எப்போதும் வெளிச்சம் பிறக்கும் என்று ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார் கணேசன். விடியலின் வெளிச்சம் பரவுவதைக் காணுவது எப்போதுமே புத்துயிர்ப்பை அளிப்பது. அவருக்கு அதைக் காண்பதில் சலிப்பதில்லை. ஜன்னல் கண்ணாடியில் மெல்ல கருமைநிறம் நீங்கி வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மேல்வீட்டு சாந்திபெல் அடித்துவிட்டு வாசலில் டீ வைத்துவிட்டுப்போவாள். சமையலறையின் முன் சுவரில் காலண்டர் தொங்கிக்கொண்டிருந்தது. கட்டிலில் படுத்தபடியே இன்று என்ன தேதி என்பதை கண்சுருக்கி பார்க்க முயற்சித்தார். இன்று என்ன தேதி என்று அவருக்குத்தெரியும். இன்னும் சரியாக பதினெட்டு நாட்களை ஓட்டிவிட்டால் பிறகு இரண்டு வாரங்கள்அவர் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறார். இரண்டே வாரங்கள்தான். கிட்டத்தட்ட நான்குவருடங்கள் கழித்து மகனின் வருகை. நாலு வாரமாக மாற்ற முடியுமா என்று கூட மன்றாடிப்பார்த்தார் கணேசன். அவ்வளவு நாள் விடுப்பு கிடைக்காது என்று சொல்லியதை சாந்தியிடம் பலமுறை சொல்லி வருத்தப்பட்டார். கணேசனுக்கு திருவள்ளூர் பக்கம் கிராமம். மிக இளம் வயதிலேயே சென்னை வந்துவிட்டவர். அப்பாவுக்குப் பிறகு அவர் நிர்வகித்த சிறிய அரிசி ஆலையும், அதனுடன் இணைந்த மாவு அரைக்கும் கடையும் அண்ணன் வசம் தீர்ப்பானதும் ஊரை விட்டு சென்னை வந்தவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். சென்னையின் பல இடங்களில் மாவு அரைக்கும் மில்லில் வேலை செய்துபிறகு குரோம்பேட்டை கன்னிக்கோயில் தெருவில் கடை பிடித்து ஏழெட்டு வருடம் முன்புவரை அங்குதான் அவரது வாழ்க்கை இருந்தது. பிள்ளை படித்து வளர்ந்து ஐடி கம்பெனி வேலைக்குப் போன பிறகும் கூட ஆள் வைத்து கடை நடத்திக்கொண்டிருந்தார். மகன் லண்டன் சென்ற பிறகு கடையை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தவே வேறு வழியில்லாமல் ஒத்திகைக்கு விட்டு இப்போது வீட்டோடு இருக்கிறார். மகன் லண்டன் சென்ற இரண்டாவது வருடத்தில் ராணியின் இறப்பு நிகழ்ந்தது. அப்போது மகன் வரும்போது அவர் பேரனுக்கு இரண்டரை வயது. இப்போது எட்டு தொட்டிருப்பான். முகம் பார்த்து பேசும் வசதி இருந்தாலும் நேரில் தொட்டு உணர்வது போல் வராது. இவர்களின் வருகையைத்தான் காலண்டரில் ஒவ்வொரு தேதி கிழிப்பின்போது எண்ணிக்கொள்வார். கூடவே இந்த நாட்கள் ஏன் இவ்வளவு சோம்பேறித்தனமாக நகர்கின்றன என்கிற சலிப்பும்.

கணேசனுக்கு வாழ்நாள் முழுக்க மாவு அரைக்கும் மெஷின்கள் கூடவே வாழ்ந்துவிட்டவர். எதையுமே சத்தமாக பேசியே பழக்கப்பட்டு அது அவரின் மூளையில் போய் கெட்டியாக உக்கார்ந்து விட்டது. அவர் மேல் எப்போதும் அரிசி மாவு வாடையும், மிளகாய்ப் பொடி கமறலும், நெடியும் பழக்கப்பட்டு விட்டாலும் கூட கண்கள் சுருக்கி மூக்கு விடைத்து உரத்த குரலில் பேசுவதைத்தான் ராணியால் ஆரம்ப காலங்களில் சகிக்க முடியாததாக இருந்தது. பிறகு அதுவும் பழகிப்போனது. தொலைதூரத்தில் இருப்பவர்களிடம் பேசுவதுப்போன்ற சப்தம் அவரால் இன்றுமே கூட மாற்ற முடியவில்லை. அவர் தொண்டையில் மிளகாய்ப் பொடி கமறல் நிரந்தரமாக இருக்கிறது. கனைத்தும், தும்மியும், இருமியும் பலமிழந்த நெஞ்சுக்கூடு, ஒற்றை நாடி சரீரம். கடந்த நாற்பதாண்டுகளாகவே ஒரே அளவு சட்டையும் பேண்டும்தான். கடையை ஒத்திக்கு கொடுத்த பிறகு வேட்டிக்கு மாறிவிட்டார். மெசினில் மாவு, பொடி அரைத்து வெளிவரும் இடத்தில் ஒரு நீண்ட துணிகட்டியிருப்பார்கள். பல ஆயிரம் குடும்பங்கள், பல்லாயிரம் தானியங்கள் கண்ட துணி அது. ஒரு பக்க அரைக்கால் டவுசர் அளவு இருக்கும்.  கடையை இன்னொருவருக்கு கொடுத்தபோது மறக்காமல் அந்த துணிகளை மட்டும் கழட்டிக்கொண்டு வீட்டில் வைத்துக்கொண்டார். ரகசியமாக அதை அவ்வப்போது முகர்ந்து பார்த்துக்கொள்வார். உறக்கம் வராத இரவுகளில் தலையணைக்கு அருகில் வைத்து ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார். பகலில் எப்போவாவது தோன்றினால் போய் கடை வாசலில் அமர்ந்து மிளகாய் கமறலையும், பலவகை தானியங்கள் அரைபடும் ஓசையும் வாசனையும் வேண்டிக்கொள்வார். சாலையை ஒட்டிய வீடு அவருடையது. சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது. சுவர் ஓரங்களில் சிவப்பு நிற சிமெண்ட் பார்டர் இட்டு, நடுவில் நீல நிற  சிமெண்ட் வட்டக்கோலம்.  முன்புறம் சைக்கிள் நிறுத்த ஒரு மரக்கட்டில் இடும் அளவு இடம். பிறகுஹால், வலது புறம் படுக்கையறை, ஹாலைக்கடந்து வலது புறம் சமையலறை, இடது புறம்சாமி ரூம்,  பின்வாசலில் கிரில் கேட் பின்புறம் ஒரு ஆட்டோ நிற்கும் அளவு இடத்தில் வெற்றிலைக்கொடி கிரில் கேட்டில் படரும்படி விட்டிருந்தார்.

 

மூன்று பேர் இருந்த வீடு பிறகு இரண்டானது, இப்போது ஒற்றையாள்தான். பிள்ளையின் வருகையும், பேரனின் அருகாமையும் கிடைக்கப்போகும் அந்நாட்களுக்காக காத்திருக்கும் ஒரு மனிதர். மேல்வீட்டில் வாடகைக்கு இருக்கும் சாந்தி அவருக்கு இன்னொரு மகள்போல. இரண்டு வேளை சாப்பாடும் காலை மாலை தேநீரும் கீழே வந்து கொடுத்துவிடுவாள்.  அமாவாசை, பவுர்ணமி. வெள்ளிகளில் வீட்டைக் கூட்டிப்பெருக்கி துடைத்துவிட்டு விடுவாள்.  அவளிடம் வாடகை என்ற ஒன்றை வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டார். வம்படியாக சாந்தியின் கணவன் வாடகைப் பணத்தைக் கொடுத்தாலுமே கூட வேறு வழிகளில் அவர்களுக்கே செல்லும்படி செலவிட்டார். சாந்தியின் இரு மகள்கள் பள்ளிக்கட்டணமாக, நன்னாட்களில் புதுத்துணி வாங்கிக்கொடுப்பதாக இப்படி ஏதோ ஒருவழியில் செலவிடும்படி பார்த்துக்கொண்டார். அவரது  சேமிப்பில் பணமும், கடையின் மெஷின்கள் வாடகைப் பணமும், மகன் அவ்வப்போது தனக்குத் தெரியாமலே வங்கிக்கணக்கில் போடும் பணமும் சேர்ந்து அவரால் செலவே செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. எங்கே கொண்டு வைப்பது யார் அதை செலவு செய்வது என்ற சித்தப்போக்குதான். தொழிலை ஆரம்பித்த காலங்களில் மெஷின்கள் பெரியவை, நீண்டபெல்ட்  பெரிய இரும்பு சக்கரத்தில் சுற்றும். ஆபத்து நிறைந்தவை,  இடத்தை நிறைக்காத அளவில் சிறிய மெஷின்கள் சந்தையில் வந்தபோது முதலில் வாங்கி ஊருக்குஅறிமுகப்படுத்தியவர்.  

 தேநீரின் சூடு ஆறாமலிருக்க ஒரு டம்ளிரின் மேல் இன்னொரு டம்ளர் மூடியிருந்தது. சாலையைப் பார்த்தவாரு அமர்ந்து குடிக்க ஆரம்பித்தார்.  காலை உணவும் மதிய உணவும்சேர்ந்தது போல பனிரெண்டு மணிக்கு மேல் ஒரு வேளை, இரவு எட்டு மணிக்கு ஒரு வேளை என்பது அவரது சாப்பாட்டுக்கொள்கை. ராணி இருந்தபோதே அப்படித்தான். இப்போதும் அப்படித்தான். டீ குடித்துவிட்டு கடைத்தெரு பக்கம் போகவேண்டும். பேரனுக்குத் தேவையான விளையாட்டு சாமான்கள் வாங்கி வைக்க வேணும் என நினைத்துக்கொண்டார். முந்தைய தினங்களில் சில விளையாட்டுப் பொருட்கள் வாங்கிவந்திருந்தாலுமே கூட இப்படி எதாவது நினைத்துக்கொண்டு செல்வது மனதுக்குத் தெம்பாகயிருந்தது. ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பாய்க்கடை உண்டு. இப்போதுதான் புதுப்பித்து பல விளையாட்டு சாமான்கள் கடை முழுக்க வைத்திருக்கிறார்கள். இதைவிட்டால் பல்லாவரம் பம்மல் ரோட்டில் பெரிய கடை உண்டு. அவ்வளவு தூரம் செல்ல இயலாது. முன்பு வாங்கி வந்திருந்த பொருட்களை சாந்தியின் மகள்கள் பார்த்துவிட்டு இதெல்லாம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைக்கு பிடிக்காதுஎன்று சொன்னார்கள். பிறகு வேறு என்ன பொம்மைகள் பிடிக்கும் என்று கேட்டதற்கு வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் பெயரைச் சொன்னார்கள். அதையும் எழுதி வைத்துக்கொண்டார். ஸ்பைடர் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, அவஞ்சர்ஸ், அயர்ன் மேன், ஷெர்லாக் ஹோம், மினியன்ஸ், ஹல்க் என ஏதேதோ பெயர் சொன்னார்கள். செல்போனில் படமெல்லாம் காட்டினார்கள், கண்ணாடி அணிந்துகொண்டு நெற்றி சுருங்க பார்த்துக்கொண்டார். பின்பு ஒரு தாளில் அதை எழுதித்தரச்சொல்லி வாங்கினார். தான் வாங்கிய பொருட்களை ஒருமுறை பார்த்தார். அவை எல்லாம் மிகச்சிறு பிராயம் கொண்ட பிள்ளைகள் விளையாடுவது என்று அப்போதுதான் விளங்கியது. எதற்கும் இருக்கட்டும் என்று அலமாரியில் வைத்தார்.

 

கடை இன்னும் திறக்கவில்லை, பத்துமணிக்கு மேல்தான் பாய்கடை திறப்பார்களாம்.  நேரம்போக எம்..டி  காலேஜ் ஒட்டய டீக்கடையில்  டீ குடித்து ஒரு வடை சாப்பிட்டார். திரும்பி வரும்போது கடை ஷட்டரை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். பாய் புன்னகைத்து வரவேற்றார். அவரிடம் கொண்டு வந்த சீட்டைக் கொடுத்தார். என்ன சார் மளிகை சிட்டை மாதிரி எழுதிட்டு வந்திருக்கிங்க என்று சிரித்தபடி படித்தார்.

 

இந்த காலத்துப் புள்ளைங்க செப்பு சாமான்லாம் வச்சு விளையாடறதில்ல, எல்லாமே வெளிநாட்டு பொம்மைங்கதான். சீனாக்காரனுக்கு இதுதான் இப்ப பெரிய தொழில்நீங்க எழுதியிருக்க எல்லா சாமானும் தனித்தனியா வராது. ஒரே பொட்டிக்குள் எல்லாமே கிப்ட்பாக்ஸ் மாதிரி இருக்கு அத தரட்டுமா என்றார்.

 

வரிசையாக ஏழெட்டு உருவ பொம்மைகள் இருந்தன. விலை கூடியதுதான் ஆனால் அதெல்லாம் பார்க்காமல் வாங்கிக்கொண்டார். கலர் காயிதம் சுத்தித் தரட்டுமா என்றதற்கு ஒரு நொடி யோசித்து அப்படியே செய்திடுங்க என்று வாங்கிக்கொண்டு சைக்கிளில் வீடடைந்தார். இதையும் பார்த்து எதாவது கோளாறு சொல்லக்கூடும் என்பதால் மேல்வீட்டு பிள்ளைகளின் கண்ணில் படாதவாறு உள்ளறை மரபீரோவில் வைத்தார். நெடுநாட்களாக உபயோகப்படுத்தாத சமையலறையை சுத்தம் செய்து தேவையான மளிகைகள் வாங்கி வைத்திருந்தார்.

 

மகன் வர இரண்டு நாட்களே இருந்தன. முன்வாசலிலிருந்து பின்வாசலுக்கு ஏழெட்டு முறை நடந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் எதாவது ஒரு திருத்தம் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது. கட்டிலில் விரிப்புகள் மாற்றி புதிய தலையணை, சுவற்றில் மாட்டியிருந்த போட்டோக்கள் துடைத்து மாட்டியது, ஒட்டடை, தேவையில்லாத சாமான்கள் ஒழித்தது, மளிகை, சிலிண்டர், தண்ணி டேங்க் சுத்தம், எல்லா வேலைகளும் முடிந்து தயாராக இருந்தது.  குரோம்பேட்டை கன்னிகோயில் தெருவிலிருந்து ஏர்போர்ட் அதிகபட்சம் பதினைந்துநிமிடத்தில் சென்று விடலாம். காருக்கு முரளியிடம் முன்பே சொல்லி தொகையும் குடுத்தாயிற்று. எல்லாம் சரி. வரவேண்டியதுதான் பாக்கி.

 

மகன் வருவது மாலை ஏழு மணிக்குதான் என்றாலும் மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டு பஸ் பிடித்து நேராக ஏர்போர்ட் சென்று விட்டார். முரளி ஆறுமணிக்கு வந்துவிடுவதாக ஏற்பாடு. தூரத்தில் வருவது தெரியாமல் போய்விடக்கூடும் என கண்ணாடியை ஏழெட்டுமுறை வாய் ஊதி வேட்டியில் துடைத்துக்கொண்டார். அதே ஏழெட்டு முறை லண்டன் ப்ளைட் இறங்கிடுச்சா என்று கேட்கவும் தவறவில்லை.

கடைசியாக எட்டு மணிக்குதான் அவர்கள் வெளியே வந்தார்கள். தூரத்தில் வரும்போதே கண்டுகொண்டார். அவ்வளவு மகிழ்ச்சி. பூரிப்புடன் மகனையும் பேரனையும் கட்டிக்கொண்டார். காலில் விழப்போன மருமகளை தடுத்து விட்டார்.

 

பேரன் அவர் தோளுக்கு கீழ் வளர்ந்திருந்தான். நிறம் கூடி அவ்வயதுக்கே உரிய மலர்ச்சி இருந்தது. போனில் பார்த்ததை விட அழகாகவும் விளம்பரங்களில் தோன்றும் சிறுவர்கள்போல களையான முகம். இரவுணவை சாந்தி தயார் செய்து வீட்டில் வைத்திருந்தாள். பலவருடங்களுக்குப் பிறகு உணவு மேசையில் தட்டுகள் அதிகமிருந்தன. பேரன் தமிழ் பேச சிரமப்படுகிறான். ஆனால் அவனுக்குப் பேச ஆர்வமிருக்கிறது. எல்லாவற்றையும் வியந்து பார்த்துக்கொண்டிருந்தான். வெகு சீக்கிரமாக உறங்கிப்போனான். பயணக்களைப்பு.

 

அவர்கள் வந்திறங்கிய மூன்றாவது நாளில் பெங்களூர் பயணமானார்கள். மகனின் நண்பர் ஒருவரின் திருமணம். பேரனை மட்டும் விட்டுப்போகுமாறு மகனிடம் வேண்டிக்கொண்டார். மருமகளும் இருக்கட்டும் என்று சொன்னதால் மனமில்லாது சம்மதித்தான். பேரனுக்குதனியாக இருக்க இஷ்டம்தான். பிறந்ததிலிருந்து ஒருநாள் கூட அம்மா அப்பாவை விட்டுப் பிரிந்ததே இல்லை. இரவு கிளம்பி மறுநாள் இரவு திரும்பும் பயணம்தான். நீண்ட பிரிவொன்றுமில்லை என்றாலும் இது ஒரு அனுபவமாக இருக்கட்டுமே என்று மகனும் சம்மதித்தான்.

 

அவர்களை முரளி காரில் ஏர்போர்ட் அனுப்பி பேரனும் மகனும் மட்டும் தனியே இருந்தார்கள். தான் வாங்கி வந்திருந்த விளையாட்டு சாமான்கள் பார்த்த மாத்திரத்திலேயே நாட்டமில்லை என்று புரிந்தது. பாய்கடையில் வாங்கி லில்லிபுட் அளவு பொம்மையை மட்டும் விரும்பி வாங்கிக்கொண்டான். அதில்  சில மறுநாளே கைவேறு கால்வேறாகஉடைந்து போனது. இன்னும் கொஞ்சம் தரமாக வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

 

மறுநாள் வெள்ளிக்கிழமை. எங்காவது வெளியே போகலாம் என்றான் பேரன்.

 

எங்கு செல்வது?

 

அவரும் யோசித்தார். மகன் போகும்போதே கண்டிஷனாக சொல்லியிருந்தான். பீச், சினிமா, நண்பர்கள் வீடு என தூர இடங்களுக்கு போக வேண்டாம், குறிப்பாக மிளகாய் அரைக்கும் கடைப்பக்கமே கூடாது என. அதுவேறு நினைவுக்கு வந்தது.

 

வெளியே சைக்கிள் இருந்தது. அதைக்காட்டி இதிலே போகலாம் என்று அடம்பிடித்தான்.

 

உடல் தளர்ந்திருந்தாலும் சைக்கிள் மிதிக்கும் அளவுக்கு இன்னும் தளர்வடையவில்லை. சட்டென அவருக்கு சந்தை நினைவுக்கு வந்தது. பல்லாவரம் சந்தை. சென்னையிலேயே பெரிய சந்தை. கிடைக்காத பொருளே இல்லை எனும் அளவுக்கு ஒரு கிலோ மீட்டருக்குமேல் இருபுறமும் கடைகளும் மக்களுமாய் திருவிழா போல காணப்படும். உற்சாகமாக கிளம்பினார். காலையில் அதிக கூட்டமிருக்காது கடைசி வரை சென்று திரும்பலாம். இதற்கு முன்பு இப்படியொரு ஜனத்திரளையோ, கடைகளையோ, பொருட்களையோ அவன் கண்டிருக்க வாய்ப்பில்லை. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்தபடி சைக்கிளில் கிளம்பினார். பின்புற கேரியரில் துண்டு ஒன்றை வைத்து அதன் மீது அமரவைத்துக்கொண்டார்.

 

வைத்தியலிங்கம் சாலைவழியாக சென்று ஒரு இடம், ஒரு வலம் திரும்பினால் ரயில்நிலையம் அதைத்தாண்டி மேம்பாலம் ஏறி இறங்கினால் பாலம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து நீண்டு சென்று ஏர்போர்ட் வாசல் வரை நீளும். பாலம் இறங்கியதும் சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார். எல்லாவற்றையும் வரிசையாக காட்டிக்கொண்டே வந்தார். எதன் மீதும் அவ்வளவு ஆர்வமில்லை, பஞ்சுமிட்டாய் மட்டும் வாங்கிக்கொண்டான். காய்கறிக்கடைகள், பலசரக்குக்கடை, பழைய இரும்பு சாமான்கள், துணிக்கடைகள், கருவாட்டுக்கடைகள் வரை அதிக கூட்டமிருந்தது அதன் பிறகு அதிக கூட்டமில்லை. புறா, நாய்க்குட்டி, வாத்து, கோழி, ஆடு, குதிரை, ஆமை, கலர்குருவிகள் என விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அதைத்தாண்டிப்போனால் வீட்டு உபயோகப்பொருட்கள், கட்டில்மேசை பீரோ, சோபா, நீண்டு சென்றுகொண்டே இருக்கும். வெயில் நேராக மண்டையில்இறங்கியதும் சற்று களைத்திருந்தார். இருவரும் குளிர்ந்த எலுமிச்சை சாறு குடித்தனர். அதற்குப் பக்கத்திலேயே ஒருவன் கையில் ஒரே ஒரு நாய்க்குட்டியைப் பிடித்தபடி நின்றிருந்தான்.

 

பேரன் அதை ஆசையோடு பார்ப்பதை கவனித்தார்.  நாய்க்குட்டியும் இவனையே பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு முடிகூட வெந்நிறமில்லாத கருத்த நாய்க்குட்டி. இருட்டைக் குழைத்து எடுத்ததுபோல அவன் கையில் துள்ளிக்கொண்டிருந்தது. பிறந்து மூன்று அல்லது நான்கு வாரங்கள் இருக்கலாம். முசு முசுவென்று இருந்தது. கோலிசோடாவை எண்ணையில் தொய்த்து எடுத்ததுபோன்ற மினுங்கும் கண்கள். இவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்பதுபோல இருந்தது அக்கண்கள்.

 

பேரனிடம் நாய்க்குட்டி வேண்டுமா என்று கேட்டார்.

 

வாங்கித்தருவிங்களா தாத்தாஎன்றான் அவன்.

நேராக அவனிடம் சென்று விலை கேட்டனர்.

 

25000 ஆயிரம் என்றான் அவன். அவனுக்கும் சேர்த்தே அந்த தொகை அதிகம் என உள்ளுக்குள் நினைத்தார்.

 

பெரியவர் யோசிப்பதைப் பார்த்து அக்குட்டி நாயின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தான். இந்த நாய்க்குட்டி சாதாரண நாய்க்குட்டி இல்ல, வெளிநாட்டு ரகம். நாலு செக்யூரிடிக்கு சமம். வளந்துச்சுன்னா கெடா ஆடு அளவுக்கு வரும், வளக்குற எஜமானுக்கு ரொம்பவிசுவாசமா இருக்கும், குரைச்சுதுன்னா சிங்கம் கர்ஜிக்கற மாதிரி இருக்கும். இதுல விசேஷம் என்னன்னா இது ஜெர்மன் ஷெப்பர்டும் லாப்ரடாரும் க்ராஸ் ஆனதால உருவான ஸ்பெஷல் ப்ரீடு. இதவிட  பெரிய மேட்டர் என்னன்னா இது ஒரு நடிகர் வீட்டுல பிறந்தது என அந்த நடிகரின் பெயரைச் சொன்னான்.

 

அந்த நடிகரை அவர் கேள்விப்பட்டதே இல்லை. அவர் யோசனையெல்லாம் நாய்க்கு இவ்வளவு விலை இருக்கும் என அவர் அறிவுக்கு இன்னமும் எட்டவில்லை. இதெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போது அக்குட்டி பேரனின் கைக்க மாறியிருந்தது. இப்போதுதான் அவன் முழுதாக சிரித்துக்கொண்டிருந்தான். இனி இதை வாங்காமல் போவதற்கில்லை.

 

நாய்க்கு இந்த விலை அதிகம் தம்பி, கொஞ்சம் கொறச்சு சொல்லுங்க.

 

என்ன சார் நீங்க எந்த உலகத்துல இருக்கிங்க, நாய்ன்னு அசால்ட்டா சொல்ட்டிங்க, இங்க இருக்கற ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னியெல்லாம் பதினஞ்சிக்கு மேல, இது பாரின்ப்ரீடு. மார்கெட்ல லச்சத்துக்கு மேல எல்லாம் நாய்ங்க இருக்குது சார். இந்த குட்டியவே எடுத்துக்குங்க, பெட் ஷாப்ல போய் கேட்டிங்கன்னா நாப்பதாயிரம் சொல்லுவான். எனக்கு தெரிஞ்ச கை மூலமா நடிகர் வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்ததால கம்மி ரேட்டு என்றான்.

 

பணம் ஒரு பிரச்சினை இல்லை என்றாலும் நாய்க்கு இவ்வளவு காசு கொடுப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு. பதினைந்து நிமிட பேரத்திற்குப் பிறகு இருபதைத்தொட்டு பதினெட்டில் முடிந்தது. ஏடிஎம் வரை அவனும் கூடவே வந்தான். நெஞ்சோடு அணைத்துப் பிடித்தபடி சைக்கிள் கேரியரில் உட்கார்ந்திருக்கத் தள்ளிக்கொண்டே வரும்போது அதற்கு என்னென்ன உணவு குடுக்க வேண்டும், எந்தஇடைவெளியில் ஊசிபோட வேண்டும் என விளக்கமாக சொல்லிக்கொண்டிருந்தான். நாய் விற்பனையில் இப்படி ஒரு சந்தை இருப்பது கண்டு வியந்துபோனார்.

 

நல்ல பேரா வைங்க சார். என்று காசை வாங்கிக்கொண்டு போனான்.

 

வீட்டிற்கு வந்ததும் அதைக்குளிப்பாட்டி துடைத்து பேன் காற்றில் உலர விட்டு சுத்தப்படுத்தினார்கள். மூர்க்கத்தனமான பசியோடு இருந்தது அது. மேல் வீட்டுக்குட்டிகள் இரண்டும் மாறி மாறி வந்து பால் ஊட்டினார்கள். அரை மணிக்கு ஒருமுறை அலாரம்வைத்தது போல எழுந்து வந்து குடித்துவிட்டு போய்ப் படுத்துக்கொண்டது. இரவில்தான் தாம் ஒரு நாய் இனம் என்றே உணர்ந்து வீடு முழுக்க ஓடி எல்லாவற்றையும் முகர்ந்துபார்த்து நினைவில் குறித்துக்கொண்டிருந்தது. பேரன் நெடுநேரம் அதனோடு விளையாடினான். அப்படியே, அதனோடே தூங்கியும் போனான்.

 

அதிகாலையில் மகனும், மருமகளும் வீடுசேர்ந்தார்கள். படுக்கையில் முக்காண வடிவில் ஈரமிருந்தது. வெளிச்சம் கண்டதும் தலையை உயர்த்திப்பார்த்து மீண்டும்படுத்துக்கொண்டது.

 

நாய்க்குறித்த சண்டை காலையிலேயே நடந்தது.

 

இவன் பத்து நாள் இருந்துட்டுப் போயிடுவான், போகும்போது தூக்கிட்டேவா போகமுடியும், ஆசையா வளத்துட்டு அவனும் எப்படி பிரிஞ்சி போவான், வாங்கறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே, அந்த நாய்க்கு ஊசி போட்டுருக்கா, கடிச்சிகிடிச்சி வச்சா எங்க போறது, பூரினா கூட நாய்க்கு விஷம் உண்டு. இப்படி நீண்டநேரம் அவன் பேசிக்கொண்டிருந்தான். நாய் இடையிடையேசத்தம் போடாதிங்கப்பாஎன்பதுபோல தலை உயர்த்தி சாய்ந்தது.

 

நாம போனபிறகு அவருக்கு அதுவாவது துணையிருக்கட்டுமே, விடுங்க என்று சமாதானம் சொல்லி மருமகள்தான் முடித்து வைத்தாள்.

 

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டார் கணேசன். தன் மகன் தன் மீதுசெலுத்தும் அதிகாரத்தை அவர் உள்ளூர ரசித்தார்.

 

காலையில் மகனும் பேரனுமாக போய் நாய்க்கு  தடுப்பூசி போட்டு, கழுத்துப்பட்டை, சங்கிலி, இத்யாதிகள் வாங்கி வந்தார்கள். கூடவே நாய்க்கு ஜாங்கோ என்ற பெயரும்.

 

வரும்போது இரண்டு ஆட்களோடு வந்திருந்தான். அவர்கள் வாசலிலும்  ஹாலிலும் ஒருகேமராவை மாட்டினார்கள்.  

 

எதற்கு என்றார் மகனிடம்.

 

நீங்க தனியா இருக்கிங்க, கேமரா ஒரு பாதுகாப்பு, அதுவுமில்லாம நானும் அங்கருந்து அடிக்கடி உங்கள பாத்துக்கலாம், இந்த கேமராலயே பேசிக்கலாம், நீங்க பேசரதும் எனக்கு கேக்கும் என்றான்.

 

எல்லாம் முடித்து கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள். தன் செல்போனில் கேமராவைக் காட்டினான். வாசலில் நாயும் பேரனும் விளையாடிக்கொண்டிருப்பது செல்போனில் தெரிந்தது.

 

எல்லாமே அதிசயமாதான் இருக்கு என்று சொன்னபடி வாசலுக்கு சென்றார் கணேசன்.

 

ஒரே வாரத்தில் ஜாங்கோ நன்கு கொழுத்திருந்தான். அவனின் சேட்டைகள் ரசிக்கும்படி இருந்தன. எப்பொருளையும் முகர்ந்து அறிந்து வாய்க்கு வாகாக இருந்தால் அதைக்கடித்து இழுத்து மூலைக்கு சென்று அமைதியாக குதறி வைத்தது. துண்டு, செருப்பு, ரிமோட், தினசரி, பொம்மைகள் என அதன் சக்திக்கேற்ப சேதத்தை உண்டாக்கியது. பற்கள் வளரும்போது அதைத் கூர் தீட்டிக்கொள்ள இன்னும் எதாவது வாட்டமாக கிடைக்குமா என அவஸ்தைப் பட்டது.

 

விமானம் ஏறும் நாள் வந்தபோது விமானநிலையம் வரை நாயும் கூடவே வந்தது. “பேக்ல வச்சுகிட்டு போயிடலாம்பாஎன்று கூட கேட்டுப்பார்த்தார். ஸ்கேன்ல குண்டூசி கூடதெரிஞ்சிடும் குட்டி நாய் தெரியாதா? இதெல்லாம் கூட்டிகிட்டு போகணும்னா ஏகப்பட்டரூல்ஸ் இருக்கு, பர்த் சர்டிபிகேட், வாக்சினேசன் ரெகார்ட், டிக்கெட், டாக்டர் சர்டிபிகேட், இன்சூரன்ஸ், இதெல்லாம் சொன்னா புரியாதுப்பா வாங்கும்போது ஒருவார்த்தை கேட்டிருக்கலாம்.

 

பேரனின் கண்களில் நீர் அகலவேயில்லை, கீழேயும் விழாமல், சத்தமாக அழுவாமல் வெதும்பியபடி இருந்தான். நீ தினமும் கேமரால பேசலாம், பாக்கலாம், விளையாடலாம் என சமாதானம் சொல்லி அனுப்பி வைத்து வீடு சேர்ந்தார்.

 

வீடு நிசப்தமாக இருந்தது. ஜாங்கோ அதன் விரிப்பின் மீது போய்ப் படுத்துக்கொண்டது.  அதனிடமிருந்த மகிழ்ச்சியை யாரோ பறித்துக்கொண்டது போல பரிதாபமாக இருந்தது.

 

மறுநாள் கேமராவில் பேரன் பேசினான். ஜாங்கோ திகைத்து அங்குமிங்கும் ஓடியது. இடவலமாக முகத்தை திருப்பிப் பார்த்தது,  குரல் மட்டும் கேட்கிறதே ஆள் எங்கே இருக்கிறான் என தேடிச்சலித்து முடங்கியது. அதைக்காண பேரனுக்கு வேடிக்கையாக இருந்தது. முதல் ஒரு வாரம் இந்த விளையாட்டு அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தொட முடியாமலும், கொஞ்ச முடியாமலும் இதென்ன விளையாட்டு என சலித்துப்போனது. ஜாங்கோவும் தன் பங்குக்கு வாலாட்டுவதையும் தேடுவதையும் நிறுத்தி விட்டிருந்தான்.

 

ஜாங்கோவுக்கு நண்பன் ஒருவனை இழந்த சோகம் நிரந்தரமாக மனதில் பதிந்துவிட்டது. தன்னால் அதனை ஈடுகட்ட முடியுமென்று தோன்றவில்லை. நல்ல மூடில் இருந்தால் காலில்உரசி, நகத்தில் செல்லமாக பிராண்டி விளையாடச்சொல்வான். அந்த காரணத்திற்காக ஜாங்கோவை யாரிடமும் கொடுக்க விருப்பமில்லை என்பதால் அதுபாட்டுக்கு இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

 

அவர்கள் சென்ற இரண்டாவது வாரத்தில் பெருமழையின்போது ஜாங்கோ காணாமல்போனான். வீடு, தெரு, அக்கம்பக்கம் என எல்லா இடத்திலும் தேடியாயிற்று. அரவமே இல்லை. பக்கத்து தெருக்களில் சைக்கிள் மிதித்து தேடியும் ஒரு தகவலும் இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் பையனிடம் சொல்லி பைக்கில் போய் தேடச்சொன்னபோதுஅவனும் தேடி பிறகு வந்து கிடைக்கவில்லை என்று சொன்னான். எதேச்சையாக காமிரா இருப்பதைக் கண்டவன்இதுல பாத்திங்களா”? என்றான்.

 

நெற்றி சுருக்கி மேலிருந்த கேமராவைப் பார்த்தார். “நீயே பாருப்பாஎன்றார்.

 

இரவு மழையின்போது ஜாங்கோ வெளியில் நின்று துள்ளி வரும் தவளைகளைக் கண்டுகுரைத்துக்கொண்டிருந்தது பதிவாகியிருந்தது. பிறகு கொஞ்ச நேரத்தில் ஒரு குட்டியானை வண்டியிலிருந்து ஒருவன் இறங்கி அந்தக் குட்டியைத் தூக்கிக்கொண்டு போவதுதெரிந்தது.

 

அந்தப்பையன் வண்டி நம்பரை சிறிய தாளில் குறித்துக் கொடுத்து, போலீசில் புகார் அளிக்கச்சொன்னான்.

 

போலீசுக்குப் போவது அவருக்கு விருப்பமில்லை, மேலும் காணாமல் போனது நாய்க்குட்டி என்று சொன்னால் பரிகாசம் செய்யக்கூடும். அதைவிட அவர் வசிக்கும் பகுதியிலிருந்து மெயின் ரோட்டுக்குப் போய் வரவேண்டும். தேவையில்லாத அலைச்சல் என்றாலும்இப்படியே விட்டுவிடக்கூடாது எனவும் அவருக்குத் தோன்றியது. கடை வைத்திருந்த காலத்தில் அவர் கடைக்கு வாடிக்கையாக வரும் தட்சிணாமூர்த்தியின் நினைவு வந்தது. அவர் வாகனங்கள் பதிவு செய்யும் அலுவலகத்தில் உத்தியோகஸ்தர். நேராக அவர்வீட்டுக்குச் சென்று வண்டி நம்பரைக் கொடுத்து முகவரி கண்டுபிடிக்கவேண்டும் என்றார். அவர் ஏன் எதற்கு எனக் கேட்டபோது ஜாங்கோ பற்றி முழுவதும் சொன்னபிறகே ஒப்புக்கொண்டார். சீட்டை வாங்கிக்கொண்டு காலையில் அழைக்கும்படி சொன்னதும் வீடுவந்து சேர்ந்தார்.

 

அவனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை வந்தது.  ஜாங்கோவை மீட்கும் இந்தஇடைப்பட்ட நேரத்தில் மகனுக்கு விஷயம் தெரியாமல் இருக்க வேண்டும். தெரிந்தால் சத்தம் போடுவான். ஒருவேளை கேட்டால் மேல் வீட்டில் இருப்பதாக சொல்லிசமாளிக்கலாம்.

 

மறுநாள் பத்துமணி எப்போது வரும் எனக்காத்திருந்து தட்சிணாமூர்த்திக்கு போன் செய்து முகவரி வாங்கினார். அது திருவொற்றியூரில் இருந்தது. பேருந்தில் போய் வர முழுநாளும்போய்விடக்கூடும். ஆட்டோவிலேயே போய்வருவதுதான் நல்லது என்று ஆட்டோ பிடித்தார்.

 

நல்ல உச்சிவெயிலில் அந்த முகவரிக்கு போய் இறங்கினார். அது ஒரு ஆஸ்பெஸ்டால் வேய்ந்த சிறு வீடு. வீட்டுக்குப் பின்புறம் பெரிய ஏரி. அதில் ஆக்கிரமிப்பாக பல வீடுகள் முளைத்திருந்தன. மழைக்காலத்தில் நீர் வீட்டைச் சூழும்.  வழியெங்கும் சிறு சிறுசாக்கடைகளைத் தாண்டி அந்த வீட்டுக்கு எதிரே போய் நின்றார். தளர்ந்த உடலுடம் ஒருநடுத்தர வயதுள்ள பெண்மணி வெளியே வந்தாள்.

 

ஏம்மா, அண்ணாமலை வீடு இதான”? என்றார்.

 

ஒருவகையான எரிச்சலோடு ஆமாம் என்றாள். அவர் அடுத்த வார்த்தையை பேசவாயெடுக்கும் முன்னர் அவளே பேசத்தொடங்கினாள்.

 

சார், நீங்க எதாச்சும் துட்டு குடுத்துட்டு ஏமாந்தா நேரா வீட்டுக்கு வந்துடறதா? ஆயிரம் குடுத்தேன், ஐநூறு குடுத்தேன்ன தெனம் ரெண்டு பேராச்சும் விசாரிச்சிகினு வராங்க. அவன் டாஸ்மாக் கடையாண்ட கூட குடிக்கற எவன்கிட்டயாவது காச வாங்கிட்டு குடிச்சிட்டு எங்கியாச்சும் மல்லாந்துடறான். எல்லாருக்கும் நான் பதில் சொல்லினு இருக்கவேண்டிதாருக்கு என்றாள்.

 

அது இல்லம்மா, இந்த வண்டி நம்பர் உங்க வீட்டுக்காரர்தான்னு பாரும்மா என்று சீட்டைக்காட்டினார்.

 

அதெல்லாம் எனக்குத் தெரியாது சார், அவன் ஒரு குட்டி யான வண்டி வச்சிகினு ஓட்றான், நம்பர் லாம் தெரியாது சார், என்னா விசியம் என்றாள்.

 

அப்பெண்ணிடம் அந்த வீடியோவைக் காட்டினார். அதைப் பார்த்தவள் பிறகு நிதானமாகஉள்ள வாங்க சார்உட்காருவதற்கு நாற்காலி போட்டாள்.

 

குடிகார நாயி  ஊரெல்லாம் கடன் வாங்கி குடிக்குதுன்னு நெனச்சா, திருடவும் ஆரம்பிச்சிருச்சா, நான் அப்பவே நெனச்சேன் சார், ஒசந்த சாதி நாய் மாரி தெரிதே எங்கேர்ந்துயா புடிச்சன்னு கேட்டேன். தெருல சுத்தினு இருந்துச்சு புள்ள வெளாடுமேன்னுதூக்கிட்டு வந்தேன்னான் சார். அன்னிக்கு நைட்டு வீடும் திரும்ப சொல்லோ வண்டிய எங்கியோ மோதினு  கண்ணாடிலாம் ஒடஞ்சி போய்தான் கொண்டு வந்தான் சார். மறுநாள் காலைலயே டுயூ கட்லன்னு சேட்டு ஆள் வந்து வண்டிய தூக்கினு போய்ட்டாங்க சார். அவனுங்க வண்டிய தூக்கின கொஞ்ச நேரத்துலயே ஒரு போலிஸ்காரன் வந்து கூட்னுபோனான் சார். நானே இப்ப டேசனுக்குதான் கெளம்பிட்டிருக்கேன்.

 

எட்டுக்குப் பத்து அறைதான் வீடு முன்புறம் குளிக்க, கொள்ள எட்டடி இடம். நான்கு புறமும் கண்களை ஓடவிட்டார்.

 

என்னா சார் தேடற? நாய்க்குட்டியவா? தோ வந்துருவான் சார். எம்புள்ள ஸ்கூலுக்கு கூடலீவ் உட்டான் சார், தோ ஏரில வெளாடிட்டு இருப்பான். வந்துருவான் சார். நீங்க உங்க நாயகூட்டிட்டு போங்க சார் என்றாள்.

 

தெருவிலே ஓடும் ஒரு பையனைக் கூப்பிட்டுமணிகண்டன் அங்க ஏரில இருப்பான், சட்டுனு வரசொல்றா, டேசன் போணும்னு சொல்லுஎன்றாள் உடனே அவன் ஏரியை நோக்கி ஓடினான்.

 

டீ எதுனா குடிக்கறிங்களா சார், கேஸ்லாம் ஒன்னும் வேணாம் சார், எங்கியோ இடிச்சிட்டு வந்துட்டான்னுதான் புடிச்சிகினு போயிருக்காங்க. உள்ள வய்த்துக்கே ஒழுங்கான சோறுஇல்ல, நாய்க்கு எங்க போறது சார்? நீங்களே சொல்லுங்க என்று நியாயம் கேட்டாள்.

 

கொஞ்ச நேரத்தில் ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். அவன் குழந்தையப் போல தோளில் ஜாங்கோ இருந்தது.

 

ஏம்மா வரசொன்ன, ஜாக்கி கூட வெளாண்டு இருந்தேன், சூப்பரா ஓடறான், ஒடியாரான், ஜம்ப் பண்றான். அங்கே கணேசன் அமர்ந்திருப்பதை அவன் கவனிக்கவேயில்லை.

 

நாய்க்குட்டிய சாராண்ட குட்துர்ரா மணி, அது அவுங்குள்தாம். காசு போட்டு வாங்கிருப்பாங்க. குட்துர்ரா என்று கெஞ்சினாள்.

 

சுவிட்சைத் தட்டியது போல அவன் கண்களில் இருந்து அவ்வளவு கண்ணீர் கொட்டஆரம்பித்தது. நாயை இறுக்கமாக இன்னும் கட்டிக்கொண்டான். ஒளிவதற்கு வீட்டில்இடமேதும் இல்லாததால் சுற்றிலும் பார்த்துவிட்டு அங்கேயே நின்றான்.

 

அடம்புடிக்கக் கூடாது மணி, குடுத்துருபா, அது நம்புள்து இல்லப்பா என்று சொல்லியபடிகிட்ட போனாள். அவன் இன்னும் இறுக்கமாக நாயைக் கட்டிக்கொண்டு பின்புறம் சென்றுசுவற்றில் சாய்ந்து நின்றான். அதற்குமேல் நகர இடம் இல்லாததினால் அங்கேயேநின்றான். வாசல் படியோறம் கணேசன் அமர்ந்திருந்ததால் அவரைத் தாண்டி ஓடசாத்தியமில்லை என்பதால் அவன் அழுகை மேலும் கூடியது.

 

வலுக்கட்டாயமாக நாயை அவனிடமிருந்து பறித்து கணேசனிடம் தருவதற்காக நகர்ந்தாள்அப்பெண். “என் ஜாக்கிய தரமாட்டேன், தரவே மாட்டேன்என அடம்பிடிக்கையில்சூத்தாம்பட்டையில சூடு வச்சிருவேன், ஒழுங்கா குடுத்துடுஎன்றபோதும் அவன்வச்சிக்கோஎன்று பிடியை விடவில்லை. ஒருவழியாக அவனிடமிருந்து பிடுங்கி கணேசனிடம் கொடுத்தாள்.

 

கணேசனை ஜாங்கோ கண்டுகொள்ளவே இல்லை. ஓரிரு நொடிகள் அவர் மடியில்அமர்ந்திருந்தது பிறகு உடலை வளைத்து நெளிந்து கீழே இறங்கி ஓடிஅழுதுகொண்டிருந்த அப்பையனிடம் சென்று அமர்ந்துகொண்டது. அவன் அதற்காகவே காத்திருந்தது போல கையில் ஏந்தி அதற்கு முத்தமிட்டான். பக்கத்தில் இருந்த ஜமுக்காளைத்தைப் பிரித்து அதற்குள் இருவரும் ஒளிந்துகொண்டார்கள். இப்போது உள்ளிருந்து விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.

ரெண்டு நாளா ரொம்ப பழகிட்டான் சார். அவன் தூங்கசொல்லோ நான் கூட்னு வந்து ஜாக்கிய உட்டுர்ரேன் சார், நீங்க அட்ரஸ் குடுத்துட்டு போங்க சார் முந்தானையால் கண்ணைத் துடைத்துக்கொண்டே சொன்னாள்.

 

பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தார். “ஊசி போடறதுக்கு ஆவும்மாஎன்று சொல்லிவிட்டு வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தார் கணேசன்.

 

அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் கையை ஏந்திக்கொண்டிருந்தாள்.

 

 ***

-உமா கதிர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *