ஏக்கம், நிறைவேற்றம், வறட்சி, செழிப்பு என பல பருவங்களைக் கடந்துகொண்டிருக்கிறோம் நானும் கவிதையும். வியப்பும் எதிர்பாராத தன்மையும் புதுமையும் இன்னும் குறையவில்லை.

                                                      -ஷங்கர்ராமசுப்ரமணியன்

நாம் கவனித்திராத, ஆச்சர்யப் படக்கூடிய ஒரு நடையிலும் சொல்லல் முறையிலும்  கவிதை சொல்லப்படும்போது அந்த கவிதைக்கும், கவிக்கும் தனித்த அடையாளம் கிடைத்துவிடுகிறது. ஒரு வடுவைப்போல அந்த வரிகள் நம் மனதில் தங்கி விடுகின்றது. தனது கவிதைகளை இத்தகைய சிறப்பான வகையில் அளிக்கக் கூடியவர் ஷங்கர்ராமசுப்ரமணியன்.

அன்புள்ள நகுலனுக்கு

சென்ற ஞாயிறன்று

கவிஞர் வே.பாபு

இறந்துவிட்டார்.

உங்களது ஒரு மென்கிளை அவர்.

கடந்த சில நாட்களாக

நான்

பார்க்கும் செவ்வரளிப் பூக்கள்

மேலும் சிவந்திருக்கின்றன.

கவிஞர் வே.பாபுவின் அகால மரணத்தின் போது எழுதப்பட்ட ஒரு கவிதை இது. ஒரு கவிஞனுக்கு செலுத்தப்பட்ட சரியான அஞ்சலிகளில் ஒன்று இது. இக்கவிதையை வாசித்தவுடன் நான் சில மணிநேரம் நெகிழ்ந்து காணப்பட்டேன். துக்கமும், நெகிழ்ச்சியும், அற்புதமும் ஒருங்கே நிகழ்ந்ததைப்போல நினைத்துகொண்டேன். வே.பாபுவின் மரணத்தால் ஒருவித துக்ககரமான ஆட்கொள்ளப்பட்ட மனநிலையில் இருந்த எனக்கு அவரது மரணத்தை பூரணமாகவும், மங்களகரமாகவும் இக்கவிதையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவே நினைத்தேன்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சிறுபத்திரிக்கைகளில் தொடங்கி , தினசரி மற்றும் வார, மாதஇதழ்கள், இணைய இதழ்கள் என பல்வேறு தரப்பட்ட வடிவங்களில் கவிதைகள் கட்டுரைகள், விமர்சனங்கள், மதிப்புரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விஷய அறிமுகங்கள் என இடையறாது எழுதிக்கொண்டிருப்பவர் ஷங்கர்ராமசுப்ரமணியன். ஷங்கருடைய முதல் தொகுப்பு வெளியாவதற்கு சில வருடங்களுக்கு  முன்பாக காலச்சுவடு காலாண்டிதழில் அவரது சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் கவிதையும் என்னுடைய மழையிரவும் கடேரிக்கன்றும் என்ற கவிதையும் வெளியாகியிருந்தது. அக்கவிதையில் இருந்த அங்கதத்தொனியிலான வலி எனக்கும் எனது சக கவிகளுக்கும் ஷங்கரை அடையாளம் காட்டின. அப்போதிருந்து அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். இக்காலகட்டத்திலிருந்து அவரது கவிதைத்தொகுப்புகள் சீரான இடைவெளியில் வந்துகொண்டிருந்தன, ஷங்கரின் ஆரம்ப காலக் கவிதைகளில் தெரிந்த அங்கத வடிவம், கதை சொல்லல் முறையிலான கவிதைகள், அப்போதைக்கு அப்போதே காலாவதியாகிவிடாத தன்மையில் அழகியலும், நவீனத்தன்மையும் ஒருங்கிணைந்தவாறு இருந்து அவை சக படைப்பாளிகளால் புதிய வரவாகவும் முக்கியமான படைப்பாக்கமாகவும் விதந்தோதப்பட்டது.

    ஒரு கலை வடிவம் கலைஞனின் வாழ்நாளுக்குள்ளாகவே மதிப்பிழந்து போவது துயரமானதுதான். சமரசமுள்ள அத்தகைய வீழ்ச்சிக்காக தன்னை ஒப்புகொடுப்பவர்கள் மத்தியில், தீவிரகதியிலும் உத்வேகமான படைப்பாக்க முயற்சியிலும் 90 களுக்குப் பிறகு ஒரு கொத்தான கவிஞர்கள் உருவாகினர். அவர்களில் முக்கியமானவராக ஷங்கர்ராம சுப்ரமணியன் இருந்தார். மிதக்கும் இருக்கைகளின் நகரம் தொகுப்பு அப்போதைய இளம் கவிஞர்களுக்கிடையே பரவலான நன்மதிப்பை பெற்றிருந்தது. ஏற்கனவே நான்குறிப்பிட்டிருந்த  காரணங்களுடன், அவரது கவிதைகளில் தெரியும் கச்சித வடிவமும், வாசிப்பதற்கு ஏற்ற நவீன தன்மை கூடியவையாகவும் அவை இருந்தன. இந்த தொனி அவரை மற்ற கவிஞர்களிடமிருந்து தனித்து அடையாளம் காட்டியது.

         மிதக்கும் இருக்கைகளின் நகரம் தொகுப்பு வெளியான சமயத்தில் மெஹ்திஹசனின் மழைக்கால வீடு, மொஹபத், சித்தரஞ்சன் அவென்யு போன்ற கவிதைகள் அவற்றின் தலைப்புகளுக்காகவே வசீகரித்தவை, இக்கவிதைகளில் தெரிந்த அந்த இடங்கள் புதிய தோற்றமாக வாசக மனதில் விரிந்தன.

அறை

1.

உத்திரங்களிலும்

தூண்களிலும்

வேலைப்பாடுகள் செய்த

ஒன்றைக்கதவிலும்

முன்னோர்களின் ஆவிகள்

குழல் விளக்கொளியை

உறிஞ்சி

நிழல்களைத் தோற்றுவிக்கின்றன.

2.

இழு

தள்ளு

அறையின் ஒற்றைக்குரல்

கதவில்…

புரிதலை மீறியும்

தவறுக்குப் பின்தான

திறக்கவோ

மூடவோ இயல்கிறது.

3.

இருக்கிறோம் அறைகளில்

அம்மவின் விருப்பமில்லாமல்

அப்பாவும்

அப்பாவின் விருப்பமில்லாமல்

நானும்

   மூன்று துண்டுகளான இக்கவிதைகள் எழுப்பும் மனவெழுச்சி குறிப்பிடத்தகுந்தது. மிகச்சாதாரணமாக வெளிச்சத்தை தடுக்கும் பொருளுக்கு எதிரில் நிழல் விழுவது என்பது எங்கும் நிகழக்கூடியதுதான். இக்கவிதையில் இந்த நிழலும் விளக்கொளியும், நிகழ்த்தும் அருவத்தன்மை சற்று கூடுதலான அழகை ஏற்படுத்திவிடுகிறது. அதே போன்று சாத்தியமில்லாததையும் சாத்தியமாக்கும் ஒருவித புனைவுத்தன்மை இக்கவிதைக்கு பலம் சேர்க்கிறது..

       இரண்டாவது கவிதையில் அன்றாடம் நாம் திறந்து மூடும் ஒரு கதவு  வாழ்க்கையின் எளிய  தத்துவத்தைக்கற்றுக்கொடுக்கிறது.

 அனுபவங்களைப்போல பாடம் நடத்துகின்ற ஆசிரியர் வேறுயாருமில்லை, நாம் வாசித்தவைகளும், கற்றவைகளும் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளிலும் இருந்து புதியதொரு சந்தோஷத்தை, துக்கத்தை, சங்கடத்தை நாம் எதிர்கொள்ளும் போது இதற்கு முன்பு இருந்ததை விட புதிய அனுபவம் கிட்டுகிறது.

    அனுபவத்தின் வாயிலாக நாம் கற்றுத் தெளிந்த நிலையில் அதிலிருந்து  மீண்டு வருவதற்குப் பதிலாக மற்றொரு அனுபவத்தின் வாயிலில் நிற்க வேண்டியிருக்கிறது. மொழியின்மூலமும், வாழ்நிலத்தின்மூலமும், முன்னோர்கள் விட்டுப்போன பழமொழிகளிலும், கதைகளிலும், வழக்குச் சொற்களிலும் இருந்து பெற்ற பாடம் என்ன என்ற வினா வாழ்நாள் முழுக்க நம்மைச் சற்று இடைவெளியுடனே தொடர்ந்து வருகிறது. அதனை நாம் கதவை மூடுவதற்கும் திறப்பதற்கும் உள்ள குழப்பத்துடனே கழிக்க வேண்டியதாக உள்ளது இக்கவிதை எதனையும் , உபதேசிக்காத ஒரு பாடத்தினை நிகழ்த்துகிறது.

காகங்கள் வந்த வெயில்.

சிறுமி விமலா இறந்துவிட்டாள்

எப்போதும் சப்தமிடும் விரல் அகலக் குருவிகள்

ஏனோ இன்று வரவில்லை

செவலைப்பூனை

மரணத்தை ஏற்கனவே அறிந்திருந்தது போல்

கண்களைத் திறந்து மூடியபடி

உலகிற்குத் துக்கத்தை கையளித்துவிட்டு

படுத்துக் கிடந்தது.

நன் உள்ளே வந்திருக்கக் கூடாது

திரும்பத் திரும்பச் சொன்னார்

விமலாவின் அப்பா

விமலாவின் வீட்டில்

காகங்கள் கரைந்துகொண்டிருந்தன

பறிகொடுத்த முகங்களுடன்

வெவ்வேறு மூலைகளில் அமர்ந்திருந்தனர்

விமலாவின் அம்மாவும் உறவினரும்

வெயில்

விமலாவின் மறைவை

வீடுகள்தோறும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இக்கவிதையில் மரண வீட்டின் சித்திரம் அதன் துக்கம்மிகச்சரியான விதத் தில் வெளிப்பட்டிருக்கும். விரல் அகலக்குருவிகள், காகங்கள், வெயில், செவலைப்பூனை  என சிறுமி விமலாவின் மரணச் சித்தரம் வாசகனை நேரடியாகச் சென்றடைகிறது. இறந்த விமலாவின் வீட்டிலிருந்து ஒரு துக்கச்சித்திரம் வாசக மனநிலைக்குத் தாவிவிடுகிறது. ஏறக்குறைய இதுபோன்ற துக்க சித்திரமான கவிதைகள் முழு தொகுப்பாக வாசிக்கையில் ஆங்காங்கே மரணம் புதுப்புது வடிவமாக இவரது இவரது கவிதைகளில் காட்சியிளிக்கிறது..

ஷங்கரின் தொடக்ககாலக் கவிதைகளில் இருந்தே படிம இறுக்கமற்ற, கச்சிதமான மொழிக்கட்டுமானம் கூடிய, ஒருவித லாவகமான மொழி இயங்கி வருகிறது. குறிப்பாக மிதக்கும் இருக்கைகளின் நகரம், காகங்கள் வந்த வெயில், சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை தொகுப்புவரை பிணைப்புகளில் இருந்து விலகியமனப்பாங்குடனும், சிறிய அளவிலான எரிச்சலுடனும் உலகைக் காணும் மனோபாவம் இருந்தது. அது மேலோட்டமாக அலட்சியத்தன்மையுடன் இருப்பதைப்போல தோற்றமளித்தது. ஷங்கருடைய தனித்துவமான கதைசொல்லல்  பாணியிலான கவிதைகள் பெருக்தொடங்கிய போதும், அவருக்கே மட்டுமே உரித்ததான சில கவிதைகளாக சிங்கத்திற்கு பல்துலக்குபவன., ஒரு இரங்கற் பாடல்போன்ற கவிதைகள் கவனத்திற்கு உரியவையாக இருந்து, பின்னாட்களில் பலர் போலச் செய்யவுமான கவிதைகளாகியது.

இரவு காகமென இருந்தது

உயிர்

ஒரு கொக்கின்

வெளிச்ச உடலுடன்

ஆஸ்பித்திரி காரிடாரில் நடந்து

வெளியேறியது.

கொக்கும்,காகமும்

ஒரு நித்ய வனத்திற்குள்

ஜோடியாய்ப் பறப்பதை

நீங்கள் பார்த்தீர்கள்

நான் பார்த்தேன்.

கவிஞருடைய முதல் நான்கு தொகுப்புகளிலும் மரணம் காலத்தின் மீதும், பொழுதுகள் மீதும் படர்ந்துள்ளன. அவைகருமை நிறத்திலான காகங்கள், இரவுகள், குருவிகள், பூனைகள் என பல்வேறு வடிவங்களில் காணமுடிகிறது. மரணத்திற்குப்பின் என்ன என்ற கேள்வி இத்தொகுப்புகளின் வழி எள்ளல் தொனியிலும்,தீவிர கதியிலும், தொன்மையாகவும் விசாரணை செய்யப்படுகிறது. இது ஒருவகையில் சுய பச்சாதாபமாக அல்லது பயமாக வெளிப்படாமல் இருப்பது ஆறுதலாகஉள்ளது. அல்லது நாத்திக மனோபாவத்தில் ஆரம்ப காலக் கவிதைகளில் மரணம் குறித்து ஷங்கர் விசாரிக்க முற்பட்டதாகக்கணிக்கலாம்.

அதிலொரு கவிதை இது;

என்னைச் சிதையிலிட்டு எரித்தனர்

என் மூளை

பிசினென

வெண்பழுப்பாய்

சாம்பல் மேட்டின் மீது

திரண்டது

நோயில்

நான் உறங்கிய போர்வையில்

மிச்ச எலும்புகளைப் பொறுக்கி

ஆற்றில் விட்டனர்

அப்போது ஆறும்

ஆற்றின்  கரையில் இருந்த மரங்களும்

எப்போதுமான

ஒரு அந்தியில் உறைந்தன

நான் எரிந்த குழியில்

நீரூற்றி

தானியம் உதிர்த்தனர்

நான் முளைப்பேன்

காற்றிலாடும் கதிராவேன்

நான் சூரியன் ஆவேன்

சுத்ந்திரமும் அழகும்

மேனியில் பூரிக்கும்

சின்னஞ்சிறு குருவியாவேன்

நான் குதிரையாவேன்.

    ஷங்கர்ராமசுப்ரமணியனின் தொடக்ககாலக் கவிதைகளில் எதையும் நிறுவ முற்படாதவகையிலும், தன் அனுபவத்தையும், தான் அறிந்தவற்றையும் கூடியவரையில் புறவயமான கவிதைகளாகவும் எழுதி வந்திருக்கிறார்.

      அதேபோல அவரது அப்போதைய அறிவும் ஞானமும் சற்று கூடுதலாக இக்கவிதைகளில் காணக்கிடைக்கிறது. அது இதற்கு முந்தைய தலைமுறை கவிஞர்களின் கவிதைகளில் இருந்து சற்றே இவரை வித்தியாசப்படுத்தக் கூடியதாகவும் அது இருந்தது. கவிதையின் உள்ளடக்கம் அதன் வடிவம், சந்தம் அல்லது உருவம் ஆகியவை பற்றியெல்லாம் பெரிய அளவில் அக்கறை கொண்டதாகவோ, ஒதுக்கி விலக்கியதாகவோ தெரியாத வடிவத்தில் இக்கவிதைகள் இருந்தன.

  அநேக கவிதைகள் புறவயமாக இருந்தாலும் அடர்ந்த கானகத்தில் தனித்துவிடப்பட்ட ஒரு மனிதனின் குரல் இக்கவிதைகளின் ஆன்மாவாக இயங்குவதைக் காணலாம். ஏறக்குறைய ஆயிரம் சந்தோஷ இலைகள் தொகுப்பில் உள்ள மிதக்கும் இருக்கைகளின் நகரம், காகங்கள் வந்த வெயில், சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை, அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள், ராணியென்று தன்னையறியாத ராணி ஆகிய தொகுப்புகள் இத்தன்மையிலானவை. இந்த  மொத்தத்தொகுப்பிற்குப் பிறகு இத்தன்மையிலான குரல் மாறிஇயங்குவதைக் காணமுடிகிறது.

    குறிப்பாக ”கல் முதலைஆமைகள்” தொகுப்பிலிருந்து கொஞ்சம் பக்குவப்பட்ட மனதும், அனைத்தையும் அரவணைக்கும் பாங்கும் கவிதையின் பாணியாக தொடங்குகிறது

நீ

இதுவரை எதையெல்லாம் தவறவிட்டிருக்கிறாய்

சங்கரா

சிறு பையனாய்

எத்தனை நாணயங்களை

தெரியாமல் தெரியாமல்

அதற்கெல்லாம் காரணம்

தெரிந்ததா தெரியுமா

சங்கரா

தெரியாத்தை நோண்டாதே

சங்கரா

தெரியாததற்கு முன் தண்டனிடு சங்கரா

தெரியாததற்குள்

உன் ஆசைகளையும் நினைவுகளையும்

அள்ளயள்ளி இடு

அப்போது

தகிக்கும் வெயிலில்

எரியும் உட் சடலத்தின் புகை

உனக்கு சுகந்தமாகும் சங்கரா

 

பாரதியின் நடையொட்டிய இக்கவிதையில் தர்க்கத்தை முன்வைக்காமல் சரணாகதியை அடையவேண்டுமென தன் மனதிற்கு  சிபாரிசு செய்கிறார். வாழ்நாளில் பழைய நம்பிக்கைகள் சிலவற்றை விட்டு விலகுகிறோம் அல்லது புதியவற்றை சமரசங்களோடு ஏற்கப் பழகுகிறோம். இச்சின்னஞ்சிறு வாழ்வில் இவ்வுலகை திரும்பிப்பார்க்காமலும், கேள்விகேட்காமலும் கோடிக்கணக்கான பேரின் வாழ்வு நகர்கிறது. இந்த வாழ்விற்கிடையில்தான் எண்ணற்ற கண்டுபிடிப்புகள்விஞ்ஞனவளர்ச்சிகள்தத்துவப் பிடிப்புகள்கொள்கை ஏற்புகள் என பனைமரம் தன் மட்டைகளை கழித்துக்கொள்வது போலவாழ்வு தன்னை தகவு செய்து கொள்கிறது. அதேபோல இக்கவிதையின் இறுதியில் ”தகிக்கும் வெயிலில் எரியும் உட் சடலத்தின் புகை உனக்கு சுகந்தமாகும் சங்கரா” என்று நிர்கதியாக முடிக்கிறார்.

 

முகத்தை உற்றுப்பார்

பூனையிலிருந்து

மிகத்தொலைவில்

அடர்ந்த இருளுக்குள்

உள்ளது

புலி

புலியின் முகவாட்டம்

குலைந்த ஜியோமிதி

அதில் தெரியும் மடத்தனம்

குழந்தைமை

நிரவான வேட்டை

பூனையில் இல்லவே இல்லை.

தனது முதல் கவிதை தொகுப்பிலிருந்து காகங்கள், நாய், பூனை, ஓநாய், பறவைகள், முதலைகள் என பல்வேறு உயிரினங்கள் பல குறீடுகளாக இயங்குகின்றன. அவை வெறும் அஃறிணைகளாக இல்லாமல் தன்னுடன்   வாழ்ந்து பங்களிக்கும் ஒரு தத்துவச் சரடாக இவை இயங்குகின்றன. நாயிற்க் கடைப்பட்ட என்னையும் ஓர் பொருட்படுத்தி என்கிறார் மாணிக்கவாசகர். இவரது பல்வேறு கவிதைகளிலும் உயிரினங்கள் இருளும் வெளிச்சமுமாக உரையாடலும் அர்த்தம் பொதிந்துமாய்வந்துபோகின்றன. காகங்கள் வந்த வெயில், சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை, அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் என கவிதைத் தொகுப்புகளின் தலைப்புகளாகவும் அவை அமைந்ததும் எதேச்சையானதல்ல.

 

நீ இல்லை

ஸ்டீபன் வோலின்ஸ்கியின் நண்பர் கார்ல் ராபின்சன்

நிசர்கதத்த மகாராஜிடம் போய்க்கேட்டார்.

‘நான் அமெரிக்காவுக்குத் திரும்பிவிடவா

அல்லது இந்தியாவிலேயே இருக்கவா?

நிசர்கதத்த மகாராஜ் பதிலளித்தார்.

இந்தியாவில் இருக்கலாம்

அல்லது

அமெரிக்காவிற்கே திரும்பிப் போகலாம்

நீ இல்லை அதனால்

லாபமும் இல்லை

ஒரு நஷ்டமும் கிடையாது.

ஆயிரம் சந்தோஷ இலைகள் முழுத்தொகுப்பிற்குப் பிறகு ஷங்கர்ராமசுப்ரமணியன் தனது கவிதைகளின் வழியாக எளிதில் உணரமுடியாத மாற்றத்தை அடைகிறார். கவிதையின் தொனியில் இறைமை கலந்த உள்ளொளி மெல்லிய சவ்வைப்போல படர்ந்துவிடுகிறது. ஷங்கர் இவற்றை எதிர்பார்த்திருப்பார் என நான் நினைக்கவில்லை,ஆனால் மனதின் குரல் எதிர்பாராதவகையில் பல்வேறு கவிதைகளில்படிந்துவிட்டது.

நானறிந்த வரையிலும் ஷங்கரின் ஆரம்ப காலக் கவிதைகளில் இருந்து ஞாபகசீதா தொகுப்பு வரை இருந்த புறவயப்பட்ட குரல் தன்னை மெல்ல விடுவித்துக் கொள்கிறது. பின்பு ரமணரையும், நிசர்கத்த மாகாராஜையும், வள்ளலாரையும் தொட்டுணர்ந்து எழுதும்போதுதான் கைவிடப்பட்ட மனநிலையை அடைந்த குரல் எழுகிறது. செய்யுளாக்கத் தன்மை, கதைசொல்லல், விவரணைகள், விசாரணைகள், கேலிகள் என பல்வேறு குரல்கள் இக்கவிதைகளின் நெடுக ஒலித்தபடியுள்ளது.

பெரியாரைப்பற்றி எழுதியிருக்கிற நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா ஷங்கர்? என்ற கவிதையை வாசிக்கும்போது அற்புதமாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள அரசியல் நிலைப்பாடுகளிலும், வலது சக்திகளின் வளர்ச்சியிலும் திராவிட அமைப்புகள் மற்றும் தமிழ்தேசியவாதிகளின் மனதில்மாற்றுக் கருத்தை உண்டாக்க க் கூடிய வாய்ப்பும், அக்கவிதையின் ஆன்மாவை தவறாக புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஆனால் பெரியாரோ, ரமணரோ கவிஞன் கவிஞனாக இருக்கிறான் என்றே கருதவேண்டும். எனவே ஷங்கர்ராமசுப்ரமணியனின் மொத்த கவிதைகளையும் வாசிக்கும்போது ஒரே சமயத்தில்  செவ்வியல் தன்மை உள்ளதாகவும் அற்றதாகவும் தோன்றுகிறது. இதுவொரு நல்வாய்ப்பென நான் கருதுகிறேன். ஒரு சட்டகத்திற்கு அடைக்க வாய்ப்பின்றி போகிறது. இது கவிஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரமும், சுதந்திரமும் ஆகும். இந்த வகையில் இயங்கும்போதுதான் பொருண்மையும், வடிவமும் செயற்கையான அக்கறையுடன் வெளிப்படாமல் உள்ளது. இங்கிருந்துதான் ஹம்டி டம்டி, சிவன் தண்டீஸ்வரனாக, அசோகமித்திரன் வசித்தவீடு, கிளியும் குரங்கும் அல்லது என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது, சங்கர் (எ)எலி, வினோத ராட்சஸனின் நறுமண பீரோ போன்ற கவிதைகள் வெளிவர சாத்தியமாகியுள்ளது.

பிரௌனி என்ற நாய் தொடக்க காலக் கவிதைகளில்பெயரற்றும் பிற்பாடு நாயாகவும், தோழனாவும் மனக்குரலாகவும் நிழல், அம்மா தொகுப்பில் உருமாறுகிறது. தூல சூட்சம சன்னிதி, விவரணையாகவும் , காட்சிப்படுத்தலாகவும் சிறந்தும், அம்மாவின் சிட்ரிசின் மேகங்கள், கீழ்தாடை உடைந்த நாய் கவிதை கணத்த அனுபவத்தையும் தருகிறது.

நிழல், அம்மா தொகுப்பில் உள்ள கவிதை.

பிறப்பின் கதை

பிறக்கும்

கதையைத்தான்

நான் துவக்கத்திலிருந்து

பாடிக்கொண்டிருக்கிறேன்

மிகச்சிறியதாகப் பிறந்த

பலவற்றின் கதைகள் அவை

அன்பின் முலையிலிருந்து

அன்பற்ற முலை

சந்தோஷத்தின் முலையிலிருந்து

விடைதரும்

பிரிவின் முலை

அத்தனையும் பிறக்கிறது

இங்கே ஒன்றைத் தொட்டால்

இரண்டாகப் பிறக்காத எதையுமே

நான் இதுவரை கேட்டதேயில்லை

பேத அபேத!

ஷங்கர்ராமசுப்ரமணியின் மொத்த கவிதைகளை  வாசிக்கும்போது எனக்கு சமாராவில் ஒரு சந்திப்பு என்ற கதை நினைவிற்கு வந்தது. பாக்தாத் நகரத்தில் உள்ள வியாபாரியின் பணியாள் சந்தையிலிருந்து அவசரமாக வீடு திரும்புகிறான். தனது எஜமானிடம் எஜமானே சந்தையில் நான் சாவைப் பார்த்தேன். அது என்னை உற்று நோக்கிக்கொண்டிருந்ததையும், அதன் புன்சிரிப்பையும் கண்டேன், எனவே தங்களிடமிருப்பதிலேயே  வேகமாக ஓடும் குதிரையை எனக்களித்தால் நான் சாவின் கண்களில் இருந்து தப்பி எனது விதியை மாற்றிக்கொள்வேன் என்றான்.

 

வியாபாரி விலையுர்ந்ததும், மிகவும் வேகமாக ஓடும் தனது குதிரைகளில் ஒன்றை அவனுக்களித்துவிட்டு மறுபடியும் சந்தைக்கு போனான். அப்போது சாவு சந்தையில் இருப்பதைக் கண்டு ஏன் என்னுடைய வேலைக்காரனை மிரட்டினாய் என்று கேட்கிறான். அய்யா உங்கள் வேலைக்காரனை நான் மிரட்டவில்லை, அவனுக்கு எந்தவிதமான சமிக்ஞையும் அனுப்பவில்லை ஆனால்  இன்றிரவு இங்கிருந்து வெகுதொலைவில் உள்ள சமரா நகரத்தில் அவனை சந்திக்கவேண்டுமென்பது விதி. வேலைக்காரனால் இன்றிரவிற்குள் செல்லமுடியாத தூரத்தில் உள்ள சமராவில் அவனை சந்திக்க உள்ள நிலையில் அவன் பாக்தாத்தில் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது என்றது சாவு.

மரணமோ, உயிர்ப்போ, பெருநிகழ்வோ நாம் நினைப்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் அப்பாற்பட்டது. எப்படி இயற்கை அழிவுகளும் பேரதிசயங்களும், இயற்கையின் இயங்கு தன்மையும் மனித சக்திக்கு கட்டுப்பட்டதில்லையோ அல்லது அப்பாற்பட்டதோ அப்படியான நிகழ்வு எதேச்சையாக இவரது மொத்த கவிதைகளிலும் இயற்கையையொத்தத்தன்மையிலான அகவொளி ஆழ்ந்த தேடுதலாகவும், புரிதலுடனும் நிறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அவை மேம்பட்ட வடிவில் இக்கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. எழுத்து கால கட்டத்திலிருந்து இன்று வரை நீண்டிருக்கும் பாரம்பரியமானதும், மதிப்புமிக்கதுமான கவிஞர்களின் வரிசை சிறியதாக இருக்கலாம், அவர்கள் இந்த சமூக்தின் வாலை அசைத்துப்பார்க்காமல் தங்கள் போக்கில் எழுதிக்கொண்டிருக்கலாம், கைவிடப்பட்டவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, நாடோடிகளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தைப்போல் சாய்ந்துகொள்ள, படுத்துறங்க கவிதை இருக்கிறது. சிலசமயம் ஒரு வஸ்துவாக அவர்களை ஆற்றுப்படுத்துகிறது. சில சமயம் ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை அவர்களை பதற்றப்பட வைக்கிறது

ஷங்கரின் பரந்துபட்ட அனுபவங்கள், துயரங்கள், அறிவுச்சுடர்கள் ஆகியவை விதியைப்போல கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக படைப்பாக்கமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெரிய எதிர்பார்ப்பும் , பரபரப்புமின்றி வந்த சுவடு தெரியாத தொனியில் இவரது பல தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பற்றற்ற நடையும், வாழ்வு முறையும் இக்கவிதைகளின் நாடியாக உள்ளது. எடுப்பார் இல்லாத கைக்குழந்தையின் குரல்தான் இவற்றில் மனிதரகள் அல்லாத உயிரினங்களாக இக்கவிதைகளில் நடந்தும், பறந்தும், ஊர்ந்தும் உள்ளன. அவ்ற்றை அமைதியாக கவனிக்கலாம். இறுதியாக ஷங்கரின் ஒரு கவிதை;

எனக்குத் தெரியும்

பழங்கள் எப்போது அழுகத்தொடங்குமென்று

அன்பு எப்போது மூச்சுமுட்டுமென்று

உண்மை

எந்த இறகால் கனக்குமென்று.

 

***

-கண்டராதித்தன்

 

Please follow and like us:

1 thought on “மிதக்கும் கலை வடிவம் ; ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

  1. கவிஞரையும் கவிதையையும் முழுமையாக உணர்ந்து வைத்துள்ள ஒருவரால் ஆய்விற்குள்ளாகும் தருணம் அபரிமிதமான உற்சாகத்தைத் தரக்கூடியது.அந்த வகையில் “மிதக்கும் கலை வடிவம் “பகுப்பாய்வு நல்ல கவிஞரைச் சென்றடைய வாசகனுப் பாலமாக அமைந்திருக்கின்றது.வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *