ஒரு துளியில் அடங்கும் சுற்றுவட்டம்

(என்.ஸ்ரீராம் கதைகள் குறித்து)

சிறுகதைகளில் எழுத்தாளர் வெளிப்படுகிறாரா அல்லது தன்னை முழுதும் வெளியே நிறுத்திக் கொள்கிறாரா என்பதைக் கண்டறிவது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அதற்கடுத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எழுத்துக்களில் முழுமையாக அவருடைய இயல்பு வெளியாகிறதா அல்லது கதைக்கு மட்டும் நேர்மையாக இருக்கிறாரா என்பதும் நோக்கப்படும்.  எமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்பது ஒரு பி்ரகடனம் ( பாரதி). மானுட இனத்தை ஆட்டிவைப்பேன்; அவர் மாண்டு வைத்தால் அதைப் பாடி வைப்பேன் என்பது ஒரு கலகம்( கண்ணதாசன்) . என் எழுத்துக்கள் என்னை நான் அறியும் முயற்சி என்பது ஒரு ஒப்புதல் ( நாஞ்சில் நாடன்). பொதுவாக சொல்லப்படுவது என்பது ‘இலக்கியம் ஒரு காலத்தின் கண்ணாடி’ என்பது. தன்னை விலக்கிக் கொண்டு சமூகத்தைப் பிரதிபலிப்பது எழுத்தாளனின் பணி என்பது பொதுக்கூற்று. என்.ஸ்ரீராமின் கதைகளை அணுகும் போது முதற்பார்வையில் அவர் இந்தவகை எழுத்தாளராக உணர வைக்கிறார். தர்க்கங்களுக்கு ஆட்படாத மனிதர்களையே எழுதிவருபவர். சென்றகணம், வரும் கணம் ஆகியவை பொருட்டு இல்லாத நிகழ்காலத்தை வாழும் எளிய மனிதர்களின் கதைகள். ஆகவே வாழ்தலுக்காக எதையும் உதிர்ப்பதையும் மறுப்பதையும் இயல்பாக செய்துவிட்டுப் பின் அதற்கான குற்றவுணர்ச்சியை வேறெங்கோ வடிகாலாக்கிச் செல்லும் நாட்டுப்புற குணம். தாமரைநாச்சி ஆறுமுகக்காவடி ஆகிய கதைகளை உதாரணமாகக் கூறலாம்.  மேற்கொண்டு நகர தாமரைநாச்சியைப் பலிகொடுக்கும் குடும்பம், தன்னுயிரைக் காப்பாற்றியிருந்தாலும் சாதியில் கீழானவனின் காவடியை எடுக்க சீறும் மனம். சென்னையில் உதவி இயக்குநராக இருப்பவரின் வாழ்க்கையைக் காட்டும் வண்ணக கனவுகளும் அப்பாவும், தனது குடும்பத்தை விட்டு தனது எஜமானர் வீட்டிற்கு சமையற்காரனாக இருக்கும் தந்வர்கள் நூதனமாக வெளியேற்றும் விசுவாசம் ஆகிய கதைகள் அவர் நடையில் சிறந்து வெளிப்பட்டாலும் அவரது  கதை உலகிற்கு வெளியே நிற்பவை என்றும் சொல்லலாம்.  

என்.ஸ்ரீராம் கதைகளை வாசித்தபிறகு அவரை,  நாட்டுப்புறப் பாடகன் என்பதைப் போல நாட்டுப்புறக் கதை சொல்லி என்றுதான் அடையாளப்படுத்த முடிகிறது. அவர் சொற்களில் வர்ணனைகளில் வெளிப்படுவது கச்சிதமான வாக்கிய அமைப்பு என்றாலும் அது  ஒரு கிராமத்தானின் வட்டாரப் பேச்சுமொழியாகவே இருக்கிறது. அவர்கள் பாடும் ஏலோலோவாக அந்த நடை இருக்கிறது.  சித்தார்த்தி வருஷ வெய்யிலும் ஆவணி்மாத மழையும் என வருகின்றன நாள்குறிப்புகள். நெட்டுக்கட்டு வீட்டைப் பற்றிய வர்ணனையை துவக்கும் போது ஊர்ப்பொது கிணற்றில் தண்ணிசேந்த வரும் பெண்கள் கயிற்றை அந்த வீட்டின் திண்ணையில் போட்டுச் செல்வார்கள். இரவும் பகலும் கிணற்றில் கப்பிகள் உருளும் சப்தம் வீட்டுக்குள்  கேட்படியே இருக்கும்  என்று துவங்குகிறது. ஊர்க்கதைகள் மொத்தமும் அந்த வீட்டிற்கும் அந்த வீட்டுக் கதைகள் ஊருக்கும் தெரிந்தபடியே இருக்கும் என்கிற சித்திரம் உருவாகிவிடுகிறது (நெட்டுக்கட்டு வீடு). தத்தமது தந்தைகளின் தொடுப்புகளை அறிய ஒரு தலைமுறையை ஆண்ட தாசிக்குறத்தியை அணுகி பணம் கொடுத்து ரகசியங்களைக் கேட்கும் கதை (வெளிவாங்கும் காலம்). ஒரு சொல் பொறுக்காமல் பல வீர சாகசங்கள் வழி அதைக் கடக்க முயலும் ஓடக்காரன் கதை (நதிப்பிரவாகம்) ஆகியவையே மேற்சொன்ன கதைகளைவிடவும் அவரது கதைஉலகிற்குள் நுழைய ஏற்றவை. தற்போதைய மூத்த எழுத்தாளர்களான ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமுறையை தொட்டு வந்த எழுத்தாளர்களில்  என்.ஸ்ரீராமின் கதைகள் முக்கியமானவை. நீ்ண்ட கதைகளானாலும் குழப்பமில்லாமல் தொகுத்துக்கொள்ளும் வகையில் சொல்வதி்ல் அவரது தனித்துவமான நடைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆங்காங்கு இடைபடும் சடைவு திடுமுட்டி போன்ற கொங்கு நிலப்பகுதியின் சொற்பிரயோகங்களை துருத்தல் இல்லாமல் இலகுவாக கையாளுவதையும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு அவரது புனைவுலகில் நுழைகையில் அவரது கதைகளின் இரு வேறு வகைமைகளை உணரமுடிகிறது. அவற்றை பொது சிறுகதை வகைகளோடு ஒப்பிடுகையில் ஒருவித மீறல் என்றும் சொல்லலாம். முதலாவது தொன்மமும் யதார்த்தமும் கலக்கும் விதம். மற்றது சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் கலக்கும் விதம்.

(2)

நாட்டுப்புறக் கதைகள் குலசாமிக்கதைகள் இரண்டும் ஒரு களத்தில் நிகழ்பவை என்றாலும் வேறுபாடுகளில் முக்கியமானது  அறமீறலை அவை எதிர்கொள்ளும் விதம். சொல்வழக்கில் திகழும்  நாட்டுப்புறக் கதைகளில் குற்றவுணர்ச்சி பாவனை குறைவு. ஆகவே அதன் எல்லைகள் விரிகின்றன. அதன் உள்ளடக்கம் மிகவும் கற்பனைத் திறன் கொண்டதாகவும் நிகழ்வுகள் அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. விராடபர்வம் வாசித்தால் மழை வரும் என்பது ஐதீகம். அதன் நீட்சியை நாம் கண்டுகொண்டே இருக்கலாம். சமீபத்தில் மகாபாரத கதையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த திரு.அருட்செல்வ பேரரசன் தான் விராட பர்வம் மொழிபெயர்த்த போது மழைபொழிந்ததை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை மனம் நினைவுபடுத்திப் பார்த்தபடியே இருப்பதைக் காணலாம். அதன்படி நிகழ்ந்தால் அல்லது நிகழாமல் போனால் அதை ஒட்டிய காரணங்களை காரணிகளுடன்  ஒப்பிட்டுப்பார்க்கத் தேடுகிறோம். நமது தர்க்கத்தோடு பொருத்தப் பார்க்கிறோம். யதார்த்தத்தில் என்னவானாலும் கதையை அதற்கேற்ப மாற்றுவது இல்லை. ஆகவே,  கதைகள் தர்க்கத்தைத் தாண்டி நிற்பவையாக உள்ளன. ஆனால் நமது புரிதலுக்கு ஏற்ப அதை வளைத்து நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆண்டாள் ஸ்ரீரங்கத்து பெருமாளுடன் ஐக்கியமாகிறார்  இராமலிங்க வள்ளலார் அருட்பெரும் ஜோதியாக ஆகிறார். இவற்றை தர்க்கமனம் கொண்டு விளங்கிக் கொள்ள நினைத்தால் எவ்வளவு முயன்றாலும் நாம் வாசித்த சொல்லப்பட்ட கதைகளை வைத்து விளக்கும் போது மூலத்தில் உள்ள மாயம் குறைகிறது. மாயம் இருக்கும் போதே அவை கதைகளாகின்றன. கதைகளாக இருக்கும் போதே அவற்றிற்கான  முழுநியாயமும் கிடைக்கிறது. கதைகள் சொல்லும் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது சாமானியனுக்கு உருவாகும் அகத்திறப்பு முக்கியமானது. வள்ளலாரின் ஜோதி வடவைத்தீயை அணைக்க ஏற்றப்பட்ட நெருப்பாக அதே வடலூரில் திகழ்வதை உணரும் கணத்தில் அடையும் ஒருவித பரவசத்தை கதைகள்தான் அளிக்க இயலும்.

இரண்டாவதாக, ஒரு புராணத்தை அல்லது பழங்கதையை சம்பந்தப்பட்ட நபர்களை மட்டும் வைத்து சமகால புரிதல்கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கையில் உருவாகும் புரிதல் குறுகிய ஒன்றாக  ஆகிவிடுகிறது.  ஒரு சதுரங்க களத்தை மீட்டுறுத்திப் பார்க்கும் போது ஒட்டுமொத்த பலகையும் காட்சிக்கு வர வேண்டும். வீழ்ந்த காய்கள் எவை? அவை எப்படி வீழ்த்தப் பட்டன? இருக்கும் காய்கள் எவை? ஒரு நகர்வு யார் யாருக்கு வழியளிக்கும் ஆகியவை முக்கியம். ஆகவே நாம் அவற்றைப் புரிந்து கொள்ள அங்கு பயணிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்களை நமது நிகழ்காலத்திற்கு இழுத்தால் அதுவும் குறைவான புரிதலாக ஆகிறது.

நாட்டுப்புறக் கதைகளை இலக்கியத்தில் அவ்வாறாகவே எழுதியவர்களில் கி.ரா முதன்மையானவர். துவக்கத்தில் அதை தன் தர்க்கத்திற்கு ஏற்ப சற்று மாற்றினாலும் பிற்காலத்தில் அந்தக் கதைகளை மாற்றக் கூடாது என்கிற புரிதலை அடைந்ததாக தனது உரையாடல்களில் கூறுகிறார். புராணக் கதைகளின் சாயலோடு  நவீன இலக்கியத்தில் எழுதுவது (ஜடாயு), நாட்டுப்புறக் கதைகளை  நவீன சிறுகதையாக எழுதுவது என்று அவரது கதைகளில் கண்கிறோம். சமகால எழுத்தாளர்களில் மூத்தவர்களில் நாஞ்சில்நாடன் தொன்மங்களை கையாளும் விதம் குறிப்பிடத்தக்கது. அவரது கதைகளில் மாடனும் முனியும் நமது மரபின் சாட்சிகளாக உள்ளனர். முதியோர்களைக் கைவிடும் மைந்தர்கள், அறம்மீறும் அதிகாரிகள், மக்களைப் பொருட்படுத்தாத தலைவர்களை காணும்போது அறம் பாடுபவர்களாக அவர்கள் எழுந்து வருகிறார்கள். ஜெயமோகன் கதைகளில் தொன்மங்களை தர்க்கத்தோடு அணுகுவதை காணலாம். புரிந்து கொள்ளும் யத்தனிப்பு அல்லது அதில் உள்ள பூடகத்தன்மையை இன்னும் பூடமாக்குவது ஆகியவை அவரது கதைகளில் நிகழ்கின்றன. மற்றொரு புறம் நாட்டார் தெய்வங்கள் பெருமதங்களோடு இணைவதில் உள்ள அபத்தங்களையும் சுட்டுகிறார் ( மாடன் மோட்சம்). ஆசிரியர்களின் குரல் வெளிப்படும் கதைகள் என்று இவ்விருவரின் கதைகளை வகைப்படுத்தலாம்.

அந்த வகையில் என் ஸ்ரீராம் கதைகளை தனித்துவமாக்குவது அவற்றில் உள்ள  ஆசிரியரற்றதன்மை. ஆசிரியரின் தர்க்க அறிவு இடராத காரணத்தால் அவை கேள்விகளாக புரிதலாக மாறாமல் கதைகளாக அப்படியே நீடிக்கின்றன. அதில் உள்ள மாயத்தன்மை அப்படியே தொடர்கிறது. நிகழ்காலத்தில் அவை எவ்வாறு முரண்படுகின்றன தேய்கின்றன என்கிற பார்வையை சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுகிறது. ஆகவே அவர் கதைகளில் உடுக்கு அடித்தால் மழை வருகிறது. கருட மந்திரம் பாடி அதனால் கருடன் வந்து அடித்து சித்தப்பாவிற்கு பாம்பு கடித்த விஷம் இறங்குகிறது. அம்மன் சக்தியால் அநியாயம் செய்தவனின் பார்வை பறிபோகிறது. அவற்றை மாய யதார்த்தமாக அவர் வழங்கவில்லை. தொன்மங்கள் கதைகளில் அவ்வாறே நிகழ்கின்றன. அவ்வாறு கதைகள் அற்புதங்களையும் பேசவில்லை; அவற்றை தர்க்கத்தோடும் அணுகவில்லை. அதாவது அற்புதம் நிகழ்ந்து வரம் பெற்று யாரும் வாழ்ந்துவிடுவதில்லை. அவர் இரு சர்ப்பங்கள் பிணைவது போல அவற்றைப் பிணைக்கிறார்.  நாகமும் சாரையும் தனித்தனி. ஆனால் பிணையும் போது அதை நாம் நாகம் என்றும் சொல்வதில்லை. சாரை என்றும் சொல்வதில்லை. அவை பிணைசர்ப்பங்களாகத்தான் நிற்கின்றன.  நெட்டுக்கட்டு வீடு கதையில் மண்ணில் புதைவுண்டு கிடக்கும் மாந்திரீகம் வெளியே வருவதற்கும் பழனாத்தாள் வாழ்க்கை புதைவுண்டு போவதற்கும் ஒரு இணைப்பை வாசகரால் கொடுக்கவே முடியாது. இரண்டும் வெவ்வேறு. ஆனால் ஒரே கதைக்குள் வருவதால் அவ்விரண்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. செல்லியக் கவுண்டரின் மனதில் புதைந்திருக்கும் பழமை வெளியே வரும்போது பழனாத்தாள் உயிரைவிட வேண்டியிருக்கிறது.  அவரது கதைகளில் வரும் தொன்மமும் யதார்த்தமும் அவ்வாறே நிலைகொண்டு எழுகின்றன. இதில் எது சாரை எது நாகம்?

உடுக்கடிக்கும் கலைஞன் தனக்கான வாழ்வை இழந்து பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்க அமர்வது ஒரு கதை (உடுக்கை விரல்) . ஆனால் அது துவங்குவது மூன்று தலைமுறைக்கு முன் உடுக்கடித்து மழை கொண்டு வந்ததும் இறந்தவர்களை எழுப்பியதுமான காலகட்டத்தில். முதலில் உடுக்கு அடிக்கையில் பத்தாயிரம் பேர் பார்ப்பதாக நினைத்துக்கொள் என்று அவனிடம் அப்பா சொல்கிறார். இறுதி  உடுக்கு அடிக்கையில் அவன் வெள்ளத்தையும் நினைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சாரையிடம் நாகம் வீழந்து விடுகிறது.

(3)

சிறுகதைகளுக்கான வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பலரும் எழுதியிருக்கின்றனர். சிறுகதையை தீர்மானிப்பது பக்க அளவா உள்ளடக்கமா? சிறுகதை எழுதும் போது வாசகர்களை மனதில் வைத்து எழுதுவதா அல்லது தன்னை நிறுத்தி எழுதுவதா என்கிற விவாதமும் தொடர்ந்தபடியே உள்ளன. தற்போது கிட்டத்தட்ட ஒரு திரைமொழிக்கான எதிர்பார்ப்பை கட்டாயத்தையும் சிறுகதையில் வைப்பது நிகழ்கிறது. (முதல் ஃப்ரேமில் துப்பாக்கி வந்தால் படம் முடிவதற்குள் அது வெடித்தாக வேண்டும்). ஒரு சிறுகதை ஒரு காலகட்டத்தை சொல்லவேண்டும். நீண்ட காலத்தை சொன்னால் அது ஒரு மனிதனின் வாழ்க்கை திருப்பங்களை சொல்லவேண்டும் ஆகிய நிர்பந்தங்கள் சிறுகதைக்கு உண்டு.  சிறுகதை நாவல் என்கிற வடிவம் இன்னும் மாறி குறுங்கதை சிறுகதை குறுநாவல் நாவல் என்று விரிந்த போது குறுங்கதைக்கும் குறுநாவலுக்கும் இடையே சிறுகதை என்கிற வடிவத்தின் நோக்கம் என்ன என்பதும் கேள்வியாகிறது.

தி.ஜாவின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று தவம். விலைமாது மீது ஏக்கம் கொண்ட கதையின் நாயகன் சிங்கப்பூர் சென்று அவளுக்கான பொருளை ஈட்டிக் கொண்டு வரும்போது முதியவளான அவள் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாள். கதையோட்டம் பத்து  இருபது வருடங்களானாலும் அது நாயகனின் விழைவு என்கிற  ஒற்றைப் புள்ளியை நோக்கி குவிவதால் அது இடையூறாக இருப்பதில்லை. ஜெயமோகனின் ஈறாருகால்கொண்டெழும் புரவி என்கிற சிறுகதையும் இத்தகைய ஒரு புள்ளியை மையமாக கொண்டு எழும் படைப்பு. ஒரு மனிதரின் ஆயுட்காலத்தை வர்ணிக்கிறது. பக்க அளவிலும் பெரியது. யுவன் சந்திர சேகரின் சிறுகதையான ‘இருபத்துமூன்று காதல் கதைகள்’ உள்ளிட்ட ஏனைய கதைகளும் சுமார் ஐம்பது பக்கங்கள் வரை நீள்கின்றன. ஆனால் கால ஒட்டத்தில் ஓரிரு வருடங்களுக்குள் நிகழும் சம்பவங்கள். அவையும் சிறுகதை என்றே தொகுக்கப் படுகின்றன. அதன் உள்ளடக்கம் என்பது சிறுகதைக்கானது என்றே அவற்றின் ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

என்.ஸ்ரீராம் கதைகளில் பெரும்பாலானவை  அறுபது வருட வாழ்வை சொல்கின்றன. அதில் சில நூறு வருட வாழ்க்கையையும் சொல்பவை . அதற்குள் யதார்த்த வாழ்வு, தொன்மம், பருவநிலை மாற்றம் , சமூகம் நகர்ந்து செல்லும் நிர்பந்தம் என அனைத்தும் பிணைந்து வருகின்றன. அவர் சொல்ல வருவது ஒரு மையத்தை அல்ல என்பதும் கதையின் மையம்  ஒரு கதாபாத்திரத்தை விட்டு மற்றொரு கதாபாத்தி்த்துக்கு கதைக்குள்ளாகவே தாவுவதையும் காணமுடிகிறது. அந்தவகையில் அவருடைய நடை மேற்சொன்ன வடிவங்களுக்குள் ஆட்படாத ஒரு தனித்துவ பாணியாக உள்ளது. ஒருவகையில் சிறுகதைகள் அனைத்தும் நாவலுக்கான கனம் கொண்டவையாக உள்ளன. மீசை வரைந்த புகைப்படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். கதை மாமாவிடம் துவங்கி சுகுணாவிடம் சென்று கதைசொல்லியின் மனைவியிடம் வந்து முடிகிறது.

ஆண்டு கணக்குகளின் படி அறுபது வருடம் என்பது ஒரு சுற்றுவட்டம் எனப்படுகிறது. அந்த அறுபது வருடங்களில் ஒருவரது வாழ்க்கையை ஒற்றைப் பார்வையில் சொல்லிவிட முடியாது. அதைச் சொல்லும் போதே அவரைப் பாதித்த பிற காரணிகள் யாவை அதனால் அவனது வாழ்க்கை மாறுவது எப்படி என்பதையும் காணவேண்டும். அதிலும் இருபதாம் – இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் எழுத வருகிறவர்களை ஒரு யுகசந்தியை கண்டவர்களாக கூறலாம். விழுமியங்களும், நம்பிக்கைகளும் கண்முன்னலே வேறொன்றாக உருமாறுவதைக் காண்கிறார்கள். அதன் தாக்கம் அவர்களின் கதைகளில் வெளிப்படுகிறது. என்.ஸ்ரீராம் கதைகளிலும் அது வெளிப்படுகிறது. ஆனால் அவர் வாதியும் அல்ல பிரதிவாதியும் அல்ல நீதிபதியும் அல்ல. அவர்களில் தன்னை ஒரு சாட்சியாகவே நிறுத்திக்கொள்கிறார். கொடுமுடி ஆறும் அமராவதி ஆறும் சண்முக நதியும் பொங்கியும் வறண்டும் நிற்கும் காலத்தைக் கடந்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது கதைகள். இருபதடியில் தண்ணீர் வந்த காலமும் ஐநூறு அடிக்கும் போர் போட்டு தண்ணீர் வராத காலமும் வருகிறது. புரட்டாசி பெருமழையும் வருகிறது. வெகுதான்ய வருட பஞ்சமும் வருகிறது. அனைத்தும் ஒரு சிறுகதை வடிவத்தில் சுருங்கி இருக்கிறது. ஒருவித சங்குசக்கரம் பட்டாசு போன்று உள்ளங்கை அகலத்தில் சுருண்டு கிடக்கின்றன கதைகள். அதைப் பற்றவைத்து சுழல வைப்பது என்பது வாசகர் கையில் உள்ளது. அவ்வாறு கதைகளை விரித்தெடுக்கும் வாசகர் அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னாலும் ஒரு நாவலுக்கான களம்  இருப்பதை உணரமுடியும்.

 

***

-காளிப்ரஸாத்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *