“டன் டன்டன் டன் டன் டன்டன் டன்” வாயாலே தப்புமேளத்தின் தாளத்தை அந்த இருண்ட அறைக்குள் வாசித்துக் கொண்டிருந்தான். மூத்திர வாடையும், ஆடைகளின் புழுங்கல் நாற்றமும் ஒரு சேர மூச்சடைக்கும் அறைக்கு அடிக்கடி வந்துப் போக இசக்கியம்மை எனும் ஒரு காரணம் போதாதா. இப்படி வாயலே மேளம் வாசிப்பதை அவளுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாகச் செய்வான். இசக்கியம்மையின் இடுப்புக்கு கீழ் மட்டும் கட்டிலில் நெளிந்ததும், மணிக்கு காரணம் புரிந்தது.

“அம்மா.. ஆச்சி ஆய் போயிட்டுனு நெனைக்கேன்.. சீக்கிரம் வாம்மா”

“அடுப்புல உலை கிடக்கு மக்கா.. உங்க ஆச்சிக்கு நேரமும் காலமும் இல்ல. சதா நேரமும் ஒன்னுக்கு இருக்கனும், இல்லப் பேழனும்.. மனுசிக்கு வேற வேலை இல்ல..ஒத்தப் பொம்பளையா எத்தன வேலத் தான் பாக்கதுக்கு..”

“நா வேணும்னா கழுவி விடட்டா ஆச்சிக்கு..”

மணி சொல்லி முடிப்பதற்குள் அம்மை அறைக்குள் நுழைந்தாள்.

“லேய் நீ வெளிய நில்லு.. சுத்ததுக்கு ஒன்னும் குறையில்ல..கொஞ்சம் பொறுக்கலாம்..ஒடனக்கொடன பண்டுவம் பாக்க முடியுமா..” அம்மை கையில் நீர் வாளியைக் கொண்டு வந்தாள். இசக்கியம்மையும் நெடுநாளாய் படுக்கையிலே கிடப்பதால் குண்டிப் பழுத்து இரத்தம் காய்ந்து புண்ணாய் இருந்தது. அவளின் மலவாயைக் கழுவி விட மணிக்கு பிரச்சனை இருப்பதாய்த் தோணவில்லை. இசக்கியம்மை ஆச்சியாக இருந்தாலும் பெண்ணாக இருப்பதால் லெட்சுமி அனுமதிப்பதில்லை. வாரம் ஒருமுறை குளிப்பாட்டி விடுவதும் அவள்தான், என்னவோ இவையெல்லாம் நடக்கும் போது ஏகபோக ஏச்சுக்கள் வாயில் இருந்து உதிரும். ஆச்சி படுக்கையில் கிடக்கும் முன்னே, தினமும் காலை குளித்துவிடுவாள். மழையோ! குளிரோ! அதற்கு விடுமுறையில்லை.

நடுத்தெரு முகப்பில் ஆச்சி நடந்து வருவது தெரிந்தாலே மணி ஓடிச் சென்று அவளின் கழுத்தில் ஏறித் தொங்குவான். கூனி நடக்கும் அவளின் முதுகு இன்னும் குனிந்தாலும், பேரனை அள்ளி அணைத்து பின்கழுத்தில் முத்தமிடுவாள். கையில் வைத்திருக்கும் மஞ்சப்பையில் இருக்கும் பொறியுருண்டையைக் கொடுப்பாள். இசக்கியம்மை வீட்டுப் படியேறும் போதே லெட்சுமி மாமியாருக்கு பிடித்த கட்டங்காப்பிக்கு அடுப்பில் வெந்நீர் வைத்து விடுவாள். “நீ ஒருத்திதான்ட்டி வந்த உடனேயே கடுங்காப்பி போட்டு தாற.. ஆராம்பலி காரி கேட்டாலும் கொடுக்க மாட்ட.. அவளுக்கு நா எதுவும் கேட்டா மட்டும் காது செவிடு ஆயிடும்.. என்னதான் இருந்தாலும் நீ சொந்த ரத்தம்லா மக்கா..”.

பெற்றது மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள். சொத்தும் பிரித்து அவரவர் பாடுக்கு, பாட்டா சாகும் முன்னே, இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திட்ட நாள், முதல்முறையாக அவர்கள் காரில் வந்தார்கள். இடையே பிரபு ஹோட்டல் பிரியாணியும், விஜய் ஹோட்டல் சார்ஜாவும் வந்து போனது. மூத்தவன் ஆரல்வாய்மொழியில் இருக்க, பாட்டாவும் ஆச்சியும் பூர்விக வீட்டை அவனுக்கு கொடுத்தார்கள். அவனுக்கு பெண் எடுத்ததும் அதே ஊர்தான். வந்தவள் பங்கில் வயலும் தோப்பும் கிடைத்து. அதுவே போதும் வருமானத்திற்கு. பாட்டாவும் ஆச்சியும் அங்கேயே பூர்வீக வீட்டில், அவர்களுக்கு என ஒரு முறியை ஒதுக்கிக் கொண்டனர். நடுவில் உள்ளவன் அதாவது மணியின் அப்பா ஒழுகினசேரியில் குடியிருந்தான், சொல்லிக் கொள்ளும் படி பெரிய வேலையில்லை, மீனாட்சிபுரம் லாட்ஜ் ஒன்றில் மேனேஜர். இசக்கியம்மையின் அண்ணன் மகளைத்தான் அவன் கட்டியிருந்தான். இதனாலே இவளுக்கு இசக்கியம்மையோடு இணக்கம் அதிகம். கடைசி உள்ளவனுக்கு சென்னையில் சோலியிருக்க, பெண்ணும் அங்கேயே எடுத்து, சென்னையிலே குடியேறிவிட்டான். ரெண்டு பெண் பிள்ளைகளில் ஒருத்தி பாறசாலை ஆர். டி. ஓ மனைவி, இன்னொருத்தி தோவாளை பூ வியாபாரி மனைவி, இவளுக்கு மட்டும் இந்த வீட்டில் காதல் கதை இருக்கிறது. ஆக, எல்லோருக்கும் ரொம்ப வேண்டாதவள் இவள்தான். ஆனாலும் பாட்டா பங்கைச் சரியாகப் பிரித்தார். குமைச்சல் இருந்தும் அண்ணன் தம்பிகள் பாட்டாவின் பேச்சை எதிர்ப்பதில்லை. நல்லவர், இதெல்லாம் நடந்து கொஞ்ச நாளிலே தேர்ப் பாடையில் ஊரைச் சுற்றி சவக்குழி சென்றார். மணி அன்றைக்குதான் தப்பு மேளம் முழங்க, பூப்பந்தலில் முறுக்கும், ஜாங்கிரியும், லட்டும், தொங்கும் பாடையில், ஜம்மென்று கருப்பு கண்ணாடிப் போட்டு ஊர்வலம் போகும் பாட்டாவை ஆச்சர்யமாய்க் கண்டான். முன்னே நாட்டுப் பட்டாசுகள் வெடிக்க, சென்றப் பாதையெல்லாம் செவ்வந்தி, கோழிக்கொண்டை பூக்களின் குவியல்.

சங்கதியெல்லாம் பாட்டா செத்து ஆண்டு ஒன்றானதும் பேச்சு வார்த்தைக்கு வந்தது. தெவசம் நடந்த அன்றைக்கு வீட்டில் எல்லோரும் இருந்தார்கள். மணியின் பெரியப்பா காரணமாகத் தான் ஊர்த் தலைவரையும் வீட்டிற்கு அழைத்திருந்தார். “அண்ணே நா ஒருத்தனே கெடந்து பாக்க முடியாது.. அய்யா இருக்க வர, இவளுக்கும் வாயி சும்மா கிடந்து.. வருஷமும் ஒன்னாச்சு.. தெவசம் முடிய வர நானும் பேசாண்டாம்ன்னு இருந்தேன்.. இனியும் முடியாது.. நா மட்டும்தான் இவாளுக்கு பொறந்தன.. மத்த நாலும் குத்துக் கல்லாட்டு தான இருக்கு.. ஆளுக்கு கொஞ்ச நாலு பாக்கட்டும்..கூட இப்போ கண்டதையும் பேசிட்டு வீட்டுல பெகலத்த உண்டாக்கி விடுகா..”

“சரிடே மூத்தவன் நீயே இப்புடி பேசலாமே..என்னதான் இருந்தாலும் அம்மைலா.. கொஞ்சம் நெஞ்சுல ஈரம் வேண்டாமா?” ஊர்த் தலைவர் பதிலுக்கு கேட்டார்.

“அண்ணே.. ஈரம் கீரம்னு பாத்தா.. நா நிம்மதியா இருக்காண்டாமா?..”

“நீ சொல்லதையே கேப்போம்.. என்ன அண்ணன் தம்பி மூணு பேரு.. அதுல ஒருத்தன் மெட்ராஸ்ல இருக்கான்.. என்ன பண்ணனும்னு சொல்லுக.. நீதான் முடிவு எடுத்து இருப்பியே”

“பங்கு அஞ்சுன்னு பிரிச்சி. பாக்கதுக்கு மட்டும் மூணா? ஏன் ரெண்டு பொட்டையும் நல்லாத்தானே வாழுகு. எவளுக்கும் ஒரு குறையில்லை” பதிலுக்கு வாக்குவாதம் செய்தார் பெரியப்பா. “உன் வீட்டு சக்கரத்த பங்கு வைக்கல கேட்டியா டே…அப்பனுக்க இரத்தம் அஞ்சுலயும் ஓடுகுன்னா…சக்கரமும் அஞ்சுக்கு போகும். பிரிச்ச அன்னைல இருந்து வயிறு காயு பாத்தியா… நீயும் என் வயித்தில தான் பொறந்தயா..” ஆச்சி அங்கலாய்க்க, பெரியப்பா கத்த ஆரம்பித்தார்.

“சரி டே… அம்மைக்க முடிவு என்னன்னு கேப்போம்.. வசமா பெரிய வீட்டையும் எழுதி வாங்கிட்டு.. இப்போ அம்மையையும் பாக்க முடியாதுனு சொல்லுக.. நானும் தம்பியும், தங்கச்சிகளும் நீ கொடுத்த பங்க மட்டும் வாங்கிட்டோம்.. எதுத்து ஏதாச்சும் கேட்டோமா.. உன் குணம் ஏம்ல இப்படி ஆயிட்டு..” அப்பா இடைமறிக்க.

“பாக்க ஆளுக்கு தானே கஷ்டம் தெரியும்.. நீங்க நாரோயில்ல இருக்கீங்க.. நாங்கதானே கூட கிடந்து பாக்கது..” பெரியம்மா பேசிக் கொண்டே பெரியப்பா பக்கத்தில் போய் நின்றாள்.

“மூணு ஆம்பள பிள்ளையும் மாசம் ஆளுக்கு கொஞ்சம் காசு கொடுக்கணும்.. என் மவராசன் எங்களுக்குன்னு ஆராம்பலி வீட்டுல ஒதுக்குன முறி மட்டும் போதும்.. பொட்டப் பிள்ளைகள் தரது நியாயம் இல்ல..” ஆச்சி கடைசி வரை விட்டுக் கொடுக்கவேயில்லை.

ஊர்த் தலைவர், “லேய் மூத்தவனே, அம்மைய பாக்க கணக்கு பாக்காத.. உனக்கு இருக்க வசதிக்கு ஒத்தையிலே பாக்க தெம்பு இருக்கு. பெரிய மனுஷத் தனமா பேசுடே..” பேசிமுடித்தார்.

ஒருவகையில் அப்பாவும், சித்தப்பாவும் மாதம் காசு கொடுக்க சம்மதிக்க பெரியப்பா ஆச்சி அங்கேயே இருக்க சம்மதித்தார். பின்னே ஐந்தும் பெற்று மகராசன் கூட வாழ்ந்த வீடு, ஒட்டுத் திண்ணைப் போதாதா? அவள் வாழ? அருமாந்தப் பிள்ளைகளுக்கும் தெரியாமல் என்ன இருக்கிறது. ஆனால் பூர்வீக வீட்டில் அடுக்களை தான் இரண்டானது.

பாட்டா புத்திசாலி, பிள்ளைகளின் அருமை பெருமை அறிந்தவர். ஆகவே தான் சாகும் முன் பிள்ளைகளுக்கு தெரியாமல் இசக்கியம்மை கையில் காசாய் கொஞ்சம் கொடுத்து வைத்திருந்தார். இவளும் கெட்டிக் காரிதான். பிள்ளைகள் கொடுக்கும் பணத்தையும் சேர்த்து வட்டிக்கு விட்டாள். வெள்ளைச் சேலையில், திருநீற்றை நெற்றி முழுக்க பூசி, பூதப்பாண்டித் தேர் போல ஆடியாடி வட்டிப் பணம் கேட்டுப் போவாள். பொன்னும் பொருளும் சேர்க்கவா? யார் யார் அந்த பாக்கியவான்கள் வட்டிக்கு வாங்கியது? உயிரோடும் உயிரற்ற குடிகாரன் பொண்டாட்டிகள். மதுரை மீனாட்சி கொஞ்ச நாள் வாடகைக்கு இருந்த கோயிலில் தேவாரம் பாடியும் கிடைக்காத நிம்மதி இதில் கிடைத்ததோ என்னவோ!. கூடவே ஒடுக்கத்தி வெள்ளி குளத்தங்கரை சுடலையைப் பார்க்கப் போவாள். மூத்தவன் வட்டிக் கணக்கை கேட்டாள் ஆடிப் பூவெடுப்பாள். வட்டி பிரிக்கும் சமயம் வீட்டு சமாச்சாரங்களையும் வெளியில் விடுவாள். சிலநேரம் விட்டவை சில பத்திக் கொண்டு அவள் பின்னாலே வீட்டுப் படியேறும். “காசை எல்லாம் சேர்த்து கோட்டைக கட்டி எந்த மகாராசாக்கு கொடுக்க போற” மூத்தவன் கேட்டால், “உனக்க முதலு உண்டா இதுல… கோட்டை கெட்டுவேன்… ஆத்துல விடுவேன்..” மல்லுக்கு நிற்பாள். ஆச்சியின் இந்த குணம் மூத்த மருமகளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

ஐந்து மக்கமாரும் பெற்றப் பிள்ளைகள் அவளுக்கு ஒன்றல்லவோ? வாரம் ஒருநாள் பெயரனை, பெயர்த்தியை முறைவைத்து பார்க்க மக்கமார் வீட்டுக்குப் போவாள். மக்கமார் வீட்டுப் படியேறினாலே பேரப் பிள்ளைகள் குதித்து விளையாடும். பொறியுருண்டை, மிட்டாய், பழம் வாங்கிப் போவாள். காலை சென்றால் மதியம் எங்கு இருக்கிறாளோ, அங்கேயே சாப்பிட்டு இருட்டும் முன்னே வீட்டிற்கு திரும்பிவிடுவாள். இப்படித்தான் கடைக் குட்டி வீட்டிற்குப் போனவள் தோவாளை சானலில் சும்மா கிடக்காமல் குளிக்கப் போய் பாசியேறியப் படியில் கால் வைத்து விழுந்தவள், மயிலாடி வைத்தியசாலையில் இருபது நாள் இருக்கப் போய், மீண்டும் பெரியப்பா பழையப் பாட்டை ஆரம்பிக்க, ஊரார் கூடி மீண்டும் முறி ஒதுக்க பெரும்பாடு ஆனது.

பிள்ளைகள் இடையே இதனாலே மனஸ்தாபம். மூத்தவனைத் தவிர யார் வீட்டிலும் தஞ்சம் புக ஆச்சி விரும்பவில்லை. இத்தனைக்கும் மணியின் அம்மா சொந்த மருமகள். பூர்வீக வீட்டை விட்டு அவளால் எங்கும் செல்ல முடியவில்லை. பாட்டாவின் நினைவுகள் அந்த பெரிய வீட்டைச் சுற்றி தானே கிடக்கிறது.

மணியின் வீட்டிற்கு ஆரல்வாய்மொழியில் நடக்கும் எல்லா சமாச்சாரங்களும் ஊர்த் தலைவர் மூலம் வந்துவிடும். பெரியப்பா வீட்டில் நடக்கும் பெகலங்களில், பெரியம்மா ஆச்சியை அடித்து விடுகிறாள் எனும் செய்தி மணி வீட்டுக்கு வர, அப்பா ஆச்சியை வண்டிப் பிடித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். அன்றைக்கு அங்கே நிகழ்ந்தது பெரியச் சண்டை, அண்ணன் தம்பி இடையே அடிபிடி தான் நடைபெறவில்லை.

அப்படித்தான் மணிக்கும் இசக்கியம்மைக்கும் கதைக்க அந்த வெந்நீர்ப்புறை கிடைத்தது. பழைய பிலா மரத்தில் செய்த ஒற்றைக் கட்டில் இருக்க அப்பாவிற்கும் வசதி ஆனது. வந்த புதிதில் லெட்சுமிக்கு இசக்கியம்மை பெரும் உபத்திரமாக இல்லை. மணி நண்பர்களோடு களியெல்லாம் முடித்து வெந்நீர்ப்புறையில் ஆச்சியிடம் கதைக் கேட்க உட்காருவான்.

“எனக்கு அஞ்சு வயசு இருக்கம்போ ராத்திரி முழுக்க தப்புச் சத்தம். அப்பா காலம்பற எழுப்பி கூட்டிட்டுப் போனாரு…நான், மூத்தக்கா, மூத்தண்ண ரெண்டு பேரு, அப்புறம் தங்கச்சி எல்லோரும். ராமசாமி பாட்டாவ உக்காரா வச்சி .மால எல்லாம் போட்டுருக்கு. ஊரே தேரோட்டம் மாறி இருக்கு. அவருக்க ரெண்டு பொண்டாட்டி, அவுக மக்கமாறு. பேரன் பேத்தின்னு கூட்டம். நம்புரான் விளையாட்டு போல சப்பரத்துல கூட்டிட்டு போனாங்க. ரெண்டு நாளும் ஊரே அங்கதான் சாப்பிட்டுச்சு. அடிந்தரம் சாம்பாரு, பருப்பு,அவியலு கூட சிறுபயறு பாய்சம். அடுத்த நாள் கோழிக் குழம்பும் முட்டையும். இப்போவும் கண்ணுலயே நிக்கி மக்கா. அதுக்கு கொஞ்சமும் கொறைச்சல் இல்ல நம்ம தாத்தாவக் கூட்டிட்டு போனது, அதே மாறி என்னையும் தேர் பாடைல கூட்டிட்டு போனும் மக்களே. கருப்பு கண்ணாடியை மறந்துராதே. சரியா மக்கா” புட்டிக் கண்ணாடியில் முட்டைப் போல விழிகள் தெரியப் பேசுவாள்.

மணியும் வெந்நீர்ப்புறையில் யாரும் இல்லாத நேரம் மட்டும், ஆச்சியின் தலை மாட்டில் நின்று “டன் டன்டன் டன் டன் டன்டன் டன்” என்று வாயாலே தப்பை ஒலிக்க விடுவான். ஆச்சி சிரமமாய் தலையைத் தூக்கி பொக்கை வாய் விரிய அவனைப் பார்த்து சிரிப்பாள். அவளும் தன் பங்கிற்கு எப்படி அவன் பாடை முன் ஆடுவான் எனக் கேட்டு குதூகளிப்பாள். “திங்கு திங்கு திங்குன்னு ஆடணும். ஆச்சி பாடைல கிடந்து பாப்பேன். பேரன் எப்புடி ஆடுகேன்னு” ஆச்சி அவனிடம் எப்பொழுதும் சொல்லுவாள், அந்த குரல் உடைந்து போய் ஆட்டின் கனைப்பை போலவிருக்கும். “எம்பேரன்ல நீ தாம்ல தாத்தாக்க ஜாடை… என்ன நாடிலாம் உங்க அம்மைதான்..” ஆச்சி சொல்லும்போதே மணி அவளின் நாடியைப் பிடித்துக் கொஞ்சுவான். “நா சின்னதுல வடக்க கொளத்து கரைக்கு குளிக்க போவேன். ஒருக்கா நல்ல மழ வெள்ளம் நிறைஞ்சு கிடக்கு. பிடி கிடைக்காம குண்டுல காலு வச்சு முங்கிட்டேன். அன்னைக்குன்னு பாத்து கூட யாருமே இல்ல. தண்ணி முழுக்க தொண்டல இறங்கி கனைக்கேன். ஆளு அரவமே இல்ல. தீடீர்னு முடிஞ்சு கெட்டுன கொண்டையும், உடம்பு முழுக்க சந்தனமும் பூசிட்டு, ஒல்லி மீசைய முறுக்கி விட்டுட்டு ஒருத்தரு என்ன கரைல தூக்கி எரியாரு. போதம் இல்லமா கிடக்கேன். நேரம் ஆயிட்டுனு அய்யா தேடி வந்தவரு வீட்டுக்கு கொண்டு போனாரு. அய்யாட்ட கதைய சொன்னேன். அடுத்த ஒடுக்கத்தி வெள்ளி ஆராம்பலி வடக்க குளத்தாங்கரைல ஒரு சுடலை நிப்பான்ல அவனுக்கு சிறப்பு வெச்சு, சேவல அறுத்து பொங்கல் வச்சாரு. சமையதுக்கு முன்னாடி வர அங்க போவேன். அப்புறம் அப்பா விடல. தாத்தா செத்துதான் பொறவு போக ஆரம்பிச்சேன். இங்கனயும் மாசாண சுடலை ஒழுனேசேரில நிக்கான். சித்திரை கொடைக்கு ஒரு தடவ போகும் போது பாத்துருக்கேன். அதே சுடலைய பாத்த மாறி இருந்துச்சு. அவன்ட கேட்டதெல்லாம் நீ கொடுத்த உசுர, சந்தோசமா நீ தான் அனுப்பி வைக்கணும்னு. இன்னா தலமாட்டுல இருக்க திருநாரு அவன் பீடத்துல உள்ளதுதான். எப்பா சுடல இன்னும் கஷ்டப் படுத்தாதே” கூறிவிட்டு விசும்பினாள்.

“எனக்கு யார் மேலயும் வருத்தம் இல்ல மக்கா. எல்லாவனும் அவனவன் பாட்டுக்கு போறான். கழியாம கிடந்தது போதும். இனி நாளைக்குன்னு ஒன்னு வேண்டாம். கஷ்டப் படாம போனும். இன்னியும் எவனுக்கும் கஷ்டம் கொடுக்காண்டாம். சந்தோசமா ஊருக்கே கேக்க தப்பு அடிச்சு போனும், நான் போயிட்டேன்னு என் மக்கமாறு மூணு பேரும்தான் குதிப்பான். பொம்பளப் பிள்ளைகளு நினைக்கது எனக்கு அறியாது.” கள்ளச்சிரிப்போடு சொன்னாள்.

மணிக்கும் மாடன் கதையெல்லாம் அத்துப் படி. வில்லுப் பாட்டை அதே ராகத்தில் ஆச்சியின் முன்னே பாடுவான். அவளுக்காகவே தலைமாட்டில் இருக்கும் திருநீர் தீர்ந்தால், அப்பாவிற்கு தெரியாமல் மாசாண சுடலை கோயிலுக்கு சென்று வருவான். ஆச்சி சொன்ன சுடலை மாடன் கதையெல்லாம் உண்மையா என அப்பாவிடம் கேட்டால் “பாதி கிறுக்கு ஆயிட்டா உங்க ஆச்சி. சீக்கிரம் போய் சேந்தா நல்லது” அப்பா கோபமாய் சொல்லிவிடுவார். ஆச்சியிடம் கதைகளுக்கு பஞ்சமே இல்லை, திருவாங்கூர் மகாராஜா ஆரல்வாய்மொழி வந்து போனது, ஊரில் வெள்ளம் புகுந்தது. வெள்ளைக் காரன் குதிரை வண்டியில் ஊர்க் குளத்தில் வெள்ளம் பார்வையிட வந்தது, குளித்துக் கொண்டிருந்த ஆச்சி மாராப்பை மறைத்துக் கொண்டு ஓடியது என நீளும்.

மூத்தவன் வரும் நேரம் மட்டும் வீடே மயான அமைதியில் நிரம்பும், சரியாய் அப்பாவும் அந்நேரம் வெளியே சென்றுவிடுவார். அப்பாவிற்கும் எல்லோரின் மீதுள்ள கோபம் குறைந்தப் பாடில்லை. அம்மைக்கு பெரியப்பாவும் முறைக்கு அத்தான், ஆக இருவருக்கும் இடையே பெரிதாய் எந்த பூசலும் இல்லை. மாறாக பெரியம்மைக்கும் அம்மைக்கும் பேச்சே இல்லை.

மார்கழி பிறந்ததும், மழை மாறி மாறி பெய்தது. ஆச்சிக்கும் உடம்பெல்லாம் நடுங்கி, சிலநேரம் உடலே தணுத்து போகும். லெட்சுமியும் மணியும் காலையும் கையையும் கோபால ஆசான் காயத்திருமேனி கொண்டு தேய்த்து சூடாக்கி விடுவார்கள். கொஞ்சம் நடந்து போய் அவள் தேவைகளையாவது முடித்த ஆச்சி, பங்குனி வர இரண்டு காலும் எடுக்க முடியாது படுக்கையானாள். உடன்பிறந்தார் பங்கு அதிகம் வேண்டுமென அப்பா சண்டைப் போட்டார். பிறகு வைத்தியம் பார்க்க ஒருத்தரின் சக்கரம் மட்டும் கரைவதை அவரும் விரும்பவில்லை போலும்.

வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும். சிலநேரம் சிறுநீரும் சீலையிலே அவள் அறியாமல் போய் விடும். நரகல் எடுத்து ஒதுக்க வாளி அங்கேயே இருந்தது. பெயரன் பெயர்த்திகள் வந்து பார்த்தாள் ஆச்சி சிரிப்பாள். மருமக்கமாரைக் கண்டாலும் பேசுவதில்லை, லெட்சுமி மட்டுமே இதில் விலக்கு. ஏசினாலும் பேசினாலும் கூட கிடக்கிறாள் அல்லவா. ஒருநாள் ஆச்சி அவளின் மஞ்சப் பையில் இருந்து முடிந்து வைத்திருந்த ருபாய் நோட்டையும், ஆச்சியின் மோதிரத்தையும் அம்மையிடம் கொடுக்க அவள் கால்மாட்டில் விழுந்து, அம்மை அழுததை மணி ஒளிந்து நின்றுப் பார்த்தான்.

“எப்பா.. கச்சை சத்தம் கேக்கு.. தாளம்பூ, களப மணம் எடுக்கு..” ஆச்சி ராத்திரி நேரத்தில் கத்த ஆரம்பித்தாள். மணி, அப்பா, அம்மை எல்லோரும் ஓடி வந்து பார்த்தனர். ஆச்சி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள். “நா பாத்தேன் மக்கா.. சுடல என்ன கூட்டிட்டு போக வந்துட்டான்.. கச்சை சத்தம் கேக்கு..” ஆச்சி புலம்ப, “எங்க அய்யாவுக்கு கட்டின மாறி தேர்பாடை தாம்ல அம்மைக்கு கட்டுவேன். தப்பு அடிச்சு அவள சந்தோசமா கொண்டு போய் குழில கொள்ளி போடுவேன். சின்னதுல பழையத தொவையல்ல பிசஞ்சு அஞ்சுக்கும் ஒவ்வொரு உருண்டையா கொடுப்பா. அவ காலம் முடிஞ்சு. போறப்பையோ சந்தோசமா போட்டும்”, அப்பா வெந்நீர்ப்புறையில் கட்டிலின் கால்மாட்டில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தார்.

காலையிலே வீட்டில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்கவே விழித்தான். அன்று ஒடுக்கத்தி வெள்ளி ஆனால் விடுமாடன் கோயிலில் சாமி பாட்டு ஒலிக்கவில்லை. எழுந்து கண்ணில் கோழையைத் துடைக்கும் போது அம்மை வெந்நீர்ப்புறையில் ஒப்பாரி வைக்கும் சத்தம் கேட்டது, வெளியே போனான் பாலு தாத்தாவும், லெட்சுமணன் மாமாவும் வீட்டு முகப்பில் பச்சை ஓலையைக் கட்ட, எங்கோடி தாத்தா வெளியே மர நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அப்பா வாசலில் நிற்க கூடவே பெரியப்பாவும் அவர் பிள்ளைகளும், பக்கத்தில் சித்தப்பாவும் தம்பி மார்களும் நின்று கொண்டிருந்தார்கள். நேற்றுதான் அப்பா ஆச்சி மோசமாய் இருப்பதாக சித்தப்பாவிற்கு தகவல் கொடுத்திருந்தார். முதல் அத்தை மங்களாவில் இருக்க, கடைசி அத்தை இன்னும் வரவில்லை. ஓடி ஆச்சியைப் பார்க்க போனான். அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். வெளியே அப்பாவும் பெரியப்பாவும் பேசிக் கொள்வது கேட்கவும் அங்கே ஓடினான்.

“வயசுக்கு மட்டும் மரியாதை கிடையாது எங்கோடி மாமா. இப்போ என்னா தேர் பாடை எம்பைசால கட்டுகேன்..இவன் ஒரு பைசா தர வேண்டாம்..வந்து மூத்தவனா கொள்ளி போட்டா போதும்.. கழியாம கிடைல கிடக்கும் போது எண்ணி எண்ணி தந்தப் பயக்க..பேசுகானாப் பேச்சு” அப்பா கோபத்தோடுப் பேச.

“லேய், அடிச்சு சென்னிய பேத்துருவேன் பாத்துக்க. செலவு எல்லாவனும் பண்ணனும். வந்த அப்பமே பாத்தேன். கைல அவளுக்க மோதிரம் இல்ல. எல்லாம் வரும்படி வருகுன்னு தானே பாத்த.., சின்னப் பைய புத்தி எனக்கு தெரியாதா. ஒனக்க ஊருன்னி பேசுகையோ.. என்ன இருந்தாலும் ஆராம்பலி காரி தா…வண்டிய பிடிச்சு அங்க கொண்டு போயிருவேன் பாத்துக்க. இருந்த சீருக்கு பெரிய பகட்டு எல்லாம் வேணாம் கேட்டியா… பொது செலவு அஞ்சு பேரும் பண்ணனும்.. இதுல உனக்க விருப்ப புண்டைக்கெல்லாம் இடம் இல்ல” பெரியப்பாவும் சூடானார். சித்தப்பா அப்பா பக்கம் வந்து நின்றார்.

“மோதிரம் எனக்கு மயிறு. எவ்வளவு பொடைல போட்டாலும் போதாதே..” அப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே லெட்சுமணன் மாமா அப்பாவை இழுத்துக் கொண்டு சென்றார். அம்மை வெளியே ஓடி வந்து பார்க்கையில் அப்பா தூரமாக போய்விட்டார். மணியின் கூட்டுக் காரர்களும் சேதி தெரிந்து வரவும் அவர்கள் கோயில் திண்டில் அமர்ந்து கொண்டார்கள்.

“மணி அப்போ தேர் பாடை கட்ட ஆளுலாம் எப்போ வரும். தப்பு சொல்லியாச்சா” முத்து வந்ததில் இருந்தே நச்சரித்தான். தேர்ப் பாடை கதையை மணிதான் அவர்களுக்கு சொல்லியிருந்தான். முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு “பெரிப்பா சண்டை போடுகு. அதுலாம் ஒன்னும் வேண்டாம்னு. பாப்போம் மக்கா..ஆச்சி பாவம்” மணி சொன்னான்.

அப்பா வரவும் கூட்டம் ஏற்கனவே வீட்டு வாசலில் கூடியிருந்தது கொஞ்சம் விலகியது. கடைக் குட்டி அத்தையும் வந்தாச்சு, மாமா மாத்திரம் கூட்டத்தில் நிற்காமல் ஒதுங்கி நிற்க, லெட்சுமணன் மாமா அவரைக் கூட்டிக் கொண்டு வந்தார். பெரியப்பா, பெரியம்மையின் உடன்பிறந்தோரைக் கூட்டிக் கொண்டு, அப்பா அருகே வரவும் எல்லோரும் ஏதோ குசுகுசுத்தனர்.

“பொம்பளைக்கு ஒரு மயிரும் தேர்ப் பாடை வேண்டாம்..நல்ல சாவும் இல்ல.. கிடைல கிடந்து தான் போய் இருக்கா..” பெரியப்பா கத்தி சொல்ல, அப்பா எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்.

உள்ளேயிருந்த பெண்கள் ஆச்சியை குளிக்க வைத்து வெள்ளை சீலைக் கட்டி நெற்றியில் பட்டையிட்டு ஆச்சியின் புட்டிக் கண்ணாடியை, சந்தனம் கொண்டு மூடிய கண்களின் மேலே ஒருவாரு திணித்து, பத்திக் கொளுத்தி மேலே சொருகியிருந்த ஒரு சீப்பு பழத்தின், அரிசி மணி நிறைந்த நாளியின் முன்னே கிடத்திப் போட்டிருந்தனர்.

அப்பா தலையில் கைவைத்து வெளியே அடுத்த வீட்டு நடையில் உட்கார்ந்து இருந்தார். பாடைகள் கட்ட மூங்கிலும், வைக்கோலும், சணலும் வந்தது. மண் சட்டி ஓரமாய் இருந்தது, ஆட்கள் பாடைக் கட்டும் வாக்கிலே தெரிந்தது அது தேர்பாடையல்ல. பெரியப்பா, அப்பா இருக்கும் இடத்திற்கு அருகில் கூட வரவில்லை. நீர் குடம் எடுக்க ஆட்கள் போகும் போது லெட்சுமண மாமா மணியையும் இழுத்துச் சென்றார். வெள்ளை வேட்டி விரித்து நாலு முக்கிலும் மாவிலை கொப்பு முறித்து உயரமான ஆட்கள் நால்வர் பிடிக்க கெண்டியில் பெரியப்பா கமுத்தியத் தேங்காயை பிடித்துக் கொண்டு நடக்க,..அப்பா, சித்தப்பா பின்னால், பெயரன்களோடு மணியும் அவர்களால் முடிந்த குடத்தை தோளில் தூக்கிக் கொண்டு சட்டையில்லாமல் திருநீர்ப் பட்டை உடல் முழுக்க பூசியிருக்க ஆச்சி கடைசியாய் குளிக்க நீர்குடம் சுமந்தபடி நடந்தார்கள். எல்லா சடங்கும் நடக்க, அப்பா முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது மட்டும் மணி தெவிங்கி அழுதான். இனி வெந்நீர்ப்புறையில் கதை சொல்ல யார் இருக்கிறார்.

பாடை தூக்கி முன்னே பின்னே மூன்று முறை நகர்ந்து ஒரு அடி முன்னால் நடக்கும் போது வீட்டில் பெண்களின் அழுகைச் சத்தம் கூட, திரும்பி மணி அவர்களைப் பார்த்தான். பெரியம்மை முதல் ஆளாய் தெவிங்கி அழுதபடி வீட்டின் வாசலில் நின்றாள்.

ஆச்சி ஆடி ஆடி செல்ல தேர்பாடை இல்லை, அவள் கேட்ட கருப்பு கண்ணாடி வாங்கி வைத்திருந்தான் அதுவும் போட்டு விடமுடியவில்லை. பொங்கிய அழுகையை அடக்கி கொண்டு முத்துவுடன் பேசாமல் நடந்து வந்தான். அப்பா எதுவும் பேசமால் கொள்ளிச் சட்டியை எடுத்துக்கொண்டு முன்னே நடக்கும் பெரியப்பாவின் பின்னால் லெட்சுமண மாமாவிடம் பேசியபடி நடந்தார்.

பாலு தாத்தா குழியின் பக்கம் நின்று பாடை கவிழ்க்க உதவினார். ஒடுக்கத்தி வெள்ளி ஆதலால் மாசாண சுடலைக்கு யார் வீட்டு சிறப்போ! கூட்டம் இருந்தது. ஆண்கள் வாய்க்கரிசி போடும் போது வரிசையில் மணியும் போடப் போனான். இடது கை முட்டியை திருப்பி வாயில் போடவும் சரியாய் மாசாண சுடலைக்கு தீவாரணைக் காட்ட, வெண்கல மணிகள் ஒலிக்க, கூடவே மாடன் அழைப்பு அடிக்கும் சத்தம் கேட்டது. வாயில் “டன் டன்டன் டன் டன் டன்டன் டன்” என முழங்கினான். ஏனோ கை கால்கள் பதற உடலெல்லாம் குலுங்க, வெட்டு வந்தது போலத் திமிறினான். மாடன் சாமி கொண்டாடிக்கு சன்னதம் வந்தவன் போல கருவிழிகள் மேலேற எரிக்குழியில் கிடந்த இசக்கியம்மை முன்னே முழங்காலிட்டு ஆட, எல்லோரும் அவனைப் பிடிக்க, கண்ணில் நீர் கசிந்து நாடியில் இறங்கியது. பெரியப்பா “பிள்ளையை தூக்கி ஒதுக்கு” எனக் கத்தினார். மூன்று ஆண்கள் சேர்ந்தும் அவனை அடக்க முடியவில்லை. அப்பா மணியின் உடலை இருக்கி, நெஞ்சோடு அணைத்தார். மணி முனகுவது அப்பாக்கு மட்டுமே கேட்டது, “அவ சந்தோசமா போட்டும். அவ சந்தோசமா போட்டும்”. அப்பா திரும்பி குழியைப் பார்க்கும் போது, பொக்கை வாய் தெரிய இசக்கியம்மை சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

***

-வைரவன்

Please follow and like us:

1 thought on “தேர்ப்பாடை – வைரவன்

  1. என் ஆச்சி (அப்பாவோட அம்மா) இப்படியெல்லாம் என்கிட்ட கேட்டா.
    அவ யோகம் ஜாம் ஜாம்னு தார தப்பட்டையோட ஆடி ஆடி போன. ஊர்ல வேற யாரும் அப்படி போனது கெடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *