சமகாலத் தமிழ்ப் புனைவில் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகள் ஏற்படுத்தியிருக்கும் இடையீடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதமையவாதம், சுய அனுபவம், அன்றாடம் என சலிக்கும் யதார்த்தவாதக் குவியல்களுக்கிடையே, தமிழ்ப்புனைவு வெளியில் அவை ஒரு விபரீதத்தையும் திடுக்கிடலையும் நிகழ்த்தியுள்ளன. நமது புழங்கெல்லை என்னும் பரிதாபமான வரையறையை கேலி செய்தபடி வாசிப்பினூடாக அறிவியல், தத்துவம், வரலாறு, என சகல அறிவுத்துறைகளோடும் மேலும் நுகர்வியத்தின் புதிய பண்பாட்டு மற்றும் அறிவுக் களங்களோடும் மூர்ச்சிக்கும் புனைவுச் சாகசங்களை அவை பரிசோதிக்கின்றன. வாசிப்பே உடலாகி அதனூடான பல்வேறு பிரதிகளையே தன் எல்லையற்ற நிலமாக்கும் ஆற்றல் அப்புனைவுகளுக்கு உண்டு. ’அறிவார்த்தம், பரிசோதனை, கனவுத்தன்மை, புனைவதீதம், தடையற்ற சுதந்திரம்’ இக்கதைகளின் தன்னியல்பான அழகுகள். புனைவெழுத்தை கவிதையின் மொழிபுகளுக்கு உருக வைக்கும் அறிநிலைகள் அவற்றில் உண்டு. பழமையடைந்து வரும் ‘அன்பு’, ’நீதியியல்’ போன்றவற்றின் காலாவதித் தேதியை அறிவித்தபடி, வரலாற்றால் ஒட்டுமொத்தமாக வெறுமையாக்கப்பட்டிருக்கும் மனிதனை அவனது உயிர்க்கூறான வேட்கை, வன்முறை, நுகர்விச்சை, இயல்பூக்கங்களோடு அவை பரிசீலிக்கின்றன.
’கனவு மிருகம்’, ’துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என இரு புனைவுத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இதற்குப் பின்னர் கல்குதிரையில் ‘பிரமிடுகளை அளக்கும் தவளை’ வெளியானது. அது தமிழில் நிகழ்ந்துள்ள ஒரு மாயாற்புதம் என்றே கூறலாம். புவியீர்ப்புக்கு எதிராகவும் விசைகொள்ளும் ஆற்றலும் வரலாற்றுக்குள் பல்வேறு இணைப்பிரதிகளினூடாக மயங்கிச் செல்லும் அறிவார்த்தத்தின் பெரும்சுழல்களும் அதில் உண்டு. கவிதைகளும் எழுதியுள்ளார். இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு அறிவியல், தத்துவம் , இசை, சினிமா, மேலும் நுர்வியத்தின் பல்வேறு புதிய புலங்கள் என பல்வேறு தளங்களில் பரிச்சயமும் தீவிரமும் கொண்டவர். கோயம்பத்தூருக்கு அருகாமையில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் சிற்றூரில் பிறந்தவர். பணி நிமித்தமாக பெங்களூரில் குறிப்பிட்ட காலங்கள் இருந்துள்ளார். தற்போது ஓசூரில் ஒரு நிதிநிறுவனத்தில் பணிபுரிகிறார்.

நன்றி- இடைவெளி இதழ்
நேர்கண்டோர் : பிரவீண் பஃறுளி, ராஜாஜி, கார்த்திக் பாலசுப்பிரமணியன், சிவ செந்தில்நாதன்

கே : உங்களுடைய வாசிப்பு, இலக்கிய அறிமுகம், எழுதத் தொடங்கிய சூழல் குறித்து சொல்லுங்கள்.
வி : என்னுடைய ஆர்வம் முதலில் கிரைம் நாவல்களில் இருந்து துவங்கியது. எனது அத்தை பையன் ஒருவர் நாவல் வாசிப்பார். அதுவும் ரகசியமாகத்தான். மாமாவுக்கு நாவல் படிப்பது பிடிக்காது. எனவே அவர் நாவல் வைத்திருக்கும் பெட்டியையே ரகசிய பெட்டி போன்று மறைத்து வைத்திருப்பார். விடுமுறைக்கு செல்லும் போது படிப்பதுதான். இது நான்காம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்தது. நிறைய துப்பறியும் நாவல்கள் படித்திருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கும் போது நானே துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறேன். அனைத்தும் தொலைந்துவிட்டன. அப்போது எங்கள் தெருவிலேயே, ஒருவர்தான் நூலக அட்டை வைத்திருந்தார். பள்ளியில் போட்டிகளில் பங்கேற்பதற்காக, அவர் மூலமாக நூலகத்தில் புத்தகங்கள் எடுத்து வந்து வாசிக்கத் துவங்கினேன்.
இதைதாண்டி, தீவிர வாசிப்பு என்றால் பெரியாரை வாசித்ததுதான். எங்களுடைய குடும்பமே தி.மு.க. குடும்பம்தான். அதனால் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் குறித்த பேச்சுகள் இயல்பாக நடக்கும். அப்பா பெரியாரை வாசிப்பார். நான் முழு தொகுதிகளையும் படித்திருக்கிறேன். பின்பு விவேகானந்தரையும் முழு தொகுதியாக படித்திருக்கிறேன். பின்பு ஜெயகாந்தன். ஜெயகாந்தனை படித்துக் கொண்டிருக்கும் போதே சுந்தர ராமசாமியின் “காற்றில் கலந்த பேரோசை, விரிவும் ஆழமும் தேடி” ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுப்புகளைப் படித்தேன். அதிலிருந்து ஜெயகாந்தனை படிப்பதை நிறுத்திவிட்டேன். சுந்தர ராமசாமியைப் படித்தால் சிறுபத்திரிக்கையை பற்றிய பிரக்ஞை வரத்தானே செய்யும். அதற்குப் பின்பு விகடன், குமுதம் ஆகியவற்றின் மீது இருந்த நாட்டம் எல்லாம் போய்விட்டது. காலச்சுவடு காலாண்டு இதழாக வந்த காலத்திலேயே வாசித்திருக்கிறேன். தீவிர இலக்கிய வாசிப்பும், சிறு பத்திரிக்கை தொடர்பும் அப்படி ஆரம்பித்ததுதான்.

கே: வாசிப்பு தீவிரமடைந்தபோது இளம்பருவத்தில் ஏற்பட்ட கருத்தியல் சார்ந்த ஈர்ப்புகள், உந்துதல்கள்.. இலக்கியம் சமூக அசைவை ஏற்படுத்தும் என்பது போன்ற நம்பிக்கை…

வி : அப்போதெல்லாம் நான் ஒரு நாத்திகனாக இருந்த கால கட்டம். இன்றுவரை அது தொடர்கிறது (ஆனால் அரைகுறையாக). பெங்களூருவில் இடதுசாரிகளின் தொடர்பு இருந்தது. அப்போது சமுக மாற்றம் இலக்கியத்தின் மூலம் நிகழும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால் சமூக அரசியல் சித்தாந்தங்கள் மனதில் ஆழமாக பதிந்தது. திமுக என்பதால் இடதுசாரியத்தை உள்வாங்க முடிந்தது. நான் பத்தாவது படிக்கும் போது ஆர்.எஸ்.எஸ் கேம்ப்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் பேசுவது பொய்தான் என்பது அப்போதே தெரியும். ஒரு பத்தாவது படிப்பவனுக்கே அது பொய் என்று தெரியும் போது அங்கு இருக்க இயலவில்லை. விவேகானந்தரைப் படித்தாலே அந்தப் பார்வை உண்டாகிவிடுகிறது. ஏற்கனவே பெரியாரை படித்ததினால் என்னால் அதில் ஒன்ற முடியவில்லை. பின்பு மார்க்ஸ் படித்தபின்பு, இருந்த கொஞ்சமும் அகன்று போய் விட்டது. அந்தப் பருவமே எடுப்பார் கைப்பிள்ளைத்தனமானது.
கே: தொண்ணூறுகளில் ஓர் உரையாடல் உருவானது. அதில் புனைவில், யதார்த்ததை கடந்து வேறொரு பிராந்தியத்தியத்திற்குள்ளாக நுழையும் வேட்கை இருந்தது. கல்குதிரை, கோணங்கி, அன்றைய எஸ்.ரா., பிரேம் ரமேஷ் போன்றோர், இலத்தீன் அமெரிக்க இலக்கிய வருகை இப்படி ஒரு சூழல் . மற்றொரு பக்கம் கோட்பாட்டு ரீதியான உரையாடல்களிலும் மார்க்சியத்தை கடந்து சிந்திப்பது என்பதைப் பற்றி பேசினார்கள். அது புதிய மனச்சூழலை உண்டாக்கியது. வாசிப்பினூடாக இவற்றுடன் ஒரு தொடர்பு இருந்ததா?
நான் வாசிக்கும் போதும், எழுதப் பழகும் போது யதார்த்த தளம் மீறிய புனைவுகள் மீது ஈர்ப்பு இயல்பாகவே இருந்தது. கிரைம் நாவல்களில்கூட மாயக்கதைகளுக்கான கூறுகள் அதிகம் இருக்கும். நபக்கோவ் சொல்வது போன்று, ஒரு சிறுவனை ஓநாய் துரத்திக் கொண்டு வருகிறது என்று சொல்லும் போது கதை பிறக்கவில்லை. ஓநாயே துரத்தாத போதும், பின்னால் ஓநாய் துரத்துகிறது என்று சிறுவன் சொன்னபோதுதான் இலக்கியம்/புனைவு பிறக்கிறது. கதை சொல்வது என்பது யதார்த்தம் கிடையாது. கதையே யதார்த்தம் கிடையாது. நாம் அன்றாடம் பார்க்கும் சலித்துப்போன யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட ஒரு உலகம்தான் புனைவின் இடமாக இருக்கும்.
என்னுடைய ஊர் கோயம்பத்தூரை அடுத்த ஒரு கிராமம். அங்கே இலக்கியத்திற்கான எந்த இடமும் இல்லாத சூழல். எனக்கு தொண்ணூறுகளில் நடந்த விவாதங்களுடன் எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை. நான் கோயம்பத்தூர் வந்து ’பைசைக்கிள் தீவ்ஸ்’ பார்ப்பதற்கே இருபது வயது ஆகிவிட்டது. எப்படியோ நான் காலச்சுவடுவுடன் பரிச்சயம் கொண்டேன். அப்போது தோப்பில் முகமது மீரான் சாகித்திய அகாடமி விருது வாங்கிய செய்தியை வாசித்த பிறகு அவரை வாசித்தேன். அவ்வளவுதான் எனக்கும் தொண்ணூறுகளுக்கும் உண்டான தொடர்பு.
எல்லாவற்றின் மீதான விருப்பம் உண்டாவது போன்று கோட்பாட்டின் மீதும் நாட்டம் ஏற்பட்டது. முக்கியமாக ஃபூக்கோ மீது. அவருடைய Discipline and Punish, Archeology of Knowledge ஆகிய இரண்டையும் நான் வாசித்திருக்கிறேன். என்னுடைய வாசிப்பு அனைத்தும் தனிமையில் நடந்ததுதான். ஒரு குழுவோடோ, அல்லது இயக்கத்தோடோ என்னுடைய வாசிப்பு நிகழவில்லை. தமிழ்ச்சூழல் என்பதை விட, தனிமையான வாசிப்பின் மூலமாகதான் நான் பல இலக்கிய மூலங்கள், பிற அறிவுத்துறைகளோடு குறைந்த அளவு பரிச்சயம் கொண்டேன். கனவு மிருகம் என்ற கதையை வெளியிட்ட போதுதான் கல்குதிரை தொடர்பு ஏற்பட்டது. எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் கோணங்கியின் பாழி நாவலை வாசித்திருக்கிறேன்.
சென்னை வந்த பிறகு கோட்பாடு வேண்டாம் தீவிர இலக்கியமே போதும் என்ற மாற்றம் வந்தது. கோட்பாடுகளை விட்டு வெளியே வந்துவிட்டேன். இங்கு பேசப்படும் கோட்பாடுகள் அங்கு மேற்கில் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டன. நாம் பேசுகிற பின்நவீனத்துவத்தை இங்கு உள்வாங்கிக் கொள்வதற்கு முன்பதாகவே அது அங்கு பழையதாகிவிட்டது. Charles Jenks தான் ஐரோப்பாவில் ஒரு குடியிருப்புக் கட்டட இடிப்பை முன்வைத்து பின நவீனத்துவத்தும் இந்த நாளில், இந்த நேரத்திலிருந்துதான் தொடங்குகிறது என்றார் இல்லையா. அவரே இரண்டாயிரத்திற்குப் பிறகு ’what is then post modernism’ என்று ஒரு கட்டுரை எழுதுகிறார். அது தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதன் பார்வை மாறுவதைப் பார்க்கலாம். இந்த முரண்பாடுதான் என்னை கோட்பாட்டிலிருந்து வெளியேற வைத்தது.

கே: உங்கள் கதைகளில் வரும் மனிதன் எந்த சாராம்சத்தையும் விரும்பாத, உருவாக்காத, தனக்கு முன் இருக்கும் தொடர்ச்சியில் இருந்து துண்டித்துக் கொள்கிறவனாக, வரலாறு நினைவு என்கிற சுமையில் இருந்து விலகிக் கொள்கிறவனாக, ஒரு நுகர்வாடியாக, அறிவுஜீவித தனிமை கொண்டவனாக, இருக்கிறான். அதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வி : நவீனத்துவம் என்பதே நீங்கள் சொல்வது போன்று மரபு தொன்மம் என்பவைகளில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்கிற ஒன்றுதான். தன்னை துண்டித்துக் கொள்வதே நவீனத்துவத்தின் அடையாளமாக இருக்கிறது. நாம் பிறந்த ஊர் ஒன்று, வேலை பார்ப்பது நகரத்தில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில். எங்கள் ஊரிலேயே அமேசானின் கிடங்கு இருக்கிறது. அங்கு வேலைப் பார்ப்பவனுக்கு நன்றாகத் தெரிகிறது அது வெளிநாட்டு நிறுவனம் என்று. உலகமயத்துக்குப் பின்பு உள்ளூர், நகரம் என்ற தன்மைகள் குழம்பிவிடுகிறது. உள்ளூரே உலகலாவிய தன்மை ஒன்றைக் கொடுத்துவிடுகிறது. இச்சூழலில் பின்நவீனத்துவ மனிதனுக்கு இது மிகவும் எளிதாகிவிடுகிறது. மரபை கைவிட்டு அவன் தன்னை இதனோடு இலகுவாக இணைத்துக் கொள்கிறான். இந்தச் சூழலில் அவன் பொருந்தி போகிறான். மேலும் அது கொடுக்கும் சவால்களையும் அவன் ஏற்றுக் கொள்கிறான். இந்த disconnectedness நம்மை விட இனி வரும் தலைமுறைக்கு அதிகம் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இப்போது உலகந்தழுவிய ஒரு popular culture வந்துவிட்டது. குறிப்பாக ஹாலிவுட் படங்கள். அர்னால்ட் ஸ்வாசினிகர் இங்கு இலட்சிய பிம்பமாக இருந்தார். மேற்கில் பெரிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களின் புத்தகங்களை படிக்க நேர்கிறது. உலகளாவிய தன்மை நமக்கு வந்துவிடுகிறது. உலகளாகளாவிய ஒரு நுகர்வு நமக்கு சாத்தியப்படுகிறது. இன்றைய மனிதனின் மாபெரும் கனவு, இலட்சியம் எல்லாமே தன்னை ஒரு மிகச்சிறந்த நுகர்வோன் ஆக்கிக்கொள்வதுதான் என நான் நினைக்கிறேன்.
இன்று எதிலும் நம்பிக்கையும் பிடிப்பும் கொள்ள முடியாது. ஒரு மதிப்பீடு சரி என்று பின்பற்றிப் போனால் அது பத்து வருடங்களுக்குக் கூட தாக்குப் பிடிக்காது. பத்து வருடம் என்பதே ஒரு பெரிய காலகட்டமாகிவிட்டது. இன்று பல பொருள்கள் நமது வாழ்நாளிலேயே நம் கண் முன்னே தோன்றி, வளர்ந்து, மறைந்தும் போய் விடுகின்றன என்கிறார் போத்ரியா. ஆனால் பிரமிடு அப்படிப்பட்ட ஒன்று அல்ல. பிரமிடுகளுக்கு முன் தலைமுறை தலைமுறைகளாக மனிதர்கள் தோன்றி அதை பார்த்துக்கொண்டே வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள். ஆனால் நம் கண் முன்னே உள்ள பொருள்கள் நம் வாழ்நாளில், குறிப்பிட்ட பத்தாண்டுகளிலேயே தோன்றி மறைந்து போகின்றன. பிரமிடுகளை பராம்பரியத்தோடு, தொன்மங்களோடு, மத நம்பிக்கையோடு இணைத்துப் பார்க்க முடியுமா அல்லது பெரிய இலட்சியங்கள்! இன்னும் கொஞ்சம் ஆழமாக இதனுள் போக வேண்டும்.
எந்த ஒரு தத்துவார்த்த சிந்தனையோடும் மனிதன் நின்றிருந்தால் இவ்வளவு தூரம் அவன் வந்திருக்க முடியாது. இப்படியான முரண்களோடு நடக்கக்கூடிய தாவலே மனிதனை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கிறது. ‘கடவுளின் இறப்பு’ என்று நீட்ஷே சொல்கிறார் இல்லையா? ஆனால் அது ஹெகல் சொன்னதாக நான் துணை நூலொன்றில் வாசித்த நினைவு. வரலாறு இல்லாமல் ஒரு காலத்துக்குள் போக வேண்டும் என்ற ஆசை ஐரோப்பாவில் இருந்தது. அப்படியொரு கற்பனை செய்த ஆள் தான் மார்க்சும் கூட. நமக்கு வரலாறு பற்றிய சிந்தனை இருந்திருந்தாலும் நமக்கு வேறு முக்கியமானவையே பிரதானமானவையாக இருந்திருக்கின்றன.

 

கே: உங்கள் கதைகளின் தூல நிலப்பரப்பு ஒரு ஹைப்பர் பெருநகரமாக உள்ளது. அது வேர்களற்று மேல்பரப்பில் இயங்குவதாக உள்ளது. அதில் இருக்கும் வேடிக்கைகள், கேளிக்கைகளை துய்த்துவிட வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. அதனோடு அதன் உள்ளார்ந்த வெறுமையும் சொல்லப்படுகிறது. உங்கள் புனைவுகளில் இயங்கும் இந்த பெருநகரப் பரப்பு சார்ந்த மனநிலையை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

வி :என்னதான் நான் கிராமத்தில் பிறந்திருந்தாலும் நமக்கு என ஒரு ஆளுமை இருக்கிறதல்லவா. அது எனக்குள் முழுமையாக பரிணமித்தது பெங்களளூர் வந்த பிறகுதான். பெங்களூருக்கு ரயில் ஏறும் போது இந்து நாள் இதழில் உம்பர்ட்டோ ஈக்கோவின் முழுபக்க நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். பாண்டிச்சேரிக்கு வந்து உரையாடுகிறார் அவர். உம்பர்ட்டொ ஈக்கோ என்ற பெயரை சிறுபத்திரிக்கைகளில் கேள்விபட்டிருந்தாலும் இத்தனை நாட்களாக இப்படிப்பட்ட ஒரு மனிதனை நாம் வாசிக்காமல் போனோமே என்று தோன்றியது. பெங்களூரு வந்தவுடன் நான் முதலில் வாங்கிய நாவல் ஈக்கோவின் நாவல்தான். அப்போது அது ஒரு மாபெரும் கனவாக இருந்தது. ஒரு சிறிய உலகத்தில் இருந்து மற்றொரு பெரிய உலகத்திற்கு நகரும் மலைப்பு இருந்தது. நான் பெங்களூரு சென்று டைம்ஸ் ஆஃப் இண்டியா படிப்பேன் என்று மகிழ்ச்சியோடிருந்தேன். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது, ஆங்கிலத்தில் அது பழைய தினத்தந்தியைவிட மிக மோசமான பத்திரிக்கை என்று.
மேலும் பெருநகரங்கள் கொடுக்கின்ற சுதந்திரம் அளப்பரியது. இதுவரை இந்திய சமூகம் அனுபவித்திராத சூழ்நிலை அது. இந்தப் பக்கத்தில் ஈரானிய குடும்பம் இருக்கும். அந்தப் பக்கம் வேறொரு கலாச்சாரத்தை சார்ந்த குடும்பம். ஒரு குறிப்பிட்ட அயல் மக்களோடு மாத்திரமே பேச முடியும் என்கிறபோது ஆங்கிலத்தில் உரையாடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு connectedness நமக்கு உண்டாகிறது. அது சென்னையில் அதிகம் கிடையாது. பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் அதற்கு வாய்ப்பு அதிகம். திருவனந்தபுரம், சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இல்லாத இந்த வாய்ப்பு அங்கு இருக்கிறது. முதலில் அந்த நகரத்தை உள்வாங்குவதே சிரமமாக இருந்தது. நகரத்தின் டிராஃபிக் எனக்கு அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அவ்வளவு வாகனங்களுக்கு மத்தியில் நான் வண்டி ஓட்டியதே கிடையாது. அவ்வளவு வாகனங்களை பார்ப்பது, பாலத்தின் மீது இருந்து அந்த டிராஃபிக்கை பார்ப்பது என்பது பிரமிப்புடன் என்னுள் ஒரு கிளர்ந்தெழலைச் செய்தது. கிராமப்புரத்தில் இருந்து பெருநகரத்தில் தொலைந்து போதல் என்று இருக்கிறதல்லவா. அதுதான் என்னுடைய கதைகளாக மாறியிருக்கின்றன. இங்கே சர்வ சுதந்திரம் இருக்கிறது. யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் பழகலாம். உங்கள் சாதியோ, மொழியோ அல்லாத ஆட்களோடு கூட நீங்கள் நெருங்கிய நண்பர்களாகிவிடலாம். வேறு மாநிலத்தில் இருந்து வந்து சேர்ந்தவர்கள், வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் உங்கள் காதலிகளாக இருப்பார்கள். யாருடனும் நிரந்தரமாக பிணைந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாருடனும் கொக்கிகளில் தொங்க வேண்டிய அவசியமில்லை. நாம் தனித்தனியாக தொங்கிக் கொண்டிருக்கலாம்.

 

கே: ஆனால் இதில் உலகமயம் முதலில் ஒரு வாய்ப்பை, ஒரு பரிசை வழங்குகிறது. பின்னர் திடீர் என்று அது பறித்துக்கொள்ளப்படுகிறது . இந்த முரணை எப்படிப் பார்க்கிறீர்கள்.

வி :தொண்ணூறுகளுக்கு பின்பான தலைமுறைக்கு பெரிய சவால் என்பது இந்த நிச்சயமின்மையை எதிர்கொள்வதுதான். தொண்ணூறுகளின் அலைக்கு பின் வந்தவர்களுக்கு வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றதாகிவிட்டது. இப்போது ஒருவர் ஒரு குறுகிய காலத்துக்குள் வெவ்வேறு வேலைகளுக்கு மாறவேண்டியிருக்கிறது. தனது துறைகளையே மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கிறது. எதிலும் நிச்சயமில்லாமல் இருப்பது இந்த தலைமுறையின் பிரத்தியேகமான இயல்பு. தன் உறவுகளோடு நிச்சயமில்லாமல் இருப்பது, தனது வேலையில், தன்னுடைய பொருளாதார வாய்ப்புகளில் நிச்சயமில்லாமல் இருப்பது. இது ஒரு பெரும் அயர்ச்சியை, பயத்தை உண்டாக்குகிறது.
இந்த நிச்சயமின்மை மூலதனத்தால் உண்டானதுதான். உலக அளவில் மூலதனத்தின் ஒரு பெரும் சுழற்சி, அதன் தீவிரம் தான் இந்த நிச்சயமின்மையை உண்டாக்கியிருக்கிறது. நானும் இதனுடைய ஒரு விக்டிம்தான். மதிய உணவை எடுத்துக்கொண்டு காலையில் நீங்கள் பணிக்குப் போகும்போது ஒருவர் திடீரென்று கூப்பிட்டு உங்களுக்கு வேலை இல்லை என்றால் இப்படி இருக்கும். சென்ற தலைமுறையில் தொழிற்சங்கம் இருந்தது. எளிதாக பணி நீக்கம் செய்யமுடியாது.
எங்கள் அப்பா ஒரு மில்லில் வேலை செய்தார். ஸ்ட்ரைக்கில் கலந்துகொண்டார் என்பதற்காக விளக்கம் கேட்டு கடிதம் வரும். பின்னர் 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்பார்கள். சஸ்பெண்ட செய்வார்கள். அதற்கொரு கடிதம் வரும். ஸ்ட்ரைக் செய்தவர்கள் விளக்கம் கொடுத்து நிதானமாக பதிலளிப்பார்கள். அதற்கொரு பதில் கடிதம் வரும். இப்படி கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருப்பார்கள். இப்படி நூறு நூற்றைம்பது கடிதங்களாவது என் அப்பாவிடம் இருக்கும். நிதானமாக எல்லாம் நடந்தன.
ஆனால் நம்மைப் போல ஒரு மூடுண்ட சமூகத்திற்கு உலகமயமாக்கல் ஒரு பெரிய திறப்பை அளித்துள்ளது. அதனை மறுதலிப்பதை விட அதில் என்ன கூறுகள் உள்ளன என பரிசீலிப்பது நல்லது. அது கொடுக்கும் பணத்தை நாம் வீடாகவும், காராகவும், சாதனங்களாகவும் மாற்றிக் கொண்டு ஆனால் அதை அப்படியே மறுதலிப்பது என்பது நியாயமாகப் படவில்லை.

 

கே :உறவுகளில் உள்ள நிச்சயமன்மை குறித்தும் உங்கள் கதைகளில் இருக்கிறது. உறவுகளில் நேர்ந்துள்ள அழுத்தங்கள். தந்திகள் கதையில் அந்த மனைவி அவனை விட்டுச் சென்றுவிடுகிறாள். அதிலும் அந்த அழுத்தம் இருக்கிறது. ’உடைந்து போன பூர்ஷ்வா கனவில்’ அந்த அழுத்தம் அப்படியே நீடிக்கிறது. ..

வி :நான் பார்த்தவரை நம் இந்தியச் சமூகத்திலேயே கேள்விப்படாத பல புதிய பரிமாணங்கள் இன்று உறவுகளில் உருவாகியிருக்கிறது. நான் நேரடியாகப் பார்த்த விஷயங்களையே சொல்கிறேன். நம் ஊரில் கணவன் மனைவி சண்டை போட்டால், மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போவது வழக்கம். அண்ணன் தம்பி இருந்தால் அவர்கள் வீட்டுக்கும் போகலாம். பெங்களூர் மாதிரியான நகரத்தில் சண்டை வந்தால், ஒரு பத்து நாளைக்கு ஹாஸ்டலில் இருந்துட்டு வருகிறேன் என்று பெட்டியைத் தூக்கிவரும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அங்கு சென்று ஒரு லேடிஸ் பிஜி யில் தங்கிவிட்டு, அப்புறம் சமாதானம் ஆனபிறகு திரும்பி வருவார்கள். இதை நம் மரபிலே பார்க்கவே முடியாது. உன்னோடு வாழ்வதற்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருக்கு, நான் போய் பத்து நாட்களுக்கு வெளியில் தங்கிவிட்டு வருறேன் என்ற சூழல் சாத்தியமாகி இருக்கிறது. பெருநகரம் அளிக்கும் சாத்தியங்கள். அங்கு பல உறவுகளுக்கான சாத்தியங்கள் இருக்கிறது. ஆண் பல பெண்களுடனோ அல்லது பெண் பல ஆண்களுடனோ உறவுகளில் இருப்பதற்கோ அல்லது தங்களுடைய சமாதானங்களைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்புகளை இந்தச் சுதந்திரம் வழங்கி இருக்கிறது.

கே : இன்று உருவாகியிருக்கும் ஒருவித இடைநிலை எழுத்தில் சலிக்கும் மனித பரப்பாகவும் , தேய்வழக்கான அன்பு, நீதியியல், மனித உணர்ச்சிக் கூறுகளை உருக விடுதல் என்பது ஒரு தன்மையாக இருக்கிறது. இந்த இடைநிலை எழுத்தில் வண்ணதாசன், அசோகமித்திரன் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் பிரதியெடுக்கப்படுகிறார்கள். உங்கள் கதைகளில் இக்கூறுகள் முற்றிலும் நீக்கம் செய்யப்பட்ட தன்மை இருக்கிறது. உங்கள் கதைகளில் மனிதனின் வேட்கை, விலங்குத் தன்மை என்பது ஒரு திறந்த ஆயுதம் போல கிடக்கிறது. இது குறித்து..

வி : அன்புங்கிறது டீச்சிங்தான். இயல்பாகவே மனிதன் வன்முறையான ஆள்தான். அதனால்தான் நுகர்வு கலாச்சாரம் அவனுக்கு மிகவும் பொருந்திப்போகிறது. அவனுடைய இயல்பான குணத்துக்கு நுகர்வு என்பது சரியாக இருக்கிறது. நான் எல்லாத்தையும் அனுபவிக்கணும் என்ற உந்துதல் இருக்கிறது இல்லையா, இது அவனுக்குப் மிகவும் பொருந்திப் போகிறது. அன்பு, கருணை எல்லாம் கற்பிக்கப்படுவதுதான். மொராலிட்டி இஸ் என் ஓல்டு சப்பெஜ்ட். புதிய மொராலிட்டியை நாம் கொண்டு வரவேண்டும், அதைப் பற்றிச் சிந்திக் வேண்டும். பழைய நீதிகள் இன்று குடும்ப அமைப்பிலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். யாரையும் நம்ப வேண்டாம் என்றுதான் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். யாரையும் நம்பாதே என்று குடும்பத்தில் சொல்லும் போக்கு ஒரு பெரிய வீழ்ச்சிதானே.

விடுதலை அடைந்து விவசாய சமூகத்திலிருந்து கொஞ்சம் நெகிழ்ந்து தொழில்மயத்திற்குள் வருவதற்குள்ளாகவே, சேவைப் பொருளாதாரம் நமக்கு வந்துவிட்டது. இதை சேவைப் பொருளாதாரம் என்றும் சொல்ல முடியவில்லை. தொழில்மய பொருளாதாரம் என்றும் சொல்ல முடியவில்லை. விவசாய பொருளாதாரம் என்றும் அழைக்க முடியவில்லை. சுந்திரத்துக்குப் பின் இந்தியா அடைந்த வேகம் நாம் சீராக உளவாங்குவதற்குள்ளாகவே எல்லாம் வந்து குவிந்து விட்டது. இதில் அன்பு, கருணை, நீதியியல் போன்றவற்றை நாம் பொருட்படுத்தினால், அவை தொன்று தொட்டு இருந்து வருபவை.
மேலும், துயர் நிரம்பிய மனிதன் எல்லாக் காலத்திலும் பயங்கர வன்முறையான ஆளாகத்தான் இருந்திருக்கிறான். மனிதனுக்கும் அசேதனங்களுக்குமான உறவு முக்கியமான ஒன்று . Georg simmel தனது philosophy of money என்ற நூலில் சரியாகச் சொல்லியிருப்பார். இவர் முக்கியமான ஜெர்மானிய சமூகவியலாளர். மார்க்ஸின் சமகாலத்தைச் சேர்ந்தவர். மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கு மதிப்பை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான் பொருள்களை உற்பத்தி செய்கிறான். அந்தப் பொருள்களை எவ்வளவு தூரம் விலக்கி வைக்கிறானோ, அவ்வளவு தூரம் அந்தப் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. அதை அடைவதுதான் வாழ்க்கையின் மதிப்பாகவும் இருக்கிறது என்று அவர் சொல்வது அசேதனங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான திறப்பு. நாம் எல்லோருமே பொருள்களோடு பிணைப்பாக இருக்கிறோம். பொருள்கள் இல்லையென்றால் வாழ்க்கையே போராகிடும் என்று நினைக்கிறோம். நாம் இப்போது இந்த இடத்துக்கு வந்துவிட்டோம்.

 

கே : உங்கள் கதைகளின் புறவய சூழலை அமைக்கும் கருப்பொருள்கள், உபயோக வஸ்துகள் கூட வாழ்புலத்திலன்றி, வாசிப்பின் வழி சேகரமான பல்வேறு பிரதிகள், திரைப்பட மாந்தர்கள், நுகர்வியத்தில் பல்வேறு கூறுகள், இப்படி இருக்கின்றன. உதாரணங்கள் கூட ’உமா துர்மான் போன்று இருந்தாள்’ என ஒரு திரைப்படப் பிரதியிலிருந்து வருகிறது. தமிழ்ப் புனைவுகளில் காணப்பெறாத ஓர் அயலுணர்வும் புதிய உணர்வும் அதில் உண்டல்லவா

வி :உமா துர்மானின் கில்பில் பாத்திரம் ஒரு நிஜம் என்றே நான் நம்புகிறேன். நிஜமான மாந்தர்களுக்கும் புனைவு மாந்தர்களுக்குமான வேறுபாடு இன்று அழிந்துவிட்டது. அதை age of lost innocence என்று உமர்ட்டோ ஈக்கோ போன்றவர்கள் சொல்கிறார்கள். நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்வதற்கு பதிலாக அந்தப் படத்தில் அந்த கதாநாயகன் அந்த நாயகியைக் காதலித்தது போல, அந்த அளவுக்கு காதலிக்கிறேன் என்று சொல்லும் தன்மை ஏற்பட்டுவிட்டது. அப்படித்தான் இப்போது நாம் சொல்கிறோம். Age of lost innocence உலகத்தில் உண்மை – புனைவு என்பது அழிந்துவிடுகிறது. மேற்கில் நாய்ர்(Noir) வகைப்பாடு இருக்கிறதல்லவா.. அதை மனதில் வைத்துதான் நான் அந்தக் கதையை எழுதினேன். திரைப்படக் காட்சிகள் அதன் கூறுகளைக் கதைகளில் வைப்பது அப்படி ஒரு அம்சம். அதைத் திட்டமிட்டுதான் செய்தேன். ஒரு நாய்ர் வகைமையின் தொனி வர வேண்டும் என எண்ணிதான் நான் செய்தேன்.

மார்டின் ஸ்கோர்செசி இயக்கிய டாக்சி டிரைவர் படம் பார்த்திருப்பீர்கள். ஒரு முக்கியமான உலகத் திரைப்படம். ராபர்ட் டி நிரோ நடித்தது. அது போன்ற ஒரு கதை லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் இருக்கிறது. ’ராபர்ட் டி நிரோ என்று அழைக்கப்படாத டாக்சி டிரைவர்’ என்பது தலைப்பு. புனைவில் இருக்கிறது. இது ஒரு வகைமையாகவே இருக்கிறது. புனைவார்த்த கதாபாத்திரங்கள் நம் நிஜ வாழ்வோடும் ஊடாடுகின்றன. ஷெர்லாக் ஹோம்ஸை ஒரு நிஜ மனிதராகவே நாம் நம்புகிறோம். நபக்கோவ் சொன்னதைப் போல சராசரி மனிதனே ஒரு புனைவுத் துண்டு, a tissue of statistics.
மரபு நமக்கொரு தொடர்பைக் கொடுப்பது போலவே , இன்று பாப்புலர் கல்ச்சரும் நமக்கு ஒரு தொடர்பை அளிக்கும் சாத்தியமுண்டு. நாம் பாப்புல கல்ச்சர் காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதிலிருந்து சில பிரதிகளை எடுத்துக் கொள்கிறோம். மேலும் மரபில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஆனால் வெகுசனப் பண்பாட்டில் ஒரு கலைத்துப் போடல் இருக்கிறது. இப்பொதுதான் ஒரு தலைமுறையே இந்த அலையைப் புதிதாக உள்வாங்குகிறது. இதனை எப்படி பிரதிபலிப்பது என்பது சவாலான ஒன்றுதான்.

கே: உங்கள் கதைகளில் நுகர்விய பொருள்களுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. சாதாரணமாக எந்த ஒரு பொருளும் அதன் பிராண்ட் பெயரோடேயே வருகிறது இல்லையா? மினிமலிஸ்டாக ஒரு மாற்றுப் பண்பாடும் சிலர் முன்வைக்கின்றனர். இந்த நெருக்கடிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முரகாமியோட ‘காஃப்கா ஆன் தி ஷோர்’ கதையில் ஒருவன் முதுகுப்பையைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவான். அப்போது அவர் எழுதுவார் ’சுதந்திரத்தைவிட , சுதந்திரத்தைக் குறியீடாக மாற்றுகிற பொருள்கள்தான் மதிப்பு மிக்கதாக இருக்கிறது’ என்று .

வி : இன்றைய மனிதனுக்கு தான் விரும்பும் பொருட்களை தன்னால் வாங்க முடிவதில்லை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பொருட்களுக்கான உற்பத்தி மதிப்பையும் தாண்டி அதற்கு உணர்வு ரீதியான மதிப்பு வந்துவிடுகிறது. மார்க்ஸ் பொருட்களை உற்பத்தி மதிப்பு பயன் மதிப்பு என்று இரண்டாகப் பிரிக்கிறார். சிம்மல் அதற்கு உணர்வு ரீதியான மதிப்பு இருக்கிறது என்கிறார். நுகர்வுக் கலாச்சாரத்தை ஆதரிப்பதா அல்லது மினிமலிஸ்ட் வாழ்க்கையை ஆதரிப்பதா என்கிற கேள்வி இருக்கிறது. ஸ்டீவன் பிங்கர் மாதிரியான ஆட்கள் நுகர்வைக் குறைத்துக்கொள்ளாமல் அதே நேரத்தில் சூழலையும் பாதுகாப்பதுதான் சரியாக இருக்கும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள். காந்தி முதலானவர்கள் நம்மிடையே மினிமலிஸ்ட் வாழ்க்கையை முன்வைத்தார்கள். உடல் சக்தி, வாங்கும் திறன் எல்லாம் நமக்குப் பற்றாக்குறையாகதான் இருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து மணி நேரத்துக்கு மேலாக யூட்யூப் பார்த்தாலும் வலிக்காத கண்கள் வேண்டும். நாள் முழுவதும் புணர்ந்தாலும் களைப்படையாத குறிகள் வேண்டும். நாம் விரும்பும் பொருளை வாங்கும் பொருளாதார சக்தி வேண்டும். எல்லையற்ற நுகர்வுக்கு சாத்தியமான உடலாக தன்னுடல் இல்லையென்பது நாளைய மனிதனின் பெரும் பிரச்சனையாக இருக்கும்.

கே : உங்கள் கதைகளில் தூலமாக இடம்பெறும் நிலம் பெரு நகரமாக இருந்தாலும் அதன் அகநிலம் என்பது வாசிப்பு வழியாக அடைந்த பல்வேறு பிரதிகளின் தொகுப்பு நினைவாக இருக்கிறது. வாசிப்பின் பிரதியுலகே ஒரு தனித்த புனை நிலமாக விரிகிறது. அதற்குள் இயங்கக்கூடிய பல கதைகள் உள்ளன. மைக்ரோமெகாஸ் கதையுடன் ஊடிழைவாக எழுதப்பட்டுள்ள ‘பிரமிடுகளை அளக்கும் தவளை ‘ ஒரு உரிய உதாரணம் அல்லவா?

வி : என்னுடைய வாசிப்பிலிருந்துதான் எனது பிரதி உருவாகிறது. Inter textuality – ஊடிழை பிரதி என்பது இன்று ஒரு முக்கியக் கூறாகவும் உள்ளது. இது ஒரு பழைய உத்திதான். நாம் அதற்கு ஒரு பெயரை அளித்துள்ளோம்.
இன்று எழுத வரும் யாருமே ஒரு பெரும் தொடர்ச்சியினுடைய ஒரு கண்ணிதான். யதார்த்தவாத கதைகளின் ஒரு பிரச்சனை என்னவென்றால் அதை எழுதவரும்போது தான் தான் முதலில் இதைச் சொல்கிறேன், செய்கிறேன் என நினைத்துக்கொள்ளும் ஒரு தொனி இருக்கும். ஆனால் என்னுடைய புனைவுகளில் அப்படி இல்லை. ஏற்கனவே எல்லாம் சொல்லப்பட்டுவிட்டன. ஏற்கனவே எழுதப்பட்டுள்ள பல்வேறு பிரதிகளின் ஒரு தொடர்ச்சியாகதான் நாம் இருக்கிறோம். நான் தான் முதலில் செய்தேன் என்பது அதில் கிடையாது. எல்லாம் எழுதப்பட்டுவிட்டது. நாம் இணைப்புரை மட்டுமே கொடுக்க முடியும் என போர்ஹே சொல்கிறார் இல்லையா. அந்தக் கட்டத்திற்கு தமிழ்ப் புனைவும் வந்துள்ளது.
நமது வராலாற்றிலிருந்தே கூட நாம் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. மாப்லா கலகம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கேரளாவில் நடந்தது. எங்கள் ஊரிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் போத்தனூர் ரயிலடி இருக்கிற்து. அங்கு கேரளாவில் இருந்து ரயிலில் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு 96 கைதிகள் கோயம்பத்தூருக்கு அனுப்பப் பட்டுள்ளார்கள். அந்த 96 கைதிகளும் மூச்சுத் திணறி இறந்து போயிருக்கிறார்கள். நூறு வருடம் கூட இன்னும் ஆகவில்லை. நான் கோயம்பத்தூரைச் சேர்ந்தவன் என்றாலும் அங்கு இருக்கும்போது இது எனக்குத் தெரியாது. அங்குள்ளவர்களுக்கும் தெரியாது. ஆனால் வாசிப்பின் மூலமாகதான் இதைக் கண்டுபிடிக்கிறோம் இல்லையா. அதை பிரதிக்குள் கொண்டு வரத் தானே வேண்டும்.
நான் ஊரிலிருந்த வரை எனக்கு இது ஒரு கதையாக கூட சொல்லப்படவில்லை. மேற்கிலெல்லாம் இரண்டாம் உலகப்போர் விஷவாயுக் கூடங்களை அப்படியே பாதுகாத்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மாணவர்களை அழைத்து சென்று காண்பிக்கிறார்கள். நமக்கு அப்படிப் பட்ட பழக்கம் இல்லை. எங்கள் ஊரிலிருந்து இருபத்தைந்து கி.மீ தொலைவில்தான் பொள்ளாச்சி இருக்கிறது. அங்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நூறுபேர் கொல்லப்பட்ட செய்தியே எனக்குச் சொல்லப்படவில்லை. ஆனால் வாசிப்பு மூலமாக இது கிடைக்கிறது. எனக்கு வினோதமாக இருக்கிறது. ஒரு தி.மு.க. குடும்பத்தில் இருந்தும் இது எனக்கு ஏன் தெரியவில்லை.
வரலாற்றைத் திருப்பிச் சொல்வது என்ற விஷயம் ஏன் நடக்கவில்லை. வரலாறு ஒரு கதையாக, புனைவாக மாறும். அப்படித்தான் நம் பண்பாடு இருந்துள்ளது. வரலாறு ஒரு இதிகாசமாக, புராணமாக, பாடலாக மாறும். இதிகாச புராணங்களில் வரலாற்றின் கூறு கொஞ்சமாவது இருக்கும். நான் குறிப்பிடும் ஒரு சம்பவம் ஒரு நூறு வருடத்தில் கூட அப்படி மாறவில்லை. எனவே எனது அறிவு, ஞாபகம் எல்லாம் வாசிப்பு வழியாக, புத்தகங்கள், திரைப்படங்கள் வழியாகதான் உருவாக முடியும். இங்கு தொல்கதைகளினூடக கூட ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி பேணப்படவில்லை. அப்படி இருக்கும்போது வாசிப்பிலிருந்துதான் நாம் புனைவுகளை உருவாக்க முடியும்.

கே: வாசகனின் மனதில் படைப்பினூடாக ஆசிரியனின் ஒரு பிம்பம் உருவாகுமல்லவா. உங்கள் கதைகளில் அது ஒரு கௌவ் பாய் தொப்பி அணிந்திருக்கிற, கையில் துப்பாக்கி வைத்திருக்கிற , குதிரையில் அமர்ந்திருக்கிற ,வேட்டை, பயணங்கள், மர்மங்கள், அயல்வெளிகள் நோக்கி தன்னை எப்போதும் செலுத்த விழையும் மேற்கத்திய எக்ஸ்ப்ளோரர்கள் போன்ற ஒரு குணாம்சம் அவனது சாராம்சமாகிறது.. வாசிப்புதான் அவனது உடலாக இருக்கிறது. இது குறித்து.

வி :தமிழ் மனம் எனக்குள் முற்றிலுமாக இயங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படங்களின் செல்வாக்கு எனக்குள் இருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்கள். அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் போல நான் தீவிரமாக உலக சினிமாவை பின்தொடர்பவன் இல்லை. ஹாலிவுட் படங்கள் என்னை ஈர்க்கின்றன. பாப் கல்ச்சரை நான் ஒரு கூறாக எடுத்துக் கொள்கிறேன். பாப் கல்ச்சரின் ஒரு அங்கமாக நான் இருப்பதை விரும்பவும் செய்கிறேன். அதே சமயம் அதைத் தாண்டிச் செல்லும் ஒரு தீவிர நிலைக்கும் எத்தனிக்கிறேன். பாப் கல்ச்சரை முற்றிலுமாக நிராகரிப்பது ஏற்புடையதல்ல. பாப் டிலனுக்கு அதனால்தான் நோபல் பரிசு கொடுத்துள்ளார்கள். தமிழ் மனம் என்பதும், அதன் அரசியல், சினிமா எல்லாம் பாப்புலர் கல்ச்சரால் கட்டமைக்கப்பட்டதுதான். அப்படியெல்லாம் இல்லை. தமிழ் மனம், தமிழ் ஓர்மை ஒன்று தன் தொன்மத்திலிருந்து இயங்குகிறது என்று சொன்னால் அது கேள்விக்குரியது. ஆனால் இன்னும் வயதானால் பாப் கல்ச்சர் கசந்து போகக் கூடும். அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு நம் மரபு பிடிக்கவில்லை. அதைத் துண்டித்துக் கொள்ளவேண்டும் என்றால், வேறெங்காவது செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு இடமாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். என்னுடைய சாதி, மொழி போன்ற அடையாளங்களோடு என்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது.
‘டெஸ்பாஸித்தோ” என்ற ஒரு ஸ்பானிஷ் பாடலை யூடியூபில் நிறைய பேர் கேட்டார்கள். நான் கூட அதைக் கேட்டிருக்கவில்லை. ஊரிலிருந்து வந்த எனது சித்தாப்பா பையன் தான் அதை எனக்கு அறிமுகப்படுத்தினான். இன்று யூட்டியூபில் அனைவருமே பாடல்களைக் கேட்கிறோம். ’டெஸ்பாஸித்தோ’ 580 கோடி முறை பார்க்கப்பட்டிருக்கிறது. கிராமத்திலிருந்து வந்த ஒரு பையன் வந்து ‘நீ பார்த்திருக்கிறாயா’ எனக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகுதான் நான் அதைக் கேட்டேன். இந்தப் பாடல்களை ஏன் கோடிக்கணக்கானோர் பார்க்கிறார்கள். நம் ஊரிலிருந்து ஒரு ஸ்பானிய பாடலைப் பார்க்கிறார்கள். இப்படி ஒரு ’லேண்ட்ஸ்கேப்’ என்பதை விடவும் ஒரு மைண்ட்ஸ்கேப் உருவாகியுள்ளது என நான் நம்புகிறேன். அப்படி ஒரு மனவெளி கொண்ட ஒரு தலைமுறையே உருவாகி உள்ளது. டைட்டானிக் படம் பார்த்ததை என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான சம்பவமாக நான் என் டயரியில் எழுதி வைத்துள்ளேன், கேட் வின்ஸ்லெட் எனது ஆதர்ச கதாநாயகியாக இருந்தாள். தேசபக்திக்கெல்லாம் சினிமாதான் காரணம் என நம்பிய காலங்களெல்லாம் இருந்தன. அது உண்மைதானே

 

கே : உங்களுடைய ‘ நாளைக்கு இறந்து போன நாய்’ கதையில் அந்த நாய் இறந்து போனதாக பொய்யாக அவரை நம்ப வைக்கிறார்கள். அதில் ரியலும் அன்ரியலும் –ஒரு புள்ளியில் இணைகிறது. அந்தக் கதை யதார்த்தவாத சித்தரிப்புத் தளத்திலேயே அதை மீறுகிறது. யதார்த்தம் மாதிரியான ஒரு பாவனையில் எழுதப்பட்ட கதைகளில் கூட சட்டென்று ஒரு மர்மத்தன்மைக்குள் நுழைந்து விடுவது நிகழ்கிறது. உதாரணமாக ’தந்தி ’ போன்ற கதைகளையும் குறிப்பிடலாம் இல்லையா.

வி :கட்டாயமாக. அந்த தலைப்பிலேயே ’ நாளை இறந்துபோன நாய்’ என்று ஒரு இலக்கணப் பிழை வைக்கப்பட்டுள்ளது. பெரு நகரங்கள் கொடுக்கும் சித்திரங்களை ஒரு கட்டத்தில் நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய பெரு நகரத் தனிமை, அந்நியத் தன்மை எல்லாம் அதில் இருக்கிறது. இல்லை என்பது இருக்கிறது என நம்ப வைக்கப்பட்டாலும் அதில் நமக்கு தேர்வு இல்லை. அதில் இருக்கும் அதிகாரக் கண்ணிகள். வீட்டு உரிமையாளரில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள், கௌன்சிலர் வரை எல்லோருமே ஒரு தனிமனிதன் மேல் அதிகாரம் செலுத்திவிட முடியும். பெருநகரம் ஏற்படுத்தும் அழுத்தத்தை, ஒடுக்குதலை நாம் ஒன்றும் செய்யமுடியாமல் ஏற்றுக்கொண்டு மௌனமாகதான் இருக்க வேண்டியிருக்கிறது. அதைத் தான் அக்கதையில் சொல்கிறேன். அதில் டிப்பர் லாரியில் செத்த நாய்களை அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள். அதுதான் மனிதனுக்கும் நடக்கும். பெருநகரத்தில் மரணம் என்பது அப்படித்தான். நான் வசிக்கும் வீதியில் ஒரு மரணம் நடந்தது. அந்த உடலை வீட்டுக்குள் வைக்கமுடியவில்லை. வெளியே வைத்துதான் எல்லா சடங்கும் செய்தார்கள். அடுத்து ஒரு மூன்று நான்கு மணி நேரங்களில் அங்கு வாகனங்கள் செல்ல ஆரம்பித்துவிட்டன. ஒரு மரணம் நடந்ததற்கான சிறு சுவடு கூட அங்கு இருக்கவில்லை. அந்த வீட்டில் கூட அது இருக்குமா என்பது சந்தேகம்தான். மரணத்துக்கு ஒரு நாள் செலவு செய்வதுகூட அதிகமாக இருக்கிறது.
மேற்கில் கோதிக் மரபு என்பார்கள் அல்லவா. அது பேய்கள், அமானுஷ்யங்கள் போன்ற தொடர்புகள் உடையது. அது கட்டடக் கலையிலும் வருகிறது. நமக்குள் உள்முகமாக இருக்கும் பயம், இருட்டு என்பதை புறவயமாக ஒரு கலைப் படைப்பாக, கட்டடமாக மாற்றுவது என்பதாக கோத்திக் அமைகிறது. யதார்த்தக் கதையில் ஃபேண்டசி இணைவதால் யதார்த்தமே இன்னும் ஆழப்படுகிறது. யதார்த்தம் – ஃபேண்ட்சி போன்ற எதிரிடையான கூறுகள் இணையும் போது, எழுதுபவனுக்கு அங்கு ஒரு வெளி உருவாகிறது. அது கதையை மேலும் தீவிரப்படுத்துகிறது.

கே: ஆதி கதைகள் அசேதனங்களோடும் அமனிதமான பிரபஞ்ச கூறுகளோடும் தொடர்பில்தான் இருந்துள்ளன. ஆனால் நவீனத்துவத்தில் மனிதமையவாதமும் புவிமையவாதமும் மேலோங்குகிறது. இன்றைய தமிழ்ப் புனைவுகளில் மனித சலிப்புகளே மையம்பெறுகின்றன. இந்நிலையில் உங்கள் கதைகள் மனிதமையவாதத்திலிருந்து விலகிய புதிய சாத்தியங்களைக் கொண்டுவருகின்றன. புவிமையவாதம் கடந்த ஒரு தன்மையிலும் அதற்கு பரிமாணங்கள் வருகின்றன. ’பிரமிடுகளை அளக்கும் தவளை’ ஒரு உதாரணம். அதில் ஓர் அயல் உயிரியும் , பாலினமற்ற தவளையும் கதைசொல்லிகளாக வருகின்றன. இது குறித்து..

வி :ல.ச.ரா எழுதிய சுயம்பு என்ற கதை ஒன்று உண்டு. நல்ல கதை. தமிழின் முக்கியமான கதைகளில் அது ஒன்று என்று சொல்வேன். அந்தக் கதையிலேயே மனிதனை மையப்படுத்தாத கதை சொல்லல் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். இப்படியான கதைகள் தமிழில் அதிகமாக எழுதப்படவில்லை என்பது ஒரு குறைதான். முதலில் மனிதன் இயற்கையின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறான். பின்பு, விவசாயம் என்பது பருவ காலங்களை, பயிர்களின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதன் வழியே இயற்கையைப் புரிந்துகொள்ளும் காலகட்டமாக இருந்திருக்கிறது. அதன் பிறகு, தொழில்மயமாக்கல் காலத்தினை மனிதன் இயற்கையை வெற்றிகொண்ட காலகட்டமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தற்போது மனிதன் இயற்கையின் மிகப்பெரிய எதிரியாக மாறி நிற்கிறான். முன்பு இயற்கையின் முன்பு குரலற்று இருந்தோம். இப்போது இயற்கை நம்மிடத்தில் குரலற்று நின்றுகொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு மரணம் மட்டுமே இயற்கையிலிருந்து வரும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. வெள்ளம், பூகம்பம் போன்றவற்றையெல்லாம் எப்படியாவது கடந்து வந்துவிடுகிறோம். இது மனிதனை ஒரு குற்றவாளியின் இடத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது. நாம் எல்லோருமே ஒருவகையில் தற்கொலைக்குப் பக்கத்தில் போய்விட்டோம். பழங்குடிகளைத் தவிர மற்ற அனைவருமே சுரண்டல் நோக்கம் கொண்டவர்களாகவே இருக்கிறோம்.
பழங்குடி மனிதனிடமிருந்து வெளிப்பட்ட வன்முறைக்குப்பின் ஒரு நியாயம் இருந்தது. அதன்பின் இருக்கும் தர்க்கம் மிகவும் எளிமையானது. என்னுடைய வாழ்விடத்தை நீ ஆக்கிரமிக்காதே. அவ்வளவுதான். ஆனால் இப்போதிருக்கும் வன்முறைக்குப்பின் நிறைய கூறுகள் இருக்கின்றன. வன்முறையை வன்முறைக்காகவே கூட செய்கிறோம்.
இப்போது, மேற்கத்திய சங்கீதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு ஐரோப்பியன் கேட்டாலும் சரி, அமெரிக்கன் கேட்டாலும் சரி, நாம் கேட்டாலும்கூட நமக்கு அது அந்நியமாகத் தெரிவதில்லை. அதன் நுட்பங்களை நாம் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. ரசிக்கவும் முடிகிறது. பழங்குடிகளின் இசையை நாகரிக மனிதனும் உள்வாங்கிக்கொள்கிறான். ரசிக்கிறான். இதேபோல மேற்கத்திய இசையை ஒரு பழங்குடி மனிதன் உள்வாங்க முடியுமா? ராக், ஜாஸ் போன்றவற்றை அவனால் ரசிக்க முடியுமா? இந்த இடைவெளி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

கே: இப்படி மனிதனை மையப்படுத்தாத பிரபஞ்ச ரீதியான கதைகளை போர்ஹேஸ் எழுதியிருக்கிறார் அல்லவா. . போர்ஹேவை உங்களின் ஆதர்சமாக பல இடங்களில் குறிப்பிடுகிறீர்கள்..

வி :“ஆங்க்சைட்டி ஆஃப் இன்ஃப்ளுயன்ஸ்” இல்லாத எழுத்தாளர் யாருமே கிடையாது. என்னுடைய கதைகளில் அவருடைய பாதிப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அடுத்து வரும் தொகுப்பில் அவரின் பாதிப்பு இருக்காது. இத்தகைய பாதிப்புகளைக் கடந்துவருவது முக்கியம்.

 

கே : புடவு கதையில் உலகின் மனிதர்கள் அனைவரும் ஒரு வேளை சமணத்தைத் தழுவியிருந்தால் இன்றைக்கு மனித இனமே அழிந்திருக்கும் என்ற பிரகடன வாக்கியம் ஒன்று வருகிறது. சமணம் குறித்த ஒரு நவீன மனிதனின் பார்வையாக அது சொல்லப்பட்டுள்ளது. என்ன உரையாடலை அதில் முன்வைக்கிறீர்கள்?
வி :உயிர்களை உயிர்களாய் மதித்தலுக்கும் நீட்சேவுக்குமான எதிர் நிலைப்பாடுதான் அதில் வருவது. பல்லுயிர் ஓம்புதல் எல்லாம் சமணத்தின் கூறுதானே. ஆனால் நீட்சே அப்படியல்ல. அவர் மனிதனோட உள்ளுணர்வை அனுமதிக்க வேண்டும் என்கிறார். அது முழுக்க முழுக்க வன்முறையாக இருந்தாலும் கூட. சமணம் போதித்த விசயங்களை அதன் தத்துவங்களை மனிதன் கடந்துவரக் காரணம், சமணம் எதையெல்லாம் போதித்ததோ மனிதன், அதற்கு நேர் எதிரான விசயங்கள் அவனிடம் இருந்ததுதான். நான் இந்த இரண்டு எதிர் நிலைகளை இந்தக் கதையில் பேச விரும்பினேன். இந்தக் கதையில் மூன்று கதாப்பாத்திரங்கள் வருவார்கள். அதில் இருவர் இலட்சியவாதத்தைச் சார்ந்தவர்கள். மற்றொருவன் இருக்கிறான் இல்லையா – அந்தப் பறவையைத் தலையில் கல்லெறிந்து கொல்பவன் – அவன் ஒரு குதிரையை வரைவதைவிட அதன் மேல் ஏறிப் பயணம் செய்ய விரும்புகிறவன். இதுதான் மனிதன். இதைத்தான் கதையில் வைக்க விரும்பினேன். கலையோ, தத்துவமோ, இசையோ ஒரு குறிப்பிட்ட நபர்கள் செய்கிற விசயம். அதை மனித இனத்துக்கே பொதுவாக வைத்துவிட முடியாது. இதையெல்லாம் செய்யாத சாதாரண மனிதர்கள் இருக்கிறார்கள் இல்லையா. அவர்களுக்கு இருக்கும் உள்ளுணர்வுதான் ஒரு மனிதனின் ஆதாரமான உள்ளுணர்வாக இருக்கும். இந்த இரண்டு விசயங்களைப் பற்றிதான் நான் அந்தக் கதையில் பேச விரும்பினேன்.

கே : தமிழில் கதைகள் பெரும்பாலும் சுயானுபவம் , சுயவாழ்வியல் புலம் என்ற பரப்புக்குள் இருந்துதான் எழுதப்பட்டுள்ளன. 90 களில் இதில் ஒருபெரும் மாற்றம் வந்தது. புனைவாளி ஒட்டுமொத்த வரலாற்றுப் பரப்புக்குள்ளும், மொழிக்குள்ளும் இருந்து கதைகளை ஊருவாக்க முடியும் என்று. ஆனால் தமிழில் இன்று வேகமாக உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் கதைகள் மீண்டும் பெரும்பாலும் சுயானுபவப் புலத்திற்குள்ளாகவே உழல்கின்றன. இந்த எல்லைகள் கடந்து பல்வேறு பிராந்தியங்களில், பல்வேறு பிரதிகளுக்குள் நுழையும் சாகசம் உங்கள் கதைகளுக்கு உண்டு. சுயானுபவம் சார்ந்த யதார்த்தக் கதைகளின் பெருக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்.
வி : நம்முடைய எக்ஸ்போஷர் என்பது மிகவும் குறைவு.. மிகக் குறுகலான வட்டத்துக்குள்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கைக்கு நாம் ஒரு மதிப்பு கொடுக்க விரும்புகிறோம். ஆனால் அதே நேரத்தில் இந்த வாழ்வுக்கும் பெரிய மதிப்பில்லை என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வந்துவிட்டது. அப்படியில்லை, இந்தக் குறுகலான வாழ்வும் மதிப்புமிக்கது என்று நிறுவவே சுய அனுபவக் கதைகள் எழுதுகிறார்கள். அதனால் தான் அது யதார்த்தவாத கதைகளை நோக்கிப் போகிறது. டையரிக்குறிப்புக்குக் கொஞ்சம் மேல் தானே யதார்த்தவாதக் கதைகள். திரும்பவும் நாயும் நரியும் கழுதையும் குதிரையும் பேசும் கதைகள் எழுத வேண்டும். சாதாரணமாக ஒரு கழுதை பேசியது என்றால் யாரும் நம்புவதில்லை. ஆனால் கழுதை பேசுவதற்கான சூழலை எழுதுவதுதான் அதிலுள்ள சவால். எல்லாவற்றையுமே மனிதமையமாகப் பார்ப்பதுதான் இதற்குக் காரணம். நாம் மொழிக்குள் சிக்குண்டிருக்கிறோம். மனிதனல்லாத கருப்பொருள்களை எழுதும்போதும் நாம் மனிதனின் மொழியில்தான் அதைத் தொடுகிறோம். ஒரு புனைவு எழுத்தாளர் எதையும் எழுதும் சாத்தியத்தை வசப்படுத்த வேண்டும். யதார்த்தவாத கதைகள் பாசாங்குத்தன்மையைக் கொண்டு வருகின்றன. ஃபேண்டஸி கதைகளில் அந்த பாசாங்குத் தன்மை கிடையாது. ஒரு கழுதை என் கதையில் பேசும் போது அதில் பாசாங்குத்தன்மை தெரியாத அளவுக்கு நான் செய்ய வேண்டும்.
யதார்த்த கதைகளின் மனநிலை என்பது, எனக்கு இசை தெரியாது. ஓவியம் தெரியாது. சிற்பம் தெரியாது. தத்துவம் தெரியாது. அறிவியல் தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் பக்கத்துவீட்டுக்காரன் மட்டும்தான். என் சொந்தக்காரன் மட்டும் தான். அப்போது, அதைத்தான் நான் எழுதுவேன். எனக்குத் தெரியாததை நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. எனக்கு வாழ்க்கை தெரியும். அதைவிட என்ன வேண்டும் என்பதாக இருக்கிறது. இந்த மனநிலையில் இருந்துதான் சுயானுபவ யதார்த்தக் கதைகள் பெருகுகின்றன.
இதுவரைக்கும் இது எழுதவே படவில்லை என்பதிலிருந்துதான் யதார்த்தவாதக் கதை உருவாகிறது. எல்லாம் ஏறகனவே எழுதப்பட்டுவிட்டது என்ற உணர்விலிருந்துதான் ஒரு புனைவாளன் எழுதத் தொடங்குகிறான்.
இயல்பு வாழ்விலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்ட எந்த ஒரு மனதுமே கனவுகளில் தஞ்சமடையும். மார்க்குவஸ் கூட தன்னுடைய கனவிலிருந்து கதைகள் எழுதியிருப்பதாய் கூறுகிறார். பிரமிடுகளை அளக்கும் தவளை கூட ஒரு கனவுதான். நான் ஒரு புத்தகத்தைக் கனவில் பார்த்தேன். அதன் அட்டையில் ஒரு பிரமிடும் ஒரு தவளையும் இருக்கும். இதற்கு ஒரு தர்க்கத்தை சொல்லவே முடியாது.

கே: அந்தத் தவளையை ஒரு பாலினமற்ற தவளையாக உருவாக்கியிருப்பீர்கள். அதன் பாலின்மை , இனப்பெருக்கக் கூறு அற்ற தன்மை என்பது பயன்பாட்டுவாதத்திற்கு எதிரான , கலையின் குறியீடா.?
வி : பயன்பாட்டுவாதம் முக்கியமான ஒரு விசயம். இந்தப் பிரபஞ்சமே நம்முடைய பயன்பாட்டுக்கு இருக்கிற மாதிரிதான் நாம் பார்க்கிறோம். இது எங்கு போய் முடிகிறது என்றால், ஆஷிஸ் நந்தியின் “தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ என்று ஒரு கட்டுரை. அதில் ஒரு மேற்கத்திய அறிஞரின் மேற்கோள் வருகிறது. “what is the use of happiness until otherwise it makes money”. எல்லாவற்றையும் பயன் மதிப்பு கொண்டே அளவிடுகிறோம். அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம். என்னதான் நுகர்வுக் கலாச்சாரம், வெகுசனக் கலாச்சாரம் இருந்தாலும் எல்லா கேளிக்கைகளையும் தாண்டி ஒரு ‘soul’ இந்த உலகத்திற்கு இருக்கிறது என்று நாம் இன்றும் நம்புகிறோம். அதை என்னுடைய கதைகளில் தேடவும் செய்கிறேன். அது நவீனத்துவ மனம்.
பாலினமற்ற தவளை என்பதன் வழி நான் ஒரு தாண்டுதலைச் செய்ய விரும்புகிறேன். மொழி நம்மை சிறைப்படுத்துகிறது. நம் உடல் நம்மை ஓரிடத்தில் சிறைபடுத்தி வைக்கிறது. இசை, மொழியிலிருந்து விடுதலை தருகிறது. உடலிலிருந்து விடுதலை பாலினமற்ற தன்மையில் கிடைக்கிறது என்று நம்புகிறேன். உடலுறவே அலுத்துப் போகும் நிலைக்கு ஒரு நூற்றாண்டில் சென்றுவிடுவோம் என்றும் நான் நினைக்கிறேன். பாலினற்ற தன்மை என்ற ஒரு உடலின் கிளர்ச்சியை நான் கற்பனை செய்கிறேன். கலையே பாலினமற்ற ஒன்றுதான்.

 

கே : தொண்ணூறுகளில் மிகு புனைவு குறித்து பேசப்பட்டபோது, யதார்த்தாவதம் என்பது ஐரோப்பிய புலனறிவாதம், நவீனத்துவ பகுத்தறிவு, இயந்திரவியல் போன்றவற்றின் விளைவாகப் பார்க்கப்பட்டது. நவீனத்துவத்தின் மீதான விமர்சனத்தில் இருந்து மிகுபுனைவு முன்வைக்கப்பட்டது. உலகளாவிய ஒரு கதைசொல்லல், மொழி நினைவு, மூதாதை தொல்கதைகள், கீழைத்தேய மரபுகள் என ஒரு அரசியல் தளம் அதில் இருந்தது. உங்கள் கதைகளில் நவீனம் மீதான எதிர்ப்பு என்பதை விட அதி நவீனம் என்ற தன்மை இருக்கிறது. மிகுபுனைவு என்பது இக்கதைகளில் என்ன சாரத்தில் இயங்குகிறது ?
வி : காஃப்கா தன்னுடைய காசநோயை மிருகமாக வைத்து எழுதிய கதை ஒன்று உண்டு. போர்ஹேவின் ‘புக் ஆஃப் இமேஜினரி பீயிங்ஸ்’ புத்தகத்தில் அது பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. நவீனத்துவத்துடைய மூலாதாரப் பிரதியாக சொல்லப்படுற காஃப்காவின் உருமாற்றத்தில் அவன் ஒரு கரப்பான் பூச்சியாகத்தானே மாறுகிறான். அதற்கும் தொன்மத்திற்கும் தொடர்பே கிடையாது. காஃப்கா இந்த மீபுனைவை எப்படி உபயோகப்படுத்துகிறாரோ அப்படித்தான் என்னுடைய கதைகளில் பயன்படுத்த விரும்புகிறேன். மனித இனத்தின் சறுக்கலைச் சொல்லும் இடத்தில் அவன் பூச்சியாக மாறுகிறான். கிரிகோர் சாம்சா ஒரு பூச்சியாக மாறாவில்லையென்றால் காஃப்காவை நாம் இன்று வாசிக்க மாட்டோம். ஒரு நவீன மனிதனின் பிரக்ஞையில் இருந்துதான் எனது மிகுபுனைவு உருவாகிறது.

 

கே : ’வலை’ உங்கள் மிகுபுனைவு கதைகளில் ஒரு மாதிரி வடிவம் எனலாம். மிகுபுனைவு, கனவுத் தன்மை, தொன்ம உருவாக்கம் போன்ற அம்சங்கள் சரளமாக ஆளப்படும் இக்கதையில் அவை அந்த பிரதிக்குள்ளேயே நிகழ்த்தப்படும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. அதற்கு வெளியே அவை ஒரு சாரம்சத்தையோ , புறநிலையான ஒன்றைக் குறிப்புணர்த்தவோ செய்ய வேண்டும் அல்லவா. உடலற்ற ஒரு சிந்தனை விளையாட்டாக அது ஆகிவிடக்கூடதல்லவா?
வி :அது சரிதான். இரண்டு மூன்று நண்பர்கள் கூட சொன்னர்கள். விளையாட்டுக் கூறு கொஞ்சம் மிகையாக இருப்பதாக. அதைக் கவனிக்க வேண்டும். ஆனாலும் அதிலும் ஒரு அரசியலை பேசியிருப்பதாகவே நினைக்கிறேன். அதில் கூறப்படும் மூன்று ராஜ்ஜியங்களிம் அமைப்புகளில் ஒரு கண்காணிப்புச் சமூகத்தின் கூறுகளை நீங்கள் பார்க்கலாம். அது அறிவியல், தத்துவம், இலக்கியம் எல்லாம் இணைந்து ஒரு கலவையான உருவாக்கம்தான். அதையும் மீறி அதில் ஒரு அரசியல் இருக்கிறது. யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோருக்கும் வாரத்தில் ஒரு ஓய்வு நாள் இருந்தது, கிழக்கத்திய சிந்தனையில் அது கிடையாது என்பதெல்லாம் ஒரு வரலாற்றுக் கூறுதானே. மேலும் கலை ஏன் விளையாட்டாக இருக்கக்கூடாது.

 

கே: இங்கு ஒரு சிறிய ஒப்பிடலுக்காகத்தான், 90களில் கோணங்கி, எஸ்.ரா போன்றவர்கள் தொடங்கி வைத்த ஃபேண்டசி மரபில் ஒரு சமூக, பண்பாட்டுத் தளமும் சேர்ந்து இருந்தது., இன்று குமார் அம்பாயிரம் போன்றவர்கள் எழுதும்போது அதில் வழக்காறுகள், தொன்மங்கள் எல்லாம் ஒரு இனக்குழு அறிமுறைகள், அதன் அழகியல், அறவியல் , நவீனத்துவத்தின் மீதான விமர்சனம் என ஒரு தூலத்தனமை அதற்கு இருக்கிறது. ஆனால் வலை கதையில் அது ஃபேண்டசியாக மட்டும் இருக்கிறதா ?
வி : நம் ஊரில் உள்ள சிறுதெய்வங்களை நூறு வருடங்களுக்கு முந்தைய மனிதர்கள் பார்த்தது போல நம்மால் இன்று பார்க்க முடியாது. அந்த வேறுபாட்டை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். கோணங்கியின் கதைகளில்கூட இந்த வேறுபாட்டை ஏற்கும் தன்மை இல்லை. அறிவொளி, பகுத்தறிவு, நவீனத்துவம் இதன் பெரும் வரலாற்று தாக்கத்துகுப் பிறகு இன்று தன்னுடைய தனிப்பட்ட ரேஷனாலிட்டிதான் உலகத்தை அளப்பதற்கான மையம் என நினைக்கும் மனிதன் உருவாகி வளர்ந்துவிட்டான் என்பதை, அதன் செல்வாக்கை இவர்கள் மறுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நவீன வரலாற்றை அப்படியே புறக்கணித்துவிட்டு, அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்ற பாவனையில் இருந்து எழுதுவதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. ஆனால் இவர்கள் யாருமே வெறுமனே பாவனை செய்கிறவர்கள் அல்ல.

 

கே: உங்களது சில கதைகளில் முடிவிலியை நோக்கிக் கொண்டு செல்லும் ஒரு தன்மை இருக்கிறது. போர்ஹேவிடம் கூட அது ஒரு முக்கியக் கூறாக இருந்துள்ளது.. ஒரு சிறிய சம்பவம் கூட ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் கண் வழியே பார்க்கப்படுவது. முடிவின்மை நோக்கிய ஒரு அலைக்கழிப்பு, நித்தியத்துவத்துவம், எட்டர்னிட்டி நோக்கி தீவிரம் கொள்ளும் மனம்..இப்படி ஒன்று உங்கள் கதைகளில் இயங்குகிறது. உதாரணமாக வலை, பிரமிடுகள் கதைகளையே கூறலாம். இது குறித்து..
வி :மனிதனுக்கு தன்னுடைய குறுகிய காலம், தன்னுடைய இறப்பு என்பது கூட பிரச்சனையாக இல்லை. ஆனால் தான் இறந்ததுக்குப் பிறகும் இவ்வுலகம் தொடர்கிறது என்பதுதான் அவனால் தாங்க முடியாததாக இருக்கிறது. அதுவும் ஒரு கன்ஸ்யூமர் சாக விரும்பவே மாட்டான். தன்னுடன் உலகம் முடிந்துவிட்டால் அவனுக்குப் பிரச்சனை இல்லை. தன்னையும் தாண்டி இந்த உலகம் நீடிக்கிறது என்பதிலிருந்துதான் அவனுக்கு எட்டர்னிட்டி குறித்த ஏக்கம் உருவாகிறது. அந்த ஏக்கத்திலிருந்துதானே இலக்கியம், கலை எல்லாம் பிறக்கிறது. பீத்தோவன் கூட தன் சிம்பொனியை அப்படி ஓர் உணர்வோடுதான் பண்ணியிருப்பார். நமது மரணத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம். என் தனிப்பட்ட மரணத்திற்குப் பிறகும் நீடிக்கும் இந்த உலகை, இந்த வாழ்வைப் புரிந்து கொள்ளும் உந்துதலிருந்துதான் எட்டர்னிட்டி நோக்கிய அலைக்கழிப்பு உருவாகிறது. நாம் இல்லாது, நாம் என்ற பிரக்ஞை இல்லாது இந்த உலகத்தைக் குறித்து கற்பனை செய்வது தத்துவத்திலும் ஒரு முக்கிய மையமாக இருந்துள்ளது.

 

கே : கலைக்கு , மனிதன் வரலாற்றுக்குள் வந்ததற்குப் பிறகிலிருந்தே பெரிய அளவில் பொறுப்புணர்வுகள் சுமத்தப்பட்ட்டுள்ள ஒரு காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். அந்த சுமை, பொறுப்பிலிருந்து விடுபடும் மனநிலை உங்கள் கதைகளில் இருக்கிறது. வரலாற்றுக்கும் முந்தைய, அதில் கட்டப்பட்ட மனித நினைவுக்கும் முந்தைய தொல் வெளிப்பாடுகளில் கலைப் பிரக்ஞை என்னவாக இருந்துள்ளது.
வி :வரலாறு மற்றும் நினைவு என்பது ஒரு பெரிய புலம். வரலாறு என்பதை நாம் ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளோம். ஆனால் மனித இனத்தினுடைய காலம் என்பது ஒரு எழுபதாயிரம் வருடங்கள் இருக்கும் . ஹோமோ ஸாபியன் என்ற இனம் மற்ற உயிரனங்களை ஒடுக்கி வென்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டு எழுபதாயிரம் அல்லது ஒரு இலட்சம் வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். கடந்து இரண்டாயிரம் ஆண்டுகளைக் கழித்துவிட்டால் மீதியுள்ள ஒரு பெரும் காலகட்டத்தின் நம் உணர்வுகள், அதன் கூறுகள் எப்படியும் நமது மரபணுக்களில் ஒளிந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
சொல்லப்போனால் நாமெல்லோரும் பண்பாட்டு நகல்கள் – கல்ச்சுரல் குளோன்ஸ்தானே. கலாச்சாரம் நம் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தானே வடிவமைத்துள்ளது. நமக்கு, தமிழ் நாட்டில் விவசாய சமூகம் கட்டமைத்த சிந்தனைதான் நமது அகமாகவே உள்ளது. நமக்கு முந்தைய வேட்டையாடி சமூகத்திலிருந்து நாம் விலகி வந்து பனிரெண்டாயிரம் வருடங்கள் ஆகிறது. மனிதன் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கி பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை நம்முடைய மனம் என்பது விவாசய சமூகத்தினுடைய மனமாகதான் இன்று வரை உள்ளது. ஐரோப்பிய மனம் என்பது வேண்டுமானால் தொழில் புரட்சி நிகழ்ந்த இருநூறு முன்னூறு வருடங்களாலும் கட்டப்படாதாக இருக்கலாம். நம்முடைய சிந்தனைகள், அறம் எல்லாமே விவசாய மரபு சார்ந்ததுதான். அந்த மரபில் கட்டுப்பாடுகள், அற ஒழுங்குகள் எல்லாம் உருவாகிவிடுகின்றன. இறைதேடிகளுக்கு அப்படி எந்த விதிகளும் கிடையாது. இந்த ஒழுங்குகள், விதிகள் , சமூகம் உருவாவதற்கு முன்பு இருந்த மனித இனத்திற்கு கலையோ வரலாறோ எதுவும் இல்லை. ஆனாலும் அது கற்களால் சில அமைப்புகளை உருவாக்கியுள்ளது. ஓவியங்களை உருவாக்கியுள்ளது. அதை நாம் எந்த ஒரு ஐடியாவிலும் இங்கிருந்து அணுகமுடியாது.
பழங்குடிகள், எதற்காக இசையைக் கையாண்டார்கள், குகை ஓவியங்கள் போன்றவற்றுக்கு நாம் என்ன விளக்கங்கள் கொடுத்தாலும் அது முழுமையாக இருக்காது. ஏனென்றால் நம் மனம், பிரக்ஞை என்பது விவசாய சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதாக உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தொல்கலை என பேசும்போது… கலை என்பதே ஒரு பிற்கால கருத்துரு தான். அவர்களக்கு கலை என்பது குறித்த எந்த கருத்தியலும் இருந்திருக்காது. அவர்களுடைய வெளிப்பாடுகள் ஒரு பிரதிபலிப்பா அல்லது கலை செயல்பாடா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது. ‘புடவு’ கதையில் இதை நான் எழுதியிருக்கிறேன். ஏன் பிரதிபலிப்பாக மட்டும் இருக்கமுடியாது என்ற அம்சமும் அதில் இருக்கிறது. ஏனென்றால் அவர்களது கற்சிற்பங்களில் வடிவங்கள், வண்ணங்கள் எல்லாம் செம்மையாக இருந்துள்ளன. அந்த கலையை நுகர்வதற்கான மனிதர்களும் அப்போது இருந்தார்களா என்பது ஒரு கேள்வி. குகையில் மனிதர்கள் மாட்டை வரைகிறார்கள். ஆனால் அது மாட்டை நேரடியாகப் பார்த்துக் கொண்டே வரைந்த உருவ ஓவியம் கிடையாது. அது ஒரு நினைவில் இருந்துதான் வரையப்படுகிறது. அது எப்படி நுகரப்பட்டது. ஓவியம் குறித்த புறநிலையான பார்வை எல்லாம் இருந்ததா என்பது நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது.

 

கே : உங்கள் புனைவுகளில் கவிதையை நெருங்கிச் செல்லும், அதன் அறிமுறைகளை நெருங்கும் ஒரு இயல்பு காணப்படுகிறது. தற்போக்கான சிந்தனை எழுச்சிகள், கவித்துவ ஓட்டம், தர்க்கவியலான புனைவாடல்கள் குறிப்பிட்ட தத்துவம் சாராத தத்துவார்த்த தர்க்கங்களுடன் கூடிய அழகியலான விசாரணைகள் ஒரு புனைவுக்கூறாக இருக்கிறது அல்லவா?

வி :நாவல் என்ற வடிவம் தன்னை இதிகாசமாக மாற்ற முயற்சிக்கும் வடிவமாகவும், சிறுகதை அல்லது உரைநடை வடிவம் தன்னை கவிதையாய் மாற்ற முயற்சிக்கும் வடிவமாகவும், கவிதை ஒரு மேற்கோளாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவும் இருக்கிறது. என்னுடைய சிறுகதைகளை கவிதைக்கு மிக அருகில் கொண்டு செல்லவே நினைக்கிறேன். கவித்துவம் உரைநடையில் ஒரு சுவாரஸ்யத்தையும் தீவிரத்தன்மையும் கொடுக்கிறது. அரூபத் தன்மை, அல்லது அறிதலுக்கு அப்பாற்பட்ட இடங்கள் அதில் சாத்தியம்.

 

கே: நீங்கள் போர்ஹே குறித்த உரையாடலில் விளையாட்டாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். நண்பர்களோடு சேர்ந்து சில புத்தகங்களை எரித்ததாகவும்.. அதில் முதலில் மார்க்சினுடைய மூலதனமும் , பிறகு சிக்மண்ட் பிராய்டும் எரிந்ததாக்வும் , மூன்றாவதாக போர்ஹேசினுடையது தாக்குப் பிடித்து நின்றதாகவும் கூறியுள்ளீர்கள். மேத்தியூ அர்னால்ட் கூட …மதங்களின் காலம் முடிந்துவிட்டது எனக் கூறும்போது ‘lets go back to literature ‘என்பது போல ஒரு இடத்தில் சொல்கிறார். அது போல புனைவுகள், இலக்கியங்கள் தான் மீட்சி என்பது போல அதில் சொல்ல வருகிறீர்களா?
வி :அரசியல் என்பது இன்று அதன் தீவிர நிலையில் இல்லை. இங்கு அரசியல் என்பது வெறும் தேர்தல், கட்சிகள் சம்பந்தப்பட்டதாக மாறியுள்ளது. மதங்களும் அது எதுவாயிருந்தாலும் அவை இன்றைய மனிதனுக்கு அளிக்கக் கூடியது ஒன்றுமில்லை. இந்த சூழலில் நாம் ஒரு தீவிர நிலையை படைப்பிலக்கியத்தில் தான் தேட வேண்டியிருக்கிறது. படைப்பிலக்கியத்துக்கு என்றுமே ஒரு நிரந்தர செலவாணி இருக்கும். சமூகம் எத்தனை மாற்றமடைந்தாலும் அது காலாவதியாவதில்லை. கதை சொல்வது, கேட்பது என்பது நமக்கு நிரந்தரமாக இருக்கும் ஒரு உந்துதல். வரலாற்றில் இவ்வளவு நடந்த பிறகும், இத்தனை எழுதித் தீர்க்கப்பட்ட பிறகும் இன்றைக்கும் உலகளவில் நாவல்கள் உறபத்தி செய்யப்படுகின்றன. அதிலும் சிலர் மிகவும் மதிக்கப்பட்டு இலக்கியத் தகுதியையும் அடைந்து விடுகிறார்கள். ஒரு நாவல் இலக்கிய மதிப்பு கொண்டதா இல்லையா என்பதற்கு இன்றும் ஒரு அளவுகோல் நம்பப்படுகிறது இல்லையா. அதை வைத்துதானே நோபல் பரிசு கூட தரப்படுகிறது. எல்லா நாவல்களும் இலக்கிய நாவலாக மாறிவிடுவதில்லை. அப்படிப் பார்த்தால் ஜெஃப்ரி ஆர்ச்சர் பெரிய படைப்பாளியாக ஏற்கப்பட்டிருப்பார். ஸ்டீபன் கிங் போன்றவர்களின் புனைவுகளை ஸ்டேன்லி குப்ரிக் போன்ற பெரிய படைபாளிகள் படமாக ஆக்கியிருக்கிறார்கள். இருந்தாலும் அந்த நாவல்கள் மேல் நமக்குப் பெரிய மதிப்பு கிடையாது.
உம்பர்ட்டோ ஈக்கோ அழகாக சொல்லியிருப்பார். ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு துப்பறிவாளர் என்பதை இனி எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது. ஆனால், நியூட்டனின் சிந்தனையை தவறென்று ஐன்ஸ்டீன் மாற்றிவிட்டார். ஐன்ஸ்டீனின் சிந்தனைகளும் இன்னும் நூறு இருநூறு வருடங்கள் கழித்து மாறினாலும் மாறும். ஷெர்லாக்ஹோம்ஸ் ஒரு டிட்டெக்டிவ் என்பதை நீங்கள் மாற்றவே முடியாது. மீட்சி என்பது பெரிய சொல். என்னால் அறுதியாகச் சொல்ல முடியவில்லை.

 

கே: ’பிரமிடுகளை அளக்கும் தவளை’ கதை கலை, தத்துவம் , வரலாறு, அறிவியல் என பல தளங்களினூடாக மனித வரலாறு குறித்த ஒரு விசாரணையாக, பரிசீலனையாக இருக்கிறது. மனிதன் குறித்த அவநம்பிக்கை அதில் இருக்கிறது. கதை ஹேடஸ், நெல்லி என அமனித மாந்தர்கள் வழி கூறப்படுகிறது. அவர்கள் மனித அழிவோடு, மனித வீழ்ச்சியோடு புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு புவியிலிருந்து வெளியேறுகிறார்கள். இந்தக் கதையில் பிரமிடு எதை உணர்த்துகிறது. குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.
வி :அந்தக் கதை, கலை, தத்துவம் , அறிவியல் மூன்றையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டது. தொல் அமைப்புகள், வடிவங்கள் இவற்றை நோக்கும்போது ஒரு முதிர்ந்த சமூகத்தின் முதல் கட்டடக் கலை பிரமிடுகள்தான். எகிப்து பண்பாட்டை மிகத் தொன்மையானது என்கிறோம். அந்தக் கலாச்சாரத்தின் முதல் அமைப்பு,கட்டடம் பிரமிடுதான். அங்கிருந்துதான் வரலாறும் தொடங்குகிறது. பிரமிடில் தொடங்கி இரண்டாம் உலகப் போரின் விஷவாயுக் கூடங்கள் வரை அந்தக் கதையில் இருக்கும். பிரமிடுகளைக் கட்ட தொடங்கிய ஒரு மனம் இரண்டாம் உலகப் போருடன் முடிவடைகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். இரண்டாம் உலக் போருக்குப் பிறகு வரலாற்றுக்கும் எந்த பங்களிப்பும் இல்லாமல், எந்த சிந்தனை சார்ந்த தீவிர பங்களிப்புகளும் இல்லாமல் மனித இனம் நின்று விடுகிறது. அறிவு மனிதனை முறியடித்து விடுகிறது. அதனால்தான் இரண்டாம் உலகப் போரோடு அந்தக் கதையை நிறுத்திவிட்டேன்.
இரண்டாம் உலகப் போர்தான் மனிதனுடைய பரிசோதனைகளிலேயே மிகப் பிரம்மாண்டமான பரிசோதனை. மிக செலவான பரிசோதனையும் மிகத் துயரமான பரிசோதனையும் அதுதான். பிரமிடு தொடங்கி, இரண்டாம் உலகப் போர் வரை மனித அறிதல்கள், பரிசோதனைகளின் ஒரு விஷயமாகவும், இடையில் 18, 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நிகழ்வுகள், இங்கு நம்முடைய வரிக்கலகம் எல்லாம் அதில் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டைப் பேச வேண்டும் என நினைக்கிறேன். அப்போதுதான் மனிதப் பிரக்ஞை என்பதே பெரிய மாற்றத்திற்கு உட்படுகிறது. அதுதான் விஷவாயுக் கூடங்கள் வரை உருவாக்குகிறது. இந்த மூன்றையும் முன்வைத்துதான் அந்தக் கதையை எழுதினேன். ஒரு தொழிற்சாலைக்கு முன் கூடுகிற, தொழிற்சாலைக்குள் சென்று வெளியே வருகிற மனிதன் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். உழைப்புதான் உபரி மதிப்பாக மாறி லாபமாக மாறுகிறது என்பதை ஸ்தூலமாக காட்டிக் கொடுத்தது அந்தத் தொழிற்சாலைகள்தான். மூலதனத்தினுடைய போர்தானே இரண்டாம் உலகப் போர். மூலதனமும் அறிவும் கைகோர்த்து நடத்திய போர். அதோடு மனித எல்லையை நாம் அடைந்துவிட்டோம். நாம் இப்போது எதிர்காலத்தில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என நான் நம்புகிறேன். இரண்டாம் உலகப் போரின் ஆயுதங்கள் அது வரை மனித இனம் கண்டிராத, சிந்தித்திராத ஆயுதங்கள். அறிவிலிருந்துதானே அவை உற்பத்தியாகின. பல வாசிப்புகளின் வழியாகதான் பிரமிடுகள் பிரதி உருவானது. உலகப் போர் தொடங்கிவிட்டது என கராச்சியில் விஷ வாயு முகமூடிகள் எல்லாம் கடைத்தெருக்களில் விற்றிருக்கிறார்கள். இது வாசிப்பில் என்னை திகைக்க வைத்த ஒரு குறிப்பு.

 

கே: அந்தக் கதை வோல்டேரின் மைக்ரோமெகாஸ் உள்ளிட்டு எண்ணற்ற பல்வேறு பிரதிகளுடன் ஊடாடும் சரித்திரப் புலங்கள், தத்துவக் கூறுகள், நூல்கள் எனப் பலவற்றுடன் ஊடிழைவுகொள்ளும் ஒரு பெரும் பிரதியியல் சாகசமாக இருக்கிறது அல்லவா?
வி :ஆமாம் ஒருவித artistic arragonce இல் இருந்துதான் நான் அதை எழுதினேன். நாம் இந்த விஷயத்தை இங்குள்ள எல்லைகளை, வரம்புகளைத் தாண்டி செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதல், அகந்தையில் இருந்துதான் அதை எழுதினேன். அது போன்ற படைப்பை பலர் செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன். இங்கு இவ்வளவு தாழ்வு மனப்பான்மையோடு படைப்புகள் எழுதப்பட வேண்டியதில்லை. தாழ்வு மனப்பாண்மையை தாண்டுவதற்கான ஒரு படைப்புசார்ந்த அகந்தை நமக்கு இருக்க வேண்டும். அதில் தோல்வியுற்றால் கூட பரவாயில்லை. அது உலக் இலக்கியத்தில் போய் நிற்கும் போன்ற கனவெல்லாம் இல்லையென்றால் கூட அதைச் செய்து பார்ப்பதற்கான அகந்தையை நாம் தவறவிடக்கூடாது.

கே: மனித சமூகத்தை மனிதக் கண்கொண்டு எழுதும் கதைகள் நெடுங்காலமாக இருக்கினறன. ஆனால் வேற்றயல் உலக உயிர்களின் பார்வையிலிருந்து மனிதனை வேவுப் பார்ப்பது புதிய சாத்தியங்களைத் உருவாக்குகிறது. மைக்ரோமாஸ் கதைகயில் ஹேடஸ் என்ற பிரம்மாண்ட உயிரின்முன் மனிதர்கள் பரிதாபமான நுண்ணூயிரிகளாகத் தெரிகிறார்கள். உங்கள் ‘பிரமிடு’ கதையிலும் மனிதனை மனிதனுக்கு வெளியேயிருந்து வேற்றயல் பிரக்ஞைகளினூடாக அவதானிக்கும் ஒரு தன்மை இருக்கிறது. மனிதனை அதில் ஒரு பூச்சிபோல நிறுத்தியுள்ளீர்கள் இல்லையா. இவ்வகைப் புனைவு குறித்து.

வி :மனித அறிதலை, பிரபஞ்சம் குறித்த அதன் முடிவுகளை சரிபார்க்க எந்த ஒப்பீடோ அலகுகளோ இல்லை. மனித அறிவு மிகவும் குறுகியது. அதை சரிபார்க்க எந்த சாத்தியமும் இல்லை. மனித ஆற்றலுக்கு, அறிவுக்கு அப்பாற்பட்டுதான் பிரபஞ்சம் இருக்கிறது.

மைக்ரோமெகாஸ் கதையைப் பொறுத்தமட்டில் அறிவியல் புனைகதையில் வந்த முதல் கதை அதுதான். கடவுளுக்கு முன் மனிதன் ஒன்றுமே இல்லை என்று மதம் சொல்கிறதில்லையா. வால்டேர் மாதிரியான ஆட்கள் மத மறுப்பாளர்கள். அவர்களும் அந்த இடத்தை மனிதனுக்குக் கொடுப்பதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் ஒன்றும் அவ்வளவு முக்கியமான ஆள் இல்லை என்ற இடம். மனிதனை மையமாக்கி மதம் கொடுத்த மதிப்பீடுகள் எதுவும் பொருட்படுத்தத் தக்கதல்ல என்ற இடத்தில்தான் அந்த பெரிய உருவத்துக்கும் முன்பு மனிதன் மிகச் சின்னதாக மாறுகிறான். மனிதன் சின்னதாக மாறுகிற ஒரு உருவகம் மிக மிக முக்கியமானது. அதை வால்டேர் செய்திருக்கிறார்.

அறிவியல் புனைவு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது என்ற ஒதுக்கல் தமிழில் இருக்கிறது. அறிவியல் புனைவு தீவிர இலக்கியல் அல்ல என்பது மாதிரியான ஒதுக்கம் இலக்கியத்துக்கு உதவி செய்யாது என்று நினைக்கிறேன். அறிவியல் புனைகதைக்கு என்று சில மாரல்ஸ் உருவாகியிருக்கு. மனிதனை ஒரு இடத்தில் வைத்து அறிவியல் புனைகதையாளர்கள் பார்க்கிறார்கள். சமூகவியல், தத்துவ விஷயங்களையும் அவர்கள் அணுகுகிறார்கள். அதிகாரத்தைப் பற்றி பரவலாகப் பேசுகிற கதைகள் அறிவியல் புனைகதைகளாகத்தான் இருக்கின்றன. நமக்கு அந்தச் சூழலே இல்லாமல் இருக்கிறது. நமக்கு அறிவியல் என்றால் ஏலியன்ஸ் வரவேண்டும், வேற்றுக்கோளுக்குப் போதல் என்ற ரீதியில்தான் இருக்கிறது. மனித உணர்வுகளின் நுட்பங்களோடு எழுதப்பட்ட அறிவியல் கதைகள் சுஜாதாவிடம் கூட உள்ளன.
பிற அறிவுத்துறைகளுடனான உறவை இழப்பதால்தான் ஹூயூமன் சென்ட்ரிக்கான விஷயங்கள் திரும்பத் திரும்ப உற்பத்தியாகின்றன. ஒரு நல்ல டிடக்டிவ் ஃபிக்‌ஷனை நம்மால் சொல்ல முடியாது. இங்கே கலகம் செய்யும் பாவனையே பெரிய இலக்கியப் பண்பாக இருப்பது அலுப்படையச் செய்கிறது.

 

கே: இன்று நவீன அறிவியல் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல நுட்பமான உலகங்களை திறந்திருக்கிறது. நுண்ணுயிர்கள் , அணுக்கரு எனத் தொடங்கி பிரபஞ்சம் வரை. இவற்றினூடாக நேர்ந்துள்ள புதிய அறிபுனை சாத்தியங்கள் குறித்து..ஓர் நுண்ணுயியிரியின் உணர்தல், அதன் உலகம், அதன், அதன் பிரபஞ்சம், ஒரு அணுவுக்குள் நடப்பது, பிரபஞ்சத்தின் வெவ்வேறு சாத்தியநிலைகள் ..இவற்றின் தத்துவ-சிந்தனைத் தளத்தோடு பல்வேறு புனைவுகளுக்கான சாத்தியம் உணடல்லவா. அது மாதிரியான புனைவுகள் குறித்து?

வி :தமிழில் இப்படி எதுவும் இல்லை. நமக்கு மிகவும் அறிமுகமான இடாலோ கால்வினோ கூட இந்த தன்மையில் காஸ்மிகாமிக்ஸ் என்று ஒரு தொகுப்பே எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அறிவியல் சிந்தனையை எடுத்துக்கொண்டு புனைவுகளாச் செய்து பார்ப்பது. அதை நீங்கள் படிக்கும்போது அறிவியல் புனைகதை என்பதைத் தாண்டி இலக்கியமாகவும் இருக்கிறது. நமக்கு இந்த விலகல்தான் பிரச்சினையாக இருக்கிறது. டால்ஸ்டாய் சொன்ன ஒரு விஷயத்தையே ஒரு அறிவியல் புனைகதை சொல்லிடமுடியும் என்கிற நம்பிக்கை நமக்குக் கிடையாது. அப்படி ஒரு அவநம்பிக்கை இங்கே இருக்கிறது. செய்து பார்க்காமலே இந்த அவநம்பிக்கை. டால்ஸ்டாய் கதைகளை அறிவியல் புனைகதைகளாக சொல்ல முடியாது என்று கருதக்கூடிய அளவிற்கு தமிழில் நடக்கலை. ஆனால், சொல்லவே முடியாது என்கிற முன்முடிவு நம்மிடம் நிறையவே இருக்கிறது. 2001 a space odyssey நாவலின் ஆரம்பமே பார்த்தால் அந்த எடர்னிட்டியைத் தானே பேசுகிறது. அதில் தத்துவம் இல்லையென்று எப்படிச் சொல்லமுடியும். அரசியல், அடையாளம், இலக்கியம், தீவிர இலக்கியம் இதையெல்லாம் தாண்டி திறந்த மனதோடு இதை அணுகவேண்டும் என நினைக்கிறேன். அது ஒரு ஆரோக்கியமான விஷயமும்கூட.

‘தீவிர இலக்கியம்’ தான் இலக்கியம். மற்றதெல்லாம் இலக்கியம் இல்லை . இவற்றையெல்லாம் எழுதக் கூடாது போன்ற எண்ணங்கள் மாற வேண்டும். நமது கதை சொல்லல் முறையிலிருந்து நாம் தான் டிராகுலா மாதிரியான ஒரு பிரதியை உருவாக்கியிருக்க வேண்டும். டிராகுலா என்ற பிரதி இலக்கியம் இருக்கும் வரைக்கும், வாசிப்பு இருக்கும் வரைக்குமான நிரந்தரமான ஒரு உயிரியாக மாறியிருக்கிறது. நமது நவீன பிரதிகள் ஏன் டிராகுலா மாதிரியான கதையாக மாறவில்லை. ஜி.கே, செஸ்டர்டன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். போர்ஹேவை பாதித்தவர்களில் முக்கியமானவர். போர்ஹே ‘டபுள்’ என்ற தன் கருத்துருவை ஜி.கே.செஸ்டர்ட்டனிடமிருந்துதான் எடுக்கிறார் . அவர் சிறந்த துப்பறியும் கதைகளை எழுதியுள்ளார். ‘ ஃபாதர் பிரவுன்’ ஒரு முக்கியமான டிடெக்டிவ். துப்பறியும் கதைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தீவிர இலக்கியத்துக்கு நோபல் பரிசு கொடுப்பார்கள். ஆனால் துப்பறியும் கதைகளும் வாசிப்பார்கள். உம்பர்டோ ஈகோ இந்த எல்லைகளை எளிதாகக் கடப்பவர். ’நேம் ஆஃப் தி ரோஸ்’ ஒரு துப்பறியும் பிரதியாகவும் இருக்கிறது. தமிழில் தாண்டவராயன் கதையை அப்படி ஒரு ஈக்கோவியன் தன்மை உள்ள கதை எனக் கூறலாம்.
மேலும் நமது படைப்பாளிகளுக்கு இலக்கியத்திற்கும் பல்வேறு அறிவுத்துறைகளுக்குமிடையிலான உறவுகள் மீது அக்கறையும் கவனமும் வேண்டுமென்று நினைக்கிறேன். தமிழ் படைப்புகள், வாசகர்கள் குறித்த ஒரு ஏளனம் இருக்கிறது. இன்றைய வாசகன் தமிழில் எழுதும் பலரை விட மேம்பட்டவனாக இருக்கிறான். தத்துவம், அறிவியல், இசை எல்லாம் கற்க வேண்டும். உற்பத்தியை திருப்தி படுத்தவே யதார்த்தவாத கதைகள் எழுதப்படுகின்றன. உற்பத்தியை பெருக்க யதார்த்தவாத கதைகள் தான் பெரிதும் துணை புரிகின்றன. ஆலன் மூர் போன்ற கார்டூனிஸ்டுகள், தாமஸ் பின்ச்சன் போன்ற புனைவாளர்கள் எல்லாம் தங்கள் முகங்களை கூட வெளிக்காட்டாமல் படைப்பில் ஈடுபட்டிருந்தனர். தமிழில் அது போன்ற சூழல் சிறுபத்திரிகை காலத்தில் இருந்தது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழில் எழுதுபவர்கள் இது போன்ற புளித்துப் போன விசயங்களிருந்து வெளியே வர வேண்டும். எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களை பிரகடனப்படுத்தாமல் தீவிர கலைப்படைப்பில் ஈடுபடவேண்டும்.

 

கே: கண்கானிப்பு, வெளிச்சம் பெருகிவிட்ட இன்றைய சூழலில் கண்ணுக்கு தெரியாமல் வேலை செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதா?
வி :சாத்தியம் என்றே எண்ணுகிறேன். அப்படி தப்பிப்பது தான் நமது ஆன்மீகமாக இருக்க முடியும். மனிதன் ஒரு சமூக விலங்கு மட்டுமல்ல; ஒரு ஆன்மீக விலங்கும் கூட. ஐம்புலன்களால் அறியக்கூடிய இந்த உலகையும் அதையும் தாண்டிய எதையோ தேடும் பணியைத் தான் கலை இலக்கியங்கள் மேற்கொண்டுள்ளன. அது கடவுளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் கலை இலக்கியங்களே சொல்லியுள்ளன.

 

***

‘பிரமிடுகளை அளக்கும் தவளை’ கதையை வாசிக்க:-

https://www.google.com/amp/www.yaavarum.com/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2588-%25E0%25AE%2585%25E0%25AE%25B3%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AF%2588/%3Famp%3D1

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *