கே .வி .ஷைலஜா அவர்களுடனான நேர்காணல்

 

1) மலையாள எழுத்துக்களை தமிழ் வகைப்படுத்துவதின் நுட்பவியலை அறிந்தவர் நீங்கள். மற்றைய மொழி பெயர்ப்பாளர்களை விட சைலாஜா வேறு பட்டு நிற்கும் புள்ளி எவ்வகையானது?

இந்த கேள்வி என்னைக் கொஞ்சம் கூச்சப்படவே வைக்கிறது. ஆனாலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தால் சொல்கிறேன். என்னுடைய மெனக்கடல் கொஞ்சம் அதிகம். புத்தக தேர்விலிருந்து அதை இரண்டு மூன்று முறை வாசித்து அந்த பிரதி  எனக்கு உகந்ததாக இருக்கிறதா, என்னுடைய அரசியல் நிலைபாட்டுடன் ஒத்து போகிறதா, இந்த பிரதி தமிழில் வருவதன் மூலம் தமிழிலக்கியத்தை லேசாகவேணும் அசைக்க முடிகிறதா என்றெல்லாம் பார்ப்பேன். அதன் பிறகே புத்தகத்தை தமிழ்படுத்துவேன்.

என்னிடமிருந்து வரும் ஒரு தமிழ் பிரதி குறைந்தது பதினைந்து முறையாவது மீண்டும் மீண்டும் திருத்தின பிறகே வரும். ஒவ்வொரு முறையும் ஒரு வாசகியாய் அதை தனித்து நின்று வாசித்துப் பார்ப்பேன். எனக்கு முழுமையாய் திருப்தியளித்தால் மட்டுமே அது அச்சுக்குப் போகும்.

 

2) பழகிப் போன படைப்பாளிகளை மாத்திரம் மொழிபெயர்த்துக் கொள்ளும் சூழலில்; சைலஜாவின் தெரிவில் சிக்கிக் கொண்ட படைப்பாளிகள் இலக்கிய உலகில் எம்மாதிரியானவர்கள்?

நான் மொழிபெயர்க்க ஆரம்பித்த நாள் முதல் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற, தமிழில் எல்லோருக்கும் தெரிந்த படைப்பாளிகளை நாமும் கொண்டு வரவேண்டாம் என்று முடிவு செய்தேன். புதியதாக எழுதும் சிறிய அறிமுகத்தோடு மட்டுமே இருக்கும் படைப்பாளிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்துவோம் என்றும் முடிவு செய்தேன். ஆனால் அது அப்படியொன்றும் நடக்கவில்லை. என்னுடைய முதல் புத்தகம் ‘கேரளாவின் சொத்து’ என்று அறியப்படுகிற பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள். இரண்டாவது புத்தகம் மெகாஸ்டார் மம்முட்டியின் மூன்றாம் பிறை. இப்படியேதான் என்.எஸ்.மாதவன், கல்பட்டா நாராயணன், பின்னணிக் குரல் கலைஞர். பாக்யலக்ஷ்மி, உமா பிரேமன், கே.ஆர். மீரா, சிஹாபுதின் பொய்த்தும்கடவு என்று புகழ்பெற்ற படைப்பாளிகளின் புத்தகங்களாகவே மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் இவர்கள் எல்லோரும் இந்த தலைமுறை ஆட்கள் என்பது சந்தோஷமே. எம்.டி.வாசுதேவன் நாயர் மட்டுமே இதில் விதிவிலக்கு.

 

3) எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘இறுதி யாத்திரையும்’, ‘சுமித்ரா’ வும் அடுத்தடுத்து மொழிபெயர்க்கப்பட்ட இரு வேறு பண்புகளைக் கொண்ட நாவல்கள். வேறு பட்ட மனநிலையினைக் கொண்ட படைப்புக்களை ஒரே மாதிரியாக மொழிபெயர்ப்பதில் ஏற்படும் எதிர் அரசியல் எப்படிப்பட்டது?

எம்.டி.வி. யின் இறுதி யாத்திரை, கல்பட்டாவின் சுமித்ரா இரண்டுமே மரணத்தை முன்னிறுத்தும் படைப்புகள். இறுதி யாத்திரை, அப்பாவின் மரணத்திற்கு இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து நான்கு பிள்ளைகளும் வந்து எரியூட்டுவது வரை கதை பின்னப்பட்டிருக்கும்.

சுமித்ரா ஒரு முப்பத்தியாறு வயசுக்காரி. ஒரு புலர்காலையில் இறந்திருப்பாள். அவள் மரணத்திற்கு வரும் உறவினர்கள், தோழிகள், நண்பர்கள், வளர்த்த பிள்ளை என கதை நகர்ந்து பின் எரியூட்டலில் முடியும்.

இரண்டு கதைகளும் மரணத்தைப் பற்றியது தானென்றாலும் அப்படியே வெவ்வேறு பரிமாணம் காட்டியது. ஒன்று மற்றொன்றை விஞ்சி நின்றது. பல பெண்களோடு சுமித்ரா பொருந்திப் போனாள். அர்த்தராத்திரிகளில் பலர் என்னை ரகசியமாய் அழைத்து உன் சுமித்ரா வேறு யாருமல்ல, நான் தான் நான் தான் என்று கதறியிருக்கிறார்கள். சுமித்ராவின் நட்பில், உறவில் , பொங்கும் காமத்தில், ஈகையில், கருணையில், ஒவ்வொன்றிலும் அவர்கள் தங்களைக் கண்டெடுத்தார்கள். அதே போல ”இனி யாராவது முகம் பாக்க இருக்காங்களா” என்று சுமித்தராவின் சிதையருகிலிருந்து பொத்தாம் பொதுவாக கேட்ட கோபாலன் நாயருக்கு, சிக்கிமில் அடர்குளிரில் எல்லைப் பாதுகாப்பிலிருக்கும் ராணுவ வீரன் தங்கபாண்டியன் விம்மியபடி, “நானிருக்கிறேன் மூடி விடாதீர்கள்” என்று கதறுகிறார். பலரின் மன அடியாழத்திலிருந்து துள்ளி குதித்தபடி பெருங்குரலெடுத்தும் அமைதியாகவும் பார்வை கொண்டும் பேசுகிறாள் சுமித்ரா.

இந்த இரண்டு நாவல்களையும் மொழிபெயர்ப்பதற்கிடையில் என் அக்கா கணவர் புற்றுநோய் நான்காம் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மூன்று மாதங்களில் இறந்து போகிறார். படைப்புகளும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் இணைய என் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பின் மீண்டு வந்தேன். படைப்பு வேறு வாழ்வு வேறு என்று பிரித்துணர தெரியாத நான்தான் அல்லலுறும் மனநிலையிலிருக்கிறேன்.

4) தொடரான வாசிப்பின் ஊடாகவே எழுத்து முறைமை உங்களை வந்தடைந்ததாக கூறியிருக்கிறீர்கள். பொதுவான வாசிப்பு மன நிலையினை குறித்தா அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாசிப்பு மன நிலையினை குறித்தா இப்படி ஒரு கருத்தினை கூறியிருக்கிறீர்கள்?  அவ்வாறு உங்களை மாற்றிய படைப்புக்களின் வரிசையினை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே?

தொடர்வாசிப்புதான் என்னை எழுத்தை நோக்கி நகர்த்தியது. கண்டதைப் படித்தால் பண்டிதனாவன் என்ற கருத்தில் முற்றிலும் உடன் படாதவள் நான். நான்காம் வகுப்பிலிருந்தே வாசிக்க ஆரம்பித்திருந்த நான் அப்போதும் குறிப்பிட்ட எழுத்தாளர்களையே வாசித்திருந்தேன். அம்புலிமாமாவில் தொடங்கி பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, சுஜாதா எனும் படைப்பாளிகளே எனக்கும் ஆரம்பகால எழுத்தாளர்கள். மெல்ல மெல்ல தீவிர இலக்கியம் பரிச்சயமான பிறகு சுந்தரராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பவா செல்லதுரை, அம்பை, வேல ராமமூர்த்தி, போப்பு, ஷாஜகான் என என் வானம் விரிவடைந்தது. அது என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி படைப்பாளியாகவும் மாற்றியது.

5) எழுத்தாளராக ஒரு முகமும் பதிப்பாளராக மறுமுகமும் கொண்டவர் நீங்கள். பதிப்பாக்கம் எனும் சூழலில் உங்களது வாசிப்பில் நிராகரிக்க வேண்டிய படைப்பினை பிரிதொரு வாசகக் குழுமம் அங்கீகரிக்கிறது என்பதால் அதனை பதிப்பிக்க வேண்டிய நிலைப்பாட்டிலிருந்து விடுபடுவீர்களா? அப்படியாயின் முழுமையான பதிப்புத்துறையின் தர்மம்/அதர்மம் பற்றி என்ன நிலைப்பாட்டிலிருக்கிறீர்கள்?

எழுத்தாளர் என்ற முகம் கனிவானது. பதிப்பாளர் என்றொரு முகம் கொஞ்சம் கண்டிப்பானது. நான் பதிப்பிக்கும் எழுத்துகளில் எந்த சமரசமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வம்சி புகஸ் என்ற எங்கள் பதிப்பகத்தை நானும் பவாவும் ஆரம்பித்து நடத்திவரும் இந்த பதினெட்டு ஆண்டுகளில் சமரசமில்லாத, வணிக எழுத்தல்லாத, எண்ணிக்கைக்காக என எந்த புத்தகங்களையும் பதிப்பித்ததில்லை.

நான் வேண்டாமென்று தவிர்த்த புத்தகங்கள் வேறு பதிப்பகத்தில் போய் பெரும் வெற்றி பெற்றாலும், விருதுகள் பெற்றாலும் அதற்காக நான் கொஞ்சமும் வருந்தியவளில்லை. ஆனால் நான் பதிப்பிக்க நினைக்கும் எந்த புத்தகத்தையும் நான் கைவிட்டதுமில்லை.

6) ‘கதை கேட்கும் சுவர்கள்’ வாசிப்புலகில் ஏற்படுத்திய சலனம் எத்தகையது? சலனத்தினை ஏற்படுத்தாத மொழிபெயர்ப்பு எழுத்துக்களின் மீது உங்களது பார்வை எப்படியாக விரிவடைந்திருக்கிறது?

கதை கேட்கும் சுவர்கள் பலரை மிகவும் பலமானவர்களாக மாற்றியிருக்கிறது. அதிலும் பெண்கள் அப்படியொரு உரமேற்றவர்களாக மாறினார்கள். என் தோழி மார்பக புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பமே துயரில் ஆழ்ந்தபோது, ”என்னாச்சு உமா சேச்சிக்கு வராத கஷ்டமா எனக்கு வந்திச்சு. ஏன் இப்படி இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்க” என்று குடும்பத்தினரையும் மருத்துவரையும் ஆச்சரியப்படுத்தினாள். இப்போது அவள் அதிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து புதிதாய் பிறந்த குட்டிப் பேரனோடு கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இது போல ஒரு நூறு விஷயங்களையாவது என்னால் இந்த புத்தகத்திற்காக சொல்லமுடியும்.

அதீத கவனம் பெறாத ஒன்றிரண்டு புத்தகங்களும் என்னிடமிருக்கிறது. ஆனால் அதையும் ஒன்று போலவே பார்க்கும் மனநிலையை எனக்கு இயற்கை கொடுத்திருக்கிறது.

 

7) சிதம்பர நினைவுகள் மொழிபெயர்த்த போது அதற்கான அங்கீகாரத்தினை ஏற்றுக் கொண்டீர்களா? மொழிபெயர்ப்பில் அங்கீகாரம் என்பது படைப்பு சார்ந்ததாக இருக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டினை புறந்தள்ளி மொழிபெயர்ப்பாளனாக அடையாளப்படுத்த முடியும் என்கின்ற கருத்தியலை ஏற்றுக் கொள்கிறீர்களா? முதல் மொழிபெயர்ப்புக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றைய மொழிபெயர்ப்புக்கான பாதையினை திறந்து விட்டிருக்கிறது என்பதில் ஏதேனும் தடுமாற்றம் உள்ளதா?

சிதம்பர நினைவுகள் புத்தகத்திற்கு கிடைத்த அங்கீகாரம், பாராட்டு, சந்தோஷம், மகிழ்ச்சி, ஆச்சரியம், அற்புதங்கள் வேறு எந்த புத்தகத்திற்கும் எனக்கு கிடைத்ததில்லை. அமைதியாய் ஆர்பாட்டமில்லாமல் அதை ஏற்றுக் கொண்டேயிருக்கிறேன். மிக நிச்சயமாக முதல் புத்தகத்திற்கான அங்கீகாரம் என்னை வெகு விரைவாக அடுத்தடுத்த புத்தகங்களை நோக்கி நகர்த்தியது. அதற்கு பிறகான என்னுடைய பதிமூன்று புத்தகங்கள் ( 2 தொகுப்பு நூல்கள், 2 நேரடியான தமிழ் கட்டுரை நூல்கள் உட்பட) வந்தபோதும் எல்லா வாசக மனதிடமிருந்தும் நான் எதிர்கொண்ட கேள்வி. ‘எப்போது சொந்தமாக எழுதப் போகிறீர்கள்?’ என்பதாகவே இருந்தது. எனக்கும் ஆசைதான். ஆனால் இத்தனை வருடங்களாக அவர்களுக்கு  ஒற்றை பதிலையே சொல்லிக் கொண்டிருந்தேன், “அது என்னை எழுதிக் கொள்ளும்வரை நான் காத்திருக்கிறேன்” என்பதாகவே இருந்தது.

கடந்த வருடத்தின் முடிவில் அப்படியொரு வடிவெடுக்க என்னாலும் முடிந்தது. “சஹிதா – நிபந்தனையற்ற அன்பின் குரல்”  என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். பெண் மன அடியாழத்தில் ஊடாடும் எண்ண அலைகளை வைத்து இழை இழையாய் பின்னி முடித்திருக்கிறேன். என் கனவும் ஆசையுமாய் எழுதி முடித்து என் மீதும் என் எழுத்தின் மீதும் பிரியம் கொண்டவர்களிடம் சேர்ப்பித்திருக்கிறேன். அப்படியாக அவர்களின் கேள்விகளுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து படைப்பில் பதில் சொல்லியிருக்கிறேன்.

 

8) பவா செல்லத்துரை எனும் பெருத்த கதை சொல்லியோடு பயணிப்பதில் இலக்கியம் சார்ந்த முரணினைவுகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? அப்படியான அழகிய தருணங்களை பகிர்ந்து கொள்ளலாமே?

பவாவோடு பயணிப்பதில் இலக்கியம் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து நிறைய முரண்களும் இணைவுகளும் இருக்கின்றன. அது அப்படியொரு அழகிய தருணமாக இல்லாததால் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

 

9) வம்சி  எதனை நோக்கி நகர்கிறது? எவ்வகையான இலக்கிய செயற்பாட்டின் மீது கரிசனை கொண்டிருக்கிறது? பொதுப் புத்தி வாசக நிலைப்பாட்டிலிருந்து வம்சி தனக்கான தனித்தழகியலை இயக்கிக் கொண்டிருக்கும் செயற்பாட்டு தளத்தினை எப்படி உருவாக்கினீர்கள்? இலக்கிய கூட்டு முயற்சியில் இதனை சாத்தியப்படுத்தியமைக்கான வழிப்பாதை எத்துனை சிரமமானது?

வம்சி பதிப்பகம் இன்னுமின்னும் தரமான புத்தகங்களை மட்டுமே கொண்டுவரவேண்டுமென்ற வேகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்புகள், உள்நாட்டு இலக்கியங்கள், மனித மேன்மைக்கான எழுத்துக்கள், காலம் கடந்து நிற்கும் படைப்புகளென அதன் விரிவு மிகவும் பரந்தது.

பொது வாசிப்பு, தீவிர வாசிப்பு என தரம் பிரித்தே ஆகவேண்டியிருக்கிறது. வம்சியில் பதிப்பிக்கும் புத்தகங்களை ஆரம்பத்தில் எங்கள் பரிசீலனைக் குழு (ஷைலஜா, பவாசெல்லதுரை, ஜெயஸ்ரீ, உத்திரகுமாரன். அமலதாஸ்) பரிசீலித்த பிறகே பதிப்பிக்கும். அமலதாஸின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் நால்வர், சில நேரங்களில் ஒன்றிரண்டு பேர், சில நேரங்களில் நான் மட்டுமென தேர்வுக் குழு அமையும். அப்படியான கூட்டு முயற்சியால்தான் இவ்வளவு புத்தகங்களை கொண்டுவர முடிந்தது.

பதிப்பகம் ஆரம்பித்து பதினெட்டு வருடங்கள் ஆகின்றன. இன்னும் கூட கற்றலிலேயேதான் இருக்கிறேன். அது அப்படித்தானே? வாழ்வு என்ன அத்தனை சுலபமாகவா எல்லாவற்றையும் கற்றுத் தந்து விடுகிறது.

***

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *