1.நாடகம்
நீ சன்னலைத் தட்டுகிறாய்.
சுற்றும்முற்றும்
பார்த்துவிட்டு
நான் சன்னலைத் திறந்தேன்.
ஆனால் என்னை
உன்னால் சந்திக்க முடியவில்லை போல.
அந்தப் பக்கம் நின்றுகொண்டு
‘இந்த ஒரு சன்னலுக்குள்
இன்னும் எத்தனை
சன்னல்கள் இருக்கின்றனவோ’ என
நீ புலம்புவதை நான் கேட்டேன்.
ஏனோ சந்தோஷமாக இருந்தது.
*
2.தேவதைக்கதை
ஒரு ஊரில்
தன்னைத்தானே துரத்திச்செல்லும்
பூனை இருந்ததாம்.
அதனுடைய எலியும் அது தானாம்.
தன்னைத்தானே
தப்பிக்கவிட்டதாம்.
அப்புறம்
மனந்திருந்தி
தன்னைத்தானே துரத்திப்போனதாம் —
நாயொன்று
தன்னைப் பார்த்துக் குரைப்பதை
எதேச்சையாகப் பார்த்ததாம்.
அடடே மறந்துவிட்டோமே!
அந்த நாயும் நான்தானே எனக்
குயில் போலக் கூவியபடி ஓடியதாம்.
இப்போது
ஒரு ஊரில்
தன்னைத்தானே துரத்திச்செல்லும்
பூனை இல்லையாம்.
நாய் இருந்ததாம் —
குயில் போலக் கூவும் நாய்
இருந்ததாம்.
பகலிலேயே
நிலவைப் பார்த்து ஊளையிடுதாம்.
*
3.முட்கள்
குழந்தைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றனர்,
பூங்காக்களில்,
கனவுகளில்,
வகுப்பறைகளில்,
பெரியவர்களின் முதுகுக்கு மேல் அல்லது
நட்சத்திரங்களுக்குக் கீழ்,
கடத்தல்காரர்களின்
சில காலடிகளுக்கு முன்னால்
அல்லது
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
சில சிறகடிப்புகளுக்குப் பின்னால் என
எப்போதும்,
யாரோ
எதுவோ
துரத்திக்கொண்டிருக்க,
குழந்தைகள்
ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
***
-ஜெ.ரோஸ்லின்