உலகில் உயிர்களின் தோற்றம் முதற்கொண்டு நீரின் தேவையும் ஊடகமும் (medium) முக்கிய பங்காற்றியிருப்பதை மனித உயிரியல் பரிமாணம் முதல் நீர்க்கரை நாகரிகங்கள் வரை அவதானிக்க முடியும். இலங்கையில் வரலாறு தோன்றிய காலந்தொட்டே நதிகளை குளங்களை அண்மித்த குடியேற்றங்களை ஆரியர் வருகைக்கு பின்னர் கலாச்சாரத்தோடு பிணைந்த மரபாக விவரிக்க இயலும்.
நீர் அடிப்படைத்தேவையாகி உயிர் வாழ்தலில் முதன்மையாதாரமாக விளைந்ததில் உலகில் நீர் சமநிலையொன்று அதன் மூன்று பௌதீக நிலைசார்ந்தும் பேணப்பட்டு வந்தது. நீர்ச்சமநிலையையொட்டிய நீர் வட்டத்தில் (Water Cycle) நிலக்கீழ் நீர் முக்கிய வகிபாகத்தை மனித நுகர்விலாற்றி வருவது அதன் பெருமளவு வானிலிருந்து மழையாகவோ பனிப்பொழிவாகவோ பிறப்பிக்கப்படுவதிலிருந்து துவங்குகிறது.
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு”
என வள்ளுவர் குறிப்பிடும் இருபுனலில் ஒன்று நீர் நிலைகளிலிலுள்ளதும் மற்றது நிலத்தடி நீருமாகும்.
வானிலிருந்து விழும் நீர் ஆவியாதலாலோ(evaporation) ஆவியுயீர்ப்பாதலோ(transpiration) அல்லது ஓடிச்சென்று நீர்நிலைகளை சங்கமித்தாலோ(Run-off) அன்றி பெருமளவு நிலத்தினுள் ஊடுருவும். ஊடுருவும் அளவில் ஆரம்ப நிலையில் உலர்மண்ணின் நுண் துளைகளோடு சேரும். இடைநிலை ஆழத்தில் நீர் படலம் மண்வளியோடு சேர்ந்து வெளியை திண்ம மூலக்கூறுகளை நிறைக்கும். இந்த பகுதி நிரம்பாத வலயமென(Un-saturated zone) மண் விஞ்ஞானத்தில் அறியப்படலாம். அடுத்த ஆழங்களில் வளியிடத்தை நீர் பிரதியிட எல்லா வெளிகளும் நீரால் நிரம்ப அந்த ஆழப்பகுதி நிரம்பிய வலயமென(Saturated zone) வழங்கப்படலாம். இவ்வாறு நிரம்பிய வலயத்தினுள் பிரசன்னமாகும் நீரே நிலக்கீழ் நீரென வகைப்படுத்தப்படுகிறது.
நிரம்பிய வலயத்தின் ஆகவும் மேலுள்ள ஆழமான நீர்நிரலின்( Water table) கீழுள்ள நீர் தொடர்ச்சியான அருவிப்பாய்ச்சலிருக்கும். அவ்வாறு சேரும் நீரே மனித மற்றும் பயிர்களின் நுகர்வுக்கு எடுக்கப்படும். இந்த நீர் பின்னர் உயிர்களின் சுவாசத்தினாலும் வேறு வழிகளிலும் வளிமண்டலத்தையடையும். இந்த நடைமுறை ஒரு வட்டமாக மாறி மாறி நிகழும்.
நீர் பாவனைக்கும் நீர்காப்பிற்கும்(conservation) இடையில் நிலையான நீர்முகாமைத்துவத்தில் நிலக்கீழ் நீரோடு நீர்வழங்கலும் வெள்ளக்கட்டுப்பாடும் நீர்ப்பாசனமும் பொழுதுபோக்குக்கான நீர்த்தேவையும் நேரடித் தொடர்பில் இருப்பன.
இன்றைய நகர்ப்புறங்களில் அதிகரித்துவரும் உட்கட்டமைப்பு வசதிகளும் சனநெருக்கடியும் நிலக்கீழ் நீரை பாவனைக்குதவாத நிலையிற்கு வழிகோலியுள்ளன. அதிகரித்த கழிவுநீரின் மாசுபாடு காரணமாக நிலக்கீழ் நீரின் நேரடிப்பாவனையை தவிர்க்க நேரிடும் நிலையில் சுத்திகரித்த நீரை வாழிடங்களுக்கு வழங்க வேண்டிய நீர்வழங்கல் பொறிமுறை அவசியமாகிறது. இதன் போது சுத்திகரிப்பு நிலையமொன்றுக்கு நீர்நிலைகளிலிருந்து தருவிக்கப்படும் நீரே சுத்திகரிக்கப்பட்டு குழாய் வலையமைப்பினூடே விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு நிலங்களில் நிலக்கீழ் நீரின் நுகர்வு முற்றாக குறைந்து நிலக்கீழ் நீரின் அளவும் நிலக்கீழ் நீர் மட்டமும் அதிகரிக்க நேரிடுகிறது. இந்நிலையில் மனித நடவடிக்கைகளால் விளைந்த புவி வெப்பமாதலிலும் அதனோடிணைந்த பருவமாற்றங்களும் நீர்வறிதாதலை(Depletion) ஏற்படுத்தி விட்டன. குறைவான மழைவீழ்ச்சியினாலும் அதிகரித்த வெப்பமான காலநிலையினாலும் நீர்நிலைகளில் விவசாயத்தேவைகளுக்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் போதியளவு நீர் மாசடைந்த நிலையில் நிலக்கீழ் நீராக தேங்குகிறது. இங்குதான் நீர்முகாமைத்துவ முரண்பாடு தோன்றமுடியும். நிலக்கீழ் நீரின் பாவனை முற்றாக தவிர்க்கப்படும் நிலையில் நீர்ப்பாசன கொள்ளளவம் காவுவாங்கப் படுவதாக கொள்ள முடியும். இலங்கை போன்ற விவசாயத்தை பிரதான ஜீவித உபயமாக கைக்கொள்ளும் நாட்டில் நீர் முரண்பாடு அரசியல் ரீதியாகவும் இனரீதியாகவும் குளறுபடிகளை உண்டாக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை.
இந்நிலையில் வருடமொன்றில் ஏறக்குறைய எல்லா மாதங்களிலும் நிலக்கீழ் நீர் மட்டம் உயர்வடைந்து காணப்படுதலில் வெள்ளநீர் அனர்த்த முகாமைத்துவமே அதிகம் சவாலுக்கு உட்படும். வெள்ளம் ஒன்றினால் ஏற்படும் பொருளாதார நட்டத்திற்கும் நிலக்கீழ் நீர் மட்ட அதிகரிப்பிற்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு.
வெள்ள நீர் வடிகாலமைப்பு வடிவமைப்பில் மழைவீழ்ச்சி தொடர்பில் நூறு ஆண்டு அல்லது ஐம்பது ஆண்டு தரவுகளின் அடிப்படையில் உச்ச மழைவீழ்ச்சி பெறப்படலாம். வடிகாலமைப்புக்குரிய பாய்ச்சல் வீதம் குறித்த பிரதேசத்தின் நீர்க்கொள்ளளவம் மண்ணின் ஊடுருவும் தன்மை மரங்களின் செறிவு, பலித ஊடுருவும் பரப்பளவு போன்ற காரணிகளினால் பாதிப்புறும் தகவுள்ளது. இந்நிலையில் அதிகரித்த சனத்தொகையினால் நீரேந்துப்பகுதிகளின் வலிந்த வறிதாக்கல்( forced depletion), பாதைகள், வீடுகள் போன்றன நீர் உட்புகாத மேற்பரவினை அதிகரித்துக்கொண்டமை, மரங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் நிலக்கீழ் நீர் மட்ட உயர்வு போன்ற காரணிகள் மழைவீழ்ச்சிக்கு பின்னர் சடுதியான நீர்மட்ட உயர்வினை (surge) ஏற்படுத்துவதனாலே அதிக வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது.
2002ல் ஜேர்மனியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டது. இந்த பொருளாதார நட்டத்தின் 16 சதவீதமான இழப்பு அதிகரித்த நிலக்கீழ் நீர் மட்டத்தினால் ஏற்பட்டது.(Huber, 2003).
அதே 2002ல் டிரெஸ்டன் நகரில் பல மாதங்கள் உயர்வடைந்த நிலத்தடி நீர் மட்ட வரைபடங்கள் (rose plot) அபாயமொன்றின் சமிக்ஞையை அறிவித்தன. அவசரநிலை ஒன்றிற்கான அளவீடை புனித பென்னோ இலக்கண பாடசாலை விளையாட்டு மண்டபமும் அதனையொட்டிய மின்மாற்றி அறையும் வேண்டி நின்றன. அதன் அஸ்திவாரம் இருபது சென்றிமீட்டர்கள் வரை உயர்ந்ததே அதற்கு காரணமெனலாம். மண்ணின் நீர்மட்டம் உயர்வடைந்து மண்கலவையின்(soil mixture) மிதவை அமுக்கம் அதிகரித்தமை முக்கிய கட்டுமானம் சார் நெருக்கடி யை தோற்றுவித்தது.(Beyer, 2003) அவசர மதிப்பீடு பதிலமுக்கம் ஒன்றை மண்பைகளாலும் நீர்த்தேக்ககங்களாலும் உடனடியாக வெற்றிகரமாக செயற்படுத்த கூடியதாக இருந்தமையால் நிலைமை அழிவிலிருந்து காக்கப்பட்டது.
குவைத் நகரங்களில் நிலக்கீழ் கழிவுநீர் தொட்டிகளில் கசிவு ஏற்பட்டு அதிகரித்த கழிவு வெளியேற்றத்தினாலும் நீர்வழங்கல் வலையமைப்பினாலும் நீர்ப்பாசன நடவடிக்கைகளாலும் நிலத்தடி நீர் மட்டம் பல மீற்றர் உயர கட்டிட அஸ்திவாரங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் அடைப்பு ஏற்பட்டது.(Hamdan and Mukhopadhyay, 1991). அல் ஜெஃப்ரி மற்றும் சென், 2006ல் நடத்திய ஆய்வில் அதே போன்றதொரு நிலைமை சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 1996-2002 காலப்பகுதிகளில் ஏற்பட்டதாக அறியப்பட்டது. இதன் போது அஸ்திவாரங்களில் அல்லது நிலக்கீழ் கட்டிடங்களில் வெள்ளப்பெருக்கு, பாதைகள் சிதைவு, துர்நாற்றம் மற்றும் நுளம்புகளின் பெருக்கம் போன்ற பிரச்சினைகள் உருவெடுத்ததாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
நிலத்தடி நீர் மட்ட உயர்வினால் ஏற்படும் விளைவுகளை நேரடியான அல்லது மறைமுகமான என்ற வகையறாவினுள் உள்ளடக்கவியலும். வெள்ளப் பெருக்கு போன்றவை நேரடிப்பாதிப்புக்களாகவும் சுகாதார பிரச்சினைகள் போன்றவை மறைமுக பாதிப்பு களாகவும் இனங்காணப்படலாம்.  பணரீதியான பெறுமானம் ஒன்றை(monetary) செய்ய முடிவதை அல்லது முடியாததை பொறுத்து அவை உறுதியான மற்றும் உறுதியற்ற விளைவுகளென மேலும் வகைப்படுத்தப்படலாம். உதாரணமாக கட்டிடங்களின் நீண்ட கால விலைச்சரிவு மறைமுக உறுதியான விளைவாக விருக்கும் அதேசமயம் வெள்ள சேதங்கள் தொடர்பான மதிப்பீடில் முக்கிய பங்காற்றும்.
சில தாழ்ந்தவீடுகளில் மழை நாட்களில் நீர் ஊறுவது நிலக்கீழ் நீர் மட்ட உயர்வின் நேரடி விளைவே. சரிவர முற்காப்பு செய்யப்படாத தரையிலிருந்து நீர் வெளியேறுவதுடன் சுவர்களிலும் நீர் ஊறி பூசணம் அல்லது நிறப்பூச்சு சிதைவை தோற்றுவிக்கலாம். ஊடுபுகவிடும் செங்கல் தரையின் கீழ் போடப்பட்ட மண்கலவையின் விரிவினால் தரையில் வெடிப்போடு உயர்வு பள்ளங்களும் ஏற்படவாய்ப்புண்டு.
நிலத்தடி நீர் மட்ட உயர்வு குறிப்பாக நீர்மாசுறுதல் தொடர்பில் மிகுந்த தவிர்க்க இயலாத அவதானத்தை பேசுபொருளாக்கியிருக்கிறது. இம்மாசுறுதல் இரசாயன மற்றும் உயிரியல் மாசாக இருபெரும் பிரிவுகளில் நோக்கப்படலாம். குறிப்பாக எண்ணெய் படிவுகளின் மாசுபாடு மண் மாசுறுதலோடு மண் மலடாக்கலோடு தொடர்பாகும் அதே சமயம் தாவரங்களையும் பாதிக்கவல்லது. இதே போன்று உயிரியல் மாசாக கிருமிகளின் தொற்றும் கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளையும் மனிதர்களையும் தொற்றுநோய்களுக்குட்படுத்த வாய்ப்புண்டு. நிலத்தடி நீரின் தரம்கெட அதன் சேர்மானங்கள் அஸ்திவாரத்தின் பகுதிகளை சேதமாக்கும்.
