மானுடவியல்

அவள் இதுவரை சென்றிராத அந்த நாட்டின் சில பகுதிகள் அவள் புழங்கிய, பழகிய உலகத்திலிருந்து வேறுபட்டவை. அதனால்தான் அங்கே சென்று மானுடவியல் ஆய்வை அவள் மேற்கொள்ளத் திட்டமிட்டாள். நான்கு நாட்கள் விமானத்திலும் பஸ்ஸிலும் பயணித்து அதன்பின் ஏழெட்டு மைல்கள் ஒரு பள்ளத்தாக்கின் வழியே நடந்து அங்கே வந்து சேர்ந்திருந்தாள். அவளது ஆய்வுக்காக சர்வதேச மானுடவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிலிருந்து பெரும் நல்கை கிடைத்திருந்தது.

அவள் இதுவரை பார்த்திராத சில மரங்களுடைய அடிப்பகுதிகள் இணைந்தும் பிணைந்தும் உயர்ந்து பெருத்திருந்த நிலப் பகுதியிலிருந்து ஜன நடமாட்டத்தைக் கண்டாள். அந்த இடத்தை அவள் தன்னுடைய பாக்கட் சைஸ் நோட்புக்கில் குறித்துக்கொண்டாள். அந்த மரங்களுக்கு அடியில் ஐம்பது அறுபது பேர் அமரக்கூடிய வகையில் வட்டமான மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது மரங்களுக்குப் பின்னால் சிலர் அமர்ந்திருந்தனர். அந்த மேடைக்கு அருகில் சென்ற அவள் அது கல்லால் செய்யப்பட்டிருக்கிறதா, இல்லை மரத்தாலா என்று தொட்டுப் பார்த்தாள். நிச்சயம் சிமெண்டோ கான்கிரீட்டோ இல்லை. அந்த மேடையின் விஸ்தீரணம் பற்றியும் அதன் உயரத்தையும் கட்டுமானத்தின் சிறப்பையும் அவள் குறித்துக்கொள்ளத் தவறவில்லை.

அந்த மேடையில் மரங்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் அவள் வந்ததைப் பார்க்கவில்லை. அல்லது அவர்களுக்கு அவள் பொருட்டாகவே இல்லை. அப்போது அவள் ஒன்றைக் கவனித்தாள். அவர்கள் யாரும் ஆடை அணியவில்லை என்பதோடு அவர்கள் யாருடைய உடலிலும் தோல் இல்லை. மரங்களைச் சுற்றிச் சென்று தான் அனுமானித்ததை உறுதிப்படுத்திக்கொண்டாள்.

மேடைக்கு எதிரே தேநீர்க் கடை போல ஒரு சிறிய கடை இருந்தது. அங்கே ஏழெட்டுப் பேர் நின்றுகொண்டிருந்தனர். கடைலிருந்து ஒரு சிறுவன் சுறுசுறுப்பாக அவர்களிடம் கோப்பைகளை நீட்டிக்கொண்டிருந்தான். கடையை நோக்கி அவள் நகர்ந்தாள். அவர்கள் உடல்களிலும் தோல் இல்லை. கோப்பையிலிருந்து தொடங்கிய ஒருவரை உற்றுப் பார்த்தாள். தொண்டைக் குழி வழியாக உணவுக் குழாயில் ஊதா நிற திரவம் இறங்கியது. இரைப்பைக்குள் அது சென்றடங்கியது. இளஞ்சிவப்பில் வயிற்றுத் தசைகள் அசையத் தொடங்கின. நின்றபடிக்கே தன் நோட்புக்கைத் திறந்து இவற்றை வேகமாகக் குறித்துக்கொண்டாள்.

அவனது உணவுக் குழாயின் வலது பக்கம் அவளுடைய கண் சென்றது. வலது பக்கம் துடித்துக்கொண்டிருந்தது இளம் மஞ்சளுக்கும் இளம் ஆரஞ்சுக்கும் இடைபட்ட நிறம் கலந்த இளஞ்சிவப்பு வண்ணம் கொண்ட, குழாய்கள் பொருத்தப்பட்ட சிறிய பை ஒன்றின் பகுதியாகத்தான் இருக்கும். அப்பகுதியில் o போன்ற ஆங்கில எழுத்து ஒன்று மின்னித் தெரிந்தது. அந்த நபருக்கு அடுத்ததாக நின்றுகொண்டிருந்த ஒருவரின் அதே உடற்பகுதியைப் பார்த்தாள். அதில் ஆங்கில எழுத்து Iயை ஒத்த ஒளிர்கோடு தென்பட்டது.

இந்த எழுத்துகள் அவளுக்கு ஒரு யூகத்தைத் தந்தது. ”மக்கள்: உடற்கூறுகள் காட்டும் பண்பாடு” என்று தலைப்பிட்டு எழுத ஆரம்பித்தவள், தன் கண்ணைக் கீழே ஓட்டியவுடன் “மக்களை” அடித்து ”ஆண்கள்” என்று எழுதினாள். ”நம்முடையதைப் போலவே பை வடிவில் உள்ள அவர்களுடைய இதயங்களில் ஆங்கில எழுத்துகள் தெரிகின்றன. இது பற்றி விசாரிக்க வேண்டும். (1) ஆங்கிலத்தை அவர்கள் இதயங்கள் நேசித்து ஈடுபட்டிருப்பதன் அடையாளமாக இது இருக்கலாம்; அல்லது (2) அவர்கள் காதலிகளின் பெயர்களின் முதலெழுத்துகளாக இருக்கலாம். இதயத்தில்தானே நேசிப்பவர்களின் பெயர்களை ஏந்திக்கொள்கிறோம்?” கடைசி வாக்கியத்தை அவள் எழுதியபோது அவளுக்குத் தன் காதலன் மைக்கின் ஞாபகம் வந்து படுத்தியது. பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கும் தன் இதயத்தில் M என்ற முதலெழுத்து ஒளிர்ந்துகொண்டிருக்கும் என்று ஒரு கணம் நினைத்தவள், தன் ஜெர்கின் ஜிப்பை கவனமாக மேலே இழுத்துவிட்டுக்கொண்டாள்.

***

செல்லம்

என்னுடைய கொள்ளுத் தாத்தாவுக்கு என் தாத்தா ரொம்பச் செல்லம். கொள்ளுத் தாத்தா “பசங்களா” என்று முன்னறையிலிருந்து அழைத்தால் கொல்லை வாசல்படியில் நின்றபடி என் தாத்தாதான் பதில் சொல்வார் என்பார்கள். தாத்தாவுக்குப் பதினோரு சகோதர சகோதரிகள். இதில் யாரும் பிறந்ததற்குப் பின்னர் கொள்ளுத் தாத்தாவின் முன் வரவேயில்லை என்பது தகவல். என் அப்பா என் தாத்தாவுக்கு ரொம்பச் செல்லம். தூங்கும்போது என் தாத்தாவுக்கு எட்டடி தொலைவில் என் அப்பா மட்டும்தான் படுத்துக்கொள்ள அனுமதிப்பாராம். இதனால் அப்பாவின் நான்கு சகோதரர்களும் அவர் மீது பொறாமைப்படுவதில் அப்பாவுக்கு ஒரே பெருமை. ஆனால் நம் தலைமுறையின் விஷயமே வேறு. பிள்ளைகளை மடியில் உட்கார்த்தி வைத்துக்கொள்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையும், ஏன் அவர்களுடைய வளர்ப்புப் பிராணிகளையும்தான். ஒரு முறை என் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி வளர்க்கும் பூனை சில நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த ஓணான் என் மடி மீது வந்து அமர்ந்துகொண்டது. ’வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்ட’ பழமொழி நினைவுக்கு வர ஓணானிடம் அதைச் சொல்வது நாகரிகமில்லை என்று கருதி மௌனமாக இருந்ததால் ’பழங்காலத்துச் சிடுமூஞ்சி’ என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு இறங்கிப் போய்விட்டது.

***

இடைவெளி

வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் கிராமத்தில் வந்து வாழ்க்கையைக் கழிக்கத் திட்டமிடுபவர்களைப் புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையில் நக்கலாக இடித்துக் காட்டியிருந்தது அவளுக்கு நெருடலாக இருந்தது. கிராமம் என்ன வாழ்வுக்கும் சுடுகாட்டுக்கும் இடையில் ரேழியா, உங்களால் ஒரு நாள் இங்கே வந்து குப்பைகொட்ட முடியுமா என்று அந்தக் கட்டுரையில் அவர் கேட்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவள் தன் கிராமத்துக்குச் செல்லும்போது அந்த வரிகளை நினைக்காமல் இருக்கமுடியாது. அங்கே செட்டில் ஆகிவிடும் அவள் முடிவுக்கு இந்த வரிகள் ஆப்பு வைத்துவிட்டதாகத் தோன்றும். என்றாலும் அவளது பூர்வீக வீடு அங்கேதான் என்பதால் அந்த வரிகளை எப்படியாவது மறந்துவிட தீர்மானித்தாள்.

சென்ற வாரக் கடைசியில் அவள் கிராமத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவள் தம்பியின் மகளும் மகனும் அவர்களுக்குப் பள்ளி விடுமுறை என்பதால் தாங்களும் கூட வருகிறோம் என்றார்கள். “நெல்லுக் காச்சி மரம்” என்று என்றைக்காவது அவர்கள் சொல்லிவிடலாம். அந்தக் கோரத்தையெல்லாம் கேட்டுவிடக்கூடாது என்று எண்ணி அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றாள். வயல் என்றால் என்ன என்று கூட வந்து தெரிந்துகொள்ளட்டும். கிராமத்தில் அவளது பூர்வீக வீட்டில் சின்ன ரிப்பேர் நடந்துகொண்டிருந்தது. அதையும் மேற்பார்வையிட்டு வந்து விடலாம்.

திருச்சிக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து ஒரு காரை வாடகைக்குப் பிடித்து அவர்கள் வீட்டுக்கு வந்து இறங்கியபோது ஒரு மயில் ஒய்யாரமாக நடையில் நின்றுகொண்டிருந்தது. “ஒய்யாரமாக” என்ற விவரணை வாக்கிய அழகுக்காக போட்டது. அது சோர்வாக அல்லது பசியோடு நின்றுகொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்? அவர்களைப் பார்த்தும் நகர்வதாக இல்லை. மூவரும் அதைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்கள். மயில்கள் ஊரில் கிராமத்தில் அதிகமாகிவிட்டதென்றும் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்துவிடுகின்றன என்றும் வாட்ச்மேன் கூறினார். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு சித்தாள் “பாம்புத் தொல்லைதான் காரணம்” என்றார். “என்ன, இங்கே பாம்பிருக்கா?” பதறிக் கேட்டாள். “இல்லை, எப்பவாவது வரும். அன்னிக்கு ஒரு சட்டை கெடந்தது” என்றார் வாட்ச்மேன். “சட்டைனா என்ன?” தம்பி மகனுக்குத் தெரியவில்லை. வாட்ச்மேன் விளக்கிக்கொண்டிருந்தார்.

நகரத்தில் நள்ளிரவுக்குப் பிறகும் வராத இரவு கிராமத்துக்கு ஏழு மணிக்கே வந்துவிடுகிறது. எட்டு மணிக்கு வீடுகளின் மீது இருள் கூடாரமாகக் கவிந்துவிட்டது. அமாவாசை வேறு. அந்தக் கூடாரத்துக்குள் வீடுகளின் மின்விளக்குகள் மின்மினிகளாக பொலிவிழந்து தெரிந்தன. பத்து மணி வாக்கில் இருளைக் கிழித்துக்கொண்டு மயில்களின் குரல்கள். “மயில் கத்துது” என்றாள் அவளது தம்பியின் மகள். “ஆமா, நாம வர்றப்ப குயில் கத்திச்சி, இப்போ மயில்” என்றான் தம்பியின் மகன். இந்தக் காலக் குழந்தைகளுக்கு எல்லாமே கத்தலாகிவிட்டது. மாடு கத்துகிறது. காகம் கத்துகிறது. காலிங் பெல் கத்துகிறது. அவர்களுடைய வினைச்சொற்களைத் திருத்தும் நோக்கத்தில் “மயில் அகவியது,” “குயில் கூவியது” என்றாள் அவள். இருவரும் உடனே ஆமோதித்தார்கள், “ஆமா, குயில் அப்ப கத்திச்சி. மயில் இப்ப கத்திச்சி.” நுட்பமாக ஏதாவது சொன்னால் இந்தத் தலைமுறை புரிந்துகொள்வதில்லை. அவளுக்குச் சலிப்பாக இருந்தது.

“இல்லடா, சரியான வினைச் சொல்ல பயன்படுத்தணும்.”

“வினைச் சொல்னா?” கேட்டது தம்பியின் மகன். அவள் பதில் சொல்வதற்குள் “அங்கே தரைல ஏதோ போற மாதிரி இருக்கு” என்று அவன் காட்டினான். ”ஊர்கிற மாதிரி” என்று திருத்த வேண்டும் என்று எண்ணியபோதே “ஐயயோ” என்று பயத்தைக் காட்டிவிட்டாள் அவள்.

“என்ன அத்தே?”

“ஏதோ போற மாதிரினு சொன்னியேடா?”

“அத்தை பயந்துட்டா, பாத்தியா?” என்றான் அவன் தன் தங்கையிடம்.

“சரியான பயந்தாங்கொள்ளி அத்தை.” கேலி செய்தாள் தங்கை.

“பாம்பு என்ன அத்தே செய்யும், ஸ்டிக்கால தட்டினா போயிடப்போவுது.”
இருவரும் உரக்கச் சிரித்தார்கள். அவளும் சேர்ந்து சிரித்தாள்.

விடிந்ததும் அவர்களுக்கு “மயில் அகவுகிறது” என்று கற்றுத்தர வேண்டும் என்று அவள் முடிவு செய்தாள். அவள் தம்பியின் மகள் தன் சகோதரனிடம் கூறிக்கொண்டிருந்தாள் “டுமாரோ ஒரு ஸ்னேக்கைப் பிடிச்சிட்டு வர்ரோம். பயப்படாம இருக்க அத்தை கத்துக்கணும்.”

***

கடைசியில்

“வா, சீக்கிரம்”
“இதோ.”
வானம் அழைக்க பூமி தன் தலைகளைத் திருப்பியபடி மேலே ஏறுகிறது. வெடிக்கும் எரிமலைகளின் எக்காளம். நட்சத்திரங்கள் ஓடிக் காணாமல் போகின்றன. மேகங்கள் பொடிப் பொடியாகி உதிர்கின்றன. இருளின் பைசாசக் கூட்டமென காற்றுகள் ஊளையிடுகின்றன, “நேரம் வந்துவிட்டது.”
இருள். அதில்தான் எத்தனை வகை! பேரிருள், காரிருள், அடர் இருள், ஆழ்பாசி நிற இருள், லேசாக சாம்பல் பூத்த இருள், பேய்க் கூட்டங்களை ஒத்த இருள் கூட்டங்கள். அவற்றோடு மனித மனங்களிலிருந்து வெளிப்பட்டுக் கரும் ரேகைகளாகக் கூடுபவை.
ஒவ்வொரு நீர்நிலையிலும் மட்டம் உயரத் தொடங்குகிறது. கிணறுகள் குட்டைகளாகி ஏரிகளாகி ஆறுகளாகி கடல்களாகின்றன. எங்கெங்கும் கடல்கள், கடல்கள் குவிந்து கும்பல்களாகிக் கூக்குரலிடும் சமுத்திரங்கள்.
நொடி தாமதிக்க, குழந்தை ஒன்று மேலே எழுகிறது. சுற்றிமுற்றிப் பார்க்கிறது. இங்கேதானே தழைத்திருந்தது ஆலமரக் காடு! சில நொடிகள் செல்ல, பரபரத்துத் தேடுகிறது. அதற்கு வேண்டியது ஓர் இலை, ஒரே இலை.
நூறு, ஆயிரம், நூற்றாயிரம் மைல்கள் உயர்ந்துவிட்ட நீரின் முன் மரங்கள் எம்மாத்திரம்! அவை எங்கோ கணக்கிட முடியாத அடியாழத்தில் சிக்கிக்கொண்டுவிட்டன.
மக்காத பிளாஸ்டிக் துண்டு ஒன்று அழிபடாமல் எப்படியோ தப்பி மிதந்தும் மூழ்கியும் அலைபாய்கிறது. குழந்தை ஒரு தவ்வலில் அதைக் காலால் பற்றுகிறது. புரண்டு அதன் மீது ஏறிப் படுக்கிறது. இதுவரை யுக புராணம் எழுதிய எவருக்கும் இனி எழுதப் போகும் எவருக்கும் அது பிளாஸ்டிக் துண்டின் மீது படுத்திருப்பது தெரியப்போவதில்லை. யாரும் உயிரோடிருக்க வாய்ப்பேயில்லை.
குழந்தை பொக்கை வாய் திறந்து புன்னகைக்கிறது. ஒரு கடமையை எப்படியோ நிறைவேற்றியாயிற்று.

***

-பெருந்தேவி

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *