மொட்டவிழக் காத்திருக்கும்
சிற்றளிக்காய்
காய்ந்து உலர் நிணம் அடரும்
சதையமெழுகாய்க் குவி
பதைபதைத்துத் துடி
தூண்டில் செருகி பின்
கடலில் நனை
படை
புரவியின் காற்சிலம்பில் கனக்கும் புழுதிக்கனலாறு
ஆடு
கொண்டாடு
இரவைக்கொட்டி அமிழ்
கோப்பை நிரப்பும்
பிரபஞ்சத்துளியாய் மேகம் அடர்
கொழுந்தல்ல முகிழ்க்கும் மலர்த்தெப்பம்
மிதத்தலில் சரியும் காற்றுப்பட்டம்
கண்கட்டி வான் வரையும் ஓவியனின் கருப்புப்பட்டியில் படியும் காட்சியை
திரவமென உருகிப்பூசிமெழுகு
களிநடனத்தில் நீக்கமற தொலை
அந்தகாரக் கோப்பையில் வழியும் திரவத்தில் அமிழ்ந்திருக்கும் திராட்சை ஒவ்வொன்றாய்ச் சரி செய்
காற்றில் பகுத்த இசையை ஊதுகுழலாகி நெளியச்செய்
அதில் நெகிழ்ந்து
கமழும் பரவசத்திலே
ஆழ்தொலையும் பித்து
கொடியுலர்ந்த ஆடைக் கம்பம்
காற்றுக்களிநடனம்
அதன் பின்சென்று மறையும்
நட்சத்திர சத்திரம்
மீந்துபோன கனவுகள்
அந்தரமாய் அலையும் பட்சியின்
காலில் அப்பிய நிலத்துண்டம்
கடிந்து விரையும் விடியல் சாமத்து ஒற்றை விடிவெள்ளி யான்
இரவின் மணலை அழிக்கும் விரலாகிறேன்
தோற்றுத்தோற்று இந்நிணம் குருதியுடன்
பிண்டமாய்த் திணிய
பிரபஞ்ச நெடிக்குள்
முப்பொழுதையும் உலரச்செய்யும்
சமர் மூளும்
சொல்லடங்காச் சரணம்
சுருதி வழியும் வீணை
தனித்திருக்கும் கேள்
அதன் இசை வழியும் புன்நரம்புக்கு அரவத்தின் பற்கள்
எறும்பினது கால்கள்
அசரீரி அமீபா
===============
முன்பெல்லாம்
அலைகள்
கடல் அலைகளாக
கரையை முத்தமிட்டுச்செல்லும்
வெண்குருத்து மணல்
உலர்தலைத் தவிர்ந்திருக்கும்
அலையாக மாத்திரமே
நம் கால்களைத் தழுவிக்கொண்டிருக்கும்
தென்னைமர உயரத்தில்
அலை எழுந்தருள்வதாய் வந்து ஊரை அமிழ்த்தியபோதும்
மிதவையொன்றைப்பற்றி
உடமைகள் இழந்து
நீந்தி தரைவெளியில் தவழ்ந்து மூச்சுவிட்டோம்
யாம் அப்போதும்
அன்னையின் சினமென
அலைகளை ஆராதித்தோம்
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
……….
… என
அலைகள்
விஸ்வரூபமாய்
எழுகின்றன
காற்று காவும்
நுண் அசரீரியின் மேலங்கியாய்
முகக்கவசம் மேல்
படிந்து அலைகின்றது
அக்கொடுஞ்சொல்
சுவாசிக்க அவகாசம் கேட்டுத்
திணறும் கரை மணல் புரளும்
மீன்களாய்
தூண்டிலில் தன்னைக்
கொழுவி மாய்வதற்கு
நீரின் பக்கமாய்
அவை நெழிகின்றன
நெகிழிப்பைக்குள் இறுகக்கட்டிய
சுவாசப்பை
அடிக்கடி திணறி
ஈசல்களாய் உதிர்க்கின்றது
மனிதப்பூச்சிகளை
இடைவெளிகளின் போதாமையை
கண்ணாடிப்பெட்டிக்குள்
சிறைக்கிறது
தீண்டத்தகாத கொடுங்காலத்தில்
தாயும் சேயும் தற்காலிகமாய்
தொடுகையில் அந்நியமாக்கப்படுகின்றனர்
ஏன் இந்த அலை
ஏன் இந்தக் கொடுஞ்சொல்
ஏன் இந்த விலகல்
ஏன் இந்த தற்காலிகம்
தீண்டாமையை வளர்க்கின்றது
ஏன் என்பதன் எல்லா வினாக்களும்
மென்மேலும் அகம் துளைக்கும்
மரங்கொத்தியாய் அலகை நீட்டிக்கொண்டிருக்கிறது
சாம்பலின் மீது படிந்த சிறுகங்கு
அணைய அணைய தீ வளர்க்கிறது
ஓயாத அவலமாய்
வரலாற்றில் சாசனம் வரைகிறது
-பாத்திமா மின்ஹா