எனவே நிலத்தடி நீர் கண்காணிப்பு பொறிமுறை ஒன்று பிராந்தியத்திற்கு பிராந்தியம் அவசியமான அதே சமயம் முறைப்படுத்தப்படவேண்டிய புதிய காப்பு முறைமைகளில் ஒன்றாகிவிட்டது. முறையான நிலத்தடி நீர் கண்காணிப்பு திட்டமிடல் ஒன்றின் மூலம் நிலத்தடி நீர் பகுப்பாய்வுசெய்யப்படவேண்டியதை வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இருந்து பிரதி செய்யலாம். நவீன மண் பொறியியலில் பேய்சியன் முறைமை (Bayesian) பிரபல்யமானது. இதன் மூலம் Dynamic Bayesian Network (DBN) ஒன்றை உருவாக்கி செயற்படுத்தி நிலத்தடி நீரைக் கண்காணிக்கிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் இப்போது நவீன உணர்திறன் கருவிகளால் துல்லியம் காணப்படலாம்.
இந்நிலையில் நிலவிவரும் அதியுச்ச நீர் முரண்பாடை கொள்கையளவில் முதலில் தீர்க்க முயற்சிப்பதை நீர் மேலாண்மை வலியுறுத்துகிறது. கொள்கை கட்டுப்பாடு (policy control) மூலம் நிலக்கீழ் நீர் பாவனையை ஊக்குவிக்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக சுத்திகரித்து விநியோகம் செய்யும் நீர்ப்பாவனையை குறைத்து நிலக்கீழ் நீரை உபயோகப்படுத்தும் தூண்டுதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும். இலங்கையில் நிலக்கீழ் நீர் பாவனைக்கு உகந்ததாகவுள்ள பல பிராந்தியங்களிலும் முழுநேர நீர் விநியோகம் இடம் பெறுகிறது. இந்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் மூலம் நீர் முரண்பாட்டை ஓரளவு தீர்க்கவும் நீர்ப்பாசன தேவைக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யவும் இயலும். இவை வினைத்திறனான நீர்ப்பாவனை எனும் முதலாம் கட்ட நடவடிக்கையாக அமையமுடியும். நிலத்தடி நீர் கொள்ளளவ உயர்வானது(∆S) நிலத்தடி நீர் நிரம்புகை(Replenishment) மற்றும் வடிதல் (Drain) வீதங்களின் வித்தியாசமாக தரப்படலாம். நிரம்புகை வீதமும் வடிதல் வீதமும் சமனாகுமிடத்து நிலத்தடி நீர் மட்டம் சமநிலையொன்றை எய்யமுடியும். ஆதலால் நிலத்தடி நீர் கண்காணிப்பு மூலம் சமநிலையிலுள்ள நிலத்தடி நீர் மட்டம் குறைக்கப்பட்டு வெகுவான கிணறு மற்றும் குழாய் கிணறுகள் உதவியுடன் இறைக்கப்பட்டு நீர் நிலைகளுக்கோ தூர இடங்களுக்கோ நகர்த்தப் படலாம்.
இது இரண்டாவது செயன்முறையாக நிலத்தடி நீர் முகாமைத்துவம் கருதுகிறது.
பெரும்பாலான ஊராட்சி மன்ற பராமரிப்பு தேவைகளுக்கான நீர் குளங்களிலிருந்து பெறப்படுகிறது. இந்நிலையிலிருந்து கைவிடப்பட்ட அல்லது பாவனையின்றிய கிணறுகளிலிருந்து நீர் பெறப்படும் வகையிலான தீர்மானங்களை வரைவுகளை முன்மொழிதலும் முக்கியமானவொன்றாக பார்க்கப் படுகிறது.
குறித்த பிராந்திய மட்டத்திலான நிலக்கீழ் நீர் மட்ட முகாமைத்துவமே அதனை தீர்மானிக்க முடியும். பாதையோர மரங்கள், நீர்ப்பூங்காக்கள், உவர் தன்மையுள்ள நிலத்தடி நீர் கொண்ட கரையோர நிலங்களின் பயிர்ச்செய்கை போன்ற வற்றிற்கான நீர்த்தேவையை இதன் மூலம் நிவர்த்தி செய்வதற்குரிய ஒழுங்கு படுத்தப்பட்ட தனியார் முகவர்கள் நியமிக்கப் படலாம்.
மேற் சொன்ன எல்லா நடவடிக்கைகளும் ஒருங்கே விவசாய நீர்ப்பாசன கொள்ளளவத்தின் மீது பலித சேமிப்பொன்றை நிகழ்த்திவிட ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி பெருக்கம், ஜீவனோபாய முன்னேற்றம், விவசாய கடன் வீழ்ச்சி மற்றும் இரண்டாம் நிலை பொருளாதார முன்னேற்றம் என்பன சாத்தியப்படலாம்.
நீர் எனும் சொத்தை கால்களுக்கு கீழ் தேவையின்றி மாசுபடுத்தி விரயமாக்கும் நிலையிலிருந்து முற்றிலும் விடுபட ஏதுவாகும்.
– சப்னாஸ் ஹாசிம்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *