​​​​அந்த நாயின் பற்களின் கூர்மை என் கண்களைக் கூசச் செய்தது. எனக்கும் அதற்கும் இடையில் பத்தே அடிகள். எந்த நொடியிலும் அது பாய்ந்து என் காலையோ கையையோ குதறி விடக்கூடும். அது நிற்கின்ற நிலைமை ஒரு வேட்டைப் புலியின் தந்திரமான முறை. எந்தத் திசையில் நான் ஓடத் துணிந்தாலும் அடுத்த சில நொடிகளில் அது என்னைத் தாண்டிச் சென்று முன் நிற்க முடியும். திடீரென எப்படி அதன் முன் வந்து மாட்டிக்கொண்டேன் என்ற யோசனை. அது மெல்ல என் கண்களை ஊடுருவிப் பார்த்தபடி உறும ஆரம்பித்தது. அப்படியே புலிதான். அருகே ஏதேனும் கூரிய கல்லோ மரக்கட்டையோ இருக்கிறதா எனப் பார்க்கிறேன். அப்போது அந்த நாயின் பின்புறம் கலங்கிய நீர்த்திரையின் பின்னாலிருந்து ஓர் உருவம் மெல்ல வெளிவந்தது. ஆறடி,பெரும் தோள்கள், பெரிய தலை, சுருள் சுருளாகக் கரிய முடி, புருவங்கள் கூடுதல் கனத்துடன் கண்களை மேலும் பயமுறுத்துவதாகக் காட்டின. மயிர் அடர்ந்த தேகத்தின் குறுக்கே தடித்த கயிறொன்று சுற்றப்பட்டிருந்தது. கீழே மணிகள் கோர்த்த சுடலை போடுவது போன்றதொரு ஆடை. தடித்த கைகளை என்னை நோக்கி நீட்டி, “புடிச்சிக் கொண்டா மோனே,” என்று உறுமுகிறார். மண்ணில் நகத்தால் கிளறியபடி என்னை நோக்கிப் பாய்கிறது அந்த நாய். நான், ‘எம்மா, எம்மா,’ எனக் கதறியபடி அந்தவிடத்திலேயே குத்தவைத்து உட்கார்ந்து முகத்தை முழங்கால்களுக்கிடையே புதைத்து கைகளை அங்குமிங்கும் வீசுகிறேன்.

​பதறி எழுந்தபோது போன் அடித்துக் கொண்டிருந்தது. அப்பா, பல வருடங்களுக்குப் பிறகு. அந்த நொடி அம்மாவிற்கு என்ன ஆனதோ என்று தான் பதறினேன். அப்பாவிற்கு என்ன ஆனதோ என எனக்கோ தம்பிக்கோ தோன்றாது. செல்விக்கு நிச்சயம் தோன்றியிருக்கும். உடனே செல்வியை அழைத்தேன்.

“அந்தாளு என்ன மயித்துக்கு எனக்குக் கால் பண்ணுகாருட்டி? பட்டதெல்லாம் போறாதுன்னா?”

“எண்ணே, செனம் கெளம்பி சங்கரா கண்ணாசுத்திரிக்கு போண்ணே.”

“என்னவாம் அவருக்கு? ஓரெடத்துல அடங்கிக் கெடக்க வேண்டியான? பெரிய வீம்புல தான எல்லாத்தயும் வெரட்டி அடிச்சாரு. இப்போ என்ன வந்து?”

“எண்ணே, ஆளாளுக்கு வீம்பு புடிச்சா நா என்ன செய்வேன்? நாஞ்சொல்லதக் கேளுண்ணே. இந்த ஒரு தடவ மட்டும் போயி என்னான்னு கேளு. என்ன ஆச்சோ என்னவோ! அப்பா ஒனக்கே கூப்ட்ருக்கால்லா. இங்க அம்மய விட்டுட்டு எனக்கு வர முடியாது பாத்துக்கோ. பஸ் புடிச்சி வந்து சேரதுக்கே ரெண்டு மணிக்கூர் ஆயிரும். ஒன்னு போய்ப் பாருண்ணே.  எதாம் அவசரமா இருக்கப் போகு. ஆப்பரேஷன் பண்ண கண்ணயும் வச்சிட்டு சொல்லாமக் கொள்ளாம போயிருக்கா.”

“செரி, செரி. எதாம் ஒரண்டைய இழுத்தாருன்னா கேட்டுட்டு இருக்க மாட்டேன் பாத்துக்கோ. வாறேன்னு போன் பண்ணிச் சொல்லு.”

விடுப்பு சொல்லிவிட்டுக் கிளம்பினேன். கானல் நீரும் சுழற்றியடிக்கும் தூசியுமாக விரைந்து கொண்டிருந்தபோது ஓரத்துப் பனைகளில் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்த ஓலைகள் எந்த நொடியும் விட்டு விழுவதைப் போல ஆடிக் கொண்டிருந்தன. ஊர் மாறி வந்த புதிதில் கிடைத்த ஒன்றிரண்டு பனைகளில் ஏறி பதநீர் எடுத்தார் அப்பா. நொங்கு விற்றார். மெல்ல சிறு சிறு துண்டு நிலங்களை வாங்கினார். தென்னைக்கு மாறினார். ‘மாசானமுத்துக்க தேங்கா மாதி வருமா’ என்று பெயர் வாங்கினார். பல இரவுகளில் காணாமல் போய் விடுவார். கூடவே எங்கள் வீட்டு எசக்கியும், மாடனும் காணாமல் போயிருப்பார்கள். வேட்டைக்குப் போவதாகப் பேசிக்கொள்வார்கள். வெள்ளெலியும், காட்டுப் பூனையும் அடித்துச் சுட்டுத் தின்னும் ஒரு கூட்டாளிக் கூட்டம். எனக்குத் தெரிந்து இதுவரை ஒரு பத்து எசக்கியும் பன்னிரண்டு மாடனும் வளர்த்திருப்போம். கருப்பும் செவலையுமாக எங்கிருந்துதான் ஒரே மாதிரி ஒவ்வொரு முறையும் எடுத்துக்கொண்டு வருவாரோ.

“அந்த ஈரல எடுத்து வையி. மத்தவனுக்கு இஷ்டம்லா?”

“ஆமா, பிள்ளையளுக்கு வேண்டாமா? பட்டிக்கி ஈரல் கேக்கா ஈரலு. பேயாம இரிங்க. எலும்பு போட்டாலே போற வாரவனக் கடிக்கதுக்கு நிக்கி ரெண்டும்.”

“எட்டி, நீ என்னத்தட்டி சொல்லது? ஒங்கப்பனுக்க மொதலா?பட்டிக்க நன்னி கூட ஓங்குடும்பத்துல ஒருத்தனுக்கும் கெடையாத?”

“ஆமா, நன்னி கெட்ட குடும்பந்தான். பின்ன எதுக்கு கூட்டிட்டு வந்தியோ? நானா கருக்கலுக்கு நின்னு மறிச்சேன்? வாயி மட்டுந்தான் கொள்ளும்.”

“ஓ, இவ பெரிய பத்மினில்லா? எனக்க பட்டியளுக்கு சோறு போடத்தாம்ட்டி ஒன்ன கூட்டிட்டு வந்தது. பட்டியாம்லா பட்டி.”

“அதான் தெரியுமே. அந்தப் பட்டிக்கி இருக்க மரியாத கூட எனக்குக் கெடையாது. ஒரு வார்த்த பொண்டாட்டி தின்னாளான்னு என்னைக்காம் கேட்ருக்கேளா? பட்டிக்கி ஈரலு… எனக்கத் தலையெழுத்து.”

“செவுளப் பேத்துருவம் பாத்துக்க. வாயி மயித்த ஒங்கப்பன்கிட்ட போயிக் காட்டு. பிச்சக்காரத் தாயளிக்கு வாயி மயிரு. நடு ரோட்டுலக் கெடந்துருப்ப நாய.”

அப்பா இல்லாத பொழுதுகளில் அம்மா மாடனையும் எசக்கியையும் விரட்டி அடிப்பதும் கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுமாக இருப்பாள். அப்பாவிற்குப் பயந்து அவர் இருக்கும்போது எங்களுக்கு வைக்கும் அதே சோற்றை சிறு மாற்றமுமின்றி வைப்பாள். அப்பா சாப்பிட்டு முடித்ததும் இரண்டையும் மடியில் போட்டுக்கொண்டு உண்ணி எடுத்துக்கொண்டிருப்பார். எங்களுடனோ அம்மாவுடனோ பேசாத எல்லாவற்றையும் அந்த நாய்களிடம் மிகவும் ஆழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்.

அப்பா என்னிடமோ தம்பியிடமோ செல்லமாகப் பேசிய ஒரு நாள் கூட என் நினைவில் இல்லை. எப்போதும் விறைப்பாக முறைத்தபடிக் கட்டளையிடுவதும் தயங்கித் தயங்கி நிற்கும் எங்கள் முகங்களைக் கூட திரும்பிப் பார்க்காமல் சென்று விடுவதும்தான் அப்பா. செல்விக்கு மட்டும் எப்படியோ ஒரு தைரியம். அப்பா வந்ததும் ஓடிச்சென்று அவர் காலைக் கட்டிக் கொள்வாள். அவர் ஏதோ பேச்சுக்கென்று இரண்டு முறை அவளைத் தூக்கி உயரே போட்டுப் பிடிப்பார். பின், எசக்கியும் மாடனும்தான்.

“பிள்ளைக்கி ரெண்டு வயசாகப் போகுல்லா, கால்ல ஒரு கொலுசு போடாண்டாமா?”

“பெரிய பயலுக்கு செருப்பு பிஞ்சிப் போச்சி பாத்துக்கோங்க.”

“சின்னவன் ஒடம்பு கொதிக்கா பாருங்கப்பா.”

“கழியலப்பா, நீசப் போக்கா இருக்கு..”

இன்னும் எத்தனையோ அடுக்கலாம். எதற்கும் அப்பா எதுவும் செய்ததாக எனக்கு நினைவில்லை. வரும்போது சுடச்சுட சாப்பாடு. கைநீட்டும் இடத்தில் வெளுத்துத் தொங்க வேண்டிய தூக்கியெறியும் அழுக்குச் சாரம். பளீரென கழுவி வைத்த லூனார்ஸ் வெள்ளைச் செருப்பு. பதில் எதுவும் வராத கேள்விகள். இதற்கு மேல், எப்போதும் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள்.

ஒருமுறை எங்கோ அவசரமாக ஓடும்போது மாடனது வாலை நான் மிதித்துவிட பின்னங்காலில் கடித்து விட்டது. கத்தியபடி ஓடிவந்த அப்பா ஓங்கி என்னைக் கன்னத்தில் அறைந்து விட்டார். அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் ஓடியபோதும் அப்பா அசையவில்லை.

சங்கரா கண் மருத்துவமனையைச் சென்று அடைவதற்குள் செல்வி பத்து முறை அழைத்துவிட்டாள். அப்பாவிற்கு இன்னொரு கண்ணிலும் அறுவைச் சிகிச்சையாம். வந்து மூன்று நாட்களாகத் தனியாகவே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருக்கிறார். ஒருமுறை காற்று மழையில் சரிந்து விழுந்த மொத்த வீட்டையும் ஒற்றை ஆளாகக் கட்டி நிமிர்த்தார் அப்பா. அம்மா ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஒவ்வொரு ஓலையாகத் தூக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை விறகுக் கட்டோடு வரும்போதும் அப்பாவின் தலையில் மூன்று ஆட்கள் தூக்கும் சுமடு இருக்கும். அம்மா எதுவும் பேசாமல் வெட்டருவாளைத் தாங்கியபடி வந்து நிற்பாள். கோவில் கொடைக்கென கிடா வாங்கித் தோளில் தொங்கவிட்டபடி நடப்பார் அப்பா. அம்மா தலையைத் தொங்கவிட்டபடி அவர் பின்னால் சென்று கொண்டிருப்பாள். எப்போதும் அம்மாவின் இடுப்பில் ஒருபுறம் தம்பியும் மறுபுறம் செல்வியும். அவள் சேலை நுனியை என் விரல்களில் சுருட்டிக்கொண்டு நான். அப்பா மட்டும் எப்போதும் பத்தடி முன்னால் மீசையை முறுக்கியபடி பார்க்கும் ஒவ்வொருவரிடமும் நின்று பேசிக்கொண்டு நடப்பார்.

மருத்துவமனைக்குக் கிளம்பியபோது தயங்கியபடி என்னருகே வந்து எதையோ நீட்டிய சுதா, “ஏம்ப்பா, மாமா எதாம் சொன்னா சொல்லிட்டுப் போட்டும். சமானமா பேசுங்கோ என்னா? இதக் கொண்டு குடுங்கோ.” என்றாள்.

“என்னத்த இது?”

“சோறும் மீன்கொழம்பும் வச்சிருக்கேன். போட்டும்பா, அப்பாம்மைக்கி செய்யது புண்ணியம்லா. கொண்டுட்டு போயி குடுங்கோ. வயசான காலத்துல ஒத்தைல கெடக்கப்படாது. நம்ம பாக்க வேண்டியது நம்ம கடமை.”

“எட்டி, அந்தாளு ஒன்ன என்ன கேள்வில்லாம் கேட்டாரு?”

“போட்டும்பா. எங்க அப்பா கேக்க மாட்டாளா? இருந்துட்டுப் போட்டும். அவ்வோட்ட பைசா எதுவும் உண்டுமா? வேணும்னா எடுத்துட்டுப் போங்கோ. எதுக்குக் கூப்ட்டாளோ என்னவோ!”

“அவருக்கா பைசாக்குக் கொற? இன்னும் நாலு பட்டிக்கி எறச்சியும் மீனுமா வாங்கிப் போட்டுட்டுத்தான் இருக்காராம். பேரம்பேத்திய ஒரு எட்டு வந்து பாத்ததுண்டாட்டி?”

“செரி, விடுங்கோ. செனம் போயி என்னான்னு பாருங்கோ. செல்வி வேற படபடத்துட்டே பேசுனா.”

மருத்துவமனை வாசலில் கேட்டதுமே அங்கிருந்த பெண் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். அடுத்து இங்கே என்னவோ என்று தோன்ற, பொறுமையாக நின்றேன். எதுவும் பேசாமல் மேலே செல்லும்படிக் கைகாட்டினாள். அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கான பராமரிப்பு அறை. நூற்றுக்கணக்கான கட்டில்கள். கருப்புத் துணிக் கண்கள். பெரும்பாலும் முழுக்க நரைத்தவர்கள். ஒவ்வொரு கட்டிலாகக் கடந்து செல்லும்போதும் அப்பாவின் சொற்கள் என் காதுகளுக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன. செல்விக்காக, சுதாவிற்காக என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

“அப்பா, இன்னும் ரெண்டு வாயி சாப்டுங்கப்பா. டாக்டர் என்னத்தான் ஏசுவாரு பாத்துக்கோங்க. நெதம் மீனு தான் குடுக்கச் சொல்லிருக்காரு. பச்சப்புள்ள மாறி அடம் புடிக்காதியோ,” என்று அதட்டிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

“அய்யே, தாத்தா, ஷேம் ஷேம். சாப்புடதுக்கு அம்மா கிட்ட ஏச்சு வாங்குகா,” என்று தன் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டே சொல்லிச் சிரித்தான் ஒரு சிறுவன்.

“போறும் மக்ளே. ஒமட்டிட்டு வருகு.” என்று மறுத்தார் அந்தப் பெரியவர்.

“ஒன்னும் செய்யாது, சும்மா சாப்டுங்கப்பா. கண்ணுக்கு பெலம் வேண்டாமா? மெனக்கெட்டு தெரச்சி வாங்கி கருத்தக்கறி வச்சிட்டுல்லா வந்துருக்கா ஒங்க பொண்டாட்டி.”

வெட்கத்துடன் தன் மனைவி பேரனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல, அந்தப் பெரியவர் அப்போது தன் மனைவியின் முகத்தைப் பார்க்க விரும்பியதைப் போல அங்குமிங்கும் அசைந்தார்.

“எங்கயும் போகல அம்ம, இன்னா வருவா,” என்று சிரித்தாள் மகள்.

அடுத்த கட்டிலில் இருந்த பெரியவரிடம் பேசிவிட்டுத் திரும்பிய சீருடை அணிந்த ஒருவரிடம், “அண்ணே, இங்க மாசானமுத்துன்னு ஒரு பேஷண்டு..” என்று கேட்டேன்.

சட்டெனக் கோவத்துடன், “என்ன ஆளுங்கய்யா நீங்க? இப்பிடி வட்டுகளயெல்லாம் வீட்டுல வச்சிப் பாக்கத் தெரியாதா? அந்தாளுக்கு யாரு நீங்க?” என்று என்னிடம் கத்தினார்.

“அது.. எனக்க அப்பா.”

“வெளங்கும், பின்ன, இந்த வாயி காட்டுனா பெத்த புள்ள கூட பாக்காமத்தான் ஆகும். என்னையே அடிக்கதுக்குல்லா நிக்காரு! பெரியாளுன்னு பாத்தாக்கும் விட்டது. பணத்திமிரு மயிரெல்லாம் ஊருல வைக்கணும்.”

“அண்ணே, மன்னிச்சிக்கோங்க. என்னாச்சின்னு ஒன்னும் எங்களுக்குத் தெரியாது. அவரு வந்தது கூட தகவல் கெடையாது. பின்ன…”

“ஒரே சலம்பல். நம்மகிட்டன்னு இல்ல, ஒராளு விடது இல்ல? ஒன்னு சொன்னா பொறும வேண்டாமா? இங்க என்ன,அவருக்க அடிமைகளா இருக்கு? ஒரு நாளைக்கி நூறு ஆப்பரேசனாக்கும் நடக்கு. இவரு பெரிய மைனருன்னா,அதுக்கு டாக்டரு இவரு சொல்லபடிக் கேப்பாராக்கும்?”

“மன்னிக்கணும் அண்ணே. நம்ம கூட இல்ல பாத்துக்கோங்க. அதாக்கும்..”

“இப்படி ஆளுகளுக்கு இப்பிடித்தான் நடக்கும். நாங்க பாக்கலயா? ஆடாத ஆட்டம் போட்ட எல்லாவனும் சுருண்டு கெடக்கத. நல்ல வேள, நீங்க வந்தியோ. இல்லன்னா, இந்தாளு நிச்சயம் எவன்ட்டயாம் அடி வாங்கிருப்பாரு.”

“போட்டும் அண்ணே, விடுங்கோ,” என்றபடி ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவரது கையில் திணித்தேன்.

“அட, பைசாக்காச் சுட்டி சொல்லல அண்ணாச்சி. மரியாத வேணும்லா? செரி, அந்தா கடைசி பெட்டுல இருக்காரு ஒங்க அப்பா. டாக்டரு இன்னிக்கி போலாம்னு சொல்லியாச்சி. பெரியவருட்ட ஒரு அனக்கமும் இல்ல. ஒன்னும் திங்காமக் கெடக்காருன்னு நர்சுமாரு சொன்னாவோ. போயி என்னான்னு பாருங்கோ.”

அப்பா அங்கிருந்தே என்னைப் பார்த்து விட்டார். அதே திமிரான முறைத்துக் கொண்டிருக்கும் முகம். பஞ்சு பொதிந்த பொமரேனியன் நாய்க்குட்டி போன்ற தலைக்கும் அந்தத் திமிரான முகத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லை. காலைக் கனவின் பெருத்த உருவம் உறுமியபடி என் கண்முன் வந்து சென்றது. ‘புடிச்சிக் கொண்டா மோனே.’ அந்த நாயின் மூர்க்கமான உறுமலின் ஊடே மருத்துவமனை வாசமும் சேர்ந்து கொண்டது. பல நேரங்களில் அவர் காட்டிய பல முகங்கள் ஒன்றன் பின் ஒன்றென என் முன் வந்துநின்றன. திறந்து கிடந்த வெள்ளைச் சட்டையினூடே எப்போதும் போல நிமிர்த்திய நெஞ்சு. அழுக்கேறியிருந்த வேட்டி. கீழே கிடந்த வெள்ளைச் செருப்பின் பெருவிரல் பகுதி நீலத் திட்டாகத் தெரிந்தது. கட்டிலின் ஒரு புறமாக சாய்த்து வைத்திருந்த தலையணையில் சாய்ந்து உட்கார்ந்து தனது கைவிரல்களில் சொடுக்கு விட்டுக்கொண்டிருந்தார். கால் மேல் கால் போட்டபடி பலத்த யோசனை. ஊரில் பலரும் அழைப்பதைப் போல அவர் பீமனே தான். இடது கண்ணில் கருப்புத் துணி. பீமனிலிருந்து திருதராஷ்ட்ரனாக. அவர் கட்டிலின் அருகே அந்த மூர்க்கமான உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. என்னை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என நினைத்தபடி ஒரு தயக்கத்துடன் சென்றேன். அவரது சிறிய போன் பாடிக்கொண்டிருந்தது. பக்கத்து கட்டிலில் இருந்த பெரியவர் திரும்பிப்படுத்திருந்தார். என்னைப் பார்த்ததும் மனமின்றி லேசாகத் தலையசைத்தார்.

அப்பாவின் கட்டிலருகே சென்று நிற்கவும் என் போன் அடித்தது.

“எண்ணே, போய்ட்டியா? அப்பாவப் பாத்துட்டியா?”

“இப்பதான் வந்தேன்,” என் குரல் கேட்டு அப்பா என்னை நேரிட்டுப் பார்த்தார். அப்போதுதான் பார்த்திருக்க வேண்டும். நான் அவர் முகத்தைப் பார்த்து நின்றேன். அவர் மெல்ல தலையைத் தாழ்த்திக் கொண்டு அமைதியாக இருந்தார்.

“எண்ணே, அம்மைட்ட ஒன்னு பேசிருண்ணே. என்ன இருக்க விடமாட்டுக்கா.”

“இரி, நான்…”

அம்மா அதற்குள் போனைப் பிடுங்கி விட்டாள்.

“மக்களு, அப்பாவப் பாத்தியா? அப்பாக்கு என்னாச்சி மக்களு…” என்ற அம்மா சிணுங்கி அழ ஆரம்பித்தாள். எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. எங்கிருக்கிறது இந்தப் பாசமெல்லாம். ஒரு மனுஷியாகக் கூட பொருட்படுத்தாத ஒரு ஆளுக்காக எப்படிப் பொத்துக்கொண்டு வருகிறது இந்த அழுகை.

“தெரில, இரி, நான் கூப்பிடுகேன்.”

“மக்களு, அப்பாவக் கூட்டிக் கொண்டோய் வீட்டுல விட்டுரு மக்களு. அவ்வோ ஒங்கூட வரவும் மாட்டா. கண்ணு தெரியா மக்களு?”

நாங்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் அப்பா. போனில் பாடிய பாடல் நின்றிருந்தது. முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை.

“எனக்கத் தலையெழுத்து மக்களு. எங்குடும்பம் செதஞ்சிக் கெடக்கதப் பாக்கணும்னு இருக்கு. நான் என்ன பாவம் செஞ்சேன் மக்களு? என்னால செல்விக்கும் கஷ்டம். ஒனக்கும் கஷ்டம். இந்தாளு ஒழுங்கா இருந்தா என்ன அடி வாங்குனாலும் என்ன கேட்டாலும் எம்பாட்டுக்கு உள்ளத செஞ்சிப் போட்டுட்டுக் கெடந்திருப்பேனே. அப்படி என்ன வீம்புன்னு கேக்கேன்? இன்னா, யாருமில்லாம நாய் மாதி தான கெடக்கா? என்ன சாப்ட்டாளோ என்னவோ! ஓராளு கிட்ட ஒன்னும் கேக்கவும் மாட்டா. அப்பாக்கு சாப்ட எதாம் வேணுமான்னு கேளு மக்களு. இல்ல, நீ போயி எதாம் வாங்கிட்டு வந்து குடு. கண்ணாப்பரேசன் பண்ணா என்னத்தக் குடுக்கணும் மக்களு? யார்ட்டயாம் ஒன்னு கேளு மக்கா. ஒன்னும் நெனைக்காம அப்பாவப் பாத்துக்கோ மக்களு. அம்மைக்கா சுட்டி.”

“எம்மா, நீ கொஞ்சம் சும்மா இரி. நா என்னான்னு கேட்டுட்டு கூப்புடுகேன்,” என்று துண்டித்தேன்.

அப்பா நிமிர்ந்து உட்கார்ந்தார். நான் கட்டிலின் அருகே சென்று நின்றேன். அசைவின்றி உட்கார்ந்திருந்தார். கைகளில் இறுக்கமாகப் பற்றியிருந்த அதே பழைய போன். செல்வி மீண்டும் அழைத்தாள். நானும் அசைவின்றி நின்றேன். இருவரில் யார் முதலில் பேசுவது என்கிற எண்ணம் வந்தாலும், அவரது பழைய முகங்களும் குரலும் துருத்திக் கொண்டு வந்து நின்றன.

அப்பாவை கைநீட்டி அடித்த அந்த நாள்.

“ஒரு பயலும் தேவையில்லல தாயளி மக்கா. போங்கல எனக்க வீட்ட விட்டு வெளிய. பிச்சக்காரப் பயக்கோ.அவனுக்க அம்மைக்க… தாயளி ஒரே வெட்டா வெட்டிப் போடுவேன் பாத்துக்கோ. அம்மையும் கொம்மையும். எச்சிச் சோத்தத் தின்ன நாயி. எனக்கு தூது விடுகாளா தூது?அப்பிடியே ஓடிரணும். அப்பங்காரன் என்னத்தயாம் சேத்து வச்சிருப்பான், புடுங்கிட்டு வா மவனேன்னு சொல்லி விட்டுருப்பா கண்டா….”

அடித்து விட்டேன். என் கைகள் நடுங்கிக் கொண்டுதான் இருந்தன. அவர் எந்த அதிர்ச்சியும் அடையாமல் வேட்டியை மடித்துக் கொண்டு என்னை திரும்ப அடிக்கப் பாய்ந்தார். அப்படியே அவரது நெஞ்சில் கை வைத்துத் தள்ளிக்கொண்டு போய் சுவற்றோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டேன். கைகளை வீசி என்னை அறைய முயன்று கொண்டேயிருந்தார். நான் உறுதியாக அவரை அழுத்திப் பிடித்து அவரது முகத்தைக் கூர்ந்து பார்த்தபடியிருந்தேன். அவரது ஒரு வீச்சு கூட என்னருகில் வரவில்லை. கைகள் மெல்ல தளர்ந்து விழ, என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். மூச்செறிய முடிந்த வரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். நான் தொடர்ந்து அவரது கண்களைக் கூர்ந்து பார்த்து நின்றேன். அவரது வார்த்தைகள் ஓய்ந்தன. என் கண்களை கடைசியாக சில நொடிகள் பார்த்தவர் தலையைத் தொங்கப் போட்டார்.

“ஒமக்க நாயின்னு நெனச்சீரோ? மரியாத கெட்டுறும் பாத்துக்கோரும்.”

எங்கள் கடைசி சந்திப்பும் பார்வையும் அந்த மருத்துவமனையின் நெடிகளினூடான மௌனத்தில் என் முன் வந்து சென்றது.

அப்பா தனக்குத்தானே ஏதோ மெல்ல பேசியதைப் போலிருந்தது. முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கட்டில் கம்பியைப் பிடித்து இன்னும் அருகே சென்றேன்.

“நா ஒன்னும் வெறும்பய கெடயாது பாத்துக்கோ. எவங்கிட்டயும் போயி நிக்கணும்னு இல்ல. பதினேழு லச்சமாக்கும் சேத்து வச்சிருக்கேன். கண்ணு செரியாவட்டும். மாசானத்தத் தேடி எத்தன வேரு வந்து நிக்கான்னு பாரு. வட்டிக்கி விட்டா எனக்கும் ஆச்சி, மாடனுக்கும் ஆச்சி. பின்ன, எசக்கி ஊர் மேயப் போய்ட்டால்லா? பொட்ட நாயி. அவளுக்கு என்ன சோக்கேடு வந்தோ என்னவோ! எவன் கிட்டயும் போயி நிக்கக் கூடாது. ஆமா.”

நான் சற்று அசைந்து நின்றபடி அவர் கவனிக்கிறாரா என்று பார்த்தேன். தொடர்ந்து தனக்குள் பேசிக் கொண்டிருந்தார். நான் திரும்பி அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் சென்றேன்.

“நீங்க மொதல்ல பில்ல கட்டி அந்தாள இங்கருந்து கூட்டிட்டுப் போங்க சார். வந்து சேருகு நமக்குன்னு. சை..”

“சார், மன்னிக்கணும், என்ன ஆச்சி? எவ்ளோ கட்டணும் கொஞ்சம் பாத்து சொல்லுங்க சார்.”

“வயசுக்கு ஏத்த மாதி நடக்காண்டாமா சார்? அவருக்கப்பையிலருந்த எல்லாத்தயும் கொட்டி எடுத்துட்டுப் போன்னு சொல்லுகாரு. நாங்க என்ன பிச்சையா எடுக்கோம்? இங்க ரொம்ப நல்ல எடம்னால பொறுத்துப் போறோம். எப்பவும் ஒரே மாதி இருக்காதுல்லா? மரியாத வேணும்லா சார்?”

“மன்னிச்சிக்கோங்க சார்.”

“நாங்களும் ஒன்னும் இங்க சும்மா ஓப்பி அடிக்கலல்லா? வேல செய்யதுக்கு சம்பளம். இப்பிடி கேக்கணும்னு இல்ல, என்னா? நானும் நல்லா நாக்கப் புடுங்க மாதி கேட்டு விட்டுட்டேன். அதுக்கப் பொறவாக்கும் சத்தங்காட்டாம கெடக்கது. பெரிய இவரு மாதி தூக்கி எறியாரு. இன்னும் ஆயிரம் ரூவா கெட்டணும் சார். நீங்க கட்டிட்டு கூட்டிட்டுப் போங்க. வீட்டுல நல்ல புத்தி சொல்லுங்க. வயசானா சின்னப்புள்ள புத்தின்னு சொல்லது சும்மால்ல போல.”

அப்பாவைத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் புலம்பிக் கொண்டிருந்தார்.

வெளியே கூட்டிக்கொண்டு போவதற்கான சீட்டை வாங்கி விட்டு வந்து அப்பாவின் கட்டிலின் அருகே சென்று நின்றேன். மீண்டும் அமைதியாக இருந்தார். அவர் பேசப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்த விஷயம் தான். கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பாத்திரத்தை கட்டிலின் அருகே வைத்தேன்.

“பேரம் பேத்திங்க ஆசையா குடுத்து விட்டது. சாப்டுங்க,” என்றேன். என்னையறியாமல் குரல் தழுதழுக்க அழுகை வந்துவிட்டது. அவரிடம் இன்னும் அசைவில்லை.

“பில் முடிச்சிட்டேன். வீட்டுக்குப் போலாம்னா எங்கூட வாங்க. இல்ல, தங்கச்சி வீட்டுக்குப் போனும்னா காரேத்தி விடுகேன். ஊர்ல போயி தனியாக் கெடந்து…..”

நீண்ட பெருமூச்சு விட்டவர் சட்டென பெரும் ஓலமிட்டுக் கதறியழ ஆரம்பித்தார். கைகால் அதிர என்ன செய்யவென எதுவும் தோன்றாமல் அப்படியே நின்றேன். ஏதோ சொல்லிக்கொண்டே அழுதார். ஆனால், இப்போது திமிரில்லை. சட்டெனக் கனிந்த ஒரு முகம். கனிந்த ஒரு அழுகை.

“எனக்க மாடன் பட்டினியாக் கெடப்பானே. நாலஞ்சு நாளாச்சே. மாடா, மக்களு. என்னத்தத் தின்னியோ? அப்பன் இன்னா வந்திருவேன் மக்களு. தெருவுல அத்துட்டுப் போயிராத மக்களு. எசக்கி போன மாதி போனா நீயும் பீயத்தான் திங்கணும். அப்பா இன்னா வந்திருவேன். மாடா…ஒரு பயலயும் நம்பக் கூடாது மக்களு. பீயத் திங்கப் போய்ராத, வெட்டி ஒரத்துக்குக் கொண்டு போய்ருவானுவோ. சொன்னாக் கேளு மக்களு, அப்பா இன்னா வாரேன்..மாடா..”

செல்வி அழைத்தாள். துண்டித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். ஊருக்கு அழைத்தேன். பக்கத்து வீட்டு அண்ணனிடம் பிரெட்டும், சில பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கி மாடனுக்கருகில் எறியச் சொன்னேன். அந்த நாய் என்னைக் கூர்ந்து பார்த்தபடி இன்னும் உறுமிக்கொண்டு நின்றது.

***

– சுஷில் குமார்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *