1. கேள்வி: மொழிபெயர்ப்பாளனும் கதை சொல்லியாக, கதைக் களத்தினுள் ஓர் அங்கமாக செயற்படுகின்ற போதுதான் மொழிபெயர்ப்பின் விரிவான அழகியலை உணர்ந்து கொள்ள முடியுமாயிருக்கும். மொழிபெயர்ப்பாளர் என்கின்ற வகையில் பிரதிக்கு வெளியே நின்று செயற்படுவது ஆரோக்கியமான வாசிப்புச் சூழலை உருவாக்கும் என நம்புகிறீர்களா?

பதில்: எல்லா வகையான பிரதிகளுமன்றி இலக்கியப் பிரதிகளை பின்னணியாகக் கொண்டே இந்தக் கேள்வி எழுகிறது என நினைக்கிறேன். அந்த வகையில் பதிலின் ஒரு பகுதி கேள்விக்குள்ளேயே அடங்கியிருக்கிறது. இலக்கிய மொழிபெயர்ப்பு என்றில்லாமல் பொதுவாக எந்த மொழிபெயர்ப்பாயினும் பிரதிக்கு வெளியே நின்று மேற்கொள்ளப்படும் போது அது வெற்றியடையாது என்பதே எனது புரிதல். அதேவேளை மொழிபெயர்ப்பு வகைகளுள் மிகக் கடினமானது இலக்கிய மொழிபெயர்ப்பே என மொழிபெயர்ப்புக் கோட்பாட்டாளர்கள் கூறுவர். ஏனென்றால் இலக்கிய மொழிபெயர்ப்பில் மொழி மட்டுமன்றி பண்பாட்டுக் கூறுகளும் உணர்ச்சிகளும் நேரடியாக சம்பந்தப் படுகின்றன.

ஒரு மொழியின் வார்த்தைகளையும் வசனங்களையும் எண்ணங்களையும்  வண்ணங்களையும் சாதகம் செய்து புது மொழியில் படைத்தெடுக்கும் அசாத்தியத் தவம் இது. மாலையொன்றின் முத்துக்களை வேறாகப் பிரித்தெடுத்து மொழிக்கடலில்  வீசிவிட்டு மூச்சடக்கி மூழ்கி மீண்டும் கோர்த்தெடுக்கும் ஆயாசப்பணி.

வ்வளவு ஆயாசம் நிறைந்த பணியை பிரதிக்கு வெளியே நின்று மேற்கொள்ள முடியாது. அது ஆரோக்கியமான வாசிப்புச் சூழலொன்றை உருவாக்குமென்றும் நம்ப முடியாது.

2. கேள்வி: ஈரானியச் சினிமாவின் மிக அதிகமான தாக்கம் தாங்கள் தெரிவு செய்யும் படைப்புக்களில் இருப்பதாக சொல்லப்படுகிறதே? வாசிப்பு சுவாரஷ்யத்திற்காக வலிந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புக்களை மொழி பெயர்ப்பு செய்வதில் அதிக அக்கறை காட்டுகிறீர்களா?

பதில்: இந்தக் கண்டுபிடிப்பை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று தெரியவில்லை(புன்னகை). இதுவரை ஒரேயொரு ஈரானிய நாவல்தான் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது. இன்னொன்று அச்சில் உள்ளது. அது எலும்புத்துண்டு. இரண்டையும் சீர்மை வெளியீட்டாளர்கள் எனக்கு அனுப்பி மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று கேட்டிருந்தர். உள்ளடக்கமும் கருவும் பிடித்திருந்ததால் உடன்பட்டேன். இந்த நாவல்கள் மட்டுமல்லாமல் கிரானடா, வடக்கு நோக்கிய பருவகாலப் புலம்பெயர்வு என்பனவும் எங்கள் பரஸ்பர உடன்பாட்டுடன் செய்யப் பட்டவைதான். ஆனால் அவை ஈரானிய நாவல்களல்ல. அவர்களால் முன்மொழியப்பட்ட இன்னும் சில நாவல்களை நான் பொறுப்பேற்வில்லை.  மறுபுறத்தில் என்னால் பரிந்துரைக்கப்பட்ட சில நாவல்களை ஏதோ சில காரணங்களால் அவர்களும் ஏற்கவில்லை. அவற்றைச்சொந்தமாகவேனும் தமிழுக்குக் கொண்டு வரும் எண்ணம் என்னிடமுண்டு.

இதற்கப்பால் ஈரானிய சினிமாவின் தாக்கம் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். எந்த சினிமாவுக்கும் கதைதானே அடிப்படை. சரி… ஓர் எடுகோளுக்காக உங்கள் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், ஈரானிய சினிமாவின்தாக்கமே இல்லாத நாவல்கள்தான் -அவை வாசிப்பு சுவாரஷ்யத்தை ஏற்படுத்தா விட்டாலும்- தெரிவுசெய்யப்பட வேண்டுமென்பதுதான் இந்தக் கேள்வியின் உள்ளுறை என நான் கொள்ளலாமா?!

 

                                                                    மொழிபெயர்ப்பாளர் இர்பான்
3. கேள்வி: பல்வகையான ஈரானியப் படைப்புக்கள் வெளிவந்திருக்கின்ற  சூழலில் இர்ஃபானின் தெரிவுகளில் உள்ள அரசியல்தான் என்ன?

பதில்: முன்னரே சொன்னது போல் இதில் எந்த அரசியலும் இல்லை. இன்னும் பத்துப் பதினைந்து ஈரானியப் படைப்புகளை நான் தமிழுக்குக் கொண்டு வந்து அதன் பிறகு இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் அப்போது அதில் ஒரு தர்க்க நியாயம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

4. கேள்வி: மொழிபெயர்ப்பொன்று படைப்புகளுக்கான மறுமொழியாக அன்றி, படைப்பாக்கமாகவே இயங்குகின்ற போக்குகள் உருவாகியிருக்கின்றன. பிறிதொரு படைப்பாக கருத்தில் கொண்டு உங்களது மொழிபெயர்ப்பு வேலையினைச் செய்கிறீர்களா? அல்லது உங்களது படைப்பாகவே நினைத்து அணுகுறீர்களா? இவ்விரண்டு முறைகளுக்குமான வித்தியாசங்கள் எனும் அடிப்படையில் எவற்றைக் கற்பிக்க முனைகிறீர்கள்?

பதில்: ஒரு மொழிபெயர்ப்பாளர் வேற்றுமனோபாவத்துடன் வெளியில் நின்று கொண்டு தன் பணியைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது பிரதியின் ஆன்மாவைக் கொன்று விடும். உயிர்ப்போ துடிப்போ அற்ற வெற்றுப் பிண்டமாகத்தான் மொழிபெயர்ப்பு பிரசவமாகும். அதேநேரம் அவர் பிரதியின் மீது தன் சொந்த ஆக்கம் போல் முழுச் சுதந்திரம்  எடுத்துக் கொள்ளவும் முடியாது. சுக்ரிதா பால்குமார் ஒரு கட்டுரையில் சொல்வது போல், ஓர் எழுத்தாளர் தன் வேலையை தொடங்கும் போது அவர் முன் ஒரு வெற்றுத் தாள் மட்டுமே இருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் வேலையை தொடங்கும் போது அவர் முன் ஒரு படைப்பே உள்ளது.

ஆக, மூல எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய இரு ஆளுமைகளுக்கிடையில் ஒரு வித சமரசமும் புரிதலும் நடுநிலைத் தன்மையும் பேணப்படுவது அவசியம். இது கடினமான அப்பியாசம்.

5. கேள்வி: ஒவ்வொரு நிலமும் அதற்கே உரித்தான அரசியல்பண்பாட்டுடன் அடையாளப் பரப்பினை உருவாக்கும். அவற்றிக்கான வெளிப்பாட்டினை அக்காலங்களில் வெளிவரும் இலக்கியப் படைப்புக்களின் ஊடாகவே புரிந்து கொள்ள முடியுமாயிருக்கும். கிரானடா வெளிப்படுத்தியிருக்கும் நிலப்பண்பாடும், அதன் அரசியலும் பெரு உரையாடலுக்குரியவை. இவைசொல்லப்பட்டிருக்கும் மொழி குறித்து உங்களது பார்வை எப்படிருக்கிறது?

பதில்: கிரானடா நாவல் வெளிப்படுத்தியிருக்கும் நிலப்பண்பாடு தமிழ் வாசகர்களுக்குப் புதிய வரவு என்பதில் சந்தேகமில்லை. நாவலின் முதலாம் பாகத்தில் மட்டுமன்றி, இரண்டாம், மூன்றாம் பாகங்களிலும் இந்த உண்மை விரவிக் கிடக்கிறது. நாவல் விமர்சனத்துக்கு உட்படுத்தியிருக்கும் அரசியலைப் பொறுத்தவரை அதனையொத்த சில முக்கியமான கூறுகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் -குறிப்பாக முஸ்லிம்கள்- முகம் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பதை நாவலை நுணுக்கமாகப் படிக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். எந்தவொரு நாவலிலக்கியத்தினதும் வெற்றி அதன் கதை, அந்தக் கதை சொல்லப்படும் மொழி, இயங்கு தளம், பாத்திர வார்ப்பு என்பவற்றிலேயே பிரதானமாகத் தங்கியிருக்கும். கிரானடா ஒரு வரலாற்றுத் துயரத்தை கதையாகச் சொல்கிறது. முஸ்லிம்கள் எட்டு நூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிய நாகரிகப் பின்னணி கொண்ட அந்தலுஸ் என்னும் ஸ்பெயின்தான் அதன் கதைக்களம். கதைச்சரடு எங்கும் அறுந்து விடாமல் அற்புதமான பாத்திரங்களை ரள்வா ஆஷூர் இயங்க விட்டிருக்கிறார். வரது கதை மாந்தர்களில் யாரும் யாரையும் விட சளைத்தவர்களில்லை. நாவலாசிரியர் கையாண்டிருக்கும் மொழி இலக்கியத் தரம் வாய்ந்த அழகியல் மொழி. சில இடங்களில் அவர் வெளிப்படுத்தியுள்ள கவித்துவமான விவரணங்களை அதே வீச்சுடன் தமிழுக்குக் கொண்டு வர நான் மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. அதில் ஓரளவுவெற்றியடைந்திருக்கிறேன் என்பதை நாவலின் முதலாம் பாகம் தொடர்பாக வெளிவந்த பத்துக்கு மேற்பட்ட திறனாய்வுக் குறிப்புகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களிலிருந்தும் உணர முடிந்தது. நீங்களே குறிப்பிட்டது போல் கிரானடா பெரும் உரையாடலுக்குரிய ஒரு பிரதிதான்.

6. கேள்வி: இங்கு இசங்களாக எழுந்தருளியிருக்கின்ற நவீனம் – பின்நவீனம் குறித்த கரிசனைகளோ விவாதங்களோ உங்கள் மொழிபெயர்ப்பில் ஏதேனும் ஊடறுப்புச் செய்திருக்கிறதா?

பதில்: இல்லை. அதற்கான அவசியமும் இருக்கவில்லை. intellectual pleasure என்கிற புத்திஜீவித்துவ இன்பத்துக்காக அல்லது புரிந்தும் புரியாமலும் மாயம் காட்டுகின்ற புதிய சொற்களதும் நீண்ட வசனங்களதும் கிறக்கத்துக்காக ஒரு காலத்தில் பின் நவீனத்துவ எழுத்துக்களை தேடி வாசித்திருக்கிறேன். இப்போது பெரிதாக அதில் நாட்டமில்லை. நேரமும் கிடைப்பதில்லை.

7. கேள்வி: மொழி பற்றிய நேரடியான பெயர்த்தலுக்கும், மொழியின் சூட்சமங்களையும், கதையின் நுட்பங்களையும் புரிந்து கொண்ட மொழியின் மறைமுக பெயர்த்தலுக்கும் தமிழ் மொழியினது ஒத்துழைப்பு உங்கள் மொழிபெயர்ப்புக்களில் எம்மாதிரியான துணைச் செயற்பாட்டினை ஏற்படுத்தியிருக்கின்றன?

பதில்: அறபு மொழியும் தமிழ் மொழியும் இரு வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. இரண்டும் தொன்மையான மொழிகள். இரண்டுக்குமிடையில் ஒலியமைப்பிலும் சொற்களஞ்சியத்திலும் வசனக் கட்டமைப்பிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இரு மொழிகளும் முற்றிலும் வேறுபட்ட கலாசாரப் பின்புலங்களைக் கொண்டவை. ஆங்கில மொழியும் அப்படித்தான் என்றாலும் ஒப்பீட்ளவில் அது அவ்வளவு பிரச்சினையாக அமைந்ததில்லை. அறபு மொழியின் சூட்சுமங்களையும் நுட்பங்களையும் நன்றாகப் புரிந்து கொண்டுசரளமான தமிழ் நடைக்குக் கொண்டு வருதல் என்பது அவ்வளவு எளிதான பணியில்லை. தற்கு இரு மொழிகளையும் அவற்றின் கலாசாரக் கூறுகளையும் பற்றிய நல்ல பரிச்சயம் தேவை. சில நேரங்களில் அறபு மொழியில் வந்திருக்கும் ஒரு வார்த்தைக்குப் பொருத்தமான நிகரி்ணையைத் தேடி சில மணித்தியாலங்கள்.. ஏன் சில நாட்கள் கூட செலவிட்டிருக்கிறேன். எத்தனையோ அகராதிகளைப் புரட்டியிருக்கிறேன். இணைய வழிக் கட்டுரைகளை அலசியிருக்கிறேன். துறைசார் புலமையாளர்களை அணுகியிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை அது ஓர் இன்ப வேதனை. ஒரு வெற்றிகரமான மொழிபெயர்ப்பாளன் நல்ல வாசகனாகவும் இருப்பான் என்பதே என் அனுபவம். நல்ல வாசகனால்தான் நல்ல எழுத்தாளனாக இருக்க முடியும். நல்ல எழுத்தாளனால்தான் நல்ல மொழிபெயர்ப்பாளனாக இருக்க முடியும். நல்ல மொழிபெயர்ப்பாளனால்தான் வாசகரின் முன்னால் தன்னையும் மூல எழுத்தாளனையும் -ஒருவர் மற்றவரைத் தொந்தரவு செய்யாத படி- ஒன்றாக நிறுத்த முடியும்.

8. கேள்வி: மரபு ரீதியாக மொழிபெயர்த்தலுக்கான ஒரு போக்கு இங்குண்டு. மாமூலான இப்போக்கினை விட்டு திருமுகம் விலகியிருப்பதாக கூற முடியும். இதனை இங்கு நடைமுறையிலிருக்கும் மொழிபெயர்ப்பு முறைக்கான எதிர்கதையாடலாகக் கொள்ளலாமா?

பதில்: கல்லூரிக் காலங்களில் எண்டமூரி வீரேந்திரநாத்தின் பல தெலுங்கு நாவல்களை சுசீலா கனகதுர்காவின் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பின் எந்தச் சங்கடமும் வெளித் தெரியாமல் தமிழிலேயே எழுதப்பட்ட நாவல்களை வாசிப்பது போன்ற உணர்வை அவை தருவது கண்டு வியந்துமிருக்கிறேன். மொழிபெயர்ப்பாளரின் ஆற்றல் வாய்ந்த மொழியாளுகைக்கு அப்பால் தமிழும் தெலுங்கும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதாலும் பல மொழியியல்-கலாசாரக் கூறுகளில் ஒற்றுமைகொண்டவை என்பதாலும் அது சாத்தியமாகியிருக்கலாம். றபிலிருந்து தமிழுக்கு அப்படி மொழிபெயர்க்கப்பட்ட எந்த நாவலையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. அதனால் என் மொழிபெயர்ப்பு அனுபவம் -அது திருமுகமாக இருந்தாலும் கிரானடாவாக இருந்தாலும் அல்லது அவற்றுக்குப் பின்னர் மொழிபெயர்த்த நாவல்களாக இருந்தாலும்- நடைமுறையிலிருக்கும் மொழிபெயர்ப்பு முறைக்கான எதிர் கதையாடலா அல்லது விலகலா என்று சொல்லத் தெரியவில்லை. மொழிபெயர்ப்புக்கலை: தேர்வும் பிரச்சினைகளும் என்ற கட்டுரையில் அமரந்தா சொல்வது போல், மொழிபெயர்ப்பு என்பது வெறும் அறிவுத்தளம் சார்ந்த பயிற்சி மட்டுமே அல்ல. அது ஒரு சவால். மூலப்படைப்பை வாசிக்கும் போது உண்டாகும் உணர்வுக்கு நெருக்கமான உணர்வு மொழிபெயர்ப்பில் கிடைக்கும் போதுதான் மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைய முடியும். அதற்கு மொழியார்வம்தேர்ச்சி, மொழிபெயர்ப்புத் திறன், படைப்பாற்றல், கடின உழைப்புஅர்ப்பணிப்பு உணர்வு ஆகிய அனைத்தும் தேவை.

நான் மொழிபெயர்ப்பைத் தவமாக கருதுபவன். என்னைப் பொறுத்த வரை அதுவும் ஓர் ஆத்மீக அப்பியாசம்தான். அந்தகார அடவியில்  கண்மூடி..புலனடக்கி.. மூச்சை இழுத்து நிறுத்தி நிகழ்த்தும் மோனத் தவம் அது!

9. கேள்வி: தமிழ் தங்களின் தாய்மொழி, அறபு மொழியில் முனைவர் பட்டம் பெற்றுப் பேராசிரியராகவும் இருக்கிறீர்கள். ரள்வாஆஷூருடைய கதை / நாவலான     “கிரானடாவை மொழிபெயர்த்துள்ளீர்கள். அது அறபுமொழியில் இருக்கின்ற நிலையில் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யக் காரணம் என்ன?

பதில்: கிரானடாவை அறபிலிருந்துதான் மொழிபெயர்த்தேன். ஆங்கிலத்திலிருந்தல்ல. மொழிபெயர்க்கும் போது அறபுப் பிரதியில் ஒரு பக்கம் தவறியிருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே அந்தப் பக்கத்தை மாத்திரம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து இடைவெளியை நிரப்பிக் கொண்டேன். இந்தத் தகவல் வெளியீட்டாளர்களுக்குக் கூட இதுவரை தெரியாது. இது தவிர சில மயக்கமான இடங்களில் என் புரிதல் சரிதானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும், ஊர்களின் பெயர்கள் போன்ற சில தகவல்களை உறுதிப் படுத்திக் கொள்ளவும் ஆங்கில மொழிபெயர்ப்பைத் துணைக்கு எடுத்துக் கொண்டேன். அது கூட முதல் பாகத்தில் மட்டும்தான். இரண்டாம், மூன்றாம் பாகங்கள் ஆங்கிலத்தில் இன்னும் வரவில்லை. தமிழில் செய்து முடித்து விட்டோம். விரைவில் வெளிவரும் என்று நம்பலாம்.

10. கேள்வி: அறபு மொழியில் நேரடி வாசிப்புப் பழக்கமில்லாததால் கிரானடாவின் ஆங்கிலமொழியாக்கத்தையே படித்திருக்கிறேன். ஆனால் தங்களின் தமிழாக்கம் மொழிபெயர்ப்புப் போலில்லாமல் நேரடித்தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆங்கிலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த போது ஆங்கில மொழிபெயர்ப்பு செயற்கைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அறபு மூலநூலை நீங்கள் வரிக்கு வரி, பத்திக்குப் பத்தி மொழியாக்கம்செய்தீர்களா? அல்லது உள்ளடக்கத்தை, கருத்தை மட்டுமே மொழியாக்கம் செய்தீர்களா? ஒருவேளை இந்தக்கேள்விக்கு கருத்தை மட்டுமே மொழியாக்கம் செய்தேன்’ என்பதுதான் உங்கள் பதிலென்றால் அதுவே கிரானடா நாவலின் வெற்றிகரமான மொழியாக்கத்தின் அடிப்படையாக இருந்தது எனக் கொள்ளலாமா?

பதில்: நாவலை மொழிபெயர்ப்பதில் நான் முடிந்த வரை பிரதிக்கு விசுவாசமாக இருந்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என்று நினைக்கிறேன். நாவல் ஓர் இலக்கிய வடிவம். இலக்கியப் பிரதியொன்றின் ஆதார சுருதியே அதன் மொழிதான். கருத்தை மட்டுமே மொழியாக்கம் செய்தேன் என்பதெல்லாம் இலக்கிய மொழிபெயர்ப்பில் அபத்தமானது. அதேவேளை சட்டத் துறை அல்லது அறிவியல் துறை மொழிபெயர்ப்புப் போன்று  சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதும் இலக்கியத்தில் சாத்தியமற்றது. மூலமொழியில் விகசிக்கும் ஆன்மாவையும், தெறிக்கும் ஆகர்ஷணத்தையும் அதே வேகத்தோடும் வீச்சோடும் இலக்கு மொழிக்கு நகர்த்துவதற்கு நாம் எவ்வளவு ஆற்றல் பெற்றிருக்கிறோம் என்பதிலும் அதற்காக எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறோம் என்பதிலும்தான் இந்த விவகாரம் தங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். இதனால்தான் இலக்கிய மொழிபெயர்ப்பாளன் இரு மொழிகளிலும் நன்கு தேர்ச்சி கொண்டவனாக இருக்க வேண்டுமென்கிறோம். பலரிடம் மூல மொழியில் இருக்கும் தேர்ச்சியும் பயிற்சியும் இலக்கு மொழியில் இருப்பதில்லை. அதனால்தான் மூல மொழிப் படைப்பு எவ்வளவு வீரியம் கொண்டதாக இருந்த போதிலும் மொழிபெயர்ப்பு உயிர்ப்பை இழந்து விடுகிறது. மறுபுறத்தில் மூல மொழித் தேர்ச்சி குறைவாகவும் இலக்கு மொழித் தேர்ச்சி அதிகமாகவும் இருக்கும் போது மொழிபெயர்ப்பில் தவறுகளும் கையாடல்களும் நிகழ வாய்ப்பேற்படுகிறது. இலக்கிய மொழிபெயர்ப்பாளன் ஓரளவு பரந்த மொழிப் படிப்பும் இலக்கிய ரசனையும்கொண்டவனாக இருப்பது முக்கியம்.  

11. கேள்வி: கிரானடா நாவல் ஆங்கிலத்தில் வந்து இருபதுஆண்டுகள் ஆகியிருக்கும். அப்படி அது ஆங்கிலத்தில் வெளிவந்தவுடனேயே தமிழில்இந்த நாவலின் கிளைமாக்ஸ் பகுதியை, குறிப்பாகசலீமா நீதிமன்றத்தில் இருக்கும் காட்சியை சாரு நிவேதிதா மொழிபெயர்த்திருந்தார். இப்பொழுது நினைத்துப்பார்த்தாலும் அந்த முன்னோட்டமே இந்த நாவலின் முழுவடிவத்தைத் தமிழில் படிக்க வேண்டும் என்கிற ஆசையை என்னில் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து தாங்கள் அறிந்து வைத்திருந்தீர்களா? அறபு இலக்கியங்கள் படிக்கும் படியாக தமிழில் கொண்டு வந்தமுதல் நபர் தாங்கள் என்பதை ஏற்றுக் கொள்வதில் எனக்குதயக்கமில்லை. இந்த சாதனைக்குப் பின்னுள்ள உழைப்பைக் குறித்து கூறவும்.

பதில்: கிரானடா முதல் பாகத்தின் சலீமா நீதிமன்றத்திலிருக்கும் காட்சியை மாத்திரம் சாரு நிவேதிதா ஆங்கில வழியாக மொழிபெயர்த்திருந்த செய்தியை எனது அறபு வழியான மொழிபெயர்ப்பு வெளிவந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். படித்தும் பார்த்தேன். ஆங்கில வழி மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அருமையாகச் செய்திருந்தார். ஆனால் து பற்றி நான் தாமதமாகத் தெரிந்து கொண்டது கூட ஒரு வகையில் நல்லதுதான். முன்னரே  படித்திருந்தால் அது என் மொழிபெயர்ப்பில் தாக்கம் செலுத்தியிருக்கலாம். நல்ல இலக்கியப் பிரதிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வருவதும் இயல்பானதுதான். எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்தாலும் ஒவ்வொன்றும் அந்தந்த மொழிபெயர்ப்பாளரது அடையாளப் பிரதியாகவே இருக்குமென்று திடமாக நம்புகிறேன். அல்லாமா இக்பாலின் ஷிக்வா ஜவாப் ஏ ஷிக்வா, செய்யித் குதுபின் அஃராஹுர் ரூஹ் என்பவற்றின் வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் தொடங்கி எத்தனையோ உதாரணங்கள் நம் முன்னால் இருக்கின்றன.

கிரானடா எனது முதல் புனைவிலக்கிய மொழிபெயர்ப்பு. அதற்கு முன்னர் இஸ்லாமிய நம்பிக்கை, சிந்தனை, சித்தாந்தம், ஆத்மீகம், மொழி, உளவியல் போன்ற துறைகளிலேயே என் கவனம் பெரிதும் குவிந்திருந்தது. அந்தத் துறைகளில் பல பேராசன்களின் நூல்களை தமிழாக்கம் செய்திருக்கிறேன். கிரானடாவையும் அதனைத் தொடர்ந்து திருமுகத்தையும் மொழிபெயர்த்த அனுபவத்தின் பிறகுதான் இலக்கிய மொழிபெயர்ப்பில் இன்னும் சற்று அதிகம் ஈடுபாடு காட்ட வேண்டிய தேவையை ணர்ந்தேன். நான் சற்றும் எதிர்பார்த்திராத வட்டங்களிலிருந்து கூட ஏராளமான பின்னூட்டங்களும் திறனாய்வுகளும் வருவதைப் பார்த்த போது என் எண்ணம் இன்னும் வலுவடைந்தது. அது வரை serious conceptual readers என்ற எல்லைக்குள் மாத்திரம் கொண்டாடப்பட்ட என் மொழிபெயர்ப்புகள் இலக்கிய ஜாம்பவான்கள் வட்டாரத்திலும் வெகுமக்கள் தளத்திலும் பேசுபொருளாயின. இவ்வளவுக்கும் என் முழுமொத்த மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் கிரானடாவும் திருமுகமும் பத்தில் ஒரு பங்கு கூட இல்லையென்றுதான் சொல்வேன்.  இலக்கிய மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுமாறு தொடர்ச்சியாக என்னைக் கேட்டு வந்த சீர்மை நண்பர் உவைஸ் அமதை இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அறபிலக்கியங்கள் நேரடியாக தமிழுக்குப் போதியளவு அறிமுகமாகாத இடைவெளி இத்துறையில் இன்னும் அதிக ஈடுபாடு காட்டப்பட வேண்டிய தேவையை வற்புறுத்துகிறது. வேறுபட்ட கலாசார சமூகங்களுக்கிடையில் நிலவும் தவறான புரிதல்களை நீக்கவும் நல்லுறவைக் கட்டியெழுப்பவும் இது நிச்சயம் உதவும்.

கிரானடாவின் பின்னாலிருக்கும் உழைப்பைப் பொறுத்த வரை அது எனக்கோர் இன்ப அனுபவம்தான்.கிரானடா என்றில்லை. எந்த மொழிபெயர்ப்பைச் செய்யும் போதும் அதற்குள் கரைந்து விடுவது என் இயல்பு. எடுத்த பணியை நிறைவு செய்யும் வரை ஓய்வொழிவில்லாமல் இயங்குவேன். அன்றாடப் பணிகள் போக எஞ்சும் நேரங்களையெல்லாம் அதற்கே செலவிடுவேன். மூலப் பிரதியில் விழும் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு எல்லா வழியிலும் முயல்வேன். கிரானடாவை மொழிபெயர்ப்பதற்கு அதன் தரைத்தோற்த்தையும் கலாசாரப் பின்னணியையும் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அதன் வரலாற்றுப் பின்னணியை ஏற்கனவே ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன் என்பதால் குறுகிய காலத்திற்குள்ளாகவே மொழிபெயர்ப்பின் முதல் வரைவை முடித்து விட்டேன். 2019 ஏப்ரல் 21இல் இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாதச் செயற்பாட்டின் பின்னர் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் அன்றாட வாழ்விலும் மானசீக ரீதியாகவும் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டிருந்த காலப்பகுதியில்தான் கிரானடா மொழி பெயர்க்கப் பட்டது. மனதுக்கு மிகப் பாரமான காலம் அது. அன்றைய நிகழ் யதார்த்தத்தின் பின்னணியில் கிரானடாவின் கதைக்களத்தில் நானும் ஒருவனாகக் கரைந்து போயிருந்தேன். இரண்டுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள்!

12. கேள்வி: அண்மைக் காலங்களில் கார்த்திகைபாண்டியன் அறபுச் சிறுகதைகளை தொடர்ந்து தமிழாக்கம் செய்து வருகிறார். அறபு நூல்கள் இவ்வாறு ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் வந்துகொண்டிருப்பதை தாங்கள் கவனித்திருக்கிறீர்களாஅதை எப்படி மதிப்பிடுவீர்கள்?

பதில்: அவரது மொழியாக்கத்தை இது வரை படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதால் அது பற்றி எதுவும் கூற முடியாது. ஆனால் அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அறபு மொழியிலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்வோரின் பற்றாக்குறையை அவர்களே ஈடுசெய்கின்றனர். அதே நேரம் ஒரு படைப்பு இரு மொழிகளைத் தாண்டி வரும் போது மூல மொழியின் வீச்சும் ஆகர்ஷணமும் எத்தனை விழுக்காடு அதில் ஒட்டியிருக்குமென்று சொல்ல முடியாது. எனது திருமுகம்’ மொழிபெயர்ப்பும் பாரசீக மொழியிலிருந்து அறபு வழியாக தமிழுக்கு வந்ததுதான். ஒரு வேளை எனக்கு பாரசீக மொழி தெரிந்திருந்திருந்தால் மொழிபெயர்ப்பு இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்னவோ!

அறபு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யும் பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபடக் கூடிய பலர் நமக்குத் தேவைப் படுகிறார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களாக  பல்கலைக் கழகங்கள் உட்பட பல உயர் கல்வி நிறுவனங்களில் மொழிபெயர்ப்பை ஒரு பாடமாகக் கற்பித்து வருகிறேன். ஆர்வமுள்ள சில மாணவர்களை இனம் கண்டு உற்சாகப் படுத்தியும் வருகிறேன். பார்க்கலாம்.

13. கேள்வி: உங்கள் மொழி பெயர்ப்புகளின்  முன்னுரிமைகளை எப்படி நிர்ணயம் செய்கிறீர்கள்? அதாவது நீங்கள் விரும்பியபடியான தலைப்புகளில் மொழி பெயர்ப்புசெய்ய பதிப்பாளர்கள் உங்களுக்கு சுதந்திரம் அளித்துஇருக்கிறார்களா? இந்தக் கேள்வியின் இன்னொருபகுதியாக நீங்கள் விரும்பாத தலைப்பை ஆனால் அதனை பதிப்பாளர் விரும்புகிறார் என்பதனால் மொழி பெயர்த்து கொடுத்து இருக்கிறீர்களா?

பதில்: ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பில் தன்னார்வமாகத்தான் ஈடுபட்டேன். நான் மொழிபெயர்த்த பல கவிதைகளும், கட்டுரைகளும் சிறுகதைகளும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் ஒரு சிறு நூலாக முதலில் நான் மொழிபெயர்த்தது செய்யித் குதுபின் அஃராஹுர் ரூஹ்.அப்போது அது மீள்பார்வைபத்திரிகையில் ஆத்மானந்தங்கள் என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு Trim Arts குழுவினர் தாமாக முன்வந்து அதனை நூலாக வெளியிட்டதை நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த நூலைத்தான் சீர்மைஅண்மையில் என் அனுமதியுடன் மீண்டும் பிரசுரித்தது.ந்ச் சிறு நூலுக்குப் பிறகுதான் நான் தொழில் முறை மொழிபெயர்ப்பாளராக அறிமுகமானேன். அந்த இடத்தில் என்னை இனம் கண்டு முழுமையாகப் பயன் படுத்திக் கொண்டவர் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசான் ஏ.ஜே. எம். ஸனீர். மொழிபெயர்ப்புத் துறையில் எனக்குப் புதிய திசைகளை அறிமுகப் படுத்தியவர் அவர்தான். பேரறிஞர் யூசுஃப் அல்கர்ழாவியின் சுன்னாவை அணுகும்முறை என்ற முக்கியமான நூலின் மொழிபெயர்ப்பில் அவருடன் ஆரம்பித்த பயணம் பதினேழு வருடங்களுக்கு மேலாக இன்று வரை தொடர்கிறது. என் தந்தையின் வயதுதான் அவருக்கும். மொழிபெயர்ப்பில் மட்டுமன்றி என் உயர்கல்வி தொடர்பாகவும்  தொழில் வாழ்வு தொடர்பாகவும் பயன் மிக்க ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியவர். அவருடைய வழிகாட்டலுடன்தான் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் (IIIT)அறபு மொழியில் வெளியிட்ட பல முக்கியமான நூல்களை ஆங்கிலத்தில் வெளிவர முன்பாகவே ஃபூஸின் பதிப்பகம்சார்பாக தமிழுக்கு மொழிபெயர்த்தேன். வன்முறையும் அரசியல் போராட்டத்தை நிர்வகித்தலும்இருவகை சட்டங்களுக்கிடையில் மனிதன், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை, அஷ்-ஷூறா: கலந்தாலோசித்தல் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு, தொழுகையை மீளக் கண்டடைதல், அல்-குர்ஆனிய அகில நாகரிக நோக்கு, இஸ்லாமும் போதைப்பொருள் ஒழிப்பும், என் வாழ்வு கற்றுத்தந்த பாடங்கள், முஸ்லிம் சிந்தையின் நெருக்கடி, இஸ்லாமிய சிந்தனைச் சீர்திருத்தம், இறைத்தூதர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் – உளவியல் நோக்குச் சிந்தனைகளும் அவதானங்களும்… என அந்த நூல்களின் பட்டியல் நீள்கிறது. இன்று இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தி்னால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளராக நான் ருப்பதற்கு ஆசான் ஸனீர் அவர்களே மூல காரணம்.அவர்களால் இந்த சமூகம் இன்னும் பயனடைய வேண்டும். மொழிபெயர்ப்புக்கான நூல் தெரிவைப் பொறுத்த வரை அது எங்கள் இரு பக்க உடன்பாட்டுடனே மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் IIIT நூல்களை ஜனாப் ஸனீர் அவர்களே தெரிவு செய்து தந்திருந்தாலும், காலப்போக்கில் இருவரும் கலந்துரையாடியே நூல்களை தெரிவு செய்யலானோம்.

நான் விரும்பாத நிலையிலும் பதிப்பாளர் விரும்பும் தலைப்பை மொழி பெயர்த்துத் தந்ததாக எந்த நினைவுமில்லை. சீர்மைக்காக கிரானடா (மூன்று பாகங்கள்)திருமுகம் என்பவை தவிர, இறுதி நபி வாழ்வில் இறை நினைவும் பிரார்த்தனையும், இஸ்லாத்தில் சமூக நீதி, வடக்கு நோக்கிய பருவ காலப் புலம்பெயர்வு, எலும்புத்துண்டு என்பவற்றை அறபிலிருந்தும், சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹ், சமூக ஊடகங்கள் பற்றி​ நாற்பது நபிமொழி ஆகிய நூல்களை ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்த்தேன்.

மீள்பார்வை பதிப்பகம் சார்பாகவும் சில நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். நபிமார்கள் வரலாறு, அகீதா-இஸ்லாமிய நம்பிக்கையைப் புரிந்து கொள்ளல்  (இரண்டு பாகங்கள்), சீர்திருத்த வழிமுறை (இரண்டு பாகங்கள்) என்பன அவற்றுள் முக்கியமானவை.

மதிப்புக்குரிய சகோதரர் கலாநிதி அலவி  ஷரிப்தீனின் வேண்டுகோளின் பெயரில் அவரது ஷரிப்தீன் பதிப்பக வெளியீடாகவும் சில நூல்களை மொழி மாற்றம்செய்திருக்கிறேன். இஸ்லாமிய இறையியல் நம்பிக்கைகள், அழைப்பாளர் வாழ்வின் மீட்புப் படகுகள், முத்திரை நபியின் முழு வாழ்வு (தற்போது மொழிபெயர்ப்பில்) என்பன முக்கியமானவை.

இவை தவிர, மிஷ்காத் நிறுவனம் சார்பாக மனித நேயத் தூதர் என்ற நூல் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன் அன்ட்ரூ மேரோ ஆங்கிலத்தில் தொகுத்துச் செவ்வையாக்கிய ‘Six Covenants of the Prophet with the Cristians of His Time’ என்ற வரலாற்று ஆவணத்தை அவரது வேண்டுகோளின் பெயரில் இறைத்தூதர் முஹம்மத் அன்றைய கிறிஸ்தவர்களுடன் செய்த ஆறு உடன்படிக்கைகள் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து கொடுத்தேன். அதனை 14 உலக மொழிகளில் ஒரே நூலாக Cambridge Scholars Publishing வெளியிட்டது. விருப்பமோ ஆத்மார்த்த ஈடுபாடோ இல்லாமல் இவையெல்லாம் சாத்தியமென்றா நினைக்கிறீர்கள்?!

மொழிபெயர்ப்புத் தவிர நானே எழுதிய சில நூல்களும் உள்ளன. இந்தக் கேள்வியுடன் அவை நேரடியாகத் தொடர்பு பட்டவையல்லை என்பதால் அவை பற்றி இங்கு குறிப்பிடவில்லை.

14. கேள்வி: மொழிபெயர்ப்பாளனின்  பணி மொழிபெயர்ப்பை சிறப்பாக செய்து கொடுப்பதை உறுதி செய்வது மட்டும்தான் என்று கருதுகிறீர்களா? மாறாக சமூகத்தில் அந்தமொழிபெயர்ப்புகள் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்  என்பதற்காகவும் அவர் கூடுதல் கரிசனம் எடுத்து உழைக்கவேண்டுமா?

பதில்: நிச்சயமாக மொழிபெயர்ப்பாளனின்  முதல் நிலைப் பணி மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்து கொடுப்பதை உறுதி செய்வதுதான் என்பதில் சந்தேகமில்லை. அந்த மொழிபெயர்ப்புகள் சமூகத்தில் பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவர் கூடுதல் கரிசனை எடுத்து உழைக்க வேண்டுமா என்பதைப் பொறுத்த வரை அது அவரவர் இயல்பையும் இயலுமையையும் பொறுத்தது. அந்தப் பொறுப்பை அனேகமாக நான் வெளியீட்டாளர்களுக்கே விட்டு விடுகிறேன்.  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவை பற்றி ஆர்வமுள்ளோருக்குப் பரிந்துரை செய்வேன். அவ்வளவுதான். நாம் செய்யும் எல்லாப் பணிகளும் உடனடியாக மக்களைப் போய்ச் சேருமென்று எதிர்பார்க்க முடியாது. நான் பல வருடங்களுக்கு முன்னர் செய்த மொழிபெயர்ப்புகள் இப்போதுதான் பலரது கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. நாம் எவ்வளவோ பணிகளை மேற்கொண்டு செல்கிறோம். அவற்றை நாம் செய்யா விட்டால் வேறு யாரும் செய்வார்களா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் எப்போதாவது சமூகம் அவற்றின் பெறுமதியை உணர்ந்து கொள்ளும்…”என்று ஆசான் ஸனீர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். நாம் விதைத்துக் கொண்டிருப்போம். அறுவடை செய்பவர்கள் வராமலா போவார்கள்?!

15. கேள்வி: உங்கள் மொழி பெயர்ப்பில் வெளியான ஷெய்க்யூசுஃப் அல் கர்ளாவியின் ‘ஸுன்னாவை அணுகும் முறை’ உங்களுக்கு நல்ல பெயரை ஈட்டிக் கொடுத்த ஒரு நூல். சமூகத்திலும் பரவலாக கவனத்தை பெற்ற நூல் அது. நபிமரபுகளான ஹதீஸ்களை புரிந்து கொள்வதில் ஏற்படும் சிந்தனை மயக்கங்களை களைவதில் குறித்த நூல்பெருமளவு வெற்றியீட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று வேறு எப்படியான தலைப்புகளில் நூல்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள்  கருதுகிறீர்கள்?

பதில்: ஆமாம். ‘ஸுன்னாவை அணுகும் முறை’ இலங்கையில் இரு தடவையும், தமிழ்நாட்டில் மாற்றுப் பிரதிகள் சார்பாக நபிவழியை அணுகுவது எப்படி என்ற தலைப்பில் ஒரு தடவையும் பதிப்புக் கண்டிருக்கிறது. எனக்கும் அது மிக மன நிறைவைத் தந்தநூல். அது போன்று அறபு மொழியிலிருந்து தமிழுக்கு வர வேண்டிய நூல்கள் ஏராளம். இஸ்லாமிய அறிவியல் கலைகள், இஸ்லாமிய சிந்தனை, இலக்கியம், ஆன்மீகம், வரலாறு… என்று ஏராளமான பழைய, புதிய நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லா வகையான நூல்களும் தமிழுக்கு வர வேண்டும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான புரிதல்களையும் கற்பிதங்களையும் களைவதற்கு அவை நிச்சயம் உதவும். இங்கு பிரச்சினை மொழிபெயர்ப்பதற்கான நூல்களின் போதாமைல்ல. வினைமை மிக்க மொழிபெயர்ப்பாளர்களின் போதாமைதான் பிரச்சினை. ஓரளவு ஆர்வமுள்ளவர்கள் கூட மொழிபெயர்ப்புக்குச் சவாலான நூல்களை ஏற்கத் தயங்குகிறார்கள். விதிவிலக்கானவர்களும் உண்டு. நான் பொதுவான நிலையையே குறிப்பிடுகின்றேன்.

16. கேள்வி: நீங்கள் பல்வேறுபட்ட சிந்தனை சார்ந்த கோட்பாட்டு நூல்களை மொழி பெயர்த்துள்ளீர்கள். இப்போது நாவல்களையும் மொழி பெயர்த்து வருகிறீர்கள்? இந்த இரண்டு வகையான -கோட்பாடு மற்றும் இலக்கியம்- நூல்களிலும் உங்களுக்கு மொழிபெயர்ப்பில் சவாலை அளிப்பது எந்த வகையான நூல்கள்? ஏன்?

பதில்: நான் முன்னரும் குறிப்பிட்டதைப் போல் இலக்கிய மொழிபெயர்ப்பே சவால் மிக்கது என்று மொழிபெயர்ப்புத் துறை சார்ந்தவர்கள் சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை கோட்பாடு சார்ந்த நூல்களே சவால் மிக்கவை. அதற்குப் பிரதானமாக இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். முதல் காரணம், என்னைத் தேடி வரும் நூல்கள் பொதுவாகவே அறபு மொழி வாசகர்கள் கூட புரிந்து கொள்ள சிரமப் படுகின்ற நூல்கள். அவற்றின் உள்ளடக்கமும் மொழியும் அதிக பட்ச கவனக் குவிப்பை வேண்டி நிற்கும். கல்விப் புலம் கொண்டவர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்குமாகவே அவை பெரும்பாலும் எழுதப் பட்டிருக்கும். இரண்டாவது காரணம், இஸ்லாமிய  கலைச்சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வர அதிக பிரயத்தனம் எடுக்க வேண்டியிருக்கும். இஸ்லாமிய  கலைச்சொற்களுக்குப் பொருத்தமான தமிழ் நிகரிணைகளை உருவாக்கும் பணி றிவியல் பூர்வமாகவும் ஒருமுகப்பட்ட வகையிலும் வளர்த்தெடுக்கப் பட வேண்டியுள்ளது. இல்லையெனில் இந்தப் பிரச்சினை தொடரவே செய்யும். ஆங்காங்கே இடம்பெறும் இஸ்லாமியத் தமிழ் மாநாடுகள் இதில் தொடர்ச்சியாகவும் வினைமையோடும் கவனம் செலுத்தினால் நல்லது.

இந்த இரு காரணங்களால்தான் ஏலவே சிலரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைக் கூட மீண்டும் புதிதாக மொழிபெயர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. நான்கைந்து  நூல்களை அப்படி மீள மொழிபெயர்த்திருக்கிறேன்.

17. கேள்வி: இலக்கியப் படைப்புகளை மொழி பெயர்க்கும்போது பண்பாட்டு, கலாசார வித்தியாசம் காரணமாக எமது சூழலில் புரிந்து கொள்ள முடியாமல் போகும் என்று கருதப்படும் அம்சங்களை எப்படிக் கையாள்வது? மூலப் பிரதியில் சின்ன மாற்றங்களை கொண்டு வருவது தகுமா அல்லது அவற்றை அடிக் குறிப்புகளில் குறிப்பிடுவது இலக்கிய வாசிப்பின் ஓட்டத்தை பாதிக்காதா?

பதில்: மொழிபெயர்ப்புக் கற்கை சார்ந்த விரிவுரைகளில் நான் பிரதானமாகக் குறிப்பிடும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. என்னைப் பொறுத்த வரை தமிழ்ச் சூழலுக்குப் பரிச்சயமற்ற கலாசாரக் கூறுகளை வாசகர்களுக்குப் புரிய வைக்க இயன்ற வரை முயல்வேன். முடியாத பட்சத்தில் அடிக் குறிப்புகளாக விளக்குவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறின்றி, மூலப் பிரதியில் மாற்றம் செய்ய நான் விரும்புவதில்லை. இலக்கிய வாசிப்புக்கு அடிக்குறிப்புகள் தடையாக அமையுமென்றும் நான் நினைக்கவில்லை.

 

(இந்த நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பித்தந்த வாசகர்களான கொள்ளு நதீம், லஃபீஸ் ஷஹீத் ஆகியோருக்கு வனம் குழுமத்தின் நன்றிகள்.)

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *