வடக்கு மாவட்டத்தின் தொடக்கப் பள்ளிகளுக்கான இயக்குனரான, தன்னை ஒரு நியாயமான, பெருந்தன்மையுள்ள மனிதன் என்று எண்ணியிருந்த ஃபியோதர் பெட்ரோவிச் ஒரு நாள் தன் அலுவலகத்தில் வ்ரெமென்ஸ்கி என்கிற ஒரு பள்ளி ஆசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

“இல்லை, திரு.வ்ரெமென்ஸ்கி,” என்றவர், “நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது. இதைப் போன்ற ஒரு குரலுடன் ஓர் ஆசிரியராக நீங்கள் உங்கள் வேலையைத் தொடர முடியாது. எப்படி உங்கள் குரல் போயிற்று?” என்று கேட்டார்.

“எனக்கு நன்றாக வியர்த்தபோது நான் ஒரு குளிர்ந்த பியர் குடித்தேன்…” என்று சீற்றத்துடன் கூறினார் அந்த ஆசிரியர்.

“அடப் பாவமே! பதினான்கு வருடங்கள் சேவை செய்திருக்கும் ஒரு மனிதனுக்கு திடீரென்று இப்படியொரு பேரிடர் வந்துவிட்டதே! இதைப் போன்ற ஓர் அற்பமான விசயத்தினால் உங்கள் எதிர்காலமே பாழாகுவதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இப்போது என்ன செய்யலாமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

அந்த ஆசிரியர் பதில் ஏதும் சொல்லவில்லை.

“நீங்கள் சம்சாரியா?” என்று கேட்டார் இயக்குனர்.

“மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள், மாண்பு மிக்கவரே!” என்று சீற்றத்துடன் கூறினார் ஆசிரியர்.

சற்று அமைதி நிலவியது. இயக்குனர் தனது இருக்கையிலிருந்து எழுந்து மனக் கலக்கத்தோடு முன்னும் பின்னும் நடந்தார்.

“உங்களை என்ன செய்யலாம் என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை..” என்றார் அவர். “நீங்கள் ஒரு ஆசிரியராக இருக்க முடியாது, இன்னும் ஓய்வூதியத்திற்குரியவராக ஆகவுமில்லை…உங்கள் விதிப்படி நடக்கட்டுமென உங்களை கைவிட்டுவிடுவதோ, உங்களால் முடிந்ததை செய்துகொள்ளுங்கள் என விட்டுவிடுவதோ சரியெனப் படவில்லை..நாங்கள் உங்களை எங்களில் ஒருவராக பார்க்கிறோம், பதினான்கு வருடங்கள் சேவை செய்திருக்கிறீர்கள், அதனால் உங்களுக்கு உதவுவது எங்கள் கடமை…ஆனால், எப்படி உங்களுக்கு உதவப் போகிறோம்? நான் உங்களுக்காக என்ன செய்ய முடியும்? என்னுடைய இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்: நான் உங்களுக்காக என்ன செய்ய முடியும்?”

தொடர்ந்து சற்று அமைதி; இயக்குனர் தொடர்ந்து யோசித்தவாறு முன்னும் பின்னும் நடந்தார், தனது சிக்கலான நிலையை எண்ணி திகைத்த வ்ரெமென்ஸ்கி தனது நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தார், அவரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். திடீரென, இயக்குனர் மகிழ்ச்சியாக புன்னகைக்க ஆரம்பித்தார், விரல்களால் சொடக்கும் போட்டார்.

“எப்படி நான் இதைப் பற்றி முன்பே யோசிக்காமல் விட்டுவிட்டேன்!” அவர் வேகமாக பேசத் துவங்கினார். “கவனியுங்கள், என்னால் உங்களுக்குக் கொடுக்க முடிந்தது இதுதான். எங்கள் காப்பகத்தின் செயலாளர் அடுத்த வாரம் ஒய்வு பெறுகிறார். நீங்கள் விரும்பினால், அவரது வேலையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். என்ன, சரியா?”

அப்படியொரு நல்லதிருஷ்டத்தை எதிர்பார்க்காத வ்ரெமென்ஸ்கியும் மகிழ்ச்சியில் புன்னகைத்தார்.

“நல்லது, விண்ணப்பத்தை இன்றே எழுதி விடுங்கள்.” என்றார் இயக்குனர்.

வ்ரெமென்ஸ்கியை அனுப்பிவிட்டு ஃபியோதர் பெட்ரோவிச் நிம்மதியாகவும், கூடவே மகிழ்ச்சியாகவும் உணர்ந்தார்: சீற்றத்துடனிருந்த அந்த பள்ளி ஆசிரியரின் அந்த வளைந்த உருவம் அதற்கு மேலும் அவரை தொந்தரவு செய்யவில்லை, வ்ரெமென்ஸ்கிக்கு காலியாகவிருக்கும் அந்த வேலையை கொடுத்ததன் மூலம் ஒரு நல்ல மனதுபடைத்த, மற்றும் முற்றிலும் பண்புள்ள ஒரு நபரைப் போல அவர் நியாயமாகவும் மனசாட்சியுடனும் நடந்திருக்கிறார் என்று உணர்வது மனதிற்கு உகந்ததாக இருந்தது. ஆனால், மனதிற்குகந்த அந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் வீட்டிற்குச் சென்று இரவுணவிற்கு உட்கார்ந்திருந்தபோது அவரது மனைவி நஸ்டாஸ்யா இவானோவ்னா திடீரென கூறினார்:

“ஓ, நான் மறந்தேவிட்டேன், நினா செர்ஜியேவ்னா நேற்று என்னை சந்திக்க வந்திருந்தார், ஓர் இளைஞன் சார்பாக உங்கள் ஆதரவை வேண்டினார், நமது காப்பகத்தில் ஒரு வேலைக்கு காலியிடம் இருப்பதாக சொன்னார்களே…”

“ஆமாம், ஆனால் அந்த வேலையை வேறொருவருக்கு கொடுப்பதாக ஏற்கெனவே உறுதியளித்து விட்டேனே.” என்றவாறு முகம் சுளித்தார் இயக்குனர். “அது தவிர, உனக்கு தான் என்னுடைய விதியைப் பற்றி தெரியுமே: நான் ஒருபோதும் பரிந்துரை மூலம் வேலை கொடுப்பதில்லையே..”

“எனக்கு தெரியும். ஆனால், நினா செர்ஜியேவ்னாவிற்காக நீங்கள் இதை ஒரு விதிவிலக்காக செய்யலாம் என்று நினைக்கிறேன். நாம் ஏதோ உறவுக்காரர்கள் என்பதைப் போலல்லவா அவர் நம் மீது அன்பாக இருக்கிறார், மேலும் நாம் இதுவரை அவருக்காக ஒன்றுமே செய்ததில்லை. பிறகு, மறுப்பதைப் பற்றி நினைக்காதீர்கள், ஃபெட்யா! உங்களது தற்போக்கான எண்ணத்தால் நீங்கள் அவளையும் என்னையும் காயப்படுத்தி விடுவீர்கள்.”

“அவர் யாரை பரிந்துரைக்கிறார்?”

“போல்சுகின்.”

“எந்த போல்சுகின்? புத்தாண்டு தின விருந்தின் போது ட்சாட்ஸ்கியாக நடித்தாரே, அந்த நபரா? அந்த கனவானா? ஒருபோதும் நடக்காது!”

இயக்குனர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்.

“ஒருபோதும் நடக்காது!” என்று மீண்டும் சொன்னார். “கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் போல!”

“ஏன் நடக்காது?”

“புரிந்துகொள் என் அன்பே, ஓர் இளைஞன் ஒரு விசயத்தை தானே நேரடியாக செய்யாமல் பெண்களின் மூலமாக செய்கிறான் என்றால் அவன் எதற்கும் சரிப்பட்டு வர மாட்டான். அவனே ஏன் என்னிடம் வரவில்லை?”

இரவுணவிற்குப் பிறகு இயக்குனர் தனது வாசிப்பறையில் சாய்விருக்கையில் படுத்துக்கொண்டு தனக்கு வந்திருந்த கடிதங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்க ஆரம்பித்தார்.

“அன்பான ஃபியோதர் பெட்ரோவிச்” அந்த மாநகராட்சியின் மன்றத் தலைவரின் மனைவி எழுதியிருந்தார், “எனக்கு மனித மனங்களை தெரியுமென்றும், நான் மனிதர்களை புரிந்து வைத்திருப்பதாகவும் நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். தற்போது அதை நேரடியாக சரிபார்த்துக்கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த இளைஞரான கே.என்.போல்சுகின் நமது காப்பகத்தின் செயலாளர் பதவியை வேண்டி ஒன்றிரண்டு நாட்களில் உங்களை சந்திக்க வருவார். மிக நல்லவொரு இளைஞர். நீங்கள் அவரை வேலைக்கு எடுத்துக்கொண்டால், பின்னர் அது சரியான முடிவுதான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.” அதற்கு மேலும் எழுதியிருந்தார்.

“ஒரு போதும் நடக்காது!” என்பதுதான் இயக்குனரின் எண்ணமாக இருந்தது. “கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் போல!”

அதன் பிறகு, போல்சுகினை பரிந்துரைத்து இயக்குனருக்கு கடிதங்கள் வராமல் ஒரு நாள் கூட கழியவில்லை. ஓர் அழகிய காலைநேரத்தில் ஒரு புதிய கருப்பு நிற மேல்சட்டையுடன், குதிரைப் பந்தய வீரனைப் போன்ற குட்டையாக வெட்டப்பட்ட முடியுடைய முகத்துடன், ஒரு குண்டான இளைஞனாக போல்சுகின் அவனே வந்து நின்றான்.

அவனது வேண்டுகோளைக் கேட்டபின் இயக்குனர் மறைமுகமாக வேடிக்கையான முறையில் “நான் வேலை நிமித்தமாக யாரையும் இங்கே சந்திப்பதில்லை, அலுவலகத்தில் தான் சந்திப்பேன்.” என்று கூறினார்.

“மாண்பு மிக்கவரே, என்னை மன்னியுங்கள், ஆனால், நம்மிருவருக்கும் பொதுவான அறிமுகமுடையவர்கள் என்னை இங்கே வருமாறு அறிவுறுத்தினார்கள்.”

“ம்ம்..” அந்த இளைஞனுடைய காலணிகளின் கூர் முனைகளை வெறுப்புடன் பார்த்தவாறு உறுமினார் இயக்குனர். “எனக்குத் தெரிந்த வரையில் உங்கள் தந்தை மிகுந்த சொத்துடையவர் தான், உங்களுக்கு ஏதும் தேவையிருக்காது.” என்றார் அவர். “இந்த வேலையைக் கேட்க உங்களைத் தூண்டுவது எது? இங்கே சம்பளமும் மிக சொற்பமானது…”

“சம்பளத்திற்காக இல்லை…எப்படியிருந்தாலும் இது ஒரு அரசாங்க வேலை…”

“ம்ம்…எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் ஒரு மாதத்திற்குள் இந்த வேலை உங்களுக்கு வெறுத்துப் போய்விடும், பின் இந்த வேலையை நீங்கள் விட்டுவிடுவீர்கள், அதே நேரத்தில், இந்த வேலையை தங்கள் வாழ்க்கைப் பிழைப்பிற்கான ஒரு தொழிலாக எதிர்பார்த்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இருக்கிறார்கள். இங்கிருக்கும் பாவப்பட்ட மனிதர்களுக்கு…”

“எனக்கு இந்த வேலை வெறுத்துப் போகாது, மாண்பு மிக்கவரே.” போல்சுகின் குறுக்கிட்டான். “நான் என்னால் முடிந்த அளவு இதை சிறப்பாக செய்வேன், என் கௌரவத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன்.”

இயக்குனருக்கு அது கொஞ்சம் அதிகமெனத் தோன்றியது.

“சரி, சொல்லுங்கள்.” அலட்சியமாக புன்னகைத்தபடி அவர் கேட்டார், “நீங்கள் ஏன் என்னிடம் நேரடியாக விண்ணப்பிக்காமல், அதற்குப் பதிலாக முன்னேற்பாடாக பெண்கள் வழியாக வருவது சரியாக இருக்குமென நினைத்தீர்கள்?”

போல்சுகின் “அப்படி செய்வது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காதென்பது எனக்குத் தெரியவில்லை.” என்று பதிலளித்தான், தர்மசங்கடமாகவும் உணர்ந்தான். “ஆனால், மாண்பு மிக்கவரே, பரிந்துரை கடிதங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லையென்றால், என்னால் ஒரு நன்னடத்தை சான்றிதழ் கொடுக்க முடியும்..”

அவன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து  அதை இயக்குனரிடம் கொடுத்தான். கையெழுத்தாக அரசாங்க மொழிநடையில் எழுதப்பட்டிருந்த அந்த நன்னடத்தை சான்றிதழின் அடிப்பகுதியில் ஆளுநரின் கையொப்பம் இருந்தது. மொத்தத்தில் அதை பார்த்தபோது, ஏதோவொரு தொல்லை பிடித்த பெண்ணிடமிருந்து தப்பிப்பதற்காகவே, அதை வாசித்துக் கூட பார்க்காமல், ஆளுநர் அதில் கையொப்பமிட்டிருப்பார் என்று தோன்றியது.

அந்த நன்னடத்தை சான்றிதழை வாசித்த இயக்குனர், “வேறு வழியில்லை, அவரது அதிகாரத்திற்கு நான் தலை வணங்குகிறேன்…கீழ்படிகிறேன்..” என்று சொல்லியவாறு பெருமூச்சு விட்டார்.

“உங்களது விண்ணப்பத்தை நாளை அனுப்புங்கள்..செய்வதற்கு ஒன்றுமில்லை…”

போல்சுகின் வெளியே சென்ற பிறகு, இயக்குனர் ஒரு வெறுப்படைந்த நிலையில் மூழ்கினார்.

“கோழை!” ஒரு மூலையிலிருந்து மற்றொன்றுக்கு நடந்தவாறு சீறினார் அவர். “என்னவெல்லாமோ செய்து அவனுக்குத் தேவையானதை வாங்கிவிட்டானே, அந்த ஒன்றுக்கும் உதவாத முகஸ்துதி பாடுபவன். அதுவும் பெண்கள் வழியாக, முட்டாள்! ஒட்டுண்ணி!”

போல்சுகின் புறப்பட்டுச் சென்ற கதவின் திசையில் இயக்குனர் காறித் துப்பினார், அதே நேரத்தில் அந்த கதவின் வழியாக ஒரு பெண் உள்ளே வர, இயக்குனர்  தர்மசங்கடத்திற்கு உள்ளானார், அந்தப் பெண் அந்த மாகாண கருவூலத்தின் கண்காளிப்பாளரின் மனைவி.

“ஒரே ஒரு நிமிடத்திற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்…ஒரே ஒரு நிமிடம்…” என்று அந்த பெண் ஆரம்பித்தார். “உட்காருங்கள் நண்பரே, நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்…என்னவென்றால், உங்களிடம் ஒரு வேலை காலியாக இருப்பதாக சொன்னார்கள். இன்றோ, நாளையோ போல்சுகின் என்கிற ஓர் இளைஞர் உங்களை சந்திக்க வருவார்….”

அந்த பெண் தொடர்ந்து பேச, இயக்குனர் மயங்கி விழும் நிலையிலுள்ள ஒரு மனிதனைப் போல, மங்கிய, அதிர்ச்சியடைந்த கண்களுடன் அந்த பெண்ணைப் பார்த்தார், அவரை கூர்ந்து பார்த்து பணிவாக சிரித்தார்.

அடுத்த நாள், வ்ரெமென்ஸ்கி அவரது அலுவலகத்திற்கு வந்த போது, இயக்குனர் அவரிடம் உண்மையை சொல்வதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கு நீண்ட நேரம் ஆயிற்று. அவர் தயங்கினார், தெளிவில்லாமலிருந்தார், எப்படித் தொடங்குவது, என்ன சொல்வது என எதுவும் அவரால் யோசிக்க முடியவில்லை. அந்த பள்ளி ஆசிரியரிடம் உண்மையை முழுதாகக் கூறவும், மன்னிப்பு கேட்கவும் நினைத்தார், ஆனால் ஒரு குடிகாரனுடையதைப் போல அவரது நாக்கு நின்றுவிட்டது, அவரது காதுகள் கொதித்தன, பிறகு, அப்படியொரு அபத்தமான செயலைத் தான் செய்ய வேண்டியிருக்கிறதே என நினைத்து திடீரென அவர் மிகுந்த எரிச்சலிலும் ஆத்திரத்திலும் மூழ்கினார் – இதெல்லாம் அவரது சொந்த அலுவலகத்தில், அதுவும் அவருக்குக் கீழ் வேலை செய்யும் ஒருவரது முன். அவர் திடீரென தனது கை முட்டியை மேசை மீது ஊன்றி துள்ளி எழுந்து கோபமாகக் கத்தினார்:

“உங்களுக்கு இங்கே வேலையில்லை! இல்லவே இல்லை, அவ்வளவு தான்! என்னை நிம்மதியாக விட்டுவிடுங்கள்! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்! தயவு செய்து என்னை தனியாக விட்டுவிடுங்கள்!”

அப்படியே அவர் அலுவலகத்திலிருந்து வெளியே சென்று விட்டார்.

தமிழில்: சுஷில் குமார்

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *