அன்று காலை வடசேரி பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியபோது மணி ஒன்பது ஆகியிருந்தது.பன்னிரண்டு மணிநேர பேருந்து பயணத்தின் களைப்பில் லேசான வெயிலுக்கே உடல் வியர்த்து தலை சுற்றியது. பேருந்து நிலையத்தின் வெளியே வந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது
வாந்தி வரும் நிலைக்கு வந்து விட்டது உடல். கதவைத்திறந்த சுப்பிரியாவின் வயிற்றைதான் நான் முதலில் பார்த்தேன்.அவள் வயிறு ஒன்றும் பெரிதாக வளர்ந்துவிடவில்லை. குளித்து சாப்பிட்டுவிட்டு அவள் வீட்டில் எங்களுக்காக ஒதுக்கிய அறையில் கட்டிலில் சென்று படுத்துக்கொண்ட பொழுது சுப்பிரியா
அருகில் வந்து அமர்ந்தாள்.நான் அவள் வயிற்றை மெல்ல என் கைகளால் வருடினேன்.
“என்னமா” என்றாள்.
“சும்மாதான்”
“கழிஞ்சவாரம் வரும்போது பேரு ஸெலக்ற் பண்ணிட்டு வாறேணி சொன்னியல்லா, லிஸ்ற் எங்க”.
“எங்கலாமோ தெரக்கி கண்டுபிடிச்ச பேராங்கம், ஆம்பளைப்பிள்ளைணா நெடுஞ்சேரலாதன் பொம்பளைப்பிள்ளைணா செம்பியன் மாதேவி”
“அய்யே, இது பண்டையகாலத்து பெயராட்டுலா இருக்கு , பிள்ளேளு பள்ளிகொடத்துல படிக்கண்டாமா, எல்லாம் போட்டு கொமைக்கல்லா செய்யும்”.
“யாம்ட்டி, நல்லாதான இருக்கு”.
“நல்லாதான் இருக்குவு, ஆனா கொஞ்சம் காலத்துக்கு தக்கன உள்ள பேருவள வச்சா தான நல்லா இருக்கும், பிள்ளேளு வளந்து நம்மளல்லா யாசம்”.
“நம்ம பழைய பேருவளை நம்மளே வைக்கலண்ணா வேற யாராங்கம் வைப்பா”.
“நம்ம ஆளுவளுக்க பழைய பேருதான் வேணும்ணா, ஆம்பிளை பிள்ளை பெறந்தா எளையபெருமாளு-ணி வைப்போம், பொம்பளைப்பிள்ளை பெறந்தா
தங்கப்பழம்-ணி வைப்போம்”.
“தங்கப்பழம் எளயபெருமாளுணியெல்லாம் வச்சாதான் ஸ்கூல பிள்ளேள் கிண்டலடிக்கும், ஒனக்கு நான் சொன்னப்பேரு பிடிக்கலியோ”.
“எனக்கு பிடிக்கலப்பா, நான் ஆம்பிளப் பிள்ளை பெறந்தா ஆகாஷ்ணி வைப்பேன் பொம்பளைப்பிள்ளைப் பெறந்தா அக்ஷ்ராணி வைப்பேன்”.
“அது சரி அதுக்கு நீ சுரேஷ் இல்லணா ரமேஷ்ணி வைக்கலாம்.பொம்பளைப்பிள்ளணா பிரியா,ஓத்திரமில்ல”.
அவள் லேசான குணட்டலுடன் “நான் சொல்ல பேருதான் வைக்கணும்” என்றாள்.
“சாதா வீட்டுல பிள்ளேளுக்கு தவப்பனாங்கம் பேரு வுடுயது,ஆம்பிள வுட்டாதாம்ட்டி பேரு நிக்கம்” என்றேன்.
“யான் , பொம்பளேளு வுட்டா பேரு நிக்காதா , மறிஞ்சி வுழுந்திருமோ.
மொதல்ல பிள்ள பெறுயதுல ஆம்பிள்ளேளுக்கு என்ன எடவாடு கெடக்கு,ஆம்பிள்ளேளா வயித்த தள்ளிக்கிட்டு நின்னு பத்து மாசம் கஷ்ட்டப்பட்டு பெறுயது, பொம்பளேளாக்கும் கஷ்டப்பட்டு பிள்ளை பெறுயது, பிள்ளேளு பொம்பளேளுக்குள்ளதாக்கும், அதுவும் காணாதுணி மாசாமாசம் பீரியட்ஸ் வேற”.
“ஆமா இப்பம் உள்ள பொம்பளேளு எதுக்கெடுத்தாலும் இத ஒண்ணு சொல்லிருங்க.நாங்க பிள்ளை பெறுயோம் பிள்ளை பெறுயோமுணி.
ஆனா பழைய காலத்துக்கு இப்பம் எவ்வளவோ கொள்ளாம்,அத சொல்ல மாட்டியல்லா”..
“உண்மய கேக்யதுக்கு காது கொடையதான செய்யும்.காலம் மாறியாச்சில்லா.அதுக்கு தக்கன மனியன் மாறண்டாமா.ஆனா நீங்க சொல்லுயது ஒண்ணு சரிதான் கேட்டியளா, எனக்க அக்கா ஒருத்திக்கி கழிஞ்ச வருஷம் பிள்ளை பெறந்துல்லா அவா வலி வந்து ஆஸ்பத்திரிக்கு போனால
டாக்டர் சொக பிரசவத்துக்கு பாப்போணி சொல்லிருக்காவ, அதுக்கு அவா டாக்டர்ட்ட ‘வலியில போட்டு என்னை கொல்லுயதுக்கு பாக்குயாட்டி, மரியாதைக்கு ஆப்பிரேஷன் தியேட்டருக்கு கொண்டுபேயி அறுத்து எடு கேட்டியா’-ணி சொல்லிருக்கா அந்தால வேற வழியில்லாம அவியளும் ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு பண்ணிருக்காவ, அத்தான்ட்ட கையெழுத்து போட சொன்னதுக்கு போடமாட்டேணி சொல்லிருக்காரு அந்தால இவா அவர ரூமுக்க கூப்பிட்டு, ‘சவுட்டி எல்ல ஒடச்சிபுடுவேன் கையழுத்து போட்டுரு தயழிணி’ சொல்லிருக்கா, அவரு படபடாணி ஓடி பேய் கையெழுத்து போட்டு குடுத்துற்று வேலைக்கு ஓடுனவரு பிள்ளை பெறந்தபெறவுதான் வந்திருக்காரு”.
நான் அவள் வயிற்றையே தடவிக்கொண்டிருந்தேன்.ஒரு மெல்லிய தயக்கத்துடன் என் கை விரல்கள் அவள் வயிற்றுத் தோலை வருடிக்கொண்டிருந்தது.
“ஆம்பளேளுக்கு எங்கள மாதிரி ஒடம்புல ஒரு கஷ்டம் உண்டா சொல்லுங்க பாப்பம்,சாமியே ஒங்களுக்கு கூடல்லா நிக்குவு, அதாங்கம் ஒரு கஷ்டமில்லாத்த ஒடம்ப படைச்சி உட்டிருக்கு ,நீங்க பாட்டுக்கு ஜாலியாட்டு சுத்துறிய.பிரசவ வலி கெடையாது, பீரியட்ஸ் கெடயாது, ஒங்களால மொதல்ல பிரசவ வலியத்தாங்கிகிட முடியுமா,பழய காலத்துல யான வலி குதிர வலிணியாங்கம் சொல்லுவாவ, ஏ மத்தவளுக்க மருமொவா யானவலி வந்து மூணு நாளாட்டு நிக்காளாமிணி சொல்லுவாவ,பின்ன உயிரு பயமும் உண்டு, ஒருக்கா மத்த சின்னமாளு பாட்டிக்க மருமொவா அந்த செவத்த சித்தி உண்டும்லா அவிய மூத்த மொவன் பெறந்தால அஞ்சாறு கெழவியளாங்கம் பிரசவம் பாத்தது.
அவிய வீடு இப்பம் இருக்க எடத்துல முந்தி ஒரு பெரயாங்கம் இருந்து. கரண்டம் கெடயாது, மண்ணெண்ண வெளக்க கொழுத்தி வச்சிக்கிட்டு பெரக்க வச்சி கெழவியளுவ பிரசவம் பாத்திருக்காளுவ.எங்க அம்ம அந்தால போனவிய பிள்ளை இன்னா பெறந்திரம் இன்னா பெறந்தரம்-ணி வெளிய அதுல நின்னுருக்காவ, கனம நேரம் ஆயியம் காணலணி சொல்லிற்று என்ன செய்யாளுவணி பாக்குயதுக்கு உள்ள எட்டி பாத்திருக்காவ, அங்க பாத்தா இந்த கெழவியளு எல்லாம் அவளுக்க கையகால புடிச்சிற்று இருந்திருக்காளுவ, அவா கெடந்து தெவங்கிற்றா, அந்தால எங்க அம்ம ஓடி உள்ள பேய் ‘ஏ கெழளடுவளா தூர போங்கட்டி’-ணி சொல்லி ‘நீ எப்படியாங்கம் முக்குயா, கொல்லைக்கு போறதுமாரி முக்கு பிள்ளே’-ணி சொல்லிருக்காவ, அம்ம சொன்னதுபோல ஒரு முக்குதான் முக்கியிருக்கா, அந்தால பிள்ளை வெளிய வந்துற்று , எங்க அம்ம உள்ள போவலணி சொன்னா இந்த வயசானதுவ அம்படம் சேர்ந்து கொன்னபோட பாத்து அந்த சித்திய, அப்படி கஷ்டமாங்கம் பிள்ளைபேறு, ஆம்பளேளுக்கு இது போல என்ன கஷ்டம், உங்களுக்கெல்லாம் பிள்ளைய பற்றி பேசுயதுக்கு தகுதியே கெடயாது”.
“அதெல்லாம் உண்டுட்டி”.
“என்னது உண்டு. நான் சொல்லுயேணி நீங்களும் அந்தால கதயடிக்ககூடாது என, எங்க அம்ம என்ன நார்ல் பிளசன்ட் ஆஸ்பத்திரியிலாக்கம் பெத்தது. எங்க அப்பா காலையில கொண்டு பேய் ஆஸ்பத்திரியில சேத்திருக்காவ , சேத்திட்டு வேலைக்கு பேயிருக்காவ, அவிய ஆபிஸுக்கு பேய் சேருயதுக்கு முன்ன இங்க அம்மைக்கு வலி வந்தாச்சி, நேர்ஸ்மாரு எல்லாம் சேர்ந்து எனிமா குடுத்திருக்காளுவ, அம்ம கக்கூஸுக்கு போறதுக்குள்ள அவளுவ வெளிய கெடந்து சத்தம், ஏ கற்பவாசல் தொறந்திருக்கு பிள்ள கக்கூஸுக்க விளுந்துரம் வெளிய வாருங்க வாருங்கணி கெடந்து சத்தம் போட்டிருக்காளுவ.அம்மைக்கி பயம், பிள்ள கக்கூஸுக்க வுழுந்திரம்ணி பயந்தே வெளிய ஓடி வந்துட்டாவ, வந்து ஒரு நிமிஷத்துல பிள்ள பெறந்தாச்சி, அப்படி ஒரோரு பிரசவமும் படாதபாடாங்கம், ஆம்பளேளுக்கு என்ன அவனுவளுக்கு பேடு நெறஞ்சா பேலணும் அதாம் வாழ்க்கை”.
“அப்படி இல்லட்டி , ஆம்பளேளுக்க கஷ்டம் பொம்பளேளுக்கு மனசிலாவாது கேட்டியா , ஆனா பொம்பளேளுக்க கஷ்டம் ஆம்பளேளுக்கு மனசிலாவும்”.
“மண்ணாங்கட்டி மனசிலாவும், எங்க அன்னலெட்சுமி பெரியம்மைக்க மொவா மூத்தவா இருக்காலா, அவளுக்கு வீட்டுல வச்சி வலிவந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு பேயிருக்காவ, அத்தான் தான் கூட்டிட்டு பேயிருக்காரு, அங்க போனா நடுராத்திரி பொம்பள டாக்டர் இல்லணி சொல்லி அங்க இருந்த ஆம்பள டாக்டர் பிரசவ வார்டுக்குள்ள பேயிருக்காரு, அத்தான் வெளிய நின்னு துள்ளுகாரு, நேர்ஸ்மாருகிட்ட ஒரே சத்தம் , அந்தாளு யான் உள்ள நிக்காரு , அந்தாளு யான் உள்ள நிக்காருணி , உப்புகுத்தியையும் தூக்கிகிட்டு தெக்கையும் வடக்கையுமாட்டு ஓட்டம். வெளிய நின்ன நேர்ஸ் சொல்லி சொல்லிப் பாத்திருக்கா, பாத்துட்டு அவரு கேக்கலணி சொன்னவுடன , மேக்க எங்கயோ உள்ளவளாக்கம் அவா, அவருக்க கையப்பிடிச்சி ‘உள்ள பேய் பாருல தயழிணி’ இழுத்திருக்கா , இழத்ததுதான் உண்டு மத்தவரு கதவு நெலய எட்டி பிடிச்சிக்கிட்டாரு, அவா பெலத்த குடுத்து ‘பேய் பெஞ்சாதிய பாருல, பாத்தாதான் ஒனக்கு மனசிலாவம் தயழிணி’ உள்ள தள்ளிருக்கா. இவரு நிலைய ஆவி பிடிச்சிக்கிட்டாரு. ‘நான் உள்ளப் போவல நான் உள்ள போவல’-ணி ஒரே சத்தம், அந்தால அவா பல்லயம் கடிச்சிட்டு ‘அனக்கம் காட்டாம அந்த பெஞ்சுல இரம், எழும்பி வந்தீருணி சென்னா சவுட்டி கொடல பிதுக்கிருவேன் கேட்டுக்கிடம்’-ணி சொல்லிட்டு உள்ள பேயிருக்கா. மனியன் பிள்ள பெறந்து வெளிய கொண்டு வாறது வர குண்டி பசபோட்டு ஒட்டுனது மாதிரியாங்கம் பெஞ்சில இருந்திருக்காரு, அதாங்கம் ஆம்பளேளுக்க கத. உடம்புல கஷ்டமில்லாததுனாலயாங்கம் ஆம்பளேளுக்கு பீ பலம் இல்லாத்தது”.
“ஆம்பளேளுக்கும் ஒடம்புல அப்டி உண்டும் கேட்டியா” என்றேன்.
அவள் தன் உதடுகளைச் சுழித்து சிரித்தபடியே அளவங்காட்டினாள். பின் “கற்பப்பை இருக்குவோ” என்றபடி என் வயிற்றைக் கிள்ளினாள்
நான் லேசாகச் சிரித்தபடி அவள் வயிற்றை தடவிக்கொண்டிருந்தேன்.
“ஓய், சொல்லம், ஒமக்கு கற்பப்பை இருக்குவா” என்று வயிற்றை அமுக்கினாள்.
நான் என்னை அறியாமலேயே சற்றுத் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு
“கற்பப்பை இல்லட்டி கொடலு, ஆம்பளேளுக்க கொடலுக்க பசி தெரியுமாட்டி, பயினஞ்சி வயசுல வயறு கெணறாக்கும் கேட்டியா, போடுயதெல்லாம் பேடு யாக்கம். இருவத்தினாலு மணிக்கூறும் கொதிக்கம் பாத்துக்க, நான் பயினஞ்சி வயசுல காலையில பயினஞ்சி இட்லி தின்பேன் , மத்தியானம் முட்டையும், பொரிச்ச சாள மீனும், ஒரு வட்டுலு சோறம் தின்பேன். ஸ்கூலுல இருந்து வீட்டுக்கு வந்து வறுத்த அரிசி மாவை சீனியோ சர்கரையோ போட்டு தின்பேன்.இல்லணா கெழங்கு புட்டு, ரத்திரி திருப்பியும் ஒரு வட்டில் சோறு. புரோட்டா தின்ன போறண்ணக்கி இருவத்தஞ்சி புரோட்டா.ஒடங்காயத் தவிர எல்லாத்தையும் பறிச்சி திங்குயது.ஆம்பளைக்க பசி ஒருநாளும் பொம்பளைக்கி மனசிலாவாது கேட்டியா, வெரலிடுக்குல மாட்டுக அரிசியிலேயே பொம்பளைக்க பசி தீந்திரும் கேட்டியா, ஆனா ஆம்புளேளுக்கு அப்படியில்லை. எல்லா ஆம்பளேளும் காலையில எழும்பி வேலைக்கி ஓடுயானுவல்லா அது என்னதுக்குணி நெனைக்கா, பிள்ளேளுக்கும் பொண்டாட்டிக்கும் சம்மாதிச்சி தட்டுயதுக்கா, தனக்க வயறெ நெனச்சி பயந்தாக்கும் கேட்டியா.
இந்த பேய் பசி பசிக்க பேடு நெறயாம பேயிருமோணியாங்கம் கெடந்து கச்சகாலடிக்கது”.
அவள் கண்களில் நீர் வடிய அமைதியாக இருந்தாள்.நாடித் துடித்துக்கொண்டிருந்தது.என் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டு அடிவயிறு எக்கிச்சுருங்க ஓலமிட்டாள்.
எனக்கு என் மீது வெறுப்பாக வந்தது. நான் பொதுவாக சொல்வதாக நினைத்து இதைச் சொல்லியிருக்ககூடாது. நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.அவள் கண்களின் கண்ணீர் என் மார்பில் வழிந்துகொண்டிருந்தது.
நான் வேறு வழியின்றி இதில் ஒரு உடையவை நிகழ்த்துவதற்காக அவளிடம்
“யாம்ட்டீ அழுயா” என்று கேட்டேன்.
“எங்க அண்ணனுக்கு இப்பமும் பசிக்குமா” என்று வாயில் கோளாய் வழியக் கேட்டாள்.
நான் என் ஆழத்தில் அந்த கேள்வியை எதிர்பார்த்திருந்தேன்.ஆனால் என்னிடம் பதிலெதுவுமில்லை, அதுவுமில்லாமல் நான் இப்பொழுது என்ன சொன்னாலும் அது அபத்தமாகத்தான் முடியும் எனத் தெரிந்து பதிலெதுவும் சொல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
அவள் ஆவேசத்தில் என் நெஞ்சு முடியும் பிடித்துக்கொண்டு “அவன் ஆம்பிள தான , அப்பம் அவனுக்கு பசி தாங்க முடியாதுல்லா,அவன் கொடலு கெடந்து துடிக்கும்லா, இப்பம் குழிக்க அவன் வயறு வத்தில்லா கெடக்கும், பசியில அழுவாம்லா” எனக் கோளாய் என் நெஞ்சில் வழிய அழுதபடியே கேட்டுகொண்டிருந்தாள்.
உடுத்திருந்த நைட்டியின் கீழ் நுனியைப்பிடித்து வழிந்த மூக்கயும் கோளாயையும் துடைத்துவிட்டு நைந்து போன தொண்டையோடு “அவன் சாயுங்காலம் கபடி வெளயாடிட்டு வருவான், ஆளு எப்படி, பாடி பேனாம்ணா நாலுவேர அந்தால உப்பு கோட்டுக்க இந்தக்கரைக்கி தூக்கி எறிஞ்சிருவான், எங்கம்ம இருக்கச் சோத்த எனக்கும் அவனுக்கும் பிரிச்சு தருவாவ , அவன் ரெண்டே நிமிஷத்துல தின்னு முடிச்சிட்டு அடுக்களைக்குள்ள போய் பினியும் சட்டிய உருட்டுவான், ஒருக்கா வீட்டுல ஒண்ணும் கெடக்கலண்ணி புளிய மரத்துல ஏறி நொண்டங்காயப் பறிச்சி தின்னுட்டு கிராணில கெடந்தான்.தெக்க கழியில பேய் பிளாக்கு மீனு புடிச்சிட்டு வந்து திம்பான். கடலுக்கு பேயி ஒரலு புடிச்சிட்டு வருவான். ஒருக்கா கரை ஒதுங்குன ஒரு ஆமைய கம்புல கட்டித்தூக்கிற்று வந்து தின்னான். ஒரு அம்மாவாசண்ணைக்கி ராத்திரி கழியில பிளாக்கு மீனு கெடைக்கலணி கழிக்கரையில இருக்கச்சில அங்கிண போன சாரப்பாம்ப அடிச்சி அதுக்கத் தலையை வெட்டித்தூரப் போட்டுட்டு நல்ல மெளவு பொடி போட்டுத் அவிச்சி தின்னுபுட்டான். அம்ம அண்ணைக்கு அவன, ‘பேய் பேண்டு பாம்பு எறச்சி வயித்துல இருந்து வெளிய எறங்கினப் பெறவு வாலணி’ செல்லி நல்லா அடிச்சி வெரட்டி வுட்டாவ.என்ன செய்யது அப்பா நல்லாதான் சம்பாதிப்பாவ பின்ன என்ன குடி, ஓயாத குடி. கூடுவாரு கூடச் சேந்து இல்லாம ஆயிற்றாவ”.
அழுகையை நிறுத்திவிட்டு குனிந்தபடியே கட்டில் ஓரத்தில் சாய்ந்திருந்தாள்.
விசும்பல் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.மீண்டும் நைட்டி நுனியைத் தூக்கி முகம் துடைத்தவள் என் வயிற்றைத்தொட்டு “பசிக்குவா” எனக்கேட்டாள்.
“இல்லட்டி, பஸ்ஸுல வந்தது தலய கறக்கிற்று கக்கல் வாறது போல இருக்கு”.
“அது ஒண்ணம் செய்யாது, கேஸு, கோதம்பு புட்டு எடுக்கட்டா”.
நான் சரியென்று சொல்லிவிட்டு துண்டு ஒன்றை எடுத்துவிட்டு குளியலறைக்கு சென்றேன்.
அன்று மத்தியானம் சோறு தின்றுவிட்டு நான் உறங்கி முழித்தபொழுது சாயுங்காலம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது.வெளியே சென்றிருந்த மாமனார் திரும்பி வந்திருந்திருந்தார்.எங்கள் அறைக்குள் வந்து நலம் விசாரித்துவிட்டு சென்றார். இப்பொழுதெல்லாம் தொழில் நிமித்தமாக தொடர்ச்சியாக வெளியூரில் தங்கநேர்ந்துவிடுவதால் அவள் வீட்டியலேயே நான் இருந்தாலும் ஒருவித அன்னியத்தனம் வந்துவிட்டது. ஆகவே திரும்பி வரும்பொழுது நலம் விசாரிப்புகள்.
நான் முகம் கழுவிவிட்டு வந்தபொழுது சுப்பிரியா புட்டு கொண்டுவந்து எங்கள் அறையில் வைத்திருந்தாள். நான் அதை சீனி போட்டு விரசியதும் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
நான் கைகளில் சிறிது புட்டை எடுத்து அவள் வயிற்றின் அருகில் கொண்டு சென்று “புட்டு தின்கிறியா மக்ளே” என்றேன்.
“ஆமா தவப்பனுக்கும் மொவனுக்கும் புட்டு அவிச்சி தட்டுயதுக்குதான என்ன பெத்து போட்டிருக்காவ” என்றாள்.
“அப்பம் ஆம்பிள தான்” என என்றேன்.
“ஆம்பிளனா கொள்ளாம் தான. என்ன ஒரு பயம்ணா, குடிக்காம வாங்காம வளக்கதுதான் பயம் இந்தகாலத்துல” என்றபடி நெஞ்சில் கைவைத்துக்கொண்டாள்.
மாமனாருக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தவன் பாலாஜி , இளையவள் இவள்.
மாமனார் குடிக்கு அடிமையாயிருந்தவர்.தினமும் தவறாமல் வேலைக்கு செல்வார், ஆனால் வீட்டிற்கு சொற்ப பணம் தான் மிஞ்சும்.பாலாஜி ஊரின் பெரும்பாலான இளைஞர்களைப் போல கபடி விளையாட்டில் ஈடுபாடு கொண்டு நன்றாக பேரெடுத்துக்கொண்டிருந்தான்.எப்படியானாலும் ஒரு அரசு நிறுவனத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டில் கபடி வழியாக வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற வெறியில் இருந்தவன் ஒரு நாள் திருநைனார்குறிச்சியில் நடந்த விளையாட்டில் நெஞ்சில் அடிபட்டு இறந்து போனான். அவன் இறந்தது முதல் மாமனார் குடிப்பதில்லை. பத்தாண்டுகளுக்குப்பிறகு எங்கள் திருமணம் நடந்த பொழுது குடும்பம் நல்ல நிலைக்கு வந்துவிட்டிருந்தது. மாமனார் வேலைக்கு போவதை நிறுத்திவிட்டு நாகர்கோயிலின் வெளியே வயற்காடுகள் அழிக்கப்பட்டு வீடுகளாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் டைல்ஸ் கடையொன்று துவங்கி நடத்திக்கொண்டிருந்தார்.
மாமனாரின் குரல் கேட்டு சுப்பிரியா “நம்மளதான் கூப்பிடுயாவ” என்றாள்.
நாங்கள் எழுந்து வெளியே சென்றவுடன் “எப்போ, களியங்காட்டுக்கு கெழக்க ஒரு ஒரு ஏக்கர் வயல் ஒண்ணு வங்கணும் பாத்துக்க, அதான் அத ஒங்க ரெண்டு பேரு பேருக்கும் எழுதலாம்ணு நெனைக்கேன் , அடுத்த வாரம் எடவாடு இருக்கம் , அடுத்த வாரம் வீட்டுல இருக்கது மாதிரி பாத்துக்கிடுங்க என” என்று சொல்லிவிட்டு எங்களின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறிவிட்டார்.
நாங்கள் கைகழுவி விட்டு அறைக்குள் வந்ததும் நான் கட்டிலில் அமர்ந்துகொண்டேன். அருகில் வந்து அமர்ந்த சுப்பிரியா
“வயலு தயழிமொவனுக்க வயலு, என்னத்த சம்பாதிச்சு என்னத்துக்கு எனக்க அண்ணனுக்க பசிய ஆத்த முடியுமா, தின்னுய காலத்துல அவன் பசியாட்டு கெடந்தான்” என்றபடி அழுதாள்.
குடியிலிருந்து திருந்திவிட்ட தன் அப்பாவை எப்பொழுதும் பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பவளை தேவையில்லாமல் காலையில் எதையோ பேசி வெறுக்க வைத்துவிட்டதை எண்ணி குற்றவுணர்ச்சியில் அவள் முகத்தைப் பார்க்காமல் கட்டிலில் கிடந்த கைப்பேசியை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தேன்.
“நான் ஒண்ணு சொல்லட்டா, ஒருக்கா அண்ணனுக்க குழியில போய் படைச்சிற்று வருவமா”.
“ஆண்டு இப்பம் வருவா” என்றேன்.
“ஆண்டு என்னத்துக்கு பாக்கணும், ஆண்டுல ஆவணியில கொடுக்கதுக்கு இது என்ன கைநீட்டமா, பசி, அவனுக்கு பசிக்கும்லா” என்றாள் கண்கள் சிவந்திருக்க.
நான் மறுப்பேதும் சொல்லாமல் சரியென்றேன்.
அடுத்த இரண்டு நாட்களில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து ஒரு வைப்புகாரரை வரவழைத்து பணம் கொடுத்து என் மாமனாருக்கு தெரியாமலேயே படையலுக்கு தயாராகினாள்.மாமனார் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த அடுத்த வாரத்தில் அதிகாலையில் தொடங்கிய சமையல் சாயுங்காலம் முடிய நாங்கள் பாலாஜியின் குழியிருக்கும் விளைக்கு எங்கள் காரில் எல்லவற்றையும் ஏற்றிவிட்டு புறப்பட்டோம். குழந்தை வயிற்றிலிருக்கும் பொழுது இதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன எல்லா எதிர்ப்புகளையும் மீறி பாலாஜியின் குழியில் படையலிட்டோம். நான் தான் எல்லாவற்றையும் விளம்பினேன். அரிசிமாவுப்புட்டு, கோதம்பு புட்டு, கூவுரவு புட்டு, கெழங்கு புட்டு, கல்லிக்காய் கறி, ஒரலு கூட்டு , பொரிச்ச சாளமீனு, குதிப்பு மீன் கறி,குத்தா மீன் கறி, மாங்காய் போட்டு அவிச்ச சாள மீனு, அதிரசம்,அச்சு முறுக்கு, முந்திரி கொத்து, உன்னியப்பம், தெரளி எலக்கொழுக்கட்டை, சக்க கொழுக்கட்ட,பனையோல கொழுக்கட்ட, பொன்னி அரிசிச் சோறு , சம்பா அரிசிச்சோறு , அம்பை பயினாறு சோறு , சிறுபயறு பாயாசம் , அடப்பாயாசம், கிழங்கு பப்படம்,பயினி வுட்டு கிண்டுன பெரும்பயிறு களி,சுக்கும் கருப்பட்டியும் போட்டு இடிச்ச உளுந்தமாவு, உளுந்தஞ்சோறு, ஆணக்கறி, ஓட்டப்பம் என எல்லாவற்றையும் ஒரு பெரிய தூத்துக்குடி வாழையிலையில் விளம்பினேன்.
அவள் அம்மாவின் கல்லறையில் சாய்ந்தவாறு பாலாஜியின் கல்லறையை பார்த்து அழுதுகொண்டிருந்தாள். மெல்லிய சிணுங்கலுடன் “எண்ணா எல்லாம் கொண்டு வந்திருக்கம்ணா , பட்டினியா கெடக்காதல , சாப்பிடுல, ஓன் பசியறியாம இருந்துட்டம்ல” என்று வாப்பாறிக்கொண்டிருந்தாள். நான் கைகளைக் கட்டிக்கொண்டு கல்லறையில் எரிந்து கொண்டிருந்த சுடரைப் பார்த்தபடி அருகில் நின்று கொண்டிருந்தேன்.
சுப்பிரியா சற்றென்று குரலை உயர்த்தி “லே அன்னா கிட்ட கெடக்காலா, சில்லாட்ட, அவளுக்கு ஆணுக்க வயிறு தனிணி அறியாதவளாக்கும் கேட்டியா, அவளுக்க மாப்பிள அங்கொரு கெழவன் கெடக்கான் , பணத்த சீப்பு சீப்பாட்டு அறுத்து பீரோல வச்சிருக்கான், வயித்துல சாராயத்த ஊத்தி நெறச்சவன்,
பிராயத்து ஆம்பளைக்க பசி என்னணி அறியாதவன் , நான் வந்திருக்கம்ணா , ஆம்பள வயிற்றுப் பசி அறிஞ்சி பொங்கி கொண்டு வந்திருக்கம்ணா.வாணா வந்து சாப்பிடுணா” என்றாள்.
அவளின் ஓலத்தைக் கண்டு நான் சற்று பதற்றம் கொண்டவனாக சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “மக்ளே போவம்ட்டி நேரம் ஆவுவு” என்றேன்.
அவள் பாலாஜியின் கல்லறையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
இரண்டு நிமிட அழுகையும் விசும்பலுக்கும் பின் ஒரு ஓலமுடன் “வால வந்து தின்னுல புண்டச்சிமோன” என்று கத்தினாள்.
நான் அவளைப்பிடித்திழுத்து சென்று வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றினேன். காருக்குள் திமிறிக்கொண்டும் வாப்பாறிக்கொண்டும் வந்தவளை
எப்படியோ சமாளித்து வீட்டில் கொண்டு வந்து விட்டேன். அன்று நடந்ததை எதுவும் அறியாத மாமனார் இரவு வீட்டிற்கு வந்து பீரோவைத் திறந்து இரண்டு கட்டு பணத்தை வைத்துவிட்டு போவதைப் பார்த்துவிட்டு அழுகையோடு என் அருகில் வந்தாள்.கட்டிலில் அமர்ந்தவள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு
“ஒரு நாளு அண்ணன் கபடி விளையாடிற்று வந்தானா, அம்ம முன் வாசல் படியில இருந்து ஈக்கு ஆய்ஞ்சிட்டு இருந்தாவ, இவன் நேரா பேய் அடுக்களைக்க பானைய உருட்டுனாம், உள்ள ஒண்ணும் இல்லணி சொன்னதும் படிக்கிட்ட வந்து ‘எதாவது வச்சி போடப்புடாதாட்டி புண்டாமொவளணி’ ஏசினானான் , அதுக்கு அம்ம
, ‘கொப்பன் கனமா உண்டாக்கி தட்டுயான் அத நான் எடுத்து உறியில அடுக்குனேன்-னி’ சொன்னாவ, அந்தால எறங்கி தெக்க கழிக்கு போனான்.எம்மா எனக்க அண்ணன். இப்பம் எல்லாம் தின்னிருப்பாம்லா , பசி அடங்கிருக்கும்லா” என்றபடி என் நெஞ்சில் சாய்ந்து படுத்து வெகுநேரம் அழுதுகொண்டிருந்தாள். உறங்கிவிட்டிருந்தவளை ஒரு குழந்தையைப் போல ஏந்தி கால்களை நீட்டி கட்டிலில் செம்மையாக கிடத்திவிட்டு மென்மையாக அவள் வயிற்றை அணைத்தபடி உறங்கினேன்.
அவள் அம்மா இல்லாததனால் அவளின் சித்திதான் பிரசவ நேரத்திலும், அதற்கு பின் குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் துணையாக இருந்தார்.மாமானார்தான் அவளின் சித்தியை சட்டிப்பானை தொடும் நிகழ்வு வரை இருந்துவிட்டு போ என்று சொல்லியிருந்தார். சட்டிப்பானை தொட்ட அடுத்தநாளே அவளைக்கூட்டிக்கொண்டு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். நான்கைந்து மாதங்கள் கழித்து அவளின் சித்தி அவளைப் பார்பதற்காக வந்திருந்தார்.
நான் மாமியுடன் எங்கள் வீட்டு நடு அறையில் இருந்து பேசிக்கொண்டிருந்தேன். சுப்பிரியா அறைக்குள் சென்று பாலாஜிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஆ, யாம்ல , யாம்ல” என்று கத்தியபடியே பிள்ளைக்கு இரண்டு அடி கொடுக்கும் சத்தம் கேட்டது.
“யாம்ட்டி” என்று சத்தம் போட்டுக்கொண்டு சித்தி அறைக்குள் ஓடினார். சிறிது நேரத்தில் வெளியே வந்து “ஆம்பளப்பிள்ளைக்கு பாலு குடுக்கதுண்ணா சும்மாவா, இழுத்து உறிஞ்சாக்கம் குடிக்கம்” என்றபடி வந்து இருக்கையில் அமர்ந்தார்.
***
-ஜெயன் கோபாலகிருஷ்ணன்