உயிரைக் கையில் ஏந்தியவாறு மண்டியிட்டிருந்தான் அந்தோணியோ. அவன் உடல்
நடுங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் அளவிடமுடியாத உயரத்திலும் அகலத்திலும்
எழுந்து நின்றது அந்த சுவர். அவன் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்த சுவரைப்
பார்த்தவாறு இருந்தனர். அந்த சுவருக்கு ஒரு கதவும் இருந்தது. அது எப்போது
திறக்குமென்றுதான் அவர்கள் காத்திருந்தனர். அந்தோணியோ வருடக் கணக்கில் இங்கு
காத்திருக்கின்றான். சுவருக்கு மறுபக்கம் சொர்க்க பூமி இருக்கின்றதென்று அந்தோணியோவும்
பல ஏழை மக்களும், யுத்தநாடுகளின் பல அப்பாவி மக்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.
அந்தோனியோவைப்பொறுத்தவரையில் அவன் தாங்கிப் பிடித்திருக்கும் அவன் நேசிக்கும்
உயிரைப் பிழைக்க வைத்தால் மட்டுமே இப்போது போதுமானது. அதுவே அவனுக்குச்
சொர்க்கம்தான். அவனுக்கென்றே பரிசளிக்கப்பட்டது ஒரு வாழ்வு. அந்த வாழ்வை அவன் அழகு
குலையாமல் வாழ ஆசைப்பட்டான். அது ஒன்றும் பேராசையில்லையே?
அந்தச் சுவரின் கதவு இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அதில் தொங்கும் பென்னாம் பெரிய பூட்டு
பொன்னாலானது. திறப்பை பல நாட்டு அதிகாரிகள் பராமரித்து வந்தார்கள். எப்பவாவது ஒரு
முறைதான் அந்தக் கதவு திறபடும். அவ்வேளையில் அங்கே காத்திருந்த பல்லாயிரக்கணக்கான
மக்கள் அடிபட்டு, நெரிபட்டு உள்நுளைய எத்தணித்தார்கள். திடீரெனக் கதவு மூடப்படும்போது
அதற்குள் நசிபட்டும் பலர் இறந்துபோனார்கள்.
காத்திருந்து காத்திருந்து காலத்தை வீணாக்கி வெறுப்படைந்த சிலர் அந்தச் சுவரில் ஏறி அதன்
உச்சி தெரியாது வழுக்கி விழுந்து அங்கங்கள் சிதைப்பட்டோ அல்லது மரணித்தோ போனார்கள்.
அந்தோனியோ அப்படியொரு வழியை இறுதியாகத் தேர்ந்தெடுக்கலாமென்று
எண்ணியிருந்தவேளை அங்கு மீண்டும் ஒரு உயிர் சுவரிலிருந்து உதிர்ந்து விழுந்து சிதறியதை
அவன் அருகில் இருந்தே கண்டான். அது அவனது நெருங்கிய நண்பன். அலறியடித்து ஓடினான்
நண்பனை நோக்கி. அந்த வேளையில் கதவு திறபட்டது. இயக்கமற்று நண்பனின் பிணத்தருகில்
வீழ்ந்தான்.
அந்தோனியோ விழித்துக்கொண்டான்!
***
அந்தோணியோவின் உடலின் இரத்த நாளங்கள் அனைத்தும் அவன் கடந்து வந்த நாட்டு
எல்லைகளைப் போன்று இறுகிப்போய் இருந்தன. அந்த நாளங்களினுள் ஆயிரம் கதைகள்
வாய்விட்டு அழமுடியாமல் முனகிக்கொண்டிருந்தன. வைக்கோலுக்குள் அசையமுடியாமல்
கிடந்த அந்தோணியோ தனது மனத்தை மெதுவாக அசைத்து தன் உயிரைத் தொட்டுப்
பார்த்தான். உயிர்! அவள் இறுதியாகக்கொடுத்த முத்தத்தால் இயங்கிக்கொண்டிருந்தது.
அவன் அசைந்தால் எந்த வேளையிலும் எல்லைக் கரங்கள் அவனை பற்றி இழுத்துச் சிறைக்குள்
அடைக்கலாம். மீண்டும் அவன் வந்த வழி திருப்பி துரத்திவிடலாம். திசையறியா ஒரு அகதியாக பசி உயிருக்குத் தீத்தி வாழ வேண்டியிருக்கும். அந்த உயிரும் அவளுடைய முத்தமும் அனாதையாகி போலந்து காட்டுக்குள் கிடக்க நேரிடலாம்.
வேண்டாம்!
அவன் தன்னை இன்னும் இறுக்கமாக்கி அசைவின்மையை ஒத்துழைத்தான். அவன் நெஞ்சுக்கு
அருகே அவனது காதலி இறுதியாக எழுதிய கடிதம் தன்னை மடக்கி வைத்துக்கொண்டு
உறங்கிக்கொண்டிருந்தது.
அவன் தாய் மண்ணைப் பிரிந்து எழுபத்தி மூன்று திங்கள் கழிந்திருந்தன. மாதங்களாகி…
வருடங்களாகி… இன்னும் எல்லைகளுக்குள் அலைந்துதிரிந்தனர் சொர்க்க பூமிகளைக்
கண்டடையாத பலர்.
அந்தோணியோ ‘ஏஜென்ரால்’ கைவிடப்பட்டு ஒட்டிய குடலுக்குப் பாண்துண்டு தேடி
மொஸ்கோவின் தெருக்களில் திரிந்த ஒரு கணத்தில்தான் ஒரு மனிதாபிமானமுடைய கொம்யூனிச
அம்மாவைக் கண்டான். ஒட்டிய குடல்களை விரியச் செய்து நீர் வார்த்தவரும், சில்லறைகள்
கொடுத்தவரும் அவரே.
அங்கே அவன் காதலியின் மடல் நேசம் மணக்க மணக்க வந்திறங்கியது. எல்லைகளைக் கடந்து
எப்படியாவது அந்த சொர்க்கபூமியை அடைந்துவிடவேண்டுமென உத்வேகத்துடன் அவன் புதிய
ஏஜென்ரைப் பிடித்தான். ஊரில் அக்காளின் நகைகளும், அம்மாவின் சீதண வீடும் பறிபோனது.
அவன் இன்னொரு எல்லை கடந்தான்.
அவன் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுக்கொட்டிலில் மாடுகள் அமைதியின்றி எழுந்து
நடமாடிக்கொண்டிருந்தன. அங்கே ஒரு சாக்கில் மூன்று கொடுத்துவைக்காத ஈழத்துத் தமிழர்கள்
உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் வயிறுகள் ஆகாரமற்று வெறுமைக்குள் குமிழிகளை
உற்பத்திசெய்துகொண்டும் அட்டகாசப்படுத்திக்கொண்டுமிருந்ததை அந்தோணியோ வயிற்று
குமிழிகள் கேட்டுக்கொண்டிருந்தன. அடுத்த தொழுவத்தில் ஏழுபேர். அந்த ஏஜென்ற் தொலைவில்
ஒரு விடுதியில் தங்கியிருந்தான்.
வயிற்றுப் பசியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிந்தது. இன்னும் ஒரே ஒரு எல்லை. அதைக்
கடந்துவிட்டால் நிரந்தரமாக அவர்கள் உயிர்கள் வாழ அந்த சொர்க்க பூமி இடம்கொடுக்துவிடும்.
நேற்றுச் சூரியன் தன்னைக் கருகிக்கொண்ட பொழுதினில் ஏஜென்ற் வந்தான். ஹிந்தி மொழியில் பேசினான். இரண்டொரு ஆங்கிலச் சொற்கள் கலந்து.
எல்லோரும் ஓடர் நதியைநோக்கி அவனுக்கு பின்னே நடந்தனர். அந்த நதி சலனமுற்றிருந்தது.
தாறுமாறாக ஓடியது. சைகை மொழி பேசி அவர்களை கரையிலேயே நிறுத்தித் தான் ஆற்றுக்குள்
இறங்கினான். மறு கரை வரை சென்று மீண்டான். அவன் இடுப்புவரையில்
நனைத்துவிட்டிருந்தது ஆறு. அதன் சலனம் அடங்கும்வரையில்.….
இவ்வாறுதான் நாளை அவர்கள் எல்லோரும் இந்த நதியைக் கடக்கவேண்டும். இன்று ஒரு
ஒத்திகை!
ஏன் இன்றே தாம் நதியைக் கடக்க முடியாதென்கின்ற கேள்வி அனைவருக்குள்ளும்
ஊர்ந்துகொண்டிருந்தது.
அவன் சுட்டுக்காட்டினான்.
“பொலீஸ்! பொஸீஸ்!” என்றான்.
முன்னொருநாள் அந்தோணியோ அவனருகில் நடந்துவரும் சந்தர்ப்பம் கிடைத்தபோது
“சுக்கிரியா! சுக்கிரியா!” என்றான்.
ஏஜென்ரின் சிடுசிடுக்கும் முகம் மலர்ந்தது. தனது சொந்த மொழியில் ஒருவர் நன்றி சொல்வது
யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் அங்கு ஒரு சுக்கிரியா பெயருடன் ஒரு பெண் இருந்தாள்.
அவள் தன்னைத்தான் அவன் அழைக்கிறானெற்றெண்ணி ஓடிவந்தாள். ஏமாற்றமடைந்தாள்.
***
சுக்கிரியாவை அந்தோணியோ முன்னர் எல்லைகள் கடந்து வரும் வழியில் சந்தித்தான். அவள்
தனது சொந்த நாட்டை விட்டுக் கிளம்பி ஏழு மாதங்கள் என்றாள். அவளுடன் அன்று மூன்று
மாதங்கள் நிறைவுற்ற அவள் குழந்தையையும் எடுத்துவந்திருந்தாள். இப்போது குழந்தை
வளர்ந்திருந்தது.
பனிபொழியும் நாடொன்றின் எல்லை கடக்கும் முன் அவர்கள் பாத அணிகளைக் களற்றி
எறியவேண்டும். இல்லையென்றால் கடக்கவே முடியாது. சத்தம் காட்டிக்கொடுக்கும் என்ற
உத்தரவில் அனைவரும் களற்றி எறிந்துவிட்டு பனிக்குள் வெறும் பாதங்கள் புதைத்து
ஓடிவந்தார்கள். சுக்கிரியா மகளைத் தூக்கிக்கொண்டு நடந்தாள். அவளால் விரைவாக
நடக்கமுடியவில்லை. அந்தோணியோ அவள் மகளைத் தூக்கினான். அவனாலும் நீண்ட நேரம்
விரைவாக நடக்கமுடியவில்லை. இருவரையும் ஏஜென்ற் ஏசினான். சுக்கிரியாவின் மகள் பசியில்
அழுது சோர்ந்துபோனள். பின் அவள் மூச்சு அடங்கிப்போனது. மகளைப் பனியில் கிடத்தி
அழுதாள். அவளும் மயங்கி விழும் தருணத்தில் அந்தோணியோ அவளை இழுத்துக்கொண்டு
ஓடினான். சிறுமியின் முகத்தைக்கூட அவனால் பார்க்க முடியவில்லை. குழந்தையை பனிமூடி
மறைத்துக்கொண்டது.
உக்கிரெயின் நாட்டுக்குள் வந்தடைந்தபோது பலருடைய பாதங்கள் அவர்கள் வயிற்றுக்
குமிழிகளைவிட பெரிய கொப்பளங்களைப் போட்டிருந்தன. தாங்கொணா வலிகளுடன்
மருத்துவம் இன்றி இருந்தார்கள் பல நாட்கள் ஒரு அறைக்குள் பதின்மூன்று பேர்கள்.
சுக்கிரியா அங்கிருந்து மறைக்கப்பட்டிருந்தாள். அத்தனை ஆண்களுடனும் அவள் தங்குவது
அவளுக்கு ஏற்புடையதல்லவென்று ஏஜென்ற் தனதிடம் எடுத்துச்சென்றான். மகளின் இறப்பின்
வலியிலிரந்து மீளமுடியாதவள் அழுது அழுது நொந்துபோன நிலையில் என்ன
செய்யவதென்றறியாது அவனுடன் கூடச் சென்றாள்.
ஏஜென்ரைப்பொறுத்தவரையில் சுக்கிரியா மார்புகளும் யோனியும் கொண்ட ஒரு பெண்ணாக
மட்டும்தான் தெரிந்தாள். உடன்பட்டால் உடனடியாக அனுப்புவதாகவும் மறுத்தால் அவளுடைய
மகளின் நிலைதானென்றும் வெருட்டினான். அவள் மார்புகள் கசக்கப்பட்டன.
மீண்டும் அந்த அறைக்கு கொண்டுவரப்பட்டாள். அழுகை ஆறாக ஓடிக்கொண்டிருக்க
அர்த்தங்களை அந்தோணியோ உணர்ந்தான். அவனிடம் அவள் தோள்ப் பையைக் கொடுத்தாள்.
அதனுள் சிறுமியின் உடுப்புகள்!.
சுக்கிரியா சொர்க்கம் நோக்கிப் புறப்பட்டாள்.
***
கொட்டிலுக்குள் படுத்திருந்த அந்தோணியோவின் மனம் கசங்கிப் பிழிந்த நீர் வக்கோல்களைக்
கழுவிச்சென்றது.
காத்திருந்த அந்தத் தருணம் இவர்களைக் கை நீட்டி அழைத்தது.
எல்லோரையும் ஏஜென்ரின் கை நள்ளிரவில் தட்டியெழுப்பியது. இருளின் அகோரம் கண்டும்
அச்சமின்றி அனைவுரும் உற்சாகமாக எழுந்து அவன் பின் நடந்தனர்.
ஒரே ஒரு எல்லை!
இந்த எல்லையைத் தாண்டினால் சொர்க்கம் நிட்டசயம். அந்தோணியோ பேரன்புகொண்ட
தனதுயிரை அங்கே அமைதியாகச் சாய்திடலாம். அவன் முதுகுப் பையுடன் புறப்பட்டான்.
சிறுமியின் குலைந்த அழுக்கு உடைகள் சில அதனுள் கலவரப்பட்டுக் கிடந்தன.
“உஷ்”
“மெதுவாக நடக்கட்டாம்.”
ஒருவர் பின் ஒருவராக நடந்து நதிக்கரையை அடைந்தனர். யேர்மனியையும் போலந்தையும்
அரவணைத்து ஓடர் நதி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது.
“யேர்மன் காவல்துறையினர் மறுபக்கத்தில் காவல்காக்கின்றனர். வெளிச்சம் இத்திசைக்கு
அடிக்கும்போது புற்களில் அனைவரும் படுத்துக்கொள்ளவேண்டும். பிறகு அங்த வெளிச்சம்
திரும்பி மற்றத் திசைக்குச் செல்லும் தருணத்தில்தான் நாங்கள் நதிக்குள் இறங்கவேண்டுமாம்.”
ஒவ்வொருத்தராக இறங்கினார்கள்.
அந்தோணியோவும் துணிச்சலுடன் இறங்கினான். முதுகுப் பையைக் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டான். காதலியின் கடிதம் மேலும் மேலும் தன்னை மடித்துக்கொண்டு அவன்
நெஞ்சைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. நீருக்குள் அவன் நனைய நனைய அது அவனை
தன்னும் இழுத்துக்கொண்டேயிருந்தது. அந்தோணியோவின் கால்கள் நிலத்தைத்தேடி அலைந்து
தோற்றுக்கொண்டிருந்தன. அமைதியான நீர் இன்று ஆழம்கொண்டிருந்ததை யாரும்
அறிந்திருந்கவில்லை.
அவன் தலைவரை தண்ணீர். ஏனையவர்களின் கூச்சல் சத்தங்கள். ஒருமுறை உன்னிப் பார்த்தான்.
சூப்பி எறிந்த பனங்கொட்டைகள் போல் தலைகள் நீருள் மிதந்துகொண்டிருந்தன. அந்தப்
பனங்கொட்டைகளை நீர் தன்னோடு இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.
அந்தோணியோவை நீர் முழுமையாகக் குடித்துக்கொண்டது மட்டுமின்றி தன் போக்கில் இழுத்துச்
செல்வதை அவனால் உணரமுடியவில்லை. கற்களில் மோதி அவன் கனவுகள் நீருக்குள்
சிதறிக்கொண்டிருந்தன…..
***
“என்னுடைய மகனைக் காணவில்லை. அவன் வெளிக்கிட்டு கனநாள். ஐந்து நாளுக்கு முன்னம்
இங்க வந்து சேர்துவிடுவதாக போனில் சொன்னான். ஆனால் அவனைப் பற்றி ஒரு செய்தியும்
இதுவரை இல்லை. தயவு செய்து என்னுடைய மகனைக் கண்டு பிடித்துத் தாருங்கள்.”
தந்தை பதற்றத்துடன் பேசினார்.
“எங்கையிருந்து கடைசியா போன் எடுத்தவர்?”
“போலந்து. நதியாலை கடந்து வரப்போறதாகச் சொன்னவர்.”
“நாங்கள் தேடிப் பார்க்கிறம். யோசிக்காதேங்கோ. உங்க மகன் கிடைப்பார்.”
“உங்க மகனின் பெயர் என்ன?”
“மோகன்.”
***
கசன்றாவும் எமிலும் கைகோர்த்தவாறு ஓடர் நதிக்கரையில் ஒய்யாரமாக
நடந்துவந்துகொண்டிருந்தனர். அவர்களை வருடிச் சென்ற தென்றல் இப்போது ஒரு
துர்நாற்றத்தை கொண்டுவந்திருந்தது. அவர்கள் அதிர்ந்துபோனார்கள். அங்கே நதிக்கரையில்
பூதம்போல் கறுத்த மனித உடல் ஒன்று கிடந்தது.
அந்தோணியோ!
அலறியடித்தவாறு ஓடிச் சென்று அவர்கள் பொலிஸிடம் தெரிவித்தார்கள். போலந்து பொலிஸின்
உத்தரவின்படி அந்த நதி அலசி ஆரயப்பட்டதில் பன்னிரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கபட்டன.
அனைத்தும் பெரும் பூதங்களாகியிருந்தன.
ஒவ்வொரு உடலிலிருந்தும் உருவி எடுத்தார்கள். அந்தோணியோவின் சேர்ட்டுப் பொக்கற்றில்
அந்தக் கடிதம் உயிரோடுதானிருந்தது. நதி கடக்க முன்னர் அந்தோணியோ நேசம் பொங்கிச்
சுரந்த அவள் வார்த்தைகளை பொலித்தின் உறைபோட்டு பக்குவப்படுத்தியிருந்தான்.
திருமணத்தின் அடையாளமாயிருந்த ஒருவரின் மோதிரம் உருவி எடுக்கமுடியாமல் வெட்டி
எடுக்கப்பட்டது.
***
நாங்கள் ஓடர் நதிக்கரையின் எல்லைப் புற அகதிமுகாமிற்குச் செல்வதற்கான வழியை கிழக்கு
யெர்மனியைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க முயன்றபோது அவர் எங்களைக் கண்டு முகத்தைத்
திருப்பினார்.
அகதிகள் முகாமில் பேச ஒருவரும் தயாரற்றிருந்தவேளை ஒருவர் மனமுறுத்த வாயைத் திறந்தார்.
“இங்க நீங்கள் சொன்ன திகதியிலை ஒரு பெடியன் வந்திருக்கிறான்.” அவர் ஒரு திசையைக்
காட்டினார். அங்கு யசி நின்றிருந்தான். ஆனால் அவனை அங்குள்ள முகாம் பொறுப்பாளர்
“மோகன்” என்றார்.
மோகன் குளறிக் குளறி அந்தக் கதையைச் சொன்னான். தனக்கு உதவியது தான் ஊரில் ஆற்றில்
பழகிய நீச்சலும் ஓடர் கரையில் இருந்த ஒரு பலமான புல்லும்தான். அந்தக் புல்லை இறுகப்
பிடித்தே அவன் கரையேறினான்.
“நாங்கள் என்னவோ நினைச்சுக்கொண்டு வந்தம். ஆனால் என்ன இது நாடு?” என்று விரக்தியுறக்
கூறினான்.
ஓடர் எங்களை மறுகரைக்கு அனுமதித்தது. அங்கே போலந்து பொலிஸ் வரவேற்றது.
பன்னிரண்டு சடலங்களும் பெயர் தெரியாதவர்கள் என்று எழுதப்பட்டு தனித்தனியே
அடக்கம்செய்யப்பட்டிருந்தன அனாதைப் பிணங்களாக.
மோதிரங்கள், உடைகள், கடிதம் எங்களிடம் தரப்பட்டது. உயிரோடிருந்தது கடிதம் மாத்திரமே!
“அப்புள்ள அத்தானுக்கு…..
விரைவாய் போய்ச்சேர்ந்து என்னையும் எடுங்கோ…
உங்களுக்காகக் காத்திருக்கின்றேன்….”
முடிவில் அவள் பெயர். அவள் இதழ்பூச்சு முத்தத் தோட்டம்…….
மீண்டும் அவளை முடக்கிக் கைப்பையுள் வைத்துக்கொண்டு திரும்பினோம்.
முகாமில் மோகனையும் அழைத்து வந்தோம் அனுமதியுடன். மோகம் அமைதியின் ஆழத்தில்
இருப்பதாகக் காட்டிக்கொண்டான். அவன் உள்ளுக்குள் அமுதுகொண்டும்
போராடிக்கொண்டுமிருந்தான்.
மோகனின் தந்தை அவனைக் கண்டதும் கதறி அழுதார்.
“இது என் மோகனில்லை.
என் மகன் எங்கே?”
மோகனை அதட்டியும் அடித்தும் கேட்டார். இறுதியில் வெருட்டினார்.
“உக்ரெயின் காட்டுக்குள் மோகன் செத்துப்போனான். எங்களைப்போல அவனாலை பசிதாங்க
முடியாது. நான் அவன்ரை ஐடி கார்ட்டுகள் துணியளை எடுத்துக்கொண்டு வந்திட்டன். இந்த
நாட்டுக்குள்ள வரேக்க என்ர எல்லாம் துலைஞ்சுபோச்சு. யேர்மன் பொலிஸ்காரர் நான்
மோகனெண்டு பதிஞ்சு வைச்சிருக்கிறாங்கள்.”
மோகனின் தந்தை தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறினார். மோகனாகி நின்ற யசியும்
அழுதான். நாங்களும் அழுதோம்.
***
ஓடர் நதி இன்றும் அமைதியாக இருந்தது என்று நீங்கள் நினைக்கலாம். அதன் அடியில்
சிதறிக்கிடந்த சிறுமியின் ஆடைகள் அதனோடு உரச உரச ஓடர் நதியும் அழுதுகொண்டிருந்ததை
யார் அறிவார்?
***
-நிரூபா நாகலிங்கம்