சந்தோக்ஷத்தையும் துக்கத்தையும் சேர்த்து
அள்ளிக்கொண்டு வந்த வாழ்க்கை ஆறு
ஏற்ற இறக்கமென
நிறங்களனைத்தும் குழைத்துப்பூசிய
வருடங்கள் நாற்பது தாண்டியிருக்கும்.
கண் விடுப்பதற்கு முன்
கடுவன் தன் ஒரேயொரு இளம் குட்டியை
வயதொன்று முழுமையாகாமலே
விட்டுச்சென்றிருந்தது.
வெறிச்சுக்கிடந்த வீசிய வெளியில்
தனிமை போர்த்தி
வளர்ந்திருந்தது தான் படரிக்குட்டி
கைவிடப்பட்ட இளம் வயதுத்தாயும்
தொடக்கத்தில் தனியே தவித்துத் திரிந்திருந்தாள்
பிள்ளைச்செலவு கொடுக்கும் தவணை கடந்ததும்,
இடைவிடாது தொடர்ந்தும் தொந்தரவு செய்யும்
பொலிஸ் விரட்டலை தவிர்க்கும் ஒழிவு மறைவுக்கு மத்தியில்
தன் குட்டி ஆண் பூனையிடம்
கடுவன், மசண்டையில் கெஞ்சிய
பொழுதுகள் சில நினைவாக உண்டு குட்டி மனசில்.
கடுவன் பதுங்கும் முன்னிரவு கனத்த கனங்கள்.
ஊரின் ஆண்கள் பள்ளியில் கழிக்கும்
மஃரிபுக்கும் இஷாவுக்கும் நடுப்பட்ட
ஆரவாரம் குறைந்து,
ஆள் அடையாளமற்ற தந்திரம் போத்திய பொழுதுகள்.
அதற்கிடையில், கடுவன்,
சொந்தங்களால் பிசைந்து பச்சையென நெடுத்த பக்கத்து ஊரில்
வேறு குடி புகுந்தது.
பதினைந்து அல்லது பதினாறு மதிக்கத்தக்க
தாய்ப்பூனையிடம் முறிந்த வருடங்கள் சில கடந்த பிறகு
இரண்டாம் வாழ்க்கைக்கு அரைகுறை சம்மதம் பெறப்பட்டிருந்தது.
குட்டி, அங்குமில்லை இங்குமில்லையானது.
தவிப்பும் அலைச்சலும் படிந்த
அதன் மனம் முழுவதும் உறவுப் பாலைவனம் படர்ந்து
விரிந்து வரண்டு கிடக்கும் மத்தியில்
சொட்டுத்தண்ணி தேடி
கிடைக்குமிடங்களில் நா நனைத்து அலைந்தது குட்டிக்காலம்.
ஊர்விட்டு வெளியேறிய கடுவன்
மறுகித்திரியும் ஓடுகாலிக் காலவோட்டத்தில்,
கைவிடப்பட்ட ஒற்றைக் குட்டி,
குடும்பமாகி வசந்தமுதிரும் முப்பது, முப்பத்தைந்து
இளம் வாழைக்குருத்துப் பச்சை பூசிய
நீண்ட கால இதழ்கள் பூத்திருந்தன.
மலர்ச்சியில் சுக நிழலில் விழும்
இளைப்பாறு நிம்மதியில்
கடுவனின் அதே ஆண் குட்டி
கீர்த்தி எய்துவதாக பலரும் பேசித்திரிந்தனர்.
கடுவனும் இதைக் கேள்விப் பட்டிருக்கக்கூடும்.
இடையில்,
உறவின் மரணச்சடங்கில், அடக்கிய மையவாடியில்,
சோக இரவு கவ்வுகையில்,
சலாம் சொல்வதற்கான உறவு சிறு வரிசையில்
வந்தவர்களின் ஆருதல் ஏற்பு நிகழ்கிறது.
தீடீரென, ஆண்வரிசையின் பக்கத்தில் நின்ற
பாசப்பசளை போட்டு வளர்த்த மற்றொரு உறவு,
குட்டியிடம் நெருங்கி, தலை இறக்கி, காதுக்குள்
‘ஒங்குட வாப்பா வந்திருக்கிறார்‘ என்றது.
நின்ற அவனை கடந்து போகும் அந்த முகத்தை
நெரிசல் தள்ளி உந்தி விடுகிறது மெல்லிரவில்.
அந்த உறவுக் குசுகுசுத்தலில்,
அன்று வெள்ளை உடுத்து மங்கல் படிந்த ஒரு முகத்தை,
சோக இரவுப்புழுதியோடு கடுவனில் பொருத்தியது தான்படரிக்குட்டி.
***
-கே.முனாஸ்