சுந்தரி சந்தையிலிருந்து திரும்பி ஊரை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தாள்.. வாய்க்கால்
மேட்டின் வழியாக விரைந்து இறங்கி, ஊருக்குள் செல்லும் பாதையை பிடித்தாள். இருட்டுவதற்குள்
வீடு செல்ல வேண்டுமென ஓட்டமும் நடையுமாய் சென்றாள். அவள் நடக்க நடக்க மெல்ல இருள்
தட்டிக் கொண்டு வந்தது. சாலையில் யாருமில்லை. எல்லாரும் ஊர்த்திருவிழாவில்
லயித்திருக்கிறார்கள். சுந்தரிக்கு இருந்த அலுப்பில் சந்தைக்கு போக தோன்றவில்லைதான்.
ஆனால் திருவிழாவிற்கு புதுச்சேலைகட்டிக் கொள்ளாமல் எப்படி? அதுதான் சிரமத்தோடு
சிரமமாக பொள்ளாச்சி வரை சென்று சேலையும் இதர சாமான்கள் சந்தையிலும் வாங்கிக்
கொண்டு வருகிறாள். வேகமாக வீசிய காற்று சித்திரை மாத புழுக்கத்தை சற்று குறைக்கச்
செய்தது.

ஆனைமலை போகும் பிரதான சாலையிலிருந்து சற்று பக்கவாட்டில் ஒதுங்கினால் தென்படும்
சிறு கிராமம் அது. கூப்பிடும் தூரத்திலேயே முடிந்துவிடும் அளவிற்கு சிறிய ஊர்தான்.
மாரியம்மன் கோவிலைச் சுற்றிலும்தான் ஊரே அமைந்திருந்தது.அங்கிருக்கும் எந்த
தெருவிலிருந்து பார்த்தாலும் கோவில் தெரியும். கோவிலின் முன் விசாலமான மைதானம்,
எதிரேயே ஒரு ஆரம்ப நிலை பள்ளிக்கூடம், அதனருகில் திண்ணை கூடிய பெரிய அரச மரமும்
இருந்தன. அந்த திண்ணைதான் ஊரிலிருப்பவர்கள் பொழுதைப் போக்கும் இடம்.
ஆடுபுலியாட்டம் ஆடும் ஒரு கூட்டம் எப்பவும் அங்கு பார்க்க முடியும். மைதானம் இளசுகளும்
பொடிசுகளுக்குமான களம்.
கோவிலின் பின்புறத்தில் ஆயிரம் கைகொண்ட ராட்சதன் போல் ஆலமரங்களும் அவற்றின்
விழுதுகள் நிலத்தில் புரண்டு பின்னிப் பிணைந்து வலைகள் போல் காணப்பட்டன.
சுந்தரிக்கு சற்று தொலைவில் ஸ்பீக்கரில் அம்மன் பாடல் கேட்டது. ஊரை நெருங்கி விட்டதன்
அறிகுறி… பாட்டு கேட்ட திசையில் விளக்கு ஒளியும், புகைக் காற்றுபடலமுமாய் தெரிந்தன.
மாரியம்மன் திருவிழா தொடங்கி ஊரே களைக்கட்டியிருந்தது. பத்து வருடம் கழித்து
நடக்கவிருக்கும் திருவிழா. ஊரே ஆவலுடன் காத்திருந்தது
சுந்தரிக்கு பல வருடங்களாக இருந்த வேண்டுதல் இந்த திருவிழாவில் கைகூடப் போவதே பெரும்
நிம்மதி. இதற்குதான் காத்துக் கொண்டிருந்தாள். அந்த சம்பவத்தை நினைத்தாலே சுந்தரிக்கு
இப்பவும் சிலிர்க்கும், உடல் வியர்க்கும். அவளுடைய மகன் குமாருக்கு அப்போது பத்து
வயதிருக்கும். காட்டுக்குள் இருக்கும் ஃபேக்டரியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரிக்கு
சாப்பாடு கொண்டு தர சைக்கிளில் வருகையில் , ஒரு புதரினருகே சிறு நீர் கழித்தான். அப்போது
காலில் சுருக்கென ஏதோ கடித்ததும், பார்த்தவன் நடுங்கிப் போனான். கட்டுவிரியன் பாம்பு ஒன்று புதருக்குள் நுழைந்து மறைந்தது. பாதத்தில் இரு புள்ளியாய் ரத்தம் கொப்பளித்தது. அவன்
பயத்தோடு சுற்றும் முற்றும் யாரிடமாவது சொல்லலாமென பார்த்தால் அந்த அத்வானத்தில்
அவனைத் தவிர வேறு யாருமில்லை. கை கால் உதறலுடன் எப்படியாவது ஃபேக்டரியை
அடைந்துவிடவேண்டுமென சைக்கிளை முடுக்கினான். அவன் எப்படி வேகமாய் அழுத்தினானே
என அவனுக்கே தெரியாது. நிமிடத்தில் ஃபேக்டரியின் நுழைவாயில் அடைந்ததும் “பாம்பு”
சென்று சொல்லி சைக்கிளுடனே மயங்கிவிட்டான்.

அங்கிருந்த காவலாளி துரிதமாக முதலாளியிடமும் சுந்தரியிடமும் செய்தி அனுப்பினான். சுந்தரி
அழுது கொண்டே வந்தாள். முதலாளி தன்னுடைய காரிலேயே அவனை ஏற்றி டவுனுக்கு
சென்றார். சைக்கிளில் வேகமாய் வந்ததால், விஷம் உடல் முழுக்க பாய்ந்திருந்தது. சுந்தரி ஊர்
மாரியம்மனை வேண்டியபடி வந்தாள்.18 வயதிலேயே குழந்தைப் பெற்று குடிகார
கணவனிடமிருந்து பிரிந்து பத்துவருடங்களாக தனியாக வாழ்க்கையை போராடி நடத்திக்
கொண்டிருக்கிறவளுக்கு எல்லாமே அவளுடைய மகன் குமார்தான். மனது தாங்காமல்
அரற்றினாள். எப்படியாவது இவன் பிழைக்கவேண்டுமென பூ மிதித்து, அக்னி கும்பம் ஏந்துவதாக
இடைவிடாது மாரியம்மனின் முறையிட்டபடி வந்தாள்.
அதற்குள் குமாரின் உடல் வீங்கி நீலம் பூத்தது. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இரு
நாட்கள் குமார் இருந்தான் . கண்ணாடி அறைக்கு அப்பால், உடல் முழுவதும் உப்பலாய், கரு
நீலத்தில் காட்சியளித்த குமாரைக் கண்ட சுந்தரிக்கு,அடிவயிற்றிலிருந்து குடலை உருவியது போல் பயமும் அழுகையும் வந்தது. மாரியம்மனை வேண்டிக் கொண்டே இரவு பகல் பாராது அந்த
அறையின் வாசலுக்கு முன்னே கிடந்தாள். இரு நாட்களுக்குப் பின் உயிர் பிழைத்தான்.
மருத்துவர்கள் இவன் பிழைத்தது அதிசயம் என வியந்தார்கள். அதன் பின் அந்த வருடம் வந்த
மாரியம்மன் திருவிழாவிற்கு பூமிதிக்க தயாரானபோது,,கோவில் நிர்வாகத்தினரிடையே உண்டான சிறு பூசல் கலவரத்தில் முடிய, நீதிமன்றத்தில் வழக்காகி காவல் துறையால் இழுத்து மூடப்பட்டது.

ஒவ்வொரு முறையும் இந்த வருடம் நடக்குமா அடுத்த வருடம் நடக்குமா என பார்த்து பார்த்து
ஏமாற்றமே வந்தது. மேலும் ஒரு முறை குமாருக்கு விபத்து நடந்த போதும், அவளுடைய வீட்டில்
வைத்திருந்த நெல்மூட்டையில் தீப்பற்றிய போதும், வேண்டுதல் செய்யாததால்தான் இந்த
துர்சம்பவங்கள் நடக்கிறது என மனதில் உறுதியாக நம்பினாள். குமாருக்கு ஏதாவது
நடந்துவிடுமோ என பயந்து பயந்து அவனை பூ போல் பார்த்துக் கொண்டாள். பக்கத்து வீட்டு
மீனாட்சி, சந்திராக்கா எல்லாம் “வேண்டுதல் நிறைவேறாம இருக்கறதுக்கு நீ என்ன பண்ணுவ,
மொதமைக்காரவுக சண்டைலதான் கேசாகி இழுத்துட்டு கெடக்குதல்லோ. மாரியம்மா
உன்னல்லாம் தண்டிக்காது. நீ பயப்படாத” என அவர்களும் அவளை தேற்றினார்கள். இப்படி பத்து
வருடங்களாக நடக்காத கோவில் திருவிழா இதோ இந்த வருடம் நடக்கப் போகிறது.

பத்து வருடங்களுக்குப் பின் கோட்டாட்சியர் தலைமையில் சமரசம் செய்யப்பட்டு, நிறைந்த
பௌர்ணமியில் தேதி குறிக்கப்பட்டு, கம்பம் சாற்றப்பட்டாகிவிட்டது.

சுந்தரி பழையதை நினைத்தபடியே அலுப்பு தெரியாமல் ஊருக்குள் நுழைந்துவிட்டாள்.
எல்லையில் காத்தவராயன் சாமியிடமிருந்தே தொடங்கிவிட்டிருந்தது திருவிழாக்கோலம்.

புதுப் புதுக் கடைகள் இறக்கியிருந்தனர். ராட்டினத்தில் பிள்ளைகள் கூதுகலமாய் சுற்றிக்
கொண்டிருந்தார்கள். “பீப் பீப்” என்று சிறுவர்கள் பீப்பீ ஊதிக் கொண்டும், பலூனை பிடித்துக்
கொண்டும் திரிந்து கொண்டிருந்தார்கள். வரிசையாய் பூஜை சாமான் கடைகள் வந்திருந்தன.

ஆங்காங்கே லாந்தர் விளக்குகளிலும், கரண்ட் விளக்கிலும் சிறு சிறு கடைகள்
போடப்பட்டிருந்தது. பக்கத்து கிராமங்களிலிருந்து மஞ்சள், சிவப்பு உடுப்புகளில் குடும்பமாய்
கோவிலுக்குள் போவ்தும் வருவதுமாய் இருந்ததால் கோலாகலமாக இருந்தது ஊர். திரும்பிய
இடமெல்லாம் கற்பூரம் மற்றும்,திருநீற்றின் வாசமுமாய் காற்று பரவியது.

மாரியம்மன் கோவில் வழியாகத்தான் அவள் வீட்டிற்கு போகவேண்டும். கோவிலுக்கு முன்
சாட்டப்பட்டிருந்த இளம் பால மரக் கம்பம் கம்பீரமாய் நிற்பது போலிருந்தது. மூன்று நாட்களுக்கு
முன்னர்தான் கம்பம் சாற்றினார்கள். கம்பத்துக்காரர் ஆட்களுடன் காட்டுக்குள் சென்று நல்ல பால்
வடியும் பாலமரத்தை வெட்டிக் கொண்டு வந்தார். அதனை கம்பம் போல் செதுக்கியபின்
கிணற்றடியில் பண்டாரம் குளிப்பாட்டி மஞ்சள் பூசி அலங்கரித்தார்.

கம்பத்துக்காரரின் தோட்டத்தில் விளைந்த நவ தானியங்களை, மஞ்சள் நீரில் நனைத்த வெள்ளைத்
துணியில் இட்டு, வீட்டுப் பெண்கள் பூஜை செய்து, பின் அந்த நவ தானிய மூட்டையை
மாவிளக்குடன் எடுத்துக் கொண்டு மேள தாளத்துடன் கோவிலுக்கு கொண்டு வந்தார்கள்.
அலங்கரிக்கப்பட்ட கம்பத்தில் , நவதானிய துணியை கட்டி, வேப்பிலை சுத்தி, பூஜைகள் செய்த
பின் கம்பம் சாற்றாயிற்று. அதன் பின் தான் ஊரே களை கட்டிற்று.

கம்பத்துக்காரர்தான் கோவில் பணிகளில் பிரதானமானவர். ஒரு வேளை மட்டும் உணவருந்தி
சுத்தபத்தமாய் ஒரு தனி வீட்டில் தங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் தீபம் ஏற்றி அதனை
அணையாமல் பார்த்து, இடைவிடாது எண்ணைவிட்டுக் கொண்டிருந்தார். அவருடன் பூசை
செய்யும் பண்டாரமும், கொத்துக்காரரும் சேர்ந்து தீவிர விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
உக்கிர மாரியம்மன்னுக்கு தீட்டு ஆகாதென மாதவிடாய்க்கு தேதி நெருங்கும் பெண்கள் கம்பம்
சாற்றி, எடுக்கும் வரை ஊருக்குள் வரவேண்டாமென ஊரின் எல்லையில் மேற்குத் தொடர்ச்சி
மலையடிவாரத்தில் இருக்கும் மண்டபத்தில் தென்னை ஓலையில் திரைக் கட்டி தங்க வைத்து
அவர்களுக்கு காவலும் வைத்தாயிற்று. அவர்களே உணவு பொங்கி தின்ன பாத்திரம் செட்டோடு
சென்றுவிட்டிருந்தனர். மேலும் பல வருடங்களுக்கு பிறகு செய்வதால் அம்மனின் கோபத்திற்கு
ஆளாகாத வகையில் மிக சிரத்தையாய் செய்ய வேண்டுமென ஊருக்குள் எல்லாரும் அவரவர்
வகையில் முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.

சாற்றப்பட்டிருந்த கம்பத்தைச் சுற்றி கொந்தி மேளம் அடித்துக் கொண்டிருந்தனர் தோட்டிகள்.
அங்கே தீப்பந்தம் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. அருகில் ஒருவர் மைக் பிடித்தபடி பாடிக்
கொண்டிருந்தார். பாட்டுக்கு ஏற்ற வகையில் கரகாட்ட கோஷ்டி ஒன்று சிரித்தபடியே ஆடிக்
கொண்டிருந்தது. நேற்று நாடகமும், முந்தைய நாள் பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.தினமும் களைப்பு தெரியாமலிருக்க சாராயம் அருந்தி தோட்டிகள் இரவு முழுக்க மேளமடித்துக்
கொண்டிருந்தனர். மறு நாள் அதிகாலையில் வீடு, வீடாகச் சென்று “விடியப் போகுது மாவிளக்கு சோடிங்க சாமி ” என சொல்லியபடி தங்களது வீட்டுக்குச் சென்றார்கள். இப்படித்தான் நான்கு
நாட்களாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

சுந்தரி வெளியிலிருந்தே அம்மனை பார்த்தாள். உள்ளே ஜகஜோதியாய் வீற்றிருந்தாள். தங்க
ஆபரணங்கள் அணிந்து இளஞ்சிவப்பு பட்டுச் சேலையணியப்பட்டு மஞ்சள் காப்பில்
ஜொலித்தாள். பல வருடங்களாய் ஏதும் செய்ய இயலாமல் உள்ளிருந்தவள் இன்று எல்லாற்றையும்
பார்த்து சாசுவாதமாய் குழந்தை போல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
” இந்த நாளுக்குதே நாங் காத்துட்டு கெடந்தேன் தாயி. நாளைக்கு நிறைவேத்திடறேன்” என
மனதில் சொல்லியபடி வீட்டை நோக்கி நடந்தாள். எல்லார் வீடுகளும் சுத்தம் செய்து
வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. . யார் வீட்டிலும் கறிச்சோறு சமைப்பதில்லை. பசுஞ்சாணம் வீதி
முழுவதும் வழிப்பட்டிருந்தது. எல்லார் வீட்டின் முன்னும் கோலங்கள் அலங்கரித்தன வீதியின்
குறுக்குமறுக்காக மாவிலைத் தோரணம் கட்டப்பட்டிருந்தது. அவரவர் வீட்டில் முளைப்பாரி
செய்திருந்தனர்.

வீட்டிற்கு வந்து சாமான் கூடையை இறக்கி வைத்தாள். கம்மாடை எடுத்த பின் தலையில்
சுறுசுறுவென ரத்தம் ஓடியது. கடந்த பத்து நாட்களாய் அவளுக்கு கடும் வேலை.. வீட்டை சுத்தம்
செய்வதில் தொடங்கி காட்டு வேலை வரை அவளே செய்ய வேண்டியதிருந்தது, இடுப்பெலும்பு
வலி உயிரை எடுத்தது.

குமார் வருவதற்கில்லை. கோயமுத்தூர் மில்லில் வேலை செய்கிறான். நல்ல சம்பளம்தான்.
விடுப்பு கிடைக்காது என முன்னமே சொல்லியிருந்தான். அவன் வராதது ஏமாற்றமாக
இருந்தாலும், அவனிருந்தால் இந்த வேண்டுதலுக்கு ஒத்துக் கொள்ள மாட்டான். ஏதாவது
சுணங்கிக் கொண்டேயிருப்பான். எங்கே மாரியாத்தாளின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என அவன் வராததும் ஒரு வகையில் நல்லதுதான் என நினைத்தாள். இரவில் படுத்துக் கொண்டிருந்த போது இடுப்பு வலியோடு கைகால் வலியும் குடைச்சலெடுத்தது.

தூரத்திற்கு நாளில்லையே… ஆனால் சென்ற முறை, மாதவிடாய் சற்று முன்கூட்டியே வந்தது
இப்போதுதான் ஞாபகம் வந்தது. கருக்கென்றது. அதைப் பற்றி நினைப்பே கூடாது என
தவிர்த்தபடியே அலுப்பில் உறங்கிப் போனாள்.

மறு நாள் கோவிலுக்குள் நெருங்கவே முடியாதபடி கூட்டம் . வியர்வை கசகசப்பில் எல்லாரும்
அம்மனின் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். இத்தனை உக்கிரமான வெய்யிலை
பார்க்கவில்லை. மழை பெய்யலாம். திருவிழா முடிந்ததும், அன்றிரவு மழை பெய்தால் அம்மனின்

மனம் குளிர்ந்ததாக சொல்வார்கள். மழை பெய்ய வேண்டும் என கூட்டத்தில் சொல்லிக்
கொண்டிருந்தனர்.
இடைவிடாது தீபாராதனையும், மணியோசையும் கேட்டுக் கொண்டேயிருந்தது. முளைப்பாரி
எடுத்துக் கொண்டு முதன்மைக்காரர்கள்வீட்டுப் பெண்கள் முன்னேயும், பின்னே மற்ற ஊர்
பெண்களும் ஊர்வலமாக மேளதாளத்துடன் கோவிலுக்குள் வந்தார்கள்.

சுந்தரிக்கு உடல் வலியோடு தலைவலியும் சேர்ந்து கொண்டது. எப்படியும் அலுங்காமல்
குலுங்காமல் இந்த மாலைவரை ஒப்பேற்றினால் போதும் என நினைத்தாள். எழுந்ததிலிருந்து
பெரிதாக ஓடியாடாமல் ஓரிடத்திலேயே இருந்தாள் . சூரியனின் உக்கிரம் மாலையானதும் கூட
தணியவில்லை. இன்னும் வியர்வை பெருக்கெடுத்து ஓடச் செய்தது.

சுந்தரிக்கு என்னவென்று சொல்ல இயலாத உளைச்சல்… தூரத்திற்கு இன்னும் நாளிருக்கிறது.
பின்னேனிந்த வலி? ஒருவேளை கடுமையான வேலைகளால் முன்னமே வந்துவிடுமோ என்று
மீண்டும் நினைக்கத் தொடங்கினாள். பெருங்கலக்கம் உண்டானது. அதை விட ஊரே சுத்த
பத்தமாய் பக்தியோடு விரதமிருந்து வருகிறார்கள். தன்னால் கலங்கம் ஏற்பட்டு விடக் கூடாது.
இந்த சோதனை எல்லாம் வேண்டாம் ,தான் எளியவள் என்று மாரியம்மனிடம் மனதிற்குள்
மன்றாடினாள்.

மாலையில் பூ மிதிப்பதற்காக மைதானத்தில் மண்ணை அள்ளிப் போட்டு மேடிட்டு
கொண்டிருந்தார்கள். அக்னி தணல்களை கொட்டி மேடிட்ட இடத்தை நிரப்பினார்கள்.
கனன்றுகொண்டிருந்த தணல் செந்நிறத்தில் பெரிய படுக்கை போலிருந்தது. நடுவே நடப்பதற்கான பாதையும் வகுத்திருந்தனர். அந்தி சாயும் வேளையில் பூ மிதித்தல் ஆரம்பமாகியது. கொந்தி மேளத்தின் அதிர்வுகளுக்கேற்ப சாமியாடிகள் சலங்கை கட்டி ஒன்று போல் ஆடிக் கொண்டிந்தார்கள். சில பெண்களுக்கு சாமி வந்து ஆடிக் கொண்டிருந்தனர். மற்றவர் எல்லாரும் சற்று தள்ளி நின்று பூ மிதிப்பவர்களை பக்தியோடு பார்க்க தயாராய் இருந்தனர். பூ மிதிப்பவர்கள் மஞ்சள் நீரினால் தலை முழுகி, வேப்பிலை மாலையணிந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். சுந்தரியும் நடுக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

சுந்தரிக்கு தலையில் தணீணீர் பட்டதுமே, தொடையிடுக்கில் சூடாய் திரவம் வெளியேறியது
போலிருந்தது. வேப்பிலை மாலையணிந்த போது, உதிரப்போக்கு ஆரம்பமாயிருந்ததை
உணர்ந்தாள். என்ன செய்வதென தெரியவில்லை, அவளின் உடல் நடுங்கியது..  “மாரியம்மா
உக்கிரமானவ. தீட்டு ஆகவே ஆகாது. தூரத்துக்கு நாளிருக்கிறவங்க ஒதுங்கி இப்பவே
இருந்துக்கோங்க” என கொத்துக்காரர் கம்பம் சாட்டுவதற்கு முதல் நாள் வீடுவீடாக வந்து
அறிவித்தது நினைவிற்கு வந்தது. வெளியே சொன்னால் ஊர் பழிக்கு ஆளாகி விடுவோம்
இத்தனை பேர் ஊனுருகி, மனமுருகி நடத்தும் இந்த திருவிழா தன்னால் கெட்டுவிடுமோ, ஊருக்கு

தீமை ஏற்படுமோ, என்ன செய்வதென தெரியாமல் மிகவும் கலங்கிப் போனாள். பயத்தில்
உதிரப்போக்கு இன்னும் அதிகமாகியது

ஒவ்வொருவரையாய் தீமிதிக்க அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்து அவள் போகவேண்டும்
என்ற நிலையில்  “இனி எது நடந்தாலும் உன் பொறுப்பே. தண்டனை தர வேண்டுமென்றால்
எனக்கு மட்டும் கொடு” என அழுதபடி அனல் கக்கும் தணலில் இறங்கி ஓடினாள். ஓடிய அதிர்வில்
உதிரம் பெருக்கெடுத்து சிந்தியது. தனலில் பட்ட உதிரம் எவருக்கும் தெரியாமல் பொசுங்கிக்
கொண்டிருந்தது. எல்லாம் சில நொடிகளே. மறுபுறம் வந்தடைந்தவுடன் அப்படியே பாதி மயங்கிப்
போய் விழுந்தாள். அவளை மூவர் தாங்கிப் பிடித்து ஆசுவாசப்படுத்தினர். பாதங்கள் கடுஞ்சூட்டில்
தகித்தன. மனம் குமறி வந்த அழுகையை சுந்தரி முனகியபடி பெருமூச்சுடன் கரைத்தபோது,
வானத்திலிருந்து அவள் முகத்தில் விழுந்தது முதல் மழைத்துளி!

-எழுத்தாளர் ஹேமி கிரிஷ்

Please follow and like us:

5 thoughts on “நிறம் சிவப்பு

  1. இனி எது நடந்தாலும் உன் பொறுப்பு….❤

    இதுதான் கிராமத்து மக்களுக்கும் கிராமத்து சாமிக்குமான உயர் அதிக பட்ச பந்தம்?

    மெய் சிலிர்த்துவிட்டது..

    1. உதிரம் மட்டுமா பொசுங்கியது பயம் பதற்றம் கவலை அத்தனையும்.வரும் வரை தான் எல்லாம்.வந்ததன் பின்னே ….எல்லாம் அவள் செயல்.வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தான்.

  2. எளிமையான மொழிநடையில் எழுதப்பட்ட யதார்த்தமான கதை. சாமிகளும் பூதங்களும் ஒவ்வொருவர் மனதினிலே.

  3. எத்தனையோ கிராமத்து பெண்களின் சூழலை எழுத்தாக மாற்றியது சிறப்பு

  4. பக்தியோடு எழுதியிருப்பதால் பக்தர்களும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் சிறுகதை அமைந்துவிட்டது.

    பக்தியை மறுக்கும் பெண்ணாக வீம்பிற்கு மாதவிடாய் காலத்தில் மாரியம்மனை சோதிக்க வந்திருப்பதாக கதைகளம் மாறியிருந்தால் என்னாவது என நினைத்துப் பார்க்கிறேன். எழுத்தாளர் பெருமாள் முருகன் போல புகழ்பெற்றிருப்பார். 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *