‘நிண கவிதைகளில் அப்பிய சொற்கள்’ தந்த சப்னாஸ் ஹாஷிம் கிழக்கிலங்கை அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, இவரது கவிதைகள் உருவ உள்ளடக்க ரீதியில் பெரியதொரு பாய்ச்சலினை ஏற்படுத்திச் செல்வதனை அவரது கவிதையினூடு கண்டுகொள்ளலாம்.
சப்னாஸ் ஹாஷிமின் கவிதைகளைப் புரிந்து கொள்ள கிழக்கிலங்கையின் கவிதைப் பாரம்பரியம் அவசியமாகிறது.
அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரையான காலப்பகுதியில் தர்மு சிவராமு என்கின்ற பிரமிள் தொடங்கி நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், பேராசிரியர் சிவசேகரம், சோலைக்கிளி எம் ஏ நுஹ்மான் போன்றோர் கவிதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் அடைகிறார்கள். .புதிய படிமங்களை கவிதைகளில் பயன்படுத்தியவர்கள் என்ற வகையில் இவர்களது ஆக்கங்கள் முக்கியம் பெறுகின்றன. இவர்களே ஈழத்து நவீன கவிதையின் உருவ உள்ளடக்கங்களில் கணிசமான மாற்றங்களை விதைத்தவர்களுமாவர்.
இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்கள் நவீனத்துவத்தைத் தமது கவிதையின் பாடு பொருளாகக் கொண்டமை பிறிதாக ஆராயப்பட வேண்டிய ஓர் அம்சம் . மஹாகவி,சு வில்வரத்தினம், அ .யேசுராசா, வ ஐ ச ஜெயபாலன், சேரன் போன்றோர் நவீனத்துவ கவிதைகளைக் கவித்துவ வீச்சுடன் படைத்திருப்பினும் அவர்கள் அரசியல், யுத்தம், காதல், தன்னுணர்வு என சமூக பிரக்ஞை மிக்க கவிதைகளை, குறித்த வரையறைக்குள் நின்றே தமது பாடுபொருள்களை பேசினர். இதற்கு வடக்கின் அரசியல், சமூக பின்புலமும் ஒரு காரணியாக இருக்கலாம். கிழக்கிலங்கையினைச் சேர்ந்த கவிஞர்கள் பாடு பொருளிலும் சரி உருவத்திலும் சரி கட்டுடைப்பு செய்து கவிதைகளைப் படைக்கத் தலைப்பட்டனர்.
இதில் மிகவும் முக்கியமானவராக நோக்கக்கூடியவர் சோலைக்கிளி (யூ எல் எம் அதீக்) எனும் கவிஞர். தனித்துவம் மிக்க கவிதைகளை எண்பதுகளில் பாரிய வீச்சுடன் தந்த சோலைக்கிளியின் அடுத்த தலைமுறையிலிருந்து முகிழ்த்தெழுந்த கவிஞராகவே சப்னாஸ் ஹாஷிம் ஐ நாம் இனங்காண வேண்டி உள்ளது. சப்னாஸ் ஹாஷிம் இஸ்லாமிய வாழ்க்கை முறைமைகளையும் கிழக்கிலங்கையின் பாரம்பரிய பேச்சுவழக்கினையும் ஆங்காங்கே விரவ விட்டாலும் பலசமயங்களில் இவற்றையெல்லாமே மீறி மனிதத்துவத்தை பற்றி பேசும் கவிஞராக மாறும்போதே அவரது கவிதைகளில் உடைப்பெடுக்கிறது. இச்சமயங்களில் பின்நவீனத்துவ மொழி அவருக்கு மிக இலகுவாகக் கை கொடுத்து அடுத்த தளத்தினை நோக்கி விரையவைக்கிறது.
அதிகப்படியான படிமங்களை உபயோகித்து படிமக்கவிஞர் எனப் புகழப்படுபவர் பிரமிள். அதேவழியில் சப்னாஸ் ஹாஷிமும் படிமங்களை மிக இயல்பாகவும் அதிகமாகவும் பயன்படுத்துகிறார். இவருடைய கவிதைப்பிரதி, வாசிக்கும் ஒவ்வொருவரையும் பிரமிக்க வைக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை .
2020 மார்ச் இலிருந்து ஜுலை வரையான கால கட்டத்தில் எழுதப்பட்ட இவருடைய கவிதைகளே ‘நிணக்கவிதைகளில் அப்பிய சொற்களாக’ உருவெடுத்துள்ளது. நவீனத்துக்குரிய அனைத்து அம்சங்களினையும் உள்வாங்கி இருக்கிறது கவிதைகள்.சில கவிதைகள் புத்திஜீவியின் மன ஆதங்கமாகவும், இன்னும் சில அழகியலை நேசிக்கும் இளைய தலைமுறையின் குறியீடாகவும் அமைந்துள்ளன.பின்நவீனத்துவ கவிதைக்குரிய பண்பான பிரதியாக்கத்துக்கும் வாசிப்பவருக்குமான தொடர்பினை அவரவர் அனுபவங்களினூடு கண்டடையும் பொறிமுறைக்கூடாகவே இவரது அடுத்த தளத்துக்கான கவிதைகளை அடையாளம் காண முடிகிறது.
இவரது இன்னொரு சிறப்பு முரண் நிலை படிமங்களை பயன்படுத்துவது.(எதிர்க் கருத்துள்ள சொற்களை கவிதையில் ஒன்றிணைத்துச் செல்வது )
“மூளுகிறது இருட்டின் திரை….
ஒளிச்சகதிக்குள்
மீளா இன்மை …”
(இருமை )
“நீரேரிகளுக்குள்
எரிந்து கொண்டிருந்தன
நட்சத்திரங்கள் …”
(கொள்ளியாக்களின் கவிதைகள்)
“மோகம் கொலுவுற்ற நிலவே
உன் பனி சிம்மாசனத்தில்
பெருத்த சூரியர்கள் ”
(பிரிவிலேகி)
இவ்வாறு இன்னும்பல உதாரணங்களைக் கோடிட்டுக் காட்டிடலாம்.
“துவிதம் புனிதத்தில் ஒவ்வாமை கொள்வதே” (முத்தச் சினம் ) என்றும்,
“அபயத்தின் மாயாஜாலங்களை என் பிச்சை பாத்திரத்தில் கரைத்து வைத்திருக்கிறேன் ” (தவத்திற்கு பிந்தைய கவிதையில்) என்றும், “சிறகென்பது சுதந்திரம். இறகு என்பது பறத்தலின் இறைமை“என கூட்டுக்குள் தள்ளப்பட்ட சிறகிலும் தனது ஆழமான பார்வையினை கவிதையினூடு பகிர்ந்துகொள்கிறார்.
தமிழை வரன்முறையாகக் கற்று தேர்ந்த இலக்கியலாளர்களிலிருந்து கணிதம்,விஞ்ஞானம், பௌதிகவியல் சார்ந்த துறையில் தேர்ந்த இலக்கியலாளரால் எழுதப்படும் ஆக்கங்களுக்கும் நிறைந்த வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.அந்தவகையில் சண்முகம் சிவலிங்கத்தை விஞ்ஞானஆசிரியராகவும் ( சரித்திரத்தை உந்தும் விசைகள் உறங்குமோ / வாழ்வும் மரணமும், / சுயவார்ப்புகள்), பேராசிரியர் சிவசேகரத்தின் எழுத்துக்களை கணிதவியல் நிபுணத்துவத்தின் பின்புலத்தினூடும் பார்க்கலாம். கிழக்கிலங்கை ஈந்த விபுலானந்த அடிகளார் கூட விஞ்ஞான பட்டதாரியாக இருந்ததன் காரணமாகவே அவரால் இசைப் பொக்கிஷமான யாழ் நூலை ஆய்வு செய்ய முடிந்தது என்றும் கூறுவர். இவ்வாறு பல்துறை நிபுணத்துவமானது ஆக்கஇலக்கியத்துறையிலும் கணிசமான செல்வாக்கு செலுத்துவதனை நாம் அவதானிக்கலாம். இத்தகையோரின் ஆக்கங்களில் அறிவியல் தன்மை நிறைந்து காணப்படும். அது போல ஆங்கில இலக்கிய பரிச்சயமுள்ளவர்களே தமிழின் நவீனத்துவ பாரம்பரியத்தை தொடக்கிவைத்தவர்களாவர். இதன் ஒரு இழையினூடேயே சப்னாஸ் இனுடைய கவிதை ஆற்றலை கணித, ஆங்கில பட்டறிவு சார்ந்து நோக்க வேண்டிய தேவை உள்ளது.பிரமிளின் நவீன கவிதைகள் Metaphysic/ மனோதத்துவ ரீதியாகவும் ஆய்வு செய்யப்படுகிறது. அந்தவகையில் பிரமிளின் கவிதைகள் சிகரத்தைத் தொடும் ஆற்றல் கொண்டனவாய் இன்றுவரை விதந்துபேசப்படுகிறது.
‘இரத்தம் கதைக்கிறது மவுனம் அதிர்கிறது’ என்றும் ‘இரவில் குளித்து உலகம் வீசும் வெளிச்ச சாயை பரிதி’என்றும் ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ எனும் கவிதை வரிகள் படிமக் கவிஞரான பிரமிளினுடையவை.
கிழக்கிலங்கையின் நவீனத்துவ கவிஞர்கள் நிலவினை எவ்வாறெல்லாம் படிமங்களாக உபயோகித்திருக்கிறார்கள் என்பதனை பின்வரும் பாடல்கள் விபரிக்கின்றன
“உதிர்ந்த கிளைகளின் பின்னால்
நரைத்த பெரிய நிலாப்பந்து ”
(சண்முகம் சிவலிங்கம் – வாழ்வும் மரணமும்)
“நிலவு ஒழுகுகிறது
வாயில் மண் எதுவும்
செஞ்செழிப்பாய் தெரியவில்லை ”
(சோலைக்கிளி – இறகு உதிர்ந்த கிராமம் )
“ஆணியும் கயிறும் இல்லாமல்
சும்மா தொங்குகிற நிலாப்பந்து ”
என் ஆத்மா – (சூரியன் உச்சிக்கு ஒரு சாண் மேல் )
“தண்ணிலவு மென்னொளியால்
சித்திரங்கள் தீட்டி”
(எம் ஏ நுஹ்மான் – மீட்சி)
“அப்பாடா ” என்று
அண்ணாந்தேன்
சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப்பெருக்கு”
(பிரமிள் – (உன்) பெயர் )
“சூரியனை விழுங்கி
சந்திரனை துப்பும் கடவுள்
இன்றைக்கு எங்கே போனார்
மகள் கேட்டாள்”
( சப்னாஸ் ஹாஷிம் – மகளிலக்கணம்)
இத்தகையதொரு பின்புலத்தினூடேயே நாம் சப்னாஸ் இன் கவிதைகள், எவ்விதம் ஏனைய கவிஞர்களிலிருந்து சற்றும் சளைக்காது மேற்கிளம்ப எத்தனிக்கிறது என்பதனை நாம் நோக்கலாம்.
கொள்ளியாக்களின் கவிதைகள் என்ற கவிதை இவருடைய நவீன கவிதா ஆளுமையினை வெளிக்கொணர்கிறது.
நீரேரிகளுக்குள்
எரிந்துகொண்டிருந்தன
நட்சத்திரங்கள் ….
பட்டாம்பூச்சியின் சிறகிலிருந்து
நிறமற்று உதிர்கின்றன சொற்கள் …
பாம்பின் பற்களை பற்றி
செவிகள் முளைக்கும்
கொடியொன்று வளர்கிறது …
நரிகள் ஊதிவிட்ட
பெருங்காற்றில்
அதிர்ந்தலையும் சொற்களுக்காய்
நீலோற்பல இலைகளை
சிறகாக்கி பறக்கின்றன
மஞ்சள் கண் தவளைகள் ….
என் மரத்தின் பொந்திலிருந்தும்
கரு மரங்கொத்திகள்
சிதைக்கும் சொற்களை
கன்னிப் பெண் முட் டையிலிருந்து
வெடித்துவரும் உயிரணுவின் சொற்களை
வயற் காட்டில் அலைந்து கத்தும்
கொள்ளியாக்களின் சொற்களை
மாலைக்கண் மீனவனின் வலையில்
நேரந்தவறி வெடிக்கும்
பன்றிக் கண்ணிகளில்
உற்றுப்பார்த்திருக்கிறேன் ….
ஆதமும் ஏவாளும்
விதிமீறிய கணப்பொழுதுகளில்
சொற்கள் பால்வெளியில்
திசைமாறியிருந்தன…..
விக்கிரமாதித்தன் தோளில்
வேதாளம் மறந்த சொற்கள்
புராணங்களிலிருந்தும்
தப்பியிருந்தன…
சொற்கள்
கவிதைகளை வந்தடையும்
புதிர் விடுகதையை
இருளர் பழங்குடியினர் பாடுகின்றனர் ….
ஆனால் நானோ
மலையடிவாரத்தில்
குளக்கரைகளில் சொற்களை
தேடிக்களைத்துப்போன
முதிர்ந்த கவிஞனின்
கண்களில் உப்பிப்போயிருந்தேன் …
என் ‘நான்’களுக்குள்
சொற்கள் அறுப்புக்கு கட்டப்பட்ட
ஆடுகளாய் திமிறிக்கொண்டிருந்தன ….
இதில் ஒவ்வொருவரியும் தேர்ந்த சொற்களால் பின்னப்பட்டிருக்கிறது.
மொழி ஆளுமையும் கருத்தினை கூறுவதற்கு பயன்படுத்தப்பட்ட படிமங்களும் கவிஞரின் தனித்துவத்தினை பறை சாற்றி நிற்கிறது.
குறி அல்லது நெடி என்ற கவிதையில் கவிஞரின் காதலுணர்வும் மிக அழகாக வனையப்பட்டிருக்கிறது இவ்வாறாக,
நம் ஒப்பந்த காலத்தில்
என்னை நீ எப்படியும்
வைத்திருக்க இயலும்
எனக்கு நிசப்தங்களும்
எளிமையான இரவின்
ஹஸ்யங்களும்
கண்ணால் ஏறும் போதைகளும்
பிரக்ஞயற்ற தோழமையும்
வாசிப்பும் பிடித்தமானவை ….
நான் சகலமுமாய் இருப்பேன் ….
உன் அந்தரங்கங்களில்
என்னை நம்பலாம் …
காதலுக்கும் புரட்சிக்கும்
எனது கண்கள் விசுவாசத்தை
எப்போதும் பனிப்பன , பசிப்பன ….
ஒரு கவிஞனின் நம்பகத்தன்மைக்கு இதை விட எதை தான் வாசகர் எதிர்பார்ப்பது.
வன்முறை ஒன்றின் அகழி யுத்த கால வன்முறையை வல்லுறவை சொல்கிறது.
ஒரு ஆண் கவிஞன் வன்புணர்வை பாடும் தோரணை சற்று வித்தியாசமாக இருக்கிறது.
இறுதியில்
மெலிந்த எலும்புகளை
நெருக்கும் சிப்பாய்களின்
பீடி வாசத்துள்
அவள் சிறைப்பட்ட
நாளொன்றின் சயனைடை தேடுவாள் ….
என்று முடிகிறது. இந்தக் கவிதையைப் படித்த போது ஆயிரக்கணக்கில் உலகெங்கிலும் சித்திரவதைக்கு உட்பட்ட பெண்கள் மனக்கண் முன்னே வந்து போனார்கள்.
அழும் பூமிச் சத்தம் எனும் கவிதையில்
தனது இனத்தை
தானே கொன்று
புதைக்கும்
அசிங்கத்தின்
முறையிடலா ….
மனித வாசனையை
விலத்திய
உலகமொன்றின்
மிதமிஞ்சிய
அபிமானியாய்
எப்போது மாறுவது ….
என்றும் கேள்விக்குட்படுத்துகிறார்
பழங்கடலின் போதனைகள் என்ற கவிதையில்
கண்ணிமைகளின்
மயிர்களை சிரைத்து
சிறுமி ஒருவளின்
சித்திரத்திற்கு
தூரிகை
செய்து கொடுத்தேன்
என்றும்
என் அறிவின்
எந்தப் பகுதியையும்
தானமாகவேனும்
வேண்டாமென்ற
பழங்கடலின்
போதனைகளை
கால் மடக்கி கேட்கின்றேன்
எனக்கு பழியற்ற
புதுச்சொற்கள் வேண்டும் ….
அது புதினமான
காலங்களில்
ரகசியமாய்
இருந்தவையாய் கூட இருக்கலாம் …..
என முடிகிறது புத்துலக கவிஞனான சப்னாஸ் இன் கவிதை.
இவ்வாறாக ஒருசில கவிதைகளை மட்டுமே என்னால் கோடிட்டுக் காட்டிட முடிகிறது.இந்த தொகுப்பில் வரும் ஒவ்வொரு கவிதையும் புதிது புதிதான அர்த்தங்களுடன் வாசிப்போரை கிளர்ச்ச்சியடையச் செய்யும் வல்லமை மிக்கன.
வெள்ளாப்பு வெளியின் வெளியீடாகவும் மறைந்த கவிஞர் மஜீத் அவர்களுக்கும் ஆசிரியர் அப்துல் ரசாக் அவர்களுக்கும் சமர்ப்பணமாக்கப்பட்டுள்ளது, நிண கவிதைகளில் அப்பிய சொற்கள்’.
அழகிய நிறச்சேர்க்கையுடனான அட்டையில், ஓவியம் ஒன்று தீட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது..கவிதை எழுத்துருக்கள் (font) பாடசாலை புத்தக எழுத்துருவாக அல்லாது அழகிய எழுத்துரு தேர்ந்தெடுக்கப்பட்டமை கவிதை வாசித்தலில் எவருக்கும் சலிப்பை ஏற்படுத்தாது என்று நம்பலாம்.
பேராசிரியர் சிவத்தம்பி கூறியது போல “எமது அடுத்த தலைமுறை எம் தோள் மீது ஏறி நின்று நாம் பார்த்ததை விட இன்னும் அதிக தொலை தூரத்தை நோக்குவர்” என்பது சப்னாஸ் ஹாஷிம் மூலம் நிரூபணமாகிறது.
– சூரியகுமாரி ஸ்ரீதரன் –