“கடவுள் என்பது துரோகியாய் இருத்தல்” கருணாகரனது கவிதைகள் குறித்த நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருணாகரனின் எழுத்துக்களில் நான் வரிக்கு வரி தேடுவது நாம் கடந்து வந்த காலத்தில் அவரது அரசியற் கணற்கிடுகை என்னவாய் இருக்கிறது என்பதைத் தான்.  

கவிஞர் கருணாகரன் என எல்லோராலும் அழைக்கப்படும் அவர் கட்டாயம் கவிஞராக இருக்க வேண்டும் என நான் ஒரு பொழுதிலும் எண்ணியதில்லை. 

யுத்தத்திற்குள்ளும்-  சமாதானத்திற்குள் இருந்த யுத்தத்திற்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் ஒருபொழுதிலும் குலுங்கிப் பூக்கும் பூக்களால் ஆன மனநிலையில் எழுத முனைந்தவர்களுமல்ல. எழுதி முடிப்பவர்களுமல்ல. 

கருணாகரனின் மத்தியூ பற்றிய எழுத்துக்களை நான் வாசிக்கத் தொடங்குமுன் நாங்கள் அனைவரும் வாழ்காலம் முழுவதும் யுத்தத்திற்குள் மனம் ஒப்புவிக்கப்பட்டவர்கள் என்றாலும்  – இது இறுதிக்கால யுத்ததிற்குள் இருந்தவனுக்கும் இறுதிக்கால யுத்ததிற்கு வெளியில் இருந்தவனுக்கமான ஒரு தொடு தீண்டலாக இருக்கும் என எண்ணியபடி வாசிக்கத் தொடங்கினேன்.

நானும்  என்னுடைய வாழ்காலத்தில் பாதிக்காலம் யுத்ததிற்குள்ளும் இருந்தவன் என்ற அலகில் யுத்தம் பற்றிய மதிப்பீடு என்னவென அறியும் வாய்ப்பு எனக்கும் கிடைத்து விட்டது. இல்லையெனில் பெரும்பாலான தமிழகத்து நண்பர்களதும் புலம் பெயர் சூழுலில் யுத்தம் அறியாது  வாழும் நம் குழந்தைகளினதும்  –  கனவு மதிப்பீடுகளைப் போன்றதொரு மனநிலையிலிருந்துதான்   இந்தக் குறிப்பினை நானும் எழுதிவிட நேர்ந்திருக்கும்.

சில வருடங்களின் முன் கருணாகரன் மற்றும் நிலாந்தன் போன்றவர்களது  எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட நேர்கையில் அவை முலாம் பூசப்பட்ட எழுத்துக்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். யுத்தம் முடிந்த காலத்தின் பின்னரும் தாம் கண்டுணர்ந்த கதைகளைக் கூட வெளிப்படையாகச் சொல்ல முடியாதிருக்கும் அவர்களது  எழுத்துநடை பற்றிய மதிப்பீடே என்னை அவ்வாறு அறுதியிட வைத்தது.

 சுற்றியிருந்த ஆயுதங்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட  மனதிலிருந்து எழுதிய வார்த்தைகளையிட்டு நான் அவ்வாறு சொல்லவில்லை. யாரும்  இலகுவாகத்   தமது உயிரைத் தற்காத்துக்கொள்ளக் கூடியதாக அந்த யுத்தம் இருக்கவில்லை.  அந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்  சாத்தியம் கிடைத்த போதும் அறுதியிட்டு எழுதிவிடாத எழுத்துக்களையிட்டே அவ்வாறு சொல்ல விளைந்தது.

என்னைப் பொறுத்தளவில் கருணாகரன் நிலாந்தன் போன்றவர்களுக்கு அவர்களின் எழுத்துக்களுக்கு இருக்கும் பலம் என நான் நினைப்பது அவர்கள்  கண்டுணர்ந்த வாழ்காலம். 

மகா…. கனம் கொண்டழைக்கும் ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அது கால்வாரி விட்ட காலத்திலும் 

போராட்டம் என்பது வெறும் யுத்தங்களாக மாறிய காலங்களிலும் – அந்த யுத்தங்களின் ஒரு யுத்தம் கைமாறிப்போய் ஈழப் போராட்டம் என்ற பெருங்கதை மவுனிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்தக் காலங்களின் உள்ளும் அதன் பின் வெளியிலும்  எழுத்தாளர்களாக வாழக்கிடைத்தவர்கள்  அவர்கள். 

அந்தப் பலத்தின் அடிப்படையிலேயே நான் மத்தியூவிற்குள்ளால் சொல்லப்பட்ட கதைகளைக் காண முனைகிறேன்.  

அதற்கு முதல் இந்த மத்தியூவின்  கதைகளை முறித்துக் கீழே கீழே எழுதியிருந்தும் ஏன் நீ கவிதை எனச் சொல்லவில்லை எனக் கேட்காதீர்கள். எனக்குத் தெரிந்த கருணாகரன் நமது சூழலில் அறியப்பட்ட வழமையானதொரு கவிஞராக இருக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை. 

கரணாகரன் அவர்கள் தனது மொழியைக் கையாண்டு – வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாத சிலகதைகளை கவிதை என்ற அடையாளத்துடன்  சொல்லவரும் வேளையில் நான்  இடை மறிப்பதும் அழகல்ல. நேரடியாக விடயத்திற்குள் இறங்கு எனக் கேட்பதும் முறையல்ல.  ஏனெனில் கருணாகரன் வாழ்ந்து வரும் சூழலில் இருப்பவனல்ல நான். எனக்குக் கிடைத்த சவுகரியமான சூழுல் கிடைத்தவருமல்ல அவர். அதனால் எனது மனதிற்குள்ளும் இதனை கட்டுறுதியாகச் சொல்லிக் குறி வைத்து விடும் தைரியம் கிடைத்துவிடவில்லை.

ஆனால் மத்தியூ பற்றிச் சொல்ல வரும் நான் இன்னொரு வளமாக…

மத்தியூவை நேற்று மாலை ரொரண்டோவின் கடைத் தெரு ஒன்றில் கண்டேன்

அவனேதான்.

இளஞ்சிவப்பு பனியன் அணிந்தபடி 

அவன் விரைந்து என்னைக் கடக்கும் தருவாயில் 

அவன் உடல் மணம் எனக்குள் நுழைந்தது.

உடல் மணத்தில்  அவனை அடையாளம் கண்டது மனது. 

திரும்பி அவனைத் துரத்தியபடி அவன் இறங்கிய சுரங்க றெயிற்பாதைக்குள் ஒடினேன்.

என் கண்ணுக்குள் இருந்த சிவப்பு பனியன்தான் அவனைத் துரத்தியது.

வலைஞர் மடத்தில் மத்தியூ  அணிந்திருந்த சிவப்பு பனியனை எனது கண் மறக்கவில்லை.

அங்கே அவனது கால் என்னைத் துரத்திப் பிடித்தது போல

எனது கால் அவனைப் பிடிக்கத்   துரத்தியது.

எட்டிப்பிடித்தேன்.

ஒரு சிறு குச்சியைப் பிடுங்கித் தரையில் இறுக்கி

இதுதான் மத்தியூ

இது என்ன சொன்னாலும் நீ கேட்கவேணும். அதுதான் நியதி.

எனச் சொன்ன அந்த மத்தியூ அவனில்லை.

பயந்து நடுங்கிய இவன்

இன்னொரு முறை நன்றாகத் தேடுங்கள் என்றான்.

மத்தியூ இன்னும் கனடா வந்து சேரவில்லை.

இரண்டாவதாக 

மின்கம்பத்துக் கம்பியில் விறைந்திருந்தன புறாக்கள்.

வரிசை குழம்பாத இரட்டை அடுக்கில் எழுந்து பறந்து சிறகடித்திருந்தன.

சிரிப்பை மட்டுமல்ல அழுகையையும் கணக்கிட்டு வெளிவிட்டான் மத்தியூ

கார்த்திகைப் பூவை மட்டுமல்ல சிறுதானியங்களோடு பழஞ்சோற்றையும் பிசைந்து புறாவிற்குப் போடும்  போது மத்தியூ சிலிர்த்தான்

சிறகடித்து சோற்றப்பருக்கைக்குச் சண்டையிடும் நாட்களைக் கணக்கிட புறாவிற்கு இயலாது,

மத்தியூ சிரித்தான். கணக்கிட்டுத்தான்  சிரித்தான்.

மத்தியூவைப் பார்த்துச் சிரித்தார்கள்

கார்த்திகைப் பூவை வாங்க மறுத்தவர்கள்.

இவ்வாறு நாமறிந்த  கதைகளை  இன்னொரு மத்தியூவின் கதையாகச் சொல்லிக் கொண்டே போகமுடியும். இங்கு வடிவமல்ல  முக்கியம். வடிவங்களை யாரும் கைக் கொள்ள முடியும் கைக் கொள்ளமுடியாத வடிவங்களில் அதன் முக்கியம் கணக்கிடப்படும். இங்கே வடிவம் சிக்கலுமில்லை. கைக் கொள்ள முடியாததுமல்ல.ஆக அதற்குள் இருக்கும் கதையை முக்கியப்படுத்தியே எனது கவனம் குவிகிறது.

சனங்களைப் பலியாடுகளாக்கும் களமொன்றில்

நானொரு சாட்சியாக இன்னும் இருக்கவா? 

எனப் படுவான் கரைக் குறிப்புகள் நூலில் எழுதும் கருணாகரனின் வார்த்தைகள் மிகப் பலமானது என நான் நினைக்கிறேன்.

‘நானொரு சாட்சியாக இன்னும் இருக்கவா ?’  இந்த இன்னும் இருக்கவா எனக் கேட்பதின் அந்த ஆழ்மனக்  கேள்வியில் உள்ளாந்திருப்பது ஒரு கலைஞனுக்கான தர்க்கம் தான். சமூகத்தின் மீதான கரிசனையின் பால் எழும் ஒரு கேவல் நிலை.

அதன் படி கருணாகரனின் வார்த்தைகள் சில இடங்களில் சாட்சியமாய் இருக்க வேண்டும். ஆனால்  சில இடங்களில் சாட்சியத்தைச் சொல்ல முனைகின்ற பாங்கோடு ஒரு கலங்கலான வார்த்தைகளால் கதைகளைக் கடந்து செல்லும் போக்கினைத் தான் அவதானிக்க முடிகிறது. ஆனால் வாழ்வோடும் போரோடும் இருந்த வார்த்தைகள் இப்படி வலுவற்ற இடத்தை ஏன் பெறுகிறது? என்ற கேள்வி எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் தான் அவரது எழுத்துக்கள் முலாம் பூசப்பட்டவை என எழுத வேண்டி ஏற்பட்டது.

எங்களது  யுத்தம் குழந்தைகளைத்தின்றது. குழந்தைகளின் தாயைத் தின்றது. குழந்தைகளது அப்பனைத் தின்றது.குழந்தைகளது வாழ்வைத் தின்றது.குழந்தைகளின் குழந்தைகளையும் தின்றது. அவர்களின் குழந்தைகளையும் தின்றது.

ஆம். அது எதிர் வர இருக்கின்ற மூன்று சந்ததிகளின் வாழ்வைத் தொலைத்திருக்கிறது. இதன் ஏக்கத்திலும் சோகத்திலும் மட்டுமே எனது பார்வை இருக்கிறது.

ஆனால் எனது பார்வையை நான் வசதியாகக் கனடாவில் இருந்தபடி வெளிப்படையாக முன்வைத்துவிட முடியும். அதனால் எனக்கு இருக்கும் பாதிப்பின் அளவுதான்  யுத்தத்திற்குள்ளும் யுத்தத்திற்குப் பின்னும் வன்னியில் வாழ்ந்து வரும் கருணாகரன் போன்றதொரு மனிதனுக்கு இருந்து விடும்  என்பதல்ல. அது அளவில் மிகப் பெரிய வேறபாடு கொண்டது என்பதையும் நான் அறிந்து கொள்கிறேன்.

 கடவுள் என்பது துரோகியாயிருத்தல்  எனில் நமக்குக் கடவுள் என்பவர் அனைத்தும் அறிந்தவர். இங்கே  அனைத்தும் அறிந்தவர் நிச்சயம் துரோகிதான். சாட்சியங்களாய் இருத்தல் என்பது துரோகத்தின் அடையாளம். இந்தத் துரோகத்தின் அடையாளத்தை அவர் தன் தோளில் சுமக்கத் தொடங்கும் அடையாளமாகவே இந்தத் தலைப்புத் துளிர் காட்டுகிறது.

கடவுள் என்பது துரோகியாக இருத்தல் என்ற எழுத்துத் தொடரில் என்னை அழைத்துச் சென்ற இடங்களில் முக்கியமான இடம் இறுதி யுத்த காலம்.  அதனை நோக்கித்தான் கதையின் எனது கவனக் குவிப்பும்   இருக்கிறது.. 

ஆனால் அது இல்லை எனச் சொல்லும் சாத்தியம்  இவற்றைக் கவிதை என அழைப்பதில் இருக்கிறது. இங்கே மொழி அரசியலை ஏமாற்றும் இடமாகக்  கவிதையின் அடையாளம் இருக்கிறது என்கிறேன் நான்.

கரணாகரனின் இந்த நூலில் நான் கரிசனை கொள்ளும்  சில கவிதை வரிகளை நான் குறிப்பிடுகிறேன். 

“தனக்கான வழியெங்கே

தன்னுடைய மீட்பர் யார்

தானே வழியும் மீட்பருமாய் உள்ளேனா

நிற்குமிந்த இடம் தன்னைக் காக்குமா

இல்லையிது தன்னை விழுங்கும் பூதமா பாதாளமா”

 

“தப்பிச் செல்லுதல்

உனக்குத் துரோகம்

எனக்கு விடுதலை” என்று சொல்லி சிரித்தான் மத்தியூ

சிரித்தபடியே பறந்தான் வெளியில்

பெருவெளியில்

காற்றில்.”

 

“கொலைகளோடும் பழிகளோடும்

பழகி வாழ்ந்தவனுக்கு

கண்ணீரில் விளையாடுவதொன்றும் புதிதாயிருக்கவில்லை.

முதல்கொலைக்குச் சற்று ஆடித்தான் போனான்

பிறகு

கொலைகளும் பழிகளும்

ரத்தமும் கண்ணீரும்

மன்றாட்டமும் பரிகாசமும்

தீராத விளையாட்டாகிற்று

விடுதலையின் பேரில் எல்லாமே

வீரத் தோரணங்களாகின”

 

“கொலைகளின் நடுவில்

கொலையாளியின் முன்னே

கொல்லப்பட்டவனின் அருகில்”

 

“என்ன செய்வதென்று தெரியாத தத்தளிப்பில்

நாங்கள் நின்று கொண்டிருந்தபோது..

‘நண்பர்களே!‘சாட்சியங்களில்லாத கொலைகளுக்கு நீதியுமில்லை,

கருணையுமில்லை.

கருணையிருந்தால் கொலைகளேது’

எனத் தன்னிரு கைகளையும் நீட்டி, வரவேற்றான்.”

“எல்லாக் கொலைகளுக்கும் சாட்சியங்களிருந்தன.

ஆனால், எந்தச் சாட்சியும்

சாட்சியமளிக்கவில்லை’ என்றான்.”

“உண்மையின் வழியும் அப்படித்தானே உள்ளது

புறக்கணிப்பென்பது நிராகரித்தல்

நிராகரிப்பென்பது மண்டையில் போடுதல்

மண்டையில் போடுதல் என்பது ‘டம்’ பண்ணுதல்…

‘டம்’ பண்ணுதல் என்பது மிச்சம் மீதியின்றி

அடையாளத்தையே அழித்து

வரலாற்றைத் துடைத்து விடுதலாகும்.”

கடவுளாகவும் தேவனாகவும் கொலைகாரனாகவும் கொல்லப்படுபவனாகவும் துரோகியாகவும் தியாகியாகவும் மாறி உருமாறும் பிரதிக் காரன் சாட்சியமாக இருப்பதில் ஏற்படும் சங்கடம் பெரிதுதான். வெளிப்படையாக தன்னை உருவறுக்க முடியாத நிலையில் தோன்றும் மிகப் பெரிய குழப்பம் இது.

யுத்தம் வெளிப்படையானது யத்தத்திற்குள் நிகழ்ந்த கொலைகள் காதல்கள் காட்டிக் கொடுப்புக்கள் கழுத்தறுப்புக்கள் எல்லாமே வெளிப்படையானவையாக இருக்கும் பொழுது சாட்சியமாய் இருக்க வேண்டிய இந்த வகை குரல்கள் மட்டும் அறுபட்டுப் போய் அங்கொன்றும் இங்கொன்றுமாக உரைப்பதன் தர்க்கம் விளங்கிக் கொள்ள முடியாதது.

இதில் எழுதப்பட்ட அதிக கதைகள் ஏற்கனவே பல்வேறு வழிகளில் நமக்குச் சொல்லப்பட்ட நாம் அறிந்த கதைகளே. யுத்தத்தின் கதைகள் நமக்குப் பல்வேறு வழிகளில் வந்தடைந்தவை தான். யுத்தம் கதைகளில் வித்தையாய் இருக்கிறது. அது ஒவ்வொருவரது எழுத்துக்களிலும் வித்தையை உருவாக்கி வைத்திருக்கிறது. அனைவருக்கும் வித்தைகாட்டிய யுத்தம் தானே அது.

“ஒரு சறுக்கலில் அல்லது எதிர்பாராதவொரு திடீர்த் திருப்பத்தில் போராளி என்ற வீரன் கைதியாகி முன்னாள் போராளியாகி அனுதாபியாகி சிதறிய படித்துறையாகி சரிந்த கோபுரத்தில் நொருங்கிய கல்லானான்.”

“கட்டளைகளோ ஓயவில்லை “கொல் மேலும் கொல் எதிரியோ நண்பனோ யாராகிலும் உனக்கெதிரெனில் கொல் கொல்லத் தவறின் கொலையுனைச் சூழும் கொலையொரு வேதம் கொலையொரு செயல் கொலையொரு கலை கொலையொரு தொழில் கொலையொரு வழி கொலையொரு வாழ்க்கை.”

என ஈழ யுத்தத்தை அடையாளம் காட்டிய அவருடைய எழுத்துக்கள் அவை எனச் சொல்லி

ஈழப் போரின் சரீரங்கள்  ஒப்பனை  போட்டவையல்ல. அரங்கத்தின் முன் இருப்பவர்களுக்கு ஆட்டக்காரர்களாக இருந்த சரீர ஒப்பனையற்றவர்களை கருத்தறுப்பதற்கான கவிதைகளை மத்தியூ இன்னமும் எழுதி விடவில்லை. மத்தியூ தன்னைக் கழிவிரக்கத்தின் பின் அடையாளம் காட்டிவிடும் கவிதைகளாக ஒரு தற்காலிக வெளியை உருவாக்கியிருக்கிறது, 

இதற்கும் மேலால் நாங்கள் அதிக மத்தியூக்களின் கதைகளை கேட்டாயிற்று.

இருந்தாலும் கருணாகரனின் சாட்சியங்களை வெளிப்படையாகக் கேட்டபடியும் இந்தச் சமூகம் இன்னமும் வேண்டியபடியும் தான் காத்திருக்கிறது. 

நிலாந்தனைப் போல் காலம் கனிந்து வரும் வரை கோழி அடைகாப்பது போல் கதைகளைப் பாதுகாத்து வைத்துக் காத்திருப்பதாகக் கதை சொல்லவும்- அதற்குள்ளால் ஊடு புகுந்து  அழிந்து போன தமிழ்த் தேசியத்திற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி ஊத்திப் பாசாங்கு செய்வதையும் போல் அல்லாது தன்னால் முடியுமான இடத்தில் சொல்ல விளையும் கதைகளைக் கொண்ட கருணாகரன் முக்கியமானவர்.

 அதற்கு அவர் கவிஞராக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

அதைவிடவும் நூலுரையில் அ.ராமசாமி அவர்கள் சொல்வதுபோல் இது புதுவிதக் கவிதை அனுபவம் எனவும் நான் எண்ணவேயில்லை. 

***

 

 

-கற்சுறா 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *