‘’தாமரகொளம் இருக்கில்லா தெக்கு தாமரொளம் அங்கதான் பொறந்தேன் . அம்மை வயலு வேலைக்குப் போவா. மாறி அப்பா யாருன்னு  தெரியாது. சொந்தம்னு சொல்லிக்கிட்டு அப்பனுக்க தூரத்து சொந்தத்து தம்பி, சித்தப்பன்னு ஒருத்தம் வருவான். அவன்தான் எங்கம்மையை வச்சிருந்தாம்னு சொல்லுவாவ. படிக்கியதுக்கு எனக்கு நல்லாஆச . என்னிய படிக்க வெய்க்க அங்க ஆருண்டு. அம்மா செல நேரம் வீட்டுக்கு வருவா செலநாள் வரமாட்டா. அம்மா இல்லாத்த ஒரு நாளு ராத்திரி சித்தப்பன்காரன் வீட்டுக்கு வந்தான். அன்னைக்குத் தான் ஒலகம்னா என்னா மனுசனுவன்னா ஆருன்னுதெரிஞ்சுகிட்டேன். நான் தொழிலுக்கு எறங்கும்போ நீ பெறந்திருக்கக் கூட  மாட்ட இல்லியா? பதிமூணு வயசு. வாறவன் போறவன் எல்லாம் எனக்க மொலையத் தான் பாப்பானுவ. மொதல் கஸ்டமர் முப்பந்தரத்துக்குக் கூட்டிட்டுப் போனான். நல்ல தொடக்கம். பொறவு கன்னியாமாரி, மதுர, திருநெல்வேலி,  பாறசால, திருவந்திரம் , ராஜாவூரு, ஆத்தங்கரைப் பள்ளி,  குத்தாலம் , திருவண்ணாமலை , கோயம்பத்தூரு, மெட்ராஸுன்னு போவாத எடமில்ல.  இருவது வயசுல ஆந்தராக்காரி சினேகிதி  பிள்ள அவளுக்க ஊருக்குக் கூப்பிட்டா ஆனா எனக்கு நாருவல விட்டுப் போவ மனசில்ல. வாய் நெறைய நாலுவேர கெட்டவார்த்தைச் சொல்லி தள்ளைக்கு அறுத்தாதானடே நமக்குசோறு எறங்கும். தள்ளைய வோளிகளுக்க ஊரு .’’

கவிதாக்கா என்னிடம் ஒரு பான்பராக்கை பாதி தந்துவிட்டு எச்சில் கூட்டித்துப்பினாள்.

திருநெல்வேலி பஸ்கள் நிற்குமிடத்திலிருந்து மேரி பரபரக்க இறங்கி நடந்து  வந்தாள்.

‘’குட்டே பிள்ளா ரெண்டு நாளா ஆள காணல’’ கவிதாக்கா மேரி நெருங்கியதும் கேட்டாள். மேரியின் கன்னம் கன்னியிருந்தது. உதடும் கிழிந்திருந்தது.

மேரி பதில் சொல்லாமல் கலங்கிய கண்களோடு களியக்காவிளை பஸ்ஸில் ஏறிஉட்கார்ந்தாள்.

‘’போலிஸ்கார தேவ்டியாளுக்க மோனுவ’’ கவிதாக்கா சத்தமாய் காறித் துப்பினாள். பஸ்ஸ்டாண்ட் பாரா டூட்டி பி.சி. பாலகிருஷ்ணன் முறைத்துவிட்டு வெளிப்பக்கம் டீக்கடைக்கு ஒதுங்கினான்.  பூக்கடை சுரேஷும், இஞ்சிமுட்டாய் தாணப்பனும் நமட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள்.

‘’’கண்டாரோளிப்பயலுவ. மனுசனுவளா இவனுவ. ..இவனுவத்  தனி எனமில்லியாக்கும். குடிச்ச வெள்ளத்திலயும்  நம்பப்படாது குட்டிமக்கா. வெப்ராளமா வருகு. பதினேழு வயசுல என்னை இவனுவ நாலுபேரு கொண்டு போட்டு செய்திட்டு பைசாவும் தராம அடியும் சவுட்டும் தந்திட்டு போனானுவ. நாலு நாளு பாய்லேயிருந்து எழும்பல்ல. அப்ப இருந்தே இவனுவள கண்டாலே எனக்கு ஆவாது. மாசாமாசம் கேசுக்கு வந்து நிப்பானுவ. நான் மயிருன்னுதானும் மதிக்க மாண்டேன். ‘’

கவிதாக்காவுக்கு அதையும் தாண்டி போலீஸ்காரர்கள் மீது ஏதோ தீராத வெறுப்பும் காயமும் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. யாரையும் இப்படி பேசுபவள் அல்ல அவள்.

‘’வயறு பவுச்சிது ரெண்டு புரோட்டாவும் பீஃபும் தின்னுவாமாடே ‘’

கேட்டுக்கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமல் வெயிடிங் ஷெட்டிலிருந்து எழுந்தாள். வடசேரி கிறிஸ்டோபர் பஸ் ஸ்டாண்ட் கட்டி ஐந்து வருடங்கள் நிறைந்திருக்கும். தொன்னூற்றி நாலில் கட்டினது. குளத்து பஸ் ஸ்டாண்டிலிருந்து எங்கள் ஜாகை இங்கு இடம்மாறி ரெண்டு வருடங்கள் ஆகிறது. முதன்முதலில் கவிதா அக்காவை மீனாஷிபுரம் சாமி லாட்ஜில்தான் சந்தித்தேன்.  ஏஜன்ட் ஒருத்தனிடம் சிக்கி சின்னாபின்னமாய் கிடந்த நேரம். கையும் கணக்குமில்லாமல் நேரம் காலமில்லாமல் சுரண்டல் . என்னால் தாழமுடியவில்லை. வழக்கமாய் இங்கு எதிரிடும் தொழில் போட்டி கவிதா அக்காவிடம் சுத்தமாய் இல்லை. அவள் சீனியர் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். எனக்கு இப்போதைக்கு தேவை ஒரு தங்குமிடமும் பாதுகாப்பான அடைக்கலமும். அன்று மாலை டீகுடிக்கும் நேரத்துக்கு முன் கவிதா அக்கா என்னை தத்தெடுத்துக் கொண்டாள். லாட்ஜ் ஏஜெண்ட் கைநழுவி போன என்னை எரிச்சலாய் பார்த்தபடி பீச் ஒயின்ஸில் நுழைந்தான்.

இந்த ரெண்டு வருடங்களில் ஒழுகினசேரியிலும் அருகில் கோதைகிராமத்திலுமாய் சிறியவீடுகளில் நானும் கவிதா அக்காவும், கூட யாராவது வேறொருத்தியுமாய் நிம்மதியாய் கழிக்கிறோம். இப்போது எங்களோடு வசிக்கும் சாந்தி ஊருக்கு போயிருக்கிறாள். சாப்பிட்டு முடித்து டீ குடித்து, பான்பராக்கொன்றை ஆளுக்கு பாதி போட்டுவிட்டு கன்னியாகுமரி பஸ் வெயிடிங் ஷெட்டில்  அமர்ந்திருந்தோம்.  

இந்தப் பக்கமாய் குணசீலன் போலீஸ் தண்ணியடித்து மட்டையாயிருந்த ஒரு சிக்குவண்டியை லத்தியால் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார். கவிதாக்கா அவரைப்பார்த்ததும் மரியாதையாய் சேலைத் தலைப்பைப் போர்த்திக் கொண்டாள்.

‘’போலீஸ்காரனுவள்ல இவரு ஒத்த ஆளைத்தான் நான் மதிப்பேன் பாத்துக்கோ ‘’. ‘தங்கமான மனுஷன்’.

நான் கதை கேக்கும் ஆவலில் அக்காவைப் பார்த்தேன்.

‘’ அது ஒரு மாசக்கடைசியாக்கும் .போலீஸ்காரன்மாருவ கேசு எழுத்துக்காக  பைக்குவள பிடிக்கதும் பிக்பாக்கட்டுவளை மடக்கதுக்கும் வெரஞ்சுகிட்டு வாரானுவ. மாசக்கடைசிக்கு எவ்வளவு உசாரா இருந்தாலும் நம்மள பதிவா கூட்டிட்டுப் போயிருவானுவ. அன்னைக்கு இங்க ஏதோவொரு செலைய ஒடச்சுப்போட்டானுவன்னு பந்த் வேற .  கடையடைப்பு. நான் காலையில இருந்து ஒண்ணும் திங்கல. கையில துட்டும் இல்ல. எவனாவது மாட்டுவானா சோத்துக்கு வழி பண்ணாலாம்னு அலையுதேன். ஒருத்தனும் சிக்கல. பற்றுல டீயாவது குடிப்போம்னு செல்வன் அண்ணன் கடைக்கு  போனா எளவுல அவன் கடயும் இல்ல. அண்ணா பஸ்ஸ்டாண்டுக்கு போனப்பறந்தான் போலீஸ்காரப் பயவ பிடிச்சானுவ. கோட்டார் இன்ஸ்பெக்டர் முரளி,  சௌந்திரபாண்டியன் எஸ்.. கேட்டிருக்கியா இவியளக்கண்டா பழய  கேடிய எல்லாம் சாமனத்தைச்  சுருட்டிட்டு இருப்பானுவ. அப்படியாப்பட்ட ஆளுவ. நம்ம எல்லாத்துக்கும் துணிஞ்சு இறங்கின கட்டயில்லா. ஆருக்கு பயப்படனும். நான் ஊக்கமாத்தான் போனேன். அப்ப எதோ மேல இடத்து உத்தரவுன்னு நெனக்கேன் . என்னையெல்லாம் செவென்டி பை போட்டு வெளிய வுட்டுருவாவ. அன்னைக்கு கோர்டுக்கு கூட்டிட்டு போணும்னு சொல்லியாச்சு. எனக்கு அதில ஒரு மானக்கொறச்சலும் இல்ல. பசி . ஒன்னாண , மக்கா அப்படியொரு பசி. சின்ன பிள்ளேல பசிச்சு கெடந்திருக்கேன். எங்கஅம்ம என்னிய வுட்டுட்டு களை பறிக்கவோ ஞாறு  நடவோ போயிருவா . நான் பசிச்சு அழுதழுது கெடப்பேன். அந்த தெருவிலேயே ஆரும் இருக்கமாண்டாவோ. என் கொரலு ஏன் கட்டியா இருக்குன்னு அன்னைக்கு கேட்டெல்லா . இதாக்கும் சம்பவம். அழுதழுது தொண்டத்தண்ணி வத்தி கமறி அப்படியே ஒறங்கிருவேன். கத வேற எங்கயோ போவுதேஆங்..பசி அன்னிக்குன்னு பாத்து அப்படியொரு பசி. இவனுவ ஆருக்கிட்டயாவது கேக்கமுடியுமா. வுட்டா நம்மகிட்ட இருந்து எரந்து வேங்கித் திம்பானுவ. எரப்பாளிப் பயக்க. எனக்கு தலகறங்கி வருகு. அப்பத்தான் இந்த கொணசீலன் போலீசு கோர்ட் டூட்டிக்குவராரு. என்னியப் பாத்தாரு. என்ன நெனச்சாரோ தெரியல. சாப்பிடியாம்மான்னுதான் கேட்டாரு. எனக்கு அப்படியே கண்ணு கலங்கிட்டு. ஸ்டேஷன் திண்ணையில வச்சு அவருவாங்கித்தந்த தோசையை திங்கும்போது அழுதுகிட்டேதான் தின்னேன் . இன்னைக்குவரைக்கும் அவரைக் கண்டா எழும்பி நிப்பேன். ஒரு நேரத்த ஆகாரத்தை வேங்கித்தந்ததுக்குச் சுட்டி இல்ல. அவருக்கு கேக்கத் தோணிச்சு பாதியா அதுக்காகத்தான்  ‘’

குணசீலன் போலீஸ் தூரத்தில் பஸ்டாண்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.

‘’ஆமாக்கா  யாராவது என்கிட்டே சாப்பிடியான்னு கேட்டாலே நானும் அழுதுருவேன்.’’

அன்று பஸ் ஸ்டாண்டில் நடமாட்டம் அதிகமில்லை .வெளியூர் கிராக்கிகள் ஒருவன் கூட தென்படவில்லை. கொஞ்சம் ஓசி கேஸ்கள் சுற்றி வந்தார்கள். கவிதா அக்காவைப்பார்த்ததும் பம்மிப் பின்வாங்கிவிட்டனர்.

‘’நீ வெளங்காதவன் ஒருத்தனை கட்டிகொடுத்திருவானுவன்னுதானே ஓடிவந்தே?’’

கவிதாக்கா இன்று கதை பேச தீர்மானித்துவிட்டாள் . மாதத்தில் ஏதேனும் ஒருநாள் இப்படி அமையும். அன்று காசு பிரச்சனை இருக்காது. கட்டாயம் தொழில் செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம் இருக்காது. ஒரு விட்டேத்தியான மனநிலை. இப்படியான நாட்களில்தான் நாங்கள் எங்களுக்குள் நெருக்கமாக உணர்வோம்.

‘’எனெக்கு தொட்டியோ பெறக்கியோ ஆருன்னாலும் சரி கட்டிவச்சிருந்தா தங்கம் போல இருந்திருப்பேன்டி மக்கா . குடும்பமா வாழதுக்கு ஆசை உண்டு ஆனா இனி முடியாது. எவனுக்கும் அடங்கி இருக்க என்னால முடியாது. ’’

‘’நீ யாரையும் லவ் பண்ணலியா அக்கா’’

நான் அடுத்த கதைக்கு தூபமிட்டேன்.

‘’சின்ன பிராயத்துல ஒருத்தனைப் பாத்தேன். ஆனா ஆளு கொஞ்சம் பயந்த சுபாவம். எனக்க மொகத்தைப் பாக்கவே பயப்படுவான். ஆளு செல்லம்போல  இருப்பான். ஒருநாளு நானே கிட்டப் போனேன். பேரு என்னனுதான் கேட்டேன். பய ஒரே ஓட்டம். பொறவு இந்தமாரி பைங்கிளி பரிபாடிகளை நெறுத்திட்டேன். முக்காவாசி பேருக்கு  மத்ததுதான் தேவை. அத எதுக்கு சுத்தி வளச்சிப் பேசிட்டு. நேரா கேட்டுட்டு செய்திட்டு  போயிரவேண்டியததுதான்.‘’  

‘’நல்ல வெவரம் தெரிஞ்ச பொறவு லவ் ஒண்ணும் பண்ணலியாக்கா’’

நான் மீண்டும் திரியைக் கிள்ளி விட்டேன்.

‘’ அத  லவ்வுன்னு சொல்ல முடியாது . மரியாத. ஒரு விஷயம் சொல்லுதேன் கேளு . ஒருஆளுக்க மேல வெறும் அன்பு மட்டும் இருந்தா அது நாள் போக்குல  தேஞ்சு போயிரும். செலப்பம் வெறுப்பாக் கூட மாறலாம். அதுக்குக் கூடவே மரியாதையும் இருந்துன்னு வை. காலத்துக்கும் ரெண்டும் நிக்கும். அப்பிடியொரு மரியாதையும் அன்பும் ஒருத்தன் மேல மட்டுமில்ல அவன் குடும்பத்து மேலயும் இப்பவும் உண்டு. அத லவ்வுன்னு சொன்னாலவ்வுன்னு சொல்லலாம். ‘’

விளக்கு பிராகாசித்து எரியத் தொடங்கியது

‘’ ரொம்ப நாள் எல்லாம் இல்ல ஒரு அஞ்சு வருஷம் முன்னால. நம்ம வடசேரி பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டு இருந்த சமயம். ஒருநாள் லட்சுமி தியேட்டர்ல மார்னிங் ஷோ ஒருத்தன் கூடபோயிட்டு  கன்னியாமாரி பஸ் நிக்குத எடத்துல நின்னுட்டிருந்தேன். அப்ப ஒருத்தன். நல்ல ஒல்லி . பேன்ட் ஷர்ட் இன் பண்ணி ஆளு நல்ல ஸ்டைலா இருந்தான். பீர் குடிச்சிருந்தான்னு பொறவு தெரிஞ்சுகிட்டேன். என்கிட்டே வந்து கன்னியாகுமாரிக்கு போலாமா? ரூம் போடலாமான்னு கேட்டான். எனக்கு அவனைப் பாக்க சிரிப்பா வந்துது. ஆளும் சைஸும். சரின்னு பஸ் ஏறினேன். பயங்கர தைரியமா என் பக்கத்தில வந்து இருந்தான். போய் எறங்கினதும் இப்ப சன் செட் பாயிண்ட்ன்னு சொல்லுதாவ  இல்லா அப்ப அங்க ஆள் நடமாட்டமே இருக்காது. அந்த பக்கம் போனோம்.  புள்ளிக்காரன் கூட வந்தான். நான் கடலைப் பாத்து உக்காந்தேன். டக்குன்னு என் மடில படுத்தான். ன்னுஅழுகை. நான் தலையை தடவிக் குடுத்திட்டே இருந்தேன். ஒண்ணும் கேக்கல அழுதுகிட்டே அவனாச் சொன்னான்.. லவ் பெய்லியர். பாவம். என்ன பண்ணனும்னு தெரியல. அவளைப் பழிவாங்க என்கிட்டே வந்திருக்கு. குடிச்ச பீர் தைரியம் குடுத்திருக்கு. வீடு தக்கலைப் பக்கம் கேரளபுரம். ஒரே புள்ள. அப்பா கெடயாது. அம்மாவும் இவனும் மட்டும்தான். அம்மா தாலுகா ஆபீஸ் கிளார்க்கு. நல்ல குடும்பம்.

அடுத்த வாரம் வாறதா சொல்லி கைநெறைய துட்டு தந்தான். அடுத்த வாரம் வந்தான் . குடிக்கல. ரொம்ப சிநேகமா என்கிட்டே வந்தான். என்கிட்டே ஏதோ ஒண்ணு அவனுக்குப்பிடிச்சிட்டு. அப்ப செல்போனு ஒண்ணும் கெடயாது. வீட்டு போன் நம்பர் தந்து ஏதாவது தேவைன்னா கூப்பிடச் சொன்னான். திடீர்னு ஒருநாள் நேர்ல வந்து அவங்க அம்மா கீழவிழுந்து அடிபட்டு கெடையில கெடக்கதாச் சொல்லி ஹெல்புக்கு வர முடியுமான்னுகேட்டான்.’’

‘’நாக்கு வறண்டு போச்சி ஒரு சர்பத்து குடிச்சிட்டு வருவோம்டி’’  கவிதாக்கா இடையில் நிறுத்தினாள்.

முத்து அண்ணன் கடையில் அவளுக்கு நல்ல ஐஸ் போட்டு  சோடா சர்பத்தும் எனக்கு சோடா போட்டு உப்பு போஞ்சும் குடித்தோம். கிட்டே நெருங்கிய வாடிக்கையாளனைக் கண்களாலேயேத் துரத்தினேன்.

இந்த முறை தென்காசி பஸ்கள்  வரும் வெய்டிங் செட்டில் அமர்ந்தோம்.

‘’ நல்ல பெரிய மட்டுப்பாவு வீடு. சுத்தி தோட்டம். நெறைய மரங்க. பழைய கெணறு. பெரியகாம்பவுண்டு மதிலு. அந்த ஊர்ல பெரிய குடும்பம். சொத்து தகராறுல சொந்த பந்தம் எல்லாம் பகைஆறும் போக்குவரத்து கெடயாது. நல்லது கெட்டது கெடயாது. அவனுக்க அம்மா பாவம் நல்ல பொம்பள. அதிர்ந்து ஒரு வார்த்த பேச மாட்டாவ. நானும் அம்மான்னுதான் கூப்பிட்டேன். எனக்கு தனி ரூமு . வாழ்க்கைல இப்படி ஒரு வீட்டுல நான் இருந்ததில்ல. நமக்குத்தான் கேப்பாரு கேள்வி இல்லையே. காலையில எழும்பி கெணத்துல அஞ்சு கொடம் தண்ணி கோரணும் . அதுக்க பொறவு பெரிசா வேலை எதுவும்இல்ல. இவன் ஏதோவொரு பெரிய காலேஜு படிப்பு படிச்சிட்டு வீட்ல சும்ம்மாதான்இருந்தான். அம்மாக்கு காலில சின்ன எலும்பு முறிவு ரெண்டு மாசம் படுக்கை. கக்கூஸ் கூட்டிப்போறதில இருந்து  நான்தான் எல்லாம் பாத்தேன். அவனும் என்னைச் சுத்தி சுத்தி வந்தான். நான் மொதல்ல பிடி குடுக்கல. நமக்குன்னு ஒரு நியாயம் உண்டில்லியா. தின்னவீட்டுக்கு துரோகம் செய்யக் கூடாதில்லா. ஆனா அவன் விடல்ல . பாவமா இருந்துது. ஒருநாள் ராத்திரி. குடுத்திட்டேன். பொறவு அது பதிவாயிட்டு. ராத்திரியானா ரூமுக்குவந்துருவான். அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும். என்ன நெனச்சாளோ மகராசி . ஒருவார்த்தை கேக்கல. ஒரு மாசம் போயிருக்கும். அவளுக்கு கால் சரியாயிட்டு . எனக்கு தள்ளி போச்சி . அவன்ட்ட சொன்னேன் . அவன் பயப்படல்ல. அம்மாட்ட பேசலாம்னு சொன்னான். எனக்கு அப்பத்தான் அவன் மேல லவ்வே வந்துது. வாழ்கையில மொத முறையா வெட்கப்பட்டேன்.  

‘’அடுத்த நாள் காலைல கெணத்தில தண்ணி கோரிட்டு இருந்தேன். வீட்டு பின்பக்கம்தான் கெணறு. அம்மா பின் வாசல்லில உக்காந்திருந்தா. இடுப்புல கொடத்தோட வாசல் பக்கம்வரும்போது கீழ கெடந்த கல்லில பட்டு கால் பொரண்டிட்டு. கொடம் தண்ணியோடஉழுந்து ஒடஞ்சுபோச்சு. பாதி தண்ணி அம்மா மேல சிந்தி அவங்க துணியெல்லாம் ஈரம். நான் பதறிட்டேன். அவங்க ரொம்ப அமைதியா சொன்னாங்க ‘’

‘’ போட்டு மக்ளே உன் தப்பில்ல ’’

‘’அப்படியே செத்திட்டேன். இவ்வளவு அன்பா இதுவர யாரும் என்னை நடத்தினதில்லை. அன்னைக்கு சாயந்திரம் அம்மா நல்ல ஒறக்கம் இவன் எங்கயோ போயிருந்தான். நான் என்பையை எடுத்திட்டு வந்திட்டேன்.’’

ஒரு வினாடி விம்முவதுபோல் கவிதாக்கா குரல் கம்மியது. நான் ஆறுதலாய் அவள் கையைப்பிடித்துக் கொண்டேன். சற்று நேரம் தூரத்தை வெறித்துப் பார்த்துவிட்டு

‘’அடுத்த நாளே கலைச்சிட்டேன்’’ என்றாள்.

 

 

***

 

-சிவசங்கர் எஸ்.ஜே

 

                                

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *