அம்மா  இறந்து  போய்விட்டாள். துளித்துளியாய்  பொடித்திருக்கும்
வியர்வைத்துளிகள்  இனி  அந்த  முகத்தில்  அரும்பப்  போவதில்லை.
நிச்சலனமற்ற  உறக்கத்துக்குள்  ஆழப்புகுந்து  கொண்டவளுக்கு  அந்த
உறக்கத்தின்  மீதான  பற்று  கூடிப்போனது  போலத்   தெரிந்தது.
நீள, நீள  மூச்சுகளை  விடுத்து  ஏறி, இறங்கும்  மார்பு  அசைவின்றி  விறைத்துக்கிடந்தது. அம்மாவுக்கு  அழகான  மார்புகள். அவளுக்குத்  தெரியாமல்  நிறைய
தடவைகள்  ரசித்திருக்கிறேன்.
குளித்துவிட்டு  உடைமாற்றும்  அவளைத்  திருட்டுத்தனமாக  கூர்ந்திருக்கிறேன்.
நெஞ்சுக்கு  மேலே  உயர்த்திக்  கட்டியிருக்கும்  ஈர  உள்பாவாடையை  களைந்து விட்டு  உலர்ந்த  பாவாடையை  உடுத்திக்கொள்ளும்  அச்சிறு  இடைவெளிக்குள்
எப்படியும்  பார்த்து  விடுவேன்.
தேர்ந்த  சிற்பியின்  செதுக்கல்  போன்ற  வெண்ணிற  மார்புகள், படர்ந்த  ஈரத்தின்
பளபளப்பில்  மின்னும். தளராத  கெட்டியான   மார்பகங்களைப்
பார்த்துக்கொண்டேயிருக்கலாம்  போலிருக்கும்.  நான்  பார்ப்பதை  அம்மா
ஒருமுறை  கவனித்து  விட்டாள்.
“அடிக்கள்ளி, இம்புட்டு  நேரமும்  இதையா  பாத்துக்கிட்டிருந்த….” என்று
அவசரமாய்  மறைத்துக்கொண்டாள்.
அம்மா  உயரமுமில்லாத, குட்டையுமில்லாத  உருவம். லேசான  சதைப்பிடிப்பு.
பார்ப்பதற்கு  நேர்த்தியாக  இருப்பாள்.
அம்மா, உடுத்தியப்  புடவை  விலகாது  நேர்க்கோடாக  படுத்திருந்தாள்.
அடுக்கடுக்கான  நினைவுப்  படிமங்களை  மனதில்  சுமந்திருந்தவள்   கடைசி
நிமிடத்தில்  எந்தப்  படிவத்தை  உருவியெடுத்து  வேதனைப்பட்டாளோ, தெரியவில்லை.
அதிகம்  சிரிக்காத  அந்த  இதழ்கள்  லேசாகப்  பிளந்து  பற்களை  வெளிக்காட்டின.
நான்  அம்மாவைக்  கூர்ந்தேன். மெலிதான  பருத்திப்புடவையின்  கசங்கிய கொசுவங்கள்  அம்மாவின்  வாசனையை  எச்சங்களாக  சுமந்து  தளர்ந்து கிடந்தன.

மஞ்சள்  கறைபடிந்த  நகக்கணுக்கள்  பொன்  கொழுந்துகள்  போல
மினுமினுத்தன. அம்மா  மஞ்சள்  பூசாமல்  குளித்ததில்லை.
சிறிய  மடக்கு  போன்ற  ஓட்டுத்  துண்டில்  கிழங்கு  மஞ்சளை  உரசியெடுத்து
முகத்தில்  பூசிக்கொள்வாள். என்னையும்  அப்படிக்  குளிக்கச்  சொல்லி வற்புறுத்துவாள்.
“இந்த  காலத்துல  யாரும்மா  மஞ்சள்  பூசிக்  குளிக்கிறா. ஆள  வுடும்மா” என்று நான்  நழுவிவிடுவேன்.
அவளைச்  சுற்றிலும்  பரவிக்கிடக்கும்  மஞ்சள்   வாசம்   அவளின்  இருப்பு
குறித்த  தைரியத்தில்  என்னை  நடமாட  வைத்துக்  கொண்டிருந்தது. நான்,
அவளின்  சுவாசச்  சூட்டிற்கு  அப்பால்  ஒருபோதும்  செல்ல   விரும்பியதில்லை.
அதற்குள்ளாகவே, அந்தக்  கதகதப்பிற்குள்ளேயே  வாழப்  பழகியிருந்தேன்.
நான்  அப்பா  மாதிரி  என்று  அம்மாதான்  சொன்னாள்,
“ஒங்கப்பன  உரிச்சி  வச்சிப்  பொறந்துருக்க….” என்று
அந்த  ஓடிப்போன  அப்பா  அவனின்  அடையாளத்தை  என்மேல்  அழுந்த
பதியவைத்துவிட்டு  சென்றது  எதனாலென்று  புரியவில்லை.
“அப்பா  மொகம்  ஒனக்கு  ஞாவகத்துல  இருக்காம்மா….?”
நான்  வெங்காயம்  உரித்துக்கொண்டே   கேட்டபோது  கொதி  சோற்றைக்
கிளறிவிட்டுக்  கொண்டிருந்த  அம்மா, திரும்பிப்  பார்த்துச்  சொன்னாள்.
“நான்  மறக்கக்  கூடாதுன்னுதான்  அவென்  அச்சில  ஒன்னைய  வார்த்து
வச்சிட்டுப்  போயிருக்கான். எப்புடி  மறக்கும்……தெனந்தெனம்  கொஞ்சிறதும்,
கொலாவுறதும், கொழையிறதும்  அப்பப்பா…..அதெல்லாம்  மின்மினிப்   பூச்சி
வாழ்க்கன்னு  புரியாம  போச்சிடி. ”
அந்தக் குரலில்  தெரிந்த  நடுக்கம்  அவள்  அனுபவித்த  வேதனையைக்  கூட,
குறைக்காமல்  வெளிக்காட்டிற்று.
ஒருமாதம்  அனுபவித்துவிட்டு  திடீரென  ஒருநாள்  அதிகாலை
மாயமாகிவிட்டவனைப்  பற்றி  எண்ணி  அழுது  புலம்பிக்  கிடந்தவளுக்கு
மசக்கை  படாதபாடு  படுத்திற்றாம்.

அம்மா  வாழ்வின்  அத்தனை  சம்பவங்களையும்  அடுக்கி  வைத்துச்
சொல்லவில்லை. தோணினபோது  ஒன்றிரண்டு  கூறுவாள். மேலே  கேட்டால்,
“தள்ளு  குப்பைய….” என்று  விடுவாள்.
அக்கம்பக்கத்தில்  அளவுக்கதிகமாக  பேச்சு  வைத்துக்கொண்டதில்லை.
தனித்திருக்கும்  பெண்களின்  மீதூறும்  காமக்கண்களை  தவிர்ப்பதற்காக  அவள்
அப்படி  இருப்பதாகச்  சொன்னாள்.
தொடர்பு  எல்லைக்கு  அப்பால்  இருப்பது  ஒருவித  சவுகரியம்  என்று  அதற்கு
ஒரு  நியாயம்  கற்பித்தாள். தொடர்பற்ற  வெட்டவெளியில்  நானும், அம்மாவும்
எங்களுக்கான  உலகத்தை  நிர்மாணித்திருந்தோம். அந்த   உலகத்தில் எங்களின்
சஞ்சாரத்தைத்  தவிர்த்து  அந்நியருக்கு  அனுமதியில்லை.
தகவமைத்துக்கொண்ட  கூட்டின்  உறுதியானது   அம்மாவின்  பிடிவாதமான
ஸ்திரத்தன்மையில்  மிகுதியான   கெட்டித்தன்மை  உடையதாயிருந்தது.
மற்றபடி  அந்தச்  சிறிய   ஓட்டு வீட்டின்  உதிர்ந்து  விழும்  சுவர்களும்,
உளுத்துப்போன  உத்திரமும்  என்ன  பெரிய  பாதுகாப்பை  தந்துவிடமுடியும்.
நான்  அம்மாவின்  கால்மாட்டில்  அமர்ந்திருந்தேன். அங்கு  அமர்ந்து  அவள் முகத்தைப்  பார்க்க  வசதியாக  இருந்தது. வழக்கமாக  அந்த  முகத்திலிருக்கும்
மலர்ச்சி  இப்போது  இல்லை. ரத்தச்சூட்டின்  கதகதப்பு  நின்றவினாடி,  அது
முகத்திலிருந்து  கழன்று  கொண்டுவிட்டது.
அவள்  முகத்தில்  தெரிந்த  அமைதி  முன்னெப்போதும்  இல்லாத  அளவுக்கு அழுத்தமாய்  உறைந்து  கிடந்தது. தன்  நிலை  குறித்த  இயலாமையோ  அல்லது
என்  நிலை  குறித்த  கவலையோ  ஏதோ  ஒன்று  அவள்  ஆத்மாவுக்குள்
சுழன்றடித்துக்கொண்டிருக்கவேண்டும்.
அது  இங்கேதான்  எங்கேயாவது  ஒளிந்து  கொண்டிருக்கக்கூடும். நான்
சுற்றுமுற்றும்  பார்வையை  சுழலவிட்டபோது  அது  என்  கண்களுக்குத் தட்டுப்படவில்லை.
அம்மாவின்  தொண்டைக்குழியில்  இருந்த  அந்த  கடுகளவு  மச்சம்
ஐம்பத்தெட்டு  தடவைகள்  அப்பாவால்  முத்தமிடப்பட்டதாக  அம்மா  ஒருநாள்
மழை  அடித்துக்கொட்டிய  மாலைப்  பொழுதில்  சொன்னாள்.

“சரியா  ஒருமாசம்  இருந்தான். ஒரு  வருசத்துக்கு  அனுபவிக்கவேண்டியத
எங்கிட்ட  அனுபவிச்சிட்டான். அதுக்கு  மேல  அலுத்துருக்கோ  என்னவோ…. ”
சொல்லிவிட்டு  பெருமூச்சு  விட்டவள்,
“பெத்த  பொண்ணுக்கிட்டப்போயி   இதயெல்லாம்  வெக்கமில்லாம
சொல்றாளேன்னு  யோசிக்கிறியா….” என்று தலையாட்டிக்  கேட்டாள்.
“எங்கிட்ட  சொல்லாம  வேற  யாருகிட்ட  சொல்லுவ….” என்ற  என்னை, அம்மா
பாய்ந்து  அணைத்துக்கொண்டாள்.
“நான்  ரொம்பப்  படிக்கல. இருவது  முடிஞ்ச  மறுநிமிசம்  மொரட்டு  ஆம்பளக்கையால  தாலி  கட்டிக்கிட்டேன். அதுவும்  கனவுமாரி  நடந்து முடிஞ்சிருச்சி. அதுக்கப்புறம்  ஒருமாச  வாழ்க்க  அரமயக்கத்துலயே  ஓடிடுருச்சி.
சுதாரிச்சி  தெளியறதுக்குள்ள  எல்லாம்  முடிஞ்சி  போச்சி.”
ஒருநாள்  மின்சாரம்  தடைப்பட்டிருந்த  இரவுப்பொழுதில்  மெழுகுவர்த்தியின்
கீற்றொளியில்  சுவரில்  விழுந்து  கிடந்த  ஒரு  நிழல் சொல்ல, இன்னொரு நிழல்  அதைக்  கேட்டுக்கொண்டிருந்தது.
“இருபத்தொரு  வயசுல  கையில  புள்ளையோட  நின்னப்ப  ஒலகமே   இருட்டா தெரிஞ்சிச்சி. ஆனா  இருட்டுலயும்  ஒளிர்ற  ஆயிரம்  கண்கள்  என்  ஒடம்பு  பூரா
ஊர்ந்துச்சி. அப்பதான்   என்னைய  பாதுகாத்துக்க  ஒன்னைய  கெட்டியமா
புடிச்சிக்கிட்டன். சின்னப்புள்ளையில  இருட்டுக்கு  பயந்து  அம்மா  முந்தானைய
மேல  போட்டுக்கிட்டு  தூங்குவன். அது  மேலக்  கெடந்தாலே  பயமெல்லாம்
போயிரும். அந்தமாரி ஒன்னையும்  பயன்படுத்திக்கிட்டன்."
அம்மா  முந்தானையால்  முகத்தில்  வீசிக்கொண்டாள்.
“ரொம்ப  வேர்க்குதுடி.”
நான்  சுவருக்குப்  பார்வையைத்  திருப்பினேன். நிழலுருவத்தின்  கூர்மையான
மூக்கும், துருத்தலான   சின்ன  வாயும், வளைந்த   மோவாயும், குழிந்த  கழுத்தும், அதன்கீழ்  பருத்த  மார்பும்  பார்த்துக்கொண்டேயிருக்கும்படியான  ஆர்வத்தைத்தூண்டின.
பின்னொருநாளில்  நான்  அந்தக்கேள்வியை  கேட்டபோது  அம்மா ஆச்சரியப்பட்டுப்போனாள்.

“நீ  ஏம்மா  அப்புடியே  இருந்துட்ட. ஒரு  ஆளக்  கட்டிக்கிட்டு  சந்தோசமா
வாழ்ந்துருக்கலாம்ல. உன்  வயசுக்கும், எளமைக்கும்  துரோகம்  செஞ்சிட்டம்மா.”
“இப்புடிப்  பேச  ஒனக்கு  யாருடி  சொல்லிக்குடுத்தா…..?’
“காலேஜில  சொல்லிக்குடுத்தாங்க……”
நான்  வெடுக்கென்று  கூறவும், அம்மா  தலையில்  குட்டினாள்.
“பதில்  சொல்லும்மா….”
நான்  விடவில்லை.
“ஒன்னாலதான்  இப்புடியே   வாழ்ந்துட்டேன்னு  சொல்லி  என்னைய
சாவடிச்சிடாதம்மா…”
என்  குரல்  நடுங்கிற்று. அம்மா  மெதுவாக  என்  விரல்களைத்   தன்
விரல்களுடன்  கோர்த்துக்கொண்டாள்.
எங்களுக்குள்  நிலவிய  மவுனம்  அடுக்கடுக்காக , அலையலையாக  அந்த   சிறிய
வீடு  முழுக்க  பரவி  நிரம்பிற்று. வாசல்  பக்கமிருந்த  வேப்பமரத்தின்  சலசலத்த இலைகளால்  கிழிபட்டுவிடாத  மவுனம்  ஒரு  சிறிய  கனைப்பு  சத்தத்தில்
அவசியமற்ற  தன்  இருப்பை  உணர்ந்து  அவசரமாய்  வெளியேறியது.
“என்ன  கேட்ட….?”
அம்மா  கண்கள்  மினுங்க  என்னைப்  பார்த்தாள்.
” ஏன்  இன்னொரு  கலியாணம்  செஞ்சிக்கல ?”
“எதுக்கு  செஞ்சிக்கணும்?”
இந்தக்கேள்வி  என்னை  துணுக்குற  செய்தது. அவளின்  கேள்வி  என்னுடைய
கேள்வியைத்  தேவையற்றதாக்கிவிட  நான்  அனுமதிக்கவில்லை.
“இருவது  வயசுப்  பொம்பள  எதுக்கு  கலியாணம்  செஞ்சிக்குவாளாம்…”
நான்  எரிச்சலோடு  சொல்லவும்  அம்மா  தலையாட்டிச்  சிரித்தாள். சிரித்துவிட்டு
சில  வினாடிகள்  மெழுவர்த்தியின்  சுடரைக்  கூர்ந்தபின்  சொன்னாள்,

“என்  வயசுக்கு  ஆசயிருந்தது , ஆனா  மனசுக்கு  இல்ல……அதுவும், இதுவுமா
குதியாட்டம்  போட்டதுல  கடசீல  மனசு  ஜெயிச்சிருச்சி. அப்புடியும்  சில
நேரங்கள்ல  வயசு  கொள்ளிவாப்பிசாசு  கணக்கா  கண்ணு  முழிச்சிப்  பாக்கும்.
ஒங்கப்பன  ஞாவகத்துக்குக்  கொண்டாந்து  அத  அடக்கிருவன். அவன், எனக்கு
செஞ்ச  துரோகத்த  நெனச்சா  தணல்ல  தண்ணியள்ளி  ஊத்துனாப்ல  அம்புட்டு
ஆசயும்  அவுஞ்சிப்  போயிராதா……?”
அம்மா  சட்டென  தலையைத்  திருப்பிக்கொண்டாள்.
தரையிலூரும்  மரவட்டையாய்  மனதிலூரும்  நினைவுகளை  அம்மா  எப்படித்
தவிர்க்கப்  பழகினாள்  என்று  எனக்குப்  புரியவில்லை. தவிர்த்தாளா  அல்லது அதோடு  போராடிக்கொண்டிருந்தாளா  என்பதும்  சந்தேகமே.
‘ஆசையை  அவித்துக்கொண்டதாக  சொல்வதன்   மூலமாக  ஆசைகள்  வந்ததை
உறுதிப்படுத்துகிறாளே…..’
நான்  ஏதேதோ  யோசித்துக்  களைத்துப்  போனேன்.
அம்மாவின்  பொழுதுகளைத்  தின்று  கொண்டிருக்கும்  கவலைகளையும்  மீறி அவள்  பொழுதுக்கும்  தையல்  இயந்திரத்தை  உருட்டிக்கொண்டேயிருப்பாள்.
கிழிந்ததும், பிரிந்ததும்  தைக்கக்  கொடுப்பவர்களை  வாசலில்  நிற்கவைத்து
அனுப்புபவள்  தேவைக்கதிகமாக    அவர்களிடம்  பேச்சு
வைத்துக்கொண்டதில்லை.
அரசாங்க  இலவச  அரிசிக்கான  உத்திரவாதம்  இருக்கும்   வரையிலும்  பிறர் சாரா   வாழ்க்கை எளிதானது  என்பது  புரிந்துதான்  அம்மா  அவ்வாறு
நடந்துகொண்டாளா, தெரியவில்லை.
நான்  பதின்பருவத்தில்  அடியெடுத்து  வைத்தபோது  அம்மாவிடம்  அதிகமான
பதற்றம்  தொற்றிக்கொண்டது.
‘ உன்  அரும்புகளை  நீ  எப்படி  மறைத்துக்கொள்வாய், அதைக்  கசக்க  இங்கே
முரட்டுக்கைகள்  காத்துக்  கிடக்கின்றனவே’  என்ற அம்மாவின்  பரிதவிப்பு
இந்தச்  சமூகத்தின்  மீதான  என்  பயத்தைக்  கூட்டிற்று.

மலர்ந்த  அரும்புகளால்  மனதில்  ஏற்பட்ட  படபடப்பும், வெட்கமும்
பள்ளிக்கூடத்தில்  யாரோடும்  பழகாமல்  தலைகுனிய  வைத்தது.
என்  வயதையொத்த  பெண்பிள்ளைகள்  அனைவரும்  மலர்ந்த  அரும்புகளோடு
வளைய  வந்ததை  உணரத்தலைப்பட்ட   பிறகே  மனதிற்கு  சற்று  ஆசுவாசம்
கிடைத்தது.
அம்மாவின்  மார்புகளை  ரசிக்கத்   தெரிந்த  எனக்கு, என்னுடையதைப்  பற்றிய
தெளிவற்ற  பயம்  வெகுநாட்கள்  வரை  இருந்துகொண்டேயிருந்தது.
புத்தகங்களைப்  படிப்பதற்கு  எடுத்ததைவிட  மறைக்க  எடுத்ததே  அதிகம்.
“பொண்ணு  வளத்தியோ, பொடலங்கா  வளத்தியோன்னு  சொல்றாப்ல
மின்னல்மாரி  நிமிசத்துல  வளந்துடுவம். கண்ணக்  குத்துறமாரி  வளந்து  நிக்க
யாருக்குதான்  ஆச….அதென்னமோ  அப்புடித்தான்  நம்ம  தலையில
எழுதியிருக்கு…” என்ற அம்மா,  கசிந்த  ரத்தம்  தொடையிடுக்கில்
கொழகொழத்தபோது  என்னைக்  காட்டிலும்  அதிகம்  அழுதாள்.
“அழுவாதம்மா பொம்பளைன்னா  இதெல்லாம்  நடந்துதான  ஆவும், கொஞ்சம்
துணி  குடு…”
நான்  சமாளித்து  அவளைத்  தேற்ற  முயன்றபோது  அம்மா, என்னை
வாரியணைத்துக்கொண்டாள்.  அம்மா  தைரியக்காரிதான். அல்லாது  போனால்
தனியொருத்தியாய்  என்னைத்  தன்  சிறகுகளுக்குள்  பொத்தி
வளர்க்கமுடியுமா…..
இருந்தும்  சில  நேரங்களில்  தன்  வசமிழந்து  அழுதுவிடும்  அம்மாவுக்கு
அதற்கான  காரணம்  ஆயிரமிருக்கலாம்.
“மினி பஸ்ஸுல  கூட்டம்  நெரிச்சி  தள்ளுது. ஒத்த  காலு  வைக்கதான்
எடமிருக்கு. ஒரு  கையில அரிசிப்பையி கனக்குது…..இன்னூரு  கையால  ஒசக்க
இருக்க  கம்பியப்  புடிச்சிக்கிட்டு  அலமலந்து  நிக்கிறன். அப்ப  எம்பின்னாடி  ஒரு
பய, இருவத்தஞ்சி  வயசிருக்கும். எங்கயோ  பாத்துக்கிட்டு  அசிங்கமா  ஒரசுறான்.
அத்தோட  வுடாம  முன்னாடி  கைய  வச்சி  தடவு  தடவுன்னு  தடவுறான்.
கழுத்துல  கெடக்குற  கயத்துல  ரெண்டு  ஊக்கு  மாட்டி  வச்சிருக்கன். எடுத்து நறுக்குன்னு  குத்தணும்போல  இருக்கு. கையையும், காலையும்  அசைக்க
முடியாம  நின்னுக்கிட்ருக்கப்ப  எங்கயிருந்து  ஊக்க  எடுக்குறது. கைய, கால
வச்சிக்கிட்டு  சும்மாயிருடா  நாயேன்னு  அவன்  காதுல  வுழுவறமாரி  கத்துறன்.

அவன், யாரையோ  சொல்றாப்ல  செய்யிறத  செஞ்சிக்கிட்டேயிருக்கான். சுத்தி
நிக்கற  கூட்டத்துல  ஒருபய  கண்டுக்கல. நரகவேதனையாப்
போச்சி……..எறங்குனதும்  செருப்பக்  கயட்டி  அடிக்கணும்னு
நெனச்சிக்கிட்டிருந்தன். ஆனா  அவன்  எனக்கு  முன்னாடியே  எறங்கிப்
போயிட்டான். ”
ரேசனுக்குப்  போய்விட்டு வந்த  அம்மா  ஒருமுறை  புலம்பினாள்.  அதுகூட
காரணமாயிருக்கலாம்.
நான்  அம்மாவைப்  பார்த்தேன். அமைதியாகக்  கிடந்த  அவளால்  புறச்  சூழலின்
சத்தங்களடங்கி  என்னுள்ளே  பேரிரைச்சல்  கிளம்பிற்று. பிரிந்து  போவதற்கான
சின்ன  அறிகுறி  கூட  இல்லாமல்  முதல்  நாளிரவு  அம்மா  வெகுநேரம்
என்னிடம்  பேசிக்கொண்டிருந்தாள்.
என்  எதிர்காலத்தை  தீர்மானிக்கக்கூடியப்  பேச்சாகவோ, சாத்தியக்கூறுகளற்ற
வாழ்க்கையில்  தப்பிப்  பிழைத்து  வாழ  வேண்டிய  நிர்பந்தத்தைப்  பற்றிய
பேச்சாகவோ  அது  இருக்கவில்லை.
இருந்திருந்தால்  நான்  ஓரளவு  புரிந்துகொண்டிருப்பேன். விழித்துக்
கொண்டேயிருந்து  என்  அம்மாவின்  உயிரைக்  கவ்விப்  பிடிக்க  வந்த  காலனை
துரத்தியடித்திருப்பேன்.
ஆனால்  எங்கள்  பேச்சு  எப்போதும்போல  எங்களைப்பற்றிப்  படர்ந்து  கிடக்கும்
சராசரி  நிகழ்வுகளைப்  பற்றியதாக  இருந்து  தொலைத்துவிட்டது.
“ஆம்பளைங்க  நல்லவங்களா, கெட்டவங்களாம்மா…….?”
நான்  கேட்டுவிட்டு  அம்மாவைப்  பார்த்தபோது  அவள்  பெரிதாய்  கொட்டாவி
விட்டாள்.
“தூக்கம் வருதுடி….”
“சொல்லிட்டு தூங்கும்மா ….”
“என்னத்த  சொல்றது……ஆம்பளைங்களால  எனக்குக்  கெடச்ச
அனுபவங்களெல்லாம்  அவனுங்கள  கெட்டவங்கன்னே  நம்ப  வச்சிருக்குடி.”

“அப்பா  ஒனக்கு  செஞ்ச  துரோகம், அன்னிக்கி  பஸ்ஸுல  இடிச்ச  அந்தப்
பேமானிப்பயலோட  மோசமான  நடவடிக்க, எல்லாமும்   ஒன்னைய  அப்புடி
நெனைக்க  வச்சிருச்சி,  இல்லியாம்மா……?”
“அது  மட்டுமில்லடி. சின்ன  வயசுலயும்  அனுபவிச்சிருக்கன். அப்ப  எனக்கு
பன்னண்டு  வயசிருக்கும். அப்பாவோட  பிரெண்டு, அந்தாளுக்கு  நாப்பது
வயசிருக்கும். வூட்டுல  யாருமில்லாத  நேரத்துல  வந்து  எப்பவும்
கொஞ்சிறாப்ல  கொஞ்சிக்கிட்டே  கைய  அங்க, இங்க  வச்சி……பயமாருக்கு,
வுடுங்க  மாமான்னு  அழுவுறன். என்னத்துக்கு  பயப்புடுற, நா  ஒன்  மாமா
தானேங்குறான். அப்புறம்  பக்கத்து  வூட்டுக்காரன்  ஒருதடவ  அதேமாரி
செஞ்சான். அம்மாட்ட  சொல்லலாமா, கூடாதான்னு  தெர்ல. பயமா  இருந்துச்சி.
ரொம்ப  நேரம்  அழுதன். ஏன்டி அழுவுறன்னு  அம்மா  கேட்டுச்சி. சொல்ல
பயந்துக்கிட்டு  கம்முன்னு  இருந்துட்டன்.”
ஒருக்களித்துப்  படுத்திருந்த  அம்மாவின்  கண்களிலிருந்து சாய்வுக்கோடுகளாய்
நீர்  வழிந்தது.
ஒவ்வொரு  பெண்ணிடமும்  தங்கள்  பிள்ளைகளிடம்  கூற  இப்படிப்பட்ட
கதைகளிருக்கும்  என்றே  எனக்குத்  தோன்றியது. வெறுமனே  பாட்டி  வடைசுட்ட
கதையும், ராஜாக்  கதையும்  சொல்கின்ற  பெண்களுக்குள்  சொல்லப்படாத
கதைகள்  பல  ஒளிந்திருக்கக்கூடும்   என்று  நான்  நினைத்துக்கொண்டேன்.
சொல்லப்படாத  கதைகளை  சொல்லக்கூடாத  கதைகளாக  அவர்கள்
மறைத்திருக்கலாம். இங்கப்பாரு, ஒங்கிட்ட  ஒண்ணு  கேக்குறன். மறைக்காம  சொல்லு…..”
அம்மா  தன்னிலைக்  குறித்த  கழிவிரக்கத்திலிருந்து  விடுபட்டு  என்  கவனத்தை
திசைமாற்றினாள். நான்  தலையாட்டினேன்.
” என்னிக்காவுது  ஒனக்கு  இந்தமாரியெல்லாம்  நடந்துருக்கா….?”
“பயம்  வந்துருச்சாம்மா  ஒனக்கு….?”
“இவ்ளோநாளும்  கேக்க  தோணலன்னு  பொய்  சொல்லமாட்டேன். கேட்டா
ஆமான்னு  சொல்லிடுவியோங்குற  பயம்  இருந்துச்சி. அதனாலதான்  கேக்கல.
ஆனா  இதுக்குமேல  கேக்காம  இருக்க  மனசு  ஒப்பல. சொல்லுடி…..”

“இல்லம்மா. ஏதாவது  நடந்திருந்தா  ஆம்பளைங்க  நல்லவங்களா,
கெட்டவங்களான்னு  கேட்ருக்க  மாட்டன். நீதான்  என்னைய  ஒன்  பாதுகாப்பு
வளையத்துக்குள்ள  வச்சிருக்கியே….”
நான், அம்மாவை  கட்டிக்கொள்ள, அவள்  நெஞ்சில் கைவைத்து  நிம்மதி
பெருமூச்சு  விட்டாள். அந்த  நிம்மதிதான்  அவள்  உயிரைப்
பறித்துக்கொண்டதோ……
நான்  மெல்ல  நகர்ந்து  அவளின்  மார்பில்  தலைவைத்துப்  படுத்துக்கொண்டேன்.
என்னுடைய  பாதுகாப்பு  வளையம்  அறுபட்டுப்  போனது  போன்ற  உணர்வு,
உடம்பிலூறும்  காமக்கண்களை  இனி  தவிர்ப்பது  எப்படி  என்கிற  திடுக்கிடல்,
அத்துமீறும்  விரல்களின்  தடவல்களை  சகிக்கப்  பழுகுவது  சாத்தியமா  என்கிற
பயம்  என்னுள்  பொங்கி, பிரவாகமெடுத்து  ஓடியது. நுரைத்து, சுழித்து, ஆறாய்,
வெள்ளமாய்  பெருகி  என்னை  வைத்து  அழுத்திற்று.
என்  மகளிடம்  கூற  இப்போது  வரை  எனக்கான  கதைகள்
எதுவுமில்லையென்றாலும்  இனி  நிறைய  கதைகள்  கிடைக்கக்கூடும்  என்று
தோன்றிய  எண்ணம்  என்னை  அதலபாதாளத்துக்குள்  தள்ளிற்று.
தண்ணென்று  குளிர்ச்சியாயிருந்த  அம்மாவின்  மார்பகங்கள்  என்  சூடான கண்ணீர்  பட்டு  தகிக்கத்  தொடங்கின.

முற்றும்

 

 

 

-ஐ.கிருத்திகா

Please follow and like us:

2 thoughts on “இருட்டில்  ஒளிரும்   ஆயிரம்  கண்கள்

  1. இத்ர மாத்ரம் – மலையாளத் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி ,
    நாயகி ஸ்வேதா மேனோன் இறப்புக் காட்சியில் இருந்துதான் துவங்கும்.
    அப்படி ஒரு அற்புதமான துவக்கம் இந்த சிறுகதை.
    —–
    தாயும் மகளும் பேசும் உரையாடல்கள் அழகியல்.
    – கற்பூர முல்லை ஸ்ரீ வித்யா, அமலா
    கதை நெடுக உலவுகிறார்கள்,

    அப்பா மொகம் ஒனக்கு ஞாவகத்துல இருக்காம்மா….?”
    நான் வெங்காயம் உரித்துக்கொண்டே கேட்டபோது கொதி சோற்றைக்
    கிளறிவிட்டுக் கொண்டிருந்த அம்மா, திரும்பிப் பார்த்துச் சொன்னாள்.
    “நான் மறக்கக் கூடாதுன்னுதான் அவென் அச்சில ஒன்னைய வார்த்து
    வச்சிட்டுப் போயிருக்கான். எப்புடி மறக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *