கிழக்கிலங்கையின் மண்வாசனை அமைப்பியலினையும் நிலவரசியல் தொடர்பாடலினையும் படைப்புக்களின் ஊசலாட்டத்தில் சாமர்த்தியமாகக் கடத்தியவர் தீரன் ஆர். எம். நௌஷாத். நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, வக்காத்துக் குளம்- இவரது நாவல்கள். வெள்ளி விரல், தீரதம் சிறுகதை தொகுப்புகள்.நட்டுமை நாவலானது காலச்சுவடு அறக்கட்டளையின் ‘சுந்தர ராமசாமி- 75’ இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்றது.நிலஉடமைகளை அடிப்படையாகக் கொண்ட மண்னையும் மக்களையும் பாத்திரங்களாகக் கொண்டு அதற்கான தூல வடிவத்தினை கதை நகர்த்தலின் யுக்திகளாக செதுக்கிய தீரனின் மொழியுலகம் அலாதியானது.தனக்கான தனித்துவ பாணியினை தீரன் எப்போதுமே தழுவியிருந்தார். பாமரர்களின் அன்றாடச் சொற்களிலிருந்து காவியத்தன்மையினை கண்டடையும் கதை சொல்லல் போக்கும், மறைந்து விடாத காதலின் சூடும் தீரனின் எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன.கொந்தழிப்பு நிறைந்த பெண் பார்வையினை அசால்டாக கடந்து செல்லும் தீரனின் கதைகளில் நிரம்பி வழியும் பாலியல் பஸ்மங்கள் ரதமானவை. அதனைச் சொல்வதற்கென்றே தீரன் தனியாக மொழியினை வடிவமைத்திருக்கிறார். அம்மாதிரியான மொழி தீரனுக்கு வாய்த்திருக்கிறது என்றே கூற வேண்டியிருக்கிறது.தீரனின் கதைகளில் உலாவித்திரியும் மாந்தர்களும் அவர்களின் பண்பாட்டு அரசியலும் கொல்வதெழுதுதல் 90ல் வெளிப்பட்ட விதமும் இலங்கையில் உருப்பெற்ற பெரும் அரசியல் செயற்பாட்டொன்றின் ஆவணப்படுத்தல்களாகும்.வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி 2011ல் தேசிய அரச சாகித்திய விருது பெற்றது. ‘கொல்வதெழுதுதல் 90’ காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது. 2017ல் அக்கினிக்குஞ்சு இணையம் நடாத்திய எஸ். பொன்னுத்துரை நினைவு நாவல் போட்டியில் இவரின் “வக்காத்துக்குளம்“ நாவல் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தினக்குரல் நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ‘காகித உறவுகள்’ எனும் வானொலி நாடகம் மூன்றாம் பரிசு பெற்றது. ‘நல்லதொரு துரோகம்’ என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற்பரிசாக தங்கப்பதக்கம் அளித்தது. சாகும்-தலம் சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. ஞானம் சஞ்சிகை நடத்திய புலோலியுர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் தாய் மொழி சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.

கேள்வி: படைப்பிலக்கியங்கள் எழுதப்படுவதில் அரசியலிருக்கிறது எனும் வகைப்பாட்டினூடாக உங்களது ‘கொல்வதெழுதுதல் 90’ நாவல் முஸ்லிம் அடையாள அரசியலை வெளிப்படையாக பேச முயன்றிருக்கிறது. இவ்வகையில் இப்பிரதியின் உள்ளே பண்பாட்டு கதையாடல்களையும் அரசியலினையும் எம்மாதிரியாக புகுத்துனீர்கள்?

பதில்: கொல்வதெழுதுதல் 90 ஆரம்ப காலத்தில் பள்ளி முனை கிராமத்தின் கதையாக முஸ்லிம் குரல் பத்திரிகையில் வெளிவந்தது. இத்தருணத்தில்தான் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியம் எங்களூரில் பரவத் தொடங்கியது. இதன்போது எம்மூரவர்களின் அரசியல் மயமாக்க ஏற்பாடுகள் மிக வேகமாக அதிகரித்தன. இதன்படி ஊரில் உள்ள பெரும்பாலானோர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இம்மாதிரியான இணைவுகள் பதவியினதும், கௌரவத்தினதும் அடிப்படையில் சாதாரணமாக செயற்பட்டுக் கொண்டிருந்த மனிதர்களை சமூக அந்தஸ்த்து பெற்றவர்களாக மாற்றிக் கொண்டிருந்தது. இதிலிருந்துதான் முத்து முகம்மது உருவாகிறான். முஸ்லிம் காங்கிரஸ் எப்படி முத்து முகம்மதுவை அரசியல் நிலைப்பாட்டில் மாற்றுலகத்தினை அமைத்து உயரிய இடத்திற்கு மாற்றியமைத்தது என்பதையே கொல்வதெழுதுதல் 90 பேசியது.

கேள்வி: பள்ளி முனை கிராமத்தின் கதை ஏன் கொல்வதெழுதுதல் 90 ஆக மாறியது?

பதில்:  எனது நட்டுமை காலச்சுவடு வெளியீடாக வந்தது. இதிலிருந்து பல வருடங்களின் பின்னர், வேறு ஏதாவது படைப்புகள் எழுதப்பட்டிருக்கிறதா என காலச்சுவடு என்னிடம் கேட்டிருந்தது.ஏற்கனவே சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ வெளிவந்திருக்கின்ற தருணத்தில் எனது பள்ளி முனை கிராமத்தின் கதை என்கின்ற பெயரும் ஒரே மாதிரியான தோற்றப் பொலிவினைத் தருவதாக கூறப்பட்டது. இப்படியிருக்கையில் ஒரு நாள் எனது மகள் தனது பாடசாலை கையெழுத்து பிரதியொன்றினை என்னிடம் காட்ட முனைந்தாள். அதில் சொல்வதெழுதுதலில் எனக்கு 90 புள்ளிகள் என காட்டினாள். அவளால் எழுதப்பட்ட சொல்வதெழுதுதல் எனும் வசனம் எனக்கு கொல்வதெழுதுதலாகப் பட்டது. அதனுடன் 90 சேர்ந்திருப்பதால் முஸ்லிம் காங்கிரஸின் தீவிர செயற்பாட்டு காலப் பகுதியான 1990கள் பொருத்தமாக அமைந்து விட்டன. இதுவே கொல்வதெழுதுதல் 90ஆக வெளிவந்தது.

 

கேள்வி: வயல் நிலவுடைமை சார்ந்த மக்களின் வாழ்வியல் குறித்த பல கோணங்களை நட்டுமை நாவல் பேசுகிறது. கிழக்கிலங்கையின் மாற்றொரு இலக்கிய முகமாகவும் இருக்கிறது. நட்டுமையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிரதேச வழக்கு மொழி பெரு ஆய்வுக்குரியது. இங்கு பல படைப்பாளிகள் பிரதேசத்து மொழி வழக்கினை படைப்பிலக்கியங்களில் எழுத முனைந்து தோற்றுப் போயுள்ளனர். தீரனை பொறுத்தவரையில் பிரதே வழக்கு மொழி நட்டுமையில் வெற்றி கண்டிருக்கிறது எனலாம். இம்மாதிரியான மொழி அழகினை படைப்புக்குள் எப்படி உட் செலுத்தினீர்கள்?

பதில்: இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனது தந்தை ஒரு போடியார். வயல் நிலத்திற்கு சொந்தமானவராக இருந்தார். சிறுவயது முதல் எங்களை வயலுக்கு அழைத்துச் செல்வார். அங்கு வேலை செய்யும் பல விவசாயி மனிதர்களுடன் நான் நெருக்கமான உறவினை கொண்டிருந்தேன். அங்கு பேசப்படும் பெரும்பாலான சொற்கள் வயல் நிலங்கள் குறித்தவையாக இருந்திருக்கின்றன. ஜனாகிராமன், கி.ரா,  வ.அ., டானியல் போன்றவர்களின் படைப்புக்களும் மண் சாரந்த வாசிப்புக்களின் பக்கமும் எழுத்துக்களின் பக்கமும் என்னை தள்ளி விட்டது. இந்த உந்துதலில் முதல் முதலாக வயல்காரர்கள் பற்றிய சிறுகதை ஒன்றினை எழுதினேன். ‘வளவு நெறஞ்ச நிலா’ என்பது அக்கதையின் பெயர். வட்டைக்குள் வைத்து வயல்காரன் ஒருவன் தனது காதலியை சந்திக்கச் சென்ற கதையினை எனக்குச் சொன்னான். அந்தக் கதையில் பெரிதான திருப்தி எனக்கு ஏற்படவில்லை. இன்னும் பல சங்கதிகளை சொல்வதற்கு அந்தக் கதையில் ஏராளம் இருந்தன. போடியாரின் மனைவியிடம் கள்ளக் காதல் கொண்டு இரவுகளில் அவள் வீட்டிற்கு சென்று வருகின்ற வயல்காரன் எனது கதையின் சாரமானான். பிறகு அந்தக் கதை காணாமலே போய்விட்டது. இந்த தருணத்தில்தான் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால்  போட்டியொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நட்டுமை நாவலினை அனுப்பி வைத்திருந்தேன். அது தெரிவு செய்யப்பட்டிருந்தது. நட்டுமை என்ற பெயர் எப்படி வந்தது என்பது சுவாரஷ்யமானது. வயல்காரர்களிடமிருந்துதான் அதனைப் பெற்றுக் கொண்டேன். நட்டுமை என்பது களவுவழி செயற்பாட்டினை குறிக்கிறது. வயல்நிலங்களில் களவுத் திருப்பலின் ஊடாக நீரை மாற்றி விடுவதற்கும், கிராமிய மக்களின் வாழ்வியலில் கள்ள உறவினை நாசூக்காய் சொல்வதற்கும் நட்டுமை என கூறுவர். நட்டுமையினை பல தடவைகள் திருத்தியுள்ளேன். எனக்கு திருப்தியடையும் வரை படைப்புக்களை திருத்திக் கொண்டேயிருப்பேன். இவற்றையெல்லாம் பாவலர் பஸீல் காரியப்பரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.

கேள்வி: நீங்கள் முதல் முதலாக எழுதி வெளிவந்த சிறுகதை பற்றி சொல்லுங்கள்?

பதில்: ‘நீலக் காற்சட்டடை’ என்பதுதான் அக்கதையின் பெயர். எங்களூர் பாடசாலையொன்றில் நீலக் காற்சட்டை அணிந்து வர வேண்டும் என்கின்ற கட்டளை பிறப்பிக்கப்பட்ட நேரமது. வறுமைப்பட்ட சிறுவனொருவன் நீலக் காற்சட்டை இல்லாமல் வெள்ளை காற்சட்டையினை அணிந்து வருகிறான்.  அப்பாடசாலையின் அதிபர் அச் சிறுவனுக்கு அடித்து வீட்டிற்கு விரட்டி விட்டார். அச் சிறுவனுடைய தாய்  இத்துயரத்தினை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். அதனையே நானும் ஒரு கதையாக உருவாக்கினேன். அக்கதை 1979ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இதுவரைக்கும் முப்பதைந்து கதைகள் எழுதியுள்ளேன்.  வெள்ளிவிரல் தொகுப்பில் 12 கதைகளும், வல்லமை தாராயோ தொகுதியில் 10 கதைகளும், தீரதம் தொகுதியில் 8கதைகளும்,வெளிவந்துள்ளன. இதில் துயரமான செய்தி என்னவென்றால் பிறகு கவிதைகள் எழுதத் தொடங்கினேன். பதினைந்து வருடங்கள் அநியாயமாக கழித்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.

கேள்வி: இலக்கிய படைப்புக்கள் வெவ்வேறு கோணங்களில் பல காலகட்டங்களில் இயக்கம் கண்டிருக்கின்றன. தீரனின் இலக்கிய உலகம் எந்தக் கோணங்களிலானது? பாத்திரங்களின் வடிவமைப்பு எம்மாதிரியானது?

பதில்:  படைப்புக்களில் எப்பொழுதும் பாமர மக்களும், அவர்களின் மொழியுமே எனக்கு பொருத்தமாயிருக்கிறது. என்னுடைய உலகம் பாமரர்களின் உலகம். நட்டுமையில் வருகின்ற உமர்லெவ்வை பிழையான முறையில் பிறந்த ஹராங்குட்டி. தனது வாழ்நாளில் நகரங்களை காணாதவன். அவன் எப்படி சமூகத்தின் மேல் தளத்தில் நின்றான் என்பதை உறுதிப்படுத்தினேன்.  இதே போன்று ‘கொல்வதெழுதுதல் 90’ வரும் முத்து முகம்மது மற்றும் மைமூனா போன்ற பாத்திரங்கள் இதனையே பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டன. இம்மாதிரியான எல்லா கதாப்பாத்திரங்களுடனும் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதுதான் உண்மையானது.

 

கேள்வி: தீரனின் கதைகளில் பெண்களைச் சீண்டுதலுடன் பாலியல் வேட்கையும் அதிகமாயிருக்கிறதே?

பதில்: நான் யதார்தத்தினையே எழுதுகிறேன். இங்கு பெண் சீண்டலும்  பாலியலும் அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள். அதனையே நான் வெளிப்படையாக எழுதியிருக்கிறேன். பெண்களின் முகத்தினை பார்ப்பதை விட மார்பகங்களை பார்க்கின்ற ஆண் வர்க்கத்தினையே நான் அதிகமாய் கண்டிருக்கிறேன். நான் பெண் சீண்டலையும் பாலியலையும் மாத்திரம் எழுதவில்லை எல்லா நிலைகளையும் கதைகளாக்கியுள்ளேன். ஆனால் எல்லோரும் பெண் சீண்டல்கள் மீதும் பாலியல் கதைகளின் மீதுமே வாசிப்பினை நிகழ்த்துகின்றனர். எனது படைப்புக்களை வயது வந்தவர்களுக்கு மாத்திரம் என விமர்சித்தவர்களே அதிகமுண்டு.

 

கேள்வி: வெளிப்படையாக கிராமிய மக்களின் தூஷண மொழியினையும், கள்ள உறவுகள் குறித்தும் ஔிவு மறைவின்றி எழுதியிருக்கிறீர்கள். படைப்பிலக்கிய போக்கில் இவ்வகைப்பாட்டினை வெளி வாசகர்கள் எப்படியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

பதில்: வாசகர்கள் மாத்திரமல்ல என்னை தெரிந்த உறவுக்காரர்கள் கூட நான் எழுதிய எல்லா கதைகளையும் என்னை தொடர்பு படுத்தியே பார்த்துள்ளார்கள். உண்மையில்,நான் மற்ற மனிதர்களின் அனுபவங்களையே எழுதினேன். இதனால் என்னுடைய அனுபவங்கள் குறித்து நிறையவற்றை எழுத முடியாமலே போய்விட்டது.

 

கேள்வி: இலக்கிய வாதிகளுடனான உறவுகளிலும், சந்திப்பிலும் தீரன் அதிகமாக கலந்து கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டிருக்கிறதே?

பதில்: சிலதை வெளிப்படையாக சொல்ல முடியாது. முகநூலில் அரங்கேறுகின்ற கூத்துகள் இதற்கு ஒரு காரணமாகவிருக்கிறது. தரமில்லாத படைப்புக்களும், படைப்பாளிகளும் இங்கு கொண்டாடுகின்ற சூழல் உருவாகியிருக்கிறது. இது அபத்தமானது. காத்திரமான இலக்கிய கூட்டங்களுக்கும் உரையாடல் நிகழ்வுகளுக்கும் நான் தவறாமல் சென்றிருக்கிறேன். இதனையே விரும்புகிறேன். பட்டங்கள், விருதுகள்,  என எவற்றையும் நான் விரும்புவதில்லை. இதுவரை காலம் ,பெரும்பாலும் இவைகளை புறக்கணித்தே வந்திருக்கிறேன். பஸீல் காரியப்பர் கூட இவற்றினை நிராகரித்திருக்கிறார். பாவலர் நூல் அச்சிலிருக்கும் போது அந்தப் பணியினை மேற் கொண்ட ஒருவரின் குறிப்பினை பஸீல் காரியப்பரினால் பார்க்க நேர்ந்தது. மிக அதிகமாக புகழப்பட்டிருந்த பஸீல் காரியப்பர் குறித்த வரியினை நீக்கி விடுமாறு பஸீல் காரியப்பர் வற்புருத்தியிருந்தார். எனினும் அது நீக்கப்படவில்லை. அச்சகத்திலிருந்து அனைத்து புத்தகங்களையும் பலாத்காரமாக கொண்டு வந்து எரித்தே விட்டார். எப்பொழுதும் உள்ளார்ந்த மனிதர்களை தேடுகிறேன் என பஸீல் காரியப்பர் சொல்லிக் கொண்டேயிருப்பார். ஆத்மீகத்தின் பக்கம் எனது நாட்டங்கள் அமைவதற்கும் பஸீல் காரியப்பரே முதன்மையாக இருந்தார் என்பேன்.

 

கேள்வி: விருதுகளை நிராகரித்தல், வெளியீட்டு நிகழ்வுகளை மறுத்தல் என தீரனின் இலக்கிய போக்கு தனித்துவமானது. ஆகவே தீரன் எதனை நோக்கி எழுதுகிறார்? அது ஆத்ம திருப்திக்கான இலக்கியமா?

பதில்: அப்படி பொய் சொல்ல முடியாது. இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இயங்குகிறேன். புகழை நான் நம்ப மறுக்கிறேன்.அபூர்வமாக எனக்கு கிடைத்த சில விருதுகளை குப்பையில் போடவே நினைக்கிறேன். வயது கடந்த செல்ல செல்ல பக்குவம் அதிகரிப்பதாகவே உணர்கிறேன். சூஃபிச போக்கிற்கு ஏற்ப என் சிந்தனைகளையும் எழுத்துக்களையும் மாற்ற முயற்சிக்கிறேன். நட்டுமை, கொல்வதெழுதுதல் 90 போன்ற நாவல்களில் இறைநேசர்களின் செயற்பாடுகள் குறித்து ஆங்காங்கே எழுதியுள்ளேன். மூலி என்றொரு நாவலினை ஆரம்பித்திருக்கிறேன். கஞ்சா குறித்து மூலி என்ற சொல் வழக்கிலிருக்கிறது. கஞ்சாவின் விற்பனை மற்றும் பாவனை அதனூடான ஆத்மீக செயற்பாட்டு நம்பிக்கைகள் குறித்து அந்நாவல் பேசும்.

கேள்வி: பாவலர் பஸீல் காரியப்பர் மீதான உங்களது உறவு நெடியது. அது பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதில்: பஸீல் காரியப்பர் எனது உறவுக்காரர். நாங்கள் காரியப்பர் குடும்பம். குடும்ப உறவினையும் தாண்டி இலக்கிய உறவு எங்களுக்குள் நீட்சியாகவிருந்தது. நட்டுமை போகவில்லை எனும் அவரது கவிதை ஒன்றினை கடற்கரை பள்ளிவாயலில் வைத்து எனக்கு வாசித்து காட்டினார். நட்டுமை அவர் மூலமாகவே எனக்கு அறிமுகமாகியது. பாவலர் பஸீல் காரியப்பர் பற்றி தொடராக விடிவெள்ளியில் எழுதியிருக்கிறேன். இருபத்தி மூன்று கட்டுரைகள் வெளிவந்தன. அவற்றினை தொகுப்பாக கூட வெளிக்கொண்டு வர முடியும். பலரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விடயங்களை கூட என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இன்று இலங்கை பாடநூலில் இடம் பெற்றுள்ள ‘அழகான ஒரு சோடிக் கண்கள்’ கவிதை குறித்து இன்று பிழையான தகவல்கள் வழங்கப்படுகின்றன. அக்கவிதையின் உண்மைப் பெயர் ‘ஊற்றுக்கண்’ என்பதுதான். உண்மையில் இரண்டு  கண்களும் தெரியாத ஒரு பெண்னை கண்டு ரயில்வே நிலையத்தில் பஸில் காரியப்பருக்கு எழுந்த கவிதையே அது.

 

கேள்வி: போர் பற்றியே இலங்கையில் அதிகம் எழுதப்பட்டிருக்கிறது. இது குறித்தே பேசப்பட்டிருக்கிறது. இதனால் பிற பேசுபொருளை கொண்ட படைப்பிலக்கியங்கள் பேசப்படாமல் இருந்திருக்கின்றனவா?

பதில்: தமிழ் மக்களின் துயரம் பெரிது. அது குறித்து படைப்புக்கள் பேசியவை நியாயமானவைதான். அதே நேரத்தில் விடுதலை புலிகளால் முஸ்லிம் மக்கள் எதிர் கொண்ட அநியாயங்கள் ஏராளமானவை. இவை குறித்தும் இங்கு படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. கொல்வதெழுதுதல் 90ல் இது பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். ஆமீன் என்ற பெயரில் ஒரு நாவலினை எழுதியிருக்கிறேன். அது இன்னும் வெளிவரவில்லை. சாய்ந்தமருதில் ஏற்பட்ட புலிகள் செய்த குண்டு வெடிப்பினை மையமாகமக் கொண்ட படைப்பது. அது ஒரு நாவலா அல்லது ஆவண படைப்பா எனும் சிக்கலில் அல்லாடிக் கொண்டிருக்கிறேன். நமது படைப்புக்களை பேசுவதற்கு நம்மவர்கள் அதிகமாக தயங்குகிறார்கள். இலக்கிய போக்கில் இந்த இருட்டடிப்பு அதிகமாகவே இருக்கிறது.

Please follow and like us:

1 thought on “நான் யதார்த்தத்தினையே எழுதுகிறேன் – தீரன் நேர்காணல்

  1. தீரனின் நேர்காணல் அருமையாக வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *