விடிந்து கொண்டிருந்தது. தோட்டத்துக்கு நடுவேயமைந்த வீட்டுக்கு முன்னால் வலதுபக்கமாக இருந்த மாட்டுக் கட்டுத்தாரையில் ராமசாமி சாணியள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தார். கட்டுத்தறியைத் தாண்டி சிறு மைதானம் போலயிருந்த களத்தின் மையத்தில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளங்கள் சிறுசிறு குமிகளாக குவிக்கப்பட்டு தார்ப்பாயினால் மூடப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக பேருந்து நிறுத்தப்பட்டிருந்து. மாட்டை அவிழ்த்த ராமசாமி கன்றுக்குட்டி கட்டியிருந்த இடத்துக்கு அதை பிடித்துக் கொண்டு வந்தார். கன்றின்வாய் மடி மோதி காம்புகளில் சுரவை உண்டாகியதும் பழையபடி மாட்டை இழுத்துக்கொண்டுபோய் அதன் கிடையில்கட்டி பால் பீய்ச்சத் துவங்கினார். கன்றுகுட்டியை மாட்டிடம் அவிழ்த்துவிட்டும் மடிசுரந்தபிறகு இழுத்துகட்டிவிட்டுப் பால் கறக்கலாம்தான். ஊரிலே நிறையப்பேர் அப்படித்தான் கறக்கிறார்கள். ஆனால், கன்றுகுட்டியை பாலூட்டப்பாலூட்ட இழுத்துக்கொண்டுவந்து கட்டுவது கஷ்டம். கஷ்டமான காரியங்களெதையும் ராமசாமி செய்வதில்லை.
ஆசாரத்தின் சுவரையொட்டி பாய்விரித்துப் படுத்திருந்த அப்பத்தாக் கிழவி எழுந்து உட்கார்ந்தாள். பக்கத்துப் பாயில் படுத்திருந்த காயத்திரி புரண்டு படுத்தாள். காயத்திரிக்கு பத்துவயது நடக்கிறது. உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். பல்துலக்கி முகம்கழுவிய அப்பத்தா நெற்றிக்கு திருநீறிட்டபடி மறுபடியும்வந்து படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டாள். டம்ளர்களுடனும் காபி குண்டாவுடனும் சமையலறையிலிருந்து வெளிப்பட்ட சாமாத்தாள் டம்ளர்களையும் குண்டாவையும் அப்பத்தாளிடம் வைத்துவிட்டு ‘ரண்டுபேரும் ஊத்திக் குடிச்சிக்கங்க.. விசா வெண்டையங்காடு தண்ணி கட்டீட்டிருக்கிறா அவுளுக்கொரு கிளாசு குடுத்துட்டு வந்தர்றேன் ’ என்றபடியே இரண்டு டம்ளர்களில் காபியை ஊத்திக்கொண்டு ஆசாரத்து மூலையில் மகன் உறங்கிக் கொண்டிருந்த கயிற்றுக்கட்டிலின்கீழ் ஒன்றை வைத்துவிட்டு மற்றொன்றை மகள் விசாலாட்சிக்கு கொண்டு சென்றாள். வெண்டையங்காடு வீட்டையொட்டியே மேற்புறத்தில் இருந்தது. காதுகளுக்குள் பனி போகாதவாறு உருமால் கட்டியபடி விசாலாட்சி நீர் பாய்த்துக் கொண்டிருந்தாள். விடிவதற்கு முன்பாகவே மோட்டாரை போட்டுவிட்டாள் போலிருக்கிறது. டார்ச்லைட் வரப்பின்மேல் வைக்கப்பட்டிருந்தது.
சாமாத்தாள் திரும்பியபோது படுக்கையில் அமர்ந்தபடியே காயத்திரி காபி குடித்துக் கொண்டிருந்தாள். கிழவி காபியைக் குடித்துமுடித்துவிட்டதுபோல. வெற்றிலைக்கு பாக்கு இடித்துக் கொண்டிருந்தாள். ‘ஏண்டிக் கழுதை.. எத்தனைதடவை சொல்றது உனக்கு? வாயைக் கொப்புளிச்சிட்டு வந்து பிறகு காபி குடிக்கோணம்னு’ என்றபடியே கயிற்றுக் கட்டிலைப் பார்த்தாள். மகன் காபியைக் குடித்துவிட்டு மறுபடியும் போர்த்திப் படுத்துக் கொண்டிருக்கிறான்.
“குமாரு.. டேய் குமாரு.. எந்திரிசாமி சித்தே.. மணி ஏழாகப் போவுது”
போர்வையை விலக்கி சடவுமுறித்தபடியே எழுந்து உட்கார்ந்தவன் எரிந்து விழுந்தான். “உங்கிட்ட எத்தனவாட்டி சொல்றது? அரைப்பேரு சொல்லிக் கூப்பிடாதே கூப்பிடாதேனு”
“என்னடா கெரகமாயிருக்குது உன்னால.. எப்பவும் கூப்பிடறதுதானே? இந்த நாளுநாளா என்ன வந்தது உனக்கு? இப்படி வள்ளுனு வுழுவறே”
“பாட்டி.. மாமா இப்ப பேரை மாத்திக்கிச்சு. இனி மாமாவைக் கூப்பிட்டா சூரியன் முத்துக்குமார்னுதான் கூப்பிடோணம் தெரிஞ்சுதா..” என்று படுக்கையில் அமர்ந்திருந்தபடியே காயத்திரி கூறினாள்.
“அடப்பாவி என்னடா ஆச்சு உனக்கு? நாள்நட்சத்திரமெல்லாம் பார்த்து கொலசாமி கோயல்லபோயி பொங்கலெல்லாம் பொங்கி வெச்சபேரை எதுக்குடா மாத்துனே இப்போ? யாருடா குடுத்தது உனக்கிந்தப் பன்னாட்டை?”
“யாரு குடுக்கோணம்? நானேதான் எடுத்துக்கிட்டேன். நீங்க வெச்சபேருனால் ஏதாச்சும் ஒரு நல்லதாச்சும் நடந்திருக்குதா எனக்கு? படிப்பு பாதீலயே போச்சு.பால்பண்ணை பவர்லூம்தறி பனியன்கம்பனீன்னு எத்தனை தொழிலுக்குப் போயாச்சு? ஏதாச்சும் ஒண்ணாவது வெளங்கீருக்குதா?
அதெல்லாம் போவட்டும் இந்தப் பத்து வருசமா பொண்ணுத் தொளாவுதொளாவுன்னு தொளவறீங்களே.. ஏதாவது அமைஞ்சுதா..?”
“ஓகோ.. பேரை மாத்திக்கிட்டா எல்லாம் டாண்டாண்னு நடந்திருமாக்கும்?”
“காலங்காத்தால வாயைப் புடுங்காம பேசாமப் போயிரும்மோவ்.. அப்பறம் நான் மனுசனாவே இருக்கமாண்டனாமா பார்த்துக்கோ” என்றபடியே கழிப்பறைக்குள்போய் கதவைச் சாத்திக் கொண்டான்.
குளியலறையின் வெளிச்சுவரில் தொங்கவிடப் பட்டிருந்த கண்ணாடியைப் பார்த்தபடி சவரம் செய்து கொண்டிருந்தான். வெற்றிலைச்சாறை துப்பிவிட்டுவந்த அப்பத்தாக் கிழவி திண்ணையில் அமர்ந்துகொண்டு சற்றுநேரம் பேரனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சூரியன் முத்துக்குமாரூ..’என்றாள் ராகமாக. இவன் திரும்பிப் பார்க்கவும் குழந்தையொன்றை ஏந்தி தாலாட்டுவதுபோல உள்ளங்கைகளை விரித்து ஆட்டியபடி ‘வேட்டைக்குப் போனானாம் ராசா.. வெறுங்கையோட திரும்பினானாம் பேஷா..’ என்று நீட்டி முழக்கிவிட்டு சுருக்குப்பையை அவிழ்த்து வெற்றிலையொன்றை எடுத்துத் துடைக்கத் துவங்கினாள்.
‘கெழுட்டு முண்டைக்கு ஆனாலும் அதிக்கலம்தான்’ என்று முனகியபடியே சவரம்செய்த முகத்தை ஈரத்துண்டால் துடைத்துக் கொண்டான். கன்னக்கதுப்புகளில் படர்ந்திருந்த கருமை சற்று மங்கியிருப்பதுபோல பட்டது. கடைசியாகப் பெண்பார்க்கப்போன இடத்தில் தனியாகக் பேசவேண்டுமென பொடக்காலிப் பக்கமாகக் கூட்டிக்கொண்டுபோன அந்தப் பெண் கேட்டது ஞாபகத்திற்கு வந்தது. ‘முப்பத்திரெண்டு வயசுதான்னு சொன்னாங்க.. நேர்ல பார்த்தா நாப்பத்தியஞ்சு வயசாட்டத் தெரியுதே..”
டப்பாவிலிருந்து பொடிமாதிரியான ஒன்றை கிண்ணத்தில் கொட்டி தயிர்சேர்த்துக் கலக்கத் துவங்கினான். சித்தவைத்தியர் சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது. ‘இதை தயிர்ல கலக்கி மொகத்துலபூசி பத்து நிமிசங்கழிச்சு வெந்தண்ணீல கழுவிக்குங்க. நாப்பத்தியெட்டு நாளைக்குப் பண்ணீட்டு வாங்க. பிறகு பாருங்க மொகம் எப்படி பளபளன்னு பதினாறுவயசுப் பையனுக்காட்ட மாறியிருக்குங்கிறதை..’ தயிர்க்களிம்பை முகமெல்லாம் பூசிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தான். இன்னும் பத்து நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். ஜோசியர் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்தது. ‘மகம் நட்சத்திரம். சிம்ம ராசி. நட்சத்திரப்படி ‘மு’வன்னா ஓக்கேதான். ஆனா, ராசீன்னு ஒண்ணு இருக்குதே. அதுவும் சிம்மம்ங்கிறது சூரியனோட ராசி. அதனால வெறும் முத்துக்குமாரை மறந்துருங்க. இனி, சூரியன் முத்துக்குமார்னே கையெழுத்துப் போடுங்க. சூரியன் முத்துக்குமார்னே எல்லாருத்தையும் கூப்பிடச்சொல்லுங்க. சூரியன் முத்துக்குமார் ஜெயம் ஜெயம்னு தினமும் நூத்தியெட்டுத் தடவை ஒரு மண்டலம் சொல்லீட்டு வாங்க.. அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு. சும்மா ஓஹோன்னு வருவீங்க..’ நாற்காலியிலேயே கால்களை சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவன் முனுமுனுப்பான குரலில் ஜபிக்கத் துவங்கினான். ‘சூரியன் முத்துக்குமார் ஜெயம்ஜெயம் சூரியன் முத்துக்குமார் ஜெயம்ஜெயம்..’
வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டையில் கண்கண்ணாடியணிந்த ஒருவர் டிவிஎஸ் எக்ஸெல்லில் வந்து இறங்கினார். ரேஷன் அரிசிகளை கோழிக்கு இரைத்துக் கொண்டிருந்த அப்பத்தாக்கிழவி நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“பெரிய ஆத்தாங்கோவ்.. கும்புடறனுங்க..”
“வாடா வாய்ப்பாளையத்தா.. என்ன இந்த நேரத்திக்கு?”
“சின்னவீளுக்கு எசவா சாதகமொண்ணு அகப்பட்டதுங்க.. அதான் குடுத்துட்டுப் போலாம்னு வந்தனுங்க..”
“அப்பிடியா.. கடிவாளமில்லாத குதிரையேறி கண்ணுத் தெரியாதவன் போனானாம் சவாரி. அப்புடியிருக்குது நீ தானாவதி பண்ற லட்சணம். அன்னிக்கொண்ணு பொருத்தம் வருதுனியே அதென்னடா ஆச்சு?”
“அது அப்படியே லைன்லதான் இருக்குதுங்.. வைகாசிக்குப் பேசிக்கலாம்னு சொல்லீருக்கறாங்க.. ஒண்ணையே நம்பிக்கிட்டு இருக்கக் கூடாதில்லீங்ளா? அதான் தோதா இருக்குதேன்னு இதையுங் கொண்டாந்தேன்”
காக்கிச்சட்டையும் புளூபேண்ட்டுமாக வெளிப்பட்ட சூரியன் முத்துக்குமார் கண்ஜாடை காட்டிவிட்டு பேருந்து நிற்கும் இடத்திற்கு வர அவரும் பின்னாலேயே வந்து சேர்ந்தார். ‘உங்ககிட்ட எத்தனதடவை சொல்றது எங்க பெருசுகிட்ட வாயைக் குடுக்காதீங்கன்ன்னு? தேவையில்லாததையெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கும். இந்தாங்க புடிங்க..’ ஐநூறுரூபாய்த் தாளை அவரது கைகளில் திணித்தான். ‘அந்த ஓலப்பாளையத்து ஜாதகம் ஓக்கே பண்ணியுட்ருந்தமே அது என்னாச்சு?’
“அது இன்னும் லைன்லதான் இருக்குது தம்பி. இதையும் பாருங்க.. கொஞ்சம் எசவாத் தெரியுது எது செட்டாகுதோ முடிச்சிருவோம்”
அவரை அனுப்பி வைத்துவிட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்து சாவியைப் பொருத்தும் சமயம் பின்புறக்காட்சிக் கண்ணாடியைப் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டான். நீளமாக இருக்கும் கடைசி இருக்கையில் அப்பாரைய்யன். அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். ‘கருமம்புடிச்ச கெழவன் எங்கவந்து படுத்திருக்குதுனு பாரு’என்று முனகியபடிக்கெவந்து எழுப்பினான்.
“அப்பாரைய்யா.. அப்பாரைய்யோவ்.. எந்திரீங்க.. யேன் இங்கவந்து படுத்துக்கிட்டிருக்கறீங்க? ராத்திரி எங்கபோயித் தொலஞ்சீங்க? வெகுநேரம் வரைக்கும் ஆளைக் காணோம்?”
“கோனாபுரம் பண்ணையாரு வூட்டுக்கு ஆட்டத்துக்குப் போயிருந்தம் பேராண்டி. வாரதுக்கு லேட்டாயிருச்சா? வூடெல்லாம் தாள் போட்டிருந்ததா? செரின்னு இங்கவந்து படுத்துக்கிட்டேன்”
”செரீ, நேரங்கெட்ட நேரத்தில எப்புடி வந்து சேந்தீங்க?”
“அதுகெல்லாம் ஆளில்லாமயா போயிருச்சு.. கூட்டாடியொருத்தன் கார்ல கொண்டாந்து வுட்டுட்டுப் போனான்”
அப்பாரைய்யன் ஒரு சீட்டாட்டப் பயித்தியம். சுத்துபத்து ஊர்களில் எங்கெங்கே எந்ததெந்தக் கிழமைகளில் சபைகூடும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி. அவருடையை மூதாதையர்களுக்கும் சீட்டாட்டக் கேந்தி இருந்தது. என்ன? அவர்களெல்லாம் சீட்டாட்டத்திற்குப்போய் தங்கள் பொருட்களையெல்லாம் இழந்துவிட்டுத் திரும்பி கொண்டிருந்தனர். இவரோ அடுத்தவன் பொருட்களையெல்லாம் புடுங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருக்கிறார். நல்லவேளையாக மகன் ராமசாமிக்கு அந்தப் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. பேரன் சூரியன் முத்துக்குமாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. அந்த பழக்கம் மட்டும்தான் இல்லை.
பணத்தைப் பறிகொடுத்தவர்களின் பொண்டாட்டி புள்ளைகளெல்லாம் வந்து அழுகிறார்கள். பாவத்தைக் கையிலேந்த வேண்டாம் மானம் மரியாதையெல்லாம் போகிறது வுட்டுத் தொலையுங்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார்கள். கிழவர் கேட்பதில்லை. ‘சீட்டாடிச் சீட்டாடி எங்க அப்பன் பாட்டன் தொலைச்சதையெல்லாம் நான் சீட்டாடிச் சீட்டாடியே மீட்டுக் காட்டப் போறேன். அதுவரைக்கும் வுடமாட்டேன்’ என்பார்.
விசாலாட்சி வாழாவெட்டியாக இங்கே பிறந்த வீட்டிலேயே வந்து இருப்பதற்கும்கூட கிழவனின் சீட்டாட்டம்தான் காரணம். காயத்திரிக்கு மூணு வயதாக இருந்தபோது முடியெடுத்துக் காது குத்தினார்கள். கிடாய் வெட்டுடன் மிகவும் விமர்சையாக நடைபெற்ற அந்த வைபவத்தில் கேப்பே விடாமல் ஒரு மூலைக்கோட்டில் சீட்டாட்டமும் நடந்து கொண்டிருந்தது. எல்லோருமே நேருநிதானமில்லாத மப்பில் ஆடிக் கொண்டிருந்தார்கள். கைக்காசையெல்லாம் இழந்து விட்டிருந்த விசாலாட்சியின் மாமனார் ஒரு கட்டத்தில், வீட்டுப் பீரோவில் புடவைகளுக்கு மத்தியில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய மனைவியின் கொடிச்சங்கிலி ஒன்றையும் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து வைத்து ஆடி அதையும் தோற்று விட்டார். ஜெயித்தது கிழவர்தான்.
சொந்தக்காரங்களுக்குள்ள என்ன சூது? கிழவர் ஊருக்குப் போகும்போது அந்தக் கொடிச்சங்கிலியை ஒப்படைத்து விட்டுத்தான் போவார் என எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. சூதில் ஜெயித்த பொம்பளைச் சம்பந்தியின் கொடிச் சங்கிலியோடு வூட்டுக்கே வந்து விட்டார் கிழவர். பிறகு அதுவொரு பெரிய பஞ்சாயத்தாகி விட்டது.
யாராரோ வந்து பேசிப் பார்த்தார்கள். கிழவர் மசியவேயில்லை. ’உங்க தாத்தன்கிட்ட இருக்கிற உம்பட மாமியாத்தா நகையை என்னிக்கு உன்னால திருப்பி வாங்கீட்டு வரமுடியுதோ அன்னைக்கு இங்க வந்துக்கலாம். அதுவரைக்கும் உங்க தாத்தனூட்லயேபோயி இருந்துக்கோ’ என்று விசாலாட்சியின் மாமனார் அவளை இங்கே அனுப்பி வைத்து விட்டார். ‘சங்கிலி வேணும்னா திரும்பவும் வந்து ஆடிச் செயிச்சுட்டுப்போ.. யாரு தரமாட்டேங்றாங்க.. அதையுட்டுப்போட்டு இதென்ன ஈனத்தனமா பொம்பளைப்புள்ளைகளை துருப்பா வெச்சு மெரட்டப் பாக்கறது..? திருப்பிக் குடுக்கறதுங்கிற பேச்சுக்கே எடமில்லை. பேத்தி பொழைக்காமப்போனா மசுரு ஒண்ணாச்சு’ என்றுவிட்டார் கிழவர்.
தட்டிக்கேட்க ஆளில்லாதவராகக் கிழவர் துள்ளி விளயாடிக் கொண்டிருந்தார். மகன் ராமசாமி ஒரு வாயில்லாப் பூச்சி. மேலும் கஷ்டம் பொறுக்காதவர். ‘சொன்னாலும் அய்யன் கேக்கமாண்டாங்க.. எதுக்கு அதையும் இதையுஞ்சொல்லி சண்டைபோட்டு வீணா கஷ்டத்தைத் தேடிக்கவேணும்?’ என அவர்பாட்டுக்கு அவருக்கான வேலைகளைச் செய்துவிட்டு பேசாமல் இருக்கப் பழகிக் கொண்டார். ஒருநாள் பொறுக்க முடியாமல் சூரியன் முத்துக்குமார் மண்வெட்டிப்புடியைத் தூக்கிக்கொண்டு கிழவரைப் போட்டுத்தள்ள போனான். வெறிபிடித்த நாய்க்கு முன்னாலேபோய் காலை அகட்டிக்கொண்டு நின்றதைப்போல் ஆகிவிட்டது நிலமை. “போடுறா..போடு. சொத்தெல்லாம் எம்பேர்லதான இருக்குது. இப்படி ஏதாவது நடக்கும்னு தெரியும். நடந்துருச்சுனா சொத்தையெல்லாம் தர்மஸ்தாபனத்துக்கு மாத்தீருங்கோன்னு வக்கீலு மூலமா ஏற்பாடு பண்ணி வெச்சுருக்கிறேன். வா.. வந்து போடுவா.. போட்டுக் கொன்னுபோட்டு அப்பன் மகனெல்லாம் நடுத்தெருவுலபோயிப் பிச்சை எடுங்க” என்று நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நின்றார்.
அதற்குப்பிறகு யாரும் எதுவும் சொல்வதில்லை.
பிறகு தருணம் வாய்க்கும்போது தன்மையாகச் சொல்லுவான். “ அக்காவும் வாழாவெட்டியா இங்கயே இருக்கறா நீயும் சீட்டாடிச் சீட்டாடி ஊருலயிருக்கிற சனங்க வவுத்தெரிச்சலையெல்லாம் சம்பாதிச்சுப் பேரைக் கெடுத்து வச்சிருக்கறே.. எனக்கு யாருமே பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க அப்பாரைய்யா..”
கிழவரும் தன்மையாகவே வரம் அருளுவதுபோல பதில் சொல்லுவார். “ஏண்டா கொடுக்க மாட்டானுக? கொடுக்காம எங்கீடா போயிரப் போறானுக? இத்தனை வருசமா பொழச்சவன் நாஞ்சொல்றதைக் கேளுடா பேராண்டி ஒரு நாளைக்கு பொண்ணு வாசலுக்கே வரும்பாரு..”
பால்பண்ணையில் வேலைசெய்த காலத்தில் ஒரு காதல் வாய்த்தது. அதை காதல் என்றும் சொல்லமுடியாது. வலிய ஒரு வாய்ப்பு தகைந்து வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். கேஷியராக இருந்த அந்தப் பெண் காங்கயத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள். தீபாவளி விடுமுறையையொட்டி அனைவரையும் நிறுவனம் சார்பாக ஒருநாள் சுற்றுலா அழைத்துப் போயிருந்தார்கள். அன்றைக்கு ஒரு இடத்தில் வைத்து அவளாகவே கேட்டாள். இந்த மாதிரி எனக்கொரு அபிப்பராயம் இருக்கிறது உனக்கும் இருந்தால் சொல் என்று. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான் என் வழியே போய்க் கொள்கிறேன் என்றும் கூறினாள்.
இரண்டு நாளில் சொல்வதாகக் கூறினான். எல்லாம் சரிதான். சாதி தான் யோசனையாக இருந்தது. வேற சாதிப் புள்ளையை கட்டுவதற்கு வீட்டிலே ஒத்துக் கொள்வார்களா முக்கியமாக சொத்தையெல்லாம் தன் பெயரில் வைத்திருக்கும் இந்தக் கிழவன் ஒத்துக்குவானா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான். எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட சூபர்வைசர் சண்முகம் அடுத்தநாள் இவனிடம்வந்து அழுதான். தொரைக்கு அந்தப் பெண்ணின்மேல் ஒன்சைடு லவ்வாம். ‘எப்படியாச்சும் சம்மதம் வாங்கீருவனுங்ண்ணா.. அவ இல்லீனா செத்தே போயிருவண்ணா.. புண்ணியமாப் போவும். நீங்க ஒதுங்கிக்கங்ண்ணா.. ப்ளீஸ்’
அன்று சாதியைப் பற்றி யோசித்ததும் சண்முகனுக்கு இரக்கம் காட்டியதும் பெரிய தவறு என இப்போது தோன்றும். இனி தோன்றி என்ன செய்ய?
ஊர்த்தலைவாசலில் சனநடமாட்டம் அதிகமாக இருந்தது. இது ஊருக்குள்ளேயே வந்து திரும்பிப் போகும் டவுன்பஸ்ஸான எஸ்எம் வருகின்ற நேரம். எஸ்எம்மை விட்டுவிட்டால் பிறகு பேருந்துக்காக நான்கு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் மெயின் ரோட்டுக்குத்தான் போயாக வேண்டும். நிற்கும் சனங்களில் பாதிப்பேர் எஸ்எம்முக்காக காத்திருப்பவர்கள்தான். இருக்கும் ஒரேயொரு டீக்கடையும் மளிகைக் கடையும் வியாபார மும்முரத்திலிருந்தன. ஆலமரத்து மேடையைச்சுற்றி போடப்பட்டிருந்த பலகைக்கல் ஒன்றின்மேல் பன்னீர்செல்வம் அமர்ந்து கொண்டிருந்தார். ஆள் பார்ப்பதற்கு தாடியில்லாத கவிஞர் விக்கிரமாதித்யனைப் போல இருந்தார். பேப்பரைப் பார்த்து முடித்தானதும் சிகரெட் ஒன்றை பற்றவைத்துக் கொண்டார். டீக்கடையிலிருந்து வெங்காயப்போண்டா வேகும் மணம் கமழ்ந்து வந்தது. காட்டுவேலைக்குச் செல்பவர்கள், பனியன் கம்பனி பேருந்துக்காகக் காத்திருப்பவர்கள். பள்ளி வாகனத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகள். டவுன்பஸ்ஸை எதிர்நோக்கியிருப்பவர்கள் குழாயடியில் நீர்பிடிக்க நிற்பவர்கள் என அத்தனை தரப்புகளையும் வேடிக்கை பார்த்தபடி பன்னீர் புகைத்து முடித்திருந்தார்.
பன்னீர் செல்வம் தினமும் காலையில் ஒன்பது முப்பது வரைக்கும் அங்குதான் உட்கார்ந்திருப்பார். கூட்டம் வடிந்து தலைவாசலே வெறுச்சோடியதற்குப் பிறகுதான் மெல்ல எழுந்து வீட்டுக்கு நடையைக் கட்டுவார். அதற்குள் இரண்டு டீ இரண்டு சிகரெட்டுகள் ஒரு உளுந்துவடை கணக்காகியிருக்கும். பன்னீருக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது. ஊருக்குள் இருக்கும் பெரிய குடும்பங்களில் இவருடையதும் ஒன்றாக இருந்தது. மிகப்பெரிய தொட்டிக்கட்டு வீடு ஊருக்கு நடுநாயகமாக இருந்தது.
கல்யாண மண்டபங்கள் வழக்கத்திற்கு வராதிருந்த அந்தக் காலத்தில் ஊருக்குள்ளிருக்கும் நிறைய பேர்களின் திருமணம் பன்னீரின் வீட்டில்தான் நடைபெற்றன என்று பேசிக்கொள்வார்கள். என்ன? அப்படியாகப்பட்ட வீட்டில் பிறந்து வளர்ந்த பன்னீருக்குத்தான் திருமணமே ஆகாமல் போய்விட்டது.
பெரியவர்களெல்லாம் போய்ச்சேர்ந்துவிட்டனர். பராமரிப்பில்லாமல் வீட்டின் பெரும்பகுதி சிதைந்து விட்டது. ஓரமாக இருக்கும் ஒற்றை அறையொன்றில்தான் பன்னீர் வாசம் புரிகிறார்.சொத்துக்களில் கொஞ்சத்தை விற்று பேங்கில் போட்டு வைத்திருக்கிறார். நம்பகமான சிலரிடம் வட்டிக்கும் கொடுத்திருக்கிறார். குடும்பம் இல்லாவிட்டாலென்ன? வாழ்க்கை சுகமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு புத்தம்புதிய மாருதி ஆல்ட்டோ மகிழுந்துவும் இருக்கிறது. எங்கேயாவது போகவேண்டுமென்றால் சூரியன் முத்துக்குமாரைக் கூப்பிட்டுக் கொள்வார். அவன்தான் அந்த வண்டிக்குச் சாரதி.
‘ஏம்பா இப்படியே இருந்துக்கிட்டிருக்கறயே? கையுங்காலும் வராத கடைசி காலத்துல யாரு பர்த்துக்குவா?’ என்று யாராவது கேட்பார்கள். ‘எப்பவேணும்னாலும் சாவு வரலாம்ங்கிறதுதான் இயற்கையோட விதியா இருக்குது. இருக்கிற ஒவ்வொரு நிமிஷமுமே ஒவ்வொருத்தருக்கும் கடைசி காலம்தான். அப்படிப் பார்த்தா இப்பயாரு என்னையப் பார்த்துக்கிறா? உன்னைய யாரு இப்ப பார்த்துக்கிறா? அங்க படுத்திருக்குதே நாய்க்குட்டி அதைய யாரு இப்ப பார்த்துக்கிறா?’ என்று எதிர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்து விடுவார். பன்னீரின் சுபாவத்தை தெரிந்தவர்கள் அவரோடு இதுபற்றியெல்லாம் ஒன்றும் பேசிக்கொள்வதில்லை.
புதிய நபர்கள்தான் ‘அதுக்கில்லை நாளைக்கு நாமசெத்தா தூக்கிப்போட்டு கொள்ளிவைக்கறதுக்காவது நமக்குன்னு ஒரு புள்ளையோ குட்டியோ இருந்தாத்தானே நல்லாருக்கும் என்கிற ரீதியில் அடுத்த கொக்கியைப் போடுவார்கள். ஏண்டா வாயைக் கொடுத்தோம் என்றாகிவிடும் அவர்களின் நிலமை. ’தன் கையாலேயே தன்னோட புள்ளைகுட்டிகளைத் தூக்கிபோட்டு கொள்ளி வெச்சுட்டு கடைசியா தனிமரமா நிக்கறவங்களைப்பத்தி என்ன நினைக்கறீங்க?’என்றுவிட்டு எதிராளியின் முகத்தையே பன்னீர் உற்று நோக்குவார். ‘உனக்கெல்லாம் அந்த நிலமை வராதுங்கிறதுக்கு எந்த உத்திரவாதமுமில்லை’ என்கிறவிதமாக இருக்கும் அவரது பார்வை. எந்தத் தகப்பனால்தான் தன் பிள்ளைகளுக்கு தானே கொள்ளிவைக்கின்ற காட்சிகளை கற்பனை செய்ய முடியும்? ‘இந்தாளுகிட்டயெல்லாம் மனுசன் பேசுவானா?’ என்று எண்ணியபடியே நகர்ந்து விடுவார்கள்.
“தலைவரே.. பேப்பரெல்லாம் பார்த்து முடிச்சிட்டீங்களா..?” குரல்கேட்டு பன்னீர் நிமிர்ந்து பார்த்தார். மாரிமுத்து நின்றுகொண்டிருந்தான். தலைக்குமேல் அவனுடைய மற்றொரு உறுப்பாகவே தொப்பி மாறிப்போன மாதிரி இருந்தது. பாலு மகேந்திரா அணிந்திருப்பார் இல்லையா? அந்த வடிவிலான தொப்பி. இப்போதெல்லாம் தொப்பியில்லாத மாரிமுத்துவை யாருக்கும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை.
ஒரு காலத்தில் மாரிமுத்துவுக்கு தலைநிறைய முடி இருந்தது. ஸ்டெப் டிஸ்கோ பங்க் என நடப்பிலிருக்கும் பேஷனுக்குத் தகுந்த வண்ணம் தன் சிகையலங்காரத்தை மாற்றியபடியிருப்பான். ஒன்பதாம் வகுப்பை பாஸ்பண்ண முடியாமல் திணறியவனை அவனுடைய அப்பா குண்டடத்திலிருக்கும் உதயம் டெய்லர்ஸில் கொண்டுபோய் வேலைக்குச் சேர்த்து விட்டார். அவனுடைய அப்பா உள்ளூர்ச்சாமிகளின் பூசாரியாக இருந்தார். ‘ஊரைக் காத்துக்கிட்டே கெடந்தா ஓசுக்கு மணியடிச்சு மணியடிச்சே ஒண்ணுமில்லாமப் போயிருவே.. நீயாவது உனக்குன்னு ஒரு தொழிலைக் கத்துக்கிட்டு நல்லமுறையாப் பொழைச்சுக்கோ..’ என்றும் சொல்லிவிட்டும் வந்தார். பையன் தொழிலில் தேர்ந்ததும் மசக்காளிபாளையம் பிரிவில் அவனுக்கொரு கட்பீஸ் சென்டருடன் கூடிய தையல் கடையை வைத்துக் கொடுத்துவிட வேண்டுமென்பதும் அவரது கனவாக இருந்தது.
உதயம் டெய்லர்ஸ்க்கு ரெகுலராக தினமலர் வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களிலேயே மாரிமுத்து தொழிலில் தேர்ந்த டைலராகவும் வாரமலரின் வெறிபிடித்த ரீடராகவும் மாறிப்போயிருந்தான். அந்துமணியின் ரசிகனாகவும் மாறியிருந்தான். பாலுமகேந்திராவின் மேலும் அவனுக்கு மிகுந்த பிரியம் இருந்தது. மகேந்திரப்பிரியன் எனும் புனைப்பெயரில் வாரமலருக்கு கேள்விகளையும் துணுக்குகளையும் தமாசுகளையும் அனுப்பி வைப்பான். குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை நிரப்புவதிலும் மன்னனாக இருந்தான்.
ஒருமுறை இவனுடைய தபால்கார்டின் படமும் அந்துமணியின் கேள்வி பதில் பகுதியில் இடம்பெற்றது. முகவரி எழுதும் பகுதியில் அந்து எனப்போட்டு ஒட்டியே கோயில் மணியை படமாக வரைந்து மேற்கொண்டு தெரு ஊர் பின்கோடு எதுவும் எழுதாமல் அப்படியே அனுப்பி வைத்திருந்தான். தபால் துறையிலும் வாரமலரின் வெறிபிடித்த வாசகர்களும் அந்துமணியின் ரசிகர்களும் நிச்சயம் இருக்க வேண்டும். அந்தக் கடிதம் போய்ச்சேர்ந்து கேள்விபதில் பகுதியில் போட்டோவாகவும் வந்துவிட்டது.
மாரிமுத்து என்கிற மகேந்திரப்பிரியனின் முதலாளிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒருமுறை அவர்களின் புகைப்படங்களை இவன் அனுப்பி வைக்க அந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த சிறுவர் மலரின் பின்னட்டையை அந்தப் படங்கள் அலங்கரித்தது. முதலாளிக்கு அளவிலாத சந்தோசம். கைக்குக் கிடைத்த சிறுவர்மலர்களையெல்லாம் வாங்கி இவனிடம் கொடுத்து வீட்டிலே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருமாறு கூறினார். வீட்டிற்குப் போனபிறகுதான் தெரிந்தது. முதலாளிக்கு இரு பையன்கள் மட்டுமல்ல. ஒரு கொளுந்தியாளும் இருக்கிறாள்.
கணவனை இழந்திருந்த மாமியார் பிழைக்க வழியில்லாமல் மருமகனிடமே வந்து அண்டியிருந்தார். முதலாளியின் கொளுந்தியாள் பனிரெண்டாம் வகுப்புவரை படித்திருந்தாள். அவள் ராணிமுத்துவின் வாசகி. அப்புறமென்ன? வாரமலரும் ராணிமுத்துவும் கைமாறிக் கொள்ளத் துவங்கின.
ஒருநாள் முதலாளியின் அப்பா இறந்து போனார். அன்று மாரிமுத்துவுக்கு நிற்க நேரமில்லாமல் வேலைகள் இருந்தது. எல்லாம் முடிந்து அக்கடா என நிமிர்ந்து பார்க்க மணி இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. ஊர்திரும்ப வழியில்லாததால் அங்கேயே தங்கவேண்டியதாகி விட்டது. பொழுதாபொழுதுக்கும் கால்கடுக்க நின்றும் வந்தவர்களுக்கெல்லாம் கும்பிடுபோட்டுக் கும்பிடுபோட்டும் சலித்துப் போயிருந்த முதலாளி ஒன்றுக்கு இரண்டு குவார்ட்டர்களைக் கவிழ்த்துவிட்டு மட்டையாகி விட்டிருந்தார். ராத்தங்கநேர்ந்த முக்கிய உறவினர்கள் சிலரும் கிடைத்த இடங்களில் அங்கங்கே சுருண்டு விட்டிருந்தனர். சாமான்கள் போட்டிருந்த ஒரு சிறிய அறையில் ஓரமாகப் போட்டிருந்த கச்சுக் கட்டில் மாரிமுத்துவுக்குக் கிடைத்தது. இவனும் ஒரு கட்டிங்கை முதலாளியோடு சேர்ந்து போட்டிருந்தான். படுத்தவுடனே தூக்கம் வந்துவிட்டது. எந்நேரமென்று தெரியவில்லை. சட்டென்று விழிப்பும் வந்துவிட்டது. மாரிமுத்து இன்றைக்கும் சொல்வதுண்டு. ‘அந்த விழிப்பு வந்திருக்கக் கூடாது. அன்னிக்கு மட்டும் விழிக்காம இருந்திருந்தா இன்னிக்கு நான் நல்லா பொழச்சிட்டிருந்திருப்பேன்’
விழிப்புவந்த சற்று நேரத்தில் அந்த சிறிய அறையில் மற்றும் சிலரும் உறங்கிக் கொண்டிருப்பது புலனாகியது. கட்டிலையொட்டிக் கீழேயே கொளுந்தியாள் படுத்துக் கொண்டிருந்தாள். அடுத்ததாக முதலாளியின் பையன்கள். அவர்களுக்கு அடுத்து முதலாளியின் மாமியார். பையன்கள் இருவரும் அடித்துப் போட்டதுபோல தூங்கிக் கொண்டிருந்தனர். மாமியார்க்காரியும் சவம்போலக் கிடந்தாள். ஆழ்துயிலின் குறட்டையொலி சீரான இடைவெளியில் வந்தபடியிருந்தது. கொளுந்தி தூங்கிவிட்டாளா என்று தெரியவில்லை. பிறகு மாரிமுத்துவுக்கு தூக்கம் வரவில்லை. இருளிலும் காட்சிகளைத் துல்லியமாகக் காணமுடிகிற அளவுக்கு உடம்பெல்லாம் என்னென்னவோ விழித்துக் கொண்டுவிட்டதைப்போல பட்டது. ஓசையெழாதவாறு உருண்டு உருண்டு கட்டிலின் ஓரத்திற்கு வந்தவன் வலது கையைக் கீழே தொங்கவிட்டான். விரல் நுனிகளுக்கு ஸ்பரிசம். ‘ப்ச்’ என உதட்டைச் சப்பிக்கொள்ளும் ஒலியுடன் அவள் புரண்டு படுத்தாள். புரண்ட தேகம் புரளுக் கணத்தில் தோள்பட்டைகளின் உராய்வு விரல்களின் முதுகிற்கும் புறங்கைக்கும் லபித்தது. கையைத் தொங்கவிட்டபடிக்கே படுத்துக் கிடந்தான். சற்று நேரத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. சட்டென்று அவள் இந்தப்புறமாகப் புரண்டு படுத்தாள்.
பிறகு என்ன நடந்தது என்பதை இரண்டு பெக்குகளை ஊற்றிக் கொடுத்துவிட்டு மாரிமுத்துவின் வாயாலேயே நேரடியாகக் கேட்டால்தான் நன்றாக இருக்கும். ‘அவ அந்தளவுக்கு என்னை நம்புனாளுங்க தலைவரே. பக்கத்துலயே அக்கா பசங்களை வெச்சுக்கிட்டு அம்மாக்காரிய வெச்சிக்கிட்டு எந்தப் பொண்ணுமே.. தாலிகட்டுன பொண்டாட்டியாவே இருந்தாலுங்கூட நடக்காதுங் தலைவரே. ஆனா.. அவ.. ஒரு தெய்வம்ங்க தலைவரே.. அந்தளவுக்கு என்னை நம்புனாளுங்க தலைவரே.. ‘என்னையக் கைவிட்றமாட்டியேனு கிசுகிசுத்தா.. தலையில அடிச்சு சத்தியம் பண்ணுனேன். கடைசீல அந்தத்தெய்வமே என்னையக் கைவிட்டுட்டு..’ அதற்குமேல் மாரியால் பேசமுடியாது. மூக்கிலிருந்து சளியும் ஓணைத்துக்கொள்ளும் கடைவாயிலிருந்து சலவாயும் ஒழுகஒழுக குமுறிக்குமுறி அழ ஆரம்பித்திருப்பான்.
மணிமேகலைக்கு கல்யாணம் உறுதியானதுமே மாரிமுத்து மனசை விட்டுவிட்டான். இந்தாளுதான் காரணமென ஓனருடன் சண்டையிட்டுக்கொண்டு வந்து தனியாக கடை ஆரம்பித்தான். ’நம்மூருப் பிரிவிலேயே கடை போட்டுக்கலாம் மவனே.. அந்தூருல வேண்டாம்’ என்று அவனுடைய அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை. ‘என்னையைக் கெடுத்துட்டவன் முன்னாலயே எந்திரிச்சு நின்னு காட்டப்போறேன் அதுக்கு அந்த ஊர்ல அவன் கடைக்கு எதுத்தாப்பிலயே கடைபோட்டால்தான் செரியாக வரும்’ என்றான்.
கல்யாணத்திற்கு சில வாரங்கள் இருக்கையில் மணிமேகலையை கடைவீதியில் பார்க்க வாய்த்தது. பலநாட்கலுக்குப் பிறகு பார்க்கிறான். நகையெடுக்கவோ துணியெடுக்கவோ போய்விட்டுத் திரும்பியிருப்பார்கள் போல. உறவுகள் புடைசூழ வந்துகொண்டிருந்தாள். நிர்பந்தங்களுக்கு இரையாகிவிட்டாள். மற்றபடி இந்த ஏற்பாடு நிச்சயமாக அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்காது. துயரத்தில் உருக்குலைந்து போயிருப்பாளாக்கும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவனுக்குத்தான் எவ்வளவு அதிர்ச்சி? மணிமேகலை அவ்வளவு பொலிவாக இருந்தாள். செல்போனெல்லாம்கூட வாங்கிக் கொடுத்து விட்டார்கள்போல. அவ்வளவு மகிழ்ச்சியாக போனில் யாருடனோ பேசியபடி வந்துகொண்டிருந்தாள். வேறு யாருடனாக இருக்கப்போகிறது? எல்லாம் அவனுடாகத்தான் இருக்கவேண்டும்.
அதற்குப் பிறகுதான் மாரிமுத்து பகலிலேயே குடிக்க ஆரம்பித்தான். அதிகாலை ஐந்து மணிக்கேபோய் ஷட்டரைத்தட்டியெழுப்பி சரக்கடித்த சம்பவங்களும் உண்டு. கிட்டத்தட்ட ஒரு குடிநோயாளியாகவே மாறிப்போய்விட்டிருந்தான். கல்யாணத்திற்கு முதல்நாளில் திடீரென ஒரு வைராக்கியம் உண்டானது. இனிக் குடிக்கப்போவதுமில்லை. அவளையெல்லாம் பொருட்படுத்தப் போவதுமில்லை. கோழி கூப்பிட எழுந்தவன் குளித்து உடைதரித்து சிவன்மலைக்குப் பஸ் ஏறினான்.
மனைப்பலகையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த கோவிலின் நாவிதர் மழிக்கமழிக்க கொத்துக் கொத்தாக மடிமீதும் கால்களின்மீதும் தரையிலும் விழும் முடிக்கற்றைகளையே மெளனமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். துயரமூட்டும் அவளுடைய நினைவுகள் யாவும் உதிர்ந்து போய்க்கொண்டிருப்பதைப் போன்ற விடுதலையுணர்வு உண்டாகியது.
வந்து ஒரு வாரம் வரைக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை. குடியையும் காதலின் துயரையும் மறந்தவனாகத் தன்பாட்டுக்கு தன் வேலையைச் செய்ய ஆரம்பித்திருந்தான். யாராவது பேச்சுவாக்கில் மேற்படி விசயங்களை நினைவூட்டினாலும் ’அந்தக் கருமம்புடிச்ச நாயங்களே வேண்டாம். வேறு ஏதாச்சும் இருந்தாப் பேசுங்க’ என்பான்.
மீசை வளரத் துவங்கியிருந்தது. தாடியும்தான். ஆனால், தலை மட்டும் அப்படியே இருந்தது. பதினைந்து நாட்களுக்குமேல் பொறுத்திருந்தவன் பிறகு டாக்டரைப்போய்ப் பார்த்தான். ஏதோவொரு வைட்டமினோ புரதச்சத்தோ போதவில்லை என்றவர் ஊசிபோட்டு மாத்திரை டானிக் ஆயின்மெண்ட்டெல்லாம் எழுதிக் கொடுத்தார். ஒன்றும் பிரயோசனப் படவில்லை. நாற்றுப் பிடுங்கப்பட்ட வயலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தப்பித் தலையாட்டும் நாற்றுகளைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே முடிகள் முளைத்து வளர்ந்து காற்றாடின.
சித்த வைத்தியர்களைப் போய்ப் பார்த்தான். லேகியம் எண்ணை குளிகைகள் என டப்பா டப்பாவாகக் கொடுத்தார்கள். ஒன்றும் பிரயோசனமில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன மாரிமுத்து எல்லாவிதமான டப்பாக்களையும் முடியரும்பாத தன் தலையைச் சுற்றி வீசிவிட்டு பழையபடி மதுபுட்டிகளைக் கையிலெடுத்தான். சந்தனம் பூசிய மொட்டைத் தலையுடன் சிவன்மலையாண்டவர் சந்நிதியில் இனி குடிக்கவே மாட்டேனெனச் சத்தியம் செய்தது நினைவுக்கு வந்தது. சத்தியமாவது? வெங்காயமாவது? கைவிட்டுவிட்ட காதலியையும் கடவுளையும் வேறு எப்படித்தான் பழி வாங்குவதாம்?
மிதமிஞ்சிய போதையில் போய் படுக்கையில் விழுந்த மாரிமுத்துவுக்கு அந்த அதிகாலையில் ஒரு கனவு வந்தது. காங்கயம் சொர்க்கம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். சுள்ளென்று வெயில் அடித்த படியிருந்தது. இடக்கையை மிதமாகவும் வலக்கரத்தை வேகவேகமாகவும் ஆட்டியாட்டித்தான் நடப்பான். அவ்விதமாக நடந்து வருகையில் என்ன அதிசயம்?
எதிரே மணிமேகலை நின்றுகொண்டிருந்தாள். பூவில்லை.பொட்டில்லை. முக்கியமாக முகத்தில் அந்த மகிழ்ச்சியில்லை. பக்கத்தில் உடன் நடந்து வந்தவர்களெல்லாம் என்ன ஆனார்களோ? ஒருவரையும் காணவில்லை. கைகளை விரித்தபடி ஓடிவந்தவள் இவனைக் கட்டிக் கொண்டாள். அந்த தழுவலே என்னை மன்னித்துவிடு என்பதாக இருந்தது. இனி ஒருபோதும் உனை விலகமாட்டேன் என்பதாகவும் இருந்தது. சுள்ளென்று காய்ச்சிய வெயில் சட்டென்று குளிர்ந்து நிலவு வெளிச்சமாகியது. மாரிமுத்துவும் மணிமேகலையை ஆரத்தழுவிக் கொண்டான். உள்ளாடை ஈரமானதும் சட்டென்று விழிப்பு வந்துவிட்டது.
அடுத்தவன் குடியைக் கெடுத்து மகிழும் அக்கிரமமான கனவுதான். ஆனாலும் அந்தக் கனவு மாரிமுத்தானுக்குப் பிடித்திருந்தது. ஏதோவொரு விதத்தில் ஊக்கத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு சேர்ந்தாற்போல ஒரு இருநூறையோ முந்நூறையோ கண்டுவிட்டால் போதும். கடையின் ஷட்டரை இழுத்துவிட்டுவிட்டு மணிமேகலை வாக்கப்பட்டுப்போன காங்கயத்திற்குப் பேருந்து ஏறிவிடுவான். பஸ் ஸ்டேண்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் மதுக்கடையில் ஒரு குவார்ட்டரை வாங்கிச் சாத்திவிட்டானேயென்றால் பிறகு நேராக சொர்க்கம் தியேட்டர்தான். எந்தப் படமாக இருந்தாலென்ன? அதற்குப் பிறகு அவன் எல்லாப் படங்களையும் அங்குதான் பார்த்து வருகிறான். அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்றுதான் யாரைப் பார்த்தாலும் சொல்லுகிறார்கள். ஒருநாள் இல்லை ஒருநாள் பலிக்காமலா போய்விடும்?
தலைவாசல் ஆலமரம் வந்ததும் சூரியன் முத்துக்குமார் பேருந்தை நிறுத்தினான். காத்துக் கொண்டிருந்த கம்பனித் தொழிலாளர்கள் அனைவரும்போய் ஏறி அமரத் துவங்கினர். இறங்கி டீக்கடைக்குள் போய் தேநீரும் சிகரெட்டுமாக வெளிப்பட்டவன் பன்னீரிடம் வினவினான். “ சித்தப்பு டீ சொல்லவா..?”
“வேண்டாம்டா சாப்டாச்சு..”
“டேய் மாரிமுத்தா உனக்கு?”
“எனக்கும் வேண்டாங் தலைவரே.. இப்பதான் குடிச்சேன்”
பேருந்து புறப்பட மாரிமுத்துவும் வந்து ஏறிக்கொண்டான். “தல.. பஸ் ஸ்டாப்புல எறக்கியுட்ருங்க”
“பஸ் ஸ்டாப் வரைக்கும் என்ன? குண்டடம் வரைக்குமே வேணும்னாலும் வா.. உன்னைய யாரு வேண்டாம்னாங்க?”
“இன்னிக்கு குண்டடம் வர்லீங்க. கடைக்கு லீவு வுட்டாச்சு”
“காங்கயமா..?”
“அங்கியேதானுங்..”
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதடா மாரிமுத்தா..”
வெள்ளையம்மாள் கோவிலருகே சாலையின் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு பொன்னுச்சாமியும் தங்கத்தமிழ்ச்செல்வியும் நின்று கொண்டிருந்தனர். பேருந்தைக் கண்டதும் நடுரோட்டுக்கு வந்து நின்ற பொன்னுச்சாமி கையை ஆட்டினான். பொன்னுவைக் கண்டாலே சூரியன் முத்துக்குமாருக்குக் குலை நடுங்கும். இப்போதும் நடுங்கியது.
இடம்பொருளேவலென்றெல்லாம் எதுவுமில்லை. எந்த இடத்தில் பார்க்க நேர்ந்தாலும் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த உரையாடலின் ஏதாவதொரு கட்டத்தில் பொன்னுச்சாமி திடீரெனக் குண்டைத் தூக்கிப் போடுவான். ‘அப்பறம் குமாரு.. எப்ப கல்யாணச்சாப்பாடு போடப்போறே’என்பான்.
மேற்படி கேள்வியை அநேகந்தடவை கேட்டுவிட்டான். இவனும் பார்த்துட்டுப் போயிருக்கறாங்க என்றோ பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் என்றோ சீக்கிரமே போட்டுவிடுகிறேன் என்றோ அநேகங்கோடிமுறை பதில்சொல்லிச் சொல்லி ஓய்ந்தும் விட்டான். இவன் சொல்வதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டமாதிரியே தெரியாது. பொன்னுச்சாமி அடுத்த அஸ்திரத்தை வீசுவான். ‘நீயுநானெல்லாம் ஒண்ணாப் படிச்சு ஒண்ணாவே திரிஞ்சிட்டிருந்தவங்க.. ஒரே வயசுக்காரங்க.. போற போக்கைப் பார்த்தா உன்ற கல்யாணத்துக்கு முன்னாடியே நான் என்ற பொண்ணு கல்யாணத்துச் சாப்பாட்டைப் போட்ருவனாட்டிருக்குது..’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கென்று சிரிக்கத் துவங்குவான் பாருங்கள். இவனுக்கு கைகாலெல்லாம் ஓய்ந்துபோய் ரத்தமே சுண்டிவிட்டதைப் போல ஆகிவிடும். உனக்கெல்லாம் பன்னீருச் சித்தப்பனாட்டப் பதில் சொன்னாத்தாண்டா மூடீட்டு இருப்பீங்க என்றும் தோன்றுவதுண்டு. ஆனாலும், அப்படியெதுவும் சொல்வதில்லை.
“பைக் பஞ்சராயிருச்சு.. என்னைய பஸ் ஸ்டாப் வரைக்கும் கொண்டுபோய் வுட்ரு..” என்றபடிக்கே பேருந்துக்குள் ஏறிய தங்கத்தமிழ்ச்செல்வி ஓட்டுநர் இருக்கைக்கு இடப்புறமிருந்த இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள். “ஏதாவது வண்டிவாகனம் வராதான்னு பத்து நிமிஷமா வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன் நல்லவேளை நீ வந்தே..” என்றாள்.
“மெதுவா பொடிநடையா நடந்துபோனாலே இவ்வடத்தாலைக்கு இருக்கற பஸ் ஸ்டாப்புக்கு ரெண்டே நிமிஷத்துல போய்ச்சேர்ந்திருக்கலாம். அதுக்குப் மொடைப்பட்டுக்கிட்டு பத்து நிமிஷமா வெயிட் பண்ணிகிட்டு இருந்திருக்கறே..? உனக்கெல்லாம் ரொம்பத்தான் ஏறிப்போயி நிக்குதிடி..”
“எதாயிருந்தாலும் சத்தமாச் சொல்லிப் பழகு. என்ன மொணகறே?”
“அதில்லீங் டாக்டருங்.. பஸ் ஸ்டாப்பு என்ன பஸ் ஸ்டாப்பு? நீங்க கேட்டா ஆஸ்பத்திரிக்கே வேணும்னாலும் கொண்டாந்து உடறம்ங்கிறாருங்கோ” என்றான் மாரிமுத்து.
‘அதானே பார்த்தேன்’என்று தனக்குள் சொல்லிக்கொண்ட தங்கத்தமிழ்ச்செல்வி மேலும் தனக்குள் சிரித்தும் கொண்டாள். பேருந்து நிறுத்தம் வந்தது. மாரிமுத்தானும் த த செவும் இறங்கிக் கொண்டனர். அங்கே காத்துக்கொண்டிருந்த கம்பனிப் பணியாளர்கள்வந்து ஏறிக்கொண்டனர். மெயின் ரோட்டில் ஏறிய பஸ் திருப்பூரை நோக்கி வேகமெடுத்தது.
நியாயமாகப் பார்த்தால் தங்கத்தமிழ்ச்செல்வியை முத்துக்குமார்தான் திருமணம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும். நேர் பங்காளி ஒருவரின் மகள்வழிப் பேத்தி. முறைக்கு அத்தை மகள். ஆண்வாரிசு இல்லாததால் அத்தைக்கு வீட்டோடு மாப்பிள்ளையாகத் தேடிப் பிடித்திருந்தார்கள். அத்தைக்கும் ஆண்வாரிசு வாய்க்கவில்லை. தங்கத்தமிழ்ச்செல்வியோடு அவளுடைய புத்திரபாக்கிய ஸ்தானம் தனது அருளை நிறுத்திக் கொண்டுவிட்டிருந்தது. தனக்குப்போலவே மகளுக்கும் ஒரு நல்ல பையானகப் பிடித்துக் கட்டிவைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அத்தைக்கு விருப்பமிருந்தது. அப்படியான சமயங்களில் அவளுக்கு முத்துக்குமாரின் நினைப்புதான் முதலில் வரும்.
முத்துக்குமார் அப்பொழுது பிளஸ்டூ முடித்துவிட்டு பவர்லூம்களுக்கு பாவுநூல் கொடுக்கும் டெக்ஸ்டைல்ஸ் ஒன்றிற்கு கணக்குப் பிள்ளையாகப் போய்க் கொண்டிருந்தான். விசாலாட்சி அக்காவுக்கு திருமணத்திற்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கத்தமிழ் பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். டாக்டராவதுதான் தனது லட்சியம் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிவாள். மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியான அவளை பத்திரிக்கைக்காரர்கள் தேடிவருவது போலவும் ‘மருத்துவராகி ஏழைகளுக்குச் சேவை செய்வேன்’ என அவர்களுக்குப் பேட்டி கொடுப்பது போலவும் காட்சிகளைக் கற்பனை செய்வதும் மகிழ்வதும் அவளது வழக்கமாகிவிட்டிருந்தது. தன்னைப்போல சிரித்துக் கொண்டிருந்ததும் மகிழ்ந்து கொண்டிருந்ததும் அத்தையின் மனசுக்கு வேறெப்படியோ பட்டிருக்க வேண்டும்.
காலேஜீக்கெல்லாம் போனால் புள்ளை தடம்மாறிப் போனாலும் போய்விடுவாள் என்று பயந்து பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததுமே கல்யாணத்தைப் பண்ணிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.அப்படியொரு முடிவுக்கு வந்ததும் ராமசாமியிடம் பேசிப் பார்த்திருக்கிறாள். அவர் எந்தக் காலத்தில் சுயமாக முடிவெடுத்திருக்கிறார்? அப்பாரைய்யனிடம் பேசிக்கொள்ளச் சொல்லி விட்டார்.
கிழவன் ஒத்துக்கொள்ளவில்லை. ‘பொட்டப்புள்ளையை வூட்ல வெச்சுக்கிட்டு அவுனுக்கெப்படி கல்யாணம் பண்றது? அஞ்சாறு வருசமாவது ஆகும். அதுவரைக்கும் நீ புள்ளையை ஊட்ல வெச்சிட்டிருக்க முடியாது. வேற எடம் பார்த்துக்க..’என்றுவிட்டார்.
வாஸ்தவத்தில் இவனுக்கும் தங்கத்தமிழ்மேல் ஒரு நோட்டம் இருந்தது. அப்பாரைய்யனிடம் போய்க் கேட்டான். ‘ஆமாண்டா பேராண்டி வேண்டாம்னுதான் சொன்னேன் அதுக்கென்ன இப்போ?’என்றார். ‘நாலு வருசத்திக்கு மூத்த பொட்டப்புள்ளைய கட்டிக்குடுக்காம வூட்டோட வெச்சுக்கிட்டு அதுக்குள்ள உம்பட கல்யாணத்துக்கு இப்ப என்னடா அவசரம்? அப்படிச் செஞ்சா அந்த புள்ளைக்கு ஏதோ கொறையிருக்குமாட்டயிருக்குதுனு எல்லோரும் பேசிப்போடுவாங்கடா.. அப்படியொரு பேரு வந்துருச்சுனா அப்பறம் அந்தப் புள்ளைய யாருடா கட்டுவா..?’ என்று எதிர்க் கேள்வியைப் போட்டார். ’அதையுந்தவிர அத்தையூடு வேண்டாம்டா பேராண்டி.. அது ஒரு புத்தரதோஷம்புடிச்ச வம்சம்டா.. போன தலக்கட்டுலதான் ஆண்வாரிசு இல்லாமப் போச்சு.. போச்சாது.. இந்தத் தலக்கட்டுலயாவது ஒரு கடுவங்குட்டி பொறக்கவேணாம்? பொறக்கலியே.. நீ வேணும்னா பாரு.. அடுத்த தலைமுறையிலயும் அந்தக் குடும்பத்துக்கு ஆண்வாரிசு வராது..’
அப்பாரைய்யன் சொன்னமாதிரிதான் ஆகியது. பொன்னுச்சாமி தங்கத்தமிழ்ச்செல்வி தம்பதியர்க்கும் ஒரே பெண்பிள்ளைதான். கல்லூரி முதலாமாண்டு போய்க்கொண்டிருக்கிறாள். அன்றைக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு சம்பந்தமும் நெருங்கிவந்து கைகூடும் சமயத்தில் ஏதோவொரு காரணத்தினால் தட்டிப்போகும்போது, இன்றைக்குத் தோன்றுகிறது, இப்படி வெறும் முண்டமாகத் திரிவதற்குப் பதில் ஆண்வாரிசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை மனைவியோடும் ஒரு பெண்குழந்தையோடும் வாழ்வது எவ்வளவோ மேலென்று. எவ்வளவோ அர்த்தமுடையதென்று. இப்போது தோன்றி என்ன செய்ய? சில இரவுகளில் நல்ல மப்பில் இருக்கும்போது ததசெவையிழந்த துயரம் பொங்கிவிடும். அதுசமயம் அப்பாரைய்யனிடம் சண்டைக்குப் போவான். கிழவர் அசரவே மாண்டார். ‘அந்த எழவையெல்லாம் உன்னமுமாடா நெனைச்சுக்கிட்டிருக்கறே..? உனக்கெல்லாம் பொண்ணு தேடீட்டு வரும்பாரு.. மூக்கைச் சிந்தீட்டு நிக்காம போயிச் சோத்தைத் தின்னுபோட்டு படுத்துத் தூங்குபோ’என்பார் அசால்ட்டாக.
பொன்னுச்சாமி தங்கத்தமிழ்ச்செல்வியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக ஒருநாள் ஊரே பரபரத்துக் கிடந்தது. பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வருவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஒருவராலும் நம்பவே முடியவில்லை. ’போயும்போயும் இந்தப் புள்ளைக்கு புத்தி இப்படியா போகவேணும்? அவந்தான் கெடைச்சானா?’ என்பதுபோல எல்லோரின் கருத்துமே இருந்தது.
பொன்னுச்சாமி ‘பொன்னாக’ ஒளிர்வதெல்லாம் இன்றைக்குத்தான். அன்றைக்கு வெறும் ‘மண்ணாக’த்தான் ஊரே அவனைப் பார்த்தது. அந்தக் காலகட்டத்திலெல்லாம் ஆமாஞ்சாமி திருவாத்தான் என்றால்தான் யாருக்குமே அவனைத் தெரியும். அப்படியாகத்தான் இருந்தது குணச்சித்திரமும்.
வெள்ளிக்கிழமைதோறும் கருப்பராயன் கோவிலில் சாமியாட்டம் நடைபெறும். இன்றைக்கும் அது நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. இரவு எட்டுமணி மஞ்சள் பூசைக்குப் பிறகு பாதகுரடுகளை அணிந்து வேலைப் பிடித்து நின்றபடி பூசாரி அருள்வாக்குச் சொல்ல ஆரம்பிப்பார். சாமிகேட்க பக்கத்து ஊர்களிலிருந்தும்கூட சனம் வருவார்கள். சில வாரங்களில் கோழிகூப்பிடும் நேரம்வரைக்கும்கூட சாமியாட்டம் நடப்பதுண்டு. சாட்சாத் கருப்பண்ணசாமியாகவே மாற்றமும் சீற்றமும் கொண்டு மாரிமுத்தானின் அப்பா அருள்வாக்குச் சொல்லத் துவங்குவார். அவருக்குப் பக்கத்தில் இடுப்பில் துண்டும் வெற்றுடம்புமாக கையில் திருநீற்றுத் தட்டுடன் பொன்னுச்சாமி நின்று கொள்வான்.
சாமி கேட்கும்போது கொடுப்பதற்காக தட்டைப் பிடித்திருக்கும் கையிலேயே எலுமிச்சம் பழங்களையும் நாம்பியிருப்பான். அந்த நேரத்தில் பிரதம மந்திரியே வந்து கேட்டாலும் தட்டைத் தரமாட்டான். எலுமிச்சங்கனிகளையும்தான். கட்டியங்காரன் உத்தியோகமென்பது சாதாரணமா என்ன? அப்போது பார்க்கவேண்டும் நீங்கள் பொன்னுச்சாமியை. அப்படியிருக்கும் தோரணை.
“மேக்கால ஊருமடா.. மேக்கால ஊருமடா.. தெக்குவடல் வீதியடா..தெக்குவடல் வீதியடா.. கெழக்குப்பார்த்த பட்டியடா.. கெழக்குப்பார்த்த பட்டியடா.. கலக்கப்பட்டு நிக்குதடா.. கலக்கப்பட்டு நிக்குதடா.. அந்த மாட்டைக்கொஞ்சோம் வரச்சொல்லு… அந்த மாட்டைக் கொஞ்சோம் வரச்சொல்லு..” என்கிற ரீதியில் சாமியி பாடத் துவங்கும். ஒவ்வொரு வரியையும் ராகமாகப் பாடி முடித்ததும் சாமி ஒரு சிணுங்கல் அழுகாச்சைச் சிணுங்கி இடைவெளிவிட, அந்த இடைவெளிகளை ‘சா..மி’ ‘சா..மி’ என்னும் ஒற்றைச்சொல்லை ராகமாக நீட்டிமுழக்கி பொன்னான் பூர்த்தி செய்வான்.
மேற்கண்ட பாடலின் குறிகுணங்களோடு பொருந்திப்போகும் சம்பந்தப்பட்ட மாடு முன்னால் வந்து நிற்கும். சாமி உடனே கணக்கைச் சொல்லி விடாது. தான் சாமிதான் என்பதை நிரூபிப்பதற்காகவோ என்னவோ வந்துநிற்கும் மாட்டின் வீட்டைச்சுற்றி உள்ள நிலக்காட்சிகளை சிணுங்கிச் சிணுங்கி அழுதவாறே விவரிக்கத் துவங்கும். அது சரியாக இருந்தால்தான் கணக்குக்குப் போகும். இல்லாவிட்டால் வேறுமாட்டை வரச்சொல்லி பாட ஆரம்பிக்கும். ‘தென்கிழக்கு மூலையிலே.. தென்கிழக்கு மூலையிலே.. மழத்தண்ணி போகுந்தடோ.. மழத்தண்ணி போகுந்தடோ.. தடத்தோரம் புத்துக்கண்னு.. தடத்தோரம் புத்துக்கண்ணு.. உண்டூன்னா உண்டுஞ்சொல்லு.. இல்லீன்னா இல்லசொல்லு..’
எதிர்நிற்கும் மாட்டுக்கு சாமியின் பாஷையை விளங்கிக் கொள்ளவே கொஞ்சநேரம் ஆகும். அதற்குள் பொன்னு முந்திக்கொள்வான். ஏதோ நேரிலேயேபோய் பார்த்தே வந்துவிட்டதைப்போல ஆமோதிப்பான். ‘ஆமாஞ்சாமி.. ஆமாஞ்சாமி.. அப்படியேதான் இருக்குது சாமி..’
பொன்னுச்சாமிக்கு காட்டுப் பண்ணையம்தான். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா தவறி விட்டார். படிப்பை நிறுத்திவிட்டு செம்மறியாடுகளையும் மாடுகளையும் இவன் மேய்க்க வேண்டியதாகிவிட்டது. ஊரையொட்டியே இருக்கும் காட்டில் குட்டிகளை பிரித்து அம்மாவை மேய்க்கச் சொல்லிவிட்டு ஆடுகளையும் மாடுகளையும் தொலைவே இருக்கும் கொறங்காட்டிற்கு ஓட்டிச் செல்வான். ஆளரவமற்ற அந்த அத்துவானக் காட்டின் வேப்பமர நிழலில் பொழுதிற்கும் சாமியாட்டம் நடக்கும். அருள்வாக்குச் சொல்வது ஆமாஞ்சாமி போடுவது குறிகேட்டு நிற்பது எல்லாம் இவனே. சங்கி ஓய்ந்துபோகும் தருணத்தில் டவுசர் சோப்பிலிருக்கும் கட்டைப் புகையிலையை எடுத்து ராசாவின் மனசிலே ராஜ்கிரண் எலும்பைக் கடிப்பதைப்போல கடித்து கடைவாயில் அதக்கிக் கொண்டு படுத்து விடுவான்.
ஊரில் ஒருவன் சத்தமாகப் புறுக்கு விட்டால்கூட தெரிந்து கொள்ளும் சிஐடி மூளைக்காரர்களுக்கு இவர்களின் காதல் விவகாரம் ஓடிப்போகும்வரை தெரியாமல் போனது ஆச்சர்யம்தான். எல்லாம் கருப்பராயனின் அனுக்கிரகம். இல்லாவிட்டால் சினிமா நடிகையைப்போல லட்சணமாக இருக்கற புள்ளை போயும் போயும் இந்தத் திருவாத்தானைக் கட்டுவாளா? என பேசிக் கொண்டனர்.
காதல் மலர்ந்ததற்கான காரணம் காலப்போக்கில் வெளியே வந்தது. ஆடுகளுக்கும் மாடுகளுக்குமான தண்ணீர்த் தேவைக்காக பக்கத்திலிருக்கும் தங்கத்தமிழ்செல்வியின் தோட்டத்திற்குத்தான் பொன்னுச்சாமி போய்வந்து கொண்டிருந்தான். எப்போதும் போய் வருவதுதான். அதுசமயம் மாமனுக்கு உடல்நிலை சரியில்லை. மாசக்கணக்கில் படுத்திருக்கும்படியான உபத்திரவம். இஞ்சின் கிணறு ஆகையால் அதை எடுத்துவிட பொன்னுவின் உதவி தேவைப்பட்டது. அவனும் கூப்பிடும் போதெல்லாம் சுழட்டியைப் பொருத்தி சக்கரம் சுழற்றி, இஞ்சின் ஸ்டார்ட் ஆனதும் லாவகமாக சுழட்டியைக் கழட்டி கீழே போட்டுவிட்டு போய்க்கொண்டிருந்தான். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த தங்கத்தமிழுக்கும் ஒருநாள் இஞ்சினை ஸ்டார்ட் செய்யும் ஆசை வந்துவிட்டது. என்ன முயற்சித்தும் அவளால் முடியவேயில்லை. வேகமாகச் சுழற்றி லாக்கை விடுவித்ததும் சக்கரங்கள் வெடுக்கென்று பின்னுக்கு இழுக்கும். பின்னுக்கு விடாமல் மேலும் ஒரேயொரு சுற்றாவது முன்னுக்குச் சுற்றிவிடவேண்டும். அப்போதுதான் டீசல் இன்ஞ்சின்கள் ஸ்டார்ட் ஆகும்.
லாக்கை விடுவித்தபிறகு வருகின்ற கண்டத்தை ததசெவால் தாண்டவே முடியவில்லை. ஆச்சர்யமாகக் கேட்டாள் ‘எப்படி நீங்க மட்டும் ஈஸியா ஸ்டார்ட் பண்ணிடறீங்க?’
“இதென்ன பிரமாதம் சொழட்டியே போடாம கையிலேயே சுத்திக்கூட ஸ்டார்ட் பண்ணுவேன் தெரியுமா?”
“ஓ.. செம.. எங்க பண்ணிக் காட்டுங்க பார்க்கலாம்?”
“இப்ப இருட்டாயிருச்சு. காலைல பண்ணிக் காட்டறேன்”
பத்துமணி வாக்கில் கிணற்றுப் பக்கம் வந்தவன் விடியவிடிய பயிற்சி எடுத்தான். அடுத்தநாள் பகலில் இஞ்சின்போடக் கூப்பிட்டவுடன் எப்போதும்போல சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு போனான். சுழட்டியைக் கீழேயே வைத்துவிட்டு சக்கரத்தைக் கையினால் சுற்றியே இஞ்சினை ஸ்டார்ட் செய்தான். தங்கத்தமிழின் கண்கள் இமைகளை மறந்தன. அப்புறம் நடந்ததுதான் ஊருக்கே தெரியுமே.
எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின்மேல் சவாரி செய்துவிட முடியாதல்லவா? காதல் குதிரையின்மேல் சவாரி செய்யப்போய் ததசெவின் கல்விக் குதிரை படுத்துவிட்டது. மருத்துவப்படிப்புக்குரிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. எனினும் பார்மஸி சம்பந்தமான ஏதோவொரு படிப்பையெடுத்துப் படித்தாள். குழந்தை வளர்ப்புமுதல் துணிதுவைப்பது சமையல்வரை வீட்டுவேலையெல்லாமே பொன்னுதான். படிப்பு முடிந்ததுமே தங்கத்தமிழுக்கு வேலையும் கிடைத்து விட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் என்றோ மருத்துவ ஆய்வாளர் என்றோ சொல்லிக் கொண்டார்கள். ஆனால், உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை தங்கத்தமிழ்செல்வி ஒரு டாக்டர்தான். தலைவலி காய்ச்சல் மாதிரியான சாதாரணத் தொந்தரவுகளுக்கெல்லாம் சனம் அவ்வப்போது தேடிப் போவதுண்டு. அவளும் மருந்தோ மாத்திரையோ கொடுப்பாள். சரியாகிவிடும். நாளையோ மணியையோ எண்ணியபடி இழுத்துக்கொண்டு கிடக்கும் மரணப் படுக்கையாளர்களுக்கெல்லாம் எப்போதுமே ததசெதான் டாக்டர். மரணாவஸ்தையில் துடிப்பதை பார்த்துக்கொண்டும் இருக்க முடியாது. நைந்துகிடக்கும் திரேகத்தை ஆஸ்பத்திரிகளுக்கும் தூக்கிச் செல்லவும் முடியாது. ‘வலிதெரியாம பொட்டாட்ட படுத்து துங்கறமாதி ஏதாவது ஊசி இருந்தா போட்டுவிடும்மா..’ என்று அழைத்துப் போவார்கள். இவளும் கூப்பிடும போதெல்லாம் போய் போட்டுவிட்டு வருவாள். அந்த ஜீவன் அடங்கும்வரை இது தொடர்ந்த படியுமிருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு பொன்னுவின் வாழ்க்கை பசுமைமிக்கதாக மாறிப்போனது. தங்கத்தமிழ்ச்செல்விக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததும் அது மேலும் பூத்துக் குலுங்கியது. இஞ்சின் கிணற்றுக்கு மின் இணைப்புப் பெற்று தன்னுடைய காடு மாமனாருடைய தோட்டம் எல்லாவற்றிலும் தென்னம்பிள்ளைகளை வைத்து தோப்பு பண்ணிக் கொண்டான். சொட்டு நீர் பாசனம்தான். மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு நீர்பாய்ச்ச வேண்டிய வேலையெல்லாம் இல்லை. மோட்டாரைப் போட்டுவிட்டு பைப்லைன்களிலுள்ள கேட்வால்வுகளை திறந்தும் அடைத்தும் விட்டால் போதும். வேலை முடிந்தது.
காலையில் ஏழுமுப்பது சுமாருக்கு கல்லூரியில் படிக்கும் மகள் அஸ்வினியைக் கூட்டிவந்து பஸ் ஏற்றி விடுவான். எட்டு முப்பது சுமாருக்கு மனைவியைக் கூட்டிவந்து பஸ் ஏற்றி விடுவான். மாலையில் ஐந்து மணிக்கு ஒருவரையும் ஆறுமணிக்கு ஒருவரையுமாக மெயின்ரோட்டிலிருக்கும் பேருந்து நிறுத்தம்போய் கூட்டி வரவேண்டும். இடைப்பட்ட நேரங்களில் பெருசாக எந்த வேலையும் இருக்காது. ஓய்வு அல்லது ஆன்மீகப் பணி என பொன்னுவுக்கு செமையாகத்தான் பொழுது போய்க் கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் எதைப் பேசுவதென்ற சூட்சுமம் தெரியாது. மற்றபடி வினையமில்லாத ஆள்தான்.
வாழ்க்கையின் வண்ணம் மாறிவிட்டதைப் போலவே அவனுடைய ஆன்மீகமும் கலர் மாறிவிட்டிருந்தது. கருப்பராயனுக்குச் சலிக்காமல் கிடாயையும் சேவலையும் அறுத்துக் கொண்டிருந்தவன் தற்போது சைவசுத்த போஜனனாக ஆகிவிட்டான். உருவழிபாடெல்லாம் கிடையாது.
ஒளி கடவுளாகிவிட்டது. விளக்கை ஏற்றிக்கொண்டு அறையில் தனியாக அமர்ந்துகொண்டு தியானமென்ன பிராணயாமமென்ன குண்டலினியை எழுப்பி மேலே செலுத்துவதென்ன என்று பொன்னுவின் ஆன்மீகம் வேறு ஒரு தளத்தைக் கண்டுகொண்டு விட்டது. இவனுக்கு மட்டுமல்லாமல் தங்கத்தமிழ்செல்வி அஸ்வினிக்கும்கூட குண்டலினி முதுகெலும்பின் சக்கரங்களைப் பற்றிய அறிவெல்லாம் வந்து விட்டது.
இதற்கெல்லாம் காரணம் பக்கத்து ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் தான். நாற்பத்தியிரண்டு வயதுக்காரர். பார்ப்பதற்கு இருபத்தியைந்து வயது இளைஞனைப்போல இருப்பார். திருமணம் பண்ணிக் கொள்ளாதவர். கடவுளுக்கு வாழ்க்கைப் பட்டுவிட்டதால் கல்யாண வாழ்க்கையைப் பற்றியெல்லாம் யோசிப்பதே வீண் என்பவர். அவர் குண்டலினியை ரொம்பவும் மேலே மேலே கொண்டுபோய்விட்டார் போல. முகம் அவ்வளவு பளபளப்பாக இருக்கும். வெறும் வாழ்க்கையை தெய்வ வாழ்க்கையாக வாழச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய ஆன்மீக அமைப்பின் முழுநேர ஊழியர். விளம்பரங்கள் செய்து ஆர்வலர்களையும் அன்பர்களையும்கூட்டி தியானம் பிராணயாமம் தவம் ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல் உட்பட பல பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தார்.
அஸ்வினி படிப்பில் தத்தியாக இருந்தாள். ஞாபகசக்தியைப் பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார். அதற்குப் பிறகு அவள் கல்வியில் தேர்ந்து விட்டதாக ததசெ நம்பினாள். அவளுக்கும்கூட தூக்கமின்மை மன அழுத்தம் போன்றவைகள் இருந்ததாம். மணிவண்ணைன் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டபிறகு எல்லாம் போயேபோய்விட்டது. பொன்னுவுக்கு எவ்விதமான உடல் மன தொந்தரவுகளும் இல்லை. இந்தக் கட்டைப் புகையிலையை விடமுடியாததுதான் பெரும் பிரச்சினையாக இருந்தது. மணிவண்ணனின் பயிற்சி வகுப்புகளில் கலந்துவந்த பிறகு அதை சுலபமாக விட்டுவிட முடிந்தது.
குடும்பமே மணிவண்ணன் விசுவாசியாக மாறிப் போயிருந்தது. கூப்பிடுவதெல்லாம்கூட மணிஜி மணிவண்ணன்ஜி என்றுதான். மேலும் அந்த ஆன்மீக அமைப்பின் வெறியும் விசுவாசமுமான தன்னார்வலர்களாகவும் மாறி வீடுவீடாகசென்று பயிற்சி வகுப்புகளுக்கு ஆள்சேர்க்கவும் துவங்கினர். பயிற்சி முகாம்களுக்கு கூட்டம் சேரவும் துவங்கியது. முத்துக்குமாரும் மாரிமுத்துவும்கூட கொஞ்சநாள் போனார்கள். குண்டலினியை மட்டும் எப்பாடு பட்டாவது மேலே எழுப்பிவிட்டால் முகமெல்லாம் பளபளப்பாகி இளமையாகப் பூத்துவிடலாமே என்பதுதான் முத்துக்குமாருக்கான காரணமாக இருந்தது. மாரிமுத்தான் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதற்கான காரணம் வேறுவிதமானது. தியானசக்தியின் மூலம் மனோசக்தியை அதிகரித்து அதன்மூலம் அவனது கனவை சீக்கிரமே மெய்ப்பித்துக் கொள்ளலாமல்லவா? எல்லாம் சில வாரங்கள்தான். பிறகு சலித்துப்போய் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விட்டிருந்தனர் இருவரும். பன்னீர்செல்வம் மட்டும் ஆரம்பத்திலேயே வரமுடியாது என மறுத்து விட்டிருந்தார். ‘தாய்பாலைக் குடிச்சே தப்பிக்காத புள்ளை தகப்பஞ்சுன்னிய ஊம்பியாடா பொழச்சிக்கிடப்போவுது? சாமிகளைக் கும்பிட்டே ஒண்ணும் வெளங்கலை சாமியாருகளைக் கும்புட்டாடா வெளங்கீடப் போகுது?’ என அழைப்பு விடுக்கவந்த பொன்னுவை திரும்பிப் பார்க்காமல் ஓட விட்டிருந்தார்.
வைகாசி ஆவணி ஐப்பசி கார்த்திகை என முகூர்த்த மாதங்களும் அதில் முகூர்த்த தேதிகளும் வருவதும் போவதுமாக இருந்தன. என்ன முயற்சித்தும் சூரியன் முத்துக்குமாருக்கான முகூர்த்தம் மட்டும் வாய்க்கவேயில்லை. நலம்பொலம் என எங்கேயும் தலைகாட்ட முடியவில்லை. ஊருலகத்திலுள்ள எல்லோருமே பொன்னுச்சாமியாக மாறி விட்டதைப் போலப் பட்டது. பங்காளிகள் மாமன்மச்சினன் வகைகளில் கட்டிவந்தது கட்டிக் கொடுத்தது என்கிற வகையில் உருவாகும் புதுசொந்தங்களிடம் அறிமுகமாவதுதான் ஆகப்பெரும் சித்திரவதை. இன்னாருடைய மகன் கல்யாணப் பெண்ணுக்கு பொறந்தவன் முறையாகிறது என்கிறரீதியில் யாராவது புது உறவினர்களிடம் அறிமுகப் படுத்தி வைக்க அந்தப் புது உறவினர்களும் ‘அப்படியா.. ரொம்ப சந்தோசம். எத்தனை குழந்தைகள்? எல்லாம் என்ன படிக்கிறாங்க?’ என வெகு இயல்பாக உரையாடலை ஆரம்பித்து விடுகிறார்கள். மேற்படியான கேள்விகளுக்கெல்லாம் பதிலாக ’எனக்கின்னும் கல்யாணமே ஆகலீங்க’ என்று சொல்வது இருக்கிறதே..
வெறுத்தே போனது முத்துக்குமாருக்கு. அக்கா வாழாவெட்டியாக வீட்டோடு இருப்பதுதான் தடையோ என அக்காவின் மாமனாரிடம்போய் மன்றாடினான். அந்தக் கிழவனோ இந்த அப்பாரைய்யக் கிழவனைவிடவும் பிடிவாதம் பிடித்தவனாக இருந்தான். இனி தனக்கு கல்யாணமே ஆகாது அந்தக் கருமாந்திரமே வேண்டாம் எனும் முடிவுக்கும் வந்துவிட்டிருந்தான். பேருந்தைக் கொண்டுபோய்க் கம்பனியில் விட்டானதும் திரும்பவும் வந்து ஸ்டேண்டிலே விட்டிருக்கும் பைக்கை எடுத்துக்கொண்டு மனம்போனபடிக்கு சுத்தலானான்.
எங்கே சுத்தினாலும் ஷிப்ட் முடியும் இரவு எட்டு மணிக்கு டாணென்று கம்பனியில் இருப்பான். குண்டடம் வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு ஹெல்ப்பர் பையனைப்போய் சரக்கு வாங்கிவரச் சொல்லுவான். டிரைவிங்கின்போது குடிப்பதில்லை. ஊர்வந்ததும் தலைவாசலில் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி விடுவான். எல்லோரும் இறங்கிப்போனதும் ரெடியாக இருக்கும் பன்னீர்செல்வமும் மாரிமுத்துவும் ஏறிக்கொள்வார்கள். சரக்கடித்தபடியே கொஞ்சநேரம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். பிறகு தள்ளாடும் மப்புடன் மிகவும் ஸ்டெடியாக பஸ்ஸை தோட்டத்துக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு சாப்பிட்டானதும் தூங்கியும் விடுவான். மப்பு மீறிப்போன நாட்களில் வாசலில் கயிற்றுக்கட்டிலைப் போட்டுப் படுத்திருக்கும் அப்பாரைய்யனைப் பார்த்து ‘உன்னால நான் நாசமாப் போயிட்டேன். உன்னால நான் வெளங்காமப் போயிட்டேன். உன்னால நான் மோசம் போயிட்டேன்’ என்று கொஞ்ச நேரம் பிராது வாசித்துவிட்டுப் போய் படுத்துக் கொள்வான். நீ நாசமாப் போனா எனக்கென்ன என்பதுபோல கிழவர் அசால்ட்டாக இருப்பார்.
இப்படியாக இவன் விரக்தியில் பூத்த மலராக அல்லாடிக் கொண்டிருக்கையில் அந்தச் சம்பவம் நடந்தது. மணிவண்ணன்ஜியும் அஸ்வினியும் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தனர். இருபது வருடங்களுக்குப் பிறகு ஊர்முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பரபரத்தது.
யாருக்கு எப்படியோ.. இந்த சம்பவம் சூரியன் முத்துக்குமாருக்கு புதிய வெளிச்சத்தைக் காண்பித்தது. நாற்பத்தியிரண்டு வயசு ஆனவனால் பத்தொன்பது வயதுப் பெண்ணைக் கரெக்ட் பண்ண முடியுமென்றால் நாற்பதே வயதான தன்னால் அதுஏன் முடியாது? இதுகுறித்துப் பேசியபடியே சரக்கடித்துக் கொண்டிருக்கையில் பன்னீருச்சித்தப்பு கூறினார். ‘பதினாறிலிருந்து இருபது வயசு வரைக்குமான காலகட்டம் ஒண்ணு. நாற்பதிலிருந்து நாற்பத்தியைந்து வயது வரைக்குமான காலகட்டம் இன்னொண்ணு. இந்த இரு பருவங்களிலும் பெண்மனதில் ஆண்களைப் பற்றிய சிந்தனைகளே அதிகமுமிருக்கும். கரெக்டா புள்ளிவெச்சா ஈஸியாக் கோலம் போட்டுடலாம்.
”எதைவெச்சு சொல்றீங்க தலைவரே..?” என்றான் மாரிமுத்து
“அதாவதுடா மாரிமுத்தா.. முதல்ல சொன்ன காலகட்டம்ங்கிறது ஒரு பெண்ணுக்கு அழகும் இளமையும் வேர்பிடிக்கற பருவம். அதனோட பவர் என்ன வேல்யூ என்ன அப்படீங்கறதை தெரிஞ்சிக்கிற ஆர்வம் அவளுக்கே தெரியாம அடிமனசில இருக்கும். ஒரு பெண்ணின் அழகை, அதன் வல்லமையை உள்ளபடியே சரியாகப் படம்பிடித்துக் காட்டுவது அவளைக் கடந்துபோகும் ஆண்களின் பார்வைகள்தானே? அதனால ஆண்களின்மீதான கவனம் அந்தக் காலகட்டத்துல அதிகமா இருக்கும்”
“ஓஹோ.. அப்போ நாற்பது காலகட்டத்தில நினைப்பதற்குக் காரணம்?”
“அது அழகும் இளமையும் விட்டு விலகற காலகட்டம். விட்டு விலகிருச்சா.. இல்ல இன்னும் இருந்தபடிதான் இருக்கா அப்படீங்கற சந்தேகம் அடிமனசை ஆட்டிப் படைக்கும். ஆண்கள் இன்னமும் தன்னைக் கவனிக்கிறாங்களா இல்லையாங்கிறதை வெச்சுத்தானே அந்த சந்தேகத்தைத் தீர்த்துக்க முடியும்? அதனால் இந்தக் காலகட்டத்திலயும் வழக்கத்தைவிட அதிகமா ஆண்களின்மீது கவனம் இருக்கும்”
“சூப்பருங் தல.. அப்போ அஸ்வினி முதல்காலகட்டத்திலேன்னா டாக்டரம்மா ரெண்டாவது காலகட்டத்தில இருக்காங்க..”
“கரெக்ட”
“நல்லவேளை. அந்த சாமியார் அஸ்வினிக்குப் புள்ளி வெச்சான். டாக்டருக்குக்கீது புள்ளிவெச்சுத் தொலச்சிருந்தான்னா நம்ம பொன்னுவோட நெலமையை நெனச்சிப் பாருங்க..”
சிரிசிரியென்று சிரித்து ஓய்ந்தார்கள். ‘செரீங்தல.. இவ்வளவு வெவரமா பேசறீங்களே? அப்புறமும் ஏன் கல்யாணமே பண்ணிக்க முடியாம இருக்கறீங்க?வாழ்நாள்ல ஒரு பொம்பளையக் கூடவா உங்களால கரெக்ட் பண்ணமுடியலை?’என்று மாரிமுத்து கேட்டான். பன்னீர் பதில் சொல்வதற்குள் முத்துக்குமார் சிரித்தபடிக்கே கூறினான். “அடேய் மாரிமுத்தா.. கொரைக்கிற நாய்க என்னைக்குடா கடிச்சிருக்குது?”
இப்படியாகப் போய்க்கொண்டிருந்த முத்துக்குமார் வாழ்க்கையிலும் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று மத்தியானத்தில் விடிவுகாலம் வந்தது. பொதுவாகவே சனிக்கிழமையன்று மட்டும் குடியமர்வு அதிகநேரம் நீடிக்கும். மறுநாள் லீவு என்பதுதான் காரணம். அன்றைக்கும் அப்படித்தான். தலைவாசலில் பேருந்து விடியவிடிய நின்று கொண்டிருந்தது. பன்னீரும் மாரிமுத்துவும் முத்துக்குமாரும் இறங்க இறங்க ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கோழிகூப்பிடப்போய்ப் படுத்தவன் அந்த சத்தங்களைக் கேட்டுத்தான் திடுக்கிட்டு விழித்தான். அப்பாரைய்யனும் யாரோவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சத்தங்கள். மதியம் மணி இரண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது. ‘இந்தக் கெழுட்டுத் தாயோளி இன்னிக்கு என்ன வில்லங்கத்தைக் கொண்டாந்திருக்கான்னு தெரியலையே..’ என்றபடி போய் முகம் கழுவிக்கொண்டுவந்து சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். மாட்டுச்சாளையில் கயிற்றுக்கட்டிலைப் போட்டு அமர்ந்திருக்கும் அப்பாரய்யனை நடுவாசலில் நின்றபடி ஒரு நடுவயதுடைய பெண் கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணும் நின்று கொண்டிருந்தாள். மிரளமிரள விழித்தபடி. இவனைப் பார்த்ததும் அந்தப் பெண் ஒரு கணம் பேசுவதை நிறுத்தியது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கிழவன் பேச ஆரம்பித்திருந்தார்.
”இங்க பாரும்மா.. கல்யாணத்துக்கு வெச்சிருந்த காசை எடுத்துட்டுவந்து சீட்டாடி உம்புருசன் வுட்டுட்டான்னா அதுக்கு நானென்ன செய்யறது? நான் ஜெயிச்சேன். அவன் தோத்துட்டான். அதுக்கு யாரு என்ன பண்ண முடியும்? பணம் வேணும்னா மறுபடியும்வந்து ஆடிச்செயிச்சு வாங்கீட்டுப் போகச்சொல்லு. அதானே ஆட்டக்காரனுக்கு அழகு? அதையுட்டுப்போட்டு இப்படி பொம்பளைகளை அனுப்பிவெச்சு ஆர்ப்பாட்டம் பண்ணுனா என்ன அர்த்தம்? கல்யாணம் நின்னு போச்சு.. மாப்பிள்ளை வூட்டுக்காரன் மாண்டேண்ட்டான்னா நான் என்ன பண்றது? சரி ஒண்ணு பண்ணுவோம். ‘டேய் பேராண்டி இங்க வாடா.. இப்படி வந்து நில்லு. ஏய்.. பொண்ணு.. இது எம்பேரன். பேரு சூரியன் முத்துக்குமாரு. பனியன் கம்பனி பஸ் ஓட்டீட்டிருக்கிறான். நாஞ்சொன்னா மீறமாட்டான். இவனைக் கட்டிக்கிறதுக்கு உனக்குச் சம்மதமா? சம்மதம்னா சொல்லு. உங்க அம்மாவும் அப்பாவும் ஒரு பைசா தரவேணாம். நானே எல்லாச் செலவையும்போட்டு கல்யாணம் பண்ணி வெக்கறேன்..”
அந்த இளம்பெண் சூரியன் முத்துக்குமாரைப் பார்த்தான். இவனும் அந்தப் பெண்ணைப் பார்த்தான். தூரத்தே குயிலொன்று கூவும் ஓசை. அது மிகவும் மகிழ்ச்சியான கூவலாக இருந்தது.
***
-சு.வெங்குட்டுவன்