கள் உணர வேண்டுமானால் அது எமக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் குறித்த திரைப்படமொன்றில் அநேகமான விடயங்கள் வெளிப்படுத்தப்படுவது வெங்காயத்தின் தோல் நீக்கப்படுவது போல படிப்படியாக. அவ்வாறே வழமையான திரைப்படங்களைப் போல எமக்கு பூரணப்படுத்தப்பட்ட  செயற்திட்டமொன்றோடு சென்று படப்பிடிப்பினை நிகழ்த்த முடியாது. தேவையான காட்சிகள் தாமாகத் தோன்றும் வரைக்கும் காத்துக் கொண்டு இருக்க வேண்டி வரும்.
Victor Ivan
கேள்வி -உங்களுக்கு, அன்று பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் முன் வைத்த விடயங்களை, முழுமையாக தனி மனித சாட்சியை அடிப்படையாக வைத்தே காட்சிப்படுத்த நேர்ந்திருக்கிறது?
இயக்குனர் பிரசன்ன விதானகே – இதில் நாம் பெண்களிருவரைச் சந்திக்கிறோம். இருவருமே சம்பந்தப்பட்ட நீதிபதியால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டவர்கள். அவர்களது சாட்சியே பிரதானமாகிறது. அவ்வாறே இந்தச் சாட்சிகளின் மூலமாக ஆழமான அத்திவாரம் இடப்படுகிறது. எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட முதல் பெண் கேமராவின் முன்பு தோன்ற மறுத்து விடுகிறார். எனவே நான் அவரை வற்புறுத்தவுமில்லை. இவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் இந்த சமூகத்தில் நடைபெறக் கூடாதளவுக்கு சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் அவரிடம் தெளிவுபடுத்தினேன். இருபது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு துயரத்தை ஒரு பெண் மீண்டும் ஞாபகப்படுத்த நேர்வது மிகவும் கசப்பான ஒரு விடயம். எனினும் இரண்டாவது பெண், கேமராவின் முன்பு தோன்றினார். நான் அவரையும் வற்புறுத்தவில்லை. அவரிடம் நான் கேட்டது இப்பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பது மாத்திரமே.
கேள்வி – அதிகளவு வளங்கள் செறிந்திருக்கும்போது ஏன் நீங்கள் வழமையான வணிகத் திரைப்படங்களை எடுக்காமல், இவ்வாறான பாதிக்கப்பட்டவர்களுக்கான திரைப்படங்களை எடுக்கிறீர்கள்?
இயக்குனர் பிரசன்ன விதானகே – என்னால் இலகுவாக இந்தச் செயற்திட்டத்தையே வழமையான வணிகத் திரைப்படமாக மாற்ற முடியும்.  எனினும் நான் அப்படிச் செய்யவில்லை. நான் பொதுவாகவே காட்சிகள் குறித்த தெளிவு இன்றி படப்பிடிப்புக்குச் செல்வதில்லை. எனினும் ஆவணத் திரைப்படங்களில் அவ்வாறான பூரண தெளிவை முன்பே பெற்றுக் கொள்ள முடியாது.
கேள்வி – உங்களது ஆஸ்தான சக தொழில் கலைஞர்கள் இருவர், மீண்டும் இத் திரைப்படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர்?
இயக்குனர் பிரசன்ன விதானகே – ஆம். எம்.டீ. மஹிந்த பால, ஸ்ரீகர் ப்ரஸாத் இருவரும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இங்கு கேமரா கோணங்கள் பற்றி நான் முதலில் மஹிந்தபாலவுடன் தான் கலந்துரையாடினேன். பாதிக்கப்பட்டவர்கள் குறித்த திரைப்படமொன்றுக்கு இந்தக் கரு மிகவும் பொருத்தமானது என்பதே அவரது கருத்தாக அமைந்தது. ஸ்ரீகர் ப்ரஸாத் இங்கு விஷேடமாகக் குறிப்பிடத்தக்கவர். அவர் இந்தியாவில் ஏழு தடவை ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளவர். வாழ்வில் முதற்தடவையாக விவரணத் திரைப்படமொன்றுக்காகப் பாடுபட்டிருக்கிறார். இவர்கள் இருவரதும் அர்ப்பணிப்பே ~உஸாவிய நிஹண்டய்| திரைப்படமாகியிருக்கிறது. ஸ்ரீகர் ப்ரஸாத், திரைப்படத்தின் இறுதியில் பார்வையாளர்களை நீதவான்களாக்கியிருக்கிறார்.
கேள்வி – உங்களுக்கெதிராக தனி நபர் ஒருவரால் தொடரப்பட்டிருந்த வழக்கை சமூகத்திலுள்ள பலரும் மிகவும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தனர். ~தடை| எனும் வசனமும் கூட சமூகத்தில் மிகவும் பிரபலமானது.
இயக்குனர் பிரசன்ன விதானகே – அவர் திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அதனால் நீதிமன்றத்துக்கு சான்றுகளை ஒப்படைக்கக் கூடிய சந்தர்ப்பம் எமக்கு வாய்த்தது. அதன் மூலமாக அவர் மீது பொய்க் குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படவில்லை என்பதை குற்றவாளிக் கூண்டிலிருந்து நிரூபிக்க முடிந்தது. எவ்வாறாயினும் தடையை நீடிக்கத் தேவையான சான்றுகள் எவையும் அவரிடம் இருக்கவில்லை. எனது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கனக ஈஸ்வரன், மணித்தியாலக் கணக்கில் மிக சரளமாக தனது தர்க்கங்களை ஆணித்தரமாக முன்வைத்தார். இறுதியில் நீதிமன்றம், திரைப்படத்தின் மீதான தடையை நீக்கியது. எது எவ்வாறாயினும் கடந்த சில வாரங்களாக நான் சட்டத்தைக் கற்றது போல வாழ்வில் ஒருபோதும் கற்றதில்லை.
கேள்வி – காட்சி ஊடகம் எனப்படுவது பலம் வாய்ந்த ஊடகம் என்பதை நிரூபிக்க பெரிதாக சாட்சிகள் தேவையில்லை. இதுவே போதுமானது. எப்பொழுதுமே மோசமான கதாபாத்திரம் மீது ஒரு பயம் தோன்றுவது இயல்பு. உங்களது முடிவற்ற போராட்டத்தின் அடுத்த படிமுறையைத்தான் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள் எனக் கொள்ளலாமா?
இயக்குனர் பிரசன்ன விதானகே – காட்சி ஊடகத்தின் மூலம் நீதியை நிலை நாட்ட முடியுமென நான் நினைக்கவில்லை. எனினும், நீதியையும், உரிமையையும் பெற்றுக் கொள்வதற்கான அவதானத்தைப் பெற்றுக் கொடுக்க ஒரு திரைப்படத்தால் முடியும். அதன் மூலமாக, இவ்வாறான இடங்களில் சில பிரச்சினைக்குரிய பகுதிகளும் இருக்கின்றன என்பதற்கான உள்ளுணர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கேள்வி – ஒரு திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்போது அதற்கு எழும் விமர்சனங்கள், தடை நீக்கப்பட்டதற்குப் பிறகு கிடைப்பதில்லை எனக் கூறலாமா?
இயக்குனர் பிரசன்ன விதானகே – மக்களது உதவி இங்கு முக்கியமானது. அக் கணத்தில் நீதிமன்றத்தைத் தவிர வேறெதனாலும், எந்த விமர்சனத்தாலும் அத் தடையை நீக்க முடியாது. அதற்குத் தேவையானதெல்லாம் தர்க்க நியாயங்கள். எனினும் அந்த விமர்சனங்கள் தனிப்பட்ட முறையில் பெரிதும் ஊக்கமளிப்பவை. அது ஜனநாயக சமூகத்திற்கு மிக நல்ல எடுத்துக்காட்டு.
கேள்வி – குற்றவாளியைக் கண்டுபிடித்து அவரைப் பற்றிப் புலனாய்வு செய்து எழுதி வெளிப்படுத்திய பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் மீது தொடரப்படாத வழக்கு, உங்கள் மீது தொடரப்பட்டது ஏன்?
இயக்குனர் பிரசன்ன விதானகே – என் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தில் வழக்கு எதுவும் தொடரப்படவில்லை. இது முழுமையாக பொதுமக்கள் சம்பந்தப்பட்டது. எனினும், இவ்விடயங்களைக் குறித்து பயப்படாமல் தைரியமாக வெளிப்படுத்தியதன் கௌரவம் அனைத்தும் விக்டர் ஐவனுக்கே உரித்தானது.
கேள்வி – எனினும் இன்னுமொரு தெளிவான சம்பவத்தை பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் வெளிக்கொண்டு வந்துள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத குற்றவாளியான நீதிபதிக்கு பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்த சட்டத்தரணியொருவரை அவர் சமூகத்துக்கு இனம்காட்டினார். நீங்கள் இந்த விடயத்தை உங்கள் ~உஸாவிய நிஹண்டய|; திரைப்படத்தில் காண்பிப்பதில்லை. நீங்கள் இதனை தவறுதலாக விட்டீர்களா அல்லது வேண்டுமென்றே தவிர்த்தீர்களா?
இயக்குனர் பிரசன்ன விதானகே – அன்று அந்த விசாரணையை மேற்கொண்ட மூவர் அடங்கிய குழுவினர், மேற்கூறப்பட்ட சட்டத்தரணியை ஒரு குற்றவாளியாகக் கருதவில்லை. அவ்வாறான ஒரு நிலையில், என்னால் நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை உறுதிப்படுத்தி காட்சிப்படுத்த முடியாது. எனக்கு திரும்பவும் வெங்காயம் குறித்த கருத்துதான் நினைவுக்கு வருகிறது. தோல் அகற்ற அகற்ற இன்னுமின்னும் தோலே வந்து கொண்டிருப்பது போல, இச் சம்பவத்திலும் புதிய புதிய விடயங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன. எமது ஆரம்பக் கலந்துரையாடலில் ஸ்ரீகர் ப்ரஸாத்தான் இந்த விடயத்தைக் குறித்துக் கூறினார். திரைப்படத்தில் ஒரு சம்பவம் முழுமையாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும்போது, இன்னுமொரு விடயத்தைப் புகுத்தி மீளக் கட்டியெழுப்புவது அவசியமற்றது என அவர் குறிப்பிட்டார். அதற்கிணங்கவே தீர்மானம் எடுக்கப்பட்டது.
கேள்வி – இப்போது இத் திரைப்படத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் முடிவு கண்டு விட்டனவா?
இயக்குனர் பிரசன்ன விதானகே – இல்லை. திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும் தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் விசாரணைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்த விசாரணை, வரும் வருடம், ஜனவரி 19 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. எனினும், திரைப்படத்தை திரையிட அனுமதியளித்திருக்கிறார்கள்.
கேள்வி – இந்த திரைப்படத்துக்குக் கிடைத்த தீர்ப்பானது, பொதுவாக படைப்பாளிகளுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்திருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
இயக்குனர் பிரசன்ன விதானகே – நீங்கள் இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்தீர்களானால் இதில், ~உலகமானது ஒரு கிராமமெனச் சுருங்கியிருக்கும் இக் காலத்தில், ஒரு படைப்புக்கு தடை விதித்தல் எனப்படுவது வெறும் காகிதத்தில் மாத்திரமே குறிப்பிடப்படக் கூடிய ஒன்று| என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தோடு நீதவான், திரைப்படமொன்று உருவானதன் பிறகு அதன் உரிமை ரசிகனுக்குத்தான் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ கூட உரிமையில்லை. மக்கள் ஒரு கலைப்படைப்பொன்றில் எதிர்பார்ப்பது, மகிழ்ச்சியாகத் தொடங்கி மனதுக்கு நெருக்கமான உணர்வைத் தூண்டும் முடிவொன்றைத்தான் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் மனதுக்கு நெருக்கமான உணர்வுகளோடு படைப்புக்களை வெளிக் கொணரும் படைப்பாளிகளுக்கு நிச்சயமாக இந்தத் தீர்ப்பு ஊக்கமளிக்கும்.
Prasanna Withanage
கேள்வி – வணிக இலாபத்தை உத்தேசித்தா ~உஸாவிய நிஹண்டய்| திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட்டீர்கள்? தயாரிப்பாளருக்கு இதன் மூலம் இலாபம் பெற முடியும் என்பது சாத்தியமற்றது?
இயக்குனர் பிரசன்ன விதானகே – இல்லை. திரையரங்குகளில் இத் திரைப்படத்தைத் திரையிட்டது வணிக இலாபத்தை உத்தேசித்தல்ல. இத் திரைப்படத்தின் மூலம் கிடைக்கக் கூடிய ஆதர்சமே முக்கியமானது. விவரண, ஆவணத் திரைப்படங்களையும் திரையரங்குகளில் திரையிட முடியுமென எடுத்துக் காட்டினால் இவ்வாறான படைப்பாளிகளுக்கு அது ஒரு ஆதர்சமாக, வழிகாட்டியாக அமையும். இந்த நடைமுறை, சர்வதேச அரங்கில் புதியதல்ல. ஆவணத் திரைப்படங்கள், விவரணத் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வினியோகிக்கப்படுகின்றன. எனினும், இந்த நடைமுறை எமது நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்படுகிறது. இது ஒருவகையில் ஒரு சமூக சேவை. இதன் மூலமாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதே நடைபெறுகிறது. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் புலனாய்வு செய்யப்படுவதே இங்கு இடம்பெறுகிறது. தயாரிப்பாளர் எச்.டீ.பிரேமஸ்ரீ அவர்கள் இந்தத் திரைப்படத்தில் பங்குகொண்டது இலாபத்தை எதிர்பார்த்தல்ல. முடிந்தால் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட்டு ஒரு விழிப்புணர்வை நாட்டுக்குள் ஏற்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது. அவ்வாறே இன்றுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் டீவிடீ இறுவட்டுக்களினூடாக இத் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்று, இதற்காக செலவழித்த பணத்தைப் பெற்றுக் கொள்வதும் எமது எண்ணமாக இருந்தது.
கேள்வி – ~உஸாவிய நிஹண்டய்| திரைப்படத்தின் முதல் பார்வையாளர்கள் யார்?
இயக்குனர் பிரசன்ன விதானகே – இத் திரைப்படத்தை கிராமங்களிலேயே முதலில் திரையிட்டேன். பல கிராமங்களிலும் மக்கள் ஒன்றுகூடும் மண்டபங்களில் இலவசமாகத் திரையிடப்பட்டது.
கேள்வி – நீங்கள் இத் திரைப்படத்தின் மூலம் நடுத்தர மக்களது வாழ்வியலைத்தானே பற்றிப் பிடித்திருக்கிறீர்கள்? திரைப்படத்தின் திரையிடலைப் பார்த்தபோதும், திரைப்படத்தைக் குறித்து கதைக்க வருபவர்களைக் கண்ட போதும், அங்கிருப்பதெல்லாம் நடுத்தர மக்களது வாழ்வியல் லட்சணங்களே?
இயக்குனர் பிரசன்ன விதானகே – ஆரம்பத்தில் நான் இதனை கொழும்பு, ரீகல் திரையரங்கில் மாத்திரம் திரையிடவே எண்ணியிருந்தேன். எனினும், தடை விதிக்கப்பட்டு, நீக்கப்பட்ட பின்னரும் கூட, இத் திரைப்படம் கிராம மக்களிடத்தில் இலவசமாகத் திரையிடப்படுவதை நான் நிறுத்தவில்லை. இவ்வாறு அனைவருமே இத் திரைப்படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்கிறேன். அடுத்தது, இந்தப் பிரச்சினையானது, தனி மனிதன் ஒருவனது பிரச்சினை மாத்திரமல்ல. சமூக வலைத்தளங்களில், இதைக் குறித்து கலந்துரையாடல்கள் எழுந்த போதும், அதற்கு வெளியே இருப்பவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். எல்லாவற்றுக்குமே குரல் கொடுக்கும் பெண்கள் இயக்கம் கூட இப் பிரச்சினையின் போது மௌனமாக இருந்ததையே காண முடிந்தது. சராசரியாக எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினையானது மிகவும் செயலற்றுப் போயிருந்தது. இந் நிகழ்வு நடைபெற்ற காலத்தை, இக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சிலருக்கு தாம் மௌனமாக இருந்ததற்காக குற்றவுணர்ச்சியும் தோன்றக் கூடும். அதனால்தான் இந்தப் படைப்பு என்னால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி – நீங்கள் எழுப்பும் நீதியும், நியாயமும் அதிகமாகப் பாதித்திருப்பது கிராமத்தையா அல்லது நகரத்தையா என நான் கேட்டால்?
இயக்குனர் பிரசன்ன விதானகே – இக் காலகட்டத்தில் கிராமங்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாயிற்று. அவர்களது வாழ்வாதாரமான விவசாயமானது, இன்று அவர்களிடமிருந்து விலகி வெகு தொலைவுக்குச் சென்று விட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆடைத் தொழிற்சாலைக்கும், இராணுவத்தில் சேரவும் செல்ல நேர்ந்திருக்கிறது அவர்களுக்கு. ஒரு திரைப்படக் கலைஞனாக, இவ்வாறான ஒரு விடயத்தில் பொதுவாக சம்பந்தப்படாதவர்களையும் இணைத்துக் கொண்டு கலந்துரையாடல்களில் ஈடுபடவே நான் விரும்புகிறேன். சுருக்கமாகச் சொல்வதானால், இவ் வல்லுறவு சம்பவத்துக்கு முகம்கொடுக்க நேர்ந்த பெண், ‘முன்பெல்லாம் நீதிமன்றத்துக்குச் சென்றால் எச்சில் விழுங்கக் கூட பயமாக இருக்கும், ஆனால் இப்போது அப்படியில்லை. இப்போது நீதிமன்றத்தில் கூட என்னால் பயமேயற்றுக் கதைக்க முடியும்’ என்கிறாள். அவ்வாறான நிலைமைதான் ஏற்பட வேண்டும். நிகழ்ந்துகொண்டிருக்கும் அடிமை மனோபாவ செயற்பாடுகளை தர்க்க ரீதியில் இவ்வாறாக முடிவுக் கொண்டு வருவதே எனது அபிப்ராயம்.
கேள்வி – நகரத்திலாகட்டும், கிராமத்திலாகட்டும். சம்பந்தப்பட்டவர்களை கலந்துரையாடல்களில் ஈடுபடுத்த நீங்கள் மிகவும் பாடுபடவேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக நீதித் துறையில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்களா?
இயக்குனர் பிரசன்ன விதானகே – ஆமாம். அவர்களுக்கு இது சம்பந்தமாக பெரும் ஈடுபாடு இருந்தது. தொழில் கௌரவத்திற்காக அவர்கள் பயப்படாமல் முன் நிற்கிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகியது. ஒரு மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரும் வெற்றி நீதியும், நியாயமும்தான். சட்டத்தின் முன்பு அனைத்தும் சமம். எனினும் இலங்கையில் பணமும், அதிகாரமும் இருப்பவர்களிடத்தில் அது வேறு விதத்தில் செயற்படுகிறது.  நடைமுறையிலுள்ள இச் செயற்பாடுகளின் மூலம் சட்டம் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறித்த தெளிவு பல நேர்மையான சட்டத்தரணிகளிடம் இருக்கிறது.
எம்.ரிஷான் ஷெரீப்
2017
Please follow and like us:

1 thought on “ஆர்ப்பரித்து ஒலிக்கும் நீதிமன்ற அமைதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *