“உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும்னு சொல்வாளே. ஆனா அவருக்கு எந்தத் தண்ணிய குடிச்சாலுமே தான் கரிக்கறது”

வெளியே கொடியில் காய்ந்த துணிமணிகளை கொண்டுவந்து கட்டிலில் போட்டாள். அவள் கொண்டு வந்த துணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து இவர் மடிக்க ஆரம்பித்தார்.

“என்னடி நீயே இப்படி சொல்ற?”

“பின்ன என்ன சொல்றது? எனக்கு எங்கம்மாவ நெனச்சா தான் பாவமா இருக்கு. நல்லவேளை, மகராசி போய் சேந்துட்டா. இவர்ட்ட கெடந்து இன்னும் ச்ச்சீப் படாம”

அருகே இருந்த அறையில் காறி உமிழும் ஓசைக் கேட்டது.

“எழுந்துண்ட்டார்னு  நெனைக்கிறேன்.  நீ போய் காப்பி போட்டு கொடு அவருக்கு”

“சரி வெயில் தாழ்ந்திருக்கும். நான் போய் மொட்டை மாடியில காயப்போட்டுருந்த அந்த மோர் மொளகா வத்தல எடுத்துண்டு வரேன்” என்று அவர் எழுந்து போனார்.

அந்த அறையில் அந்தக் காறி உமிழும் சத்தம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

காப்பியுடன் அவள் அந்த அறைக்குள் சென்றாள்.

“அப்பா எழுந்துண்ட்டியா? இந்தா காப்பி சாப்பிடு”  

அவர் கட்டிலில் அமர்ந்திருந்தவராய் இருந்தார்.  முகத்தில் தோல் சுருக்கங்கள். உடல் வத்தியிருந்து ஒடுங்கிப் போயிருந்தார். கட்டிலுக்கு அருகிலேயே அவருக்கு வாகாக ஒரு வாஷ் பேசின் இருந்தது. அங்கே அவர் தன் எச்சிலை அடிக்கடி உமிழ்பவராய் இருந்தார்.

இவள் நுழைந்ததை அவர் கவனித்திருக்கவில்லை. அவருக்கு காதும் சரியாக கேட்கவில்லை. “அப்பா, அப்பா” என்று இவள் சற்று இரைந்து கூப்பிட்டவுடன் தான் அவருக்குத்  தெரிந்தது.

அவளும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அருகில் இருந்த மாத்திரை டப்பாவில் இருந்த ஒரு சிறு மருந்து குடுவையை எடுத்து, அதன் குப்பியைத் திறந்து அவரை நாக்கு நீட்டச் சொல்லி செய்கையால் காண்பித்து, அவர் நாக்கில் அந்த மருந்தின் இரண்டு மூன்று சொட்டுகளை விட்டாள்.

“இப்போ இந்த காப்பிய குடிப்பா” என்றாள்.

அவருக்கு அந்த காறி உமிழல் சற்று அடங்கியிருந்தது. நடுங்கிக்கொண்டிருந்த கைகளால் டம்பளரை எடுத்து அவராகவே காப்பி அருந்த முடிந்தது.  

மொட்டை மாடிக்குச் சென்றிருந்தவர் திரும்பியிருந்தார்.  அவர் வருவதைத் தெரிந்து கொண்டு இவள் அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள்.

“எங்கேந்து தான் இந்த பொல்லாத்தனம் வந்ததோ? அம்மாவ படாத பாடு படுத்தி வச்சுட்டார்”

“நாக்குணம், விழுந்து புடுங்கறது, வக்கிர புத்தி எல்லாம் உண்டு அவருக்கு அம்மாக்கிட்ட. துரும்பு எடுத்து துரும்பு போட மாட்டார். அவரோட தேவைக்கு கூட தன் கைய அசைக்க மாட்டார்.  மேல தான் இருக்கும் ஃபேன்  ஸ்விட்ச். அவராவே போட்டுக்கமுடியும். அதுக்கு கூட அம்மாவ கூப்பாடு போட்டுக் கூப்பிட்டு போடச் சொல்வார்.

அம்மா கொல்லேல வேலைப் பாத்துண்டு இருந்தாலும் மெனக்கெட்டு வந்து போட்டுட்டுப் போவா. என்னதான் தோணுமோ அவருக்கு. அப்படி ஒரு திமிரு. தடித்தனம்.”

அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் சிரித்தார்.

“நீங்க என்ன சிரிக்கறேள்? என்னிக்காவது எங்க தாத்தா பாட்டி வந்து இவர் இப்படி எங்க அம்மாவ நடத்தறதா  பாத்தா  என்ன நினைப்பா? எப்படியிருக்கும் அவாளுக்கு? அம்மாவ பாக்க வந்துட்டு ரெண்டு பேரும் தொண்டையில் எச்சல முழுங்கமுடியாதபடி வாயவே திறக்காம திரும்ப போவா பாவம்.  அவா ஏழை. அப்பா குடும்பத்துக்கு கை ஒசத்தி. அம்மாவோ பரம சாது. அதப் பாத்துட்டு  அப்பாவோட அப்பா சம்பந்தம் பேசி கல்யாணம்  பண்ணி வச்சார் ”

“அம்மாக்கிட்ட இப்படி இருந்த அப்பா, உங்கள எப்படி நடத்துவார் அப்போ?” என்று கேட்டார்.

“எங்கப்பா கொழந்ததேளுக்கு நல்ல தகப்பனார். பெத்தவாளுக்கு நல்ல புள்ள. ஆனா கட்டின பொண்டாட்டிக்கு மட்டும் பொல்லாதவர். எங்கள்ட்ட நல்ல ஆசையா தான் இருப்பார். எங்கள நல்ல படியா படிக்க, வாசிக்க வச்சார். வேணுங்கறத வாங்கிக்கொடுத்துடுவார். வீட்டயும் நல்லா பாத்துண்டார். ஆனா அம்மாக்கு ஒரு பொட்டு துணியோ குண்டு மணி நகையோ கூட தன் கையால அவர் வாங்கி கொடுத்தது கெடையாது. இதோ கட்டிண்டிருக்கேனே இதுகூட  அம்மாவோட புடவை தான்.  அம்மாகிட்ட இருக்கற பொடவை எல்லாம் அம்மா பாட்டியும் அப்பா பாட்டியும் வச்சு கொடுத்தோ வாங்கி கொடுத்ததோ சேர்ந்தது தான். எனக்கென்ன ஆச்சரியம்ன்னா இவளும் வாங்கிக்கொடுங்கோன்னு ஒரு வார்த்தை கேட்டதில்லை.”

“அத விடுங்கோ. இப்படி கஷ்ட படுத்திருக்காரே அம்மாவ, இதோ நானே  இருக்கேன். என்ன யாராவது இப்படி கஷ்டபடுத்திருக்கணும். அத அவர் பாத்துருக்கணும்.  அப்போ புரிஞ்சுருக்கும் அவருக்கு. அப்போ எப்படி துடித்துடிச்சுப் போவார் இவர்ன்னு பாக்கணும் எனக்கு”

எதிரிலே அதுவரை கேட்டு அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருந்தவர், இக்கூற்று விவகாரமாகத் தோன்ற,  “என்னடி இது? இப்படியெல்லாமா ஒருத்தி வருத்தப்படுவா?” என்று கொஞ்சம் அரண்டு போய் கேட்டார்.  

அதனை கண்டுகொள்ளாமல் இவள் தொடர்ந்தாள். “அதுக்கு வழியே இல்லாம பண்ணிடுத்து அந்த தெய்வம். அது மட்டும் நடந்திருந்தா அப்போ இவர் என்ன பண்ணிருப்பார்ன்னு எனக்கு தெரிஞ்சாகணும்”

அவர் அவளை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தார்.

“பின்ன இருக்காதா. ஒன்னுமில்ல. அம்மா தூரமா இருந்தா கொல்ல தாழ்வாரம் இருக்கே அது பக்கத்துல  இருக்கற அந்த அறைல தான் இருப்பா. இவர் கால் அலம்பிக்கும் வரும் போதோ  போகும் போதோ  எதேட்சையா பாத்தா தாகத்துக்கு இவர் கிட்ட கொஞ்சம் தூத்தம் கேட்டா கூட அத கேட்டதும் கேட்காத மாதிரி கடந்து போவார் இவர். சரி, தான் தான் எடுத்து கொடுக்கல. கை அசைச்சா கவுரவம் கொறஞ்சிடும். மத்தவாள்ட்ட கூடவா சொல்லி எடுத்துக்குடுக்க கூடாது.   அதுவும் பண்ண மாட்டார். இப்போ சொல்லும் போது எனக்கே ஆத்திரம் ஆத்திரமா வர்றது. அப்படி என்ன முத்து உதிர்ந்துடும் அவருக்கு. இதுவே நான் பெரியவளாகி அப்படி இருக்கும்போது சுத்தி எட்டு திசைக்கும் அவரோட நாட்டாமை பறக்கும். ‘இவ இதக் கேக்கறா பாரு. அது இதுன்னு’  பொண்ணுன்னா ஒரு மாதிரி பொண்டாட்டின்னா ஒரு மாதிரி. அவளுக்கு எப்படியிருக்கும்? ஆனால் அவள் எதையும் பொருட்படுத்தவே இல்ல.  தூரமா  இருந்தவளுக்கு   தூத்தம்   கூட எடுத்து  குடுக்க முடியல   அப்போ.  அதான் இன்னிக்கு  அவருக்கு எந்த  தண்ணியும்   எறங்க மாட்டேங்கிறது“

காலிங் பெல் சத்தம் கேட்டது.   இருவரும்  சென்று கதவைத்   திறந்தார்கள். ஒரு இளம் பெண். அவள் கைப்பிடியில் பள்ளிச் சீருடையில் ஒரு  குட்டிப்  பையன்.

“வாடி பட்டு தங்கமே” என்று  அவனைத் தூக்கி இடையில் வைத்து கொஞ்சினாள் அவள்.

“வாம்மா லலிதா“ என்று  அந்த  இளம்பெண் கையில் இருந்த கைப்பையை வாங்கி வைத்தார் அவர்.

“வாடி லலிதா. இவன நேரா ஸ்கூல்லேந்தே அழச்சிண்டு  வரியா?”

“ஆமாம்மா. இவனை இப்பயே விட்டுட்டு போலாம்ன்னு வந்தேன். என்னம்மா நாளைக்கு காலம்பற கெளம்பறதுக்கு பாக்கிங் பண்ணிட்டேளா?”

“இன்னும் இல்ல. இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு”

“சரி, அப்பா. இந்தா டிரைன் டிக்கட். பிரிண்ட் அவுட்  எடுத்துருக்கேன். இத  கையில வச்சுக்கோ. திரும்ப வர்றதுக்கு புக் பண்ணிருக்கேன். டிக்கட்  இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. கெடச்சுடும். என்னன்னு உங்களுக்கு   இன்ஃபார்ம் பண்றேன்”

“சரி. கொஞ்சம் ஒக்காரு. நான் போய் காப்பி போட்டு  எடுத்துண்டு வரேன்” என்று சமையல் அறைக்குள் நுழைந்தார் அப்பா.

“தாத்தா என்ன பண்றார்? ஏதாவது சாப்பிட்டாரா?” என்று தாத்தாவின் அறைக்குள் சென்று பார்த்தாள்.

“தாத்தா எப்படி இருக்கேள்? என்ன பண்றேள்?”

தாத்தா அவள் பேசுவது காதில் விழாமல், “ஆன் ஆன்…” என்றார்.

பின்னர் வந்தவளைப் பார்த்துப் புரிந்து கொண்டு  “லல்லியா வந்துருக்கறது?” என்றார்.   “எனக்கு காதுல விழல. கொஞ்சம் எரஞ்சு பேசு” அவர் குரல் கணீரென்று இருந்தது.

“சாப்டேளா  தாத்தா?” என்றாள் செய்கையில்.

“சாப்பிட்டேன். சாப்பிட்டேன். அம்மா காப்பிப் போட்டுத் தந்தா” மீண்டும் கணீரென்ற பதில்.

லலிதா அவரை நெருங்கி கட்டி அணைத்துக்கொண்டு, சுருங்கித் தொங்கிய அவரது கன்னத் தசையில் முத்தம் கொடுத்தாள்.

“பத்து வார்த்தை நாம சொன்னா அதுல ஒரு வார்த்தை மட்டும் தான் அப்படி இப்படின்னு அவர் காதுல விழறது” என்று சொல்லியபடியே அம்மா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“மாமா, உங்க கொள்ளுப் பேரனப் பாருங்கோ” என்று கையில் இருந்த  காபியை லலிதாவிடம் கொடுத்துவிட்டு,  பின்னர்  பாட்டியின் புடவை தலைப்புக்குப் பின் ஒளிந்து கொண்டிருந்தவனை தூக்கிக்கொண்டு வந்து பெரியவர் முன் நிப்பாட்டினார் அப்பா.

“என்ன வயசு ஆறது? என்ன பேரு?” என்றார் தாத்தா.

“ஆறு வயசு ஆறது. ப்ரணவ்ன்னு பேரு”

கொள்ளுத் தாத்தா அவன் தலையில் தடவிக்கொடுத்தார்.

பின்னர் லலிதா மீண்டும்  ஹாலுக்கு வந்தாள்.

“தாத்தாவையும் அழைச்சுண்டு தான் போகணுமா அம்மா. அவரால முடியுமா?”

“அதெல்லாம் நடந்துடுவார். ஒருத்தர் கூடவே இருந்து புடிச்சுக்கணும். புடிச்சுண்டா அழகா நடந்து வந்துடுவார்”

“பேசாம நான் இங்க வந்து பாத்துக்கறேன்.  நீங்க போய்ட்டு வாங்கோ” என்றாள் லலிதா. பின்னர், “அம்மா அம்மா” என்று எதற்காகவோ தன் ஹாண்ட் பேக்கைத் தொட்டுத் தொட்டு நச்சரித்துக்கொண்டிருந்த மகனை, தன் முட்டியில் கைவைத்து குனிந்தபடி  பார்த்து, அவன் கன்னத்தைக் கிள்ளி  “இந்தப்  புடுங்கல நீங்க கூட்டிண்டு போங்கோ. நான் வேணா  தாத்தாவ பாத்துண்டு இங்கிருக்கேன்”

“என்னடி இது, பெத்தப் புள்ளய பாத்து புடுங்கல் அது இதுண்டு. அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவருக்குமே இந்த மாதிரி நாலு சுவத்துகுள்ளயே இருந்து போரடிச்சுருக்கும். வாசன் மாமா கூட அதெல்லாம் அப்பா வருவார்.  கூட்டிண்டு போகலாம்னு சொல்லிருக்கான். அப்புறம் என்ன?” என்றாள் அம்மா.

“தாத்தாக்கு இன்னும் காறிண்டு  காறிண்டு  தான்   வருதாம்மா?   அந்த  ட்ராப்ஸ்  கொடுத்துண்டு தான்  இருக்கேளா?”

“ஆமாண்டி.   வேற  வழி?”

“சரி ஜாக்கிரதைமா “

மீண்டும் தாத்தாவின் அந்த அறைக்குள் சென்றாள். “தாத்தா  ஜாக்கிரதையா  போய்ட்டு  வாங்கோ?  என்ன?”  என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள்.  

“சரிப்பா. சரிம்மா.  நான் வரேன். அவர் வர நேரமாய்டுத்து. ஏதாவது  வேணும்னா போன் பண்ணு.  இதோ இந்த பையில் இவனுக்கான துணிமணி வச்சுருக்கேன். போற எடத்துல சொல்லி வச்சுடேளோனோ?    உங்கள ஒழுங்கா கூட்டிண்டு  போய்  விட்டிடுவாளோனோ?”

“எதுக்கு இந்த கவலைலாம்  உனக்கு?”

“சரிப்பா. நான் வரேன் “

லலிதா பின்னர் தன் மகனைப்   பார்த்து,    “தாத்தா   பாட்டிகிட்ட தொனத் தொனன்னு புடுங்கக் கூடாது. சமத்தா  இருக்கணும் சரியா. கொள்ளுத் தாத்தாவ  நீதான் பாத்துக்கணும்” என்று சொல்லிவிட்டு வெளி கேட்டைத் திறந்து  சென்று தன் வண்டியை எடுத்தாள். தன் அம்மா சொன்னத்தைக் கேட்டுக்கொண்டிருந்தது “ஓக்கே ஓக்கே” என்று பதில் சொன்னது.

***

“உங்கப்பாக்கு எப்பத்துலேந்து இந்த பிரச்சனை இருந்தது? எப்போ உங்களுக்கெல்லாம் தெரிய வந்தது?”

“ஆமா, ஒரு நாள் அவர் காலை சாப்பாடு சாப்பிடும் போது சாம்பார்ல அத்தனை உப்புன்னு அம்மாகிட்ட எகிறியிருக்கார். வாய்ல போட்டுண்ட சாதத்தை அப்படியே முன்னாடி துப்பிருக்கார் கரிப்பு தாங்க முடியாம. அம்மா இது என்னடா எப்படி இப்படி உப்பு ஜாஸ்தியாயிருக்கும் யோசிச்சு அவளுக்கு  பிடி கிடைக்கல. உங்களுக்கே தெரியும் அம்மா அப்பா சாப்பிட்டத்துக்கு அப்பறம் தான் சாப்பிடுவா. சாமிக்கு நைவேத்யம் பண்ணின பிறகு   டேஸ்ட் கூடக் பாக்க மாட்டாள். அன்னைக்கு அவர் பண்ணின அழிச்சாட்டியத்துக்கு பிறகு அன்னிக்கு உண்மையாகவே உப்பு கூட போய்ருக்குமோன்னு பயந்து போயிருக்கா.

அப்பா சாம்பாருக்கு அடுத்து ரசமும் ஊத்திண்டார். அதுலயும் அவருக்கு விஷ உப்பு. கைய தட்டுலேயே அலம்பி பாதிலேயே எழுந்துண்டு, இதைக் கொண்டு மாட்டுக்கு போடு. மாடு கூட சாப்பிட முடியாதுன்னு சொல்லி, தட்டை காலால எத்திருக்கார். அம்மா துடிச்சு போய்ட்டா பாவம். ஒரு நாள் சாப்பாட்டுல உப்பு கூட போயிடுத்துன்னா இப்படியா நடந்துக்கணும்.

அவர் அன்னிக்கு நாள் முழுக்க பட்டினியா கெடந்துருக்கார். வெளில வாங்கியும் அவர் சாப்பிடலை இல்லை வேணுமின்னே அன்னிக்கு அப்படி இருந்தாரோ என்னவோ. அவர் வெளியே போனதுக்கு அப்பறம் அம்மா சாம்பார் ரசத்தலாம் ஒரு சொட்டு நாக்கில் விட்டு பாத்துருக்கா. அவளுக்கு உப்பு சரியா தான் இருந்திருக்கு. பக்கத்து ஆத்து சரளா சித்திகிட்ட சொல்லி வருத்தப் பட்டிருக்கா. அந்த சித்தி தான் நான் போன போது இந்த விஷயத்தை  என்கிட்ட சொன்னது.

அம்மா அன்னிக்கு மறுநாள்லேந்தே தன்னோட சமையல்ல உப்பை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுண்டு வந்துருக்கா போலருக்கு.  ஒவ்வொரு வாட்டியும்  சமையல் ரூம்ல அடுக்கியிருக்கற சம்புடங்களையெல்லாம் தொடும் போது எதாவது உப்போ ஒரப்போ இனிப்போ கசப்போ கூட குறைய இருக்கப் போறதுன்னு ஒரு தடவைக்கு இரண்டு மூணு தடவை யோசிச்சு யோசிச்சு போட்டு கவனமா சமைச்சிருக்கா.

இருந்தும் ஒவ்வொரு நாளும் அப்பா இப்படி ரசத்துல உப்பு கூட கூட்டுல உப்பு கூட கறில கூடன்னு சொல்லி அவள படுத்தியிருக்கார்.

அம்மாக்கு தன் சமையல் மேலேயே சந்தேகம் வந்துடுத்து போலருக்கு. அந்த பயத்துலயே தப்பு பண்றோமான்னு சந்தேகம். இது நாள் வரை அப்பா இப்படி ஏதும் நடந்துண்டது கெடையாதோனோ?  அவர் இப்படி தன் மேல வேணுமின்னே பழி போடாறாரோனு கூட நெனச்சுருக்கா. ஆனால் ஏன்னு புரிஞ்சுக்க முடியல.

நான் அங்க போயிருந்த போது அம்மா சமையல் ரூம்ல சமைச்சிண்டு இருந்தா. நான் காய்கறி எல்லாம் நறுக்கி கொடுத்துட்டு வெளிய வந்துட்டேன்.  அம்மா ரொம்ப நேரம் சமைக்கிறா மாதிரி தெரிஞ்சுது. என்னடா வழக்கமா இத்தனை நேரம் எடுத்துக்க மாட்டாளே சரி வயசாயிடுத்தே நின்னுண்டு சமைக்க முடியலையா என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க எட்டிப் பாத்தேன். பாவம் அலமாரி கிட்ட நின்னுண்டு எடுத்த சம்புடத்தையே திரும்பத்திரும்ப எடுத்து எடுத்து பார்த்துண்டிருக்கா.

என்னம்மா பண்ற நீ. இவ்ளோ நேரம் சமைக்க மாட்டியேன்னு கேட்டபோது, வயசாயிண்டு வருது ஞாபக மறதி ஜாஸ்தியாயிண்டே வருது போலருக்கு. உப்பு, புளி, சக்கரை ஒன்னும் ஒன்னும் போட்டோமா இல்லையான்னு சந்தேகம் வந்துடுது ன்னு சொன்னா.

நான் இருக்கற வரை நான் சமைக்கறேன்னு சொன்னேன். பரவால்ல வேணாம்ன்னு சொல்லிட்டா. அன்னிக்கு சாப்பிட ஒக்காந்தோம்.

அப்பா தட்டுல போட்டதுக்கப்றம் என்னையும் ஒக்கார சொன்னா அம்மா. நான் நீ மொத அப்பாக்கு போடுமா நான் உன் கூட சேர்ந்து சாப்பிடறேன்ன்னு சொன்னேன்.  அம்மா அப்பாக்கு பரிமாற ஆரம்பிச்சாள்.  ஒவ்வொன்னையும் அம்மா அத்தனை பதட்டத்தோட பாரிமாறிண்டு இருந்தா. அவளோட கண்ணு அப்பாவையே பாத்துண்டு இருந்தது. அவர் எடுத்து வைக்கிற ஒவ்வொரு வாய்க்கும் அவள்பார்வை விலகாமல் இருந்தது.

அப்பா எந்தவொரு சலனமும் இல்லாம சாதாரணமா சாப்பிட்டுண்டு இருந்தார். அப்பறம் எழுந்து கை அலம்ப போயிட்டார். அம்மாக்கு அவர் எழுந்து போனதுக்கு அப்றம் அப்பாடான்னு இருந்தது.

அப்புறமா நான் ஒக்காந்தேன்.  அம்மாக்கும் எனக்கும் நானே பரிமாறினேன். அம்மா ஒரு ஆசுவாசத் தோட நிம்மதியா ஒவ்வொரு வாயையும் எடுத்து வச்சுண்டா மாதிரி தெரிஞ்சுது. நான் சாம்பாரை எடுத்து பிசைஞ்சு என்னோட முதல் வாய் சாதத்தை எடுத்து வைக்கிறேன். சப்புன்னு இருந்தது. அப்பா எப்படி இதை சாப்டார்ன்னு யோசித்துப் பாத்தேன். ஆச்சரியம். சரின்னு தொட்டுக்கற கறிய எடுத்து வாயில வச்சேன். அதுலயும் துளி கூட உப்பு இல்ல. கூட்ட தொட்டு சாப்பிட்டுப் பார்த்தேன். எதிர் இருந்த ஈயப் பாத்திரத்துல இருந்து ரசத்த கையில விட்டுண்டு டேஸ்ட் பண்ணினேன்.  ஒன்னுமே இல்ல அதுலலாம். எதுவுமே சொல்லாம அப்பா சாப்பிட்டு எழுந்து போயிட்டார்.  அப்பா அப்படிப்பட்ட ஆளும் இல்லையே. என்ன நடக்கறது இவாளுக்குள்ளன்னு அம்மாவை திரும்பி பாத்தா, அம்மாவும்  எதுவுமே காட்டிக்காம எதிர்ல பாத்துண்டு சாப்பிட்டுண்டு இருக்கா.

நான் சட்டுனு எழுந்துண்டு “என்னம்மா இது எதுலயும் உப்பே போடலயா நீ. வாய்ல வைக்கவே முடியல” ன்னு சொல்லி சமையல் உள்ளுக்கு போய் உப்பு டப்பாவை எடுத்துண்டு வந்து வச்சேன். என்னம்மா ஏதும் சொல்ல மாட்டேன்கிற? உப்பு போட மறந்துண்டியான்னேன். அப்பா கூட எதுவும் சொல்லாம எப்படி சாப்பிட்டார்?

அவள் ஆமாண்டி மறந்துருப்பேன் போலருக்கு. நீ உன் தட்டுல போட்டுண்டு பிசைந்து சாப்பிடுன்னு சொன்னாள்.

ஒனக்கு வேணாமான்னு கேட்டேன். வேணாம் எனக்கு உப்பு போதும் ன்னு சொல்லி சாப்ட்டு எழுந்துண்டாள்.

எனக்கு ஒன்னும் புரியல. ஊருக்கு வந்ததும் வராததுமா கத்த வேண்டாமேன்னு  விட்டுட்டேன்.

என்ன சொல்லிட்டு எழுந்து போனா பாருங்கோ. உப்பு போதுமாம் போதும். எப்படி போதும்? உப்பு போட்டா தானே அது கூட போயிடுத்தா கொறைச்சலா இருக்கான்னு தெரியும். இது எதுலயும் அந்த சுவடே தெரிலேயே. பின்ன எப்படி? நான் பாட்டுக்கு எனக்கு வேணும்கற உப்பு போட்டு பிசைஞ்சு சாப்பிட்டு எழுந்துண்டேன். அப்புறமா நான் எதுவும் கேட்டுக்கல.

சாயங்காலமா ஒரு சமயம் அம்மா அப்பாக்கு காப்பி போட்டுக் கொடுத்தா.  ஊஞ்சல்ல ஒக்காந்து ஆடிண்டுருந்தவர் அதை வாங்கி சாப்பிட்டார்.

சட்டுன்னு ஊஞ்சல் ஆட்டுறத நிப்பாட்டிட்டு முதல் வாய் காப்பி வாயில் பட்ட பிறகு, காபி டவரா டம்ளர அந்தக் காப்பியோட அம்மா முன்னாடி விசிறி எறிஞ்சாரே பாக்கணும். “காப்பி யா இது இப்படி கரிக்கிறது? மனஷன் குடிப்பானா இத? அவனால் குடிக்க முடிஞ்சுடுமா இத? காப்பில இத்தனை உப்பை அள்ளி கொட்டிருக்கா நாத்த முண்டன்னு கத்தி ஊஞ்சல் கயிறை இறுக்கி பிடிச்சு எழுந்துண்டு மேல் துண்டை எடுத்து தோள்ல போட்டுண்டு வாசல் பக்கம் நடந்து போயிட்டார்.. அப்படி ஒரு ஆவேசம் மனுஷனுக்கு. என்ன வார்த்தை இதெல்லாம் சொல்லுங்கோ.  கட்டின பொண்டாட்டிய பேசற பேச்சா இது?

நான் அம்மாவை பாத்தேன். ஒடஞ்சு போயிட்டா. கண்ணுல தண்ணீர் வராத குறை தான். சட்டென சமையல் அறைக்குள்ள போயிட்டா.

காப்பில கசப்பு இருக்கறது வாஸ்தவம் தான். ஆனா கரிக்காது பாத்தேளா? உள்ள போய் அதே அலமாரி பக்கத்துல நின்னுண்டு உப்பு டப்பாவையும் சக்கரை டப்பாவையும் மாத்தி மாத்தி எடுத்து தலைல அடிச்சுண்டு  நின்னு அழறா.

சேந்தாமாத்ரி ரெண்டும் ஒரே மாதிரியான டப்பா. ஒரே மாதிரியான நிறம். எங்காத்துல அரைச்ச சக்கரைப் பொடிய தான் ஆதிகாலத்துலேந்தே  யூஸ் பண்ணுவோம். அதனால சட்டுன்னு எனக்கும் புரியல. அம்மா தெரியாத்தனமா மாத்தி  போட்டுட் டாளா என்ன ஏதுன்னு எனக்கும் தெரியல. அழாத இப்படி தலைல அடிஞ்சுண்டுன்னு அவளை சமாதானம் பண்ணினேன்.

என்னடா இதுன்னு நெனச்சு, அடுப்பு பக்கத்துல எனக்காக கலந்து வச்சிருந்த  காப்பிய எடுத்து குடிச்சிப் பாத்தேன்.  எல்லாம் சரியா தான் இருந்தது. அப்பா அப்புறம் ஏன் இப்படி சொல்றார். வேணுமின்னே இப்படி அம்மா மேல எதுக்கு பழிபோட்டு கஷ்டப் படுத்தறார்ன்னு தோணிடுத்து. என்ன தான் இருந்தாலும் இதுக்கு முன்னாடி இந்தளவுக்கு இப்படி அவர் நடந்துண்டது இல்லையே.  நான் அம்மா அழாத, எல்லாம் கரெக்ட்டா தான் நீ போட்டிருக்க.  அப்பா வேணும்ன்னுட்டே உன்ன இப்படி கோபிச்சுக்கறார். நீ எதுவும் தப்பு பண்ணல. சரியாதான் பண்ணிருக்க ன்னு சொன்னேன்.

“ஆனா காத்தால சாப்பாட்டுல நீ சுத்தமா எதுலயும் உப்பே போடல. அது மட்டும் புரியறது. நீ அதை தெரியாம செஞ்சுருக்க மாட்ட. சொல்லு. என்ன நடந்ததுன்னு சொல்லு. எத்தனை நாளா இப்படி உப்பில்லாம இந்த உப்பிலியப்பன் சமையல் சொல்லு. நீயும் இத்தனை நாளா உப்பில்லாமதான் சாப்பிடறியா” ன்னு கேட்டேன். துளி உப்பிருந்தாலும் அவருக்கு கரிக்கிறதுடின்னு ஒரு வார்த்தை மட்டும் தான் சொன்னாள். நான் உடனே இந்த விஷயத்தை வாசனுக்கு போன் பண்ணி சொன்னேன்.

அவன் புறப்பட்டு வந்தான். அப்பாக்கு மட்டும் தான் எந்தச் சாப்பாடும் உப்பு கரிக்கிறதுன்னு கண்டுபிடிச்சோம். டாக்டர்கிட்ட் போய் பாத்துது.  அவர் சொன்னார். “இது வெளியேந்து வர  உப்பு கரிப்பு இல்ல. அப்பாக்கு அவர்  உள்ளேந்தே வர்றது.  ஒருவித சுரப்புக்குறைபாடு. அதாவது அவர் வாயில சுரக்கும் எச்சில்லயே அந்த உப்புத் தன்மை இருக்குன்னு சொன்னார்.  இதை சரி பண்ணமுடியாதாம். வயசாக வயசாக இன்னும் ஜாஸ்தியாகும்னு சொன்னார்.  எப்போவுமே அவர் எச்சல்ல அந்த உப்புத் தன்மை இருக்குமான்னு வாசன் கேட்டான். இல்ல எப்போவுமே அப்படி இருக்காது. ஆனா அவ்வப்போது அளவுக்கு அதிகமா சுரக்கத்  தூண்டப்படும்போது இருக்கும்.  அப்பப்போ துப்பிக்கணும் வேற வழி கெடையாது. இப்போ நமக்கு ரொம்ப புடிக்கும்படியா இருக்கற பதார்த்தங்கள பார்க்கும் போது நமக்கு எச்சல் ஊறுறது இல்லையா அப்போ அந்த எச்சலோடு சேந்துண்டு இந்த உப்புத் தன்மையும் அதிகமா சுரந்துடும்ன்னு சொல்லிண்டிருந்தார். இதுக்கு தற்காலிக தீர்வா, ஏதாவது சாப்பிடும் போதோ இல்ல எச்சல் ரொம்ப ஜாஸ்தியாயிடுத்துன்னாலோ இந்த டராப்ஸ கொடுத்து போட்டுக்கலாம். அது எச்சல்ல இருக்கும் அந்த உப்ப கட்டுப்படுத்தி வைக்கும் கொஞ்ச நேரத்துக்குன்னு சொல்லி அந்த மருந்தை எழுதி கொடுத்தார். அண்ணிலேந்து அந்த மருந்து தான் அப்பாவ காபந்து பண்றது.” என்றாள்.

“இதுல்லாம் நடந்து ஒரு பன்னிரெண்டு வருஷம் ஆகியிருக்குமா? எனக்கு சுத்தமா நினைப்பே இல்ல”

“இருக்கும் அம்மா செத்து அஞ்சாறு வருஷம் ஆகறது. அதுக்கும் அஞ்சாறு வருஷத்துக்கு முந்தி. நீங்க கூட அப்போ லல்லிய கான்வகேஷனுக்கு அழச்சிண்டு போய் உங்க அக்கா ஆத்துல தங்கிண்டிருந்தேள். அப்போ தான் இத்தன களேபரமும் நடந்தது.”

“நல்லா  ஞாபக சக்தி ஒனக்கு”

“அதுக்கப்புறம் அம்மா உப்பில்லா சாப்பாடு தான் தான் இருக்கற வரை சமைச்சா. நாங்க வந்தா போனா மட்டும், உப்பு போட்டு பண்ணின பதார்த்தங்களை தனியா எடுத்து வச்சிடுவா. அத தான் எங்களுக்கு பரிமாறுவா. அப்பாக்கு தான் அந்த பிரச்சனை. இவளுக்கு என்ன வந்தது? ஆனா இவளுமே அதே உப்புச்சப்பில்லாத சாப்பாட்ட தான் சாகற வரை சாப்பிட்டுண்டிருந்தா. அப்பாக்கிட்ட நானும் வாசனும் எடுத்து சொல்லி புரிய வச்சோம். அம்மாவை தேவை இல்லாம இப்படி கஷ்டப்படுத்தாதன்னு சொல்லி வச்சோம். அதை மீறியும் அப்பா கத்துவார். அந்த குணம் அப்படியே தான் இருந்தது. யார்கிட்ட இருந்து வந்துருக்கும்  இந்த  குணம்?   தாத்தாக்கிட்டேந்தா?  சின்னத் தாத்தா  இப்படிதான் நடந்துப்பார்ன்னு சேது    அத்தை   சொல்லறதுண்டு. நல்ல வேளை  வாசன்  அப்படியில்லை. அவன் புள்ளயும் அப்படியில்லை. அம்மா போனத்துக்கு அப்பறம் இத்தன நாள் வரை வாசன் ஆத்துல இருந்தாரே இவர், பொட்டிப் பாம்பா தான் இருந்துருக்கார். கூடவே ஒடம்பும் தளர்ந்து போயிடுத்து. அம்மா தானும் செத்து அப்பாவோட குடும்பத்து வழியா வந்த இந்த நாக்குணத்தையும் கூட கூட்டிண்டு போயிட்டா போலருக்கு. தீர்க்க சுமங்கலியா போய் சேந்துட்டா மகராசி. வாசன் என்கிட்ட சொல்றான், “இங்க என்கிட்ட சமத்தா இருக்கார்டி அப்பா. அம்மாக்கு தான் கொடுத்து வைக்கல அப்படின்னு”

எதிரில் இருந்த பெர்த்துகளில் தாத்தாவும் கொள்ளுப் பேரனும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். தாத்தா உறக்கம் கலைந்து எழுந்துகொண்டார். மெதுவாக எழுந்து கொண்டு உமிழுவதைப் போல வாயை அசைத்தார்

“என்னப்பா காறிண்டு வருதா? துப்பணும் போல இருக்கா? இரு வரேன்” அவள் எழப்போனாள். “நீ இரு. நான் போறேன்” என்று அவர் எழுந்து போய் தாத்தாவை பிடித்துக்கொண்டார்.

“இருங்கோ மாமா. நான் உங்களை அழச்சுண்டு போறேன்” என்று மெதுவாக ரயில் கோச்சின் கதவுபக்கம்  இருக்கும் வாஷ் பேசினுக்கு அவரை அழைத்துச் சென்றார்.

“அப்படியே பாத்ரூமுக்கு கூட்டிட்டு போய்டு வாங்கோ.  அவர் தூங்கி ரொம்ப நேரம் ஆயாச்சு.  தூங்கறதுக்கு முன்னாடி போனது தான்”

அவர் “சரி” என்றுவிட்டு அழைத்துச் சென்றார். திரும்பி வந்து தாத்தாவை அமர வைத்தார்.

அவள் அப்பாவிடம் “அப்பா இத கையில வச்சுக்கோ. சின்னதா துப்பணும்னா இதுல துப்பிக்கோ” என்று கூறி அவர் கையில் கொண்டுவந்திருந்த வாமிட் பேக்கை கொடுத்தாள். “ஜாஸ்தியா வந்தா என்கிட்ட சொல்லு நான் கூட்டிண்டு போறேன்” என்று செய்கை பாஷையில் காண்பித்தாள்.

அவர் கணீரென்று “சரி, சரி” என்று சொல்லிப் படுத்துக்கொண்டார்.

“குட்டி நன்னா அசந்து தூங்கிண்டிருக்கு. இப்போ நம்ம எந்த ஊர் தாண்டிருக்கோம்?”

“மானாமதுரை” என்றார் கணவர்.

***

“யாரு?”

“நம்ம லலிதா தான்”

“ஆமா காத்தாலேந்து கூப்பிட்டிண்டே இருந்துருக்கா போலருக்கு.  ஈரத்தோட இருந்ததுனால எடுக்க முடியல”

“அம்மா லலிதா, இன்னிக்கு ராமநாத சுவாமி கோயில்ல நல்லா தரிசனம் கெடச்சுது. நானும் அம்மாவும் கோயில் சுத்தி வந்து இருபத்தி ரெண்டு தீர்த்தத்திலேயும் ஸ்நானம் பண்ணினோம். ஈரம் சொட்ட சொட்ட பிரகாரத்த சுத்தி வந்தோம். கோயிலுக்கு எதிர்ல இருக்கற கடற்கரையிலயும் குளிச்சாச்சு “

“ஓ. நீங்க ரெண்டு பேரு  மட்டுமே தான் குளிச்சேளா? தாத்தாவையும் அந்த அறுந்த வாலையும் என்ன பண்ணினேள்? எங்க விட்டேள்?”

அதை ஏன் கேக்கற? ரெண்டும் எங்க கூடவே தான் வந்துண்டுருந்ததுகள். சில சமயம் சட்டு சட்டுனு எங்கள கடந்து போய் ஓடறது என்ன? தாண்டுறது என்ன? ரெண்டு பேரும் செம்ம ஜோடி போட்டுண்டுட்டா தெரியுமோனோ?  அதும் உன் புள்ளையாண்டான் இருக்கானே அவர விடவே மாட்டேங்கிறான்.  அவர் ஒரு கையை புடிச்சுண்டே தர தரன்னு இழுத்துண்டு ஓடறான். அவரோட நல்லா ஒட்டிண்டுட்டான். நல்லா பாத்துக்கறான்.  இவரும் தொன்னூத்தி சொச்சம் வயசுக்காரர் அவனுக்கு இணையா ஈடு கொடுத்து குடுகுடுன்னு அவன் பின்னாடியே போறார்ன்னா பாத்துக்கோயேன்.”

“என்னப்பா சொல்ற. பரவாயில்லையே. நீங்க ஆத்துக்கு வந்த உடனே தாத்தாவுக்கு மொதல் வேலையா திருஷ்டி சுத்திப் போட சொல்லுப்பா அம்மாவை”

“ஹ்ம்ம் சரி. அப்றம் ராமேஸ்வரத்துக்கு நாங்க வந்த வேலை முடிஞ்சுது.  இங்க ஒரு சத்திரத்துல தான் ஏற்பாடு பண்ணிருந்தான் ரகு. அஞ்சு பேர் தங்கறா மாதிரி ஒரு ரூம். மூணு வேலை சாப்பாடும் எங்களுக்கு அங்க தான்”

“நல்லதுப்பா.”

“அப்பா ஒரு சிக்கல்”

“என்னம்மா சொல்லு”

“வெயிட்டிங் லிஸ்ட் ல இருந்த டிக்கெட் WL2 வரை வந்தது. ஆனா கன்ஃபார்ம் ஆகல. இன்னி டிக்கட் கேன்சல் ஆகிடும். நாளை ட்ரெயினுக்கு நார்மல் டிக்கெட்டே இன்னும் இருக்கு. அதுல பேசாம போடவா. வேற வழியில்லை. அட்ஜஸ் பண்ணி இன்னும் ஒரு நாளுக்கு அங்க இருக்க முடியுமா உங்களால? இல்ல பஸ்ல போடலாம் தான். ஆனா உங்க எல்லாருக்கும் பஸ்னா கஷ்டமாச்சே”

“ஓ அப்படியா? சரி அப்போ நீ நாளைக்கே ட்ரெயினுக்கு புக் பண்ணிடு.”

“சரிப்பா”

“என்ன சொல்றா லல்லி?”

“ட்ரெயின் டிக்கெட் கெடைக்கலையாம் இன்னிக்கு திரும்பி போறதுக்கு நமக்கு. கேன்சல் ஆகிடுமாம். நாளைக்கு இருக்காம். புக் பண்ணறேங்கறா?”

“ஓ அப்படியா? பண்ணிட சொல்லுங்கோ. இங்க உள்ளாவாள்ட்ட சொல்லிக்கலாமோனோ?”

“அதல்லாம் சொல்லிக்கலாம்”

“என்ன தேதி நாளைக்கு?”

“பதினொன்னாம் தேதி”

“ஏண்ணா, ஆடி அமாவாசையாச்சே நாளைக்கு. நீங்க தர்ப்பணம் பண்ணணுமே”

“ஆமாண்டி, மறந்தே போயிடுத்து பாரு எனக்கு. சுத்தமா நினைப்பே இல்ல. எப்போதும் ராம பத்ரன் மொத நாள் சாயங்காலம் போன் பண்ணி வந்துடறேன்னு சொல்லி ஞாபகப் படுத்துவார். அவர் வேற பண்ணி வைக்க வந்துடுவாரே”

“இப்ப என்ன பண்றது?  இப்படி ஆத்துல இருக்க முடியாதபடி ஆகிடுத்தே இந்த தடவை”

“ஓ. பேசாம இங்கேயே பண்ணிடறேளா? ராமேஸ்வரம் ஆச்சே. புண்ணிய ஷேத்ரம். ரொம்ப விஷேசம். அவர் கிட்ட போன் பண்ணி கேளுங்கோ. அவருக்கு தெரிஞ்சவா இங்க யாராவது இருப்பாளா இருக்கும்?”

“நீ சொல்றதும் சரிதான். இரு அவருக்கு போன் போடறேன்”

“ராம் ராம். சொல்லுங்கோ மாமா”

“அண்ணா நமஸ்காரம். நாளைக்கு அமாவாசை தர்ப்பணத்துக்கு உங்கள்ட்ட சொல்லியிருந்தேன்.”

“ஆமா. டான்னு காத்தால ஒன்பது மணிக்கு உங்காத்துல  இருப்பேன்.”

“அதில்ல. ஒரு சிக்கல். நான் இப்போ வெளியூர்ல மாட்டிண்டுண்டுட்டேன். நாளைக்குள்ள வரமுடியுமா தெரியல. அதான் உங்கள்ட்ட சொல்லலாம்ன்னு”

“ஓ அப்படியா?”

“உங்களுக்கு இந்த ஊர்ல யாராவது தெரியுமா? தெரிஞ்சா சித்த சொல்லிவிடுங்கோ. இல்லன்னா இங்க விசாரிச்சுப் பாக்கணும்”

“எந்த ஊர்ண்ணா?”

“ராமேஸ்வரம்”

“அட ராமேஸ்வரம் தானே.  கவலைய விடுங்கோ. நம்ம நண்பன் பாலகணேச ஷர்மா அங்க தான் இருக்கான். காஞ்சிபுரத்துல ஒன்னா ஒரே பாடசாலைல தான் படிச்சோம். மெட்ராசோட வந்துடுடா படவான்னு கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டான். அவன்கிட்ட சொல்லிவிட்றேன்.  ஹஹா. ஆனா நீங்க புண்ணிய ஷேத்ரமா பாத்து தான் மாட்டிண்டிருக்கேள்.  அங்க அமாவாசை தர்ப்பணம் பண்ணினா ரொம்ப விசேஷம். அதும் இது ஆடி அமாவாசை. பேஷா பண்ணிடலாம் விடுங்கோ. உங்க நம்பரை  அவனுக்கு அனுப்பிடறேன்.  அவன் கூப்டுவான் உங்கள “

“ரொம்ப நன்றிண்ணா. சட்டுனு என்ன பண்றதுன்னு  புரியல அதான்.”

“உங்களுக்கு இந்த தடவ ராமேஸ்வரத்துல இருந்து பண்ணனும்னு இருக்கு. பிராப்தம் தான் விடுங்கோ. நல்லது”

“ராம் ராம். நான் ஃபோன வைக்கிறேன்”

“என்ன ஆச்சு?”

“அவருக்கு இங்க ஒருத்தர தெரியுமாம். அவர்கிட்ட சொல்லிவிடறேன்னு சொல்லிருக்கார். என் நம்பரை அவருக்கு கொடுத்து விடறாராம். அவர் கூப்பிடுவார்”

“அப்பாடா. ரொம்ப நல்லதாப்  போச்சு”

“ஆமாம்”

“லல்லிக்கு போன் பண்ணி நாளைக்கே புக் பண்ணிட சொல்லுங்கோ. இல்ல போன எங்கிட்ட கொடுங்கோ நானே ஒரு வார்த்தை பேசிடறேன் அவகிட்ட”

****

கொள்ளுத்தாத்தாவும் பேரனும்  கடற் கரை  மணலில் சப்பணங்கால் போட்டு  அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

கொள்ளுத் தாத்தா  அருகில் இருந்த கடலையே பார்த்துக்கொண்டிருந்தார்.  கடல் துளியும் நுரைப்பில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. எழுகின்ற அலைகளே அங்கில்லை. வெறும் தவழ்கின்ற அலைகள் தான். காற்றினால் உருவான தவழல் மட்டுமே அது.

பேரன் அருகில் இருந்த கரை மணலை அள்ளி அள்ளி கொள்ளுத்தாத்தாவின் கைகளில் கொடுத்துக் கொண்டிருந்தான். அவர் வெறுமே அதை வாங்கி வாங்கி தன் மறுபக்கத்தில் போட்டுக்கொண்டிருந்தார்.

அவன் “எழுந்துருக்கலாமா பாட்டி?” என்று அருகில் நின்றிருந்த பாட்டியிடம் நச்சரித்துக் கொண்டே இருந்தான்.

“தாத்தா என்ன பண்றா?”

“தாத்தா ஏன் அந்த ரைஸ் பாலுக்கு பூஜை பண்றா?”

“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?”

“ஷூ. பேசக் கூடாது தாத்தா தர்ப்பணம் பண்ணிண்டு இருக்கா இல்லையா. முடிஞ்சதும் எழுந்துருக்கலாம்” என்றாள்.  

அவனுக்கு நெடுநேரமாய் ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போரடித்தது.

***

அங்கே அவர்கள் முன்னே தரையில் சோற்றுப் பிண்டம் பிடித்து வைக்கப் பட்டிருந்தது. அருகே ஒரு செப்பு தாம்பாலத்தில் மீதி வெள்ளைச் சாதம் இருந்தது. எதிரே அமர்ந்திருந்த வாத்தியார் கணவரிடம் தன் தாய்-தந்தை பெயரை உச்சரிக்கச் சொன்னார். பிறகு அந்த கணவர் பவித்திரம் அணிந்திருந்த விரல் வழியே நீர் இறைத்து  “தர்ப்பயாமி, தர்ப்பயாமி” என்று சொல்லிச் சொல்லி அப்பிண்டத்திற்கு அருகே விட்டுக்கொண்டிருந்தார். அவர் கைத்தலத்தில் இருந்த எள்ளும் அட்சதையும் கலந்து வழிந்து சென்ற அந்த நீரை கரைமணல் உறிந்து கொண்டது.

பின்னர்  கணவன் மனைவி இருவருமாக நமஸ்கரித்துவிட்டு எழுந்து சென்று பிண்டங்களை கடலில்  கரைத்துவிட்டு வந்தார்கள்.

பிண்டத்தை கரைத்துவிட்டு திரும்பிய போது அவள் தன் அப்பா வெகுநேரமாக கடலையே வெறித்துக்கொண்டிருப்பதை பார்த்தாள். அருகில் அவர் கொள்ளுப் பேரனின் கைகளில் இருந்து வாங்கி அள்ளிப்போட்ட மணலில் ஒரு சிறிய  மண் குன்றையே உருவாக்கிவிட்டிருந்தார்.

அதனையும் அவரையும் சேர்த்துக் கண்டதும் அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  பதைபதைப்பு வந்தவள் போல வியர்த்து வழிந்தது அவளுக்கு.

அவள்   வாத்தியாரிடம் சென்று, “தீர்க்க சுமங்கலியா செத்தவாளுக்கு அவா ஆம்படையான் இன்னிக்கு பிண்டம் கொடுக்கலாமா மாமா?” என்று கேட்டாள்.

கணவர், “என்ன ஆச்சு திடீர்ன்னு ? ஏன் இந்தப் பதட்டம்? ” என்றார்.

“இல்லண்ணா. எனக்கு சட்டுனு அம்மா ஞாபகம் வந்துடுத்து. அம்மா செத்ததுக்கு மறு வர்ஷத்துலேந்து  இவர் அம்மாவுக்கு எந்த கர்மாவும் பண்ணதில்லை. அவருக்கும் நெலை கொள்ளல. அதான் இன்னிக்கு இத சாக்கா வச்சிண்டு பண்ண வைக்கலாம்ன்னு தோனித்து. அப்போ தான் எனக்கும் என்னோட தகிப்பு அடங்கும்” என்று மூச்சிரைத்துக் கூறியபடி வியர்வை வழிந்த கழுத்தை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டு கேட்டாள்.

அருகில் இருந்த வாத்தியார், “தாராளமா கர்மா பண்ணலாமே மாமி” என்றார்.

சட்டென தரையில் அமர்ந்திருந்த அப்பாவை எழுப்பி வாத்தியாரின் எதிரே போடப்பட்டிருந்த மனையில் அமர வைத்தாள்.

அவள் “அப்பா, அம்மாவை நெனச்சுக்கோ. அம்மாவை நெனச்சுக்கோ” என்று அவர் காதில் இரைந்த படி சொன்னாள்.  அவர்  அதனை கேட்டுக்கொண்டாரா தெரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டி அந்த மனையில் அமர்ந்துகொண்டார்.

“வாத்தியார் பண்ணி காமிப்பார். அவர்  பண்றத வெறுமனே பாத்து நீயும் பண்ணு”

“சித்த நீங்களும் அவர் பக்கத்துல ஒக்காந்து அவர் கைய புடிச்சுண்டு ஹெல்ப் பண்ணுங்கோ” என்றாள் கணவனைப் பார்த்து.

“அம்மா பேரு என்ன மாமி?”

“சாந்த லக்ஷ்மி”

பெரியவரும் வெறித்த பார்வையுடனே அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை அவர் கைகளைப் பிடித்துக் கொள்ள  புதிதாக பிடித்து வைக்கப்பட்ட பிண்டத்திற்கு முன், வெறும் கைப்பொம்மையாக அமர்ந்திருந்து, அன்னமும் எள்ளும் கலந்த நீரை இறைத்தார் பெரியவர்.

பேரன் எதுவுமே புரியாமல் இவர்களைப்  பார்த்துக் கொண்டிருந்தான். கொள்ளுத்தாத்தாவை  சடங்கு செய்து முடிந்ததும் எழுப்பினார்கள்.

“சாரி மாமா. கடைசி நேரத்துல இப்படி?” என்று இழுத்தாள் அவள். “அதனாலென்ன மாமி. பித்ரு காரியம் தானே” என்றார் வாத்தியார்  சிரித்தபடி.

பின்பு சற்று ஆசுவாசமானவள், பேரனிடம் திரும்பி, “எழுந்துக்கோ போகலாம். நீ மெதுவா கொள்ளுத்தாத்தாவ அழச்சுண்டு முன்னாடி போயிண்டிரு”

பின்னர் தன் அப்பா காதில் “அப்பா ஒனக்கு காறிண்டு வரலயே” என்றாள்.

அவர் கனத்த குரலில், “இல்லே இல்லே” என்று கூறிக்கொண்டு பேரனோடு உடன் சென்றார்.

“ஜாக்கிரதையா கூட்டிண்டு போடி கண்ணு”

அவர்கள் இருவரும் சில தப்படிகள்  நடந்தார்கள். அங்கே கடற்கரையில் கணுக்கால் அளவு  ஆழத்தில் ஓரிடத்தில் மட்டும் ஒரு சிறு கூட்டம் தென்பட்டது. அங்கே கடல் நீருக்கு நடுவே ஒரு சிமெண்ட் தொட்டி போல அமைக்கப்பட்டு இருந்தது. அதனருகே ஒரு இளைஞன் கயிறு கட்டிய தூக்கு வாளியுடன் நின்றிருந்தான். அவனைச் சூழ்ந்து சில சிறுவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்களைப் பார்த்த இவன் அவர்களை நோக்கி நடந்து சென்றான்.

அந்த இளைஞன் அந்த தொட்டியில் இருந்து வாளியில் நீரை மொண்டு அந்த சிறுவர்களுக்கு கையில் குடிக்க கொடுத்துக்கொண்டிருந்தான்.

இவனும் கொள்ளுத்தாத்தாவும் அதன் அருகே சென்றனர். இருவரும் அந்த வட்டத் தொட்டியினை எட்டிப் பார்த்தனர்.  ஒரு சிறிய குழாய் செல்லும் விட்டத்துக்கு ஒரு ஊற்றுக்குழி அந்த தொட்டியின் நடுவே இருந்தது. சுற்றியும் இவர்கள் பெரிதாக சுவர் அமைத்து கிணறு போல எடுத்துக் கட்டியிந்தார்கள்.

அந்தக் ஊற்றுக்குழியில் அடி ஆழத்தில் எங்கேயோ நீர் நின்றிருந்தது. கடலின் கண் போல அந்தக் கிணறு இருந்தது. கருமணி போல அந்த நீர்த் தடம்.  வெளி வெளிச்சம் பட்ட போது ஒரு கண் சிமிட்டல் போல அந்த நீர்வெளி வெயிலில் மின்னி மறைந்தது. கடல் அவர்களை அது வழியாக பார்ப்பது போல இருந்தது.

புதிதாக வந்திருந்தவர்களை கண்டு கொண்ட அந்த இளைஞன் “குட்டி பையா, தாத்தா மொதல்ல ரெண்டு பேரும் இதக் குடிங்க” என்று சொல்லி சுற்றி இருந்த கடல் நீரை எடுத்து இருவருக்கும் அவர்களின் கைக்குழிகளில் கொடுத்தான்.

இவன், கையில் வாங்கியதை குடித்து விட்டு கரித்ததால் அருகிலேயே துப்பினான்.  நடுங்கிக் கொண்டிருந்த கைகளில் தாத்தா அந்த நீரை நழுவ விட்டுவிட்டார். பிறகு அந்த இளைஞன் “இப்ப, இதை குடிச்சுப் பாருங்க”  என்று சொல்லி கயிற்று வாளியை அந்த கிணத்துக் குழியில் விட்டு நீர் அள்ளி எடுத்துக்கொடுத்தான்.

சிறுவன் குடித்துப் பார்த்ததும், “தாத்தா தண்ணி செம டெஸ்ட்டு தாத்தா” என்றான். பின்னர் தாத்தாவின் கைக்குழியில் நிற்காத நீரைக் கண்டு “நான் உன் கையப் புடிச்சுக்கறேன். இப்போ குடிச்சுப் பாரு” என்று புன்னகைத்தபடி அவர் நீர் அருந்த உதவினான்.

***

“நல்ல வேளை ராம பத்ரன் கடைசி நேரத்துல உங்கள புடிச்சு கொடுத்தது ரொம்ப வசதியா போய்டுத்து. இவர் நேத்து ரொம்ப யோசனையா இருந்தார்”

திதி கொடுத்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் அந்த மூவரும்.

“பரவால்ல இங்க அதிக கூட்டமில்ல. ஏன்ண்ணா? நேத்து போன இடத்தில் எல்லாம் ஒரே ஜனப் பிரவாகம் தான்”

“கூட்டம்லாம் அக்கினி தீர்த்தத்துல தான் இருக்கும் இன்னிக்கு. இந்த இடம் அவ்ளோவா வெளிய தெரியறதில்லை. நான் எப்போதும் எங்கிட்ட வருகிறவாள ஹைஜாக் பண்ணி இங்க கூட்டிண்டு வந்துடுவேன்.” என்று பால கணேச வாத்தியார் சொல்லிச் சிரித்தார்.

“இந்த இடமும் விசேஷமான இடம் தான். அது அக்கினி தீர்த்தம்.  இது…”

“எங்க இவா ரெண்டு பேரையும் காணும்? ரொம்ப நேரமா கண்ணுல தட்டுப்படலையே”

பேசிக்கொண்டிருந்தவள் சட்டென முகம் தூக்கி சுற்றியும் தேடுவது போலப் பார்த்தாள்.

“அதோ அங்க நிக்கறா பாருங்கோ. அவா தானே”

“ஆமாம் அவா தான்.”

“அது என்னது கடல் நடுல ஏதோ கிணறு மாதிரி கட்டிருக்கு?”

“சாரி, நீங்க ஏதோ சொல்லிண்டு இருந்தேள். நான் அதை இடைமறிச்சுட்டேன்.”

“இல்ல அது அக்கினி தீர்த்தம்ன்னு சொல்லிண்டு இருந்தேன். நேத்து போயிருப்பேளே. தன் மேல் எழுந்த ராமனோட சந்தேகத்த தீர்க்க சீதை அக்கினி பிரவேசம் பண்ணின இடம்.”

“இது வில்லூண்டி தீர்த்தம். இது அதைவிட விசேஷம்ன்னு சொல்வேன் நான். சீதாப் பிராட்டியோட தாகத்த தீர்க்க ராமர் தன் வில்லை இந்த நிலத்துல ஊனி ஊத்தெடுக்க வச்சு நல்ல தண்ணிய வரவழைச்சார்.”

“நீங்களே சொல்லுங்கோ எது ஒசத்தி? சந்தேகத்த தீர்க்கறது பெருசா? தாகத்த தீர்க்கறது பெருசா?”

“அதோ அவா அங்க நின்னுண்டு இருக்காளே. அது தான் ராமர் ஏற்படுத்தின அந்த ஊத்து. போய் அந்த தண்ணிய குடிச்சு பாருங்கோ. பொள்ளாச்சி இளநீர் மாதிரி அப்படியே தித்திக்கும். கடல் கனிச்சுப் போய் கெடக்கு அங்க. சுத்தியும் சமுத்திரம்.  அதுக்கு நடூல பத்தடி ஆழத்துல இன்னும் அந்த ஊத்து ஊறிண்டு இருக்கு”

அவர் அவர்களை அங்கே அழைத்துச் சென்றார்.  அந்த இளைஞனிடம் “இவாளுக்கும் தண்ணிய கொஞ்சம் மொண்டு குடுடா அம்பி” என்றார்.  அவள் கொள்ளுப் பேரன் கைகளைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள தன் இருகை குழிகளிலும் அந்நீரை அள்ளி அள்ளிப் பருகும் தன் அப்பாவைப் பார்த்தாள். அவர் தொண்டை நலுங்கிக்கொண்டிருந்தது. குடித்துவிட்டு மீண்டும் கணத்த குரலில் அந்த இளைஞனிடம் “இன்னும் கொஞ்சம்” என்று அதட்டும் தொனியில் கேட்டார்.  அவன் வேகமாக கயிற்றை இறக்கி நீர் எடுத்துத் தந்தான். அவர் மீண்டும் அதை வாங்கிப் பருகினார்.

அருகே சென்ற இவர்கள் அந்தக்  கிணத்தை எட்டிப் பார்த்தனர். அந்தக் கண் அவர்களைக் கண்டு சிமிட்டியது.

எட்டிப் பார்த்து மீண்டவுடன் அவளும் அந்த நீருக்காக தன் கைகளை நீட்டினாள். உடன் இருந்த அவள் கணவரும் நீட்டினார்.  இருவரும் அந்நீரை வாங்கிப் பருகினார்கள்.  பின்னர் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். பின்னால் அப்பா அதே அதட்டல் தொனியில் மீண்டும் “இன்னும் கொஞ்சம்” என்றார். குட்டி, “பாட்டி, கொள்ளுத்தாத்தாக்கு  இந்தத் தண்ணி நல்லா புடிச்சு போய்டுத்து  போல இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருந்தது.

தன் அப்பாவை அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. அது அவள் கைக்குழியில் ஏந்தி நின்ற நீரில் சொட்டி ஒன்றற கலந்தது.

***

 

-லோகேஷ் ரகுராமன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *