​​​​​​

“மணி, அந்தப் பொண்ணப் போய் பாத்தியா? கூட யார் இருக்காங்க இப்போ?”

“ஆமா சார். அவங்க அம்மா மட்டுந்தான் இருக்காங்க. ஏற்கெனவே ரெண்டு மூணு வாட்டி மயங்கி விழுந்துட்டாங்க. கண் முழிச்சதும் அந்தப் பொண்ணு பேரச் சொல்லிக் கூப்பிடுறாங்க. அப்புறம் ஒரே அழுகை. எனக்கே பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.”

“ரெண்டு நாள் முன்னாடி வந்திருந்தா கூட ஏதாவது செஞ்சிருக்கலாம் டா. சே..”

“விடுங்க சார். நம்ம என்ன பண்ண முடியுமோ பண்ணியாச்சு. எலி பேஸ்ட் தின்னா யாரும் பொழைக்கவே முடியாதாமே?”

“ஆமா மணி, நேரா உள்ள உள்ள எல்லாத்தையும் அடிச்சிருது. இவளுக்கு லிவர் மொத்தமா அவுட்டு.”

“சார், வேற சொந்தக்காரங்க யாரோட லிவரும் கெடைக்காதா சார்?”

“இல்ல மணி, இப்போ கெடச்சாலும் ஒதவாது. அவ பாடில ஒண்ணும் வேல செய்ய மாட்டுக்கு. நாலு நாளா வெசம் எறங்கி இருக்கு. சரி, முடிஞ்சதும் கால் பண்ணு. நான் கொஞ்சம் தூங்கணும்.”

அந்தப் பதினெட்டு வயது பெண்ணின் கல்லீரல் மொத்தமாகக் கருகிக் கிடந்ததைப் பார்த்தபோது ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தோம் என்று தான் தோன்றியது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பு என் வேலை. பல உயிர்களைக் காப்பாற்றும் திருப்தி இருந்தாலும், பார்க்க முடியாத காட்சிகள் பலவற்றையும் கடந்து வருவது கொஞ்சம் கடினம் தான். விபத்துகளில் மூளைச் சாவடைந்து வருபவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசி உள்ளுறுப்புகள் தானத்திற்கு அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டும். நடிக்கவெல்லாம் வேண்டாம், மனதிலிருந்து உள்ளதைப் பேசினாலே பெரும்பாலான குடும்பங்கள் மிகவும் பெருந்தன்மையாக ஒப்புக் கொள்கின்றன. ஏற்கெனவே இந்த உறுப்புகளுக்காக காத்திருப்போர் பட்டியல் மிகவும் நீளம். வரிசைப்படி, உடல் தகுதிப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து,தேவையான நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து ஆயுள் நீட்டித்து அனுப்புவோம்.

எனது அறையைத் திறந்து ‘தொந்தரவு செய்யாதீர்’பலகையை கதவின் வெளியில் தொங்க விட்டுவிட்டு சோபாவில் சாய்ந்தேன். அப்போது எதிர்பார்த்தபடி சரியாக அலைபேசி அடித்தது. பதினெட்டு அழைப்புகள். அவற்றில் பதினைந்து என்னோடு சில நாட்களாக கண்ணாமூச்சி ஆடும் ஒரு பெண்ணிடமிருந்து. வாட்ஸப்பைத் திறக்க வேண்டாமென நினைத்த அடுத்த கணமே திறந்தேன். முந்தைய தினங்களைப் போல எல்லாமே விசித்திரமான புகைப்படங்கள் தான். வெகு அருகாமையில் எடுக்கப்பட்ட கைவிரல், கால் பாதம், நீள் பின்னல், கண்ணிமை. எத்தனை முறை அழைத்துப் பார்த்தாலும் அழைப்பை எடுப்பதில்லை. வாட்ஸப்பில் ஏதும் கேட்டாலும் பதில் வராது. ஆனால்,தினமும் பல அழைப்புகள் வரும். நான் எடுத்ததும் துண்டிக்கப்படும். விதவிதமான புகைப்படங்கள். இன்றைக்கு உடல் போல, சில நாட்கள் உடைகள், சில நாட்கள் வீட்டுச் சுவர் மட்டும், சில நாட்கள் விதவிதமான பூக்கள். இந்தப் பெண்ணிற்கு.. ஆம், நிச்சயம் பெண்தான்.. இல்லை, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. என்ன தான் வேண்டும் அவளுக்கு? கண்ணிமைகளில் பரவிய சூடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கண் நிறைந்து நீர் வழிந்தது. அப்படியே அந்தச் சுழலுக்குள் விழுந்து சிறுகிச் சிறுகி சென்றேன். விரல்கள், மென் மயிர், காலடி..

காதுகளுக்குள் மெல்ல ஆரம்பித்த அந்தக் காலடிச்சத்தம்தொடர்ந்து மேலெழுந்து பறையடியாக மாறியது. பின்,கனத்த உலோகத்திலான கொட்டுகள், பேரிடி, இரைச்சல். பொறுக்க முடியாத கணத்தில் சட்டெனக் கண்விழித்து எழுந்து உட்கார்ந்தேன். அலைபேசி அடித்துக் கொண்டிருந்தது. கதவு தட்டப்படும் ஓசை. கால்கள் ஒரு புறமாகத் தள்ளாடின. மணிதான் இப்படி தொந்தரவு செய்யக்கூடியவன்.

“எத்தன வாட்டி சொல்றது உனக்கு?”

“சார், அந்தப் பொண்ணு…”

“சரி, நடக்க வேண்டியதப் பாரு. நான் வரேன்..”

“சார், இன்னொரு பொண்ணு உங்களப் பாக்கணும்னு ரொம்ப நேரமா வெயிட் பண்ணுது. ஒரு சின்னப் பிள்ளையும் கூட இருக்கு.”

“யாரு? எதுக்கு?” அது அவளாக இருக்குமோ என்று ஒரு எண்ணம் வந்ததுதான். “பாக்க எப்பிடி இருக்கா?.. இருக்காங்க?”

“பாவம் சார். என்னன்னு தெரியல. வெயிட் பண்ணச் சொல்லவா?”

“ம்.. என்னன்னு கேட்டியா?”

“உங்ககிட்ட தான் பேசணுமாம். என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டுக்காங்க. அந்தச் சின்னப்பொண்ணுக்கு ஒடம்பு சரியில்லன்னு நெனைக்கிறேன் சார்.”

“சரி, மொகம் கழுவிட்டு வரேன். அவங்கள வரச் சொல்லு.”

அலைபேசி மீண்டும் அடித்தது. அதே எண் தான். எடுத்தால் அவள் பேசப்போவதில்லை. வாட்ஸப்பைத் திறந்தேன். நினைத்தபடி இன்னும் புகைப்படங்கள். அவள் தான். அவசர சிகிச்சை அறைக்கதவு, மருத்துவமனை கேண்டீன் மேசை,என் அறைக்கதவின் கைப்பிடி. எனக்கு இவ்வளவு அருகேஇருந்துகொண்டே என் பார்வையிலிருந்து தப்பிக் கொண்டிருக்கிறாள். சற்று முன் சந்தேகித்தபடி இதோ என்னைப் பார்க்கக் காத்திருப்பவளும் முகம்தெரியா அந்த அலைபேசிப் பெண்ணும் ஒருத்தி தானோ? சரி, பார்த்து விடுவோம்.

முகம் கழுவும் போது அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணின் முகம். அண்ணா, அண்ணா என அழைத்த குரல். முகமற்ற இந்த இன்னொருத்தியின் நினைவு. மாறி மாறி வந்த எண்ணங்களிலிருந்து விலகி ஓடி யாருமற்ற அமைதிக்குள் ஆழ்ந்து விட முடியாதா?

சுடச்சுட காபியை ஒரு மிடறு விழுங்கியதும் கதவைத் திறந்தான் மணி.

“சார், உள்ள வரச் சொல்லவா சார்?”

மேசையின் மேலிருந்த என் பெயர்ப்பலகைத் தூக்கி எறிந்து விட வேண்டும். எதிர் சுவரில் வரிசையாக பரிசு வாங்கிய புகைப்படங்கள். சிறந்த உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர். எதற்கு? இவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அந்தப் பெண்ணின் அண்ணா, அண்ணா என்கிற பாசமான அழைப்பிற்கு என்ன பதில் கொடுக்க முடிந்தது. முப்பது இலட்சம். யாரிடம் இருக்கிறது அவ்வளவு பணம்? பணம் இருப்பவன் மட்டும்தான் பிழைத்திருக்க வேண்டுமா? மற்றவன் இருக்கக்கூட உரிமையில்லாமல் போய் விடுமா? அரசாங்கம் கொடுக்கும் திட்டத்தின் மூலம் உறுப்பு மாற்று செய்து கொள்வதென்ன அவ்வளவு எளிதா?நான் செய்வதென்ன வெறும் தரகர் வேலைதானா? உயிர் பெற்று வெளிச்செல்லும் குடும்பங்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை எவ்வளவு முயன்று தவிர்த்தாலும் ‘குடும்பத்துல ஒருத்தரா நெனச்சுக்கோங்க’ என்று என் கைகளில் திணிக்கும்போது நான் ஏன் அவ்வளவு நடுங்குகிறேன்? நான் இங்கு எப்போதாவது மகிழ்ச்சியாக இருக்கிறேனா? பிறகு என் இடம் தான் என்ன?

“சார்..”

“ம்.. உக்காருங்க..”

எதிரே நின்ற உருவங்களைப் பார்க்காமல் கூறினேன். தயங்கியபடி நின்ற அந்தப் பெண் சிணுங்க ஆரம்பித்தாள். வாட்ஸப்பின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வந்து நிற்க,சட்டென அவளது மோதிர விரலைப் பார்த்து விடத் தோன்றியது.

“அழாதீங்கக்கா, உக்காருங்க,” என்றான் மணி.இவனுக்கென்ன இவ்வளவு கரிசனம்.

அந்தப் பெண் தன் மகளைத் தன்னோடு இழுத்துச் சேர்த்து நின்றாள். கசங்கிய பழைய புடவை. மஞ்சள் கயிறு தாங்கிய எலும்பு துருத்திய கழுத்து, பிளாஸ்டிக் வளையல்கள். இது அவளாக இருக்க முடியாது.

“உக்காருங்க, எதுக்காக என்ன பாக்கணும்னு சொன்னீங்க?” என்று நிமிர்ந்தேன். அடுத்த சில கணங்களுக்கு என் கண்களை அந்த முகத்திலிருந்து அகற்ற முடியவில்லை. படபடத்தபடி மேசையிலிருந்த தண்ணீரை எடுத்து பதற்றத்தை மறைத்தபடிக் குடித்தேன். வறுமையை மீறி அவளிடம் வெளிப்பட்ட பொலிவு. அவள் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றாக விழுவதைக் கூர்ந்து கவனித்தேன். சொலிக்கும் முத்துக்கள். அவளது மகள் அம்மாவின் முகத்தைப் பார்ப்பதும் தலையைத் தொங்கப் போடுவதுமாக இருந்தாள்.

“உக்காருங்க மொதல்ல, மணி, டீ சொல்லு.”

நாற்காலியை மிக மெதுவாகப் பற்றி அலுங்காமல் முன் வந்து சிலை போல உட்கார்ந்தாள். அவள் கையில் அலைபேசி ஏதும் இருக்கிறதாவெனப் பார்த்தேன். நிச்சயம் இருக்கும்.

“சொல்லுங்க, யார் அனுப்பினாங்க உங்கள?”

“அது…”

“சொல்லுங்க, என்ன பண்ணனும் நான்?”

“யாரும் அனுப்பல சார்.”

“அப்புறம்?”

“மூணு மாசமா இங்க வந்துட்டுதான் இருக்கேன். எம் மக…” பேச முடியாமல் அழ ஆரம்பித்தாள்.

“சொல்லுங்க, பாப்பாக்கு என்ன? டாக்டர்ஸ் பாத்தீங்களா?”

“அவளுக்கு கல்லீரல்…”

நான் மணியைப் பார்த்து என்னவெனக் கண்ணசைத்தேன். அவன் பதிலின்றி முழித்தான்.

“லிவர் பிராப்ளமா? முன்னாடி என்ன வந்து பாத்தீங்களா?”அவள் கண்களைப் பார்த்து பேச முடியாமல் மணியைப் பார்த்தபடி கேட்டேன்.

“ஆமா..”

“என்ன டா மணி? இவங்க வந்திருக்காங்களா? ஃபைல் இருக்கா பாரு..”

குறுக்கிட்ட அப்பெண், “இல்ல சார். விசாரிக்க தான் வந்தேன். முப்பது லட்சம்னு சொன்னாங்க. என்னால…”என்று தழுதழுத்தாள்.

“இங்கப் பாருங்க. மொதல்ல, பாப்பாக்கு லிவர் என்ன நெலமைல இருக்குன்னு டாக்டர்ஸ் பாக்கணும். அதப் பொருத்து தான் அடுத்து என்ன செய்யலாம்னு பாக்க முடியும்.”

“இல்ல, அது பாத்தாச்சு.. கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரில..ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்குன்னு இவ மட்டுந்தான் இருக்கா சார். நான் என்ன பண்ணன்னு தெரில..” மீண்டும் ஓவென அழ ஆரம்பித்தாள். பாச மிகுதியின் அந்த அழுகையின் பின்னே எதற்கு இப்படி ஒளிந்து கொண்டிருக்கிறாள்? நிச்சயம் இவள்தான் எனக்கு அழைத்தவள். எல்லாம் தெரிந்து எதற்கு இப்படி நடிக்க வேண்டும்?

“சரி, ரிப்போர்ட்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா? என்னன்னு பாக்கட்டும் மொதல்ல. மணி, இவங்களுக்கு கவர்ன்மெண்ட் பிளான் பத்தி சொல்லிக் குடு. பாப்போம்..”

அந்தப் பெண் என் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி அழுது கொண்டிருந்தாள். என்னால் அந்த இருக்கையில் இருக்க முடியவில்லை. சுவரில் தொங்கிய பரிசுப் படங்கள். அன்பளிப்புத் தொகை. அலைபேசியில் வந்த எண். புகைப்படங்கள்…. அந்த விரல்கள், கால் பாதம்.

சட்டென, “மணி, நான் சொல்ற நம்பர நோட் பண்ணிக்கோ.. 97656…” என்றேன்.

“சொல்லுங்க சார், 97656…”

“42212”

“நோட் பண்ணிட்டேன் சார்.”

அந்த எண்ணைச் சொல்லும்போது அவளைக் கூர்ந்து கவனித்தேன். துளி சலனமும் இல்லை. சீ.. என்ன மாதிரியான மனிதன் நான். பிள்ளையின் உயிருக்காகப் போராடும் ஒரு பெண்ணின் முன் உட்கார்ந்து…

“மணி, இவங்கள கூட்டிட்டுப் போ. நான் எதாவது சாப்ட்டு வரேன்..” என்றதும் அப்பெண் சட்டென எழுந்து தனக்குத்தானே பேசியபடி கைகூப்பி நின்றாள். என்ன நிலைமையில் சாப்பிடுவதைப் பற்றி நினைக்கிறேன். இந்த எலும்பு துருத்திய கழுத்து…அந்தச் சிறுமி கடைசியாக எப்போது சாப்பிட்டிருப்பாள்?

அவர்கள் வெளியே சென்றதும் மணியை அழைத்து, “டே,அவங்கள கேண்டீன் கூப்ட்டு போயி சாப்பாடு வாங்கிக் கொடு,” என்று பணம் கொடுத்தேன். மணி என்னை விசித்திரமாகப் பார்த்தபடி வெளியேறினான்.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவன், “சார், என்ன சார் இப்பிடி அழுறாங்க? சாப்ட கூப்ட்டதுக்கு வேண்டவே வேண்டாம்னு போய்ட்டாங்க சார்,” என்றான்.

அடுத்த சில நிமிடங்களில் எனது வாட்ஸப்பில் வரிசையாக புகைப்படங்கள் வரத் தொடங்கின. இதுவரை மிக அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சற்றுப் பின் தள்ளி,உருவம் தெளிவாகத் தெரியும்படி முதலில் கை விரல்கள்,கால் பாதம், நீள் பின்னலின் மொத்தம் என எடுக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து சிவப்பு நிற இதயங்கள்.

நான் அலைபேசியைப் பார்ப்பதும் யோசிப்பதுமாக இருந்ததைப் பார்த்து, “சார், என்ன சார்? ஏதும் பிராப்ளமா?” என்றான் மணி.

மணி…. ஆமாம், ஒருவேளை இவனாக இருக்குமோ? கூடவே இருந்து… சீ, இதெல்லாம் என் மன அழுக்கு.. எவரையும் நம்பக்கூடாது. ஆனால், நாம் நினைப்பது மட்டும் எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதாக நடக்க வேண்டும்.சுயநலம். சுயநலம். மணி மட்டும் இதைச் செய்திருக்கட்டும். அவனை வேலையை விட்டே அனுப்பி விடுகிறேன். அதானே, அது மட்டும்தானே செய்ய முடியும்? பியூன் வேலைக்கு நேர்முகத்தேர்விற்கு வந்தவனை அவனது பேச்சுத் திறமையைப் பார்த்து நான்தான் இந்த வேலையில் அமர்த்தினேன். அதற்கேற்றபடி சரியான வேலையாள் தான். நன்றாகக் கற்றுக்கொண்டு இன்று எனக்கு உதவியாக கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் முடித்து விடுகிறான். ஆனாலும் அவனாக இருக்குமோ? அவன் எதற்கு என்னிடம் இப்படி விளையாட்டு காட்ட வேண்டும்? அவனுக்கு வேறு எங்கும் கிடைக்கச் சாத்தியமில்லா சம்பளம் தருகிறேன். ஒரு நண்பனைப் போல நடத்துகிறேன். என் அந்தரங்க விசயங்கள் கூட தெரிந்தவன். ஆம், அதுதான்…. அந்தரங்கம் தெரிந்ததால்தான் விளையாடிப் பார்க்கிறானோ? சரியாக அந்தப் பெண் போனதும் புகைப்படங்களும் அழைப்புகளும் வந்ததெப்படி? இவனும்தானே உடன் சென்றான்?

“சார், சொல்ல வந்தத மறந்துட்டேன் பாருங்க. அந்தப் பொண்ணு பாடிய எடுத்துட்டுப் போறாங்க. அவங்க அம்மா உங்களப் பாக்கணும்னு வெயிட் பண்றாங்க.”

“யாரு, யாரு எந்தப்பொண்ணு?” உள்ளுக்குள் நடந்த உரையாடல்களின் நீள அகலங்களுக்குள் திசையறியாது நின்றேன். அண்ணா, அண்ணா என்கிற குரல் காதுகளுக்குள் ஆழ்ந்து ஒலித்தது.

“என்ன சார்! அதான் அந்த எலி பேஸ்ட்டு..”

“ஸ்டாப் இட் இடியட்…எதச் சொன்னாலும் அரகொற,முட்டாள், முட்டாள்..” என்று கத்தியபடி எழுந்து வெளியேறினேன். சுற்றம் எல்லாம் மறந்து ஓடினேன். மூச்சிரைக்க ஓடினேன்.  ‘அண்ணா, அண்ணா’ என அவள் அழைத்த குரலும், அவள் அம்மாவின் முகமும்…ஒரு சிறு துண்டு ஈரல், அதிலிருந்து முளைத்து வெளிவரும் உயிர்க்குருத்து, இரத்தம் ததும்பும் அதன் வெம்மை, அது பரவிப் பெருகி பேரூருக் கொண்டு நின்றது, சுற்றிலும் அதைத் தொட்டுப் பறித்து விடத் துடிக்கும் ஆயிரக்கணக்கான கைகள், கனத்த முரட்டுக் கைகள்,மெல்லிய இளம் கைகள், மழலைப் பிஞ்சுக் கைகள், அந்தக் கைகளைப் பிடித்து விலக்கி விடும் நீண்ட கூரிய வாள்கள்,முனகலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்த சத்தம், ஈரல், ஒரு துண்டு ஈரல், அண்ணா, அண்ணா,சட்டென ஒன்றுமற்ற இருள், அதில் சின்னஞ்சிறு புள்ளியெனத் தெரிந்த சுடர், அதிலிருந்து மெல்ல வெளிவந்த ஒற்றை விரல், குவிந்த விரல்கள், நீண்ட மென் கூந்தல்,எலும்பு துருத்திய கழுத்து, அதன் மென்மயிர், துள்ளிக் குதிக்கத் தயாரான பாதங்கள்….அண்ணா, அண்ணா, ஒரு சிறு துண்டு…ஓடும் வழியெங்கும் காத்திருக்கும் இந்த முகங்கள், பாவங்கள், சலிப்பு, கண்ணீர்…சட்டென, அந்த மெல்லிய விரல்கள் நீண்டு என்னருகில் வருகின்றன, கால் கொலுசின் ஒலி என் காதுகளுக்குள் ஊடுருவிச் செல்கிறது,அடுத்து என்ன புகைப்படம் வரும், சீ.. ஏன் இப்படி யோசிக்கிறேன்! நான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறேன். தூக்கம் இல்லாததால்தான் இருக்கும். முதலில் இதை முடித்துவிட்டு ஓடிவிட வேண்டும். இந்த மருத்துவமனை வாடையிலிருந்து வெகு தொலைவில் எனக்கே எனக்கானஇரண்டு பியர், கொஞ்சம் நடை, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள்.. எல்லாம் சரி ஆகும்.

ஆம்புலன்ஸின் அருகே அழுகை வற்றி, என்னைப் பார்த்துக் கைகூப்பியபடி நின்றாள் அண்ணா, அண்ணாவென்ற குரலின் அம்மா. அவர் அருகே சென்று அமைதியாக நின்றேன்.

“நல்லா இருங்க தம்பி. வேறென்ன சொல்லன்னு தெரியல. ராத்திரியும் பகலும் நீங்க ஓடின ஓட்டத்த நாம் பாத்தேன். புண்ணியமாப் போட்டும் தம்பி. எம்பிள்ளையோட… எம் பிள்ளையோட விதி அப்பிடி இருந்திருக்கு. அந்த அண்ணன் காப்பாத்திருவான். அந்த அண்ணன் காப்பாத்திருவான்னு சொல்லிட்டுக் கெடந்தா தம்பி. அவ செத்துப் போகணும்னு எலி மருந்த சாப்ட்ருக்க மாட்டா. எங்கள பயமுறுத்தத்தான் அப்பிடிச் செஞ்சிருப்பா. ஆனா, பொழச்சிரணும்னு அவளுக்கு அவ்ளோ ஆசையாய்ட்டு. ஆனா, ஒண்ணும் பண்ண முடியாத்த அம்மையாப் போய்ட்டேனே தம்பி..” என்றபடி கதறி அழுதார். என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். நான் அவரை சேர்த்தணைத்து என்ன சொல்லவெனத் தெரியாமல் நின்றேன். ஆம்புலன்ஸின் பின்னால் சற்றுத் தள்ளி மருத்துவமனை ஓரத்தில் உட்கார்ந்து தன் சிறு மகளுக்கு ஒரு பன்னை ஊட்டியபடி என்னைக் கூர்ந்து பார்த்தபடியிருந்தாள் சற்று முன் என் அறையிலிருந்து வெளிவந்தவள். அவள் குழந்தையின் கையில் ஒரு அலைபேசி இருந்தது. அவள் அதில் ஏதோ பாடல் பார்த்துச் சிரித்தபடி இருந்தாள். நிச்சயம் அந்த அலைபேசியாகத்தான் இருக்கும். எப்படி மகளிடம் கொடுக்க முடிகிறது! என்ன இது? சற்று நிம்மதியாக சோகத்தில் கூட நீடித்து இருக்க முடியாதா? அதற்குள் அவளும், அவளுடைய புகைப்படங்களும். சரி,அதையெல்லாம் புறக்கணித்துவிட முடியாமல் ஏன் எனக்குள் இவ்வளவு அனுமதிக்கிறேன்.

..

“மணி, அந்தச் சின்னப் பிள்ளையோட அம்மாவ நாளைக்கு வரச் சொல்லு. இன்னொரு செக் அப் டீட்டெயிலா பண்ணனும். பாப்பாக்கு மட்டுமில்ல, அந்த அம்மாவோட செக் அப்பும் பண்ணச் சொல்லு.”

“சரி சார்.”

“பிளட் குரூப் விசாரிச்சியா?”

“கேட்டுட்டேன், ரெண்டு பேருக்கும் ஒரே குரூப் தான் சார். நாளைக்கும் செக் பண்ணிடுறேன் சார்.”

“தேங்க் காட்…அப்புறம் கார்டியாலஜிஸ்ட், பல்மனாலஜிஸ்ட், சைக்கியாடிரிஸ்ட் எல்லார்ட்டயும் ஃபிட்நெஸ் வாங்கணும் என்ன?”

“சரி சார். நாளைக்கே முடிச்சிரலாம் சார்.”

“ம்‌ம், அப்படியே அனஸ்தீசிஸ்ட்டும் பாத்துரு..” மணி ஏதோ தயங்கியபடி நின்றான்.

“என்ன டா? சொல்லு..”

“சார், காசு இல்லன்னு..”

“மொதல்ல பண்ணக்கூடிய செக் அப்ஸ நான் சொன்னேன்னு பண்ணச் சொல்லு. இவுங்க நெலமைக்கு நம்ம டாக்டர்ஸே எல்லாம் செய்வாங்க. பின்ன, கவன்மெண்ட் பிளான் மோஸ்ட்லி அப்ரூவ் ஆயிரும். அதெல்லாம் அப்புறம்பாக்கலாம்.. ம்..” எதற்கு இந்தப் பெண்ணிற்கு இவ்வளவு செய்ய வேண்டும்? ஒருவேளை இவள்தான் அவளாக இருக்கும் என்று தெரிந்தேதான் எல்லாம் செய்கிறேனா?

மணி சற்றுக் குழப்பமாகப் பார்த்தான்.

“சார், வொர்க் அவுட் ஆகுமா சார்?” இவனுக்கென்ன குழப்பம். இவனுடைய திட்டம் வேறேதோவாக இருக்குமோ?

“பாப்போம். நீ நடக்க வேண்டியதப் பாரு..”

சோதனைகள் எல்லாம் முடித்து என் அறை வாசலில் காத்திருந்த அப்பெண்ணை உள்ளே வருமாறு அழைத்தேன். எனக்கு வந்து கொண்டிருந்த அழைப்புகளோ புகைப்படங்களோ சிறிதும் குறையவில்லை. ஆனால், அந்த எண்ணை தடை செய்து விட முடியும்தானே? அதையும் செய்யாமல் இருந்தேன்.

அதே கசங்கிய புடவை. ஆனால், சில மாற்றங்கள். இரப்பர் வளையல் இப்போது தங்க நிறத்தில் இருந்தது. கவரிங் தான். கழுத்தில் துருத்திய எலும்புகளின் மீது வளைந்தேறிச் சென்ற தாலிக் கயிறு புதிதாக இருந்தது. மாற்றியிருப்பாள். முகத்தில் சற்று கூடுதலாகப் பவுடர் பூசியிருந்தாள். இந்த முறை அவளது கண்களைப் பார்த்துப் பேச அவ்வளவு சிரமமாக இல்லை. அவளது இடது கண்ணின் அருகே ஒரு கரிய மரு, அல்லது மச்சம். இவளாகத்தான் இருக்கும்.

“பொண்ணு எப்படி இருக்கா இப்போ?”

“இருக்கா சார். எப்போ சரியாகும்மான்னு கேக்றா. வீட்டுக்குப் போணுமாம். உங்களுக்கு ஒரு கிஃப்ட் தருவாளாம். அவளே வரஞ்சு தருவாளாம். நல்லா வரைவா சார். ஒரு வாட்டி நான் படுத்துக் கெடந்தத அப்பிடியே வரஞ்சுட்டா…..”

“சரி, சரி… உங்க செக் அப் ரிசல்ட் வரட்டும். என்ன செய்யலாம்னு பாப்போம்.”

தயங்கியபடி என்னைப் பார்த்து இருந்தவள், “சார்… எனக்கு செக் அப்… சரியா வருமா சார்?…” என்று கேட்டாள்.

“ரிசல்ட் வரட்டும் சொல்றேன். நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க..” என்றபடி அவளது கைவிரல்களைக் கூர்ந்து கவனித்தேன். மெல்லிய சிவப்பு நிற நகப்பூச்சு. அடுத்த புகைப்படம் வரட்டும்.

“மணி, அவுட் சைட் ஃபார்மாலிட்டீஸ் கொஞ்சம் வேகமா பண்ண வேண்டியிருக்கும். லீவ் லாம் போட்ராத என்ன?இந்தப் பொண்ணுக்கு மேட்ச் ஆகிடுச்சுன்னா கவன்மெண்ட் பிளான் ல இத டை அப் பண்ணனும். அப்ரூவல்,இன்சூரன்ஸ்லாம் டக்டக்குன்னு நடக்கணும், என்ன?”

“சார், ஆனா, ஏற்கெனவே உள்ளவங்க?”

“அட எதுக்கு டா கொழம்புற. அவங்க பொண்ணுக்கு அவங்க குடுக்றாங்க, அப்புறம் என்ன பண்ணணும்னு தெரியாதா? எத்தன வாட்டி சொல்லணும் ஒனக்கு?”

“சரி சார். செஞ்சிருறேன் சார்.”

“நீ போய்ட்டு அந்தப் பொண்ண வரச்சொல்லு.”

மணி ஏதோ யோசித்தபடி வெளியே சென்றான். திரும்பி உள்ளே வந்தவன், “சார், டீ ஏதும் சொல்லவா சார்?”என்றான்.

“நீ போயி செக் அப் ரிசல்ட்ஸ் பாத்துட்டு வா. நானே கூப்பிடுறேன்.” இவனுக்கென்ன அப்படி சந்தேகம்.

தலையை ஆட்டியபடி எதுவும் சொல்லாமல் வெளியே சென்றவன் அந்தப் பெண்ணை உள்ளே வரச் சொன்னான்.

அவள் கைகளில் அலைபேசி. உடனே அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்துவிட்டால் என்ன? இவளாக மட்டும் இருக்கட்டும். என்ன நினைத்து என்னை இப்படிப் படுத்த வேண்டும்?

“சார், உங்க பொண்டாட்டியும் இங்க தான் வேல செய்றாங்களா சார்?” என்றாள். முதல் முறை அவளாகவே பேசுகிறாள். எதற்கு இந்தக் கேள்வி? வேவு பார்க்கிறாளா?குழந்தையின் பிரச்சினைக்கு இடையில் உனக்கென்ன இதெல்லாம்!

“எதுக்குக் கேக்கறீங்க?”

“இல்ல, அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கார்ல வந்து எறங்கினதப் பாத்தேன் சார். நல்ல அழகான பொண்டாட்டி சார்..”

“அது. அது என்னோட கூட வேல செய்றவங்க. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.” சொல்லிவிட்டு அவளது முக பாவனைகளைக் கவனித்தேன். நிஜமான ஒரு வியப்பும் மெல்லிய சிரிப்பும்.

“அய்யோ. தப்பா நெனைக்காதீங்க சார். கேக்கணும்னு நெனச்சேன். அதான்.”

“பரவால்ல. உங்க வீட்டுக் காரரு?” அவள் இதற்கு சோகமாகத்தானே வேண்டும். ஆனால், முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. நிச்சயம் அவள்தான்.

“நான் தனியா தான் சார் இருக்கேன். எதுவும் சரியா வரல.”இப்போது சற்று கலங்கினாள்.

“ஓ, சாரி. அப்போ, என்ன வேலை செய்றீங்க? வருமானம்…”

“அதுவா… பூக்கட்டுவேன் சார். மீனாட்சியம்மன் கோயில் வாசல்ல பூக்கட. எனக்கும் பிள்ளைக்கும் போதும். நல்லாப் படிச்சு வந்தா. திடீர்னு வயிறு வலி, காய்ச்சல்னு.. கொஞ்ச நாள்ல எல்லாம் போச்சு…”

“ம்..”

“அங்க ஒரு அண்ணந்தான் உங்களப் பத்திச் சொன்னாரு. நூறு, இருநூறு வேர பொழைக்க வச்சிருக்கீங்கன்னு. டாக்டர்மாரு நீங்க சொன்னாத்தான் கேப்பாங்கன்னு.”

“அது சரி. ஆமா, என்ன படிச்சிருக்கீங்க?” இதற்குப் பொய் சொன்னால் எளிதாகக் கண்டுபிடித்து விடுவேன். அதெப்படி,இவள் என் அறையில் இருக்கும்போது மட்டும் அழைப்போ,புகைப்படங்களோ வருவதில்லை. கடந்த ஒவ்வொரு முறையும் அப்படித்தான், இல்லையா?

“டிகிரி சேந்தேன் சார். புடிச்சிக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.” அப்போது அவளது அலைபேசி அடித்தது.

“பரவால்ல, எடுத்துப் பேசுங்க..” தயங்கியபடி எடுத்து மெல்ல பேசினாள்.

“ஆமா..ம்‌ம்‌ம்.. சரி.. சரி..”

அவள் யாரிடம் பேசுகிறாள் என்ன பேசுகிறாள் என்பதையெல்லாம் கவனிக்காத மாதிரி என் அலைபேசியில் எதையோ பார்த்தபடி இருந்தேன். மொத்த கவனமும் அவள் மீதுதான் இருந்தது. ஆமா, ம்.. இது மட்டும் தான் அவள் பேசியது. அப்படியென்றால் இதென்ன கூட்டுச் சதியா? மணி தானா?

“மணி, மணி..” அவன் பரிசோதனை முடிவுகளை வாங்கத்தானே சென்றான். சட்டென அலைபேசியை எடுத்து அவனை அழைக்கவும் அவள் அலைபேசியைக் கீழே வைக்கவும் சரியாக இருந்தது.

“சார், இந்தா வந்துட்டேன் சார். சூப்பர் சார், அந்தக்காக்கு லக்கு சார். எல்லாம் ஓகே சார். இந்தா வாரேன்.” மகிழ்ச்சியாகக் கத்தினான் மணி. எனக்குத் தெரியும். எல்லாம் சரியாகத்தான் இருக்கும்.

“உங்க செக் அப்லாம் நல்ல விதமா வந்திருக்கு. வெளக்கமா சொல்றேன் கேளுங்க. பொதுவா லிவர் மாத்துறதுக்கு யாராவது அவங்க லிவர டொனேட் பண்ணுவாங்க. உங்க பாப்பாக்கு நீங்களே குடுக்க முடியும். அதுக்கு தான் உங்கள செக் பண்ணோம். இப்போ எல்லாம் பொருத்தமா இருக்கு.”

“மீனாட்சி, அம்மா…எம் புள்ளக்கி என்ன வேணும்னாலும் எடுத்துக்கோங்க சார். அவ பொழச்சாப் போதும் சார். அதுக்கு நான் என்ன வேணா செய்வேன் சார்..” எதற்கு இதைச் சொல்ல வேண்டும். அவள் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவள் என்பதை மீண்டும் சொல்லிக் காட்டுகிறாளா?

“நீங்க போய் தாசில்தார் கிட்ட ஒரு சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வரணும். அரசாங்கத்துக் கிட்டருந்து கொஞ்சம் அப்ரூவல்ஸ் வரணும். மணி ஹெல்ப் பண்ணுவான். சரியா…”

தலை கவிழ்ந்து சிணுங்க ஆரம்பித்தாள். அண்ணா,அண்ணா என்கிற குரல்.

அலைபேசியில் வந்திருந்த அழைப்புகளும் புகைப்படங்களும் இப்போது எழுத்து வடிவம் பெற்றன. அத்தனையும் காதல் கவிதைகள். சீண்டல்கள். கூடவே,மெல்ல மெல்ல நிர்வாணமாகி வந்த புகைப்படங்கள். இன்னும் அந்த எண்ணைத் தடை செய்யாது எதற்கோ காத்திருந்தேன். அவள் அறுவை சிகிச்சைக்குப் போகும்போது அழைப்பு வருகிறதா பார்க்கலாம். மணியின் மீதும் ஒரு கண் இருக்கட்டும்.

அறுவை சிகிச்சை முடிந்தது. அந்தப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொதுப் பிரிவிற்குக் கொண்டு வரப்பட்டாள். மகளுக்கு உயிர் கொடுத்த புண்ணியம் அவளுக்குப் போய்ச் சேரட்டும். நான் இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்தேன். அவள் உள்ளே சென்றது முதல் இந்த நொடி வரை ஒரு அழைப்போ, புகைப்படமோ ஏதும் வரவில்லை. எப்படித்தான் இதை நான் கண்டுபிடிப்பது? அப்படி என்னை வீழ்த்தத்தான் இந்த நடிப்பென்றால் நேரடியாகவே கேட்டிருக்கலாமே? சரி,அவளது கல்லீரலே சரியாக இருக்குமென்று தெரிந்திருந்தால் இதெல்லாம் செய்திருக்க மாட்டாளோ?

“சார், ஆச்சரியம் தான் சார். அந்தக்காவோட லிவரே இந்தப் பிள்ளைக்கிக் கெடச்சது. கடவுள் அருள்தான் சார்.”

“ஆமா மணி. அப்பப்போ இப்பிடிக் கேசும் வரும்…”

“சார், பாதி லிவர் போதும், என்ன சார்? நம்பவே முடியல.. அந்தச் சின்னப் பிள்ள குடுத்து வச்சவ. அவவன் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி லிவர் டெஸ்ட் எடுத்துட்டுப் போறான். நல்லா குடிக்க வேண்டியது, அப்புறம் டெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் குடிக்க வேண்டியது.”

“என்ன மணி, எங்கயோ இடிக்கிற?”

“அட, இல்ல சார், கோடி கோடியா பணம் இருக்கவன்லாம் புது லிவர் கெடச்சும் செத்துப் போறான். செலவன்,கெடைக்காமச் செத்துப் போறான். இந்தப் பிள்ளைக்கி கெடச்சதே பெருசு சார். ஆனா, இனியும் எப்படி வேல செஞ்சி அந்தப் பிள்ளயக் காப்பாத்தப் போறாங்களோ…”

“ம்‌ம்‌ம்..”

“யாராச்சும் பெரிய மனசு பண்ணி இவுங்களப் பாத்துக்கிட்டாத்தான் முடியும். அந்தக்கா இன்னும் கொஞ்ச நாளைக்கி வேலைக்கும் போக முடியாது. பாவம்,” என்றபடி என்னைப் பார்த்தான். நான் எதுவும் சொல்வதாக இல்லை. விட்டால் என்னையே கல்யாணம் பண்ணச் சொன்னாலும் சொல்வான்.

“சரி, சரி. மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன், நீ வரியா? ரொம்ப நாளாச்சு…” அதற்கும் பெரிதாக எந்த உணர்ச்சியும் காட்டவில்லை மணி.

“போலாம் சார். அப்புறம், சொல்ல மறந்துட்டேன் சார். இது நம்ம ரூம் வாசல்ல கெடந்துச்சு சார்…” என்றபடி தன் கால்சட்டைப் பையிலிருந்து ஒரு அலைபேசியை எடுத்து நீட்டினான். எனக்கு எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது.

“என்ன? என்ன சொல்ற? அதெப்படி? யாரு?”

“அது ரெண்டு மூணு நாளாச்சு சார். தொலச்சவங்க கால் பண்ணா பாத்துக் குடுக்கலாம்னு வச்சிருந்தேன். ஆனா, ஒரு கால் கூட வரல. சரி, நீங்க வந்ததும் ஒங்க கிட்டயே தரலாம்னு இருந்தேன்.”

“எங்க குடு பாப்போம்..” என் கைகள் நடுங்கின. மணி நிதானமாக சிரித்தபடி நீட்டினான். எனக்குள் எல்லாம் ஒரு நில்லா சுழல் போல ஓடிக் கொண்டிருந்தது. எலிப் பசை,அம்மா, விரல்கள், கால்பாதம், நீள் முடி, மணி, எலும்பு,கழுத்து, புடவை, கேண்டீன், கல்லீரல்….

“மணி, கார எடு, இந்தா வரேன்.”

மணி சென்றதும் மெல்ல நிதானமாக என் அலைபேசியை எடுத்து அந்த எண்ணிற்கு அழைத்தேன்.

***

-சுஷில்குமார்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *