1

உன் கைகளில் ஏன் இவ்வளவு கரும்புள்ளிகள்? என்பதுதான் திருமணத்துக்கு பிறகு அருணா கேட்ட முதல் கேள்வி. கபுகிச்சோவில் மலிவான பணத்துக்கு ஒத்துக்கொண்ட எத்தியோப்பியகாரியும் இதே கேள்வியை கேட்டாள். நல்ல மதுபோதையிலூடான கலவியில், சட்டென்று வந்துவிழுந்த அந்த கேள்வி பாண்டியனுக்கு இன்னும் உக்கிரத்தை கொடுத்தது. ஜப்பானிய நிக்கா விஸ்கி வீர்யமிழந்த விடியற்காலைகளில், தூக்கமிழந்து கைகளை தடவி பார்ப்பதுண்டு.  அப்போதெல்லாம், தந்தூரி அடுப்பில் தீய்வதற்க்கு முன், நானை எடுக்கும் அவசரத்தில் கைகளை உள்ளே விடுகையில், சதை துண்டு நெருப்பில் ஒட்டி பொசுங்கும் மணம் நினைவிலிருந்து எழும்.

ரஃப்தா, ரஃப்தா, ஓ…மெரி என்று மெஹதி ஹாசன், ஹாகீரின் போனிலிருந்து பாடத்தொடங்கியிருந்தார். அந்த சிறிய ஒற்றை அறை கொண்ட வீட்டில் பாண்டியனுடன் சேர்ந்து நான்கு பேர் தங்கியிருந்தனர். பாண்டியன் முன்பு வேலைபார்த்த இந்திய உணவகத்தில் தான் அனைவரும் வேலைப்பார்த்தனர்.  முகம்மது ஷாகீர், வடக்கு பாகிஸ்தானிலுள்ள ஹன்சா பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு மலையோர கிராமத்திலிருந்து டோக்கியோவுக்கு வந்தவன்.   ஊரில் அவனுக்கு சிவப்பு துப்பட்டாவை தலையைச் சுற்றியணிந்து பளீரென்று சிரிக்கும் அழகான இளம் மனைவி இருக்கிறாள்.  பாண்டியனைப் போலவே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சம்பளமில்லாத ஒருமாத விடுப்பில் முகம்மது ஊருக்கு போவான். இன்னும் இருபதாண்டுகளில் தன்னைப்போலவே மாறப்போகும் அவனை இடதுபக்கமாக சாய்ந்து பார்த்தான் பாண்டியன்.

மெலிதாய் சிரித்தான் ஷாகீர். மூன்று மாதமாக வாடகை பங்கை தர முடியாத பாண்டியனுடன் இன்னமும் சினேகத்துடன் இருப்பவன் ஷாகீர்  மட்டுமே. பாண்டியிடமிருந்து அறை சாவி பிடுங்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும், இனி இந்த அறைக்கு திரும்பக்கூடாது என்று நினைத்துக்கொண்டு வெளியேறி, எங்கெங்கோ சுற்றி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், மறுபடியும், நள்ளிரவில் அறைக்கு திரும்புவது வழக்கமாகியிருந்தது. முந்திய தினமும் சாப்பிடவில்லையென்பதால் எழுந்தவுடன் வயிற்று வலி ஆரம்பித்துவிட்டதா என்றறிய அச்சத்துடன் இடதுபுறமாக நிமிர்ந்து, வயிற்றைக் குறுக்கி பார்த்தான். இன்னும் வலி ஆரம்பிக்கவில்லை என்றுணர்ந்து, சற்று நிம்மதியுடன் கழிவறைக்கு சென்றான் பாண்டியன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு வேலைப்பார்த்திருந்த தாஜ் உணவகத்தின் முதலாளி தீபக் மேத்தா வரச்சொன்னதாக ஷாகீர் சொல்லியிருந்தான்.  வெள்ளி இரவுகளில் உணவகத்தில் பெல்லி டான்ஸ் ஏற்பாடு செய்வார் தீபக். எகிப்து, துருக்கி நாட்டைச் சேர்ந்த உயரமான பெண்கள் சுற்றிச்சுற்றி வந்து ஆடுவதை காண வாரம் முழுவதும் அலுவலகத்தில் களைத்துப்போன ஜப்பானியர்கள் கூட்டம்கூட்டமாக வருவதுண்டு. எட்டுமணிக்கு மேல் அரபிய பாடல்களும் இந்தி பாடல்களும் அதிர பெண்கள் இடுப்பை சுழற்றிக்கொண்டிருக்கையில்,  கண்ணாடி தடுப்புக்குள்ளே தனலெரியும் அடுப்பின் முன் நிற்கும் சமையல்கார்களுக்கு எந்த சத்தமும் கேட்பதில்லை. முழு மெளனத்தில் பெண்கள் ஆடுவதும், முதிய ஜப்பானியர்கள் போதையில் சிரிப்பதும் கனவிலெழும் காட்சியென நிகழும். முழுமையான ஒரு சொற்றொடரை கடைசியாக எப்போது, யாரிடம் பேசினோம் என்று யோசித்தான் பாண்டியன். காலை ஏழு மணிக்கு காய்கறிகளை வெட்டுவதில்  தொடங்கும் வேலை, இரவு பதினொரு மணிக்கு, மீத உணவை கொட்டும் சாக்கடை வழியாக கரப்பான் பூச்சிகள் மேலேறிவிடாமல் இருக்க, வெந்நீர் கொதிக்கவைத்து அந்த குழாயில் கொட்டும்வரை நீளும். மொத்தமாக எத்தனை வார்த்தைகளை அந்த நாளில் பேசினோம் என்று எண்ணியபடி வேலையிலிருந்து திரும்பி கடைசி மெட்ரோ ரயிலில் வீடு திரும்புவான் பாண்டியன்.

சிம்பாசியிலிருந்த தாஜ் உணவகத்துக்கு சென்றபோது, உணவு நேரம் இன்னும் ஆரம்பமாகவில்லையென்பதால் கூட்டமில்லை. பாண்டியனை பார்த்தவுடன் அதுவரை, எதிரே அமர்ந்திருந்த நடனப்பெண்ணிடம்  சிரித்துப்பேசிக்கொண்டிருந்த தீபக் , சட்டென்று முகத்தை கடுமையாக்கிக்கொண்டதுபோல் பட்டது.

பாண்டியன் கூறிய வணக்கத்தை பொருட்படுத்தாதவராக, ”இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து சொல்லியனுப்புகிறேன்” என்றார் தீபக் மேத்தா. எதிரிலிருந்த துருக்கிய பெண்ணின் நீள்வாகு முகமும், காதோர கற்றைமுடியும் அருணாவை ஞாபகபடுத்தியது. அவள் நிமிர்ந்து பாண்டியனை பார்த்த பார்வையில் இருந்த வெறுமையில் சட்டென்று மனம் சுருண்டது. இங்கிருக்கும் பெண்களின் பார்வையில் நாம் படுவதேயில்லை என்பது ஜப்பானுக்கு வந்த சில நாட்களில் பாண்டியனுக்கு புரிந்துப்போயிற்று. அவர்கள் ஒரு சுவற்றை கடப்பது போல், கடன் கட்டமுடியாது கைவிடப்பட்டு,  முழுவதும் வேர்களால் சூழப்பட்டு பாழடைந்த மரவீடுகளை கடந்து போவது போல், அவனை கடந்துச் சென்றார்கள்.  அப்படி அவர்களை கடக்க நேரும் இரவுகளிலெல்லாம் சாக்கே குடித்தபடி, பால்கனிக்கு வெளியே தெரியும் தூரவானில் மேகங்களுக்கிடையே அருணா உடனான கூடல்களை நினைவிலெழுப்பி மெளனமாக கண்ணீர் சொரிந்தபடி அமர்ந்திருப்பான்.

இன்னமும் அங்கேயே நின்ற பாண்டியனை பார்த்து, ”கிச்சனுக்குள்ளேயே முழுநேரமும் குடிப்பாயாமே?” என்று கேட்டார் தீபக். அவர் அப்படி கேட்டவுடன், கண்ணாடி தடுப்புக்கு அந்தப்பக்கம் மாவு பிசைந்துக்கொண்டிருந்தொருவன் தலையைக் குனிந்துக்கொண்டான்.  இனி அவர் கூப்பிடவே போவதில்லை. திரும்பி நடந்தான் பாண்டியன்.

டோக்கியோ இம்பிரீயல் அரண்மனைக்கு முன்னிருக்கும் அகழியில் தனித்தலையும் அன்னப்பறவையை பார்க்கவேண்டும் என்று தோன்றியது பாண்டியனுக்கு.

2

வசந்த காலத்தின் குளிர் காற்றில் இன்னும் மீதமிருந்தது. இதமான வெயில் நிலமெங்கும் பரவியிருந்தது. சில வாரங்கள் முன்பு சகுரா மலர்கள் சட்டென்று பூத்துக்குலுங்கி, சருகுகளாய் கொட்டிவிட்ட சோகத்தை ஆற்றுவதுபோல், வெல்வெட் நிற சுமி இரே மலர்கள் அரகவா ஆற்றின் இருபுறமும் மலர்ந்திருந்தது. அதை பார்த்தபடியே காலை நடை முடித்து வீடு திரும்பும் வழியில் எப்போதும் காபி அருந்தும், கம்பினி கடை உள்ளே வந்தபோதுதான் வித்தியாசமாக உணர்ந்தார் ஜீவானந்தம்.  அந்த காலை வேளையிலும், ஏழெட்டு பேர் கடை உள்ளே பொருட்களை தேடிக்கொண்டிருந்தனர்.  வாடிக்கையாளர்களை வரவேற்பதற்காக தலைதூக்கி ”இரசாய்மாஷே” என்ற சிவோரி, ஜீவானந்தத்தின் முகத்திலிருந்த ஆச்சர்யத்தை உணர்ந்து சிரித்தாள்.

டிராக் சூட் அணிந்த ஒரு இளம் கணவன் தனது பிளாஸ்டிக் கூடையில், காண்டம் பாக்கெட்டுகளை அள்ளி வைத்திருந்தான். அவனுக்கு முன்பாக ஓடிய சிறுமியின் கூடையில், சோப்பு நுரையில் பல குமிழிகளை உருவாக்கும் துப்பாக்கி இருந்தது. இரண்டுக்குமுள்ள ஒற்றுமை, புன்னகையை வரவழைத்தது. ஒரு ஜப்பானிய முதியவர் உடனடியாக தயார் செய்யக்கூடிய நூடூல்ஸ் டப்பாக்களை அள்ளி வைத்திருந்தார். பொருட்களின் விலை எழுதிய அட்டையை கவனித்தபோதுதான் என்ன நடக்கிறது என்பது புரிந்தது.

வரிசையில் நின்று கவுண்டருக்கு சென்று, காபிக்கான நூறு யென்னை எடுத்து நீட்டினார் ஜீவானந்தம். சிவோரி பேப்பர் கப்பை எடுத்து தந்தாள். ”சிவோரி சான், என்ன நடக்கிறது? ஏன் இத்தனை மலிவாக விலை குறைக்கப்பட்டுள்ளது?”. அவள் சிரித்தபடி வாயில் விரலை வைத்து, ”பேச வேண்டாம்” என்பது போல் சைகை காட்டினாள். பிறகு வெளியே எழுதப்பட்டிருக்கும் போர்டை சுட்டி காட்டினாள். பின்பு நின்றிருக்கும் முதியவரை உத்தேசித்து, ஜீவானந்தம் நகர்ந்து வெளியே வந்தார். காபிக்கான எந்திரத்தில், எப்போதும் குடிக்கும் சூடான அமெரிக்கன் காபியை தேர்ந்தெடுத்தார். காபித்தூள் அரைக்கும் சத்தமும் அந்த மணமும் எப்போதும் அளிக்கும் பரவசத்தை தந்தது.

”வியாபார காரணங்களுக்காக இந்த கிளை மூடப்படுகிறது. எனவே இன்றிலிருந்து மூன்று தினங்களுக்கு அனைத்துப்பொருட்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது” என்றெழுதிய போர்டை நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை படித்தார் ஜீவானந்தம். சட்டென்று ஒரு சோகம் மனதை பிசைந்தது.

ஒவ்வொரு ஐந்து நிமிட நடையிலும் ஒரு கம்பினியை அடைந்துவிடலாம் என்பது போல், ஜப்பான் முழுவதும் இவ்வகை கம்பினி கடைகள் நிறைந்திருந்தது. இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த கடைகளில், நிறைய மாணவர்கள்  பகுதி நேர வேலையாக பணிபுரிந்தனர். சில நாட்களில் அவர்கள் படிப்பு முடிந்து வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்பதால், ஆட்கள் மாறிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால், சிவோரி இந்த பதினைந்து வருடங்களில் மாறவேயில்லை. திடீரென்று விழித்துக்கொள்ளும் பின்னிரவுகளில், சற்று நேரம் நடந்து வந்து, ஒரு அசாஹி டின் பியர்  வாங்கி, அங்கேயே வெளியில் நின்று ஜீவானந்தம் குடிப்பதுண்டு. வாடிக்கையாளர் யாருமில்லையெனில் சிவோரி வெளியில் வந்து பேசிக்கொண்டிருப்பாள். இந்த பதினைந்து வருடங்களில் அவள் அமர்ந்து பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், கம்பினிகளின் கவுண்டரில் அப்படி ஒரு இருக்கையே இல்லை. யாருமில்லாத இரவுகளில் கூட, புத்தகங்களை அடுக்குவது, பொருட்கள் கெட்டுப்போக கூடிய தேதி நேரத்தை கணக்கிட்டு அவற்றை ஒதுக்கி வைப்பது, பணத்தை எண்ணி வைப்பது என்று சிவோரி செய்ய எப்போதும் வேலைகள் இருந்தன. தனிமையான இரவுகளில் மெலிதாக ஒலிக்கும் ஜப்பானிய பாப் இசையின் ஊடாக அப்படி ஒருவள் இயங்கிக்கொண்டிருப்பது அளிக்கும் ஆறுதல், இறைவனின் கருணையல்லாமல் வேறு என்ன?

”எனக்கு வேலை செய்யபிடிக்கவில்லை” என்று தனக்குதானே தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் ஒரு நடுத்தர வயது ஜப்பானிய ஆசாமியை இங்குதான் பார்த்தார் ஜீவா. கசங்கியிருந்த மலிவான காக்கி நிற சூட் அணிந்திருந்தார் அந்த ஜப்பானியர்.  தோளில்  தொங்கிய அலுவலக பையுடன் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அவர் இந்த கம்பினிக்குள் நுழைந்திருந்தார். பியர் டின்களை வாங்கி அடுக்கிக்கொண்டிருக்கும்போது, ஜீவாவிடம் தான் அவர் பேசுவதாக எண்ணி, பதிலளிக்க முற்படுகையில் அவர் மீண்டும் சொன்னார். ”வேலை செய்ய பிடிக்கவேயில்லையே”, இதை தொடர்ந்து கூறியபடி மலிவான ஷாக்கே பாட்டிலை வாங்கிச்சென்று கார் நிறுத்துமிடத்திலிருந்த அந்த அழகான மேப்பிள் மரத்தினடியில் நின்று குடித்தார். அப்போதும் அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டேயிருந்தது. பிறகும், அவரை அங்கு அடிக்கடி பார்க்க முடிந்தது. இனி அவர் எங்கு சென்று தனக்கான ஷாக்கே பாட்டிலை வாங்க கூடும்? அந்த மேப்பிள் மரம் அவருக்களித்த ஆறுதலை வேறு எங்கே பெற முடியும்?

வாடிக்கையாளர்கள் கொஞ்சம் ஓய்ந்திருந்த பொழுதில் கண்ணாடி வழியாக, சிவோரி தனது அழகிய முட்டை வடிவ முகத்தில் எப்போதுமிருக்கும் புன்னகையுடன் தெரிந்தாள். அவள் எப்போதும் அணியும் நீல நிற ஜீன்சும், கம்பினியின் சீருடையான கோடுகள் போட்ட சட்டையும் அணிந்திருந்தாள். சிவோரி என்றால் ஜப்பானிய மொழியில் புத்தகத்தில் வைக்கப்படும் புத்தககுறி என்று அர்த்தம். இந்த கடை மூடப்பட்டபின் வேறு எந்த புத்தகத்திற்க்கு செல்வாள் சிவோரி ?

இந்த பகுதியில் வீடு வாங்கி குடியேறியபோது, சின்மயிக்கு மூன்று வயது. பனி கொட்டும் நடு இரவுகளில் திடீரென்று எழுந்து அழுவாள். டர்ட்டில் டிஷேர்ட்டும், கனத்த டிராக்‌ஷூட்டும் அணிந்து மேலே ஜெர்கின்போட்டு, மப்ளர் சுத்தி, தலைக்குமேல் குல்லா அணிந்து இதே கம்பினிக்கு ஓடி வருவார் ஜீவானந்தம். பால் டப்பாக்களை அடுக்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது சின்மயி  தூங்கிப்போயிருப்பாள்.

முதன்முதலில், சின்மயியை அழைத்துக்கொண்டு மனைவியுடன், கசாய் பூங்காவில்  மிகமெதுவாக சுற்றும் ராட்சஸ ஃபெரி வீல்  ராட்டினத்தில் ஏறியது இன்று நிகழ்ந்ததுபோல் இருக்கிறது. ஒரு முழுமையான சுற்று முடிய முப்பது நிமிடம் எடுத்தது. உச்சியில் அவர்களுடைய பெட்டி இருந்தபோது, தூரத்தில் ஒடைபா ஆற்றில் மிதக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுற்றுலா படகுகளை சின்மயிக்கு காட்டினார், ஜீவானந்தம். ஒரு முழுச்சுற்று. நிதானமாக சுற்றி தரையில் வரும்போது சின்மயி அவர்களை பிரிந்து அமெரிக்க பல்கலைக்கழகம் சென்றிருந்தாள்.

3

கம்பினியிலிருந்து வீடுநோக்கி திரும்பி நடக்கையில் ஜீவாவின் ஐபோன் அதிர்ந்தது. டோக்கியோவின் தொலைபேசி எண்ணை அது காட்டியது.

டோக்கியோ மருத்துவ காப்பீடு அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். உங்களுடைய எண்ணை, டோக்கியோ சமூக நல அலுவலகம் மூலம் பெற்றோம்.  நாங்கள் ஒரு சிக்கலில் இருக்கிறோம். எங்களுக்கு உதவ முடியுமா?

நிச்சயம் என்னாலானதை செய்கிறேன். சொல்லுங்கள்.

அந்த பெண் சற்று தயங்கி பிறகு கூறினாள். “இரு மாதங்களுக்கு முன் டோக்கியோ அரண்மனையருகே ஒரு இந்தியர் சுருண்டு விழுந்து கிடந்தார். அவரை கண்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அவருடைய உடல் நிலை சரியாகிவிட்டாலும், மன நிலை சற்று கவலைக்குரியதாக இருக்கிறது. “

யார் அவர்?  என்ன அவருக்கு?

அவருடைய பெயர் பாண்டியன். அவர் இங்கு பல ஆண்டுகளாக இந்திய உணவகங்களில் வேலைப்பார்த்திருக்கிறார். நீண்ட நாள் குடியில் உடல்நலன் கெட்டிருந்தது. அது ஓரளவுக்கு சரியாகிவிட்டாலும், அவர் பேசும் எதுவும் கோர்வையாக இல்லை. தன்னுடைய தாய்மொழியென தமிழை குறிப்பிட்டுள்ளார். எனவே சமூக நலத்துறை மூலம் தமிழ் மற்றும் ஜப்பானிய மொழி தெரிந்தவர் என்கிற முறையில் உங்களை தொடர்பு கொண்டுள்ளோம். இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினருடன் பேச நீங்கள் உதவ செய்யமுடியுமா ?

இந்த ஒருவருடத்தில் இது நான்காவது கேஸ். என்னதான் பிரச்சினை இவர்களுக்கு, என்று யோசித்தார் ஜீவானந்தம்.

சிவகங்கைக்கு அருகே புலரி என்கிற கிராமத்தில் இருந்தது பாண்டியனின் குடும்பம். அவரது மனைவி அருணாவிடம் தகவலைச் சொன்னபோது அவள் அழுதாள். கல்லூரிக்கு செல்லும் பாண்டியனின் மகள் போனை வாங்கி ”அப்பாவுக்கு எப்படியிருக்கு அங்கிள்?”, என்று கேட்டாள்.

4

இந்திய தூதரகத்தின் உதவியோடு பாண்டியனை பத்திரமாக தமிழகத்திற்க்கு திருப்பி அனுப்பிய பிறகு, சில நாட்கள் கழிந்து ஒரு நள்ளிரவு அவரது மகளுடைய வாட்சப் எண்ணிலிருந்து அழைத்தார் பாண்டியன்.

”சார், எனக்கொரு உதவி செய்யணும். வெலை கூடின கல்லு பதிச்ச பதிமூணு மோதிரங்க, அகிஹாபாராலே உள்ள ஒரு கடைலே வுட்டுட்டு வந்துட்டேன். அதை மட்டும் வாங்கி கொடுங்க சார்”,  என்றார்.

” போனை உங்க பொண்ணுகிட்டே கொடுங்க பாண்டியன்”, என்றார் ஜீவானந்தம்.

”அங்கிள், சொல்லுங்க அங்கிள்”, என்றாள் பாண்டியனின் மகள்.

இனிமே போனை அப்பாகிட்டே கொடுக்காதேம்மா. இங்கே மணி ராத்திரி இரண்டு ஆகுது. அவருக்கு மனசு சரியில்லை.

”சாரி அங்கிள். அவரு, இங்க வந்தப்புறம் எல்லாருகிட்டேயும் நல்லாதான் பேசுறாரு. மோதிரங்களை வுட்டுட்டு வந்துட்டேன்னு அடிக்கடி புலம்புறாரு. அதான் உங்க கிட்டே பேச கொடுத்தேன். சாரி ” என்றாள்.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நள்ளிரவு அழைத்தார் பாண்டியன்.

”சார், அகிஹாபாரா இரண்டாவது சோமேலேதான் என்னோட அந்த நகையெல்லாம் இருக்கு. ஹாஸ்பிட்டலேருந்து நேரா ஏர்போர்ட்டுக்கு அனுப்பிட்டானுக. வாங்க முடியாம போச்சு. கொஞ்சம் வாங்கி கொடுங்க சார் ”, என்றார் பாண்டியன்.

ஜீவானந்தம் ஒன்றும் பேசாமல், போனை கட் செய்து, அந்த எண்ணை தடை செய்தார்.

அந்த வார ஞாயிற்றுகிழமை, அந்த முகவரிக்கு போய் பார்த்தால் தான் என்ன? என்று யோசித்தார் ஜீவானந்தம்.

அகிஹாபாராவின் ரயில் நிலையம், சுற்றுலா பயணிகளால் நிரம்பியிருந்தது. ரயில்வே நிலையத்தின் வெளியே, புல்லாங்குழலின் இசையோடு, டிரம்ஸ் அதிர்ந்துக்கொண்டிருந்தது. தென்னமெரிக்கா நாடான பெரு நாட்டின் பாரம்பரிய உடையணிந்து, அந்த இசைக்குழுவினர் பாடிக்கொண்டிருந்தார்கள். கீழே ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, மேலே பல வண்ணங்களில் தொங்கிய நீண்ட அங்கியைப் போர்த்தியிருந்தனர். அந்த உடை முழங்கால் வரை நீண்டிருந்தது. இருவர் புல்லாங்குழல் வாசிக்க, ஒருவர் கிதார் இசைத்துக்கொண்டிருந்தார். நடுவில் அமர்ந்திருந்தவர்  டிரம்ஸ் இசைத்துக்கொண்டிருந்தார். அவர்களில் நடு நாயகமாக நின்றிருந்தவர், உச்ச ஸ்தாயியில் சாக்கலனின் புகழ்ப்பெற்ற அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தார்.

”அதிகாலையில் துயிலெழுகிறேன்.

சகோதர்களோடு வேலைக்கு செல்வதற்காக

தாயுமில்லை, தந்தையுமில்லை

நாய் கூட எனைக் கண்டு குரைப்பதில்லை.

மீதமிருப்பதெல்லாம் நம்பிக்கை மட்டுமே.

இங்கு புதிய வாழ்வினை தேடுகிறேன்

பணமே பிரதானமான இந்த நகரம் கொடியது.

கடவுளின் அருளால் நான் வெல்வேன்.

அன்பே, நீ அருகிலிருந்தால் மகிழ்வேன்!. ”

கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்ட ஆன்டியென் குடியேறிகள், பெருவின் லிமா மலையில், குடியேறி தங்களுடைய வாழ்வை அமைத்துக்கொண்டனர். அவர்களில் ஒருவரான சாக்கலன், தன்னுடைய இனத்திற்காக, இந்த பாடலை பாடினார். இந்த பாடல் புலம்பெயர்ந்தவர்களின் தேசியகீதமாக உலகமெங்கும் பாடப்பட்டது.

உலகின் இன்னொரு மூலையான டோக்கியோவில் இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அந்த இசையினை ரசித்துக்கேட்டபடி ஒரு சிறிய கூட்டம் சூழ்ந்திருந்தது.  வேலை முடிந்து திரும்புகையில், பியர் அருந்தி அன்றைய அலுப்பினை போக்கியிருந்த ஒரு நடுத்தர வயது ஜப்பானியர் கால்களுக்குகீழே அலுவலக பையை வைத்துவிட்டு பாடலுக்கேற்ப கைத்தட்டிக்கொண்டிருந்தார். முகத்தில்  அலாதியான புன்னகை.  இளம் மஞ்சள் ஸ்கார்ட்டும், வெள்ளை நிற மேல்சட்டையுமணிந்த ஐரோப்பிய பெண் அழகாக தலையாட்டியபடி அங்கிருந்தாள். அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் நடனமாடிக்கொண்டிருந்த ஒரு ஜப்பானிய வீடிலி ஈர்த்துக்கொண்டிருந்தார். ஒரு பழைய டிசர்ட்டும், அழுக்கான ஜீன்ஸும் அணிந்திருந்த அந்த கிழவர், கழுத்தைச்சுற்றி ஒரு வெள்ளை கர்சீப்பை கட்டியிருந்தார். அதிரும் டிரம்ஸுக்கு ஏற்ப நல்ல போதையில் ஆடிக்கொண்டிருந்தார் அவர். அவ்வபோது தனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து குவார்ட்டர் நிக்கா விஸ்கியை திறந்து வாயில் விட்டுக்கொண்டார்.

”நாய்கூட குரைக்க மறுக்கும் தனிமை” என்கிற வரி மீண்டும் மீண்டும் ஜீவானந்தத்தின் மனதில் ஓடியது. மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதெல்லாம் தனிமை மட்டும்தானோ! என்று தோன்றியது.

அன்பே.. நீ அருகிலிருந்தால் மகிழ்வேன்!

அன்பே.. நீ அருகிலிருந்தால் மகிழ்வேன்!

அந்த பாடகன் உச்ச ஸ்தாயியில் பாடினான்.

பாண்டியன் தந்த முகவரியை போனில் உள்ளிட்டு தேடியபோது, அது ஒரு காபி கடையைக் காட்டியது. வெளிர்நீல நிறத்தில், வெள்ளைப் பூக்கள் போட்ட  ஸ்கார்ட் அணிந்த இருஇளம் ஜப்பானிய பெண்கள் கடைப்பெயர் எழுதிய அட்டையை தாங்கி வெளியில் நின்று சிரித்தனர். முகத்தின் இருபக்கமும் அழகாக கூந்தல் சுருண்டிருக்க, நெற்றி முன் மட்டும் குட்டையாக வெட்டியிருந்தார்கள். முழங்கால் வரை வெள்ளை நிற நீள சாக்ஸ் அணிந்து, முயல்குட்டிகளைப் போல் அவர்கள் தோன்றினார்கள்.   அவர்கள் நீட்டிய கார்டில் ஒரு மணி நேரத்திற்க்கு மூவாயிரம் ஜப்பானிய யென்கள் என்று எழுதியிருந்தது. அங்கிருக்கும் பெண்களில் நமக்கு பிடித்திருக்கும் பெண்ணுடன் ஒன்றாக அமர்ந்து குடிபானங்கள் அருந்தலாம். ஆனால் எந்தப்பெண்ணையும் தொடக்கூடாது என்றாள், அந்த பெண். ஜீவானந்தம் எதுவும் பேசாமல் கடைக்குள் செல்ல அவளும் கூட வந்தாள். உள்ளே இருவர் அமரும் மேஜை நாற்காலிகள் பல இருந்தன. இளம்பெண்ணுடன் அமர்ந்து சிரித்துப்பேசியபடி காபி அருந்திக்கொண்டிருந்தனர். சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலனோர் முதியவர்கள். தங்களுடைய கொடிய தனிமையை, பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போன்ற அந்த பெண்களின் சிரிப்பில் கரைத்தபடி பரவசத்துடன் அமர்ந்திருந்தனர்.

தான் குடிக்க வரவில்லை என்று சொல்லி பாண்டியனின் புகைப்படத்தை போனில் காட்டி மோதிரங்கள் பற்றிக் கேட்டார் ஜீவானந்தம். அந்த பெண் உடனடியாக அடையாளம் கண்டுக்கொண்டவளாக உள்ளே சென்று ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து நீட்டினாள். வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு அழகான இளம்பெண்கள், பாண்டியனுடன் அமர்ந்து காபி அருந்தியபடி சிரித்துக்கொண்டிருந்தார்கள். மொத்தம் பதிமூன்று புகைப்படங்கள் இருந்தன.

***

-ரா.செந்தில்குமார்

Please follow and like us:

1 thought on “பதிமூன்று மோதிரங்கள் – ரா.செந்தில்குமார்

  1. சிறப்பான கதை. முதல் மூன்று வரிகளே கதைநாயகனின் இயல்பு, பணி, கதைக்களமெல்லாம் சொல்லி விடுகிறது. முகப்பு சித்திரமும் கூடுதலாக உதவுகிறது. முதல் வரியிலேயே செந்தில் வாசிப்பவர்களையும் ஜப்பானுக்கு அழைத்து வந்துவிடுகிறார். சரளமான மொழி நடை,செறிந்த மொழிவளம் ஜப்பானை சுற்றி பார்த்த உணர்வு வாசித்துமுடிக்கையில்.
    கதையில் ஜப்பானிய மதுவகைகள், வாழ்வுமுறை, உணவுகள் மட்டுமல்லாது அதிகஆண்டுகள் உயிர்வாழும் ஜப்பானியர்களின் தலையாய பிரச்சனையான துணையின்மை,தனிமை ஆகியவையும் சொல்லப்பட்டிருக்கிறது.

    முயல்குட்டிகளை போன்ற இளம் பெண்கள், சிவப்பு துப்பட்டாவை தலையில் சுற்றிக்கொண்டு பளீரென சிரிக்கும் மனைவி என்னும் வரிகளில் எல்லாம் முன்னரே அவர் எழுத்துக்களை வாசித்தவள் எனும் வகையில், செந்திலை அடையாளம் காணமுடிகின்றது.

    வேலை இல்லை, உடன் மனைவி இல்லை, தங்க இடமில்லை, உணவுமில்லை பசியும் தனிமையும் மட்டும் இருக்கும் பாண்டியனை பற்றிய முதல் அத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கும் //.டோக்கியோ இம்பிரீயல் அரண்மனைக்கு முன்னிருக்கும் அகழியில் தனித்தலையும் அன்னப்பறவையை பார்க்கவேண்டும் என்று தோன்றியது // என்னும் வரிகள் பாணிட்யனின் அகத்துயரை வாசிப்பவர்களுக்கும் கடத்தி விடுகிறது

    தனிமையான இரவுகளில் மெலிதாக ஒலிக்கும் ஜப்பானிய பாப் இசையின் ஊடாக அப்படி ஒருவள் இயங்கிக்கொண்டிருப்பது அளிக்கும் ஆறுதல், இறைவனின் கருணையல்லாமல் வேறு என்ன? என்பதுவும்
    // இந்த கடை மூடப்பட்டபின் வேறு எந்த புத்தகத்திற்க்கு செல்வாள் சிவோரி ?
    சுவற்றை கடப்பது போல், கடன் கட்டமுடியாது கைவிடப்பட்டு, முழுவதும் வேர்களால் சூழப்பட்டு பாழடைந்த மரவீடுகளை கடந்து போவது போல், அவனை கடந்துச் சென்றார்கள்.
    இவ்வரிகள் எல்லாம் கதைசொல்லி உத்தேசித்திருக்கும், நமக்கு காட்ட நினைக்கும் துயரங்களை பலமடங்கு பெருக்கிக்காட்டுகிறது.

    அமர்வதற்கு இருக்கையே இல்லாத கம்பினிகள் அங்கே வேலை செய்பவர்களின் சிக்கல்கலும் துயரங்களும், கடைகள் மற்றும் கம்பினிகள் வைத்திருப்போரின் கஷ்டங்கள், புலம் பெயர்ந்தோரின், வயோதிகர்களின் தனிமையில் இருப்போரின் என்று செந்தில் காட்டும் துயர்கள் மிக புதிது மிக மிக வேறு.

    ஜீவானந்தத்தின் வாழ்வையும் ரத்தின சுருக்கமாக கசாய் பூங்காவில் மிகமெதுவாக சுற்றும் ராட்சஸ ஃபெரி வீல் ராட்டினத்தில் சுற்றுவதில் சொல்லியிருப்பதும் சிறப்பு.
    ஜீவானந்தத்தின் பார்வையில், பாண்டியனின் தனிமையில் என்று இரண்டு தளங்களில் இக்கதையை வாசித்து இறுதியில் அத்தனை வேரோடி இருக்கும் தனிமைத்துயருக்கான தற்கலிகத்துணைளெல்லாமே அருமணிகள் தான் என்பதில் முடிவதும். நன்று.

    ரயில் நிலையத்தின் சாக்காலனின் அந்த அன்பே.. நீ அருகிலிருந்தால் மகிழ்வேன்!பாடலும் பாண்டியனின் இன்னும் பிற தனிமைதுயரில் இருப்போரின் குரலாகவே ஒலிக்கிறது.
    சாக்கேவும், மேப்பிள் மரங்களும், சகுராவும், வெல்வெட் மலர்களுமாக ஜப்பானையும்செந்தில் காட்சிக்கு காட்சி காட்டுகிறார் அது கதைக்கு இன்னும் வாசிப்பவர்களை அணுக்கமாக்கிவிடுகிறது
    அருமையான தலைப்பும் கூட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *