டையாற்றின் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அஞ்சு  ஆலமரம் என்று அழைக்கப்படும் பகுதியை விட்டு சற்றுத் தள்ளி இருப்பது. இது ஆறாவது ஆலமரமாக இருக்கலாம். ஆனால் அஞ்சு பத்து என்று சொல்வதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. ஆகவே அது தனித்து விட்டது. முன்னொரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் அப்படி ஒரு தனித்த ஆலமரத்தின் கீழே அந்தவழியாக ஒருநாள் ஒரு  பண்டிதர் நடந்து போய்க்கொண்டிருந்தாராம். அப்படிப் போகும்போது மரத்தின் மேலிருந்த பிரம்ம ராட்சசன் தொப் என  அவர் அருகில் குதித்து பிடித்துக் கொண்டானாம்.  ‘ஏய் பண்டிதனே!! நீ என் கேள்விக்கு பதில் சொல்’ என்று ஒரு பரீட்சை  வைத்தானாம். “நீதிக்கதைகள் சொல்லப் படுவது அதைக் கேட்பவரின் நன்மைக்கா அல்லது சொல்பவரின் நன்மைக்கா? சொல்” என்று  கேட்டானாம். அந்த பிரம்ம ராட்சசன் அப்படித்தான் அந்த வழியாகப் போகும் அனைவரையும் பிடித்துக்கொண்டு ஏதோ கேட்பானாம். அவன் கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் கேட்கும் வரம் தருவானாம். ஆனால் பதில் இல்லை என்றாலோ தப்பா சொன்னாலோ அவ்வளவுதான். அவனை அப்படியே கொன்று தின்னுடுவானாம். குமார் இந்தக் கதையை எங்கேயோ கேட்டிருக்கிறான். அன்று பைக்கில் வரும்போது அந்தக்கதை ஏனோ நினைவிற்கு வந்தது.   மரத்தைத் தாண்டி   ஒடித்து ஒட்டி திருப்பும்போது திடீரென முன்னால் தோன்றிய உருவத்தை பார்த்ததும் கூட அந்த பிரம்ம ராட்சசன் என்றுதான் நினைத்தான். ஆனால் அது சீருடை அணிந்திருக்குமா பைக்கின் சாவியை நம்மைக் கேட்காமலேயே எடுத்துக் கொண்டு போகுமா என்றெல்லாம் கதையில் சொல்லவில்லையே என்றுதான் முதலில் ஒருகணம் யோசித்தான். பிறகு  “சார்! சார்!!” என அழைத்தபடி அவர் பின்னால் ஓடினான்.

‘ஹெல்மேட் எங்க..’ என்றது அது

“இங்கதான் சார் இருக்கு..” டேங்க்கை காண்பித்தான்

” உங்க தலைலைல இருக்கனும்..”

“இதோ இந்த ஆபீஸ்தான் சார்.. இங்க வறப்பதான் சார் ஒரு கால் வந்தது.. ஹெல்மெட்டை கழட்டி பேசிட்டு பக்கத்து ஆபீஸ்தானேன்னு  அப்படியே வந்துட்டேன்..”

” இந்த கம்ப்யூட்டர் ஆபீஸா..”

“ஆமாம் சார்..”

“எதாயிருந்தா என்ன? ஃப்ரீ லெஃப்ட் மாதிரி அப்படியே திரும்பறீங்க. ஒண்ணையும் பார்க்குறதில்லை..  தப்பு தப்புதானே! நீங்க போய் ஐயாவைப் பாருங்க.. அவர் வுட்டா சரிதான்” என்று சொல்லி மீண்டும் சாலைக்குச் சென்றது

அங்கே ஐயா ஜீப்பில் உட்கார்ந்திருந்தது. அதனால் ஜீப்பே முழுதும் நிறைத்திருந்தது. “என்ன சார்.. என்ன பண்ணினீங்க என்றார்.. உங்க இஷ்டத்துக்கு திரும்புவீங்க போலிருக்கே “

“இந்த ஆபீஸ்லதான் வேலை, ஓரமா நின்னு ஹெல்மேட் கழட்டி போன் பேசிட்டு அப்படியே வந்துட்டேன். கொஞ்சம் விட்டீங்கன்னா அப்படியே கிளம்பிருவேன்..”

அது கேள்விகேட்டு பதிலை ஆராய்ந்து பார்க்கும் பிரம்ம ராட்சசன் போல தோன்றவில்லை. மன்றாடியது ஏதும் செல்லுபடியாகவில்லை. இறுதியாக இறுக்கம் குறையாமல் இருந்தது.  ஒரு ரசீதை நீட்டியது. நானூறு ரூபாய்கள் அபராதம்..

“ஒரு பைசா குறைக்க முடியாது. வேணும்னா கோர்ட்ல கட்டிகங்க…” என்றது.

கோர்ட் என்றதும் குமார் தலைக்குள் பல குரல்கள் கேட்டன!

“”குமார்..! குமார்..! குமார்!!! கனம் கோர்ட்டார் அவர்களே.. குற்றவாளி கூண்டில் நிற்கும் குமார் என்பவர்..

அப்ஜெக்‌ஷன் ஓவர் ரூல்ட்.. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக குமார் என்பவருக்கு..

ஏம்ப்பா குமார் இதுதான் நீ வேலை பார்த்த லட்சணமா..உங்கப்பா ஒரு மெக்கானக்கா இருந்து எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை படிக்கவச்சு ஆளாக்கி..”

குமார் தன் பர்ஸிலிருந்து நானூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தான். மேனேஜர் கொடுத்த ஐயாயிரத்தில் கடைசியாக இருந்ததும் காலியானது.

வண்டியைத் எடுத்துக்கொண்டு டீக்கடை வாசலில் வந்து நிறுத்தினான். ஒரு டீ என்றான். சித்திரை மும்முரமாக எதையோ கணக்கு போட்டுக் கொண்டு இருந்தான். டீ மாஸ்டர் டீ கொண்டு வந்து தந்தார்.

டீ குடித்துவிட்டு பர்ஸைத் துழாவிய போதுதான் அதில் ஏதும் இல்லை என்று தெரிந்தது. காலையில் தோசை மாவு வாங்க சங்கர் காசு கேட்ட போது  இருந்த கடைசி சில்லறை வரை துழாவி எடுத்து அவனிடம் கொடுத்ததும் தோசை மாவு ஊற்றுவதற்குள் அழைப்பு வந்து அவரசமாக அலுவலகம் கிளம்பியதும்.. வந்து பிரம்ம ராட்சசனிடம் மாட்டியதும்.. இப்ப காசு இல்லாம டீ குடிச்சுட்டு நிற்பதும் வரிசையாக நினைவில் வந்தன. இப்ப என்ன செய்ய.. கல்லாவில் இருந்த சித்திரை இன்னும் தலையை நிமிர்த்தவில்லை. மாஸ்டர் வேலையாக இருந்தார். அப்படியே போன் பேசுவது போல அவசரமாக எதிரில் உள்ள ஆபீஸ்க்கு போய்விட்டால் என்ன? அப்புறம் வந்து மறந்துட்டேன்னு சொல்லி கொடுத்துடலாம்.. ஆனால் போகும்போது பின்னால் இருந்து கூப்டா என்ன செய்வது?? ஓடவா முடியும்..

தயங்கிப் போய் கல்லாவில் இருந்த சித்திரை முன் போய் நின்றான்.. என்னவென்று சொல்லி கேட்பது. காலங்கார்த்தால ஓசி டீக்கு வந்து நிக்குது பாரு நாயி ன்னு சொன்னா என்னவாகும்..

என்னவாகும் என யோசித்தபடி இருந்தான். ஒன்றும் ஆகாது என்றும் தோன்றியது.

எதையோ எழுதிக் கொண்டிருந்த சித்திரை தலையை நிமர்ந்தான்.

“என்ன சார்.. இன்னைக்கு நீங்க பொறில சிக்கிட்டீங்க போலிருக்கே”

அவன் மெல்ல சிரித்தான்

“இருந்த காசை அங்க கொடுத்துட்டேன். டீக்கு மத்தியானம் தந்துடவா”

” அது பரவால்ல போங்க.. அப்புறம் பார்த்துகலாம்..”

“இல்ல.. எனக்கு ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டு குறிச்சு வச்சுகங்க.. நான் வந்து செட்டில் பண்ணிடறேன்..”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் போங்க சார்..”

வண்டியை நிறுத்திவிட்டு அலுவலகம் செல்லும் வரை அந்த வார்த்தையை யோசித்துக் கொண்டே சென்றான்.

பொறி!!

மாடியில் இருந்து பார்க்கும் போது தெளிவாக தெரிந்தது. மறைந்திருந்து புலி பதுங்கிப் பாயும் அதே தந்திரம். சாலையில் வருபவர்களுக்கு இப்படி ஒருவர் திருப்பத்தில் நிற்பது சுத்தமாக தெரியாது. கண்டிப்பாக வேட்டைதான். எப்படி தினம் வரும் தனது கண்ணுக்குக் கூட தெரியாத பொறி!

மொபைலை எடுத்துப் பார்த்ததில் ஹெல்மெட் அணிந்து வராமல் மாட்டினால் நூறு ரூபாய் தான் நானூறு  ரூபாய் அபராதம் இல்லை என்று தெரிந்தது. பில் எடுத்து பார்த்து அதில் இருந்த விளக்கத்தை தேடியபோது   சாலையில் பழுதாகி வண்டி நின்றதால் போ்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டு அதை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ததற்கான செலவு அந்த நானூறு ரூபாய் எனக்காட்டியது. குமார் மெல்ல தன் பின்புறத்தை தடவியபடி வந்து தன் நாற்காலியில் அமர்ந்தான்

மேலாளர் இருமுறை வந்து பார்த்துவிட்டு சென்றதாக அருகில் இருந்தவன் கூறினான்.

                                  ******

“செந்தில்நாதன் போன் பண்ணினார்.. தெரியுமா?..  அவரை ஏன் காத்திருக்க வைக்கறீங்க.. உங்கள கேட்கலாம்னு வந்தா நீங்க என்னையும்தான் காக்க வைக்கிறீங்க..”

“சார் அவர் காலையிலதான் என்கிட்டயும் பேசினார்.. அவர்கிட்ட பேசிட்டு வரப்பதான் மாட்டிகிட்டு ஃபைன் கட்டிட்டு வறேன்”

“எவ்ளோ நாள்தான் ஸ்பேர் கிடைக்கலைன்னு காரணம் சொல்லுவீங்க.. அங்க ஆசிரமத்துல இருக்கிறவங்க குழந்தைங்க.. யாரும் ஆதரவு இல்லாதவங்க.. அந்த அக்கறை இல்லாம இருக்கீங்க”

“அவ்வளவு அக்கறை இருந்தா நீங்களே நல்ல கம்ப்யூட்டரா அஞ்சு எடுத்து தர வேண்டியது தானே??”

குமாருக்கு படபடக்க ஆரம்பித்தது

“உங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் பாருங்க குமார்.. அதுக்குத்தானே நம்ம சார் உங்களுக்கு  காசும் கொடுத்து வேலை நாள்ல லீவும் கொடுத்தாங்க..” என்றார்  ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கொஞ்சம் சப்தமாக

“வெறும் கணக்கு காட்ட ஆடற நாடகத்துக்கு ஏன்சார் இவ்வளவு கரிசனமா பேசறமாதிரி நடிக்கிறீங்க.. இதுவரை இங்க இருந்து ஏலத்துக்கு போன பழைய சிஸ்டத்தை எண்ணிப் பார்த்தால் ஒரு  ஐநூறு  இருக்குமா.. அதுல நல்லா வேலை செய்யறது எல்லாம் பாஸோட வெய்ஃப் கம்பெனிக்கும் அவரோட மத்த கம்பெனிக்கும் போகுது. இவங்க எல்லாத்தையும்  ஆசிரமத்துக்கும் இல்லாதவங்களுக்கும் கொடுத்ததா சொல்லி மிச்சத்தை ஸ்கிராப்னு ஏலம் விட்டதா சொல்லி கணக்கு காட்டறாங்க.. ஆனா நூத்துக்கணக்குல தனக்கு எடுத்துட்டு போறாரு.. அதுல நல்லதா அஞ்சு எடுத்து ஆசிரமத்துக்கு கொடுத்துவிட வேண்டியதுதானே..”

மெதுவாக கேட்டாலும் அழுத்தந்திருத்தமாக பேசி முடித்ததும் குமாருக்கு சற்று படபடப்பு அதிகமானது.  ஆனால் இந்த பதிலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று புரிந்து ஒரு ஆசுவாசம் உண்டானது. அவருக்குள் ஒரு கலவரத்தை தனது பதி்ல் உண்டாக்கியது கணநேர நிம்மதியையே அளித்தது.

“நாம டீக்கடைக்கு போகலாம் வாங்க குமார்..” என அழைத்துச் சென்றார்

“குமார், சில நேரங்களல்ல நமக்கு மேல இருக்கிறவங்க சொல்றதை செய்துட்டு போயிடனும். ஒட்டுமொத்தமா நாம யோசிக்க கூடாது. அவங்க யோசிப்பாங்க அவங்களுக்கு அதுக்கான கணக்கு இருக்கும்.. சரிவிடு.. நீ தம்மடிப்பியா”

“வேற ஒரு கணக்கும் இருக்கறமாதிரி தெரியலை சார்.. எல்லாத்துலயும் லாபம் வேணும்னு பார்க்கறாங்க.. இவங்களுக்குன்னு செந்தில்நாதன்  கிடைச்சிருக்காரு.. ஏதோ இவங்க கொடுக்கிற சப்போர்ட்ட நம்பி இருக்காரு. ஆனால் அவருக்கு தெரியாது.. இவங்கதான் அவரை நம்பி இருக்காங்கன்னு.. வேலை பார்க்கிற நம்ம கிட்ட மாசா மாசம் அம்பது நூறுன்னு கலெக்ட் பண்ணி பணம் கொடுக்கிறாங்க ஆனால் அவங்க பேரை போட்டுபாங்க.. இவங்க அஞ்சு புது கம்ப்யூட்டர் தருவாங்கன்னு நம்பறாரு அவரு.. வரிவிலக்குன்னு கொஞ்சநஞ்ச சலுகை இருக்கிறதாலதான் நம்ம பக்கம் பார்க்கிறாங்கன்னு அவருக்கு தெரியாமலா இருக்கும்..”

மேனேஜர் அவன் தோளைத் தொட்டார்

“நீங்க நியாயம் பேசறது கேட்க நல்லா இருக்கும். ஆனால் இங்க நடக்கிறது எல்லாம் ஒருவித அனுசரணைதான். நம்ம ஆடிட்டர் ஊர்தான உங்க சொந்த ஊரு? அங்க உங்க அப்பா மெக்கானிக்கா இருக்காரு.  அவரோட சிபாரிசுலதான் உங்களுக்கு இங்க வேலை கிடைச்சது. இல்லாட்டி நீங்க பிகாம் படிச்சதுக்கு இந்த வேலை எப்படி கிடைச்சதுன்னு நினைக்கிறீங்க.. ஊர்ல நீங்க பாத்துகிட்டு இருந்த பிரெளசிங் சென்டர் எக்ஸ்பீரியன்ஸை வச்சு உங்களுக்கு வேலை கொடுத்தார்னா நினைக்கிறீங்க.. நியாயம்னு பார்த்தால் எல்லாத்துலயும் பாக்கனும்ல. நமக்கு தேவேங்கிறதுல மட்டும் பார்க்கிறது கிடையாதுல்ல.. இங்க நடக்கிறது சாதாரண வியாபார நடைமுறை.  அதில் தேவையில்லாத ஆர்குமெண்ட விட்டு் சொன்ன வேலையை பாருங்க..”

இவர் சொல்வது ஏதும் புதியது அல்ல. ஆனால் சிபாரிசு விஷயம் இவருக்குத் தெரியாது என நம்பி செய்த வாதம் அது. ஆனால் தெரிந்திருக்கிறது. அதை எவ்வளவு சாமர்த்தியமாக இவர்கள் செய்யும் போலிக்கணக்கு விஷயத்தோடு இணைத்து விட்டார்.  மேனேஜர் முகத்தில் இருந்த  புன்னகை தன் வயிற்றில் ஊசியாக இறங்குவதை உணர்ந்தான். இவரைப் போன்றவர்களுக்கு  வாய்க்கும் உதடுபிரியாத புன்னகை.  இனி இதில் தான் செய்ய ஏதும் இல்லை. அருகில் இருந்த மரத்தடியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். இவர்களிடமிருந்து பிஸ்கட் வாங்கித் தின்ற நாய் மண்ணைத் தோண்டி அதில் புரண்டு படுத்து உடலை நெளித்தது.

மேனேஜர் மீண்டும் தோளைத் தொட்டார்

“செந்தில்நாதன் ஆசிரமத்துக்கு தறதா எடுத்த வச்ச அஞ்சு கம்ப்யூட்டர்க்கு என்ன ஸ்பேர் வேணுமோ வாங்கி போடுங்க.. உங்கிட்ட அதுக்கு கொடுத்த ஐயாயிரம் ரூபாய்க்கு மேல செலவாயிடுச்சின்னா பில் கொடுத்து அதை வாங்கிகங்க சரியா.. அது தவிர இன்னும் பழசு நிறைய கெடக்கு..  அதையும் தேத்த முடியுமான்னு பாருங்க..”

“அது எல்லாமே பழைய மாடல்சார். இப்ப ஏதும் மார்க்கெட்ல இல்ல.. எல்லாம் அஞ்சு வருசம் முன்னாடி இருந்த சிஸ்டம். இப்ப ஏதும் கிடைக்காது. ஒரு மாசமா சொல்லிவச்சும் தேடிப்பார்த்தும் வேற ஏதும் கிடைக்கல.. ஆனால் டிமாண்ட் தான் இருக்கு, கிடைச்சாலும் அதுக்கு கேரண்டி இல்ல. அப்படி நான் வாங்கிப் போட்டது வேலையும் செய்யல. காசும் போச்சு…”

“இன்னும் ஒருவாரம் டயம் எடுத்துகங்க.. கிடைக்கலைன்னா மொத்த பணத்தை ரிடர்ன் பண்ணிடுங்க..”

“மொத்த பணமும் எப்படி சார் தறது.. வாங்கினதுல கொஞ்சம் வொர்க் ஆவலையே..”

“அதை ஒண்ணும் பண்ண முடியாது. எதையாச்சும் தேத்த பாருங்க.. நாம பேசிப்பார்க்கலாம்..”

மாலை ட்ரெயினில் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஆடிட்டர் போனில் அழைத்தார். ஊரில்  பண்ணையாரின் தம்பியாக அறியப்பட்டவர்..

“சார்.. பழைய ஸ்பேர்ங்கிறதால கிடைக்கல.. இப்ப மெமரி டிஸ்க் எல்லாம் சைஸ் மாறிப்போச்சு அதனால் பழைய சிஸ்டத்துல செட் ஆவலை.. அதனாலதான் முடியல..

“டேய் தம்பி.. நீ ஓரு மெக்கானிக்கோட பையன்டா.. உங்கப்பா எவ்ளோ பெரிய வேலைக்காரன் தெரியுமா.. ஒண்ணு பாரத்துக்கோ.. ஒரு வேலைக்காரனா முடியலங்கிற வார்த்தை வாய்லேந்து வரக்கூடாது. உங்கப்பா முடியலைன்னு சொல்லி உட்கார்ந்து நான் பாத்ததில்லையேப்பா.. ஒருவாட்டி தோட்டத்துல இருந்த  மோட்டருக்கு பண்ணையாள் ஒருத்தன்  சின்ன போல்ட் வாங்கிட்டு வந்திட்டான்.. ஆனால் உங்கப்பா முடியாதுன்னா சொன்னாரு.. என்ன பண்ணாரு தெரியுமா.. நூல் சுத்தி  அதையே போட்டுவுட்டாப்ல.. இப்ப வரை ஓடிட்டுதான இருக்கு. புரியுதா?! டாப் வேலைக்காரனுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல..”

“இதுல நூல்லாம் சுத்தமுடியாது சார்..” பல்லைக் கடித்தபடி அழுத்தக் கூறினான்

“தம்பி.. நூல் சுத்த முடியலைன்னா என்ன? டேப் அடிச்சு வுடு.. அப்பாகிட்ட கேளுப்பா சொல்லுவாரு.. எதானாலும் ஒரு வாரத்தில கொடுத்துருப்பா.. உன்னை சேர்த்துவுட்டது நான். அவங்க முன்னாடி நம்ம பையன்னு நின்னாதான எனக்கும் பெரும?”

போனை வைத்துவிட்டு ஒரு வசையை உதிர்த்தான்.. ரயிலில் இருப்பதை உணர்ந்து ஒருமுறை திடுக்கிட்டு சுற்றிவர நோக்கினான். ஒரு வாரத்தில் சம்பளம் வரும் அதுவரை வண்டியை அலுவலகத்திலிருந்து எடுக்கக் கூடாது. இப்படி துடைத்துப் போட்ட பர்ஸோடு இருப்பது புதிது அல்ல. ஆனால் இப்படி டிக்கெட் எடுக்காமல் மின்சார ரயிலில்பயணிப்பது புதிது. சங்கர் கடனை திருப்பி அளித்தால் அதை ஆபீஸில் திரும்ப அளிக்கலாம். அல்லது சம்பளம் வந்ததும் திரும்ப தரவேண்டும். மீதி பன்னிரெண்டாயிரத்தை  வைத்து மாதத்தை ஓட்ட வேண்டும். ஓட்டலாம் என்று தோன்றியது. சங்கர் எப்படியும் பணத்தை திரும்ப தரமாட்டான். இரவு உணவிற்கு ஏதும் இருக்கிறதா என தெரியவில்லை. காலையில் வாங்கிய தோசை மாவு மீதம் இருக்கும். புளித்தாலும் அதை வைத்து சமாளிக்கலாம்

*******

ங்கர் மேல்சட்டை ஏதும் அணியாமல் கால்சட்டையோடு அமர்ந்திருந்தான். சிகரெட்டை பாதி புகைத்துவிட்டு மீதியை ஷெல்ஃப்-ல் வைத்திருந்தான். குமார் பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு வந்தான்.

“பாத்ரூம்ல சிகரெட் புடிக்காதன்னு சொல்லியிருக்கேன்ல.. வெளியில போகவேண்டியதுதான..”

“வெளியில போகத்தான் பாத்ரூம்க்குள்ள பத்தவைப்பாங்க” சிரித்தான் சங்கர்

கையில் பத்துகாசு இலை ஆனா இவனால சிரிக்கமுடியுது

“என்கிட்ட முன்னாடி கடன் வாங்கின நாலயிரத்த எப்ப திரும்ப தருவ.. நான் ஆபீஸ்ல வாங்கின பணமும் செலவாகிடுச்சி.. இதை வச்சுத்தான் அதை அடைக்கனும்.. எனக்கு ஒரு நாளைக்குள்ள பணத்தை தந்துடு..”

”எனக்கே சம்பளம் வரலை.. நான் எங்கேந்து உனக்கு தறது.. வரும்போது தறேன்..”

‘டேய்.. பெட்ரொல் போடக்கோட காசு இல்லாம ட்ரெயின்ல டிக்கெட் எடுக்காம வந்துகிட்டு இருக்கேன் தெரியுமா… மாட்டிருந்தா மானம் போயிருக்கும். ஒழுங்கு மரியாதையா பணத்தை கொடு..”

“நீ டிக்கெட் எடுக்காம வந்தது உன்னோட கிறுக்குத்தனம். அப்படி  வந்துட்டு என்மேல பழி போடாத. மாட்டிருந்தா ஃபைன் போட்டிருப்பாங்க. அதுக்கும் நாந்தான் காரணம்னு அதையும் என்கிட்ட கேட்பியா?” என்றான் சிரித்தபடியே

கையை காட்டி மறித்தான். “ எதிர் கேள்வி கேட்கிறதுல இருக்கிற அக்கறையை கடனை திருப்பித் தரதுல காட்டுடா மயிறு..  பணத்தையும் வாங்கிட்டு அட்வைஸும் பண்றான்..’ கையை நீட்டும் போது ஆத்திரத்தில் நடுங்கியது

“எனக்கு பணம் வந்ததும் விட்டெறியறேன்.. அதுக்காக ஆஃபீஸ் பணம் குறையறதுக்கும் ரயில்ல டிக்கெட் இல்லாம வறதுக்கும் என்மேல பழிபோடாத என்ன?.. எதை எங்க கேட்கணுமோ அங்க போயி கேளு..”

“பழி போடலை.. நான் கடன் கொடுத்த பணத்தை மட்டும்தான கேட்கிறேன்.. உனக்கும் சேர்த்துக் கொடுத்த ரூம் வாடகை எல்லாம் கணக்குல சேர்க்கலை.. வாங்குன பணத்தை மட்டும்தான் கேட்கிறேன்.. அதுக்கே ரோஷம் மயிறு வருதா உனக்கு..”

“அதையும் சேர்த்து விட்டெறியறேண்டா.. நாளைக்கே வேணும்னா நான் என்ன போயி திருடவா முடியும்?” என்றான் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை சுழற்றியபடி,

குமார் கத்தியபடி “திருடு.. இல்லை எவன்தையாச்சும் ஊம்பு.. எனக்கு காசை ஒழுங்கா கொடுடா…” சொல்லும்போதே உட்கார்ந்திருந்த அவன் புட்டத்தில் ஒரு எத்து எத்தினான்

சங்கர் சமாளித்து எழுந்து அவன் மீது ஒரு அறை விட்டான்.. “ மரியாதையா நடந்துக்கோ..  வோத்தா உனக்கு பணம் தர முடியாதுடா என்ன புடுங்குவ.. பார்த்துடலாம்…”

குமார் அவன் மீது தன் ஷூவை வீசியெறிந்தான். பதிலுக்கு அவன் இவன் மீது தண்ணீர் பாட்டிலை எறிந்தான். இருவரும் அடித்துப் புரண்டனர்.. “நீ வாடகையும் தரமாட்ட.. கடனும் தரமாட்ட. நான் பாத்துக்கிறேண்டா.. நீ மயிறு, ரூமை காலி பண்ணு…”

செருப்பை மாட்டிக்கொண்டு விறுவிறுவென வெளியே நடந்தான்.  கழுத்திலும் இடுப்பிலும் வலி இருந்தது. தானும் நன்றாக திருப்பி அடித்தோம் என்ற ஆசுவாசமும் இருந்தது

*******

ஷெல்ஃபின் அடியில் வைத்திருந்த இருபது ரூபாயை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். ஆனால் ஏதும் சாப்பிட பிடிக்கவில்லை. இருபது ரூபாய்க்கு என்ன இருக்கிறது எனப் பார்த்தான்.  கடலை பாக்கெட்தான் இருந்தது.  ஏதும் வாங்காமல் நடந்தபடியே ரயில் நிலையம் வந்தான். வந்த ஒரு இரயிலில் ஏறிக்கொண்டான். காலியாக இருந்த  ரயிலில் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான். நல்ல காற்று. கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது.  ரயில் மெல்ல வேகமெடுத்தது தண்டவாளம் அருகே ஒரு பெண்மணி அவஸ்தயாக நின்றுகொண்டிருந்தார்.  சிறுநீர் கழிக்க வந்திருக்கலாம். திடீரென அந்தப் பெண் பக்கத்தில் இருந்த கருங்கல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள். திடுக்கிட்டு கண் விழித்தான். கனவு!  கடற்கரை காற்று. கடலும் தூரத்தில் விளக்கொளியில் தெரிந்தது. நன்கு தூங்கிவிட்டிருந்தான். வண்டி எங்கோ   மேலே பாலத்தில் சென்று கொண்டிருக்கிறது. இரயில் கலங்கரை விளக்கம் நிலையத்தை அடைந்து கொண்டிருந்தது. அங்கு கருப்பு கோட்டுடன் ஏறியவரை பார்த்தவுடன் அந்த காற்றிலும் அவனுக்குள் வியர்வை முத்துக்கள் உண்டாயின. கையில் சீட்டு இல்லை.  குமாருக்கு சிறுநீர் கழிக்கும் அவஸ்தை ஏற்பட்டது. அவர் டிக்கெட் கேட்பதற்கு முன் எழுந்து முன்னால் போய்விட நினைத்தான். ஆனால் கால்கள் எழவில்லை. வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். கண்கள் அவர் பக்கமே பார்த்தபடி இருந்தன.  அந்தக் கருப்புக் கோட்டுக்காரர், அவனுக்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் அமர்ந்து ஹெட்போன் சொருகி பாடல் கேட்கத் துவங்கினார். குமார் தன் தலையைக் குனிந்து கொண்டான். இப்பொழுது ஓடிப்போய் ஒடும் ரயிலிருந்து  குதித்துவிட கால்கள் பரபரத்தன.  விம்மி அழத்துவங்கினான்.

இன்னும் ஒரு நிமிடத்தில் அடுத்த இரயில் நிலையம் வரப்போவதை ரயிலில் இருந்த ஒலிப்பெருக்கி அறிவித்தது. கண்கள் சிவக்க நிமிர்ந்தவனைப் பார்த்த அந்த கருப்பு கோட்டுக்காரர்  ”வண்டி ரைட் டைமுக்குப் போகுது” என்றார். தன் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார். அவசர அவசரமாக அதை மறுத்தவன் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான்.

பதினோரு மணிக்கு ரூமுக்கு வரும் வழியில் கதவு திறந்து மாடியறியபோது சத்தம் கேட்டு வீட்டு ஓனர் ஜன்னலில் லைட் எரிந்து அணைந்தது. மாடியில ரெண்டு பசங்க இருக்காங்க ஒருத்தர் ஐடி ஒருத்தர் மீடியா என்று முன்பு யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தவர். இன்று மேலே நடந்த கலாட்டா உருட்டல் எல்லாம் அவருக்கும் கேட்டிருக்கும். சங்கர் அவனுக்காக காத்திருந்தான். காலையில் வாங்கிய தோசைமாவில் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டிருந்தான். அவனுடைய முழங்கை சிராய்த்திருந்தது. தேங்காய் எண்ணெய் தடவியிருந்தான். உதட்டிலும் ஒரு வீக்கம் இருந்தது..

“நல்லா இருக்குன்னா இதை  காலைக்கு சாப்பிட வச்சுகலாம்” என்றான் குமார் அவன் முகத்தை தவிர்த்தபடி. ஆனாலும் வயிறு வா வா என்றது.

‘ஒருவாரத்துக்கு காலையில மாவு தறதா கடைக்காரக்கா சொல்லிருக்கு. இப்ப  இதை நீ எடுத்துக்க!’

‘எப்படி கடன் தறாங்க.. அவங்க தரமாட்டாங்களே..”

‘நாம மீடியால்ல.. ‘  என்றான்  சங்கர்.. ‘ஒருநாள் போட்டோ எடுத்து போடறதா சொல்லியிருக்கேன்’

‘ஆமாம்.. நான் ஐடி.. நீ மீடியா..” என்றபடி தோசையை ஊற்ற ஆரம்பித்தான் குமார். வெக்கை  வியர்வையாக வடிந்தது

இருவரும் மொட்டை மாடிக்கு உறங்க வந்தனர்

பாயை விரித்துப் போட்டு படுத்தபடி வானில் ஆங்காங்கு தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி இருந்தான் குமார்.. சுற்றிலும் இருந்த நகரத்தின் ஒளி, நட்சத்திரங்களைக் காண விடாமல் அடித்திருந்தது. ஒருமுறை மின்சாரம் தடைப்பட்டால் நன்றாக இருக்கும். நட்சத்திரங்கள் ஜொலிப்பாக தெரியும். ஒரு விமானம் குறுக்கே பறந்து சென்று கவனத்தைக் கலைத்தது. தொண்டையை கனைத்துக் கொண்டான். சங்கர் தண்ணீர் பாட்டிலை எடுத்து அருகில் வைத்தான். சற்றுத் தயங்கிய படி எடுத்து ஒரு மிடறு குடித்தான்.

சங்கரை முகத்தை பார்க்க தயங்கியவனாய் கேட்டான். ” சம்பளம் வந்துருமா?”

“நான் காண்டிராக்ட்லல்ல இருக்கேன். ரெகுலர் ஆளுங்களே சம்பளம் வரலைன்றாங்க.. கம்பெனிய மெயினா நெட்ல வச்சுகிட்டு பிரிண்டிங்கை குறைக்கலாம்னு யோசிக்கிறாங்க”

“எனக்கு கடன் கொடுக்கும் போதே நான் உடனே திரும்ப தருவேன்னு நம்பிக்கை இருந்துச்சா.. ” என்றான் தொடர்ந்து..

“எனக்கு பி.காம்ல பற்று வரவு சொல்லி கொடுத்தவனே நீதான். எனக்கு தெரியாதா? ” வெற்றுச் சிரிப்பு சிரித்தான் குமார்..

‘அந்த பாதி சிகரெட் இருக்கா.. ‘ சும்மா கேட்கலாம் எனக் கேட்டான்.

‘நாளைக்கு காலைக்கு வேணும்ல.. அங்கயே வச்சிருக்கேன்..’

ம்..

“யாரு கடுப்பேத்தினாங்கன்னு தெரியல.. காலையில போறதுக்குள்ளயே  மாட்டிகிட்டேன்.. நானூறு ரூபா ஃபைன்.. அவன்தான் ஆரம்பிச்சு வச்சிருக்கான் இன்னைய பொழுதை.. அப்புறம் தெரியாதுன்னு நெனச்சிட்டிருந்ததை மேனேஜர் சொல்றாரு.. எனக்கு வந்த கோபம் ஆடிட்டர்ட்டயா இல்ல மேனேஜர்ட்டயான்னு தெரியல.. ஆனால் அவங்க எல்லோரும் ஒரு வரிசைல இருக்காங்க.. நாம தனி வரிசைல இருக்கோம்னு மட்டும் புரியுது.. ” தனக்குள் சொல்வது போல சொல்லிக் கொண்டான். தொடர்ந்து,

“செந்தில்நாதனுக்குத் தேவையானது எல்லாம் அவங்க நினைத்தால் எளிதில் முடியக்கூடிய ஒன்று. அவங்களுக்கு பெரிய தொகையும் அல்ல. ஆனால் அவர்கள் ஐயாயிரம் ரூபாயில் முடிக்க சொல்றாங்க. அதுக்குப் போட்டு என்னையும் அலைக்கழிக்கிறாங்க.    என்னிடம் மட்டும் ஒழுங்கை எதிர்பார்க்கிறாங்க. ஏன்னா அவர்களோட திருட்டுத்தனம் என்னுடைய சின்சியாரிட்டி மேல உட்கார்ந்து இருக்கு.   ஆனால் நான் இதுக்காக கடை கடையா அலைய வேண்டியிருக்கு. கூட இருப்பவனோட சண்டை போட வேண்டியிருக்கு. எவனையோ பார்த்து நடுங்க வேண்டியிருக்கிறது.  எல்லாம் எங்கெங்கோ போய் விடியுது” என்றான்

“இங்க நாம ஒழுங்கா இருக்கனும்னு எல்லோரும் விரும்பறாங்க. ஏன்னா நாம ஒழுங்கா நடந்தாத்தான் அவங்க நம்ம தோளில ஏறி ஜம்ப் பண்ணி போக முடியும்.. நாம முரண்டு புடிச்சா அவங்க இறங்கி இந்த வேலையை பார்க்கனும்.. ஆனா இறங்கி வர அவங்களுக்கு ஒத்துக்காது.. “

“இங்க இருக்கிற ரெண்டு் பாதையில நாம எங்க இருக்கனும்னு இன்னொருத்தர்தான் முடிவு பண்றாங்க. நாம ஒழுங்கா போகுற ரயிலா இல்லாட்டி அதில் துணிஞ்சு போற ப்ளாக் டிக்கெட்டான்னு நமக்கே தெரியல..”

இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் அபத்தத்தை எண்ணிச் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள்.

சற்று நேரம் கழித்து, ”ஒரு விஷயம் சொல்லனும்.. இப்ப நம்ம பிரச்சனைக்கு அது கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்..’ என்றான் சங்கர்

“சொல்லு”

“உங்க ஆபீஸ்கிட்ட திரும்பும் போது ஹெல்மெட் இல்லாததால போய் மாட்டிகிட்டதா சொன்னீல்ல.. அவங்க சிலபேர்ட்ட பில் போடாம காசு வாங்குவாங்க.. அதை போன்ல வீடியோ எடுத்து அனுப்பு.. அதை கொடுத்து நான் ஆபீஸ்ல காசு வாங்கி தறேன்.. அதுக்கான டிமாண்ட்ங்கிறது அப்பப்ப வரும்.. அதனால அதை தேவைங்கிறப்போ வைரலாக்க அவங்க போட்டுப்பாங்க… மூணு நாலு வீடியோ அனுப்பு. நாலாயிரம் கேட்டுப் பார்க்கிறேன்..

குமாருக்கு மீண்டும் வியர்க்க ஆரம்பித்தது..

“மறைஞ்சு நின்னு எடுத்து மாட்டிக்கவா..”

“கொஞ்சம் பார்த்துதான் எடுக்கனும்.. ரிஸ்க்தான் ஆனால் உனக்கு வியூ கரெக்டா இருக்குன்னா பிரச்சனையிருக்காது”

அந்த நொடியில் குமாருக்கு அதை செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது

“ரிஸ்க்தான்” என்றான் குமார்

**********

குமார் முதல் இரண்டு நாட்கள் தன் அலுவலகத்திலிருந்து பால்கனியில் நின்று கொண்டு வீடியோ எடுக்க முயற்சித்தான். ஆனால் அந்த வீடியோக்கள் சரியாக இல்லை என்று சங்கர் நிராகரித்து விட்டான். அதன் பின்னர்தான் சித்திரையின் டீக்கடையிலிருந்து எடுக்க முயற்சித்தான். அங்கிருந்து தெளிவாகவே இருந்தது. ஆனால் அவனுக்கு முதலில் நடுக்கமும் உண்டானது. சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். சாகசம் செய்வது போலத் தோன்றியது. டீக்கடை இடைவெளியிலிருந்து வீடியோ எடுக்க முயற்சிப்பதற்கு முன்னால்  ஒருமுறை சுற்றிவரப் பார்த்துக் கொண்டான். சித்திரை வழக்கம் போல தன் கல்லாவிற்குள்ளும் கணக்கு வழக்கிற்குள்ளும் முழுகியிருந்தான். டீ மாஸ்டரும் வேறு வேலையாக இருந்தார்.  மெல்ல தன் கைபேசியை எடுத்து வீடியோ கோணம் பார்க்கத் துவங்கியபோதுதான் பின்னால் தோளை தொட்டக் கையை கவனித்தான். திரும்பிப் பார்த்தபோது முன்பு வழிமறித்து சாவி எடுத்து சென்றவரே நின்றிருந்தார். கை நடுங்கி போன் கீழே விழுந்துவிட்டது.

”ஐயா கூப்புடறாங்க.. கொஞ்சம் வாங்க”  என்றார்

“நான் சும்மா டீ சாப்பிடத்தான் வந்தேன்.. வேலை இருக்கு அப்புறம் வறேன்” போனை எடுத்துக் கொண்டு நகர்ந்தவன் கையை இறுகப் பற்றியிருந்தார்

“அப்படியே வாங்க.. எல்லாரும் கவனிச்சா நல்லாவா இருக்கும்… வந்து ஐயாவை பாருங்க..”

ஐயா இருந்த ஜீப்பின் கதவினைப் பற்றியபடி நின்றிருந்தான் குமார்

ஐயா அவனை கண்ணுக்குள் ஒருமுறை பார்த்தார்.

‘ரெண்டு நாளா பாத்துட்டே இருந்தேன். ஆபீஸ் மேல நின்னுகிட்டிருந்தீங்க.. இன்னைக்கு ஆளை விட்டுக் கூப்புடலாம்னு நினைச்சன். நீங்களே கீழ இறங்கி வந்தீங்க..”

’இல்ல சார் வந்து.. டீ சாப்பிடலாம்னு….’ காலுக்கடியில் பூமி நழுவுவது போல இருந்தது அவனுக்கு.. கைப்பிடியை இறுக்கிக் கொண்டான்..

’ஒரு உதவி வேணுமே..’ சிரித்தார் ஐயா.. கடைவாயில் ஒன்று தங்கப்பல் என்று தோன்றியது

ஒரு பெட்டியை எடுத்துக் கொடுத்தார். இது ரெண்டுநாள் முன்னாடி ஆபீஸ் கிளீன் பண்ணும்போது கிடைச்சது. ஏதாவது போகுமான்னு பார்த்து சொல்லுங்களேன்…”

ஐயா காட்டிய பெட்டியைத் திறந்து பார்த்தான். அதை ஐந்து வருடங்கள் முன்பு தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டரின் உதிரி பாகங்கள் சீல் பிரிக்கப்படாமல்  நிறைத்து இருந்தன. அவன் ஒருமாதமாக தேடிக்கொண்டிருந்தவை. செந்தில்நாதனின் தேவையையும் மீதியிருப்பவற்றை வைத்து அலுவலக மிச்சத்தையும் சரிசெய்து விடலாம்.  இருபதாயிரம் வரை  தன் அலுவலகத்திலேயே வாங்கி விடலாம்.

தொலைவில் ரயில் செல்லும் சத்தம் கேட்டது.

“ரொம்ப பழசு சார்.. கஷ்டமாச்சே..”

“அதான் சொன்னாங்க, முன்னாடி ஸ்டேஷன்ல இருந்தவங்க நாலைஞ்சு வருஷம் முன்னாடி பிடிச்சு வச்சிருக்காங்க.. அவங்களும் இப்ப இல்ல. வேற ரெக்கார்டு ஏதும் இல்ல.. யாரும் இதுவரை கேட்கவும் இல்ல போலிருக்கு.. எல்லாம் பழசுங்கிறாங்க.. எதுவும் தேறாது..  எடைக்கு போட்டாலே லாபம்ங்கிறாங்க.. கொஞ்சம் கூட போகாதா..”

“ரெண்டாயிரம் வரை கிடைக்கும் சார்” என்றான் குமார். இதழ் பிரியாமல் புன்னகைத்தான்.

“ஐநூறு சேர்த்து கொடுங்க, மூணு பேர் இருக்கோம்ல ” என்றார் ஐயா. தங்கப்பல்தான் என உறுதியானது

இது நடந்த ஒரு வாரத்தில் திறமையான வேலைக்காரனாக குமார் ஆடிட்டரால் பாராட்டப் பட்டிருந்தான். சித்திரையின் கடையில் வைத்துத்தான் பிரம்ம ராட்சசனும் அவனும் பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் ஹெல்மெட் இல்லாமல் வரும்போதும் பிரம்ம ராட்சசன் அவனைப் பிடிப்பதில்லை. மெல்லிய தலையசைப்போடு கடந்து சென்றனர். ஒரு விதி விலக்காக, முன்பெல்லாம் காசு வேண்டாம் என்று டீ அளித்த சித்திரை அவனுக்காக தன் கணக்குப் புத்தகத்தில் ஒரு பக்கம் ஒதுக்கியிருந்தான். ஆனால் குமாருக்கு அதை என்ணி பெருமையாகவே இருந்தது.

 

***

-காளிப்பிரசாத்

 

Please follow and like us:

1 thought on “பற்று-வரவு-இருப்பு – காளிப்பிரசாத்

  1. கதைக் களம்,
    நடை பெறும் நிகழ்வுகள்,
    அனைத்தும்
    நேரில் பார்ப்பது போல இருக்கிறது.
    மனம் நிறைந்த
    பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *