நெடுநாளைய ஆசையிது. இதற்காகவே நீண்ட நாட்களாக பணம் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். இன்று அது நிறைவேறப்போகிறது! அம்மா என்ன நினைப்பாள் என்று யோசித்தாலே பயந்து வருகிறது. நினைத்தால் நினைக்கட்டுமே. அவள் முன் அதை அணிந்து கொண்டு நிற்க வேண்டும். எத்தனை முறை அவளிடம் அதை வாங்கித்தர கேட்டிருக்கிறேன். என்ன காரணத்திறகாக அவள் மறுக்கிறாள் என்பதே புதிராக உள்ளது.
“எனக்கு நீ தாவணி சேல கட்றது பிடிக்கல… பெரிய பொண்ணு மாதிரி இருப்ப… சுடிதார் தான் நல்லா இருக்கு உனக்கு…”. எத்தனை பொருளற்ற காரணங்களைச் சொல்லி மறுத்திருக்கிறாள்.
“உங்களுக்கு பிடிக்கறத தான் நான் போடனுமா? நான் பெரிய பொண்ணு தானே! ஒரு பொண்ணுனா வாழ்க்கைல ஒரு முறையாவது தாவணி கட்டிப்பாக்கனும், ஒரு ஃபோட்டாவாவது தாவணி போட்டு எடுத்து வச்சிக்கனும்னு ஆசை இருக்காதா?” என்று எத்தனை சமாளிப்பு பதில்களைக் கொடுத்து நானும் சலித்துப் போயிருக்கிறேன். எப்போது இந்தப் பேச்சை எடுத்தாலும் என் தொண்டை நீர் வற்றுமளவு அவளுடன் நான் கத்துவேன். கத்தும்தோறும் அவள் உள்ளூர புளகாங்கிதம் அடைந்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது எனக்கு எரிச்சலையே மூட்டியிருக்கிறது. வலிந்து அதைத் தடுத்து வேறு நினைவுகளை மீட்டினேன். டீ-நகரை நெருங்க நெருங்க பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாகிக் கொண்டே சென்றது. வார இறுதி நாட்களில் மக்களின் படையெடுப்பு இங்கு அதிகமாகத்தான் இருக்கிறது. எத்தனை காலங்களாக இந்த இடம் கொடுத்துக் கொண்டேயும், இந்த மக்கள் வாங்கிக் கொண்டேயும் இருக்கிறார்கள். பொருட்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவருக்கென தன்னை ஏற்கனவே அடையாளப்படுத்திக் கொண்டு பிறந்திருப்பது போல தோன்றுகிறது. நான் எனக்காக வாங்கும் தாவணி எதுவாக அமையப் போகிறது? என்று நினைத்துக் கொண்டே இந்துவிடம் திரும்பி,
“இன்னும் எவ்ளோ நேரம் டீ” என்று கேட்டேன்.
“அவ்ளோ தான்டீ மோகனா மூனு ஸ்டாப்”
“எந்த கடைக்குடீ மொதல்ல போறோம்?”
“ஃபர்ஸ்ட் ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல் இருக்க களஞ்சியம்னு ஒரு கடை. அங்க ஏதும் தேறுமான்னு பாப்போம். இல்லனாலும் பக்கத்து கடைகள்ல அலைஞ்சு பாப்போம்” என்றாள்.
சென்னை வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் டி-நகர் செல்வது இதுவே முதல் முறை. பொருட்கள் எனக்குத் தேவைப்பட்டதே இல்லை. அதிக பொருட்கள் எனக்கு அசெளகரியத்தை அளிக்க வல்லவை. ஒவ்வொரு வாரமும் அறைத்தோழிகள் சும்மா ஷாப்பிங் போறோம் என்பது எப்பொழுதுமே வியப்பையே அளிக்கும் எனக்கு. இந்த முறை தாவணி வாங்க வேண்டும் என்று இந்துவிடம் சொன்னபோது “வாங்கலாமே… டி-நகர் போனா என்ன வேணும்னாலும் வாங்கலாம் என்றாள்”. என்ன வேணும்னாலும் வாங்கலாம் என்பதே ஒரு வித ஆர்வத்தைத்தூண்டியது எனக்கு.
இரண்டு வாரம் கழித்து குடும்பத்தோடு குலதெய்வ பொங்கல் கொடைக்கு இந்த தாவணியைத்தான் அணிந்து செல்ல வேண்டும். உறவினர்கள் எல்லாம் வருவார்கள். எப்படியும் ஒரு ஃபோட்டாவாவது கைகூடும். அதை பத்திரமாக வைக்க வேண்டும். அவன் நினைவிற்கு வந்தான். பொங்கலுக்கு அவன் வர வாய்ப்பிருக்கும். வந்தால் அவனிடம் அதைக் காட்ட வேண்டும். என்னைப் பார்ப்பானா? கல்லூரியே முடிக்கப்போகிறான். யாராவது காதலி இருப்பாள். சரி இருந்தால் என்ன? எனக்கு காட்ட அவன் மட்டும்தானே இருக்கிறான். நினைத்துக் கொண்டிருக்கும்போதே டி-நகர் வந்தது.
நானும் இந்துவும் இறங்கினோம். என் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு “விட்றாத தொலைஞ்சிடுவ எரும” என்றாள். அதுவும் சரிதான் என்று நினைத்தவாறு மேலும் இறுக்கமாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன். நடந்து சென்றோமா இல்லை கூட்டம் எங்களை உந்தித் தள்ளியதா என்று நினைவில்லை. ரங்கநாதன் தெருவின் நெரிசல் மிகு பகுதியில் கட்டுக்கடங்காமல் பிதுங்கிக் கொண்டிருந்த அங்காடிகளை வாயைப் பிளந்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்துவந்தேன். இந்து என் தோளில் இடித்து “அந்தக் கைல இருக்க பர்ஸையும், மொபைலையும் பத்திரமா பிடிச்சுக்க” என்றாள்.
“இந்து இந்த நோக்கியா மொபைல மல உச்சில இருந்து தூக்கிப் போட்டு திரும்ப ஒன்னு சேத்தாக்கூட வொர்க் ஆகும் டீ” என்றேன்.
“பைத்தியமே.. எவனாவது அபேஸ் செஞ்சிட்டு போயிருவான்றதால சொன்னேண்டீ”
“ஆங்.. செரி டீ..” என்றேன்.
ஏற்கனவே போக வேண்டும் என திட்டம் போட்டிருந்த கடைகளுக்குள் மட்டும் சென்று துழாவிப் பார்த்தோம். மனதிற்கு பிடித்தாற்போல ஒன்றுமே அமையவில்லை. நீண்ட நேரமாக இந்த நெரிசலுக்குள் இருந்தும் சோர்வு வரவில்லை என்பதே ஆச்சரியமாய் இருந்தது. பலவிதமான ஆடைகளை, பொருட்களைப் பார்ப்பதன் போதையை முதன்முறையாக அடைந்தேன். எல்லாவற்றையும் கண் கொண்டு அணிந்து, பார்த்தும் சலிப்படையாது அடுத்து அடுத்து என கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அணிந்து கொள்ளுந்தோறும் அது என்னுடையதாக மாறியது மேலும் மயக்கியது.
கராரான முக பாவனையோடு என்னை நோக்கித் திரும்பி “மோனா பாண்டி பஜார் போலாம் டீ. நீ தான் இரண்டாயிரம் வர பட்ஜட் வச்சிருக்கியே. நல்லா பட்டுல எடுக்கலாம்” என்றாள் இந்து.
“பாண்டி பஜாரா? அது எங்க?”
”பக்கம் தான் நடந்தே போயிறலாம்” என்றாள்.
“சரிடீ போலாமே” என்றேன் குதூகலமாக.
“பக்கி” என்று தலையைத் தட்டினாள். மேலும் இறுக்கமாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன். வழிதோறும் பாப்கார்னின் வாசனை, ஐஸ்கிரீமின் வாசனை, பிரியாணியின் வாசனை, வடை பொறிக்கும் எண்ணையில் விழும் கறிவேப்பிலை வாசனை, விதவிதமான பொருட்களை விற்கும் மனிதர்களின் ஒலிகள், பலூன் விசில்கள், ஊதுகுழல் ஓசைகள், ஆங்காங்கே பறக்கும் சோப்பு நுரைக்குமிழிகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். இத்தனைக்கும் மத்தியில் இந்துவின் பக்கம் உடலைக் குறுக்கி யாரும் இடித்துவிடாமல் வர வேண்டுமென சிரத்தையான எண்ணம் வேறு. எல்லா வகையான எச்சரிக்கைகளையும் இந்து விடுதியிலிருந்து கிளம்பும்போதே சொல்லியிருந்தாள். இருந்தும் அவள் அவ்வபோது கடைவீதியில் எனக்கு அன்னையாக மாறுவது குழந்தையின் குதூகலத்தை அளித்தது. எப்போதும் யாருக்காவது குழந்தையாக இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
பாண்டி பஜார் ரங்கநாதன் தெருவை விட பரபரப்பாக இல்லை. அங்கிருந்த இரண்டொரு கடைகளில் அலைந்தபின்பு நாயுடு ஹால் வந்தோம். ரங்கநாதன் தெருவிலுள்ள கடைகளில் இருப்பது போல கூட்டமில்லாத கடை.
”அக்கா தாவணி செக்‌ஷன்” என்று இந்து நுழைந்ததுமே கடையிலிருந்த அக்காவிடம் விசாரித்தாள். “மூனாவது ஃப்ளோர் டீ. வா” என்று மீண்டும் கையைப் பிடித்துக் கொண்டாள். படி ஏறும்போது ஒரு படியை விட்டு விட்டு ஏறிப் பார்த்து இறுதிப் படியில் குதித்து நின்று சிரித்துக் கொண்டோம். விடுதி என்றால் இன்னும் சத்தமிட்டு சிரித்திருப்போம்.
தாவணி செக்‌ஷனில் ஒரு வெள்ளைச் சட்டை போட்டு நடுத்தர வயது அண்ணா நின்றிருந்தார். எங்களைப் பார்த்ததும், “வாங்கம்மா..” என்று எளிய புன்னைகை பூத்தார். ”நல்ல அண்ணா, அருமையா சிரிக்கிறார்ல” என்றேன்.
“நல்லா சிரிச்சா மட்டும் எல்லாரும் நல்ல அண்ணாவா இருக்க மாட்டாங்க பைத்தியமே. இதான் உன்கிட்ட பிரச்சனையே” என்று அலுத்துக் கொண்டாள்.
“சரி ஆரம்பிக்காத” என்று பொய்க்கோபம் கொண்டவாறு திரும்பிக் கொண்டேன்.
“அண்ணா தாவணி பாக்கனும்” என்று பெரிய மனிதக்காரர்களின் பாவனையை முகத்தில் கொணர்ந்து இந்து கரார் தொணியில் சொன்னாள்.
“ஓ! சூப்பரா பாத்திடலாமே பாப்பா” என்றார்.
பல வகையான வண்ணநிற தாவணி செட்டுகள் அங்கிருந்தன. கண்களால் ஆய்ந்து கொண்டே இருந்தேன். நாங்கள் எதுவுமே குறிப்பிட்டுச் சொல்லாததால் அவர் எண்ணம் போல தாவணிகளை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். அவர் எடுத்துவைத்த எல்லா அட்டைப் பெட்டியிலிருக்கும் தாவணியையும் என் கண்கள் தொட்டு வந்தது.
“இது உனக்கு நல்லா இருக்கும்டீ” என்று மஞ்சளும் ஆரஞ்சும் சிவப்பும் என மூன்று தாவணிகளைக் காட்டினாள் இந்து.
தடவிப்பார்த்து, பிரித்து உலைத்து “இது இல்ல..” என்று ஏமாற்றத்துடன் முகத்தை வைத்துக் கொண்டே சொன்னேன். சேல்ஸ் அண்ணா என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எதையோ படித்துவிட்டது போன்ற பாவனையில்…
“பாப்பா உனக்கு என்ன கலர் பிடிக்கும்? ” என்று கேட்டார்.
“ப்ளூ இல்லனா பிங்க் ணா”
“சரி இரு” என்று உள்ளே சென்று மூன்று பெட்டிகளை எடுத்து வந்தார். அதிலும் எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை.
“எவ்ளோ வெலைக்கு எதிர்பாக்கறீங்க” என்று சற்றே தீவிரமாக ஆராயும் நோக்கில் கேட்டார்.
இந்து ”ரெண்டாயிரம் ரேஞ்ச்ல” என்றாள்.
“இத முன்னாலேயே சொல்லிருக்கலாம்ல. அந்த விலைக்கு நல்லாவே எடுத்திடலாம் பாப்பா” என்றவாறு மீண்டும் உள்ளே சென்று வேறு பெட்டிகளை எடுத்து வந்தார். அதன்பின் அவர் காண்பித்த அனைத்து தாவணிகளும் மிருதுவாக, வளவளப்பாக இருப்பதைக் கண்டேன். அந்த மஞ்சள் நிறப்பெட்டியை திறக்கும்போதே “ஆஹா.. இதே தான்.. இதைத்தான் தேடினேன். என்னுடையது. எனக்கே எனக்காக உருவானது” என்று மனம் குதித்தது. பாவாடையும், சட்டையும் இளநீலபட்டு, வழவழப்பான சாம்பல் நிறத்தில் ஓரத்திலும் முந்தியிலும் பட்டாக தாவணி.
“அண்ணா இது தான்.” குரல் தழுதழுத்தது.
“இதையே குடுங்க” என்றேன். அவர் மலர்ந்து, ”இது உனக்கு நல்லா இருக்கும் பாப்பா. இரு வச்சி காமிக்கேன்” என்று தாவணியை மடித்து வந்து என் கைகளில் கொடுத்தார். நான் அப்படியே இரண்டு கைகளாலும் வாங்கி தோள்மேல் வைத்து கண்ணாடியில் பார்த்தேன். நெற்றிப் புருவங்களைத் தூக்கி எப்படி என்ற பாவனையில் இந்துவை நோக்கினேன்.
“சூப்பர் மோனா.. நைஸ் ஒன்” என்றாள் இந்து.
“பாவாடையும் பிளவுசும் அளவெடுத்து இங்கயே தைக்கலாம் பாப்பா”
“எப்ப தருவீங்க” என்று கேட்டாள் இந்து.
“சரியா ஒரு வாரம்”
“திங்க் பண்ணிக்கோடீ. ரங்கநாதன் ஸ்ட்ரீட் திரும்பி போனா ஒன் அவர்ல தச்சிடுவான். அப்படியே ஆக்ஸசரீஸ் வாங்கிட்டு சுத்திட்டு வீட்டுக்கு போகும் போது வாங்கிக்கலாம்.” என்று அறிவுரை கூறினாள்.
“எங்க நல்லா தப்பாங்கடீ”
“நீ முத முறையா ப்ளவுஸ் ஸ்டிட்ச் பண்றியா? ”
“…. ஆமா! ”
“என்னடீ சொல்ற???… நிஜமாவா!!! ” என்று வாயைப் பிளந்தாள்.
“ஆமா இந்து. நிஜமாவே”
“சரி மொத தடவனா இங்கையே தைச்சுக்கோ. காஸ்ட்லியா இருக்கும். பட் பெர்பெக்டா தப்பாங்க. அப்பறம் காலேஜ்ல சிம்போசியத்துக்கு ஸேரிலாம் கட்ட வேண்டியிருக்கும். அப்ப இதையே அளவு ப்ளவுஸா குடுக்கலாம்” என்றாள்
“ம்… ”
“அண்ணா அளவு எடுக்கச் சொல்லுங்க. நெக்ஸ்ட் வீக் குடுத்திடுங்க. ஃபங்ஷன் இருக்கு” என்று சொல்லி அளவெடுக்கச் சொன்னாள். அவர் அளவெடுக்க அருகில் வந்தபோது “அண்ணா லேடிஸ் யாரும் இருந்தா பெட்டர்” என்றாள். நான் ”எதுக்கு” என்பது போல் பார்த்தேன். அவள் என் கைகளை பின்புறமாக இழுத்து வலிக்குமளவு அழுத்தினாள்.
“தனம் இங்க வா. இந்த பாப்பாக்கு அளவு எடுத்து சொல்லு” என்று ஒரு அக்காவைக் கூப்பிட்டார். அந்த அக்கா அளவெடுக்கும்போதான ஒருவித கூச்சவுணர்வும் அசெளகரியமும் இந்து கையை அழுத்தியதற்கான காரணத்தை உணர்த்தியது. முடிந்தளவு முகத்தை அசிரத்தையாக வைத்துக் கொண்டேன்.
“ஆமா உனக்கு பாவாடை, பிரா ஏதும் எடுக்கனுமா” என்று கேட்டாள் இந்து
“பாவாட தான் இப்ப எடுத்திருக்கோம்ல.” என்றேன் புரியாமல்.
“லூசு அதுக்குள்ள ஒரு இன்ஸ்கட் போடனும். சரி இரு.” என்று கூறி அவளே ஒரு நீல இன்ஸ்கட் வாங்கிக் கொடுத்தாள்.
“பிரா சைஸ் சொல்லு”
நான் திரு திருவென முழித்தேன். “என்ன டீ தெரியாதா?”
“இல்ல. தெரியாது. காலேஜ் வரும்போது தான் அம்மா வாங்கிக் குடுத்தாங்க. அதும் ஏதும் அளவெல்லாம் தெரியாது. அவங்க வாங்கிக் குடுத்தத எடுத்துட்டு வந்தேன்.” என்று அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டேன்.
அவள் ஏமாற்றமான பாவனையில் “அக்கா பிரா செக்‌ஷன் எங்க” என்று பக்கத்திலுள்ள அக்காவிடம் கேட்டு அங்கு கூட்டிப்போனாள். முதலில் மார்பகத்துக்கு கீழே உள்ள இடுப்பின் பகுதியை அளந்து “34” என குறிக்கப்பட்டது. அதன் பின் மார்பகத்தை அளந்து ஏ,பி,சி,டி என நான்கு கப் சைஸ்கள் பற்றிய விளக்கத்தைக் கொடுத்து “சி” என்று முடிவு செய்தார் அந்த அக்கா.
“பாப்பா இனி நீ குண்டானா இந்த 34ங்கற சைஸ் மாறும். வளர வளர கப் சைஸ்ல மாற்றம் வரலாம். எப்பவும் உன் சைஸ்க்கு குறைவான பிராவ மட்டும் போடாத” என்று விளக்கத்துடன் கூடிய அறிவுரைகளைச் சொல்லி நான்கு பிராக்கள் எனக்கு அருளப்பட்டன. உண்மையில் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் பொங்கியிருந்தது. எதையோ சாதித்துவிட்ட பெருமிதத்தோடு இந்துவைப் பார்த்தேன்.
இந்து என் அருகில் வந்து பரிதாபத்திற்குரிய தொனியில் “இதெல்லாம் உங்க அம்மா ரொம்ப முன்னமே செஞ்சிருக்கனும்டீ” என்றாள்.
“சரி விடு. இப்ப தான் நீ இருக்கல்ல..” என்று ஏமாற்றப்பட்டவர்களின் ரேகையை முகத்தில் படர விட்டுக் கொண்டே சொன்னேன். உண்மையில் இந்த அப்பாவித்தனமும், ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியலில் இணைத்துக் கொள்வதும் என் பாவனையா என்றே ஒரு நொடி யோசித்துப்பார்த்தேன். உண்மையில் நான் அத்தனை அப்பாவி அல்ல என்பது என் மனதின் கீழ்மைகள் அறிந்தது தான். அது உதட்டோரம் சுழித்து புன்னகைத்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தபோது, “பக்கி” என்று மெதுவாக இந்து தலையைத்தட்டினாள். போகும் வழியிலெல்லாம் ஏனோ புன்னகைத்துக் கொண்டே சென்றேன்.
“இந்து நீ எப்போ தாவணி முதல்முறை கட்டின.”
“நான் ஏஜ் அட்டண்ட் பண்ணினப்போ. அப்பறமா ஒரு மூனு தாவணி ரிலேடிவ்ஸ் ஃபங்ஷனுக்கு வாங்கினது… ”
“அப்ப ஸேரி.. ”
“அது ஃபங்ஷன் வச்சு நீராட்டும்போது கட்டினேன். அதுக்கப்பறம் அம்மா எனக்குன்னு வாங்கி சேத்து வைக்கறதோட சரி. ரொம்ப ரேரா என் கசின்ஸ்லாம் ஏதும் ரிலேடிவ்ஸ் மேரேஜ்க்கு கட்டலாம்னு பிளான் பண்ணா கட்டுவேன்” என்றாள்
“நீ தாவணி கட்டின ஃபோட்டோ வச்சிருக்கியா.”
“ரூம்ல இருக்கு டீ. போனதும் காமிக்கிறேன்”
”நீ எதும் வாங்கலையா இந்து?”
“இல்லடீ. இன்னைக்கு உனக்காக மட்டும் தான் வந்தேன்” என்றாள். ஐஸ்க்ரீம் மட்டும் வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறினோம்.
போனதும் பையைத் திறந்து அதிலிருந்த சாம்பல் நிற தாவணியைத் தடவிப் பார்த்தேன். வழுவழுப்பாக இருந்தது. தொடும்போது சீசாவில் வழுக்கிச் செல்வது போல கைகள் வழுக்கிச் சென்றன.
“இந்து.. இது எனக்கு நல்லா இருக்கும்ல.. ”
“அழகி… உனக்கு சூப்பரா இருக்கும். அதுவும் அக்வா ப்ளூ அண்ட் ஆஷ்.. நைஸ் காம்போ” என்றாள்
“சரி உன் ஃபோட்டோவ காமி… ” என்று நச்சரித்தேன்
அவள் பெட்டியைத் திறந்து கையடக்க ஆல்பத்தை எடுத்தாள். இந்துவும் மதுவும் இரட்டைச் சகோதரிகள். ஆனால் இந்துவுக்கு வட்ட முகமும் முயல் பல்லும் குழி விழும் அழகுக் கண்ணமும் என தேவதை போல இருப்பாள்.
” ம்… சீக்கிரம்… ”
“இரு டீ.. தேடறேன்… ம்….இந்தா”
மஞ்சள் பாவாடையும் ப்ளவுசும், சிவப்பு தாவணி, ஒட்டியாணம், நெத்திச்சுட்டி… மதுவுக்கும் அதே அலங்காரங்கள்.
“ஏன் இந்து மதுவும் உன்கூடவே ஏஜ் அட்டண்ட் பண்டாளா.. ‘ என்ற கேள்வியின் முடிவிலேயே அதன் அபத்தத்தை உணர்ந்தும் அதை மறுக்காமல் அவள் திட்டுக்காக காத்து நின்றேன்.
“இல்ல லூசு அவ முன்னாடியே ஆய்டா. எனக்கு வைக்கும்போதும் அதே டிரஸ் கேட்டு அடம் பிடிச்சா. அதான்” என்றாள்.
“அழகா இருக்க இந்து” என்றேன்.
…. புன்னகைத்தாள். சிறு வெட்கமும் தெரிந்தது.
பிற புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் பிறந்ததிலிருந்து இன்று வரை மிக முக்கிய தருணங்களை படம் பிடித்திருந்தார் அவளுடைய அப்பா. “சூப்பர் இந்து முக்கியமான எல்லா இவண்டையும் ஃபோட்டோல வச்சிருக்க”
“ஆமாடீ.. சிவா அப்பா ஃபோட்டோ எடுக்கறதுல, அந்த தருணங்கள தேதி போட்டு சேமிச்சு வைக்கறதுல ரொம்ப இன்டரெஸ்ட்” என்றாள்.
இந்த ஒன்றிற்காகவே சிவா அப்பாவை மிகவும் பிடித்துபாபோனது “நானும் ஒரு ஃபோட்டோவாவது இந்தத் தாவணில பிடிக்கனும் இந்து. வீட்ல ஒரு கேமரா இருக்கு. கோடாக்ல பிலிம் வாங்கிட்டு போனா எடுத்திடலாம்” என்றேன்.
“கண்டிப்பா. நெக்ஸ்ட் வீக் ஸ்டிட்ச் பண்ண டிரெஸ்ச வாங்கப்போம்போது ஃபிலிம் ரோலும் வாங்கிடலாம். ஃபோட்டோ எடுத்துட்டு இங்க ஹாஸ்டலுக்கு மறக்காம எடுத்து வந்துரு நான் பாக்கனும்… ”
“சரிடீ… ” என்று நிறைந்து புன்னகைத்தேன்.
***
குலதெய்வம் இருளப்பசாமி கோயில் பொங்கல் பூசைக்கு அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நான் அத்தைமார்களும் அம்மாவும் சேலை கட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
”மதினி எந்தப் பொடவையக் கட்ட” என்று காந்த அத்தை தன் ஊரிலிருந்து எடுத்து வந்திருந்த புடவைகளை அம்மாவிடம் காட்டி அறிவுரை வாங்கிக் கொண்டிருந்தாள். அம்மா சிறிய பட்டி வைத்த சிவப்பு நிற பட்டுப் புடவையை வெகு நேரமாக பிரித்தும் உலைத்தும் கட்டிக் கொண்டிருந்தாள். இந்த புடவை கட்டும் லாவகம் கட்டிப் பார்த்தால் தான் தெரியும் என்று நினைத்துக் கொண்டேன். ஈஸ்வரி அத்தை அவளுக்கு புடவை மடிப்புகளை கைகளால் நீவி விட்டுக் கொண்டிருந்தாள். புடவை கட்டி முடித்துவிட்டு தலைபின்னும் போது கண்மையை எடுத்து நரைகளில் தடவி மறைத்துக் கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்ததும் தலை நிறைய குண்டுமல்லி வைத்துக் கொண்டு இறுதியாக அந்த இரட்டைவடச் சங்கிலியை சிவப்புச் சேலைக்கு மேல் எடுத்துவிடும்போது நிறைவாக இருந்தது. அழகி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே,
“ஏவ்ளா என்னத்த வாயப்பாத்துக்கிட்டு இருக்கறவ. போய் குளித்தா” என்று பாட்டி என்னை கண்டு கொண்டு அரற்றினாள்.
யாருக்குமே நான் என்ன போடப் போகிறேன் என்று அக்கறையேயில்லை என்று மனதில் குமைந்து கொண்டேன். “இந்தா போறேன் பாட்டி” என்று வழக்கத்திற்கு மாறாக அடக்கமாக பதில் சொன்னேன். ஒன்றன்பின் ஒன்றாக ரயில்வண்டிபோல நெடுக வடக்கு தெற்காக கட்டப்பட்டு எது முன்பின் என்று பிரித்தரியாத வண்ணம் இரண்டு தெருக்களிலும் திறந்து கிடக்கும் எங்கள் வீட்டில் முன் முற்றமாக நான் கருதும் தெற்குப் பகுதியின் இறுதி அறையைத் தாண்டி தான் குளியளறைக்குச் செல்ல வேண்டும். சென்னையில் வீடுகள் இப்படி நீள் செவ்வகமாக இருந்து நான் பார்த்ததேயில்லை. தீப்பெட்டி வீடுகள் தான் அதிகம், தனி வீடுகளும் சதுரமாகத்தான் இருக்கின்றன. அடுக்குமாடி வீடுகளும் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டிகள் தான் என்று எண்ணங்கள் அலைய பெருமூச்சு விட்டவாறு குளியளறைக்கு முன் அறையை வந்தடைந்தேன். அங்கு மாட்டப்பட்டிருந்த பாட்டி தாத்தா புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன் வழக்கம்போல. மீனாட்சி பாட்டி கொள்ளை அழகு. திருமணம் ஆன புதிதில் அவள் தாத்தாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமது. குட்டையான கச்சிதமான அடர்நிற பிளவுஸ் அணிந்திருந்தாள். இப்போதெல்லாம் யாரும் குட்டை பிளவுசுகள் அணிவதில்லை என்று நினைத்துக் கொண்டே அந்த கறுப்பு வெள்ளைப் படத்தை பார்த்தவாறு நின்றிருந்தேன்.
“ஏ ஆத்தா..” என்று பின்னாலிருந்து பாட்டியின் குரல் கேட்டது.
”சொல்லு பாட்டி..”
”நீ குளிக்கறதுக்கு முன்னாடி எனக்கு முதுகு தேச்சு விட்டுட்டு குளிக்கப்போத்தா” என்று கேட்டாள்.
”என் அழகிக்குட்டி. தேச்சி விட்றேண்டீ” என்று அவளைக் கட்டிக் கொண்டேன். பாட்டிக்கு முதுகு தேய்ப்பது, தலைவாரிவிடுவது, கால்கைகளை பிடித்துவிடுவது மிகவும் பிடிக்குமெனக்கு.
குளியலறையில் நுழைந்தபோதே ஏற்கனவே அம்மா ஈய அண்டாவில் ஊற்றி வைத்த வெந்நீர் ஆவியை பறக்கவிட்டுக் கொண்டிருந்தது. ஸ்நானப்பொடியையும் சீகைக்காயையும் கலக்கி வைத்து விட்டு பாட்டியைக் கூப்பிட்டு பலகையில் உட்காரச் சொல்லி கொண்டையை அவிழ்த்துவிட்டேன். எங்கெங்கு லாவகமாக அவளுக்கு முதுகு தேய்க்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும். தன்னைத்தானே தீண்டிக் கொள்ளவியலாத பகுதிகளை பிறர் நுணுக்கமறிந்து வருடுவது சுகமான அனுபவம் தான். தண்ணீர் ஊற்றிக் கொண்டே சற்றே சோகமான குரலில் “ஏன் பாட்டி எனக்கும் சுருட்ட முடி தானே உன் அளவுக்கு ஏன் நீளமா இல்ல” என்று கேட்டேன்.
சிரித்துக் கொண்டே “ஒனக்கு பனங்கொட்ட சுருட்ட மண்டத்தா. அது எவ்ளோ வளந்தாலும் சுருண்டு மேல தான் நிக்கும். கீழ எறங்காது” என்று சொல்லி மேலும் சிரித்தாள்.
”போடி” என்று சினுங்கியவாறு, “ஏன் பாட்டி இன்னைக்காச்சும் நீ கொண்ட போடாம முடியைப் பின்னி அப்டியே விடுவியா. ப்ளீஸ்” என்று கேட்டேன்.
“அடிப்போடி பைத்தியக்காரி. வயசுக்கு வந்த பேத்திய வச்சிக்கிட்டு பின்னி சடப் போட்டு பூ முடியறது தான் ஒரு கேடா” என்று அலுத்துக் கொண்டாள். “ஏன் பாட்டி. நான் வயசுக்கு வந்ததுக்கும் நீ கொண்ட போட்டுகறதுக்கும் என்ன சம்மந்தம்.?”
“அப்டியில்லத்தா. பொண்ணுக வயசுக்கு வந்ததுமே ஆத்தாகாரிக சீவி சிங்காரிக்கறத கொறச்சிக்கிடனும். நான்ளாம் உன் காந்தா அத்த வயசுக்கு வந்து தாவணி கட்ட ஆரம்பிச்சதும் உள்பாடி போடறதையே நிப்பாட்டிக்கிட்டேன். அப்ப முடிய ஆரம்பிச்ச கொண்ட தான். உன் ஆத்தாகாரிதான் இன்னும் முழுத்த வயசுக்கு வந்த பிள்ளைய வச்சிக்கிட்டு இப்டி சிமிட்டிக்கிட்டு திரியுறா” என்று ஆற்றாமையோடு சொன்னாள்.
“அத்தை தாவணி கட்டறதுக்கும் நீ பிரா போடாததுக்கும், கொண்ட முடியறதுக்கும் என்ன சம்மந்தம்னே புரியல பாட்டீ. இந்தக்காலத்துல பாட்டிகள்லாம் சுடிதாரே போடறாங்களே. என் ஃபிரெண்ட்ஸோட அம்மாங்கள போல தானே அம்மா டிரெஸ் பண்ணிக்கிறா. இதிலென்ன தப்பு?”
“பைத்தியக்காரி… இந்த ஊர்நாட்ல…” என்று இழுத்தவள். “அதவிடு உன் தாத்தங்காறனுக்கும் அப்பனுக்கும்..” என்று இழுத்து வேண்டாம் என்பது போல நிறுத்திக் கொண்டாள்.
நான் மிகவும் யோசித்து… “பாட்டி இன்னும் ரெண்டு வருசத்துல நான் சென்னைல வேலைக்கு சேந்திருவேன். அப்ப நீ எங்கூட வந்து இருப்பெய்ல. அப்ப சுடிதார் போடலாம்ல.” என்றேன்
சிரித்துக் கொண்டே என் மண்டையில் கொட்டினாள்… “இந்த நடு முதுகுல இன்னுங்கொஞ்சம் தேச்சு விடு ஆத்தா… ” என்றாள்.
குளியளறையின் நிசப்தத்தில் அந்த தேய்த்துவிடும் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த மெளனம் கலையும்படி “நல்லா படிக்கனும் ஆத்தா. கை நிறைய சம்பாதிக்கனும். எவன் தயவையும் நம்பி வீட்ல கெடக்கக் கூடாது. இப்பலாம் பொம்பளைக எப்டி இருக்காங்க பாத்தியா. நீ வேல பாரு. பாட்டி உங்கூடவே வந்திடறேன். அங்க நீ கேட்டமாறியே கொண்டபோடாம பின்னி போட்டுக்கறேன் மோனாக்குட்டி” என்றாள்.
“சரி பாட்டி” என்று ஈரம் ததும்பிய அவளின் கன்னத்தில் முத்தமிட்டேன்.
தேய்த்து விட்ட முதுகில் இளவெந்நீரை ஊற்றும் போது பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
நானும் அப்படியே குளித்து முடித்து வந்து தாவணி வைத்திருந்த பையை பதறாமல் எடுத்தேன். தலையிலிருந்து வடியும் தண்ணீர் துணிகளில் படாதவாறு துண்டைச் சுற்றி முடிந்தேன்.
உள்ளாடைகள் இன்ஸ்கர்ட் இளநீல ப்ளவுஸ் என வரிசையாக அணிந்தேன். முதல் முறையாக கச்சிதமான பிரா அணியும் ஒரு இறுக்கம் உடலில் சேர்ந்தது. உண்மையில் இந்த இறுக்கம் பெண்மையை மேலும் உணரச் செய்கிறது தான். பிளவுஸ் அணிந்த மார்பகங்களைத் தொட்டுப் பார்த்தேன். கலவையான உணர்வு. இன்னதென்று புரியாத கூச்சம் வந்து சேர்ந்தது. யாரோ என்னை உற்றுப்பார்ப்பது போல இனியபயம் வேறு. இளநீலப்பட்டுப் பாவாடையை எடுத்து கன்னத்தில் வைத்துப்பார்த்தேன். அது வழவழப்பான ஜெல்லிமிட்டாயைத் தடவுவது போல இருந்தது. அதை அணிந்தபின் என்னை நானே மேலிருந்து கீழ் நோக்கினேன். சொல்லவியலாத வெட்கம் முட்டியது. மார்புக்கும் இடைக்கும் நடுவே இருக்கும் பகுதியை காற்று வந்து தழுவிக் கொண்டு சுழித்துச் சென்றது. அரை நிர்வாணமென உணர்ந்து பயந்து போய் விருவிருவென தாவணியை குலைத்து எடுத்து உடலில் சுற்றிக் கொண்டேன்.
பின் மெதுவாக தாவாணியை அழகாக மடிப்பு எடுத்து இடது தோளில் பிளவுஸோடு சேர்த்து ஊக்கைக் குத்தினேன். தாவணியின் மறு முனையிலும் சிறு மடிப்பை எடுத்து வந்து இடுப்பில் செருகினேன். அது மேலும் கிளுகிளுப்பாக இருந்தது. கவிழ்த்து வைத்த செவ்வக வடிவில் மடிப்புகளுடன் தாவணி தொங்குகிறதா என்று பின்புறம் சரிபார்த்தேன். முன் மடிப்புகளை சரிசெய்தேன். உடனே கண்ணாடியில் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. மிகப் பெரிய நிலைக் கண்ணாடி இருந்த அறைக்கு தத்தித்தத்தி நடந்து போய் ஆவல் மேலிட அதன்முன் நின்றேன். வலது கையால் பின்னிருந்த முந்தானையை எடுத்து முன் கொணர்ந்து கைகளைக் கோர்த்து நின்று கண்ணாடியை நோக்கினேன். அடக்கி வைத்திருந்த கண்ணீர் துளிர்த்து நின்றது. அது தாவணியை நனைத்து விடக்கூடாது என்று நினைத்து உடனே துடைத்தேன். “ஒரு ஃபோட்டோ எடுத்துக்கனும்” என்று நினைத்துக் கொண்டேன்.
***
அவ்வபோது கல்லூரியில் இருக்கும்போது அந்த பீரோவில் மஞ்சள் கவர்போட்ட அட்டைப் பெட்டியில் லாவகமாக மடித்து வைத்து வந்த தாவணி நினைவிற்கு வரும். தாவணி கட்டிக்கொண்டு அம்மாவின் முன் நின்றபோதிருந்த அவளின் முகம் இப்போது நினைவிற்கு வந்தது. முதலில் முகம் நிறைந்து பொங்கி அழுதாள். பின் அது ஏக்கமாகத் தெரிந்தது. பின் கையறு நிலையென உருக்கொண்டது. சிறிது கோபமும் அவமதிப்பும் நிறைந்து பார்வையாக அதை சுருக்கி என்னை வெறித்தாள்.
“நல்லா இருக்கா” என்று கேட்டேன்.
“குண்டா இருக்கவங்களுக்கு தாவணி கட்டினா அவ்ளோ நல்லா இருக்காது” என்றாள்.
பெருத்த ஏமாற்றமான முகபாவனையில் “செல்வம் மாமா நல்லா இருக்குனு சொன்னாரே. பாட்டி கூட சுத்திப்போடனும்னு சொன்னா” என்றேன்.
”என்கிட்ட சொல்லாம ஏன் எடுத்த” என்று கோபமாக கேட்டுவிட்டு நகர்ந்து சென்றாள். நிறையக் கேள்விகளை அவளை நோக்கி கேட்க வேண்டுமென்று தோன்றியது. திரண்டு வராத கேள்விகளால் கைவிடப்பட்டேன். அதன்பின் அந்த எண்ணங்களையும் அவளையும் கண்டுகொள்ளாதது போல மகிழ்வும் செறுக்குமாக அன்று முழுவதும் திரிந்தேன்.
மூன்று மாதங்கள் கழித்து இன்று ஊருக்கு வருகிறேன். புதூர் விலக்கில் இறங்கி ஆட்டோ ஏறிக் கொண்டேன். அவன் ஊருக்கு வந்திருப்பானா? சென்ற முறை பார்த்தபோது “தாவணிலாம் கட்டி பொண்ணு மாதிரி இருக்கியே.” என்று நக்கலடித்தான். நான் பொய்க்கோபம் கொள்வது போல முகத்தை வைத்துக் கொண்டு ஓடி வந்து விட்டேன். நமக்கென்று தனியாகக் காதலிக்க ஒருவர் கூட இல்லை என்ற கவலை வந்து சேர்ந்தது. சே. வேண்டாம் தப்பு என்றும் தோன்றியது. அதன் முடிவிலேயே தவறொன்றுமில்லை கிடைக்கனுமே! என்ற எண்ணம் வந்தது. எப்படியிருந்தாலும் என் முதல் காதல் உணர்வு அவன் மேல் தான். ஒருமுறையாவது அவனைப் பார்த்தால் தான் இந்த விடுமுறை நிறைவடையும் என்று நினைத்துக் கொண்டேன். மீண்டும் தாவணி பற்றிய எண்ணம் வந்தது. நல்லவேளையாக ஒரு ஃபோட்டோ எடுத்தாயிற்று என்று பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.
வீட்டிற்கு வந்திறங்கியபின் வழக்கமாகச் செய்யும் சம்பிரதாயங்களாக அம்மா, அப்பாவிடம் கல்லூரியில் நடந்தவைகளை டீ குடித்துக் கொண்டே மூச்சுவிடாமல் ஒப்பிப்பது, தலைகுளித்துவிட்டு இட்லி, கறிக்குழம்பு சாப்பிடுவது என யாவற்றையும் செய்து முடித்தேன். யாரும் என்னை பொருட்படுத்தாத முன் மதிய நேரத்தில் பதுங்கிச் சென்று பீரோவைத் துழாவினேன். அந்த மஞ்சள் அட்டைப் பெட்டியைத் திறந்தபோது தாவணி அப்படியே இருந்தது. ஆனால் பாவாடையை எடுத்து உலைத்தபோது சூடான ரத்தம் அடியிலிருந்து வந்து மண்டையில் முட்டி தலையே தகித்தது. பாவாடையையும் பிளவுசையும் எடுத்து வந்து அறிவாள்மனையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த அம்மாவின் முகத்தில் விட்டெறிந்தேன்..
“இந்த பட்டுப் பாவாடையையும், பிளவுசையும் ஏன் பிரிச்சீங்க!” என்று அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு கேட்டேன்.
“என்னத்த தச்சிருக்கானுக. நல்லாவே இல்ல. அதான் சின்ன தங்கச்சிக்கு பாவடை சட்ட தைக்கலாம்னு பிரிச்சேன்?” என்று மிக இயல்பாகச் சொன்னாள்.
”நான் தாவணி கட்றதுல உங்களுக்கு என்ன பிரச்சன? அத விடுங்க இது வரை எனக்குன்னு ஒரு சேலையாவது தனியா வாங்கிக் குடுத்திருக்கீங்களா? உங்களுக்கு மட்டும் பாத்துப்பாத்து எடுத்து பீரோ ஃபுல்லா ஸேரி வச்சிருக்கீங்க. என் ஃபிரெண்ட்ஸ் கேக்கறாங்க ஏன் இவ்ளோ நாளா சரியான சைஸ்ல பிரா போடலனு.. இதெல்லாம் ஒரு அம்மா தானே செஞ்சிருக்கனும்னு கேக்கறாங்க. எல்லா ஃபிரெண்ட்ஸ்க்கும் அவங்கவங்க அம்மாங்க ஸ்கூல்லயே பிரா போட சொல்லி குடுத்திருக்காங்க. பிரான்னா டைட்டா இருக்கும்னே எனக்கு இந்து எடுத்துகுடுத்தப்ப தான் தெரிஞ்சது. என்னோட டென்த் ஸ்டேண்டர்ட் ஃபேர்வெல் பார்டில நான் மட்டும்தான் தாவணி போடம இருந்தேன் தெரியுமா. அப்ப எனக்கு படிக்கறதத்தவிர இதெல்லாம் பெரிசா தெரில. இன்னைக்கு எனக்கு ஆசையா இருக்கு. நான் பெரிய பொண்ணு தானே.. அப்டி இருக்கறதுல என்ன தப்பு? ஏன் ஒரு அம்மாவா ஒரு பொண்ணுக்கு செய்ய வேண்டிய எதுவுமே எனக்கு செய்ய மாட்டிக்கிறீங்க?” என்று கதறி அழுதேன்
இத்தனை அப்பட்டமான கேள்விகளை எதிர்பாத்திராதவள் போல பதற்றமடைந்தவளாய் அம்மா உட்கார்ந்திருந்தாள். ஆனால் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் அவளிடம் இல்லாதவளாய் மெதுவாக முன்னகரும் பொருட்டு “தாவணி, சேலைலாம் கட்டுனா நீ பெரிய பொண்ணு மாதிரி தெரியுவ.” என்று இயல்பாக காய்களை நறுக்க ஆரம்பித்தாள்.
பக்கத்தில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி அவளின் தலையில் போட வேண்டும் போல இருந்தது. ஆனால் தூக்க முடியாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்ததால் அந்த சிந்தனையைக் கைவிட்டேன். ஆத்திரம் மேலிட “நான் பெரிய பொண்ணு தான். தாவணியோ சேலையோ போடாததால மட்டும் சின்ன புள்ளையா இருந்திடப்போறதில்ல.” கையறுநிலையோடு அடக்கமுற்பட்ட மெளனத்தைக் கடந்து ”உங்களுக்கும் வயசாகாம இருக்கப்போறதில்ல” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தேன்.

 

***
-இரம்யா

Please follow and like us:

18 thoughts on “நீலத்தாவணி – இரம்யா

  1. நல்ல சிறுகதை. வாழ்த்துகள் இரம்யா.

  2. முதல் சிறுகதைக்கு வாழ்த்துக்கள் இரம்யா. தொடர்ந்து பயணியுங்கள்!

  3. அருமையான கதை ரம்யா!
    கதையில் தாய்க்கும் மகளுக்குமான ஏதோ ஒரு சரடு விடுபட்டதாகவே தெரிகிறது. ஒரு மகளின் மனதில் ஒரு தாவணிக்காக இத்தனை போராட்டம் நடப்பது தெரிந்தும் தாய் புறக்கணிக்கிறாள்.
    ஒரு மகளுக்குத் தாயாக உடையாகட்டும், வெளியுலகம் பற்றிய எச்சரிக்கை ஆகட்டும் எதையும் சொல்லித்தரவில்லை.  கதைமுழுவதும் மோனாவிடம்  கள்ளம் கபடற்ற தன்மை பல இடங்களில் ரசிக்கும்படியாக இருந்தது. பாட்டிக்கும் பேத்திக்கும் நடக்கும் உரையாடல் அருமை. மோனாவின் அம்மா சிறுவயது போல இருக்க மெனக்கெடுவதும், மோனா தான் பெரியவளாகி விட்டாள் என்பதை உணர்த்த மெனக்கெடுவதும் நன்று.
    எனக்கென்னவோ மோனா கோடி காட்டும் காதல், அம்மாவின் மனதில் இருக்கும் உண்மையான காரணம், பாட்டி தன் கணவர், மகன் பற்றி சொல்ல வந்து நிறுத்தியதும் என பல கதைகள் இந்தக் கதைக்குள் பொதிந்து இருப்பது போலத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளர் உதயமாகி விட்டார். வாழ்த்துக்கள் ரம்யா!

  4. முதல் சிறுகதைக்கு வாழ்த்துகள்.

    கதையின் இறுதி வரிகளை படித்தபின் கொஞ்ச நேரம் கதை சொல்லும் தாய் மகள் உறவுச் சிக்கலை, அதன் மூலம் அது சுட்டும் மானுட உறவுகளில் பொதுவாக வெளிப்படாத, பேசப்படாத ஆனால் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் சிடுக்கை மனதில் அளைந்துகொண்டிருந்தேன்.

    முழுவதையும் சொல்லிவிடாமல் வாசகனுக்கு இடம் விடுவதால் இந்த சிறுகதை கடைசி பத்திக்கு பின்னும் வளர்கிறது. அது சிறந்த சிறுகதைகளுக்கான முதல் தகுதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    கதைசொல்லி அவள் தோழியுடன் உடை வாங்கும் குதூகலம் நிறைந்த பயணம் சுவாரஸ்யமான சித்தரிப்புகளுடன் வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறது.

    கதை சொல்லி தாயுடன் நிகழ்த்தும் அந்த போராட்டத்தின் முழுச்சித்திரத்தையும் வாசகன் மனதில் வரைய இன்னும் கொஞ்சம் சம்பவங்களை கருப்பொருளாக அளித்திருக்கலாமா என்று ஒரு கேள்வி, அனால் அப்படி முழுதையும் சொல்லிவிட்டால் வாசகனுக்கு இடம் வேண்டாமா? பெரிய சிக்கல் தான்.

    சிறப்பான சிறுகதை, மீண்டும் வாழ்த்துகள்.

  5. அருமை.முதல் கதைக்கு என் வாழ்த்துக்கள்.
    கல்யாணத்திற்குக் குதிர்ந்து விட்ட பெண்ணை தாவணியிலோ சாரியிலோ பார்க்கும்போது பெற்றவர்கள் அடையும் பகீர் மன நிலையை மகள்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.அதுவும் அவர்கள் இன்னும் பொருளாதார ரீதியாகத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளாத போது.

  6. முதல் சிறுகதை என்பதை நம்ப முடியவில்லை நெளிந்த நீரோடை போலவே நடை
    முதல் சிறுகதை என்பதாலோ என்னவோ எல்லாம் முதல் முறை போல சிறுகதை முழுக்க அதை நோக்கியே போகிறது

    கைகளைப் பற்றிக் கொண்டேன். வழிதோறும் பாப்கார்னின் வாசனை, ஐஸ்கிரீமின் வாசனை, பிரியாணியின் வாசனை, வடை பொறிக்கும் எண்ணையில் விழும் கறிவேப்பிலை வாசனை, விதவிதமான பொருட்களை விற்கும் மனிதர்களின் ஒலிகள், பலூன் விசில்கள், ஊதுகுழல் ஓசைகள், ஆங்காங்கே பறக்கும் சோப்பு நுரைக்குமிழிகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். இத்தனைக்கும் மத்தியில் இந்துவின் பக்கம் உடலைக் குறுக்கி யாரும் இடித்துவிடாமல் வர வேண்டுமென சிரத்தையான எண்ணம் வேறு. எல்லா வகையான எச்சரிக்கைகளையும் இந்து விடுதியிலிருந்து கிளம்பும்போதே சொல்லியிருந்தாள்

    இதை படிக்கும் போது தோன்றியதும் அதுவே எல்லாமே முதன்முதலாக .

    விரைவில் நல்ல நாவலை எதிர்பார்க்கிறோம்.

  7. ஜெயமோகனின் இணையதளம் மூலம் வனம் இணைய இதழில் தாங்கள் எழுதிய நீலத்தாவணி சிறுகதையை வாசித்து மகிழ்ந்தேன். தெளிந்த சீரான நடையில் கதை சொல்லும் பாங்கை கைவரப்பெற்று இருக்கிறீர்கள். வாழ்த்துகள். நல்ல விவரைணகள் சீரான கதைப் போக்கு ஒரு கிராமத்துப் படத்தை நகரத்து காட்சிகளுடன் பார்த்த மாதிரி கதைசொல்லி இருக்கிறீர்கள். நல்ல ஒரு சிறுகதை எழுத்தாளர் உதயம் ஆகிவிட்டார். குறுநாவல் நாவல் எழுதும் திறமை உங்களில் பொதிந்து கிடக்கிறது. மேலும் வளர வாழ்த்துகள்.

  8. அருமை.ஒரு இளம் பெண்ணின் மன ஓட்டங்களை இனிமையாக பதிவு செய்து உள்ளீர்கள்.மனக்குமறல் சேர்த்து.

  9. படித்த பிறகுதான் முதல் சிறுகதை என்பது தெரிந்தது.கதையோட்டத்தில் முதிர்ச்சி.சிறிய கேரக்டரில் வரும் பாட்டியின் உணர்வைக்கூட அசராமல் கடத்துகிறது வாசகனுக்குள்.வாழ்த்துகள்

  10. மிக அருமையான கதை நீண்ட நாள் கழித்து சிறந்த சிறுகதை ஒன்றை படித்த நிறைவு…ஆனால் மோனாவின் அம்மாவிற்கு உண்மையில் என்னதான் பிரச்சினை…..

    நன்றி எழுத்தாளர் ரம்யா..

  11. முதல் சிறுகதையா ! நம்ப முடியவில்லை .. மிக அருமை , வெகு தூரம் பயணிக்கப் போகிறீர்கள். முழுக்கதையும் சொல்லிவிடாமல் வாசகனின் கற்பனைக்கு இடம் கொடுத்து முடித்து விட்டீர்கள்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *