பூட்டிக் கிடந்த கதவைத் திறக்கும் போது என் முதுகில் மாட்டியிருந்த பேக்கில் இருந்து கண்ணாடிப் போத்தல்கள் மோதி உரசும் சத்தம் வெளியே கேட்க கூடாது என்ற உள்ளுணர்வே அதிகம் இருந்தது, ஆனாலும் அதை தவிர்க்க இயலவில்லை. வீட்டைத் திறக்கும் போது, அருகே பக்கத்து வீட்டுக் கதவு வழமையாய் இன்றும் திறக்கவில்லை. பெங்களூருவில் குளிர் இன்றைக்கு கொஞ்சம் அதிகமாவே இருந்தது, சென்னைக்கு வேலை நிமித்தமாக நெடுநாள் செல்ல அதன் வீரியம் இன்னும் அதிகமாய் தெரிந்தது. மனைவியும் அவள் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள். உண்மையிலே அவளுக்கு அப்போது ஒன்பது மாதம் ஆரம்பித்திருந்தது. இதற்கு மேல் பிரசவத்திற்கு எப்படியும் தாய்வீடு அனுப்பவேண்டும் என்பது தெரியும். எதிர்பாரா விதமாய் சீமந்தமும் பெங்களூருவில் கழிந்ததில் யாருக்கும் விருப்பமில்லை. இதனால் நானும் தனியாய் இருக்க வேண்டிய நிர்பந்தம். ஒருவிதத்தில் என்னை விட்டு விலகி தூரமாய் இருப்பதே அவளுக்கு பெரும் தேவையாய் இருந்திருக்க வேண்டும், ஆனாலும் இப்போதைக்கு என்னுடைய இருப்பை அருகில் விரும்பியிருக்கலாம். அவள் இல்லாத இருளில் எதுவுமேயில்லை என்னைத் தவிர, முழுவதுமாய் நான் மட்டுமே.

எம்.ஆர்.பி விலையிலே வாங்கிய பெக்’ஸ் ஐஸ் என்னை சீக்கிரம் குடி குடி என்று காதில் சொன்னது. கதவைத் திறக்கும் போது எந்தவொரு வேலையும் செய்ய வேண்டியதில்லை என்பது போல வீடு வெட்கமாய் பல்லிளித்தது. விறைத்தல் காரணமாய் நடுங்கிய உடலைக் கொஞ்சம் நேராய் ஆக்கி பால்கனியின் கதவை நான் திறக்கும் போது என்னை நானே அடக்க வேண்டியதாய் ஆயிச்சு.

இந்த வீட்டின் சகல அறைகளையும் முதலில் வாட்சப் வீடியோ காலின் மூலமே கண்டிருந்தாள், அவளுக்கு மிகவும் பிடித்தது பால்கனிதான். மூன்றாம் மாடியின் எதிரே விரிந்திருக்கும் மடிவாலா ஏரியும், கொஞ்சமாய் இங்கே தஞ்சம் புகும் புறாக்களும் அதற்கான காரணம். திருமணம் முடிந்து இங்கே குடி வந்த பிறகு பால்கனியில் வலை ஒன்றை அடித்து புறாக்களை வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவள் இருக்கும் வரை இதுவெல்லாம் பிரச்சனையாய் தோணவில்லை, அவை வரும் போகும், அரிசிமணி, தானியம் கொஞ்சமாகவும், தண்ணீர் அதிகமாகவும் வைக்கிறாள். அப்போதெல்லாம் அழகாய் அவற்றைக் கொஞ்சுவாள். வாரம் ஒருமுறை அவை இடும் எச்சங்களை கழுவிவிடும் போது மட்டும் இதில் விலக்குண்டு.

இரண்டு வருடங்கள் குழந்தைப் பற்றிய எண்ணங்கள் இல்லை. நான் எனக்கான கனவுகளோடு சுற்றினேன், சில கைக்கூடின. பால்ய கால அழுத்தம் கரு உண்டாகும் முன்னே அதன் எதிர்காலத்தை என் கையாலே தூரிகைக் கொண்டு வரைய ஆரம்பித்தது. இதனாலே என்னவளின் பேச்சுக்களை மதிப்பதில் இடைஞ்சல் நிறைய. அவளோ நெல்லும் வாழையும் அதிகம் புழங்கும் அறைகளின் வாசம் அறிந்தவள். எனக்கோ அப்பா கொடுப்பதை எண்ணி எண்ணியே அம்மை அரிசியும் காயும் வாங்குவாள். தோசையோ ஆப்பமோ பண்டிகைக்கு மட்டுமே கிடைக்கும் வஸ்து. வாழையில் பாளையங்கோட்டான் மட்டுமே வீட்டின் வாசற்படியேறும்.

வீட்டில் படிப்பதில் மட்டுமே நிறையுண்டு. பொறியியல் போட்டித் தேர்வில் எடுத்த மதிப்பெண் காரணமாய் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது. திருமணம் நிச்சயமான புதிதில் அப்பா பெருமையாய் சொல்வதுண்டு “ஏலேய் மக்கா. உனக்க சோலியாக்கும் கடுக்கரை காரியக்காரன் வேலாயுதம் வீட்டு சம்மந்தம் கொண்டாந்துருக்கு. எச்சி கிளாஸ் கழுவி வழத்தாலும் பிள்ளையை பொன்னு கணக்கா ஆக்கியிருக்கேன்”. பின்னே எனது பகுத்தாயும் மூளையும், தகவல் தொழில் நுட்பத்தில் சிக்கல் தீராயும் திறமையும் பணத்தை அள்ளிக் கொடுக்கும் வேலைகளை வாங்கித் தந்தது. வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாய் அவளையும் அழைத்துச் சென்றேன். ரம்மியமான சூழல்களில் ஊடலின் போது எவ்வளவு வற்புறுத்தியும் குழந்தைக்கான விதையை இடுவதில் விருப்பமின்றி தட்டிக் கழித்தேன். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தன. பெரிதாக சொந்த ஊருக்கும் செல்வதில்லை. ஓரிரு முறை ஊருக்கு சென்று திரும்புகையில் அவளின் விழிகள் நீரைச் சுமந்து இருப்பதை கண்டிருக்கிறேன், அவளின் வீட்டு நினைவுகள் அழுகைக்கு காரணம் என எண்ணியே அதைப் பற்றி எவ்வித பேச்சையும் எடுப்பதில்லை. ஒருநாள் அம்மா, அலைபேசியில் அழைத்தவள் தயங்கி தயங்கிப் பேசினாள், அப்பா உடனே அலைபேசியை வாங்கி வித்தியாசமாய் கொஞ்சம் நடுக்கதோடு பேசினார் “லேய் மக்களே, எதுவும் பிரச்சனை இருந்துச்சுனா ஆசுபிட்டல் போலாமே டே. இப்போ உள்ள காலத்துல இதுக்கு மருந்து, டிரீட்மென்ட் எல்லாமே இருக்கே மக்கா. நீ பயப்புடுகியோ. நானும் அம்மையும் வரட்டுமா. பெங்களூருல இல்லாத ஆஸ்பிட்டலா டே”, “அப்பா, எதுக்கு டிரீட்மென்ட். எனக்கு ஒன்னும் புரியல. ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க”, “என்னத்த சொல்ல. நீ படிச்சவன் தான். கல்யாணம் ஆயி வருஷம் இரண்டு ஆச்சு. உன்கூட கட்டினவன் பிள்ளைகளுக்குலாம் இப்போ வயசு ஒன்னு ஆச்சு. என்ன மக்கா உத்தேசம். நாங்களும் எதுவும் இன்னைக்கு வர கேக்கல. பொட்டப் பிள்ளையை தானே தப்பா சொல்வாங்க. உன் பொண்டாட்டி எங்களுக்கு மக மாறித்தான் கேட்டியா மக்கா. அவள்ட அம்மை பேசியிருக்கா. அவளும் பாவம் தானே டே. உன்னைய எப்படி குறை சொல்லுவா. ஆனா நீதான் தள்ளிட்டு போறியோன்னு எனக்கு சந்தேகம். சொல்லு மக்களே அப்பாட்ட சொல்லு. என்ன பிரச்சனை.”

“அய்யோ சாமி பிரச்சனை ஒன்னும் இல்லப்பா. நா ஆரோக்கியமா, நல்ல ஆம்பளையாதான் இருக்கேன் பா. பிரச்சனை அது இல்லப்பா. என்னோட குழந்தை பிறக்கும் போது அதுக்கான எல்லாத்தையும் நான் ரெடி பண்ணி வச்சு இருக்கணும். பைனான்சியலா பெருசா, அதுக்கான எல்லாமே தயாரா இருக்கணும். என்னோட தனிப்பட்ட சந்தோஷமும் அவளோட முழுமை அடையனும். குழந்தைன்னு ஒன்னு வந்தா அவளோட டைம் எனக்குன்னு கிடைக்கிறது குறையும். இன்னும் ஒரு வருஷம் டைம் கொடுங்கப்பா”, “அப்பா அப்படிலாம் நினச்சா இன்னைக்கு வர நீ பொறந்து இருக்கமாட்ட. புத்தி வேணும். ஆனா இவ்வளவு வேணாடே.. கைல அஞ்சு பைசா இருந்தா ஒன்னையும் அக்காவையும் பெத்தோம். நல்ல சம்பாதிக்க ஆரம்பிச்சா கூடவே பயமும் வருகு பாத்தியா..” அப்பா மீண்டும் தொடராமல் விட்டார். நான் அமைதியாகவும் “ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல..” அம்மா இன்னும் நான்கு வரிகள் படித்துவிட்டு “உம் பிள்ளைக்கும் பாட்டு பாடி தொட்டில ஆட்டி விட்டுட்டு தான் நா கண்ண மூடனும் மக்கா. எதுனாலும் யோசிச்சு செய். நீ படிச்சவன்.. நா என்னத்த சொல்ல. வைக்கேன் மக்கா. ஒழுங்கா சாப்புடு. என்னத்த திங்கயோ” அழைப்பு துண்டிக்கவும் அதே பாடல்வரிகள் காதிலே கேட்க, அம்மையின் மடியில் படுத்து உறங்கிய நாட்கள் நினைவில் அசைந்தாடியது.

அவர்களிடம் பேசியப் பிறகு நெடிய தனிமையே எங்களிடையே தொடர்ந்தது. அதீத அமைதியும் ஆபத்துதான் போல “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, நானும் ஐடி முடிச்சவ, படிச்சு முடிச்சவுடனே உங்கள கட்டி வச்சுட்டாங்க. என்னைய வெளியே வேலைக்கும் விடல, கேட்டப்போ இதுல ஸ்ட்ரெஸ் அதிகம்னு சொன்னீங்க. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் ஸ்ட்ரெஸ்ல என்ன வித்தியாசமோ!. உங்களுக்கு தோணிச்சுனா நைட் நா வேணும். ஆனா குழந்தை வேண்டாம். கல்யாணம் கழிஞ்சு ஆடி தங்கப்போனப்பையே உங்க அம்மா ஜாடை மாடையா பேச ஆரம்பிச்சாச்சு. உங்களுக்கு தெரியாம எத்தனை நாள் அமைதியா நா மட்டும் அடக்கிட்டு இருக்க முடியும். எல்லாம் முடிஞ்சு வரப்ப உங்களுக்கு அது மட்டும் வேண்டாம். அதான் இன்னைக்கு பச்சையா நானே எல்லாம் சொல்லிட்டேன். உங்க ஆசைக்கு, நா எதுக்கும் ஆகாதாவன்னு பேரு வாங்கணுமோ!. எங்க வீட்டுல எல்லாருமே முத மாசமே விஷேசத்த வெளியே சந்தோசமா சொன்னாங்க.. நா எப்படி கேப்பேன். உங்களுக்கு ஏதாச்சும் குறையா. சொல்லுங்க..” அத்தனையும் பேசிவிட்டு அவள் விம்மி அழ ஆரம்பிக்கவும் நான் அமைதியாய் வெளியே சென்றுவிட்டேன். அன்றைக்கு நான் குடித்துவிட்டு வந்ததும் அவளுக்கு தெரியாது, அவ்வளவு ஆத்திரம் என் மேல். ஆனாலும் வழக்கம் போல தோசை ஹாட்பாக்ஸில் இருந்தது, கூடவே பிடித்தமான தக்காளி சட்னி. ராத்திரி உறக்கம் வரவில்லை.

அடுத்த நாள் வேலை முடிந்ததும் இரவு உணவு சமைக்க வேண்டாம் என சொல்லி, கேப் புக் செய்து கோரமங்களா ட்ரபுல்ஸ் உணவகம் வரச் சொல்லிவிட்டேன். எவ்வித ஒப்பனையும் இல்லாமல், வரவேண்டுமே என்பது போல வந்திருந்தாள். மை இடுவதில் மட்டும் பிரச்சனையில்லை போல, முதல் முறை அவளை பார்க்கும் போது புருவத்தின் மேல் இருந்த மருவை மூடிய மெல்லிய மைப் படலத்திற்காகவே உடனே சரி சொல்லிவிட்டேன். அதே அளவில் சரியாய் இன்றைக்கும் அந்த மெல்லிய படலம் மூடிய மரு அழகாய் மின்னியது. கையில் அலைபேசியை எடுக்க கூடாது என ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன், ஆகையால் பார்வை அவளை நோக்கியே இருந்தது. அசௌகரியமாய் உணர்ந்தவள் “எதுக்கு ஐஸ் வண்டிலாம்..இதே பொழப்பா போச்சு. ஒரு சண்டை கிண்டை வந்தா அடுத்த நாளே நல்லவன் வேஷம்” பேசிமுடிக்கவும் எப்போதும் போல அவளை நான் குழைந்துப் பார்க்கவும், முடியாமல் சிரித்து விட்டாள்.

அருமையான பெங்களூரு காலநிலை, உணவகத்தில் இருந்து திரும்பவும் மெல்லிய மழைச் சாரல். காரில் ஏறியவுடன் “இளமை என்னும் பூங்காற்று” பாடலை ஒலிக்க விட்டேன், குறிப்பாய் “தன்னை மறந்து மண்ணில் விழுந்து” வரிகளை நானும் மெல்லிதான குரலில் பாட, அவள் என்னையே முறைத்துப் பார்த்தாள். வீட்டிற்கு சென்றதும் நான் மேல் கழுவி, மீண்டும் பல் தேய்த்து வரவும், அறிகுறி புரிந்தவள் “எப்பா, நல்ல தலைவலிக்கு. நினச்ச நேரத்துக்கு இந்த விக்ஸ் கைல கிடைக்காது” என்ற படியே வெறுப்பேற்றினாள். பல ஐஸ் வண்டிகள் தேவைப்பட்டன. நிம்மதியான ஒரு இரவு, அப்படித்தான் அது கழிந்தது.

கையில் இருக்கும் அலைபேசியின் பிரௌசரில் கருத்தரிப்பு பற்றிய டேப்களே அதிகம் திறக்கப்பட்டு மூடப்படாமல் இருந்தன. அவளுக்கான வேலைகள் குறைக்கப்பட்டன. சத்தான உணவுகளை மட்டுமே கண்கள் தேடின. வழக்கமான மாதவிலக்கு நாள் தள்ளிப்போகவும் பதட்டம் கூடியது. அத்தையிடம் மட்டுமே முதலில் சொன்னோம். மருத்துவரை பார்க்க ஒரு நாளை அத்தை தான் முடிவு செய்தாள். மருத்துவமனை விட்டு வெளியே வருவது வரையிலும் உடல் எல்லாம் வியர்த்து, பதட்டத்தின் உச்சத்திற்கு சென்றேன். வீட்டிற்கு வந்ததும் “உங்க அம்மா, அப்பா சொன்னாதான் காரியம் நடக்கும்னா என்னைக்கோ சொல்லியிருப்பேன்” சொல்லிவிட்டு நளியாய் சிரிக்கவும், மண்டையில் ஏறிய கோபத்தை மறைக்க எவ்வளவு முயற்சித்தும் தோற்றுப் போனேன்.

பால்கனி முழுக்க புறாக்களின் எச்சங்கள், மூலையில் கூடு ஒன்றில் இரண்டு சிறிய வெண்ணிற முட்டைகள். நான் கண்ணாடிக் கதவின் அருகே செல்லவும் புறாக்கள் பறந்து விட்டன. ஒன்று மட்டும் கால் கிண்டி கிண்டி கூட்டையே சுற்றி வந்தது. உடனே புத்தாவை அழைத்தேன். அவன் ஒரு நேபாளி, சாதாரணமாய் ஐந்து மொழி பேசுவான். எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் சர்வமும் அவன்தான். வந்தவன் கூட்டையே வெறித்தான் “சார், நெஸ்ட்ல எக் இருக்கு, வெளியே போட்டா பாவம். டூ வீக்ஸ் விடுங்க. சிஸ்டர் இல்லைல. அது பறக்கவும் நானே கிளீன் பண்ணி தாரேன். பாவம் சார்” கண்கள் புன்னகையிக்க கோரிக்கை வைத்தான். அன்றைக்கு இருந்த அசதியில் நானும் சரியென்றேன்.

காலை அவள் அழைக்கவும் விஷயத்தைச் சொன்னேன், ஆச்சர்யமாய் கேட்டாள். சிறிது நேரத்தில் அம்மை கூப்பிட்டாள் “மக்கா, வீட்டுல புறா கூடு கட்டியிருக்கோ. வீட்டுல பிள்ள உண்டானவ இருக்கா பாத்தியா. முன்னாடிலாம் குளவி கூடு கட்டும். பாத்தியா அங்க புறா கூடு கட்டியிருக்கு. ஒன்னும் செஞ்சு தொலைச்சிராத சரியா. அதுவா போய்டும்”. வேலை முடிந்து திரும்பும் ஒவ்வொரு இரவும் பால்கனியில் எச்சம் கூடிக் கொண்டேயிருந்தது. அதன் நாற்றம் பால்கனியின் கதவைத் திறக்கவே தடைப் போட்டது. பொறுக்காமல் முட்டைகளை எடுத்து வெளியே போடவே மனம் சொல்லியது. ஆனால் அருகே நான் செல்லவும், கால் கிண்டிய புறா பறக்க இயலாமல் சிறகை அடித்துக் கொண்டே கூட்டை சுற்றி சுற்றி வந்தது. என்னை அருகே செல்லாதே என முயற்சிப்பது போல அதன் செய்கை இருந்தது. இரண்டு நாட்களாய் இதையே முயற்சித்தேன், ஒரு போர்க் களம் போல என் கால்கள் கூட்டை நோக்கி நகரும் போதே, சாதுர்யமாய் கால் கிண்டிய புறா இறக்கைகளை விரித்து படபடவென ஆட்டி அதன் எதிர்ப்பை காட்டும், அலகால் தரையில் ஓங்கி கொத்தும். நான் விலகிவிடுவேன்.

அவளின் முதல் கருத்தரிப்பு ஐந்து மாதங்களில் முடிவுக்கு வந்தது. குழந்தையின் வளர்ச்சி சரியில்லையென்று ஸ்கேனைப் பார்த்து மருத்துவர் கூறிவிட்டார். அவளின் அழுகையின் அளவு நாளுக்கு நாள் கூடியது. மருத்துவமனையில் முழுதாய் வளர்ச்சியடையாத கருவை கையில் தாங்கும் போது, ஒரு பொம்மையைப் போல அவளின் ஜாடையிலே கை அளவிற்கு அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. பீறிட்டு அழவே ஏங்கினேன், ஆனாலும் உடலும் மனமும் வழுவிழந்த அவளின் முன்னே உடைந்து வெற்றுக் காசாய் நிற்கும் என்னை அப்படிக் காட்டிக் கொள்ளத் தோணவில்லை. அவளையும் இயல்பாக்க மீண்டும் ஆறு மாதம் ஆனது. அதற்கு பிறகு ஏப்ரல் மாதம் மருத்துவர் இரண்டாம் முறையாய் பிரசவத்திற்கு குறித்த நாள் சொல்லிய வரையிலும் நிம்மதியற்ற இரவுகளே கடந்து போயின. ஏனோ நடந்தவை எல்லாம் காலம் தாழ்த்தியதால் என் பிழையென ஆயிச்சு.

இரண்டாம் முறை அவளின் கருப்பையை பரிசோதிக்கும் போது அவளின் கருப்பையின் வடிவு இதயம் போன்ற வடிவில் இருக்கிறது என மருத்துவர் சொன்னதும் பிழைகளின் பங்கை அவளுக்கும் சரிபாதி கொடுக்கவே துடித்தேன். அதுவே என்னை தண்டித்துக் கொண்டிருக்கும், நான் ஏற்றிருக்கும் குற்றநாற்காலியில் எனக்கான இருப்பிடத்தை குறைக்கும். ஆனாலும் ஏற்கனவே அவளுக்குள் குமைந்துப் படியிருக்கும் உள்ளடுக்குகள் முகத்தின் ரேகையாக ஓட அதை கைவிட்டேன். கூடவே மருத்துவரின் ஆலோசனை கருவின் மேலுள்ள அக்கறையை பலமடங்கு பெருக்கியது. ஒரு தேர்வைப் போல எந்நேரமும் பதற்றமான மனநிலை. சூன்யமான நாட்கள் அவை, எண்ணங்கள் கட்டுப்பாடுன்றி அவளின் அடிவயிற்றின் அறை ஒன்றை சூழ்ந்தே சுழன்றன. பால்கனியில் கால் கிண்டிய புறாவின் நடை, அது கூட்டிலுள்ள முட்டைகளையே சுற்றிவரும் தொனி, என்னையே கொஞ்சம் கொஞ்சமாய் நியாபகப் படுத்தியது.

எனது கண்கள் எப்போதும் அவளின் செயல்படாத இருப்பையே வேண்டின. ஒரு பொருளை போல அசைவற்று கட்டிலில் இருக்க வேண்டும். முறை வைத்து கவனித்துக் கொள்ள அம்மையும், அத்தையும் மாறி மாறி வரவேண்டும். முதல் முறைப் போல் அல்ல, கோபத்தை அனலைப் போல என் மேல் கக்கினாள். வீட்டில் எல்லாமே என் கட்டுப்பாட்டில் இருந்தது, அதுவே அவளுக்கு அசௌகரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதனைப் பெரும் பொருட்டாக நான் கருதவில்லை. அதுவே சென்னைக்கு வேலை விஷயமாக நான் செல்ல வேண்டும் எனத் தெரிந்தவுடனே அதீத மகிழ்ச்சியாய் உணர்ந்திருப்பாள், உடனே ஊருக்கு செல்ல வேண்டும் என்றாள். கார் புக் செய்து டிரைவரிடம் அறுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்ல சொன்னது மட்டுமில்லாமல், ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அழைத்து கேட்டும் தெரிந்துக் கொண்டேன்.

அவள் என்னை விட்டு வெகுதூரம் செல்லவும் எதுவுமே கட்டாயமாய் செய்ய வேண்டியதில்லை போன்ற தோற்றம். இருக்கும் வரை அவளின் நிழல் அசையும் நொடி கூட என்னைப் பதறவைத்தது . மீண்டும் கால் கிண்டிய புறா என்னுள் மண்டிக்கிடந்த பயத்தைக் கிளற ஆரம்பித்தது. கையில் மதுக் கோப்பையுடன் வேலை முடிந்து வீடு திரும்பிய இரவுகளில் பால்கனி கண்ணாடி முன் அமர்ந்திருப்பேன். கால் கிண்டிய புறா கூட்டின் மேல் அமர்ந்திருக்கும். அதுவும் அப்போதெல்லாம் என்னையே வெறிக்கும், மற்றொரு நீலப் புறாதான் கூட்டில் பெரும்பாலும் அடைக்காக்கும். கால் கிண்டிய புறா மீதி நேரம் மட்டுமே கூட்டில் அடைக்காக்கும், மற்ற நேரம் கூட்டின் அருகிலேயே இருக்கும். அன்றைய இரவு போதையின் உச்சத்தில் பால்கனியின் அருகிலே உறங்கிவிட்டேன்.

சுற்றிலும் நீலப் புறாக்கள் சூழ அவள் மட்டுமே அந்த இருளில் தனித்து இருந்தாள். நான் அவளை நோக்கியபடி கையில் ஏந்திய இரண்டு முட்டைகளோடு ஓடிக் கொண்டு சுற்றி வந்தேன். எனது ஒரு காலை கனமற்று உணர்ந்தேன், அது இழுத்த படியே என்னோடு வந்தது. சுற்றியிருந்த புறாக்கள் கையில் இருக்கும் முட்டையை பறிக்க எத்தனித்தது, என் உடலெங்கும் வெறி கொண்டு அலகால் கொத்தியது. இருளில் அவள் மறையும் போது பொம்மையைப் போல இரத்தம் தோய்ந்த சிவந்த உடல் எனை நோக்கி விரல் அசைத்தது, ஓவென அவள் கத்தி சிரிக்கும் ஓசை கேட்க சுருண்டு விழுந்த படி அழ ஆரம்பித்தேன்.

போதை தெளிந்து எந்திரிக்க இவ்வூரின் அதிகாலை குளிரே போதுமானது. முந்திய இரவு கண்ட கனவு, அதன் காட்சிகள் நிஜத்தைப் போல கூடவே பயணித்தன. இன்னும் ஒரு வார கால இடைவெளி மட்டும் இருந்தது. இரண்டு நாளைக்கு ஒருமுறை அவள் மருத்துவமனை சென்றாள். “எப்பா வேணும்னா இருக்கும் மக்கா. நீ கிளம்பி வாயாம்ல. கிட்ட நீ இருக்க பலம் நாங்க இருந்தா அவளுக்கு வருமா?” எப்போதும் ஒரே சங்கதி அம்மாவின் பேச்சில் இருந்தது. அலுவலகப் பணி ஒருபக்கம் அதிகரிக்க, எனக்குள் இருண்டு திரண்ட எண்ணம் அதன்பங்கிற்கு ஊருக்கு செல்வதை தவிர்க்க செய்தது. அவளுடன் உரையாடும் நேரமும் என் வருகைப் பற்றிய கேள்விகளே அதிகமாய் இருக்கும். “இன்னும் ரெண்டு நாளுல இருக்கும்.. வயறு கீழே இறங்கியாக்கும் இருக்கு.. இப்போவாச்சும் கிளம்பி வாயாம்ல” அம்மை இதையே இரண்டு நாளாக பாடிக் கொண்டிருந்தாள்.

இரவுகளில் பால்கனியின் அருகிலே மெத்தை விரித்து உறங்குவது வழக்கமானது. அன்றைக்கு விடியும் முன்னே மொபைல் நெடுநேரம் சிணுங்கியது. அது ஒரு கனவு போல எனக்குள்ளே ஒலித்துக் கொண்டு இருந்தது. காலையில் பறவையின் கீச்சிடல் கேட்கவே விழித்தேன். மொபைலை எடுக்க, அப்பா, மாமா என வரிசையாக தவறவிட்ட அழைப்புகள். அப்பாவிற்கு அழைத்தேன் “என்னல நைட் புடுங்கிட்டு இருந்தா. பிள்ளைக்கு வலி வந்து ராத்திரி ஆசுவத்திரி கூட்டிட்டு வந்துட்டோம். அவ உன்கிட்ட பேசணும்னு சொல்லி ஒரே அழுகை. பிள்ள பெக்க வலி என்ன தெரியுமா? நீ கூட இருக்காண்டாமா? பெரிய வேலை மண்ணாங்கட்டி. பிரசவ வார்டுல இருக்கா.. கிளம்பி வால எப்படியாச்சும்” சொல்லிவிட்டு அவரே அழைப்பைத் துண்டித்தார்.தொண்டையில் உருவான கனம் உடலெங்கும் இறங்கியது. உடல் வியர்க்க கை கால்கள் பறத்தம் எடுக்க ஆரம்பித்தன. அலமாரியில் இருந்த சில உடைகளை எடுத்து பையில் திணித்தேன். கண்கள் இருள ஆரம்பிக்க, பெரும்வலி உடலெங்கும் படர்ந்தது. மறுபடியும் மொபைல் சிணுங்க, கை தவறி மொபைல் கீழே விழுந்தது. விழியின் ஒளி குறைய, காலின் வழுவிழந்து கீழே அமர்ந்தேன். நீர்ப் பெருக்கேடுத்து கன்னம் வழியே சிந்த, காதில் புதிய பறவையின் கீச்சிடல்கள் கேட்டன. வெளியே பால்கனியைப் பார்த்தேன், முட்டை உடைந்து வெளிவந்த இரண்டு சிவந்த குஞ்சுகள் கத்தியப்படி இருந்தன. அருகே நீலப் புறா அதன் சிறகால் அவற்றை அணைத்தப் படி இருக்க, தடுப்பில் நின்றிருந்த கால் கிண்டிய புறா சிறகுகள் படபடக்க பறக்க முயற்சித்தது. என்னை சுற்றிலும் இருள் விலக “ஆயர் பாடி மாளிகையில்” அம்மாவின் மெல்லிய குரல் காதில் கேட்டது, கண்கள் அழகான குஞ்சுகளையே மொய்த்தன, கால் கிண்டிய புறா தடுப்பில் இல்லை.

***

-வைரவன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *