சாஜித்: வனம் இரண்டாவது இதழ் வருவதில் மகிழ்ச்சி. இலக்கியம் பண்பாட்டு தளங்களிலிருந்து வேறுபட்டு நிற்பதாக உணர்கிறேன். மாயாஜால எழுத்துக்களுக்கு பிறகான அரசியலில் சிக்கிக் கொண்டதன் விளைவாகக் கூட இருக்கலாம். இங்கு யதார்த்தவாதம் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் பண்பாட்டு தளங்கள் மிகுதியான இயக்கதினை வெளிப்படுத்தின. மெஜிகல் ரியலிச நுகர்வுத்தாக்கத்திற்கு பிறகு பண்பாட்டுத்தளங்கள் தோல்வி கண்டதாகவே உணர்கிறேன். ஆனாலும் இவற்றினை நிராகரிப்பதற்கான கதையாடலாக இதனை பார்க்க முடியாது. இலக்கிய செயற்பாட்டில் நிராகரித்தல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பண்பாட்டுத்தளங்கள் மறைந்து போகும் எழுத்துக்களின் வெளிப்பாடுகளை நுகரும்போது இவற்றினை பேசுவதற்கான வாதத்தினை தொடங்கலாம் என நினைக்கிறேன்.
ஷாதிர்: பண்பாட்டுத்தளங்களை மெஜிக்கல் ரியலிசம் மறுப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கு பண்பாடு என்பது எழுத்துக்களின் புதுமைக்கு ஏற்ப இயங்கின்ற சூழலும் எழாமலில்லை. கவிஞர் மஜீதின் எழுத்துக்கள் வெளிப்படுத்திய பண்பாட்டு தளத்தினை பின்நவீன செயற்பாட்டிற்கு நாம் உதாரணங்களாக முன்வைத்தோம். ஒரு வகையில் அவை நமக்கு ஆதாரமாகவும் இருந்தன. காலத்தின் விளையாட்டிற்கு ஏற்ப செயற்பாட்டு வாதம் இயங்கிய போது பண்பாட்டு வாதங்கள் மறையத் தொடங்கியதில் பங்கிருப்பதை இருட்டடிப்பு செய்ய முடியாது.
சாஜித்: ‘ஆதி நதியிலிருந்து ஒரு நதி கிளைவிட்டுப் பிரிகிறது’ பிரதியில் றியாஸ் குரானா முன் வைத்த பண்பாட்டு பின்நவீன கதையாடலை ஞாபகம் கொள்ளச் செய்கிறது இந்த உரையாடல். இரண்டு ரகமான கதைகள் பெருத்த உலகத்தில் நமக்கான வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது. நாம் கதைகளின் உலகத்திற்கு முன் வைக்கும் இரண்டு விதமான சூழல்கள் எம்மை திணரடித்திருக்கிறது. யதார்த்தவாதங்களையும், மாயாஜாலங்களையும் ஒரு சேர ரசிக்கின்ற மனோ நிலை மாத்திரமே எமது வாசிப்பு நிலையினையும் அடையாளப்படுத்தியிருக்கிறது. பண்பாட்டு அம்சங்கள் யாவும் எமது எழுத்துக்களை மாத்திரமல்ல எமக்கான இயங்கு சூழலினையும் அடையாளப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.
ஷாதிர்: எதிர்கதையாடல் – நேர்கதையாடல் பரப்பில் பண்பாட்டு வெளி எழுத்துக்களை கூட்டியமைக்க முடியாது. இங்கு யதார்த்தவாதம் எமக்கு கற்றுத்தந்த பண்பாடென்பது மாயாஜால செயற்பாட்டிற்கு உதவித்தான் இருக்கிறது. நாம் கற்றுக் கொண்ட யதார்த்த நிலையிலிருந்து மாயாஜாலத்திற்கான அமைப்பியலை உருவாக்கியிருக்கிறோம். காதலும், விஞ்ஞானமும் ஒரு புள்ளியில் சங்கமிக்கின்ற எழுத்துருவாக்கத்தினை இன்று படைப்பிலக்கியங்கள் பேசுகின்றன. அதுவே பின்நவீனம் தாண்டிய இன்றைய போக்காகவும் இருக்கிறது.
Please follow and like us: