1. காலம்
ரோடு ரோலரால்
வாகன நெரிசல்.
பெரும் சக்கரங்களின்
வேகம் கூட்டப் பார்க்கின்றன
வாலாயிருக்கும்
தேர்வடங்கள்.
நிதானித்து
காலத்தின் துளையைச்
சுருக்கிய நிறை
எங்கோ தன்
செங்கோலை நாட்ட
நகர்ந்து கொண்டிருக்கும்
சொரூபத்தை
கிடைக்கும் சந்தர்ப்பத்தில்
முந்தி கடக்கிறது
மற்றொருமொரு
பிரபஞ்சத்தின்
இணைக்
காலம்.
2. துளை
மணம் கமழ
நீ
அனுப்பிய புத்தகத்தை
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
கவிதையின்
நெடுங்கனவிலிருந்து
வெளியேறி முடியும்
கடைசி வரி வீதியில்
என் தொடுகை
தானாக
விருப்பக் குறி
தேடி
பின்
மீளும்
அநிச்சை.
3. காட்சி
பயந்த யூகேஜி
மம்மி டாடியின் பக்கம் திருப்பி
ஒரு பட்டனை அழுத்துகிறது
ஆனால் அந்த
சண்டை சேனல் காட்சியை
கார்டூனுக்கு மாற்ற
வழி தெரியாது குழம்புகிறது
நித்தம் நவமெனும்
உசிதம்.
4. நேருணர்வு
சாப்பிட்டாகிவிட்டது.
வாக்கிங் “போய்” ஆகிவிட்டது.
ஏசியும் போட்டாகிவிட்டது.
வட்டமடித்து
ஏதோ சொல்கிறான்
ஜீனோ.
மீண்டும்
பிரபஞ்சத்தின்
சொல்வதற்கும் புரிவதற்கும்
இடையின்
நிகழ்.
5. பயணம்
அது ஒரு வாய்ஸ் மெஸ்ஸேஜ்.
இப்போதுதான் பேசி அனுப்பினான்.
பஸ் புறப்பட்டதிலிருந்து
திரும்பத் திரும்ப கேட்டபடியே
என்னை பொருட்படுத்தாத
அந்த சக பயணியை
எப்படி புரிந்து கொள்வது?
மூன்று மணி நேரம்.
எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது
” யாரும் என்னுடன் பேசவேண்டாம்
அம்மா இறந்த எனக்கு எதுவுமே
இல்லாமல் ஆக்கிவிட்டது.
போதும், நாம் சிரித்து கொண்டிருந்த
ஒரு பொழுதும் நினைவுபடுத்த இயலவில்லை. நியாயப்படுத்த முயலும்போதே அது நியாயத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.
எதையும் சரியாகச் சொல்ல முடியாத
காலம் இது. எல்லாவற்றிற்கும் நன்றி.”
வீட்டிற்கு வந்தவுடன்
ஜீனோ ஓடி வந்து
முகத்தை நக்குகிறான்.
அவசரத்தில்
பெடிகிரி வாங்க
மறந்துவிட்டேன்.
அந்த இரவு
தன் சுழியத்தால்
விழிக்கிறது.
***
– சாகிப்கிரான்