‘ எம் ஜி ஆர் தாத்தா செத்துப் போயிட்டாருப்பு..’
தூணுக்குப் பின்னால் ஒளிந்துக் கொண்டு, சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில், ‘ப்பே..’
என்று கத்தித் திடுக்கிட வைத்ததுபோல் அவரின் மரணம், மணிமாறனை
நிலைகுலைய வைத்திருந்தது.
“ஐயோ, எம் ஜி ஆர் தாத்தாஆ…” என்ற அவனுடைய கதறல், அழுகையில் கரைந்து
வாயிலிருந்து எச்சிலாய் ஒழுகி வடிந்தது. திடீரென்று கால்கள் பலமிழந்துப்போனதுபோல் துவண்டுப் போயின. அவனைத் தாங்கிக்கொள்ள தரை மட்டும்
போதாதுபோல் உணர்ந்தான். உடனடியாக நாற்காலியை பிடித்திழுத்து
குருடனைப்போல் அதைத் தவிப் பார்த்து அதில் உட்கார்ந்துக் கொண்டான். அந்தச்
செய்தி, ஒரு சரீர தாக்குதலுக்கு ஆளானவனைப்போல் அவனைத் தளர்ந்துப் போக வைத்திருந்தது.
* * *
எம் ஜி ஆர் தாத்தா ஒரு பிரம்மச்சாரி என்பதை விட யாருமற்ற அநாதை என்ற விஷயமே அந்த எஸ்டேட்டில் எல்லோருக்கும் பிரியமான ஒருவராய் அவரை ஆளாக்கியிருந்தது. எல்லோருடைய பரிவுக்கு உரியவராகவும் அவர் ஆகி இருந்தார்.
ஆனால், அதற்கும் மேலாக அவரைப் பற்றி யாருக்குமே அங்கே அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. சில வருஷங்களுக்கு முன்னர் இறந்துப் போன ‘மயிரு
மொளச்சான் கங்காணி’ சொன்னதாக சில தகவல்கள் நிலவின. ஆனால், அவை எந்த அளவிற்கு உண்மை என்றெல்லாம் சந்தேகப்பட அவர்கள் யாருக்குமே வயது போதவில்லை. அதனால் அவையே அவரைப் பற்றிய ஊர்ஜிதமற்ற செய்திகளாக
உலாவின.
எம் ஜி ஆர் தாத்தா கேரித்தீவு பக்கத்திலிருந்து வந்ததாகக் கேள்வி. அவர், முப்பது வயது இளைஞனாக டிவிஷன் இரண்டில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது,
‘சங்கிலிக் கிராணி’ என்ற ஒரு மலையாளத்தக் கிராணியின் அடாவடித்தனம் லாலாங்
புல்லைப்போல் பொருத்துக் கொள்ளமுடியாத அளவிற்கு சனங்களை துன்புறுத்தியது.
அவர்களை தெருநாயைபோல் துரத்தி வார்த்தைகளால் வீசி அடித்தார்.
தாய்மொழியால் மலையாளியாகவும், படித்தது ஆங்கிலமாகவும் இருந்ததில் ஒரு திமிர் தெரிந்தது. சக மனிதர்கள் என்பதும், வயது வித்தியாசமும் தெரியாதப் படிப்பு படித்திருந்ததுபோல் எல்லா பெண்களையும் ‘எந்தா, சிறுக்கி வேசா…’ என்றும்;
ஆண்களை ‘ எடோ பட்டி..’ என்றுமே ஏகவசனத்தில் பேசினார். தொழிலாளர்கள்
எல்லோருமே தமிழர்களாய் இருந்ததால் ‘வேசா, பட்டி..’ என்ற வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கேரளாவில், அவர் கிராமத்துப்
பழக்கமோ என்னவோ, அவர் முன்னே பெண்கள் யாரும் தாவணி போடக்கூடாது என்றும்  ஆண்கள் கைகட்டித் தலைக் குனிந்தே பேச வேண்டுமென்றும் கங்காணி மூலம் வழக்கமாக்கியிருந்தார்.

ஒரு நாள், புதிதாகத் திறந்திருந்த ‘ஒட்டுக்கன்னு’ மரங்களுக்கு காயம்
போட்டுவிட்டாளென்று மூன்று மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் ஆவடையை
‘வெட்டிலேயே’ சங்கிலி கிராணி அறைந்துவிட்டார். விஷயம் எஸ்டேட் சனங்களுக்குத்
தெரிந்தபோது, ‘என்ன செய்றது? எல்லாம் நம்ம தலையெழுத்து..’ என்று தலையைக்
குனிந்துக் கொண்டனர். அவள் புருஷனோ, ‘என்னா புள்ள, பாத்து வெட்றதில்ல?..’
என்று கல்லைக் கண்ட நாயைபோல் கால்களுக்கிடையில் ‘வாலை’
மறைத்துக்கொண்டு ஒதுங்கிப் போனான். ஆனால், எம் ஜி ஆரின் தீவிர ரசிகனாக
இருந்த ‘மையிலக்கா’ என்ற மையழகனால் பொருக்கமுடியவில்லை.
ஆபத்திற்குள்ளாகிப்போகும் பெண்களுக்காக எம் ஜி ஆர், தன் உயிரையும் துச்சமாய்
மதித்து சண்டை போட்டு அவர்களைக் காப்பாற்றிய காட்சிகளை கைகளைத்
தட்டிக்கொண்டு ஆர்ப்பரித்து மகிழ்ந்தவன். இப்போது, நான் ஆணையிட்டால்
பாடலில் வரும் ‘ ஒரு தவறு செய்தால்.. அதைத் தெரிந்து செய்தால்.. அவன் தேவன்
என்றாலும் விடமாட்டேன்..’ என்ற வரிகள் திரும்பத் திரும்ப அவன் கருத்தில் ஓடி,
அவனுக்குள் குடியிருந்த எம் ஜி ஆரை எழுப்பியது. . அவன் ஒரு முடிவுக்கு
வந்திருந்தான். அன்று மாலை சங்கிலிக் கிராணி தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர்
ஊற்றிக்கொண்டிருந்த நேரம், வேலியருகில் ஒளிந்திருந்த மைலக்கா, ரப்பர்
கட்டையால் மயக்கம் பொட்டு விழும்படி அவர் தலையில் தாக்கி, ஆவடையை
அடித்தக் கையின் எலும்பை ஒடித்துப் போட்டுவிட்டு, இரவோவு இரவாக லங்காட் ஆற்றை நீந்திக் கடந்து கிள்ளானுக்கு ஓடிப் போனான். மூன்று மாதங்களுக்கு ரவுப்பக்கம் தலைமறைவாகித் திரிந்து கடைசியில், காஜாங் பக்கம் வந்துச் சேர்ந்தான்.

காஜாங் பக்கமிருந்த எஸ்டேட் ஒன்றின் வங்சாக் கடையில் சந்தித்த ரபேல் என்பவரால்
அந்த எஸ்டேட்டிலேயே அவனுக்கு வெளிக்காட்டு வேலை கிடைத்தது. அந்த
ரபேல்தான் பின்னாலில்‘ மயிருமொளச்சான் கங்காணி’ ஆனார். லாலாங் செடிகளுக்கு
மருந்து பூசுவது, காட்டுச் செடிகளை வெட்டுவது, பாசாணம் அடிப்பது, ‘அல்லூரு’ வெட்டுவது என்று அந்த வெளிக்காட்டு வேலையிலேயே பத்து வருஷங்கள் ஓடிப்போயின.
மைலக்காவிற்கு பால் ஸ்டோரில் வேலை கிடைத்த வருடம், தோட்ட முதலாளியான
சீன தவுக்கை பழைய, ‘கொட்டாய்’ போலிருந்த மாரியம்மன் கோவிலை
உடைத்துவிட்டு முழுவதும் சிமெண்டால் ஆன கோயிலாய் விமானமெல்லாம்
வைத்துக் கட்டிக் கொடுத்தார். ஊர் சனங்களுக்கு ஒரே சந்தோஷம்! இவ்வளவு
வருஷங்களாக தைப்பூசத்திற்கு காவடி எடுத்து கொண்டாடி வந்தவர்கள், அந்த
வருஷத்திலிருந்து தீமிதி திருவிழா கொண்டாட முடிவெடுத்தனர். கும்பாபிஷேகம் செய்து தீமிதி கொண்டாட தீர்வான கோயில் கூட்டத்தில் ‘ திருவிழாவிற்கு என்ன படம் காட்டுவது?’ என்பதில் பலத்த சர்ச்சை எழுந்தது. ஊர் பெரியவர்கள் சிலர், சிவாஜி நடித்த சாமிப் படமே காட்ட வேண்டுமென்று அபிப்பிராயம் வைத்தனர். ‘
மைலக்காவின்’ பின்னால் நின்ற இளைஞர் கூட்டமோ எம் ஜி ஆர் படம்தான் காட்டவேண்டுமென்று மல்லுக்கு நின்றனர். பலத்த வாக்குவாதத்தின் உச்சத்தில் மைலக்கா

‘ அந்தச் சூத்துகாட்டி படத்துல என்னா இருக்கு? நம்ம கோயில் அண்டா

கணக்குல அவன் சூத்துதான் இருக்கு!..’ என்று சொன்னபோது எல்லோரும்
சிரித்துவிட்டனர். கடைசியில், மாவிளக்கன்று சிவாஜி படமும் தீமிதியன்று எம் ஜி ஆர்
படமும் காட்டுவதென்று முடிவானதோடு அன்றிலிருந்து மைலக்காவை எல்லோரும்
எம் ஜி ஆர் என்று கூப்பிட ஆரம்பித்தனர். அவனுக்கும் அது மிகவும் பிடித்துப்
போனது. அவனும் அன்றிலிருந்து தன்னை எம் ஜி ஆர் ஆகவே நினத்துக்கொண்டான்.
ஏற்கனவே அவன் எம் ஜி ஆர் படங்கள் பார்த்து சிகரெட், மதுவெல்லாம் கெட்டப்
பழக்கங்களென்று தொடவேயில்லை. கோவிலுக்கு போவதில்லை. சாமியையும்
கும்பிடுவதில்லை. வீட்டில் தாய் தந்தையரின் படங்களை வைத்தே தெய்வமாக வணங்கி வந்தான்.
மாவிளக்கன்று, தேரை இழுத்துக்கொண்டு வந்தவர்கள் சிரமபரிகாரத்திற்கு தெரு
முச்சந்திகளில் நின்றபோது, கூட்டத்தை மகிழ்விக்க முதன்முதலாக எம் ஜி ஆரின்
சிலம்பாட்டமும், சுருள்கத்தியும் அரங்கேறின. ஊர்ச்சிறுவர்களுக்கு கொண்டாட்டம்
தாங்கவில்லை. பெரியவர்களும், இளைஞர்களும் எம்ஜீ ஆரின் திறமையைக் கண்டு

ஆச்சரியப்பட்டுப் போயினர். எஸ்டேட்டில் ஒருவனுக்கு இந்த வித்தையெல்லாம்
தெரிந்திருப்பதை அறிந்து ஊர் பெரியவர்கள், பெருமை கொண்டனர். தமது
இளமையில் கண்ட வித்தையை மீண்டும் காண நேர்ந்ததில் அவர்கள் தம் இளமைக்
கால நினவுகளில் மிதந்தனர். அந்தக் கலையை எஸ்டேட்டிலிருந்த மற்ற
வாலிபர்களுக்கும் கற்றுத்தர தீர்மானித்து, மறுவாரமே, பொதுக்கூட்டமொன்றை
கூட்டி ஆர்வமுள்ளவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கும்படி கோயில் நிர்வாகம் எம்
ஜி ஆரைக் கேட்டுக் கொண்டது. அவனும் சந்தோஷத்துடன்,
“ என் கடமை” ங்க என்று ஊர் பெரியவர்களை வணங்கி, ஆர்வத்துடன் ஏற்றுக்
கொண்டான்.
* * *
மறுமாதமே சிலம்பப் பயிற்சி ஆரம்பமானது. ஒரு முழுப்பயிற்சி ஒரு வருடத்திற்கு
என்றும் ஒரு வகுப்பிற்கு நான்கிலிருந்து ஆறு பேர்களை மட்டுமே சேர்த்துக்
கொள்வதென்றும் எம் ஜி ஆர் முடிவு செய்து பயிற்சியை தொடங்கினான்..
மாணவர்களை தேர்வு செய்வதற்கு முன்னர், அவர்களின் ஆரோக்கியம், எடை, சுறுசுறுப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் தெரிந்துக் கொண்டான். அப்படி
எம் ஜி ஆரின் முதலாவது பட்டறையில் முதலாவதாக தேர்வானவன்தான் மணிமாறன்.
அந்தச் சிலம்பக் கழகத்திற்கு எம் ஜி ஆர் சிலம்பக் கழகம் என்ற பெயரை வைத்து,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை மணி பத்திலிருந்து பதினோரு வரை ‘ஒன்னாம்
நம்பர்’ கித்தா காட்டிற்குள் இருந்த பொட்டல் வெளியில் பயிற்சியை ஆரம்பித்தான்.
பயிற்சி செய்யும்போது யாராவது பார்த்துக்கொண்டிருந்தால் கவனம்
சிதறிப்போகுமென்பதால் அந்தக் காட்டுப் பகுதியை தேர்வு செய்திருந்தான். பயிற்சி
முடிந்தக் கையோடு கோவிலுக்குப் பின்னாலிருந்த தன்னுடைய லயத்திற்கு கூட்டிக்
கொண்டுபோய், சுடச் சுட வரக்கோப்பி தயாரித்து, அதில் கொஞ்சம் எழுமிச்சை
ரசத்தை கலந்து எல்லோருக்கும் குடிக்கக் கொடுப்பான். அப்போது, சிலம்பம் பற்றிய நுட்பங்கள் சிறப்புகள் மற்றும் எம் ஜி ஆர் பற்றிய அதிசய கதைகளைச் சொல்லி

மாய்ந்துப் போவான். அவர்கள் எல்லோரும் பயிற்சிக்குப் போன முதல் நாள் நினைவு,
பால் மங்கில் உறைந்துக்கிடக்கும் கட்டிப் பாலைப்போல் இப்போதும் அப்படியே
மணிமாறனின் நினைவில் உறைந்துக் கிடந்தது.
எம் ஜி ஆர் கேட்டார்.
“ ஏங்கப்பு பசங்களா, மொதல்ல நீங்க எதுக்கு செலம்பம் கத்துக்க ஆச படுறீங்கன்னு
சொல்லுங்கப்பூ கேப்போம்..”
“ யாராவது எங்கள அடிக்க வந்தா அவுங்கள அடிச்சி வெரட்றதுக்கு எம் ஜி ஆர்
அண்ண.” – எல்லோரும் ஒரே பதிலையே சொல்லிவைத்தனர்.
எம் ஜி ஆருக்கு சிரிப்பு வந்தது.
“ இங்க பாருங்கப்பு!. யாருமே சும்மா ஏம்பூ நம்மள அடிக்க வருவாங்க?. செலம்பம்,
குந்தா, கைவரிசன்னு எந்த கலையோட நோக்கமும் நம்பளுக்கோ, நம்பள சுத்தி
இருக்கறவங்களுக்கோ ஏதோ ஆபத்துன்னா அதுலேர்ந்து நம்மள
காப்பாத்திக்கிறதுக்காவதான். அதனாலதான் அத தற்காப்பு கலன்னு சொல்றோம்.
காரணம் இல்லாம எதிராலிய காயம் படுத்துறது நம்ம நோக்கமா இருக்கவேகூடாது.
இத எப்பவுமே நீங்க மனசுல வெச்சிகினும்பூ.. அது சரி, கம்பு சுத்தறதப் பத்தி யாருக்கு
என்ன தெரியுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்?..
யாருக்குமே ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை!
“ சரி, அடிப்படையான விஷயம் சிலத மொத உங்களுக்கு சொல்லீர்றம்பூ. செலம்பம்
சுத்தறத கத்துக்கறதுக்கு முன்னாடி மெய்பாடம், ஒடம்புகட்டு பாடம், மூச்சுபாடம்,
குத்துவரிச, தட்டுவரிச, பிடிவரிச, அடிவரிசன்னு ஏழு பாடங்க இருக்குப்பூ.
இதையெல்லாம் கத்துக்கிட்ட பெறவுதான் செலம்பாட்டம் ஆரம்பமாவும். ஏன்னா,
இந்த பயற்சிக எல்லாந்தான் ஒருத்தர செலம்பம் சுத்த தயார் பன்னும். எடுத்த
ஒடனேயே கம்பு சுத்த கத்துக்க நெனச்சிங்கன்னா, மொத சுத்துலியே தல சுத்தி மண்ண
கவ்வீர்விங்க தெரிஞ்சிக்கிங்க. எந்த வித்தையுமே குறுக்குவழில கத்துக்க முடியாதுப்பூ.
சிலம்பம் கற்றுக்கொள்வதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை கேட்டு
மலைத்துப்போய் எம் ஜி ஆர் பார்த்துக் கிடந்தனர்.
“ மொதல்ல மெய்ப்பாடம். ஒடம்பு பெலத்த ஏத்தறத்துக்காவ பயற்சி செங்சி ஒடம்ப
தயாரா வெச்சிகிறது. ரெண்டாவது ஒடற்கட்டுப் பாடம். தேவையான பெலத்த
ஒடம்புக்கு ஏத்தி, கைகால லூசாக்கி வெச்சிக்கிற பயிற்சி. மூனாவது மூச்சிப்பாடம்.
இன்னும் சிக்கலான பயிற்சியெல்லாம் பின்னாடி செய்றதுக்கு இப்பியே பிராணயாமம்
செஞ்சி மூச்ச திடப்படுத்திகிறது. இதெல்லாம் எதுக்குன்னா ஒருத்தரு எந்தளவுக்கு கலய
கத்துகிறதுல கண்ணும் கருத்துமா இருகாருன்னறத தெரிஞ்சிக்கதான். “
தொடர்ந்து மற்ற பயிற்சிகளைப் பற்றியும் மேலோட்டமாக விளக்கிவிட்டு மேலும்
சொன்னார்.

“ எம் ஜி ஆர் மாரியான மகான்ங்க கத்துக்கிட்ட கலய கத்துக்கிற கொடுப்பன
உங்களுக்கு கெடச்சிருக்குப்பூ. அந்த நெனப்ப எப்போதுமே மனசுல வெச்சுக்கிட்டு
அதுக்கு ஏத்தமாரி உங்க பழக்க வழக்கங்கள வெச்சுக்கனும். சிகரெட் குடிக்காதிங்க.
தண்ணி அடிகாதிங்க. ஒடம்பு ஆரோக்கியந்தான் இதுல பிதானம்பூ. மறந்துறாதிங்க.
கடசியா ஒன்னு. நீங்க இங்க செலம்பம் கத்துக்குற காலம் வரிக்கும் என்னோட
வசதிக்காவ உங்களுக்கெல்லாம் எம் ஜி ஆருக்கு படத்துல இருந்த பேர வெச்சி
கூப்புடலாம்னு நெனைக்கிறேன். நீங்க என்ன நெனக்கிறீங்க?”
அவர்கள் யாருக்குமே ஆட்சேபனை இருக்கவில்லை.
கரிகாலன், வீரன், மார்த்தாண்டன், மணிவண்னன், இளங்கோ, மணிமாறன் என்ற
பெயர்களை அவர்களுக்கு சூட்டி மகிழ்ந்தார். அவர்களுக்கும் அது பிடித்தே இருந்தது.
உடனே ஒருத்தருகொருத்தர் அந்தப் பெயரிலேயே கூப்பிட்டு சிரித்துக்கொண்டனர்.
“ நா மறுபடியும் சொல்றேம்பூ!. இந்தக் கலையோட நோக்கமே நம்மளயும் நம்மள சுத்தி
இருக்குறவங்களையும் ஆபத்துலேர்ந்து காப்பாத்திகிறதுக்குதான். அதனால,
எப்போதுமே நீங்கல்லாம்,
‘ நீதிக்கு தலைவணங்கு’றவங்களாத்தான் இருக்கனும்பூ.”
* * *
மெய்ப்பாடம் ஆரம்பத்திருந்த முதல் வாரம். தேகப் பயிற்சி, மேடு பள்ளங்களில் ஓடுதல்,
மலையேறுதல் எல்லாம் முடிந்து எம் ஜி ஆரின் வீட்டிற்கு வந்திருந்தனர். அன்று
எல்லோரையுமே வீட்டிற்குள்ளே வந்து உட்காரச் சொல்லியிருந்தார். உள்ளே நுழைந்த
உடனேயே வாசலை ஒட்டிய வலதுபுற சுவரில், எம் ஜி ஆர் அண்ணனின்
பெற்றோர்களின் வரைப்படம் கருப்பு வெள்ளையில் கணகாம்பர மாலைத் தரித்து
தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து வீரர்கள் எல்லோரும் நின்றனர். முதன்முதலாக
அவரின் பெற்றோரின் முகங்களைப் பார்க்கின்றனர். அப்பா தலைப்பாகை அணிந்து,
முரட்டு மீசையுடன் கம்பீரமாகப் பார்த்தார். அம்மா, லட்சுமீகரத்தை முகத்தில் ஏந்தி,
நெற்றியில் தெரிந்த பொட்டைப்போல் நிறைந்து காட்சியளித்தார். தந்தையின்
கம்பீரத்தையும், தாயின் சாயலையும் எம் ஜி ஆர் அண்ணனிடம் கண்டனர். சிரத்தை
தாழ்த்தி அஞ்சலி செய்துக் கொண்டனர். வாசலுக்கு நேர் எதிர் சுவரில், அவர்கள்
எங்கேயும் பார்த்திராத அதிசயத்தைப் பார்த்தனர். ஒரு ரப்பர் மரத்திற்கு இரண்டு ரப்பர்
மரங்கள் என்ற கணக்கில் இருந்த பலகைச் சுவர் முழுக்க எம் ஜி ஆர் பட
சுவரொட்டிகளே சிவப்பு, நீல வர்ணங்களில் நிறந்திருந்தன. இடையிடையே இந்தியன்
மூவி நியூஸ் பெயர் தாங்கிய இரண்டு பக்க வர்ணப்பட போஸ்டர்கள் வேறு! அதில்
ஒன்றில், எம் ஜி ஆர் சரோஜா தேவிக்கு காமிரா பெட்டியில் படம் பிடிப்பதை கற்றுக்
கொடுத்துக் கொண்டிருந்தார். மற்றொன்றில், அதே நடிகைக்கு சைக்கிள் கற்றுக்
கொடுத்தார். ஒவ்வொரு பட போஸ்டராக அவர்கள் பார்த்துக்கொண்டு வந்தனர்.
எங்கே, எப்படி அவ்வளவு பட போஸ்டர்கள் கிடைத்தன என்ற ஆச்சரியத்தில்
அவர்களுக்கு கண்கள் விரிந்தன.

“ எம் ஜி ஆர் அண்ண, இந்த பட போஸ்டரெல்லாம் ஏதுண்ண? எப்படி கடச்சிச்சி
இவ்ளோ போஸ்டருங்க? இப்பல்லாம் இந்த மாரி போஸ்டர்ங்கள நாங்க பாத்ததே
இல்லியே“ மணிமாறன் கேட்டான்.
“ ஓ, அதா மணிமாறா? அந்த கதயெல்லாம் உங்க வயசு பையனுங்களுக்கெல்லாம்
தெரியிறதுக்கு லாய்க்கில்லப்பூ. அந்தக் கலத்துலெல்லாம் கோலா டவுன்ல இருந்த
ரெக்ஸ், கெத்தே தீயேட்டர்கள்ல புது படங்க ஒடுனிச்சின்னா எஸ்டேட்டுக்கு வர்ற பஸ்
டிரைவர்ங்க மூலமாதான் இந்த போஸ்டர்ங்கள எஸ்டேட்டுக்கு போற சடக்கெல்லாம்
வீசிப் போட்டு வெளம்பரம் படுத்துவாங்க. நா அப்பிடி பஸ் பின்னாடியே ஓடி
பொறுக்கி சேத்ததுதாம்பூ இவ்வளவும். “
“ அது சரி எம் ஜி ஆர் அண்ண. உங்களுக்கு ஏன்ண்ண எம் ஜி ஆர் மேல அவ்ளோ
வெறி?..”
“ என்னா வார்த்தப்பூ சொல்லிப்புட்ட. அது வெறி இல்லப்பூ! அவ்வளவும் அபிமானம்பூ!
எம் ஜி ஆர என்னா வெறும் நடிகர்ன்னா நெனச்சிக்கிட்டு இருக்க? இல்லப்பூ.. அவுரு
ஒரு மகான். ஏழங்களுக்கு வாரி வாரி கொடுத்த வள்ளலு. நா சிகரெட்டு, தண்ணி
எல்லாம் தொட்டதே இல்ல. அது எப்படி வந்துச்சின்னு நெனக்கறிங்க? அவ்வுளவும்
படத்துல எம் ஜி ஆர் சொன்ன கருத்துனால வந்ததுப்பூ. எம் ஜி ஆர் படங்கெல்லாம்
வெறும் படங்க இல்லப்பூ! ஒவ்வொன்னும் ஒரு பாடாம்பூ. எப்பிடீன்னு
கேக்குறீங்களா? சொல்றேன் கேளுங்கப்பூ!. பெத்த தாய்க்கு அப்பறந்தான் தாரம்ன்னு
சொல்றதுக்கு ‘ தாய்க்கு பின் தாரம்!’. எம் ஜி ஆர் ராஜாவானா ஜனங்களுக்கு
என்னான்னா நல்லதெல்லாம் செய்வாருன்றதுக்கு ‘ நாடோடி மன்னன் ‘. பொய்,
திருட்டெல்லாம் செய்யக்கூடாதுன்றதுக்கு ‘ திருடாதே!’. நல்லவன் எப்பியுமே நல்லா
இருப்பான்றதுக்கு ‘ நல்லவன் வாழ்வான்..’. தாய் சொல்ல எப்பியுமே மதிக்கனூன்னு
சொன்ன, ‘தாய் சொல்லைத் தட்டாதே..’. என்னதான் அண்ணன், தம்பி, அக்கா,
தங்கச்சியா இருந்தாலும் ‘நீதிக்கு பின்தான் பாசம்’. நாம எல்லாரும் வேற வேற
தாய்க்கு பொறந்தாலும் நாம எல்லாருமே ‘ ஒரு தாய் மக்கள்..’தான்; என்னதான்
கஷ்டங்க வந்தாலும் நம்பிக்கைய மட்டும் உட்ற கூடாதுன்னு சொன்ன, ‘ நாளை
நமதே!.’ ஒன்னா ரெண்டா? எவ்ளோதான் எடுத்து சொல்றது?.” என்று சொன்னபோது,
எம் ஜி ஆரின் முகம் உதயசூரியனைப்போல் பிரகாசித்து.
“ சிவாஜி அந்த மாரி படமெல்லாம் நடிக்கிலியா எம் ஜி ஆர் அண்ண?..”
“ அட நீ ஒன்னுப்பூ!. அந்த சூத்தாட்டியொட படங்க பேர சொல்றன் கேளுப்பூ.
பாகப்பிரிவினை; முரடன் முத்து; கலாட்டா கல்யாணம்; திருடன்; தர்மம் எங்கே;
பட்டாக்கத்தி பைரவன்; யமனுக்கு யமன்; படிக்காதவன். தெரியிதாப்பு வித்தியாசம்?
பொறந்த மவன பாத்து, ‘ ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோன்னு?’ கேக்குற
சிவாஜி எங்க?; ‘ நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி..’ ன்னு
பாடுன எம் ஜி ஆர் எங்க..? கஷ்டங்கள பாத்து, ‘ எங்கே நிம்மதின்னு’ சிவாஜி ஒப்பாரி
வெச்சிக்கிட்டு இருந்தப்ப, ‘ நெஞ்சமுண்டு.. நேர்மையுண்டு.. ஓடு ராஜா..’ ன்னு எம் ஜி
ஆர் தெகிரியத்த ஊட்டுனாருப்பூ.

அப்போது, இளங்கோ என்ற காசி, ஒரு போஸ்டரைக் காட்டி கேட்டான்.
“ எம் ஜி ஆர் அண்ண, அது யாருண்ண?.. தலயில குள்ளா போட்டுக்கிட்டு, தேள்
கொடுக்கு மாரி மீச வெச்சிக்கிட்டு கையில பறையோட எம் ஜி ஆர் எதிரா
நின்னுக்கிட்டு? தொண நடிகராண்ண?”
“ இளங்கோ, நல்லா கேட்டப்பூ? அவுருதான் கலைவாணரு என் எஸ் கெ. தானம்,
தர்மம் செய்யிறதுல எம் ஜி ஆரோட குரு. ஒரு ஹீரோக்கு சமமா சம்பளம் வாங்குன
சிரிப்பு நடிகரு. மகா பரோபகாரி. ஒரு தடவ பொண்டாட்டி மதுரத்துகிட்ட
சொன்னாராம். ஒதவி கேட்டு யாராச்சும் வந்து, ஒதவுறதுக்கு நம்ம கையில ஒன்னும்
இல்லாம போச்சுன்னா, அந்த நேரத்துல நா உசுரோட இருக்கக்கூடாதுன்னு.
பாருங்கப்பூ மனுசாள!.. அதுகேத்த மாரியே என் எஸ் கெ செத்தப் பெறவு ஒரு சம்பவம்
நடந்துச்சாம். இது, என் தெய்வம் எம் ஜி ஆர் சொன்னது. அப்பல்லாம் எம் ஜி ஆர்
மொதலமைச்சரு ஆயிட்டாரு. அன்னிக்கி என் எஸ் கெ வோட பொறந்த நாளு. எம் ஜி
ஆர் சில மந்திரிகளோட என் எஸ் கெ செலைக்கு மால போட்டு மருவாத செய்யப்
போயிருக்காரு. அப்படி மருவாத செஞ்சிட்டு திரும்புன கொஞ்ச நேரத்திலியே
பாத்தாக்கா என்னடான்னா ஒருத்தன் அந்த மாலைய எடுத்துக்கிட்டு ஓடறான். அத
பாத்ததும் எம் ஜி ஆருக்கு வந்ததே கோவம். ஒடனே அவன தொரத்தி புடிச்சி
தலைவருகிட்ட கூட்டிட்டு வந்து ஏன்டா மாலைய திருடீட்டு ஓடறேன்னு கேட்டாக்கா,
ஓ..ன்னு அழுவ ஆரம்பிச்சிட்டான். கடசீல, எம் ஜி ஆர மட்டும் அவன் பின்னாலியே
வந்தாக்கா சொல்றதா அடம் புடிக்கிறான் . அமச்சர்ல்லாம் வேணான்னு சொல்லியும்
கேக்காம்ம எம் ஜி ஆர் மட்டும் ‘ ஏந்தான் திருடுனான், இப்ப எங்கதான்
கூப்பிடறான்னு’ தெரிஞ்சிக்க அவன் பின்னாடியே போறாரு. வழியல்லாம் ஒரே சேரும்
சகதியுமா சாக்கட தண்ணி ஓடற சேரி! அவன் ஒரு குடிச முன்னாடி போய் நிக்கறான்.
எதுத்தாப்ல பாத்தாக்கா, ஒரு குடிச முன்னாடி நடு ரோட்ல ஒரு பாட கெடக்குது. அதுல
ஒரு பொணம்!. சின்ன புள்ள கணக்கா தேம்பி அழுதுகிட்டே அவன் சொல்றான்.
“ சாமி, காலில எங்க ஆத்தா செத்துப் போச்சி சாமி. சவத்த அடக்கம் பன்னனும். பெத்த
தாய்க்கு ஒரு மால வாங்கிப்போட்டு அடக்கம் பன்னக்கூட வக்கில்லாத புள்ளயா
இருக்கறனேன்னு நெனச்சி பாத்தேன். தாங்கமுடியில… ஆத்தாவோட கட்ட
வேவுனுமே சாமீ?.. அதான் ஆபத்துக்கு பாவமிலேன்னு மாலய திருடுனன். என்ன
மன்னிச்சிருங்க சாமீ” ன்னு எம் ஜி ஆர் கால்ல வுழுந்துடான். எம் ஜி ஆருக்கு எப்பவுமே
அம்மா சென்டிமெண்ட் ரொம்ப. கதய கேட்டதும் எம் ஜி ஆரே அழுதுடாப்ல. அவன
ஒடனே கட்டிப் புடிச்சி, அவனோட அம்மா பாசத்த மெச்சி, ஆன திருனது தப்புதான்னு
கண்டிச்சி கையிலிருந்த காசெல்லாம் எடுத்து அவன் கையில கொடுத்து, ஆத்தால
நல்ல விதமா அடக்கம் செய்யச் சொல்லிட்டு அமச்சர்ங்ககிட்ட வந்து என் எஸ் கெ
செலய பாத்து அழுதுகிட்டே எம் ஜி ஆர் சொன்னாறாம் .
“ என் எஸ் கெ, செத்தும் தானம் பன்னிக்கிட்டுதான் இருக்காரு.. அப்படிப்பட்டவர
சாதாரண பெறவீன்னா நெனக்கிறீங்க?..ஹூஹும்..”
“ தனிப்பிறவி!..” அவுரு.

* * *
“ எம் ஜி ஆர் அண்ண, உதவீன்னு யாராவது வந்துட்டா அவுங்களுக்கு ஒதவி பன்னாம
எம் ஜி ஆரு இருக்கமாட்டார்ன்னு ஒரு நாளு சொன்னீங்களே, அவுரு என்னா பெரிய
பணக்கார கும்பத்துலேர்ந்து வந்தவராண்ண?..” – ஒரு நாள் மார்த்தாண்டன்
கேட்டான்.
“ பொறந்தது என்னமோ வசதியான குடும்பம்தாம்பூ! ஆனா, அப்பா தவறிட்ட
கையோட எல்லாமே போச்சி. சம்பாரிக்கறதுக்காவ படிப்ப நிப்பாட்ட வேண்டியதா
போச்சின்னா பாத்துக்கியேன். சாப்பாட்டுக்கே வழியில்லாத நெலமதான். அப்ப, எம்
ஜி ஆரும் அவுரோட அண்ணன் எம் ஜி சக்கரபாணியும் பாய்ஸ் கம்பேனில
நடிச்சிகிட்டு இருந்த நேரம். அவுங்க குடியிருந்த வீட்டுகிட்ட ஒரு அம்மா புட்டு
வித்துக்கிட்டு இருந்தாங்க. தெனமும் காலில அவுங்க கிட்ட புட்டு வாங்கி
தின்னுட்டுதான் நடிக்கப் போவாங்க. ஒரு நாளு, அவுங்க கையில காசு இல்லதனால
புட்டு வாங்கப் போவாம அந்த அம்மாவியே பாத்துக்கிட்டு போயிருக்காங்க. அந்த
அம்மா கேட்டதுக்கு பசிக்கலன்னு சொல்லியிருக்காங்க. அந்த அம்மாவுக்கு ஒடனே
புரிஞ்சி போச்சி. ஓடிப்போய் ரெண்டு பேர்த்தியும் புடிச்சிட்டு வந்து கேட்டாக்கா காசு
இல்லாதது தெரியவந்துச்சி. ஒடனே அந்த அம்மா சொல்லிச்சாம்.
“ காசு இல்லேன்றதுக்காவியா சாப்புடாமகூட போவீங்க? நல்ல புல்ளிங்கப்பூ நீங்க.
காசு என்னாப்பூ காசு? அத பெறவுகூட வாங்கிக்கிலாம்பூ..”
எம் ஜி ஆருக்கு புரியவில்லை. காசு கொடுக்காமல் எங்கேயாவது ஓடிவிட்டால் என்ன
செய்வார்கள்?.
“ அதெப்படீம்மா முடியும்? இப்படி இருந்தாக்கா எப்பிடி பொழப்பீங்க? நாளிக்கே
நாங்க வேறேங்கியாவது போய்டோம்ன்னா என்னா செய்வீங்க?..”
அதுக்கு அந்த அம்மா சொன்ன பதிலு.
“ அட போப்பூ!.. காசாம் பெரிய காசு.. நீங்க மறக்காம கொடுத்தா வரவுல எழுதி
வெச்சுக்குவேன். குடுக்காம போய்ட்டீங்கன்னா தர்மத்துல எழுதி வெச்சுக்குவேன்.
அவ்வுளோதானேப்பூ கத.”
அந்த புட்டுக்கார அம்மா சாதாரணமா சொன்ன வார்த்தீல எம் ஜி ஆரு தர்மம்
செய்யிறதுல இருக்குற புண்ணியத்த தெரிஞ்சிக்கிட்டாரு. அதுக்கேத்தமாரி பின்னால
அவுரு வாழ்கீலீயெ செஞ்ச புண்ணியத்தோட பலன கண்டாரு. பெற்றால்தான்
பிள்ளையான்னு ஒரு படம். தோ, மேலேர்ந்து ரெண்டாவது வரிசீல நாலாவது
போஸ்டர பாருங்க! எம் ஜி ஆர் தொப்பிய போட்டுக்கிட்டு சோத்து கைய பின்பக்கமா
குடுத்து தூண புடிசிக்கிட்டு இருக்கிற மாரி தெரியிதே அந்தப் படம். 1967 – ம் வருஷம்
வந்த படம்! ஒரு நாளு எம் ஆர் ஆர் ராதா, எம் ஜி ஆர பாக்க ராமாவரம் தோட்டத்துக்கு
போறாரு. ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கும்போதே எம் ஆர் ஆர் ராதா பிஸ்டோல
எடுத்து, எம் ஜி ஆர ரெண்டு தடவ சுட்டுப்புட்டு தன்னையும் ஒரு தடவ சுட்டுக்கிறாரு.
இங்கேர்ந்து கரிகாலன் உக்காந்திருக்கானே அவ்ளோ தூரந்தான் இருக்கும்.

“ இவ்ளோ கிட்டேர்ந்து சுட்டுமாண்ண எம் ஜி ஆர் சாவுல?..” நம்ப முடியாத
ஆச்சரியத்துடன் கரிகாலன் கேட்டான்.
“ ஆமாம்பூ!.. இவ்ளோ கிட்டேர்ந்து சுட்டும் எம் ஜி அர் பொழச்சிகிட்டாரு!..
ஏந்தெரியுமாப்பூ?..”
“ சுடறப்ப எம் ஆர் ராதா பேனிக்காயிருப்பாருண்ண..” – வீரன் சொன்னான்.
“ அப்படீன்னே சொன்னாலும் நடுங்கின கையி ஓரமா தொண்டீல சுடரதுக்கு பதிலு
கரெக்ட்டா மூஞ்சிலகூட சுட்டுருக்குலாம்ல்ல. அதுலியும் ஒரு தடவிக்கி ரெண்டு தடவ
இல்ல சுட்டுருக்காரு? ம்..?”
எம் ஜி ஆர் கேட்டது அவர்களுக்கு நியாயமாகவே பட்டது. ‘ ரெண்டு வாட்டியும்
எப்படி மிஸ் ஆவ முடியும்?.’
“ அதாம்ப்பூ செஞ்ச புன்ணியன்றது. சும்மாகாட்டிக்குமா சொன்னாங்க பெரியவங்க..”
“ தர்மம் தலைகாக்கும்!.” – ன்னு.
* * *
மூன்றாவது மாதம் குத்துவரிசை பயிற்சி ஆரம்பமாகியிருந்தது. எம் ஜி ஆர் அண்ணன்,
எதிராளிய பார்த்துக்கொண்டே எப்படி கண்ணை சிமிட்டும் நேரத்திற்குள் நிற்கும்
நிலைகளை இலகுவாக மற்றிக்கொள்வது என்பதை செய்துக் காட்டிக்
கொண்டிருந்தார். பாம்பு, யானை, புலி போன்ற விலங்குகளிடமிருந்து கற்றுக்கொண்ட
60 – திற்கும் அதிகமான நிலைகளை மிகவும் நுட்பமாக சிலம்பத்தில் புகுத்தியிருந்த
சாகசத்தை விளக்கினார். அன்று ஏனோ, வீரனின் கவனம் பயிற்சியில்
இல்லாததுபோல் தோன்றியது.
“ என்னா வீரா, இன்னிக்கி நெனப்பு பயிற்சீல இல்லாதமாரி தோனுதே? என்னாப்பூ
சங்கதி?.ம்?..”
“ மனசு கொஞ்சம் சரியில்ல எம் ஜி ஆர் அண்ணன். “
“ ஏம்பூ, என்னா சங்கதி? கலைய கத்துக்கிறதுன்னூ வந்துட்டா மத்த கவலிங்கள
எல்லாத்தியும் மூட்ட கட்டி வீட்லியே உட்டுட்டு வந்திர்னம்பூ. இல்லாட்டி
வேலைக்காவாது. சரி, என்னா பெரச்சினப்பூ? சொன்னா ஏதாவது செய்ய
முடியுமான்னு பாக்கலாம்.”
“ எல்லாம் எம் பொண்டாட்டி பெரச்சினை தாண்ண. எங்கம்மாவ கண்டாலே
அவளுக்கு ஆவமாட்டுதுண்ண. எப்ப பாத்தாலும் ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே
இருகா. தாங்க முடியில! எதுக்குடா கலியாணம் பன்னுனோன்னு இருக்கு! நானும்
எவ்ளோ பதுவுசா சொல்லி பாத்துட்டேன். கேக்க மட்றா. சமயத்துல வர்ற வெறிக்கு
ரெண்டு சாத்து சாத்தீர்லமான்னு இருக்குண்ண.”
“ வீரா, ரொம்ப தப்புப்பூ! எவ்ளோதான் ஆத்தரம் வந்தாலும் பொண்டாட்டிய கை நீட்டி
அடிக்கறது மகா பாவம்பூ. அத மட்டும் செஞ்சிறாத. மொத தடவ அடிகிற வரிக்குந்தான் தயக்கமா இருக்கும். ஒரு தடவ அடிக்க ஆரம்பிச்சிட்டியின்னா பெறவு சொல்லவே
வேணா! கையி தானாவே நீளும். வேண்டாம்ப்பூ! நீங்க கலியாணம் பன்னி 5 வருஷம்
இருக்குமில்ல? இன்னும் புள்ள இல்லியேன்ற கொறயா இருக்கலாம். சங்கடத்த
யாருக்கிட்ட காட்றதுன்னு தெரியாம இப்படி நடந்துகிலாம். ஒரு கொழந்த
பொறந்துச்சின்னா எல்லாம் சரியா போயிரும். பேசி தீக்கமுடியாத பெரச்சினன்னு
ஒன்னுமே இல்லப்பூ. பொண்டாட்டிக்கு தெரிஞ்ச பெரியவங்கள வெச்சி பேசுப்பூ..
ஆனா, எந்த நெலமீலியும் பெத்த தாய மட்டும் ஒதுக்கி வெச்சிறாதப்பூ. நீயோ
அவுங்களுக்கு ஒரே புள்ள வேற. உன்னியும் உட்டுட்டா அவுங்களுக்கு வேற யாரு
இருக்கா சொல்லு? எந்த காலத்திலியும் மறந்துறாதப்பூ!..”
“ தாய்க்குப் பின் தாரம்..” ப்பூ.
* * *
“ எம் ஜி ஆர் அண்ணன், நீங்க எம் ஜி ஆர பத்தி சொல்றத கேட்டு கேட்டு உங்ககிட்ட
ஒன்னு கேக்கனும்னு தோனுதண்ண…” என்று ஒரு நாள் மணிமாறன் பயிற்சி முடிந்தக்
கையோடு சொன்னான். எம் ஜி ஆர் அண்ணன் அவனைப் பார்த்தார்.
“ எம் ஜி ஆர் மேல இவ்ளோ அபிமானமா இருக்கீங்களே நீங்களும் அவுரு மாரியே
மத்தவங்களுக்கு தான தர்மம் ஏதும் செஞ்சிருக்கீங்களாண்ண?.. “
“ அட, உம்பொண்டாடிய நண்டு கடிக்க!. ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடசீல மனுசன
கடிக்க வந்துட்ட பாத்தியா?.. “ என்று சிரித்துக்கொண்டே எம் ஜி ஆர் தொடர்ந்தார்.
“ இந்த ஒலகத்துல பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி -ன்னு ஏழு
வள்ளலுங்க இருந்ததா சொல்லுவாங்க. அவுங்களுக்கு பெறவு ஒலகம் எத்தினியோ
கோடீஸ்வரங்கள பாத்துருச்சி. ஆனானப்பட்ட அவுன்ங்களே ஒன்னும் செய்யாம
இருக்குறப்ப நா வெறும் முன்னூறோ நானூறோ சம்பாரிக்கிற எஸ்டேட் தொழிலாளி.
நா என்னத்த செஞ்சிற முடியும், சொல்லுப்பூ? அதுக்கெல்லாம் வெறும் மனசு இருந்தா
மட்டும் போதாதுப்பூ. வீட்டுக்கு பின்னால இந்த மாரி ஏதாவது மரம் இருக்கனும்ப்பூ ”
“ என்னாண்ண அது?
எம் ஜி அர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“ மரத்துல காசு காய்க்கிற பணத்தோட்டம்பூ!”
* * *
பிடிவரிசைப் பயிற்சி நடந்துக்கொண்டிருந்த நாள்! தாக்க வருகின்ற எதிரியை எப்படி
நம் பிடிக்குள் கொண்டுவந்து தாக்குதலை முறியடிப்பது என்பதை எம் ஜி ஆர்
சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். இது யானையைப் பார்த்து
தெரிந்துக்கொண்ட ஒரு தற்காப்பு முறையென்றும் இதில் கிட்ட தட்ட 200 வகையான
பிடிவகைகள் இருப்பதாகவும் விளக்கினார். அன்று பயிற்சி கொஞ்சம் கடுமையாகவே
இருந்தது. வேர்வையில் நனைந்து உடல்கள், உஸ்ணத்தை சமன்
படுத்திக்கொண்டிருந்தன. தொண்டைகள் வறண்டு தண்ணீருக்கு ஏங்கித் தவித்தன.

பயிற்சிக்குப் பின்னர் குளிர்ந்த நீரைக் குடிக்க எம் ஜி ஆர் தடை விதித்திருந்ததால்
தண்ணீர் கொதிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது மணிவண்ணன்
கேட்டான்.
“ எம் ஜி ஆர் அண்ணன், நானும் கொஞ்சம் எம் ஜி ஆர் படங்கள பாத்திருக்கேன்.
அதுல எல்லாம் எப்போதுமே கதாநாயகிங்கதான் எம் ஜி ஆர நெனச்சி கனவுல பாட்டு
பாடறதா இருக்குமே தவுர அவுரு யாரியும் நெனச்சி கனவு காணமாட்டாரே, அது
ஏன்ண? “
“ சபாஸ், நல்ல கேள்வி கேட்டப்பூ!. அவன் விரும்புற பொண்ணு அவன காதலிக்காட்டி
சில ஆம்பிளிங்க என்ன செய்ய நெனைக்கிறாங்க? ஒன்னு அந்த பொண்ண
கற்பழிக்கப் பாக்கறாங்க இல்லாட்டி அவ மொகத்துல பாவம் அசீட் அடிக்க
நெனைக்கிறாங்க. ஏன்னா, அத அவனால ஏத்துக்க முடியில. ஆம்பளன்ற திமிரு!
அவளுக்கு புடிக்குதோ இல்லியோ அவனுக்கு புடிச்சிருக்குன்றதனால அவன அவ
விரும்பியே ஆகனூன்னு எதிர்பாக்கறான். இதுலேர்ந்து என்ன தெரியுது. ஒரு
பொண்ணோட மனசு தெரியாமா அவனா அவள நெனச்சி கனவு காண்றது
பலாத்காரம்ன்னு தெரியுதா. அதனாலதான் எம் ஜி ஆர் அப்படிப்பட்ட காட்சியல்லாம்
அவுரு படத்துல வெக்கிறதில்ல. அதே சமயத்துல ஒரு பொண்ணு ஒரு ஆண நெனச்சி
கனவு காண்றது அவன் மேல அவளுக்கு இருக்குற காதல காட்டுது. ஏன்னா,
அப்பிடியே அந்தக் காதல் கை கூடாட்டி அவன் மேல அசீட் எல்லாம் அவ
அடிக்கமாட்டா. அவன பத்தின ஏதாவது பாட்ட நெனச்சிக்கிட்டே ‘நம்ம கொடுத்து
வெச்சது அவ்ளோதான்னு..’ வேற வாழ்க்கைய தேடிக்குவா..”
“ அப்படி என்ன பட்டண்ண நெனச்சுக்குவாங்க?”
“எவ்வளவோ இருக்குப்பூ! தோ, இந்தப் பாட்டாக்கூட இருக்கலாம்..”
“ உன்னை நான் சந்தித்தேன்…
நீ, ஆயிரத்தில் ஒருவன்…
என்னை நான் கொடுத்தேன்…
என் ஆலயத்தில் இறைவன்…”
* * *
“ எனக்கு ஒன்னு புரியவே இல்ல எம் ஜி ஆர் அண்ண. சனங்களுக்கு அவ்ளோ நல்லது
செஞ்ச எம் ஜி ஆருக்கு ஏன்ண்ண புள்ளிங்களே இல்லாம போச்சி? அது ஒரு
சாபந்தானே?..”
அன்று அவர்கள் பயிற்சிக்கு கிளம்பிப் போகும் நேரம் கனத்த மழை
பிடித்துக்கொண்டது. அவருடன் மனம்விட்டுப் பேச எல்லோருக்கும் நல்ல சந்தர்ப்பம்
வாய்த்தது. அப்போது தயக்கத்துடனேயே மார்த்தாண்டன் கேட்டான்.“ அப்படி கேளுப்பு மார்த்தாண்டா!. அது ஒன்னும் சாபம் இல்லப்பூ சாபம் இல்ல!
அவ்வளவும் ஆசிர்வாதம். நம்ப கோவிந்தசாமி கங்காணி எப்பிடிபட்ட மனுசன்? அவர
போல ஒரு உத்தமமான மனுஷன பாக்கமுடியுமா? ஆனா, அவுருக்கு பொறந்த
தொரசாமி எப்படிபட்ட போக்கிரியா இருக்கான் பாத்தியா!.. குடி, சண்ட,
பொறுக்கித்தனம்ன்னு அவங்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம்ன்னு ஏதும் இருக்குதா?
இதெல்லாம் யாருக்கு அவமானம்? கங்காணிக்குதானே? தோ, இப்ப நா
சொல்றப்பகூட கோவிந்தசாமி கங்காணி மவன்னுதானே சொன்னேன். அவுருக்கு
பாவம் மனசுல எவ்ளோ வேதன இருக்கும்? அவ்ளோ ஏன். அப்படிப்பட்ட காந்தியோட
மவன் ஹரிலாலே மகாத்மா, கூடவே கூடாதுன்னு சொன்ன குடிக்கு அடிமையாயி
குடிகாரன் ஆயிட்டானே!.. அதனாலதான் சொல்றேன். எம் ஜி ஆருக்கு புள்ளிங்க
இல்லாதது அவ்ளவும் கொடுப்பன. தெரியாமதான் கேக்கறன். பெத்தவங்க
புள்ளிங்ககிட்ட என்னத்த எதிர்ப்பாக்கறாங்க? வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி
ஊத்துவாங்கன்றததானே. எம் ஜி ஆருக்குதான் அந்த கவலையே வேணாமே.
அவருக்கு இருக்குற ரசிகர் பட்டாளத்துக்கு ஒரு நாளிக்கு ஒருத்தர் வீடுன்னு கணக்கு
போட்டாலும் அடுத்த ஜென்மங்கூட பத்தாதே. அப்படியிருக்க எம் ஜி ஆருக்கு
புள்ளிங்க இல்லியேன்னு ஏன் கவல படனும். தோ அங்க மூனாவது வரிசீல இருக்குற
அஞ்ஜாவது போஸ்டர படி, பாப்பம்.”
மார்த்தாண்டன் படித்தான்.
“ பெற்றால்தான் பிள்ளையா?..”
* * *
ஜனவரி 17! எம் ஜி ஆரின் பிறந்த நாள்.
அன்று, வடை, பாயாசத்தோடு சைவ உணவு சமைத்து சிலம்பாட்ட வீரர்களுடன்
சமபந்தி போஜனம் செய்து கொண்டாடினார் எம் ஜி ஆர் . தயிர்சாதம், எம் ஜி ஆருக்கு
பிடித்த உணவென்று சொல்லி, அதையும் அவ்வளவு ருசியாக செய்து காட்டி
அவர்களை அசத்தினார். வீரர்களுக்கு எம் ஜி ஆர் சம்பந்தப்பட்ட எல்லாமெ
ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருப்பதாகப் பட்டது. அப்போது, திடீரென்று மழை
பெய்ய ஆரம்பித்ததும் எம் ஜி ஆர் அண்ணன் சொன்னார்.
“ பருங்கப்பூ! இந்த ஒரு மாசமா வெயிலு என்னா கொளுத்து கொளுத்திச்சி. ஆனா,
இன்னிகீன்னு பாத்து மழய பாத்திங்களா இன்னா வாங்கு வாங்குதுன்னு. அதாம்பூ எம்
ஜி ஆரோட ராசி! சரி, மழைய பாத்ததும் எம் ஜி ஆர் சம்மந்தப்பட்ட சம்பவம் ஒன்னு
ஞாவத்துக்கு வருது. கேளூங்கப்பூ! அப்ப தமிழ்நாட்ல எம் ஜி ஆரும் கர்நாடகத்துல
குண்டுராவும் முதலமச்சர்களா இருக்குறாங்க. ஒரு நாளு எம் ஜி ஆர் குண்டுராவுக்கு
போன் செஞ்சி வீட்டுக்கு சாப்புட வர்றேன்னு சொல்லியிருக்காரு. அவரோ எம் ஜி
ஆரோட பரம ரசிகரு. அவருக்கு ஒரே சந்தோஷமா போச்சி. தாராளமா வாங்கண்ண
காத்திருக்கேன்னு சொல்லியிருக்காரு. எம் ஜி ஆர் போனாரு. பிரமாதமான விருந்து.
ரெண்டு பேரும் நல்லா ரசிச்சி சாப்புட்டாங்க. அப்புறமா எம் ஜி ஆர் கைய கழுவிட்டு
பேச உக்காந்தாரு. குண்டுராவ் எம் ஜி ஆரையே குருப்பா பாத்துக்கிட்டு இருந்தாரு.

என்னமோ சரியில்லாதமாரி அவுருக்கு தோனிச்சு. பொறுத்துப் பார்த்தாரு. முடியில!
நேராவே கேட்டாரு. “
“ அண்ணே, சந்தோஷமா சாப்பிட்டீங்க சரி, ஆனா தண்ணியே குடிக்கிலியேண்ண?”
ஒடனே பட்டுனு எம் ஜி ஆர் சொன்னாராம்.
“ நீங்கதான் தண்ணியே தரமாட்டேன்னு சொல்றீங்களே?..”
குண்டுராவுக்கு சுருக்குனுச்சி. எம் ஜி ஆர் என்ன சொல்லவர்றாருன்னு ஒடனே புருஞ்சி
போச்சி.கர்நாடகாவிலேர்ந்து தண்ணி தொறந்து உடாததுனால தஞ்சையில விவசாயம்
செத்துக்கிட்டு இருக்குறததான் அவுரு அப்படி சொல்லிக்காட்டுனாருன்னு. குண்டுராவ்
ஒடனே கமினி அணையிலேர்ந்து தண்ணிய தொறந்து வுடச்சொல்லி உத்தரவு
கொடுத்து தஞ்ச விவசாயிங்கள காப்பாத்துனாரு. அதுக்கபறந்தான் எம் ஜி ஆர் அங்க
தண்ணியே குடிச்சாப்ல. பெறவு ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசியிருந்துட்டு, எம்
ஜி ஆர் கெளம்பி போவும்போது குண்டுராவ் சொன்னாராம்.
“ அண்ண, நீங்க சாதாரணமான தலைவரு இல்லண்ண. உங்க மக்களுக்கு வேண்டியத
என்னா சாணக்கியமா கேட்டு சாதிச்சிட்டிங்கண்ண. நீங்க நெசமாவே.
நினைத்ததை முடிப்பவன்..” தான்ண்ண என்று சொல்லி மகிழ்ந்துப் போனாறாம்.
* * *
அந்த வருட தீமிதி திருவிழாவன்று எம் ஜி ஆர் அண்ணனின் நல்லாசியுடன்
மாணவர்களின் சிலம்பாட்டம் ஊர் பெரியவர்கள் மற்றும் பொது ஜனங்களின்
முன்னிலையில் சிறப்பாக அரங்கேற்றமானது. சிலம்பாட்டத்தோடு குத்துவரிசை,
தட்டுவரிசை, பிடிவரிசை, அடிவரிசை எல்லாம் செய்துக் காட்டி சனங்களை
ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர்களைப் பார்க்க
பெருமை தாங்கவில்லை. தங்களின் கண்ணே அவர்களுக்கு பட்டுவிடுவதற்குள்
பார்வையை திருப்பிக்கொண்டனர். ஒரு வாரத்திற்கு எஸ்டேட் முழுக்க அதே
பேச்சுதான். எம் ஜி ஆர் சிலம்பக் கழகம், சுற்று வட்டார எஸ்டேட்டுகளில் மிகவும்
பிரபலமானது.
ஒவ்வொரு வருஷமும் புது புது குழுவென்று மேலும் ஐந்து வருஷங்களுக்கு
மனிமாறனை துணைக்கு வைத்துக்கொண்டு எம் ஜி ஆரே பிரதானமாக பயிற்சிகளை
கொடுத்துவந்தார். பின்னர், மூன்று வருஷங்களுக்கு சரியான மாணவர்கள்
கிடைக்காமல் பயிற்சியை நிறுத்தி வைத்தார். பிறகு மீண்டும் ஆரம்பித்தபோது, முழுப்
பொறுப்பையும் மணிமாறனிடம் ஒப்படைத்துவிட்டு மேற்பார்வையை மட்டும்
பார்த்தவாறு எம் ஜி ஆர் தாத்தா ஓய்வெடுத்துக்கொண்டார்.
எம் ஜி ஆரிலிருந்து, எம் ஜி ஆர் அண்ணனாகி இப்போது எம் ஜி ஆர் தாத்தாவாகவும்
ஆகிவிட்ட காலங்கள் பூராவும் மணிமாறன் அவர் கூடவே இருந்து மாணவனாக,
பிரதம சீடனாக இப்போது ஒரு குருவாகவும் ஆகியிருந்தான். அதோடு, அவனும் ஒரு
தீவிர எம் ஜி ஆர் ரசிகனாக மாறிப் போனான். அவர்களிருவருக்கும் எம் ஜி ஆரின் மனிதநேயத்தையும், தான தர்மங்களையும் பேசி மாளவில்லை. தினமும் மணிமாறன்
வீட்டிலேயே சாப்பிடும் நெருக்கத்திற்கு எம் ஜி ஆர் தாத்தா அவனின் குடும்பத்தில்
ஒருவராக ஒட்டிப் போனார்.
` * * *
கோவில் அரச மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எம் ஜி ஆர்
தாத்தாவின் வீட்டை நோக்கி மணிமாறன் ஓடினான். வீட்டிற்கு முன்னே ஆயில் பால்ம்
மட்டைகளால் பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலில் அவ்வளவு கூட்டமில்லாதது
அவனுக்கு வியப்பாய் இருந்தது. ஆங்காங்கே இரண்டு மூன்று பேர்களாக
சிதறிப்போய் பேசிக்கொண்டிருந்தனர்.
மணிமாறன் மிகவும் உணர்ச்சி மயமாகி இருந்தான். தன் தந்தைக்கு ஒப்பான
மரணத்தைப்போல் அது அவனுக்கு வலித்தது. முகத்தில் ஒரு நிரந்திர சோகம் அப்பிக்
கிடந்தது.
பந்தலில் நின்றுக்கொண்டிருந்த கரிகாலன், அவனைப் பார்த்ததும் விரைந்து வந்து
அவன் கரங்களைப் பற்றி விசும்பிக்கொண்டே கேட்டான். அவன் இப்போது செராஸ்
பக்கம் வசித்து வந்தான்.
“ ஏம்பூ, எம் ஜி ஆர் தாத்தாவுக்கு ஒடம்பு ஏதும் சொகமில்லியாப்பூ? “
“ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பூ. நேத்துகூட நா பசங்களுக்கு பயற்சி
கொடுத்துக்கிட்டு இருந்தத நல்லாதான் பத்துக்கிட்டு இருந்தாரு. பயற்சி முடிஞ்சி
போறப்ப எப்பியும் போல ‘ எம் ஜி ஆர் நாமம் வாழ்க!’ ன்னு சொல்லி எல்லாரையும்
சந்தோஷமாதான் வழியனுப்பி வெச்சாருங்கூட. இன்னிக்கி காலீலியே
இன்னடான்னா இந்த தகவல் வருது! ஐயோ, எம் ஜி ஆர் தாத்தா, நா எப்பிடி இத
தாங்குவேன்?..” ன்னு அழுதுக்கொண்டே கரிகாலனிடமிருந்து கைகளை
விடிவித்துக்கொண்டு தாத்தாவின் வீட்டிற்குள் போக யத்தனித்தான்.
“ எங்கப்பூ போற?.. அவுரு ஒடம்பு உள்ளார இல்லப்பூ..”
“ என்னாப்பூ சொல்ற?.. அதுக்குள்ளியும் ஒடம்ப யார கேட்டு எடுத்துட்டுப் போனாங்க
கமுலாட்டிங்க..” – மணிமாறன் ஆத்திரத்தில் தன்னையும் மறந்து கத்தினான். வாய்
நடுக்கத்தில் குழறியது. சிதறிக்கிடந்த எல்லோரும் அவனையே திரும்பிப் பார்த்தனர்.
கரிகாலன், தோளோடு மணிமாறனை அணைத்துக்கொண்டு தேற்றினான்.
“ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பூ. எம் ஜி ஆர் தாத்தா ரெண்டு மாசத்துக்கு முந்தி
அவுரோட உறுப்புங்கள தானம் பன்னிட்டாராம்பூ. அதான் நேரமாவுரத்துக்குள்ள
உறுப்புங்கள வெட்டி எடுக்கனும்ன்னு காஜாங் ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டுப்
போயிருக்காங்க. சாவப்போறம்ன்னு அவுருக்கே தெரிஞ்சிரிச்சீ போலப்பூ. அவுரேதான்
காலீல ஆஸ்பத்திரிக்கி போன் போட்டு தகவல் சொல்லியிருக்காப்ல..”
மணிமாறன், அப்படியே கல்லாய் சமைந்துப்போய் நின்றான். நெஞ்சில் முள் ஒன்று,
‘சுள்ளென்று’ தைத்து அறுவியது. அந்த வலியோடு எம் ஜி ஆர் தாத்தாவின் வீட்டைப்பார்த்தான். திரும்பி கோயிலைப் பார்த்தான். மீண்டும் வீட்டைப் பார்த்தான். இமைகள்
பிரார்த்தனையில் மூடின..
‘ குடியிருந்தக் கோயில்!..’
* * *

 

எழுத்து
-ஸ்ரீகாந்தன் (கோலாலம்பூர்)

Please follow and like us:

3 thoughts on “எம் ஜி ஆர் தாத்தா

    1. நன்றி அருணாசலம். உங்களின் தோட்ட அடையாளம் மலேசியாவா இலங்கையா தோழர்?

  1. ஓர் ஆழமான தேர்ந்த சிறுகதை, வாசகனைக் கைபிடித்து அடியடியாய் வழிநடத்தி செல்வதும் உண்டு, அடர்ந்த காட்டில் பிடியை உதறி, சுயவழிகளுக்கான பீதி கலந்த உவகைகளைக் கொடுப்பதும் உண்டு. கதையின் கரு எம்ஜியார் தாத்தாவைக் களமாக கொண்டிருந்தாலும், இதுகாறும் நாம் பார்த்த மக்கள் திலகம் எம்ஜியாரின் பிம்பத்தினூடே வாழ்வின் தாத்பரியங்களை அழகாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் கதையின் கர்த்தா. நல்ல கதைகளுக்குப் பாடுபொருளும், அதன் களம்சார்ந்த மொழி பிரயோகங்களும் பிரதானமாய் இருப்பினும், சொல்லும் கருவைச்சார்ந்த நுட்ப விவரணைகள், கதையின் கனத்தைத் தாங்கி நிற்கும் தளமாக அமைகின்றன. சிலம்ப பயிற்சிகளின் உள்ளடுக்குகள், எம்ஜியார் மற்றும் சிவாஜியை ஹாஸ்யமாய் ஒப்பிட்டு சொல்லும் திறம், மற்றும் நேர்மறை விஷயங்களிலாலே கதையை அழுத்தமாக சொல்லும்போது, ஓர் இலகுத்தன்மையை இயல்பாக உருவாக்குகிறது. மண்மொழி சார்ந்த கதை, தோட்டபுறங்களில் புழங்கப்படும் சொற்களஞ்சியம், நீரொழுக்காய் ஒழுகும் கதை, கனகச்சிதமான முடிவு, மனித வாழ்வின் அடிநாதமான அன்பையும் பரோபகாரத்தையும் சொல்லிவிட்டு செல்கிறது. மீண்டும் எமது தோட்டபுற வாழ்க்கையில் சந்தித்த அற்புத மாந்தர்களை நினைவு செல்களிலிருந்து மீட்டுக் கொடுத்திருக்கிறது இந்த கதை. சிறப்பு இராமலூ (ஸ்ரீகாந்தன்) அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *