ஏ. எம். சாஜித்

வாப்பாவுக்கு மாற்றல் கிடைத்து உம்மாவின் ஊரான கொச்சிக்கடைக்குச் சென்றபோது எங்கள் வீட்டிற்கு அருகில் குடியிருந்த ஜப்பார் அங்கிளின் கடைசி மகள் பரீனா என்னை காதலிப்பதாக கடிதம் ஒன்றினைத் தந்திருந்தாள். நடுக்கத்தில் உறைந்து போன நான் பாத்ரூமிற்குள் கதவினை அடைத்துக் கொண்டு அக் கடிதத்தினை வாசித்தேன். இதற்கு முன்னர் எந்தக் காதல் கடிதங்களையும் படித்திராத எனக்கு குப்பென வேர்த்துக் கொட்டியது. ஒன்றுக்கு மூன்று தடவைகள் அக்கடிதத்தினை திருப்பித் திருப்பி படித்தேன். அவள் எழுதிய எல்லா வரிகளும் என் ஆழ்மனதில் இன்றும் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இடைக்கிடையே அவள் விட்டிருந்த எழுத்துப் பிழைகள் கூட அப்படியே இருக்கின்றன. உம்மாவுக்குத் தெரிந்தால் உரித்து உப்புத் திராவி விடுவார் என்ற பயத்தில் பல நூறு துண்டுகளாக கடிதத்தினை பீய்த்து கொமட்டில் போட்டு தண்ணீரை ஊற்றி விட்டேன். எல்லாத் துணுக்குகளும் நீரின் ஆர்ப்பரிப்பில் ஓடிக்கொண்டு மறைந்து விட்டன. ஆனால் ஒரே ஒரு துண்டு மாத்திரம் கொமட்டின் அடிப்பரப்பில் ஒய்யாரமாக ஒட்டிக் கொண்டது. பல தடவைகள் தண்ணீர் ஊற்றியும் அத்துண்டு போனபாடில்லை. கையினை விட்டு எடுப்பதற்கு பல முயற்சிகளைச் செய்து நிராகரிக்கப்பட்டேன். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எங்களது உம்மாப்பா கட்டிய பாத்ரூமிற்குள் எப்படி என்னால் கைகளை விட்டு தடயங்களை அழிக்க முடியும்? மஞ்சள் கறைபடிந்து தேய்ந்து போயிருக்கின்ற கால் இருப்பு அடையாளத்தினை தேடிக்கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளனாகி ஒன்றை மாத்திரம் கண்டு பிடித்தேன். ஆதிகால சாம்ராஜ்ஜிய கட்டிடங்களின் வார்ப்பு எங்கள் பாத்ரூமிற்கு அப்படியே வாய்த்திருந்தது என்பதுதான் அது. பிரஸர் வருத்தத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த உம்மாப்பா இந்த பாத்ரூமில்தான் மயங்கி விழுந்து மௌத்தானார். அவரைத் தூக்கும் போது தலையின் பின்பகுதி நன்றாக அடிபட்டதாகவும் நினைவிழந்த நிலையில் மூன்று நாட்களை கடத்திவிட்டு மண்ணறை வாழ்விற்குச் சென்றுவிட்டதாகவும் உம்மா அடிக்கடி கூறுவாள். நேற்றும் இக்கதையினை ஞாபகப்படுத்தியிருந்தாள். இப்பொழுதெல்லாம் அடிக்கடி பாத்ரூம் வழுக்குகிறது. அதனால்தான் அவள் அப்படி கூறியிருக்கிறாள் என்பதை நான் யூகித்துக் கொண்டேன்.

பாத்ரூமினை திருத்துவதற்காக பலமுறை முயற்சித்தும் வாப்பா தோற்றுத்தான் போனார். பணத்தினை சேமித்துக் கொண்டு வருகையில் வேறு பிரச்சினைகள் வந்துவிடும். அப்படியே விட்டு விடுவார். மழைக்காலங்களில் கொமட்டில் இருக்கும் தண்ணீர் உயர்மட்டத்திற்கு மேல்நகர்ந்துவிடும். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் கழிவுகளை முற்றாக அகற்ற முடிவதில்லை.

பாத்ரூமின் பிட் நிரம்பிவிட்டதால் இத்தகைய பிரச்சினையினை மழைக்காலங்களில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் மிக ஜாக்கிரதையாக மழைக்காலத்தினை கையாள்வதுண்டு. அடிக்கடி பாத்ரூம் போவதினை தவிர்த்துக்கொள்வோம். நீர் ஆகாரங்களை கூடுதலாக உட்கொள்வது கிடையாது. பெரும்பாலும் தனது காரியாலயத்திலேயே வாப்பா எல்லாக் கழிவுகளையும் கழித்து விட்டுத்தான் வருவார். சாட்டுப் போக்கு சொல்லிக் கொண்டு உம்மாவும் பெரியம்மாவின் வீட்டிற்கு அடிக்கடி போய்விடுவாள். அத்தியவசிய கட்டங்களுக்கு மாத்திரம் பாத்ரூமினை பயன்படுத்திக் கொள்வோம். இயன்றவரை அடக்கிக் கொண்டு இருப்பதுதான் மிகச் சிறந்த வழியாக உம்மாவால் போதிக்கப்பட்டது. கொச்சிக்கடை மிக நெரிசலான இடம். தொடர் வீடுகள் ஒட்டியிருப்பதாலும் இடைவெளிகள் விடாத சன நெருக்கத்தினாலும் பொது வெளியில் கழிப்பு கழிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் எங்களுக்கில்லை.

வாப்பாவின் அரச உத்தியோகம் நாளாந்த செலவுகளுக்கே போதுமானதாக இருந்தது. மலையேறிப்போன பொருட்களின் விலையினால் வரவினை விட செலவுகளே அதிகமாயிருந்தன. மாதம் முடிந்ததும் கிடைக்கின்ற சம்பளத்திற்கு கரண்ட் பில், தண்ணி பில், குருவப்பன் கடைக்கடன், மருத்துவச்செலவுகள் என மிஞ்சுவது ஏதுமில்லை. உம்மாவும் பல்கலைக்கழகம் வரை சென்று பட்டம் முடித்தவர்தான். வாப்பாவுக்கு விருப்பமில்லை என்பதால் தொழிலுக்கு போவதை நிறுத்திவிட்டார்.

கொழும்பிற்கு படிக்க வந்த வாப்பா உம்மாவை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார். உம்மாவிற்கு இருக்கின்ற ஒரே சொத்து இந்த வீடுதான். ஆரம்பத்தில் நாங்கள் எல்லோரும் இங்குதான் இருந்தோம். உம்மப்பாவிடம் சண்டை போட்ட வாப்பா அவரது ஊருக்கு எங்களையும் கூட்டிக் கொண்டு போய்விட்டார். பிறகு இப்போதுதான் மீண்டும் இங்கே வந்திருக்கிறோம். வாப்பா ஊரில் வேலை செய்கின்ற போது இந்த வீட்டினை வாடகைக்கு கொடுத்திருந்தோம். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஒரு சிறிய குடும்பம்தான் வாடகைக்கு இருந்தார்கள். பெருத்த மழைக்காலம் ஒன்றில்தான் அவர்கள் அத்துணை துயரங்களையும் சந்தித்தாகக் கூறினார்கள். இத்தருணத்தில் நாங்கள் சந்திக்கும் துயரங்களைப் போன்றே அத்துயரமும் இருந்திருக்கும். வாப்பாவின் ஊரில் இருக்கும் போது பாத்ரூம் பிரச்சினைகள் இருந்ததேயில்லை. வாப்பா அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். கிராமிய பண்பாடுகளின் கடைசி எச்சம் தெரிகின்ற ஊர்களில் அக்கரைப்பற்று முதன்மையானது. சன நெருக்கடிகளோ அண்டிய வீடுகளையோ அங்கு காண முடியாது. பௌஸர் என்ற பிரபல கோழித்திருடனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது அங்குதான். அந்தக் கதையினை இப்படியாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

கிராமியக்களவுகளில் படு சுவாரஷ்யமானது கோழிக் களவுதான். பெருங்குற்றமாக இவை கருதப்படா விட்டாலும் ஏழு ஜென்ம பகைக்கு காரணமாகிவிடுகிறது. ராத்திரிப்பேய்களாக உலாவும் இளைஞர்களே பெரும்பாலும் கோழிக் களவுகளில் ஈடுபடுவார்கள். தெரிந்தவர்கள் வீட்டில் திருடுவது, நண்பர்கள் வீட்டில் திருடுவது, உறவினர்களின் வீட்டில் திருடுவது என அவர்களது டார்க்கட் ரொம்ப பெரிசு. நண்பனின் வீட்டில் கோழியினை திருடி அவனையே விருந்திற்கு அழைத்து செம ஜாலியாக உண்டு கழித்தவர்களும் உண்டு. அடித்து நொறுக்கப்பட்ட இஞ்சியும் வெள்ளைப்பூடும் கலந்து பிரட்டலாக காய்ந்த கொச்சிக்காயினால் ஆக்கப்பட்ட நாட்டுக் கோழியின் எலும்பினை சூப்புவதில் இகபர சுகமிருக்கிறது. அதிலும் கள்ளக் கோழியின் கழுத்து மிடலினை இரண்டாக பீய்த்து அதன் உள்ளிருக்கும் வெள்ளைக்குடலோடு சேர்த்து கண்னை மூடி சூப்புகின்ற போது பூமிக்கும் வானிற்குமிடையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஒரு எத்து எத்தி ஆடுவது போலவே இருக்கும். இத்தனைக்கும் அதிகாலையில் எழுந்து கோழியினை காணாது பதறித்திரியும் வீட்டுக்காரியின் முகமும் பெரு வெடிப்புக்களை எல்லாம் மிஞ்சும்படியாக கொதித்தெழும் திட்டுக்களின் ஓசையும் கோழியின் கடைசிக் கூவலின் பெருத்த ஏப்பமாய் வெளியிரங்கும்.

பாடசாலைக்காலங்களில் இரவு நேர படிப்புக்களில் தீவிரமாய் ஈடுபட்டிருப்போம். வசமாக மாட்டிக் கொண்ட நண்பர் பட்டாளத்தில் முழு இரவுகளும் உறக்கமின்றியே கழியும். இப்படித்தான் சாப்பாட்டிற்கான ஆயத்தங்கள் தொடங்கப்பட்ட நேரத்தில் கதாநாயகனான கோழி இல்லாமல் போனது. நேரமும் நடுநிசியினை தாண்டியிருந்தது. அருகிலிருந்த நண்பன் சிதம்பர ரகசியமொன்றினை போட்டுடைத்தான். தனது வீட்டில் ஏராளமான கோழிகள் இருப்பதாகவும் அவையனைத்தும் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள முருங்கை மரத்தில் தங்குவதாகவும் இந்த நேரத்தில் சென்றால் யாருக்கும் தெரியாமல் நைசாக பிடித்து விடலாம் என்றான். அதனோடு மட்டும் நிறுத்திவிடாது இன்னுமொரு டுவிஸ்ட்டினை சொன்னான். தனது வாப்பாவிற்கு சின்னதாக ஒரு சப்தம் கேட்டால் கூட முழிப்பு வந்துவிடும் என்பதும் அவரிடம் மாட்டினால் முதுகு தோலை உரித்து விடுவார் என்றும்; புதையல் எடுப்பதற்கு முன்பதாக பயங்கர தடைகளை கடக்கும் மாயக்கதை போல கூறி முடித்தான்.

அவனது வாப்பாவை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். கடும் கோபக்கார மனிஷன். முரட்டு மீசை ஆஜான உடல்வாகு அம்புட்டால் கும்பிட்டாலும் விட மாட்டார். ஆனாலும் எங்களுக்கு இருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் எங்கள் பௌஸர் மீதுதான் இருந்தது. அவன் கோழி பிடிப்பதில் சகலகலா வல்லவன்.  ஏனெனில் அவனது வாப்பா கோழிக்கடைதான் வைத்திருந்தார். எவ்வித சத்தமும் வராமல் கோழியை ஒரே அமுக்காக அமுக்குவான். நடந்து போகும்போதே கோழியை அறுத்து கிளியராக்கி விடுவான். சிறு சலசலப்பு கூட கேட்காதபடி பத்துக் கோழியின் கதையினை பத்து நிமிடத்தில் கச்சிதமாய் முடிக்கும் ஜாம்பவான்.

எனது புஷ் சைக்கிளை ஒரு ஒழுங்கையி்ல் வைத்து பூட்டி திறப்பினை பையில் வைத்துக் கொண்டேன். நைசாக வீட்டு வாசலை நெருங்கிய போது திடீரென அவனது வீட்டு நாய் குரைக்கத் தொடங்கியது. நாங்கள் திமிர்த்து விட்டோம். உடனே வீட்டுக்காரன் தனது நாய்க்கு முன்னாடி சென்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். தனது எஜமானே தனது வீட்டில் திருட வந்திருக்கும் விசித்திரமான சூழலை நினைத்து அடங்கிப் போனது நாய். ஒரே இருட்டு மயமாக இருந்தது. முருங்கை மரத்தின் கிளைகள் கூட விளங்கவில்லை. தட்டுத்தடுமாறி மரத்தினை கண்டுபிடித்தோம். ஒவ்வொரு கோழியாக பிடித்து தக்பீர் சொல்லி அறுபட்டுக் கொண்டிருந்தது. மேல் கிளையில் நீண்டு வளர்ந்த பெரும் மிடலைக் கொண்ட ஒரு காட்டுச்சேவல் பேய் அறைந்தது போல நின்றிருந்தது. அதனை பிடிப்பதற்காக லேசாக நகர்ந்தான் பௌஸர். அந்த சேவலின் மீது மாத்திரம் கூடுதல் கவனம் செலுத்தியதால் கீழ் கிளையிலிருந்த போட்டுக் கோழியை அவன் கவனிக்கவில்லை. அதன் மீது மெதுவாக அவனது கால் பட்டதும் பெண்களின் மரபான செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லாது தனது பாஷையில் கீறிட்டு கத்தத் தொடங்கியது போட்டுக்கோழி. குண்டூசி விழுந்த சப்தத்தில் எழும்பும் அவனது வாப்பா இந்த சப்தத்திற்கு எழும்பாமல் விடுவாரா? “ஆர்ரா அது கள்ளத் தேவடியாள்ள மக்காள்” என சிறுத்தை வேகத்தோடு கதவு நோக்கி பாய்ந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த கனம் முருங்கை மரத்திலிருந்து கீழே பாய்ந்து ஓட ஆரம்பித்தோம். கிடுகில் சிக்கியிருந்த வேலிக்கம்பி காலில் கதககளி ஆடியது. எனக்கு முன்னாடி கோழி பிடிப்பதில் பி.எச்.டி முடித்த மகான்  பிரண்டபடி வந்து விழுந்தார். ஆனாலும் ஏலவே பிடித்தறுத்த மூன்று கோழிகளை விட்டு விடவில்லை. முகத்தை மறைத்து  கட்டப்பட்டிருந்த சீலை மூச்சினை இறுக்கி அடக்கி வைத்திருந்தது. ஓடி வந்த வேகத்தில் சைக்கிளின் திறப்பு எங்கேயோ விழுந்து விட்டது. ஒழுங்கைக்குள் இருந்த சைக்கிளினை தூக்கி தலையில் வைத்தபடி இடம் பொருள் ஏவலின்றி ஓடித் தப்பித்தோம்.

அடுத்த நாள் காலையில் பௌஸரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். அவன் எனக்காக ஒரு பதிலினை தயார் செய்து வைத்திருந்தான். அதுதான் இந்தக் கதையினை நான் சொல்வதற்கான காரணமாகவுமிருக்கிறது.

கோழி திருடுவது பாவமில்லையா பௌஸர்”

பாவம்தான்”

பாவத்தினை எப்படி கழிப்பது?”

களவெடுத்த கோழியினை இரவில் சாப்பிட்டு விட்டு காலையில் கழிப்புக் கழித்தால் பாவம் சரியாகிவிடும்”   என்றான்.

கழிப்பு என்று அவன் சொன்ன வார்த்தை என்னை அப்படியே கௌவிக் கொண்டது. நிம்மதியாக கழிப்பினை கழிக்க முடியாமல் கொச்சிக்கடை வீட்டில் நாங்கள் படுகின்ற பெரு அவதி பெஸரின் நினைவுகளை எனக்கு அடிக்கடி ஞபாகமூட்டியது. என்னளவில் கழிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தவன் பௌஸர் மட்டும்தான்.

தொடங்கயிருக்கும் இப்புது வருடத்தில் எப்படியாவது பாத்ரூமினை சரிசெய்து விட வேண்டுமென வாப்பா பேசிக் கொண்டிருந்தார். மாநகர சபை ஆட்களிடம் சொல்லி பாத்ரூம் பிட்டை அகற்ற வேண்டுமென உம்மா பதில் சொன்னாள். சட்ட ரீதியாக இதனை செய்யப் போனால் நிறைய செலவாகிவிடும் என்று பயந்த வாப்பா இல்லிகளாக ஒரு வேலை செய்தார்.

கொஞ்சம் காசினை பாத்ரூம் பிட் அள்ளும் ஊழியனுக்கு லஞ்சமாகக் கொடுத்து அதனை செய்து முடித்தார். அவர்கள் ரகசியமாக ஒரு வாகனத்தினைக்கொண்டு வந்து உறிஞ்செடுத்தனர். இரவோடு இரவாக இந்த வேலை நடந்து முடிந்தது. கொத்தும் கொறையுமான அவர்களது வேலையில் உம்மா திருப்தி கொள்ளவில்லை. இருக்கிற வரைக்கும் இது திருப்தியான வேலைதான் என வாப்பா சகித்துக் கொண்டார்.

நாங்கள் வாப்பாவின் ஊரில் இருந்த காலப்பகுதியில் சுபைதா உம்மாவின் வீட்டிற்கு பின்னாடிதான் விளையாடுவோம். எங்களுக்கு நேரெதினான பக்கத்தில் அவளது பாத்ரூம் பிட் இருந்தது. காற்று வீசும் போதெல்லாம் அதனது வாடை எங்கள் மூக்குகளின் மீது அமர்ந்தே செல்லும். ஒரு நாள் எங்களை விளையாட வேண்டாமென சுபைதாவின் மகன் பக்கட்டான் எங்களிடம் வந்து சொன்னான்.

பாத்ரூம் பிட் அள்ளுவதற்காக ஆக்கள் வருவதாகவும் நாற்றம் எல்லாப் பக்கங்களிலும் வீசும் என்பதாலும் அல்லயல் வீட்டுக்காரர்கள் கூட வெளியே சென்று விட்டதாகக் கூறினான். இந்த நாற்றம் பற்றியெல்லாம் நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பாத்ரூம் பிட்டினை மனிதர்கள் எப்படி அள்ளுவார்கள் என்பதில்தான் பலத்த சந்தேகத்தினைக் கொண்டிருந்தேன். எப்படியாவது நாளைக்கு சுபைதாவின் வீட்டிற்குச் செல்வதாக முடிவெடுத்தேன். காலையில் எழும்பியதும் முழுக்க முழுக்க பாத்ரூம் பிட் அள்ளுகின்ற நினைவுகள் மாத்திரமே நிறைந்திருந்தன. அதுவொரு அற்புதமான நினைவாக இருந்ததென்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ தெரியாது. ஆனால் அது அற்புதமானவர்களின் நிகழ்வாக இருந்தது.

அலிக்கம்பையிலிருந்து வந்த கனகரத்தினம் கா போத்தல் பட்ட சாராயத்தினை பச்சையாக குடித்து முடித்தான். லாம்பெண்னையினை பாத்ரூம் பிட் பக்கத்தில் ஊற்றி முடித்ததும் தனது உடுப்பினைக் கழற்றி தென்னை மரக் கப்பொன்றில் பூத்தினான். அவனோடு வந்திருந்த பூவரசனும் மாயச்சாமியும் பக்கத்தில் மடுவொன்றினை தோண்டிக் கொண்டிருந்தனர். பாத்ரூம் பிட்டின் மேல் மதிலை உடைக்கத் தொடங்கினான் கனகரத்தினம். அவனது கண்கள் மஞ்சள் அடித்துப் போய் கருவளையமாய் சுருண்டிருந்தன. வாளியில் கயிற்றினைக் கட்டி கிணற்றில் தண்ணி அள்ளுவது போல கழிவுகளை அள்ளி எடுத்தான். தோண்டப்பட்ட மடுவில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நிரப்பினான். அடி ஆழத்திற்குச் சென்றதும் கனகரத்தினம் பிட்டின் உள்ளே இறங்கினான். எல்லாவற்றையும் வழித்தெடுத்து முழுமையாக துப்பரவு செய்தான். மேலெழுந்து வந்தவன் கா போத்தலில் மிஞ்சியிருந்த சாரயத்தை குடிக்கத் தொடங்கினான். இறுதியாக போத்தலில் வாயினை ஊன்றி வைத்து நாக்கினை நீட்டி மீதமிருக்கும் சில துளிகளையும் உள்வாங்கிக் கொண்டான். உதடுகளின் மேல் பரப்பினை மூடியிருந்த அவனது மீசையில் தொட்டம் தொட்டமாக ஒட்டிக் கொண்டிருந்த சாராயத் துமிகளை நுனி நாக்கின் நடனத்தால் வாரி எடுத்தான். திடீரென நிமிர்ந்து என்னைப் பார்த்து ஒரு கபடச் சிரிப்பு சிரித்தான். நான் ஓடியே விட்டேன்.

கனகரத்தினத்தின் கண்கள் என்னை அச்சமூட்டவே செய்தன. இரவு முழுக்க நான் தூங்கவேயில்லை. என் மீது மலக்கழிவுகளை கனகரத்தினம் எறிவது போலவும், மலக்கிடங்கிற்குள் என்னை தள்ளிவிடுவது போலவும், மீண்டும் மீண்டும் மலக்கிடங்கிலிருந்து கனகரத்தினம் எழுந்து வந்து வா… வா… என இரு கைகளையும் நீட்டி என்னை அழைப்பது போலவும் கனாக்கண்டேன். அதற்குப் பிறகு கனகரத்தினை நான் பார்க்கவேயில்லை. அவனது பெயரையும் அவனோடு வந்தவர்களின் பெயரினையும் சுபைதாவின் மகன் பக்கட்டான்தான் எனக்குக் கூறினான்.

அலிக்கம்பையிலுள்ள எல்லா வீதிகளிலும் வலம் வந்திருக்கிறேன். ஒரு தடவை கூட கனகரத்தினை நான் காணவில்லை. பிட்டினை சுத்தம் செய்யும் பல வீடுகளுக்கு அழையாக விருந்தாளியாகச் சென்றிருக்கிறேன். அங்கு வேறு ஆட்கள்தான் வந்திருந்தார்கள். கனகரத்தினத்தின் லாவகம் அவர்களிடம் காணப்படவேயில்லை. கனகரத்தினத்தின் கழுத்தில் ஒரு தழும்பினைக் கண்ட ஞாபகம் என் மனதில் அப்படியே இருக்கிறது. ஏதோ தீ பற்றிக் கொண்டதைப் போல அந்தத் தடம் காணப்பட்டது. அதனை எப்பொழுதும் தொட்டு சொறிந்து கொண்டிருந்தான். பீடியினை வாயில் வைத்து இழுக்கும் போது அவனது தொண்டை நரம்புகள் வெளிக்கிட்டு வருவதை அந்தத் தழும்புகள் வெளிச்சமாகக் காட்டின. அவனோடு வந்திருந்த பூவரசனும் மாயச்சாமியும் ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக பேசிக் கொண்டே வேலைகளைச் செய்தனர். கனகரத்தினத்திடம் யாருமே பேசிவில்லை. அவனும் யாருடனும் பேசியதாகத் தெரியவில்லை. இரண்டு கட்டுகளுக்கு மேல் அவன் குடித்த பீடித்துண்டுகள் சொற்பமாகக் கூட போயிலையினை மீதமாக்கி வைத்திருக்கவில்லை. இறுதிவரை இழுபட்ட நிலையில் அனைத்து பீடிகளும் முழுமையாக உறுஞ்சப்பட்டிருந்தன.

கனகரத்தினம் மலத்தினை அள்ளும் விதம் அலாதியானது. தனக்கே உரித்தான பாங்கில் அக்காட்சி விநோதமாக இருந்தது. வாளியினை மேலே தூக்கும் போதும், கீழிறங்கி நிலத்தினைத் தாட்டி அள்ளும் போதும் அவனது முகத்தில் எந்த சஞ்சலத்தினையும் நான் காணவில்லை. நாற்றம் குறித்த எந்த பிரக்ஞையும் அற்றவனாக கனகரத்தினம் இருந்தான். ஏலவே சொல்ல மறந்து விட்டேன். மலம் அள்ளுபவர்களை எங்கள் வாப்பாவின் ஊரில் இப்படித்தான் அழைத்தார்கள். வாப்பாவிற்கும் சின்னப்பாவிற்கும் சொத்துத் தகறாரில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட போது வாப்பா சின்னப்பாவையும் அப்படித்தான் விளித்தார். சக்கிலியனே!’

ஏப்ரல் மாதமென நினைக்கிறேன். பௌஸர்தான் கோல் எடுத்திருந்தான். கனகரத்தினைக் கண்டு பிடித்து விட்டதாகவும் கொழும்பிலிருந்து ஊருக்கு வருகின்ற நாளில் இருவரும் சென்று சந்திக்கலாம் என்று கூறினான். நான் கனரத்தினத்தினை தேடிக் கொண்ருப்பதை பௌஸருக்கு மட்டும்தான் சொல்லியிருந்தேன். அவனால் மட்டுமே இப்படியாக எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது. இற்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்பாக நானும் பௌஸரும் கனகரத்தினத்தின் வீட்டிற்கு சென்றிருந்தோம்.

கனகரத்தினத்திற்கு நான் யாரென்றே தெரியவில்லை. தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் நான் சதாவும் கனகரத்தினை நினைத்துக் கொண்டிருந்ததை அவன் எப்படி அறிவான்? ஒரே பார்வையில் எவ்வித காரணங்களும் இல்லாமல் ஏற்படும் காதலுக்கு என்னால் எப்படி வரைவிலக்கணம் கூற முடியும்? முன்பு பார்த்த கனகரத்தினம் இப்போது அடியோடு மாறியிருந்தான். கிழடு தட்டிப் போய் சூம்பிய உடம்புடன் நிலத்தில் படுத்திருந்தான். அவனுக்கு கீழே பண்பாய் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. இரும்மலுடன் காறித்துப்பிக் கொண்டிருந்தான். சளியின் இடைச்செருகலுக்கு உள்ளே இரத்தக் கசிவுகள் பரவியிருந்தன. கண்களை இலேசாகத் திறந்து கொண்டான். அவனால் எதுவும் பேச முடியவில்லை. என்னை உற்றுப்பார்த்தான் என்பதைக் கூட அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. அவன் எழுந்திருக்க முயற்சித்த போது பௌஸர் அவனை படுத்துக் கொள்ளுமாறே கூறினான். நான் வெளியே வந்து கனகரத்தினத்தின் வீட்டினை சுற்றி வளைத்துக் கொண்டிருந்தேன். சில கிடுகுகளால் மாத்திரம் நெய்யப்பட்ட வீடு அவனுடையது. அவனது தம்பி முறையான ஒருவனே அவனுக்காக இப்பொழுது இருக்கிறான். இதில் விசித்திரம் என்வென்றால் கனகரத்தினத்தின் வீட்டில் பாத்ரூம் இருப்பதற்கான எந்த அடையாளங்களுமிருக்கவில்லை. ஆனால் எங்கள் மலத்தையெல்லாம் அவன் அள்ளிக் கொண்டிருந்தான் என்பதில் அற்புதம் நிறைந்திருந்தது. நான் வீட்டிற்குள் நுழைந்த போது கனகரத்தினம் சுருண்டு படுத்திருந்தான். அவனது முறுக்கு மீசையிலிருந்த மயிர்கள் மொத்தமாக விழுந்திருந்தன. இப்பொழுதுதான் கருஞ்சிவப்பில் அவனது கண்களை நெருக்கமாகப் பார்க்க முடிந்தது. அன்று அவன் சிரித்த கபடச் சிரிப்பு என்னை மீண்டும் ஒரு முறை சிலிர்க்க வைத்தது. விடாப்பிடியாக அவன் எழும்பத் தொடங்கினான். அவனது கண்களின் அடிப்பாகத்திலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீருக்கான அர்த்தம் குறித்து எனக்கு எதுவுமே புரியவில்லை. அவை எதற்காக வருகின்ற என்பது பற்றி அவனாவது அறிந்திருப்பானா என்று கூடத் தெரியவில்லை.

நான் அவனுக்கு அருகில் இன்னும் மிக நெருக்கமாகச் சென்றேன். அவனது மூச்சுக்காற்று நெருப்புத் தணலை விட மிக வேகமாகச் சுட்டது. அதுவொன்றும் பெரிய சூடல்ல. சந்திரன் உங்களுக்கு எப்பொழுதாவது சுட்டிருக்கிறதா? அப்படித்தான் எனக்கும். நான் அவனது கைகளை பற்றிக் கொண்டேன். அவை இன்னும் அடர்த்தியாக என்னை பிடித்துக் கொண்டன. அப்பிடியிலிருந்து விலகிக் கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. உடும்புப் பிடியினை விட மிக இறுக்கமாகப்பட்டதெனக்கு.

நான் அவனை வாரியணைத்துக் கொண்டேன். என் உடம்பு முழுக்க விடுதலையானதைப் போன்றிருந்தது. அந்த ஈரத்தின் காதலைப் பற்றி, அதன் உரசலைப் பற்றி ஒரு வண்ணத்துப் பூச்சி அறியும். மனிதர்கள் அறிவார்களா? கனகரத்தினத்தின் கைகள் மெது மெதுவாக எனது முதுகினைத் தடவிய போது நான் செத்துக் கொண்டிந்ததை அப்பொழுது அவன் உணர்ந்திருப்பானா?

***

-ஏ. எம். சாஜித் அஹமட்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *