வாழ்வும் மரணமும் ஒட்டுமொத்த கலைகளுக்கான முடிவிலியாக எக்காலங்களிலும் இருந்ததில்லை. படைப்புக்களின் வழியாக கண்டறியப்பட்ட புனிதர்களின் இயங்குதலும் இம்மாதிரியே நடந்தேறியிருக்கின்றன. இலக்கியம் காலத்தின் வெளிப்பாடாக மாத்திரமின்றி தன்னிலை சார்ந்த மக்களின் குரல்களாகவும், விடுதலைக்கான மீட்சியாகவும் பெரு அடையாளப்பரப்பில் தனித்துவ நீட்சியினைக் கொண்டது. நேசத்திற்குரிய படைப்பாளன் தெளிவத்தை ஜோசப் ஐயாவின் இறப்புச் செய்தி சற்றுநேரத்திற்கு நிலை தடுமாற வைத்தது. பிரதியின்பத்தை வாசகப்பரப்பினுள் மிக நுணுக்கமாகச் செலுத்தியவர்களுள் தனித்துவமானவர். மலையகத்தின் எழுத்துச் செயற்பாடுகளில் மூத்த ஆசானாக நின்று துயர்படிந்த தன்னிலை சார்ந்த மக்களின் வாழ்வியலை உரையாடல் வெளிக்கு கொண்டு சென்றவர். தொடர்ச்சியான எழுத்துப் பாதையில் ஓய்வின்றி நகர்ந்து கொண்டிருந்த திடகாத்திரமான தேர் நின்று போனதில் அளவிட முடியாத் துயர் பரவித்தானிருக்கிறது. வனமும், ஆதிரையும் இணைந்து அக்கரைப்பற்றில் நடாத்தியமொழிவழிக் கூடுகை நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் படைப்புகள் குறித்த உரையாடலுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வரமுடியாமல் போய்விட்டது. ஆயினும் வெகு நேர்த்தியாக அவரது படைப்புக்கள் குறித்த நீண்ட உரையாடல்களைச் செய்ய முடியுமாயிருந்ததில் இப்போது திருப்தி கொள்ளவேண்டியிருக்கிறது.

மலையக மக்களின் வாழ்வியல் துயரங்கள் படைப்புக்களின் வழியாக நேர் கோட்டுப் பாதையில் கொண்டு செல்லப்படவில்லை. ஆங்காங்கே சில குறிப்புக்களுடனும், உதிரியான படைப்பு வெளியீடுகளிலும் தேக்க நிலையினையே கண்டிருந்தன. இவையெல்லாம் தெளிவத்தை ஜோசப்பின் இயங்குதலுக்கு முன்னரான மலையக இலக்கியங்களின் போக்காக குறிப்பிடலாம். தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் மலையக வெளிப்பாடுகள் மாத்திரமின்றி, மலையகத்தின் உள்ளிருந்த வேட்கைகளும் அடையாள எழுத்துருவாக்கத்திற்கான விருப்பங்களும் மாற்றுப்பாதையினை உருவாக்கி விட்டிருந்தன. தனது கதைகளில் உடன்பட்டுப் பயணிக்கும் பாத்திரங்களின் வழியாக இலக்கியத்தின் மீட்சிக் குரலினை பதிவு செய்திருந்த தெளிவத்தை ஜோசப்பின் கதையுலம் ஆச்சரியங்களால் சூழப்பட்டவை.

மலையகச் சிறுகதைகள் எழுத்துக்களின் விரிந்த செயற்படுத்தலை இலக்கிய உலகிற்கு மிகச் சீக்கிரத்தில் கொண்டுவந்து சேர்த்தது. தன்னிலம் சார்ந்தும், தன் மக்களின் உணர்வுச் செறிமானங்களை வெளிப்படுத்தியும்; மலையகத்தின் மீதான ஒருநிலைப் பார்வைக்கு பரந்த அலகினை ஏற்படுத்திக் கொடுத்தது. |மலையகச் சிறுகதைவரலாறு| தெளிவத்தை ஜோசப்பின் இலக்கிய இயங்குதலுக்கு தடங்கலற்ற வழியினை ஏற்படுத்திக் கொடுத்த ஆவணமாகும்.

மலையக சமூகத்தில் பரவியிருந்த சுரண்டலுக்கும் ஊழலுக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டில் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்தியக்கப் பயணம் வெகுகாலமாய் நீடித்திருந்தது. தனது படைப்புக்களில் புகுத்தப்பட்ட கதை மாந்தர்கள் எளிய மனிதர்களின் நேரடி உதாரணங்களாய் நிரப்பப்பட்டிருந்தனர். மொழி விளையாட்டுக்களின்றியும், கோட்பாட்டு மாயைக்குள் அகப்பட்டுவிடாமலும் தான் சார்ந்த மனிதர்களின் களத்திலிருந்து புனையப்பட்ட கதைகளின் மூலம் மேம்பட்ட வாழ்வியலின் எல்லாப் பகுதிளையும் ஒன்று சேர்த்தவர் தெளிவத்தை ஜோசப்.

1960ல் மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப்போட்டியொன்றினை வீரகேசரிப் பத்திரிகை நடாத்தியிருந்தது. அப்போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற தெளிவத்தை ஜோசப்பின் |பாட்டி சொன்ன கதை| இன்றளவும் பேசப்படுகின்ற நவீன சிந்தனையின் தூய வெளிப்பாடு. மிகுந்த விமர்சனத்தின் உள்ளாகவும், விரிந்த பார்வையில் மலையக இலக்கியம் மாறுபடுவற்குமான சூழலினை இக்கதை ஏற்படுத்தியது. ஈழத்து இலக்கியப் போக்கின் மீது விமர்சனக் கேள்விகளை தயங்காது முன் வைத்திருந்தார். அகழ் இதழில் வெளிவந்த அவரது நேர்காணலில் இதனை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் தமிழ் இலக்கியம் என்றதும் மனதில் எழும்பெயர்கள் புதுமைப்பித்தன், கு.பே.ரா, மௌனி என்று தொடங்கும். ஆனால் இலங்கையில் கைலாசபதி, சிவத்தம்பிதான். இலங்கையர் கோன், வைத்திலிங்கம், சம்மந்தன் என்றோ டானியல், கணேசலிங்கன், அரசரத்தினம் என்றோ வருவதில்லை.

மலையகப் படைப்புக்களை மாத்திரமன்றி தன்னையும், தனது படைப்புக்களையும் நிராகரித்த பட்டியலில் அவர் பலரைச்சேர்ப்பதுண்டு. ஆயினும் பிற்காலத்தில் மலையக இலக்கியத்தின் தவிர்க்க முடியாத குரலாக தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்கள் எல்லா வெற்றிடங்களையும் நிரப்பலாயிற்று.

இலங்கையில் மலையக மக்களின் அடையாளம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது கதைகளில் வெளிப்படுத்தி வந்தவர் தெளிவத்தை ஜோசப். நிலத்தினை நாடாகப் பிரகடனப்படுத்தி சோர்வடைந்த எழுத்துமுறைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருந்தார். எம்மாதிரியான கோட்பாட்டுச் சிக்கல்களிலும் தன்னை ஈடுபடுத்தாது மலையக மக்களின் வாழ்வியலைப் படைப்புக்களின் வழியாக எல்லா வாசக மனங்களிலும்கொண்டு சேர்த்தார்.

2013ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ஜெயமோகனால் தெளிவத்தை ஜோசப்பிற்கு வழங்கப்பட்டது. இதனை ஒரு பெருநிகழ்வாக பார்க்க முடியுமாயிருக்கிறது. அவரது எழுத்துக்கான சிறந்த அங்கீகாரமாகவும் கொள்ளமுடிகிறது.

அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்.

***

. எம். சாஜித் அஹமட்.

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *