நம் பயணங்கள்
*******
நாங்கள் பயணங்களுக்காக காத்திருந்தோம்
யுகம் யுகமாய் சேர்த்துவைத்த
துயர்களோடு
இந்தப் பயணங்களில் தாம் அவற்றை
இறக்கிவைப்போம்
கடலோடும் காற்றோடும்
கலந்துவிட பிரயாசைப்படுவோம்
மனிதர்களே இல்லாத உலகிற்கும்
அறிமுகமே இல்லாத மனிதர்க்கும்
ஏக்கங்கொள்வோம்
தனித் தனியான பாதைகளில்
பயணித்துக்கொண்டே
சந்திகளை விசாரிப்போம்
இருந்தும் இன்னும் நாம்
அலைந்துகொண்டிருக்கிறோம்
நமக்கான பொதிகளோடு
கவிதையும் கதைகளும்
***********
இருள் கவ்விய வானின்
பால்நிலாவை பாடயில்
விண்மீன்களையே பார்த்திருக்கும் தாரகைக்காதலன் அவன்
கவிதைகளோடு தான் அவன் என்னுள் வந்தான்
இரவுகளைக் கிழித்து எழும்
அக்கவிகளில் எப்போதும் ஒரு தேடல் இருக்கும்
கோடரி கொண்டு கொலை நிகழ்த்தும் இரவுகளின் பயங்கரம் குறித்த முறையீடு இருக்கும்
வட்ட விழிகளுக்குள் வற்றிப்போகும் ஏக்கங்களையும்
சாந்தம் தரும் கருவிழிகளையும்
அவை எப்போதும் பற்றியிருக்கும்
எனதான அக்கவிகளில்
மழையின் ஈரமும்
கருகியதன் வாசமுமிருக்கும்
அள்ளி அணைத்து
நெஞ்சுக்குழிக்குள் பத்திரப்படுத்திய காகிதங்களுக்குள் அவை என்றும் அடக்கம்
ஆனால்,
அவன் தன்னை ஒரு தேர்ந்த கதைசொல்லியாய் சொல்வான்
அப்போது அவன் கண்கள்
அந்தத் தாரகைப்போல் ஒளிரும்
அவன் கதைகளில் தான் வாழ்வின் அத்தனை மர்மங்களும் இருக்கும் எனத் தோணும்
அவன் முன் ஒரு சிறுமியாய் இருந்து கொள்வேன்
ஒருநாள்,
ஆற்றைக் கடந்ததும் ஆடுகளை ஒழித்ததுமான ஒரு நாடோடிக் கதையை என் காதுகளுக்குள்
கிசுகிசுத்தான்
அப்போதுதான் நான் வளர்ந்துவிட்டதை உணர்ந்தேன்
அதுவும் குமரியாக….
வளர்ந்ததும் வாழ்வதுமான
இந்தக் கதைகளிலும் கவிதையிலும்
நாம் ஓர் இசையை குலைத்திருக்கோம்
அதில் சந்தணம் மணக்கும்
செண்பகத்தை விளித்த காத்திருப்போடு
ஒரு வானமும் விரியும்…
-கவிஞர் றிஸ்மியா
சிறப்பான கவிதை நடை, வாழ்த்துகள்